என் மலர்
சினிமா செய்திகள்
தேவ் படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. #Karthi #Kaithi #LokeshKanagaraj
தேவ் படத்தை தொடர்ந்து கார்த்தி தற்போது ‘மாநகரம்’ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிசியாக நடித்து வருகிறார். சென்னையில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், படத்திற்கு கைதி என்று தலைப்பு வைத்துள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.
தற்போது படக்குழுவினர் ‘கைதி’ என்ற தலைப்பை உறுதி செய்து, பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டிருக்கிறார்கள். தற்போது இந்த போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வைரலாகி வருகிறது.

இந்த படத்தில் நாயகி யாரும் கிடையாது. 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், எஞ்சிய படப்பிடிப்பையும் விரைந்து முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ஒரு இரவில் நடக்கும் சம்பவத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படம் கோடை விடுமுறையில் திரைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. #Kaithi #Karthi #LokeshKanagaraj
மகளிர் தினம் இன்று உலகமெங்கும் கொண்டாடப்படும் நிலையில், கௌதமி கிராமத்து பெண்களுடன் கொண்டாடி இருக்கிறார். #WomensDay #Gautami
மகளிர் தினம் இன்று உலகமெங்கும் கொண்டாடப்படும் நிலையில், கௌதமி, கிராமத்து பெண்களுடன் கொண்டாடி இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது,
‘தன் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் ஒரு தாயாகவோ, மனைவியாகவோ, மகளாகவோ, சகோதரியாகவோ, நண்பியாகவோ, தன்னை சுற்றியிருப்பவர்களின் நலனுக்காக தன்னால் முடிந்த எல்லாவற்றையும் எந்த ஒரு எதிர்பார்ப்புமில்லாமல் செய்பவள் தான் பெண்.
எந்த ஒரு கடினமான சூழ்நிலையிலும், எவ்வளவு பெரிய போர்க்களமானாலும் தன்னால் அன்பு பாராட்டப்படுபவர்களுக்காக எந்த ஒரு தியாகத்தையும் எந்த ஒரு முகச்சுளிப்புமின்றி செய்பவள் தான் பெண்ணெனும் அந்த உண்மையான ஹீரோ.

இந்த சர்வதேச மகளிர் தினத்தை முள்ளி, வளர்பிறை, முன்னுதிகுப்பம், கத்ரிச்சேரி, உளுத்தமங்கலம் போன்ற இடங்களின் அந்த அழகான ஹீரோக்களுடன் கொண்டாடுவது எனக்கு பெருமையளிக்கிறது.
தங்களின் ஆற்றலையும் மகிழ்ச்சியையும் என்னுடன் பகிர்ந்து கொண்டு ஒவ்வொரு நாளும் எனக்கு உத்வேகம் அளித்ததற்கு நன்றி’ என்றார்.
ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா, சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பூமராங்’ படத்தின் விமர்சனம். #Boomerang #BoomerangReview
படம் ஆரம்பத்தில் தீயில் சிக்கி முகம் முழுவதும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் ஒருவர் அனுமதிக்கப்படுகிறார். அவரது முகத்தையே கண்ணாடியில் பார்க்க முடியாமல் உடைந்து போகிறார். அந்தளவிற்கு அவரது முகம் சிதைந்து போகிறது. அதன்பின் முகம் மாற்று அறுவைசிகிச்சை செய்யலாம் என மருத்துவர் கூற, அதற்கு ஒப்புக்கொண்டு மூளை சாவடைந்த நிலையில் இருக்கும் அதர்வாவின் முகத்தை எடுத்து அவருக்கு வைக்கின்றனர்.
ஒரு குறும்படம் இயக்குவதன் மூலம் நாயகி மேகா ஆகாஷுக்கும் அதர்வாவிற்கும் பழக்கம் ஏற்படுகிறது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறுகிறது. இந்நிலையில், ஒரு நாள் அதர்வாவை கொலை செய்ய முயற்சிகள் நடைபெறுகிறது. தன்னுடைய புதிய முகம் தான் இந்த கொலை முயற்சிகளுக்கு காரணம் என அறிந்து, அந்த முகத்திற்கு சொந்தக்காரர் உண்மையில் யார் என அறிய தேடி செல்கிறார் அதர்வா.

இறுதியில் அந்த முகத்திற்கு சொந்தக்காரர் யார்? அவரை கொலை செய்ய முயற்சி செய்தது யார்? அதன் பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் அதர்வா, துறுதுறு இளைஞனாக நடித்திருக்கிறார். காதல், நடனம், ஆக்ஷன் காட்சிகளில் திறமையான உழைப்பை கொடுத்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார்.
முதல் நாயகியாக நடித்திருக்கும் மேகா ஆகாஷ் அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் இந்துஜா கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். முதற்பாதியில் சதீஷ் காமெடியும், பிற்பாதியில் ஆர்ஜே பாலாஜியின் காமெடியும் திரையின் ஓட்டத்திற்கு கைக்கொடுத்திருக்கிறது.

விவசாயத்தை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஆர்.கண்ணன். நதிநீர் இணைத்தால் வறண்ட இடங்களையும் விவசாயம் செழிக்கும் என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார். முதல்பாதி வேகமாகவும், பிற்பாதி மெதுவாகவும் திரைக்கதை நகர்த்திருக்கிறார். ஒரு சில இடங்களில் மற்ற படத்தின் ஞாபகம் வந்து செல்கிறது. நம் நாட்டில் நடந்த பல விஷயங்களை பற்றி ஆங்காங்கே வரும் காட்சிகள் மற்றும் வசனங்களுக்கு படத்திற்கு பிளஸாக அமைந்திருக்கிறது. கதாபாத்திரங்களிடையே நன்றாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர்.
ரதன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் சிறப்பாக கொடுத்திருக்கிறார். பிரசன்னா எஸ் சுகுமாரின் ஒளிப்பதிவு, முற்பகுதி நகரத்தையும், பிற்பகுதி கிராமத்தையும் அழகாக படம்பிடித்திருக்கிறது.
மொத்தத்தில் ‘பூமராங்’ சமூக அக்கறை.
‘போங்கு’ படத்தில் கதாநாயகியாக நடித்த ருஹி சிங்கிற்கு வாலிபர் ஒருவர் போனில் ஆபாச செய்திகளையும், மிரட்டல் செய்திகளையும் அனுப்பி இருக்கிறார். #RuhiSingh
நட்டி என்கிற நட்ராஜ் நடித்த ‘போங்கு’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ருஹி சிங். இந்தியில் காலண்டர் கேர்ள்ஸ், இஷ்க் பார் எவர் உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார். ஒரு மாதமாக இவருக்கு செல்போனில் வாலிபர் ஒருவர் மிரட்டல் விடுத்து தொல்லை கொடுத்தார்.
இதுபற்றி ருஹி சிங் கூறி இருப்பதாவது:-
இந்தி இயக்குனர் அனுராக் கஷ்யப் என்று சொல்லிக்கொண்டு ஒரு நபர் எனக்கு அடிக்கடி செல்போனில் ஆபாச செய்திகளையும் மிரட்டல் செய்திகளையும் அனுப்பி வருகிறார். ஆரம்பத்தில் அந்த செய்தியை நான் கண்டு கொள்ளவில்லை. ஆனால் தொடர்ந்து அதேபோல் செய்துவருகிறார்.
அவரது எண்ணை நான் பிளாக் செய்துவிட்டேன். ஆனாலும் புதுப்புது எண்களில் இருந்து எனக்கு ஆபாச செய்தி அனுப்புகிறார். இதுகுறித்து போலீசில் புகார் அளித்தேன். அவர்கள் இது குறித்து விசாரிப்பதாக கூறினார்கள். ஆனாலும் எந்த பலனும் இல்லை. மீண்டும் அந்த நபர் ஆபாச செய்தி அனுப்பிக்கொண்டே இருக்கிறார்.

அவரிடம் தொலைபேசியில் நானே பேசி, இதுபோல் செய்வது தவறு, சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரித்தேன். அவரோ ‘நானே ஒரு போலீஸ் அதிகாரி தான். நான் ஜெயிலுக்கு செல்ல தயார் உன்னால் முடிந்ததை செய்’ என்கிறார். அவர் அனுப்பிய செய்தியில் நான் எப்போது எங்கு வந்து தன்னை சந்திக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
என்னை பற்றிய நிறைய விஷயங்களை அந்த நபர் தெரிந்து வைத்திருக்கிறார். யாருடன் நான் பேசுகிறேன். யாரை சந்திக்கிறேன் என்பதை எல்லாம் பெயர் விபரங்களுடன் சொல்கிறார். எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை.
இதுபோன்ற நபர்களை சும்மா விடக்கூடாது. அதனால் தான் இந்த விஷயங்களை பகிரங்கமாக சொல்கிறேன். இதுபோல் தொந்தரவு அனுபவிக்கும் வேறு எந்த பெண்ணும் பயப்படக்கூடாது என்பதே எனது நோக்கம். யார் தொந்தரவு செய்தாலும் உடனடியாக சைபர் கிரைமில் புகார் செய்யுங்கள்’.
இவ்வாறு ருஹி சிங் கூறினார்.
நவீன் நஞ்சுண்டான் இயக்கத்தில் கதிர், சிருஷ்டி டாங்கே, லகுபரன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சத்ரு’ படத்தின் விமர்சனம். #Sathru #SathruMovieReview #Kathir #SrushtiDange
லகுபரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து பணக்கார வீட்டு குழந்தைகளாக தேர்ந்தெடுத்து கடத்தி, அவர்களிடம் இருந்து பணம் பறிக்கிறார். அந்த வகையில் ஒருவரின் குழந்தை கடத்தப்பட, தனது குழந்தையை மீட்க போலீசின் உதவியை நாடுகிறார்.
மாரிமுத்து தலைமையிலான காவல் நிலையத்தில் எஸ்.ஐ.யாக இருக்கும் கதிர் இந்த வழக்கை விசாரிக்கிறார். குழந்தையின் தந்தையிடம் பணத்தை வாங்கிச் செல்லும் லகுபரனின் நண்பனை டிராக்கர் மூலமாக கண்டுபிடித்து சுட்டுக் கொன்றுவிட்டு குழந்தையை மீட்டுச் செல்கிறார். இதையடுத்து நண்பனை கொன்ற கதிரை, தனது நண்பர்களுடன் சேர்ந்து பழிவாங்க திட்டமிடுகிறார் லுகுபரன்.
இதற்கிடையே கதிர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். கதிரின் மொத்த குடும்பத்தையே அழிக்க நினைக்கும் லகுபரன், அவரது அண்ணன் குழந்தையை காரை ஏற்றி கொல்ல முயற்சிக்கிறார். குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொல்லப்போவதாக கதிரை மிரட்டுகிறார்.

இறுதியில், தனது வேலையை இழந்த கதிர், லகுபரன் மற்றும் அவரது கூட்டாளிகளை எப்படி சமாளிக்கிறார்? தனது குடும்பத்தை எப்படி காப்பாற்றுகிறார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
கதிர் படம் முழுக்க ஒரு மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். தனது பணியை நேர்மையுடன் செய்யும் போலீஸ் கதாபாத்திரத்தில் மிளிர்கிறார். சிருஷ்டி டாங்கே கொடுத்த கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைக்கிறார்.
ஹீரோவாக நடித்து வந்த லகுபரன், இந்த படத்தில் வில்லனாக மிரட்டிச் சென்றிருக்கிறார். அவருக்கு இது பெயர் சொல்லும் படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. லகுபரனின் நண்பர்களாக வரும் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளார்கள். பொன்வண்ணன், மாரிமுத்து அனுபவ நடிப்பையும், சுஜா வருணி சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார்கள்.

போலீஸ், திருடன் கதையை ரசிகர்களுக்கு ஏற்றவாறு திரில்லர் பாணியில் இயக்கியிருக்கிறார் நவீன் நஞ்சுண்டான். அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். முதல் பாதி விறுவிறுப்பாகவும், பிற்பாதி வேகம் குறைவாகவும் திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார்.
அம்ரிஷின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில் ‘சத்ரு’ திறமையானவன்.
சன்னி லியோன், ஷரத்தா தாசை ஓரங்கட்டி சிம்பு பட நாயகியான சனாகான், விஷால் நடிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். #SanaKhan
வடஇந்தியாவை சேர்ந்த சனாகான் தமிழில் சிம்பு நடித்த சிலம்பாட்டம் திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடித்த அவர் சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவை விட்டு விலகியே இருந்தார்.
இந்த நிலையில், அயோக்யா படம் மூலம் மீண்டும் தமிழ் திரையுலகுக்கு ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். அயோக்யா படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகளில் நடிகர் விஷால் பிசியாக இருந்து வருகிறார். இந்தப் படம் ஏப்ரல் 19ந்தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற ‘டெம்பர்’ படத்தின் ரீமேக்கே இந்தப் படம் ஆகும். இந்தப் படம் குறித்து மேலும் ஒரு தகவலும் வெளியாகியுள்ளது.

பெரம்பூர் பின்னி மில்லில் தற்போது அயோக்யா படக்குழு ஒரு பாடலை படம்பிடித்து வருகிறது. இந்த பாடலில் சனா கான் நடனமாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு சன்னி லியோன் நடனமாடுவதாக முன்பு தகவல் வெளியாகியது. அவர் பிசியாக இருந்ததால் ஷ்ரத்தா தாஸ் இந்தப் பாடலுக்கு நடனமாடுவதாக சில தகவல்கள் வெளியாகின.
இப்போது சனா கான் நடனமாடுகிறார். ஏ.ஆர்.முருகதாஸிடம் துணை இயக்குநராக பணிபுரிந்த வெங்கட் குமார் இந்தப் படத்தை இயக்குகிறார். சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.
சிவா இயக்கத்தில் அஜித்குமார் - நயன்தாரா நடிப்பில் பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் படத்திற்கு தெலுங்கில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. #Viswasam #AjithKumar #Nayanthara
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், ஜெகபதி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘விஸ்வாசம்‘. ஜனவரி 10-ந் தேதி ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படத்துடன் வெளியானது. தமிழகத்தில் ‘விஸ்வாசம்‘ படத்துக்கு பெரும் ஆதரவு கிடைத்தது, விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என பலருக்கும் நல்ல லாபம் கிடைத்தது.
படத்தின் வசூல் கணக்குகள் குறித்து தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், “இத்திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.125 கோடி முதல் ரூ.135 கோடி வசூல் செய்துள்ளது. விநியோகிஸ்தர்களின் பங்கு என்பது ரூ.70 கோடி முதல் ரூ.75 கோடி வரை எட்டும்“ என்று தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் தெலுங்கு டப்பிங் மார்ச் 1ந் தேதி வெளியானது. எதிர்பார்த்த வரவேற்பு இல்லாததால் படம் தோல்வியை சந்திக்கும் என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளார்கள். படம் வெளியான 2 நாட்களின் மொத்த வசூலே 1 கோடிக்கும் குறைவு தான் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை அஜித் நடித்த படங்களின் தெலுங்கு டப்பிங் பெரிய அளவுக்கு வரவேற்பு பெறவில்லை. அந்த சோகம் தொடர்கிறது. #Viswasam #AjithKumar #Nayanthara
பேட்ட, காஞ்சனா 2 படங்களை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்க சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். #SK16 #Sivakarthikeyan
சிவகார்த்திகேயன் நடிப்பில் மிஸ்டர். லோக்கல் படம் வருகிற மே 1-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் சார்ந்த படமொன்றில் நடித்து வருகிறார்.
அடுத்ததாக பி.எஸ்.மித்ரன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்திலும் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
Extremely Happy to be associated with @sunpictures and My director who introduced me to the big screen @pandiraj_dir sir👍😊 #SK16BySunPictureshttps://t.co/2HTMVJAjCD
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) March 8, 2019
இந்த நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றியை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார். மெரினா படத்தின் மூலம் சிவகார்த்திகேயனை திரையுலகில் அறிமுகப்படுத்தியவர் பாண்டிராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்களது கூட்டணியில் உருவான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இந்த நிலையில், இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர்.
சிவகார்த்திகேயனின் 16-வது படமாக உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதிமாறன் தயாரிக்கிறார். #SK16 #Sivakarthikeyan #Pandiraj
சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் பிரபல பின்னணி பாடகர்கள் செந்தில் - ராஜலட்சுமி ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள். #Suriya38 #SudhaKongara
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள `என்ஜிகே' படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை முடித்த பிறகு ‘இறுதிச்சுற்று’ பட இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை 2டி எண்டர்டய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. சூர்யாவின் 38-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

சாதாரண மனிதர்களும் விமானப் போக்குவரத்தை பயன்படுத்தும் நோக்கில் பட்ஜெட் விமானச் சேவையை அறிமுகப்படுத்திய ‘ஏர் டெக்கான்’ நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட உள்ளது.
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி வாயிலாக பிரபலமடைந்த செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி இப்படத்திற்காக ஒரு பாடலை பாடியுள்ளனர். #Suriya38 #SudhaKongara
வி.ஆர்.ஆர். இயக்கத்தில் கௌசிக் - அக்னி பவார் நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஸ்பாட்' படத்தின் விமர்சனம். #SPOT #SPOTReview #Kaushik #AgniPawar
போலீஸ் அதிகாரியின் மகனான நாயகன் கௌசிக், தன்னுடைய பிறந்த நாளை நண்பர்களுடன் பப்பில் கொண்டாடி வருகிறார். அதே பப்பில் இருக்கும் நாயகி அக்னி பவாரை, வில்லனாக இருக்கும் நாசர் அவரது அடியாளான கராத்தே கோபாலனை வைத்து, கொலை செய்ய முயற்சி செய்கிறார்.
இதை பார்க்கும் கௌசிக், கராத்தே கோபாலனிடம் இருந்து அக்னி பவாரை காப்பாற்றி தன்னுடைய நண்பர்களுடன் காரில் அழைத்து செல்கிறார். இவர்களை துரத்திக் கொண்டு கராத்தே கோபாலனும் செல்கிறார். சென்னையில் இருந்து ஆந்திரா வரை கௌசிக்கின் காரை துரத்திக் கொண்டு கராத்தே கோபாலன் செல்கிறார்.

அக்னி பவாரை கொல்ல தடையாக இருக்கும் கௌசிக்கையும், அவரது நண்பர்களையும் கொலை செய்ய சொல்கிறார் நாசர். ஒரு கட்டத்தில் கௌசிக்கின் கார் டீசல் இல்லாமல் நிற்க, நண்பர்களில் ஒருவர் தனியாக செல்ல, அவரை கராத்தே கோபாலன் கொன்று விடுகிறார்.
இதனால் விரக்தியடையும் கௌசிக், கராத்தே கோபாலன் துரத்தும் காரணத்தை அக்னி பவாரிடம் கேட்க, தன்னுடைய வாழ்க்கையில் நடந்தவற்றை அக்னி பவார் விவரிக்கிறார்.
கடைசியில், அக்னி பவாரின் பிரச்சனையை கௌசிக் தீர்த்து வைத்தாரா? அக்னி பவாரை கராத்தே கோபாலன் துரத்த காரணம் என்ன? அவர் வாழ்க்கையில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக வரும் கௌசிக், துறுதுறு இளைஞனாக நடித்திருக்கிறார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் திறம்பட நடித்திருக்கிறார். நாயகி அக்னி பவார் நடிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.
தன்னுடைய அனுபவ நடிப்பால் பளிச்சிடுகிறார் நாசர். வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் கராத்தே கோபாலன். இவர் நாயகன் கௌசிக்கின் தந்தையாவார். சரவணன், சங்கிலி முருகன் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

வித்தியாசமான கதைக்களத்துடன் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் வி.ஆர்.ஆர். படத்தின் முதற்பாதி சேஸிங்கிலேயே செல்கிறது. பிற்பாதியை மட்டுமே ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. சேஸிங் காட்சிகளை குறைத்திருந்தால், கூடுதலாக ரசித்திருக்கலாம்.
விஜய் சங்கர் இசையில் ஒரு பாடல் சிறப்பாக இருக்கிறது. மற்ற பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம். மோகன் ராஜ்ஜின் ஒளிப்பதிவு ரசிக்கும் விதம்.
மொத்தத்தில் ‘ஸ்பாட்’ வலுவில்லை. #SPOT #SPOTReview #Kaushik #AgniPawar
விக்ரம் குமார் இயக்கத்தில் மாதவன் - நீது சந்திரா நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற `யாவரும் நலம்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. #YavarumNalam2 #Madhavan
மாதவன் தற்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை கதை படத்தை இயக்கி நடித்து வருகிறார். நம்பி நாராயணன் பணியில் இருந்தபோது ராக்கெட் ரகசியங்களை விற்றதாக கைது செய்யப்பட்டதையும், பின்னர் அவர் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டதையும் மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது.
இதில் நம்பி நாராயணன் வேடத்தில் 3 தோற்றங்களில் மாதவன் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த படம் தயாராகிறது.

இந்த நிலையில் விக்ரம் குமார் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் கடந்த 2009-ல் வெளியான யாவரும் நலம் படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வித்தியாசமான பேய் படமாக வந்து வசூல் குவித்த இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உருவாகவிருப்பதை மாதவன் உறுதிப்படுத்தி உள்ளார்.
ராக்கெட்ரி படத்தை முடித்த பிறகு யாவரும் நலம் 2 படத்திற்கான பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #YavarumNalam2 #Madhavan
நேசம் முரளி இயக்கி, அவரே நடித்து, அவருக்கு ஜோடியாக பேபி ஐஸ்வர்யா, நந்தினி நடிப்பில் வெளியாகி இருக்கும் `கபிலவஸ்து' படத்தின் விமர்சனம். #Kabhilavasthu #KabhilavasthuReview
மீரா கிருஷ்ணன் தவறான வழியில் கர்ப்பமாகி, பொது கழிப்பிடத்தில் குழந்தையை பெற்று, அங்கேயே விட்டுச் செல்கிறார். அந்த குழந்தையை அங்கு வேலை செய்பவர், எடுத்து வளர்க்கிறார். வளர்ந்து பெரியளாகும் நாயகன் நேசம் முரளி, பொது கழிப்பிடத்தை கவனித்து வருகிறார்.
பொது கழிப்பிடத்திற்கு அருகே, நாயகி நந்தினி தன்னுடைய குடும்பத்துடன் வந்து சாலையோரத்தில் தங்குகிறார். நந்தினிக்கு பணம் சேர்த்து ஒரு வாடகை வீட்டில் குடியேற வேண்டும் என்று விருப்பம்.

பிளாட்பாரத்தில் நந்தினி தன்னுடைய குடும்பத்துடன் தங்குவதற்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வருகிறது. இப்படி ஒரு பிரச்சனையில் நந்தினிக்கு உறுதுணையாக இருக்கிறார் நேசம் முரளி. இதிலிருந்து இவர்களுக்குள் காதல் ஏற்படுகிறது.
ஒரு கட்டத்தில் அந்த பிரச்சனையில் சிக்கி நேசம் முரளி ஜெயிலுக்கு செல்கிறார். தண்டனை காலம் முடிந்து திரும்பி வரும் நேசம் முரளி, பிளாட்பாரத்தில் தங்கியிருந்த நந்தினி, தன் குடும்பத்துடன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைகிறார்.

பின்னர் நந்தினியை தேடி அலைகிறார். இறுதியில் நந்தினியை நேசம் முரளி கண்டுபிடித்தாரா? நந்தினியுடன் இணைந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
தவறான வழியில் பிறக்கும் குழந்தைகளின் நிலைமையையும், பிளாட்பாரத்தில் வசிப்பவர்களின் நிலைமையை மையமாக வைத்து இந்த படத்தை இயக்கி இருக்கும் நேசம் முரளி, இதில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். யதார்த்தமான நடிப்பையும், அழுத்தமான கருத்தையும் இப்படத்தில் பதிவு செய்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் நந்தினி, பிளாட்பாரத்தில் இருந்து, வாடகை வீட்டிற்கு எப்படியாவது சென்று விட வேண்டும் என்ற குறிக்கோளுடன் நடித்து மனதில் பதிகிறார். அனுபவ நடிப்பால் கைத்தட்டல் பெற்றிருக்கிறார் மீரா கிருஷ்ணன். குழந்தை நட்சத்திரம் பேபி ஐஸ்வர்யா சிறப்பாக நடித்திருக்கிறார்.
விஜியின் ஒளிப்பதிவு பிளாட்பாரத்தில் கஷ்டப்படுவர்களை யதார்த்தம் மீறாமல் படம்பிடித்திருக்கிறது. ஸ்ரீகாந்த் தேவாவின் இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘கபிலவஸ்து’ எதார்த்தம். #Kabhilavasthu #KabhilavasthuReview #NesamMurali #Nandhini






