என் மலர்
சினிமா செய்திகள்
தமிழ் சினிமாவின் வளர்ந்துவரும் ஹீரோவான அதர்வா நடிக்கும் அடுத்த படத்தின் ஹீரோயின் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் வளர்ந்துவரும் ஹீரோவான அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளியான ''100'' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து அவர் இயக்குனர் கண்ணன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரேமம், கொடி போன்ற படங்களில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் நடிக்க உள்ளார். குடும்பம் மற்றும் உறவுகளை மையப்படுத்தி இப்படம் உருவாக உள்ளது.

பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 15-ந் தேதி தொடங்க உள்ளது. இப்படத்தில் அதர்வா பிஎச்.டி பட்டதாரியாகவும், அனுபமா பரதநாட்டிய டான்சராகவும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்குமுன் கண்ணன் இயக்கத்தில் அதர்வா ’பூமராங்’ திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா தற்போது புதிய அவதாரம் எடுக்கும் முடிவில் இருக்கிறார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா தற்போது ‘ஓ பேபி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. சமந்தா அளித்த பேட்டி வருமாறு:-
“சினிமாவில் வெற்றி தோல்வியை சந்தித்து இருக்கிறேன். இப்போது தரமான கதைகளை தேர்வு செய்ய வேண்டும் என்ற அக்கறை வந்துள்ளது. சினிமாவுக்கு வந்த புதிதில் கமர்ஷியல் படங்களில் நடித்தேன். 10 வருடங்கள் தாண்டிய பிறகும் அதுபோல் ஆடல், பாடல், காதல் என்று நடித்துக்கொண்டு இருக்க முடியாது.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களைதான் தேர்வு செய்ய வேண்டும். சினிமாவில் கதை மிகவும் முக்கியம். மகாநதியைப்போல் ‘யூ டர்ன்’ எல்லா தரப்பு மக்களையும் சேரவில்லை. எல்லா தரப்பு மக்களுக்கும் பிடித்த கதைகளில் நடிக்க வேண்டும். நான் தற்போது நடித்து வரும் ‘ஓ பேபி’ கதை அதுமாதிரி இருக்கும். விரைவில் படம் தயாரிக்கும் முடிவில் இருக்கிறேன்.

சமூகத்தில் பெண்கள் சமத்துவமாக வாழவேண்டும். வேலைக்கு செல்வதும், வீட்டில் இருப்பதும் அவர்கள் முடிவாக இருக்க வேண்டும். வீட்டில் இருக்க விரும்பும் பெண்ணை வேலைக்கு செல் என்றும், வேலைக்கு செல்ல விரும்பும் பெண்களை வீட்டில் இருந்து சமையல் செய் என்றும் கணவன்மார்கள் நிர்ப்பந்திக்க கூடாது.
சில கணவன்மார்கள் குழந்தைகளை வளர்ப்பதிலும், சமையல் செய்வதிலும் ஈடுபடுகிறார்கள். இது வரவேற்கத்தக்க மாற்றம்.” இவ்வாறு சமந்தா கூறினார்.
கீ படத்தை தொடர்ந்து ஜீவா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கொரில்லா’ திரைப்படம் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் விஜய் ராகவேந்திரா தயாரிப்பில், டான் சாண்டி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘கொரில்லா’. இதில் ஜீவா நாயகனாகவும், ஷாலினி பாண்டே நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள்.
மேலும், ராதாரவி, சதீஷ், முனீஸ்காந்த் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
‘விக்ரம் வேதா’ புகழ் சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ரூபன் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். வெற்றி மகேந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இப்படம் கடந்த மாதம் 21-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் சில பிரச்சினைகள் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது.
இதையடுத்து ஜூலை 5-ந் தேதி படம் ரிலீசாகும் என கூறப்பட்டுவந்த நிலையில், மீண்டும் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
‘பேட்ட’ படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்பார்’ படத்தின் பாடல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘பேட்ட’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
இந்த படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். ரஜினியுடன் பிரதீக் பாபர், தலீப் தாஹில், ஜதின் சர்னா, யோகி பாபு, நிவேதா தாமஸ் ஆகியோர் நடிக்கின்றனர்.
சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் ஓப்பனிங் பாடலை தான் பாடியுள்ளதாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தெரிவித்தார். இப்பாடல் நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என அவர் கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
காஞ்சனா 3 படத்தை தொடர்ந்து லாரன்ஸ் நடிக்க உள்ள அடுத்த படத்தை பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனந்தம், ரன், சண்டகோழி, பையா என ஹிட் படங்களை கொடுத்தவர் லிங்குசாமி. அவர் அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். ஆக்ஷன் திரைப்படமாக உருவாகும் இதில் கதாநாயகனாக ராகவா லாரன்சை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய காஞ்சனா 3 திரைப்படம் ஏப்ரல் மாதம் ரிலீசாகி வசூல் சாதனை படைத்தது.

இந்நிலையில் காஞ்சனா 4 திரைப்படத்தின் தயாரிப்பு பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதுதவிர லாரன்ஸ் அக்ஷய் குமாரை கதாநாயகனாக கொண்டு காஞ்சனா திரைப்படத்தை இந்தியில் ‘லக்ஷ்மி பாம்’ என்ற பெயரில் ரீமேக் செய்துவருகிறார்.
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தில் பிரபல நட்சத்திரங்கள் சிலர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
'அட்டக்கத்தி' திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார் பா.ரஞ்சித். இதையடுத்து மெட்ராஸ் படத்தை இயக்கினார். இதன்பின்னர் ரஜினியை வைத்து கபாலி, காலா என அடுத்தடுத்து படங்களை இயக்கி வெற்றி கண்டார்.
சமீபத்தில் 'ராஜராஜ சோழன்' குறித்து அவதூறாக பேசி சர்ச்சைகளில் சிக்கினார். இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், பா.ரஞ்சித் மல்டி ஸ்டார் படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது இப்படத்தில் ஆர்யா, ராணா மற்றும் சத்யராஜ் ஆகிய மூவரும் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் மேலும் ஒருசில பிரபலங்கள் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நயன்தாராவின் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் நீக்கியதால், இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
நயன்தாரா நடித்துள்ள `கொலையுதிர் காலம்' படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. சக்ரி டோலட்டி இயக்கியிருக்கும் இந்த படம் மர்மம் கலந்த திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது. `ஹஷ்' என்ற ஹாலிவுட் படத்தை தழுவி இந்த படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. தணிக்கையில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோரி கெர்யக் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராமேஸ்வர் எஸ்.பகத் படத்தொகுப்பை கவனிக்கிறார். இப்படம் கடந்த மாதம் 14-ந் தேதி வெளியாக இருந்தது.
இதனிடையே, கொலையுதிர்காலம் என்ற டைட்டிலுடன் படத்தை வெளியிடக்கூடாது என்று பாலாஜி குமார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தது.

இந்த தடையை நீக்க கோரி தயாரிப்பாளர் மதியழகன் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. தயாரிப்பு தரப்பு வழக்கறிஞர் கொலையுதிர்காலம் என்ற தலைப்பிற்கு எந்த காப்புரிமையும், யாரிடமும் இல்லை என்பதை ஆதாரத்துடன் எடுத்து வைத்து வாதாடினார். இதையடுத்து காப்புரிமை இல்லாத டைட்டிலை யார் வேண்டுமானாலும் பயன்படுத்த உரிமை உண்டு எனக்கூறி படத்துக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ் திரையுலகின் முன்னணி நாயகனான அஜித்திற்கு பாலிவுட் படங்களில் நடிக்க அழைப்பு விடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நாயகனான அஜித், ஆண்டுக்கு ஒரிரு படங்களில் மட்டுமே நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
தற்போது எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகி உள்ள அஜித்தின் நேர் கொண்ட பார்வை, திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வருகிறது. இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது.

இதில் அஜித் ஜோடியாக வித்யா பாலன், முக்கிய வேடங்களில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங், அஸ்வின் ராவ், சுஜித் சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இதற்கிடையே, பாலிவுட் படங்களில் நடிக்க அஜித்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாக கோலிவுட்டில் தகவல் வெளியாகி உள்ளது.
அரசியல் பற்றி ஒன்றும் தெரியாதவர்கள் எல்லாம், நடிகர் சங்கத்தில் அரசியல் செய்வது வருத்தமளிக்கிறது என, நடிகர் நெப்போலியன் தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்க தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளித்தது, மீடியாக்கள் முக்கியத்துவம் அளித்தது போன்றவை கடும் விமர்சனத்துக்குள்ளாகியது.
இந்நிலையில், இது தொடர்பாக நடிகரும், அரசியல்வாதியுமான நெப்போலியன் கூறியதாவது:- நான் நடிகர் சங்கத்தில் துணைத்தலைவராக இருந்திருக்கிறேன். அந்த வேளையில் விஜயகாந்த் தலைவராகவும், சரத்குமார் பொதுச்செயலாளராகவும் இருந்தனர்.
அப்போது நாங்கள் வெவ்வேறு அரசியல் கட்சிகளில் இருந்தோம். இருப்பினும் நடிகர் சங்கம் என வந்துவிட்டால் நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவோம்.
ஆனால் தற்போது நடிகர் சங்கத்தில் இருப்பவர்கள், அரசியல் பற்றி ஒன்றும் தெரியாமல், அரசியல் செய்வது வருத்தமளிக்கிறது" என அவர் கூறினார்.
தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் தன்மையுள்ள நடிகையாக வலம் வருகிறார் நடிகை ராஷி கண்ணா.
தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து தற்போது விஜய் சந்தர் இயக்கும் சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்து வருகிறார். இதேபோல் தெலுங்கிலும் விஜய் தேவரகொண்டா, நாக சைதன்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தமிழில் முன்னணி ஹீரோக்கள் நடிக்க இருக்கும் இரண்டு படங்களிலும் ராஷி கண்ணாவே நாயகியாக நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் `கடாரம் கொண்டான்' படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம், அக்ஷரா ஹாசன், அபி நாசர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `கடாரம் கொண்டான்'. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இப்படத்தின் டப்பிங் பணியை விக்ரம் முடித்துவிட்டதாக படக்குழுவினர் நேற்று அறிவித்திருந்தது.
இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதியை படக்குழு இன்று அறிவித்துள்ளது. அதன்படி வரும் ஜூலை 3-ந் தேதி படத்தின் டிரைலர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஸ்ரீநிவாஸ் ஆர்.குதா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். விரைவில் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
காலம் பேசாது ஆனால் அனைத்திற்கும் பதில் சொல்லும் என சாலமன் பாப்பையா எழுதியுள்ள நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
சென்னை:
சென்னையில் இன்று சாலமன் பாப்பையா எழுதிய ‘புறநானூறு புதிய வரிசை வகை’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
ராமாயணம் எழுதியதால் கம்பருக்கு பெருமை அதேபோல் புறநானூறு புதிய வரிசை நூலை எழுதியதால் சாலமன் பாப்பையாவுக்கு பெருமை. இதனை இளைய தலைமுறையினர் படித்து பயனடைய வேண்டும். மேலும் காலம் எப்போதும் பேசாது ஆனால் அது அனைத்துக்கும் பதில் சொல்லும்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.






