என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தர்பார் படத்தை அடுத்து ரஜினி நடிக்க உள்ள புதிய படம், எஜமான், முத்து, படையப்பா பாணியில் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இது ரஜினியின் 167-வது படமாகும். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. படத்தில் மும்பையில் வசிக்கும் போலீஸ் அதிகாரியாக ரஜினி நடிக்கிறார். அவருக்கு அதிரடி சண்டைக்காட்சிகள் அமைந்துள்ளன.

    அரசியலில் இறங்கிய பின்னரும் நடிப்பேன் என்று கூறியுள்ள ரஜினிகாந்த் அடுத்து நடிக்கவுள்ள படம் பற்றிய பேச்சு சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பரவி வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் சிறுத்தை, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களை இயக்கிய இயக்குனர் சிறுத்தை சிவா ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

    அவர் ரஜினியின் அடுத்தப் படத்தை இயக்குகிறாரா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு சிவா மறுப்பு தெரிவிக்கவில்லை. தற்போது வலம் வரும் தகவல்கள் அதை உறுதிபடுத்தும் விதமாக உள்ளது.

    சிவா, ரஜினிகாந்த்

    ரஜினியின் 168-வது படத்தை சிவா இயக்குவதாக கூறப்படுகிறது. 90களில் ரஜினிக்கு மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்த எஜமான், முத்து, படையப்பா ஆகிய படங்கள் கிராமப்புற பின்னணியில் அமைந்திருந்தன. வீரம், விஸ்வாசம் என கிராமப்புற பின்னணியில் மாஸ் ஹீரோக்களுக்கான கதையமைத்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் சிவா, ரஜினிக்கும் அப்படி ஒரு திரைக்கதையை எழுதி உள்ளார்.

    தர்பார் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த உடனே இன்னும் சில மாதங்களில் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனேகமாக ரஜினியின் பிறந்தநாள் அன்று இந்த படம் தொடங்கப்பட்டலாம். படத்தை அடுத்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
    மன அழுத்தம் பற்றி பேசிய நடிகர் சல்மான்கான் மீது பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கடுமையாக சாடியுள்ளார்.
    இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோனே. சினிமாவில் முன்னணி இடத்துக்கு வருவதற்கு போராடி கொண்டிருந்த போது தான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாக பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.

    இந்தி முன்னணி நடிகர் சல்மான் கான் சமீபத்தில் ஒரு பேட்டியில் மனஅழுத்தம் ஏற்படும் வாய்ப்பே தனக்கு கிடைக்கவில்லை என்று தெரிவித்தார். இதை கேட்ட தீபிகா அவரை விளாசி உள்ளார். அவர் இதுபற்றி கூறியிருப்பதாவது:-

    ‘என் மனஅழுத்த அனுபவம் பற்றி ஒரே வார்த்தையில் கூற வேண்டும் என்றால் போராட்டம் என்பேன். ஒவ்வொரு நொடியுமே போராட்டம் தான். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டபோது எப்போதுமே அசதியாக இருக்கும்.

    சல்மான்கான், தீபிகா படுகோனெ

    மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் வாய்ப்பு கிடைக்க வில்லை என்று நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளார். யாரும் தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட வேண்டும் என்று ஆசைப்படுவது இல்லை. பணம், புகழ், குடும்பம் என்று அனைத்தும் இருந்தால் மன அழுத்தம் ஏன் வரப்போகிறது என்ற நினைப்பு உள்ளது.

    மன அழுத்தம் என்றால் என்ன, அது ஏன் ஏற்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மன அழுத்தம் ஏற்படுவது நம் கையில் இல்லை. ஒரு குறிப்பிட்டவர்களுக்கு தான் மன அழுத்தம் ஏற்படும் என்று நினைப்பது தவறு.

    மன அழுத்தம் பற்றி வெளியே தெரிவிக்க பலர் பயப்படுகிறார்கள். இதில் பயப்பட எதுவுமே இல்லை. உரிய சிகிச்சை பெறுவது அவசியம்’.

    இவ்வாறு தீபிகா கூறியுள்ளார்.

    மன அழுத்தம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த லிவ் லவ் லாப் பவுன்டே‌ஷனை தீபிகா கடந்த 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ந்தேதி தொடங்கினார். தீபிகா மனம் திறந்து பேசிய பிறகு பல நடிகைகள் மன அழுத்தம் குறித்து பேச தொடங்கி உள்ளனர்.
    வடசென்னை படத்தின் வெற்றியை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் அசுரன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    வடசென்னை படத்தின் வெற்றிக்கு பின், வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் உருவாகிவரும் படம் அசுரன். பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகும் இப்படத்தில் மஞ்சு வாரியர், பசுபதி, இயக்குனர்கள் பாலாஜி சக்திவேல், சுப்ரமணிய சிவா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

    கருணாஸ் மகன் கென் முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ளார். இப்படத்தில் தனுஷ் ஒரே கதாபத்திரத்தில் மூன்று விதமான தோற்றங்களில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தை அக்டோபர் மாதம் 4ம் தேதி வெளியிட இருப்பதாக நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார். 



    கடந்த வருடம் அக்டோபர் 17ந்தேதி வெற்றிமாறன்- தனுஷின் கூட்டணியில் வடசென்னை வெளியானது. அந்த அக்டோபர் ராசியில் அசுரன் படத்தையும் வெளியிட இருக்கிறார்கள்.
    நாடோடிகள் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை அபிநயா, தற்போது ஆபரேசன் அரபைமா படத்தில் செய்தி வாசிப்பாளராக நடித்துள்ளார்.
    நாடோடிகள் படம் மூலம் அறிமுகமானவர் அபிநயா. இயல்பிலேயே வாய் பேச முடியாத அபிநயா சிறந்த கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை நிரூபித்து வருகிறார். அடுத்து அவர் ஆபரேசன் அரபைமா என்ற படத்தில் செய்தி வாசிப்பாளராக நடிக்கிறார்.

    ரகுமான் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தை இயக்குநர்கள் டி.கே.ராஜிவ்குமார் மற்றும் அரண் படத்தின் இயக்குநர் மேஜர் ரவி ஆகியோரிடம் அசோசியேட் டைரக்டராக பணியாற்றிய ப்ராஷ் இயக்குகிறார். ப்ராஷ், இந்திய ராணுவத்தில் அட்வெஞ்சர் பைலட்டாக பணி புரிந்தவர். டைம் அண்ட் டைடு பிரேம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும், இந்த படத்தை பற்றி ப்ராஷ் கூறியதாவது:-

    ஆபரேசன் அரபைமா படத்தில் அபிநயா

    ’நேர்மையும் துணிச்சலும் கொண்ட ஒரு கடற்படை அதிகாரியின் கதையை கருவாக கொண்ட சஸ்பென்ஸ் திரில்லர் படம் இது. சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறேன். தமிழ், தெலுங்கு இருமொழிகளில் மிகுந்த பொருட்செலவில் நவீன தொழில் நுட்பங்களுடன் வேகமாக உருவாகி வருகிறது. ஒரே இரவில் நடக்கும் விறுவிறுப்பான கதை’ என்றார். மேலும் அரபைமா என்பது கடலில் இருக்கும் ஒருவகை மீன் என்று விளக்கம் அளித்தார்.
    அறிமுகமாகும் முதல் படத்திலேயே பல சவால்களை சந்தித்து, இயக்குநருக்கான ஒளிப்பதிவாளர் என்கிற நற்பெயரை சம்பாதித்திருக்கிறார் கிஷோர் குமார்.
    இயக்குநர் பா.இரஞ்சித்தின் “நீலம் புரொடக்‌ஷன்ஸ்” தயாரிக்கும் இரண்டாவது படம் “இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு”. இதில் தினேஷ், ஆனந்தி, ரித்விகா, லிஜீஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தினை பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அதியன் ஆதிரை இயக்கி இருக்கிறார். கலை இயக்குநராக த.ராமலிங்கம் பணிபுரிந்திருக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக கிஷோர் குமார் பணியாற்றி இருக்கிறார்.

    அறிமுகமாகும் முதல் படத்திலேயே பல சவால்களை சந்தித்து, இயக்குநருக்கான ஒளிப்பதிவாளர் என்கிற நற்பெயரை சம்பாதித்திருக்கிறார் கிஷோர் குமார். திட்டமிடப்பட்டபடி 45 நாட்களில் 40 லொகேஷன்களின் ஷூட்டிங் நடத்தியாக வேண்டிய சவாலை ஏற்று, இயக்குநரோடு தோளுக்கு தோளாக நின்று படத்தினை குறித்த நேரத்தில் முடிப்பதற்கு பக்கபலமாக இருந்திருக்கிறார்.

    அதியன் ஆதிரை, கிஷோர் குமார்

    இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த இயக்குநர் அதியன் ஆதிரை, கிஷோர் குமாரை பாராட்டி தள்ளினார். “நிச்சயமாக இது ஒரு கடினமான பயணம்தான் எங்களுக்கு. 45 நாட்களில் 40 லொகேஷன் என திட்டமிடும் போது மனதிற்குள் ஒரு அச்சம் இருந்தது. ஆனால் அந்த அச்சத்தை போக்கி, திட்டமிட்டபடி முடிப்பதற்கு கிஷோர் கடுமையாக உழைத்தார்” என்று கூறினார்.

    அறிமுகமான படம் வெளியாகும் முன்னே பாராட்டுகளை பெற்று வரும் ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார், “மெட்ராஸ்”, “கபாலி”, “காலா” படங்களின் ஒளிப்பதிவாளரான முரளியின் மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.

    திரையரங்கு முன்பு அஜித் ரசிகர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
    அஜித் குமார் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம் இன்று வெளியானது. இந்த படத்துக்காக டிக்கெட் எடுக்க நடிகர் சாந்தனு நேற்று நள்ளிரவு 11.30 மணிக்கு சென்னையில் சத்யம் திரையரங்கத்துக்கு சென்றுள்ளார்.

    அங்கு அஜித் ரசிகர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதாக சாந்தனு தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அவர் நள்ளிரவு 11.55 மணிக்கு இதை பகிர்ந்துள்ளார்.

    சாந்தனு ட்விட்

    அதில், சத்யம் திரை அரங்கில் தனக்கு அருகில் இருந்த நபர் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க தீப்பெட்டி தேடிக்கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.

    நேர்கொண்ட பார்வை படத்துக்கான டிக்கெட் பிரச்சினையில் இவ்வாறு அந்த நபர் செய்ததாகவும், அவரை போலீஸ் கைது செய்ததாகவும் சாந்தனு தெரிவித்துள்ளார். அஜித் மற்றும் மற்ற திரை நட்சத்திரங்கள் தங்கள் ரசிகர்கள் மேற்காணும் செயல்களில் ஈடுபடுவதை ஊக்குவிக்கக்கூடாது என்றும் சாந்தனு தனது டுவிட்டில் கேட்டுக்கொண்டுள்ளார்.
    தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் மிகவும் பிரபலமான நித்யா மேனன், அடுத்ததாக கிரைம் கதையில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
    மெர்சல் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நித்யா மேனன் அதனை தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். தி அயர்ன் லேடி என்ற படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயோபிக்கில் நடிக்க ஒப்பந்தமானவர் அதற்கான பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

    அதே சமயம், மலையாளத்தில் இவர் நடித்துள்ள கொளம்பி என்ற படமும், இந்தியில் அக்‌‌ஷய் குமாருடன் நடித்துள்ள மி‌ஷன் மங்கள் என்ற படமும் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், நித்யா மேனன் ஒப்பந்தமாகியுள்ள மற்றொரு மலையாள படம் ஆறாம் திருகல்பனா.

    நடிகை நித்யாமேனன்

    சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஷைன் டாம் சாக்கோ இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இரண்டு கதாபாத்திரங்களை மட்டுமே மையம் கொண்ட உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு கிரைம் கதையாக உருவாகும் படமிது.

    நித்யா மேனனுக்கு வலுவான கதாபாத்திரமும் ஷைன் டாம் சாக்கோவுக்கு காவல் துறை அதிகாரி கதாபாத்திரமும் அளிக்கப்பட்டிருக்கிறது. செப்டம்பர் 20ந்தேதியிலிருந்து கோழிக்கோட்டில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. அஜய் தேவலோகா இப்படத்தை இயக்க உள்ளார். இதற்கு முன் இவரது இயக்கத்தில் வெளியான ‘ஹூ’ என்ற படம் கேன்ஸ் திரைப்படவிழாவில் பங்குபெற்றது.
    பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 'சூப்பர் டீலக்ஸ்' படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்து பல்வேறு பாராட்டுகளைப் பெற்றிருந்தார். இப்படம் 'மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா' வில் திரையிடப்பட்டது. 

    ஷாருக்கானுடன் விஜய்சேதுபதி

    அதைத் தொடர்ந்து இப்படம் விருதுக்கும் தேர்வானது. சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த படம் ஆகிய மூன்று பிரிவுகளில் இப்படம் தேர்வாகியுள்ளது. அதுமட்டுமன்றி விருதைத் தேர்ந்தெடுக்கும் நடுவர்கள், இப்படத்தைப் பற்றி பெருமையாகவும் பேசியுள்ளனர். இதன் விருது வழங்கும் விழா, மெல்போர்னில் நடந்து வருகிறது.

    பாலிவுட் பிரபலங்களுடன் விஜய்சேதுபதி

    இந்த விழாவில் பங்கேற்றுள்ள விஜய் சேதுபதி, பாலிவுட் பிரபலங்கள் ஷாருக்கான் மற்றும் கரண் ஜோகர் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த விழா இன்று முதல் ஆகஸ்ட் 15-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் 60க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
    ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகும் ‘தலைவி’ படத்தில் அரவிந்த்சாமி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகும் படம் ‘தலைவி’ . இதில் நடிகை கங்கனா ரணாவத் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தை விஜய் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. 

    தலைவி பட போஸ்டர்

    இதன் முதற்கட்ட படப்பிடிப்பு மைசூரிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இப்படத்தில் எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்த்சாமி நடிக்க உள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க உள்ளார். நிரவ் ஷா ஒளிப்பதிவை கவனிக்கிறார். 
    நானும், தம்பி ராமையாவும் சம்பளம் வாங்காமல் நடித்த சாட்டை படம் மூலம் இன்று யார் யாரோ சம்பாதிப்பதாக சமுத்திரகனி தெரிவித்துள்ளார்.
    சமுத்திரகனி, தம்பி ராமையா நடிப்பில் அன்பழகன் இயக்கிய சாட்டை திரைப்படம் கடந்த 2012-ம் ஆண்டு வெளிவந்து மிக பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றியை அடுத்து ஏழு வருடங்கள் கழித்து தற்போது ‘அடுத்த சாட்டை’ என்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

    பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான திலகவதி மகன் பிரபுதிலக் தயாரித்துள்ள இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த சமுத்திரகனி, தம்பிராமையா ஆகியோருடன் அதுல்யா ரவி, சசிகுமார், ஜூனியர் பாலையா உள்பட பலர் நடித்துள்ளனர் முதல் பாகத்தை இயக்கிய அன்பழகன் இயக்கியுள்ள இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது.

    அடுத்த சாட்டை பட இசை வெளியீட்டு விழா

    இந்த நிலையில், அடுத்த சாட்டை இசை வெளியீட்டு விழாவில் பேசிய சமுத்திரகனி, ‘சாட்டை படத்தில் நன்றாக நடித்தோம். படம் ஹிட். ஆனால் படத்தில் நடித்த நானும், தம்பி ராமையாவும் சம்பளம் வாங்கவில்லை. அந்த படம் மூலம் இன்று யார் யாரோ சம்பாதிக்கிறார்கள். அதை வாங்கிய டிவி சேனல் வாரம்தோறும் ஒளிபரப்பி சம்பாதிக்கிறது.

    சாட்டை படத்தில் நடித்த போதே பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடந்தன. அந்த படத்தில் காட்டியது அப்படியே ஆசிரியர் பகவான் வி‌ஷயத்தில் நடந்தது. அதை டிவியில் பார்த்ததும் அடித்து பிடித்து அவர் எண்ணை வாங்கி பேசினேன். அவருடனான நட்பு இன்றும் தொடர்கிறது. அவருடைய அனுபவங்கள் பல வி‌ஷயங்களை எனக்கு கொடுத்தது.

    அடுத்த சாட்டை படக்குழு

    அவர் எழுதிய புத்தகத்தில் பல கேள்விகள் உள்ளன. ஒவ்வொன்றையும் ஒவ்வொரு படமாக எடுக்கலாம். அடுத்த சாட்டை படம் அதில் ஒன்றுதான். இந்த படம் வெளியானால் எந்த ஆசிரியரும் தன் மாணவனை வகுப்பை விட்டு வெளியேபோ என்று சொல்லமாட்டார்’

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை ரூட்டு தல வி‌ஷயத்தில் கடும் நடவடிக்கைகள் எடுத்து, மாணவர்களை நல்வழிப்படுத்திய சென்னை அம்பத்தூர் போலீஸ் இணை ஆணையர் ஈஸ்வர், பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டார்.
    வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்த மாநாடு படம் கைவிடப்பட்டதாக அதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.
    வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக ‘மாநாடு’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருந்த இப்படத்தின் படப்பிடிப்பு குறிப்பிட்ட நாளில் தொடங்காததால் படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியானது. 

    இந்நிலையில் இப்படம் கைவிடப்பட்டதாக அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது:- மிக மிக வருத்தத்திற்குரிய ஒரு முடிவை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அன்புத் தம்பி சிம்பு அவர்கள் ஒரு பெரிய பொறுப்பை கொடுத்தார். தன்னை வைத்து மாநாடு படத்தை எடுக்க என்னை தூண்டி, துணை நின்ற நண்பன் சிம்புவுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

    பிரேம்ஜி, சிம்பு, வெங்கட் பிரபு

    ஆனால் காலமும் நேரமும் கடந்துகொண்டே போவது, நாளை கசப்பாக மாறிவிடக்கூடாது. எதையும் உரிய நேரத்தில் திட்டமிட்டபடி செய்கிறவன் அந்த தயாரிப்புக்கு நேர்மையோடு இருக்கிறான் என்று நம்புகிறவன் நான். ஆனால் எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம்தான் நிழ்ந்ததே தவிர படம் தொடங்க இயலவில்லை. 

    அதனால் சிம்பு "நடிக்க இருந்த" மாநாடு படத்தினை கைவிடுவதை தவிர்க்க இயலவில்லை. சிம்புவின் அன்பும் நட்பும் தொடரும். இதுவரை என்மீது அன்பு செலுத்திய அவரின் ரசிகர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. பத்திரிகையாளர்கள் அவ்வளவு துணை நின்றார்கள். எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். 

    வெங்கட் பிரபு இயக்க மாநாடு படம் எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும். விரைவில் அந்த அறிவிப்பு வரும். அனைவருக்கும் நன்றி”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 
    நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்திய காஷ்மீர் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு சினிமா எடுக்க தயாரிப்பாளர்கள் போட்டி போடுவதாக கூறப்படுகிறது.
    ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வந்த 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் அறிவித்தார். இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பும் ஆதரவும் கலந்த குரல்கள் ஒலிக்கத் தொடங்குகின்றன. சினிமா சார்ந்த பிரபலங்களும் தங்கள் ஆதரவையும் எதிர்ப்பையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

    நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு சினிமா எடுக்க இந்தி தயாரிப்பாளர்கள் போட்டி போடுகின்றனர். இந்த சம்பவத்தை மையமாக வைத்து படமாக எடுக்கும் வகையில் காஷ்மீர் ஹமாரா ஹை, தாரா 370, ஆர்டிகிள் 370, ஆர்டிகிள் 35ஏ உள்ளிட்ட 50 தலைப்புகளை இந்தி தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் இதுவரை பதிவு செய்துள்ளனர். இந்த தலைப்புகளை பதிவு செய்ய போட்டா போட்டி போட்டுள்ளனர்.

    யுரி தி சர்ஜிக்கல் ஸ்டிரைக் பட போஸ்டர்

    யுரி தாக்குதல் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட யுரி: தி சர்ஜிக்கல் ஸ்டிரைக் படம் சூப்பர் ஹிட்டானது. விக்கிகவுஷல் நடித்த அந்த படத்தின் வெற்றியை பார்த்துவிட்டு பாலிவுட் தயாரிப்பாளர்கள் புல்வாமா: தி டெட்லி அட்டாக், சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0 உள்ளிட்ட தலைப்புகளை பதிவு செய்தனர். பாலிவுட் படங்கள் பலவற்றின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் காஷ்மீர் குறித்த தலைப்புகளை பதிவு செய்துள்ளனர்.
    ×