என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘டாக்டர்’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
    சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘டாக்டர்’. ’கோலமாவு கோகிலா’ படத்தை இயக்கிய நெல்சன் இப்படத்தை இயக்கி வருகிறார். கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, வில்லனாக வினய் நடிக்கிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே திடீரென கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ‘டாக்டர்’ படத்தின் அப்டேட் வேண்டும் என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கடந்த சில நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் இன்று இரவு 7 மணிக்கு ‘டாக்டர்’ படத்தின் அப்டேட் வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. 



    அதன்படி 7 மணிக்கு வந்த அப்டேட்டில், ஜூலை 16ம் தேதி ‘செல்லம்மா...’ என்ற முதல் பாடலை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த பாடல்வரிகளை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் விவேக், தனது மைத்துனருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக கூறியுள்ளார்.
    கொரோனா வைரசால் பல திரையுலக பிரமுகர்கள் பாதிக்கப்பட்டு வருகிற செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. நேற்று அமிதாப்பச்சன் குடும்பத்திலுள்ள நால்வருக்கும் அனுபம்கெர் குடும்பத்தில் உள்ள நால்வருக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. 

    இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான நடிகர் விவேக்கின் மைத்துனருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயர்தர சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும் விவேக் கூறியுள்ளார்.



    இதுகுறித்து நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில், எனது மைத்துனர், கொரோனாவால்) காய்ச்சல், மூச்சுத் திணறலுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 10 நாட்களில் முற்றிலும் குணமடைந்தார். எளிய இடம் ஆனால் சிறந்த மருத்துவ வசதி, சிகிச்சை, தரமான உணவு கிடைத்ததாம். அரசு மருத்துவர்களுக்கு நன்றி’ இவ்வாறு நடிகர் விவேக் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
    நடிகை ஐஸ்வர்யா ராய் உடன் நடித்த நடிகர் ரஞ்சன் செகல் உடல்நல குறைவால் மரணம் அடைந்துள்ளார்.
    இந்தி மற்றும் பஞ்சாபி மொழி படங்களில் நடித்து வந்தவர் நடிகர் ரஞ்சன் செகல் (வயது 36). நடிகர் ரந்தீப் ஹூடா மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்த சர்ப்ஜித் என்ற இந்தி படத்தில் செகலும் நடித்துள்ளார். இவர், திரைப்படங்கள் தவிர்த்து தொலைக்காட்சியில் கிரைம் பேட்ரல் என்ற பிரபல தொடரிலும் நடித்துள்ளார். தும் தேனா சாத் மேரா, பவார் உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அவர் நடித்துள்ளார்.

    ரஞ்சன் செகல்

    இதனுடன், பஞ்சாபி மொழி படங்களிலும் அவர் நடித்துள்ளார். இந்த நிலையில், சண்டிகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உடல்நல குறைவால் அவர் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் உறுப்புகள் செயலிழந்தநிலையில் மரணம் அடைந்து உள்ளார். இவருடைய மறைவுக்கு பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
    கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் விரைவில் குணமடைய வேண்டி பார்த்திபன் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.
    பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆரத்யா ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் விரைவில் குணமடைய பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். 

    அந்தவகையில், இயக்குனரும், நடிகருமான பார்த்திபன், அமிதாப் பச்சன் விரைவில் குணமடைய வேண்டி, வெளியிட்டுள்ள பதிவில், "அமிtop! ரசிகனாய் என் அபிமான நட்சத்திர வரிசையில் உயர்நிலையில் நிற்பவர்! Positive-இன்றல்ல,என்றுமே நினைப்பவர் - உணர்வலைகளை பரப்புபவர். மருத்துவமனையிலிருந்து அவர் பேசப் பேச கண்கள் கசிந்தன மூப்பு என்ற ஒரே பலவீனத்தை தவிர மிக strong மனிதர். மகனின் கைகளை பற்றியபடி நலமோடு திரும்ப பிரார்த்தனைகள்" என பதிவிட்டுள்ளார்.

    அல்லு அர்ஜூன் நடிக்கும் புஷ்பா படத்தில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து நடிகர் விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார்.
    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜூன் அடுத்ததாக நடிக்கும் படம் புஷ்பா. சுகுமார் இயக்கும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாக உள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க உள்ளார். 

    இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அவர் இப்படத்தில் இருந்து திடீரென விலகினார். இதற்கான காரணம் வெளியிடப்படாமல் இருந்தது.

    புஷ்பா பட போஸ்டர்

    இந்நிலையில், கால்ஷீட் பிரச்சனை காரணமாக புஷ்பா படத்தில் இருந்து விலகியதாக நடிகர் விஜய் சேதுபதி சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் புஷ்பா படத்தின் கதை தனக்கு மிகவும் பிடித்திருந்ததாக விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
    நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் போஸ்டரை அவரது ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 115 திரைப்பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர்.
    ஒவ்வொரு ரசிகனுக்கும் தனது அபிமான நடிகரின் பிறந்த நாள் என்றால் அது அவர்களுக்கு ஒரு சிறப்பு மிகு நாள்தான். தங்களது அன்பை வெளிபடுத்த ரசிகர்கள் ஏதேனும் புதிதான முயற்சிகளை செய்து அவரது விருப்பமான நடிகரின் பிறந்தநாளை கொண்டாடுவர்.  நடிப்பிலும், அறச்செயலிலும் முதன்மையாக இருந்து வரும் நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் வருகிற 23 ஜூலை அன்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. 

    அவரது பிறந்த நாளை உலக முழுவதும் தெரியப்படுத்த அவரது ரசிகர்கள் விரும்பினர். அதற்காக முதன் முறையாக இந்தியாவில் பிரபலங்களாக விளங்கும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள்,  இசையமைப்பாளர்கள்,  ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள், பாடலாசிரியர்கள் என 115  பிரபலங்களை ரசிகர்கள் தொடர்பு கொண்டு நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் போஸ்டரை (CDP) அவரவர்களின் சமூக வலைதளத்தில் வெளியிடவைத்து உலகமே அறியும் வகையில் பிரம்மாண்டப் படுத்தியுள்ளனர்.

    சூர்யா பிறந்தநாள் போஸ்டர்

    சமூக வலைதளம் மூலமாக #SuriyaBirthdayFestCDP என்ற ஹேஷ்டேக் 24 மணி நேரத்திற்குள்ளாக 70 லட்சத்துக்கும் அதிகமாக பகிரப்பட்ட  இந்திய நடிகரின் பிறந்தநாள் போஸ்டர் (CDP) இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.  கார்த்தி,கன்னட நடிகர் சிவ  ராஜ்குமார், மாதவன், கவுதம் மேனன், ஹரி, தமன்னா, பாண்டிராஜ், சிம்ரன், ஆர்யா, அதிதிராவ் உள்பட 115 பிரபலங்கள் வெளியிட்டனர்.
    ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற பாகுபலி படத்தில் சத்யராஜுக்கு முன் பிரபல நடிகர் கட்டப்பாவாக நடிக்க தேர்வானாராம்.
    ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வெளியான படம் ‘பாகுபலி’. இரண்டு பாகங்களாக வெளியான இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இந்த இரண்டு படங்களும் உலகமெங்கும் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக வசூலில் அதிக சாதனை படைத்தது. 

    இதன் முதல் பாகத்தில் கட்டப்பா கதாபாத்திரத்தில் நடித்த சத்யராஜ், பாகுபலியாக இருக்கும் பிரபாஸை கொல்வார். அவர் எதற்கு கொல்வார் என்று 2ம் பாகத்தில் காண்பித்திருப்பார்கள். இதற்கிடையில் பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் என்று பெரிய விவாதமே நடந்தது. இதன்மூலம் கட்டப்பா கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது. 

    சத்யராஜ், சஞ்சய் தத்

    இந்நிலையில், கட்டப்பா கதாபாத்திரத்தில் முதலில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தை நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்ததாகவும், அப்போது அவர் சிறையில் இருந்ததால், சத்யராஜ் அந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்யப்பட்டதாகவும் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார். இவ்வாறு சத்யராஜுக்கு எதிர்பாராமல் கிடைத்த அந்த கதாபாத்திரம், அவரது வாழ்வில் மறக்க முடியாததாக அமைந்தது. அந்த அளவுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, சத்யராஜ் அனைவரது பாராட்டையும் பெற்றார்.
    விஜய் படத்தில் அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததற்காக தற்போதும் வருந்துவதாக நடிகை அக்‌ஷரா கவுடா தெரிவித்துள்ளார்.
    உயர்திரு 420 படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் அக்‌ஷரா கவுடா. அதன் பிறகு விஜய்யின் துப்பாக்கி மற்றும் அஜித்தின் ஆரம்பம் போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார். பின்னர் அதர்வாவின் இரும்புக் குதிரை, ஜெயம் ரவியின் போகன், ஜீவாவின் சங்கிலி புங்கிலி கதவ திற, சந்தீப் கிஷானின் மாயவன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

    இந்நிலையில் துப்பாக்கி படத்தில் நடித்ததற்காக தான் வருத்தப்படுவதாக அக்‌ஷரா சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது: எனக்கு துப்பாக்கி படத்தில் நடந்த ஒரே நல்ல விஷயம் விஜய், முருகதாஸ், சந்தோஷ் சிவன் ஆகியோரது அறிமுகம் கிடைத்தது. மற்றபடி அந்த படத்தில் எனக்கு என்ன கதாபாத்திரம் கொடுத்திருந்தார்கள். 
     
         அக்‌ஷரா கவுடா

    அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததற்காக நான் வருத்தப்படுகிறேன், யாருடன் நடித்தேன் என்பதற்காக அல்ல. காஜல் அகர்வாலின் தோழியாக நடிக்க தான் என்னை அழைத்தனர். ஆனால் படத்தில் அப்படி இல்லை. இருந்தாலும் எனக்கு அது பற்றி எந்தவித கோபமும் இல்லை. இப்போதும் அவர்கள் கூப்பிட்டால் நான் நடிக்க தயாராக உள்ளேன், என கூறியுள்ளார்.
    கணவர் அபிஷேக் பச்சனை தொடர்ந்து அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமாக ஐஸ்வர்யா ராய்க்கும் அவர்களது மகள் ஆரத்யா பச்சனுக்கும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    மும்பை :

    பிரபல பாலிவுட் நடிகர்ளான அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
    இதையடுத்து, அவர்கள் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

    அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் கொரோனா தொற்றில் இருந்து விரைவில் குணமடைய வேண்டும் என  திரைப்பிரபலங்கள் பலரும் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், அபிஷேக் பச்சனின் மனைவி  ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன்படி அவர்கள் இருவருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது.

    அதேபோல் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.
    பீகாரில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் பெயரை ஒரு சாலைக்கு சூட்டி அவரை பெருமைப்படுத்தி உள்ளனர்.
    பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ந் தேதி திடீரென தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வாரிசு நடிகர்கள் கொடுத்த மன அழுத்தத்தினால் நடந்துள்ளது என்று சர்ச்சைகள் எழுந்துள்ளன. தற்கொலைக்கான உண்மை காரணத்தை அறிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பீகாரில் அமைந்துள்ள சுஷாந்தின் சொந்த ஊரான புர்னியாவில் இருக்கும் ஒரு சாலைக்கு சுஷாந்த் சிங்கின் பெயர் சூட்டப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மதுபானி முதல் மட்டா சவுக் வரை இருக்கும் சாலைக்கு சுஷாந்த் சிங் ராஜ்புட் சாலை என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் அங்கு அமைந்துள்ள போர்டு நிறுவனத்தின் ரவுண்டானாவிற்கு சுஷாந்த் சிங் ராஜ்புட் ரவுண்டானா என பெயர் மாற்றப்பட்டு உள்ளது.

    சமீபத்தில் பெயர் மாற்றப்பட்ட சாலையை திறந்து வைத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமிதாப் பச்சனும், அபிஷேக் பச்சனும் விரைவில் குணமடைய விரும்புவதாக நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
    பிரபல பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் இருவரும் கொரோனா தொற்றில் இருந்து விரைவில் குணமடைய வேண்டும் என  திரைப்பிரபலங்கள் பலரும் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் டுவிட்டர் பதிவில், அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் இருவரும் விரைந்து குணமாக விரும்புகிறேன். மேலும் இந்திய மருத்துவர்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் தங்கள் சிகிச்சையால் இருவரையும் குணப்படுத்தி விடுவார்கள் என்று நம்புகிறேன். அமிதாப் பச்சன் அவர்கள் குணமாகி மீண்டும் பல்வேறு சாதனைகள் படைக்க வேண்டும் என கமல் குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல் நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அமிதாப் பச்சனிடம் நலம் விசாரித்ததாக கூறப்படுகிறது.

    நடிகர் விஜய் சேதுபதி, கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பயோபிக்கில் நடிக்க சம்மதித்தது ஏன் என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்
    இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக 800 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் முரளிதரன். இதனால் இந்த படத்திற்கு 800 என பெயரிடப்பட்டுள்ளது. 

    எம் எஸ் ஸ்ரீபதி எழுதி இயக்குகிறார். தமிழில் உருவாகும் இந்த படத்தை, தார் மோ‌ஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, தெலுங்கு நடிகர் ராணா டகுபதி தயாரிக்க உள்ளார். 

    விஜய் சேதுபதி, முத்தையா முரளிதரன்

    இந்த படம் குறித்து விஜய் சேதுபதி சமீபத்திய பேட்டியில் கூறியதாவது: நான் சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் பார்த்ததில்லை. இதை நான் முத்தையா முரளிதரன் அவர்களிடம் கூட கூறினேன், அதற்கு அவர், இந்த படத்தில் நடிக்க சரியான தகுதி இதுதான் என சொன்னார். மேலும் இப்படத்திற்காக உடல் எடையை குறைக்க உள்ளதாகவும், ஆனால் அது சற்று கடினமாக இருப்பதாகவும் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
    ×