என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ட்ரீம் லைட் பிக்சர்ஸ் (பி) லிமிடெட் சார்பாக சிங்கப்பூர் என்.ஹபீப் தயாரிக்கும் கோட்டைமுனி படத்தின் முன்னோட்டம்.
    ட்ரீம் லைட் பிக்சர்ஸ் (பி) லிமிடெட் சார்பாக சிங்கப்பூர் என்.ஹபீப் மிகுந்த பொருட்ச் செலவில் மிகப் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் கோட்டைமுனி. புதுமுக இயக்குனரான ந.இளைய பிரபாகரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார்.

    1980 காலகட்டத்தில் இராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதிகளில் கடல் அரசனாக நிஜத்தில் வாழ்ந்த கோட்டைமுனி என்பவரின் வாழ்க்கையில், இலங்கை தனுஷ்கோடி பகுதிக்கு இடையே கடலில் நடந்த கடத்தல் சம்பவங்களை மையப்படுத்தி கேங்க்ஸ்டர் படமாக கோட்டைமுனி திரைப்படம் உருவாகிறது. இதில் கோட்டைமுனியாக முற்றிலும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் ஆர்.கே.சுரேஷ் நடிக்கிறார். 

    நீண்ட நெடுநாளைக்குப் பிறகு முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில் வத்திக்குச்சி, காலா படத்தில் நடித்த திலீபன் முக்கிய கதாப்பாத்திரம் ஏற்றிருக்கிறார். மேலும் சைத்தான் படப் புகழ் அருந்ததி நாயர் கதைநாயகியாக நடிக்க, ஷரவணசக்தி, ராஜசிம்மன், நிழல்கள் ரவி, சச்சு, தாமு, முத்துராமன், முத்துக்காளை, திருமுருகன், உள்பட பலர் நடிக்கின்றனர்.

    ஒளிப்பதிவு ஏ.எம்.எம்.கார்த்திகேயன் கவனிக்க, எம்.எஸ்.பாண்டியன் இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் கோட்டைமுனி திரையில் வெளியாக இருக்கிறது.
    ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் சந்தானம், பிரீத்தி வர்மா, எம்.எஸ்.பாஸ்கர், புகழ் நடிப்பில் வெளியாகி இருக்கும் சபாபதி படத்தின் விமர்சனம்.
    பிறப்பிலிருந்து பேச்சு சரியாக வராமல், திக்கி திக்கி பேசுகிறார் சந்தானம். இவருடைய அப்பா எம்.எஸ்.பாஸ்கர், அரசு வேலையில் பணிபுரிகிறார். தான் ஓய்வு பெற வேண்டிய நிலை வருவதால் தன்னுடைய மகனை வேலைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற நோக்கில் இருக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். 

    பல வேலைகளுக்கு செல்லும் சந்தானத்திற்கு அங்கு நிறைய அவமானங்கள் ஏற்படுகிறது. இதனால் விரக்தி அடையும் சந்தானம், கோபத்தில் ஒருநாள் குடித்து விட்டு வீட்டில் கலவரம் செய்கிறார். 

    விமர்சனம்

    போதையில் இருக்கும் சந்தானத்திற்கு தெரியாமலேயே ஒரு மிகப்பெரிய விஷயம் நடக்கிறது. இதன் மூலம் விதி விளையாடுகிறது. பின் சந்தானம் விதியின் கையில் சிக்கிக் கொள்கிறார். இறுதியில் விதியின் விளையாட்டில் சந்தானம் எப்படி எல்லாம் விளையாடுகிறார்? எப்படி எதிர்கொண்டார்? என்பதே படத்தின் மீதிக்கதை. 

    வழக்கம் போல் படத்தில் சந்தானம் தன்னுடைய கலகலப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். திக்கி திக்கி பேச மிகவும் சிரமப்பட்டிருப்பது தெரிகிறது. நாயகி பிரீத்தி வர்மாவுக்கு அதிகம் வேலையில்லை. படத்தில் சந்தானத்திற்கு பிறகு எம்.எஸ் பாஸ்கரின் நடிப்பு பாராட்டக்குரிய வகையில் இருக்கிறது. தந்தைக்குரிய பொறுப்புடன் நடித்து கைத்தட்டல் வாங்குகிறார். சில காட்சிகளில் மட்டும் வந்து செல்கிறார் புகழ். இவருடைய நடிப்பு ரசிகர்களுக்கு ஏமாற்றம்.

    விமர்சனம்

    ஒருவர் வாழ்க்கையில் விதி விளையாடுவதை படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஸ்ரீனிவாச ராவ். கதைக்களத்தை சிறப்பாக சரியான முறையிலும் கொண்டு சென்றிருக்கிறார். படத்தில் நகைச்சுவை மட்டுமில்லாமல் சில கருத்துக்களையும் சொல்லி இருக்கிறார். இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு இருந்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். படத்தில் டைமிங் பஞ்ச்சும், நகைச்சுவையும் படத்திற்கு நல்ல பெயரை வாங்கித் தந்திருக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி சிறப்பு.

    சாம் சி.எஸ். இசையில் பாடல்கள் பெரிய அளவில் கவரவில்லை என்றாலும் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. பாஸ்கர் ஆறுமுகத்தின் ஒளிப்பதிவு அருமை.

    மொத்தத்தில் ‘சபாபதி’ சபாஷ் போடலாம்.
    பிரபல பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா, வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைக்கு தாயானதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    பிரபல இந்தி நடிகை பிரீத்தி ஜிந்தா. இவர் மணிரத்னம் இயக்கிய “தில் சே” படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தில் சே படம் தமிழில் உயிரே என்ற பெயரில் வெளியானது. பாலிவுட்டில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். 

    கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கொண்ட பிரீத்தி ஜிந்தா, ஐ.பி.எல். கிரிக்கெட் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களுள் ஒருவராக இருக்கிறார். பிரீத்தி ஜிந்தா கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஜீன் குட்எனப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    கணவருடன் பிரீத்தி ஜிந்தா
    கணவருடன் பிரீத்தி ஜிந்தா

    தற்போது 46 வயதாகும் பிரீத்தி ஜிந்தா வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளைப் பெற்றுள்ளார். அந்த குழந்தைகளுக்கு ஜெய் ஜிந்தா, ஜியா ஜிந்தா என்று பெயர் வைத்துள்ளார். சமூக வலைத்தளத்தில் பிரீத்தி ஜிந்தா வெளியிட்டுள்ள பதிவில், ‘‘நானும், கணவர் ஜீனும் மகிழ்ச்சியில் உள்ளோம், எங்கள் இதயங்கள் நன்றியுணர்வுடன் நிரம்பியுள்ளன. எங்கள் இரட்டை குழந்தைகளை குடும்பத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். எங்கள் வாழ்க்கையில் இது புதிய கட்டம். உற்சாகமாக இருக்கிறோம். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் எங்கள் வாடகை தாய்க்கு நன்றி” என கூறியுள்ளார். பிரீத்தி ஜிந்தாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    முகில் செல்லப்பன் இயக்கத்தில் பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ படத்தின் விமர்சனம்.
    சென்னையில் தொடர் படுகொலைகள் அதிகமாகி வருகிறது. நீதிபதி, மருத்துவர் என்று பிரபலமான நபர்கள் இதில் கொல்லப்படுகிறார்கள். சரியான சாட்சியம் கிடைக்காமல் காவல்துறை திணறுகிறது. இதனால் காவல்துறையிலிருந்து தண்டிக்கப்பட்ட நேர்மையான அதிகாரியான பிரபுதேவாவை மீண்டும் பணியில் சேர அழைக்கிறார்கள். 

    வேண்டா வெறுப்பாக பணியில் சேரும் பிரபுதேவா ஒரு கட்டத்தில் கொலைக்கான காரணத்தையும் அதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதையும் கண்டுபிடித்ததோடு மட்டுமல்லாமல் அந்த கும்பலோடு நெருக்கமாகி மேலும் சிலரைக் கண்டுபிடிக்கிறார்.
    ஆனால் அதற்கு மேலும் ஒரு வில்லன் இருக்கிறார். அவர் யார் என்பது தெரிந்து திகைத்து நிற்கிறார் பிரபுதேவா. இறுதியில் அவரை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதை படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    பிரபுதேவா மிடுக்காக வருகிறார். காவல்துறை மீது இருக்கும் வெறுப்பைக் காட்டுவதும், மனைவி நிவேதா பெத்துராஜ் மீது அன்பைப் பொழிவதுமாக இருக்கிறார். வில்லன் கும்பலோடு அமைதியாக மோதும் அவரது நடிப்பு ரசிக்க வைக்கிறது.

    நிவேதா பெத்துராஜ் மனைவியாக வந்து முத்தங்களை நினைவாக வைத்துத் தேர்வு எழுதுகிறார். டூயட் பாடுகிறார். பிரபுதேவாவுக்காக வில்லன்களிடம் சண்டை போடுகிறார். மற்ற கதாபாத்திரங்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை.

    விமர்சனம்

    ஒரு நேர்மையான அதிகாரியான பிரபுதேவாவிற்குக் காவல் துறையில் நடக்கும் இக்கட்டான சூழலை படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் முகில் செல்லப்பன். இந்த மாதிரி கதைகள் 90களில் அதிகம் வந்திருப்பதால் பெரியதாக இப்படம் கவரவில்லை. புதிய கற்பனையும் காட்சிகளும் இல்லாததால் மெதுவாக திரைக்கதை நகர்கிறது. நகைச்சுவைக்காக வரும் கான்ஸ்டபிள், ஏன் வருகிறார் என்றே தெரியவில்லை. சஸ்பென்ஸ் என்று நினைத்து கதையை மறைப்பதில் எந்தவித சுவாரஸ்யமும் வரவில்லை.

    டி,இமானின்  இசையில் பின்னணி இசை படம் முடிந்த பிறகும் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. கே.ஜி.வெங்கடேஷின் ஒளிப்பதிவு நிறைவு. 

    மொத்தத்தில் ‘பொன் மாணிக்கவேல்’ கம்பீரம் குறைவு.
    பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக நடிக்க இருக்கும் தளபதி 66 படத்தின் கதை இணைய தளங்களில் கசிந்து உள்ளது.
    நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த படத்துக்கு பிறகு பிரபல தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிபள்ளி இயக்கும் படத்தில் விஜய் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இது விஜய்க்கு 66-வது படம்.

    இந்த படத்தின் கதை மற்றும் விஜய்யின் கதாபாத்திரம் பற்றிய விவரங்கள் இணையதளத்தில் கசிந்து விட்டதாக பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. படத்தில் விஜய் எரோடோமேனியா என்ற மனநோயால் பாதிக்கப்பட்டவராக நடிப்பதாக கூறப்படுகிறது. மனநோய் பாதிப்போடு வாழ்க்கையில் எப்படி போராடுகிறார். அதில் இருந்து எவ்வாறு மீண்டு வருகிறார் என்பதே கதை என்று இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது.

    தளபதி 66
    தளபதி 66 படக்குழுவினர்

    எரோடோமேனியா என்பது ஒரு அரிய மனநோயாகும். இந்த மன நோயால் பாதிக்கப்பட்டவர் தன்னை மற்றவர் விரும்புவதாக நினைத்து கொள்வாராம். ஆனால் உண்மையில் அப்படி இல்லை. இந்த படம் காதல் சென்டிமெண்ட் கலந்த அதிரடி சண்டை படமாக இருக்கும் என்கின்றனர். வம்சி இயக்கிய தோழா படத்தில் நாகார்ஜுனாவை கழுத்திற்கு கீழ் எந்த பாகங்களும் செயல்படாத பக்கவாதம் போன்ற நோயால் பாதிக்கப்பட்டவராக காட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ள நடிகர் ஒருவரை சொகுசு விடுதி ஊழியர்கள் சிறை பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    மலையாளம் மற்றும் ஏராளமான தமிழ் படங்களில் நடித்தவர் பிரபல நடிகர் ஜெயராம். இவரது மகன் காளிதாஸ் ஜெயராம். இவரும் மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் மீன்குழம்பும், மண்பானையும், ஒருபக்க கதை ஆகிய படங்கில் நடித்துள்ளார். தற்போது வெப் தொடர்களில் நடித்து வருகிறார்.

    ஒரு வெப் தொடரில் நடிப்பதற்காக கேரள மாநிலம் மூணாறு பகுதிக்கு சென்றார் காளிதாஸ். அங்கு படக்குழுவினருடன் ஒரு சொகுசு விடுதியில் தங்கியிருந்தார். இதற்கான அறை வாடகை, ஓட்டல் கட்டணம் ஆகியவற்றை கட்ட ஊழியர் வலியுறுத்தினர்.

    இதையடுத்து படக்குழுவினர் ஆன்லைன் மூலம் பணத்தை செலுத்தினர். ஆனால் ஓட்டல் வங்கி கணக்கிற்கு பணம் வரவில்லை. இதையடுத்து ஓட்டல் ஊழியர்கள் நடிகர் காளிதாஸ் ஜெயராம் மற்றும் படக்குழுவினரை உடனே ஓட்டல் கட்டணத்தை கட்டுமாறு கூறினர்.

    காளிதாஸ் ஜெயராம்
    காளிதாஸ் ஜெயராம்

    இதில் அவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஓட்டல் ஊழியர்கள் நடிகர் காளிதாஸ் ஜெயராம் உள்பட படக்குழுவினரை சிறைபிடித்தனர். இதையடுத்து மூணாறு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடித்தினர்.

    அதன் பின்னர் படக்குழுவினர் ஓட்டல் கட்டணத்தை செலுத்தினர். இதையடுத்து ஓட்டல் ஊழியர்கள் நடிகர் காளிதாஸ் ஜெயராம் மற்றும் படக்குழுவினரை விடுவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    நிஷாந்த் வர்மா இயக்கத்தில் வசந்த் செல்வம், தினேஷ் மணி, விஜய் ராம் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கடைசீல பிரியாணி’ படத்தின் விமர்சனம்.
    அப்பா, அம்மா மூன்று மகன்கள் இருக்கும் குடும்பத்தில், அப்பா தனது கடைசி மகனை நல்லவனாக வளர்க்க ஆசைப்பட்டு தனியாக அழைத்து சென்று வாழ்கிறார். அப்போது ரப்பர் எஸ்டேட் ஓனர் அப்பாவை கொன்று விடுகிறார். இதனால், கோபப்படும் 3 மகன்கள் ரப்பர் எஸ்டேட் ஓனரை கொலை செல்ல கிளம்புகிறார்கள்.

    வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து செல்லும் மூன்று மகன்கள், எதிர்பாராத விதமாக வீட்டில் ஓனர் மகன் இருப்பதை கண்டு பயப்படுகிறார்கள். இறுதியில் மகன்கள் மூன்று பேரும், ஓனரை கொன்றார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    படத்தில் அண்ணன் தம்பிகளாக வசந்த் செல்வம், தினேஷ் மணி, விஜய் ராம் நடித்துள்ளார்கள். இவர்களின் மூத்த அண்ணனாக நடித்திருக்கும் வசந்த் செல்வம் இடைவேளை வரை தன்னுடைய பழி வாங்கல் உணர்ச்சியை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார். தினேஷ் மணிக்கு அதிக வேலையில்லை. இடைவேளைக்குப் பின் கடைசி தம்பி விஜய் ராம் படத்தின் நாயகனாக ஜொலிக்கிறார். ஓனர் மகன் ஹக்கீம் ஷாஜகான் தனது நடிப்பால் இடைவேளைக்குப் பின் அவரை கவனிக்க வைக்கிறார். போலீசை டீல் செய்யும் விதம் அருமை. 

    பழிக்குப் பழி வாங்கும் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் நிஷாந்த் வர்மா. இடைவேளை வரை பார்ப்பவர்களின் பொறுமை சோதிக்கும் திரைக்கதை, இடைவேளைக்குப் பின் கொஞ்சம் சுவாரசியமாக நகர்கிறது. சில காட்சிகளில் கைதட்டல் வாங்கும் அளவிற்கு இருக்கிறது. கதை முழுவதும் கேரளாவிலேயே நடப்பதாலும், வில்லன் ஹக்கீம் மலையாளமே பேசுவதாலும் ஒரு மலையாளப் படத்தைப் பார்க்கும் உணர்வே ஏற்படுகிறது. 

    விமர்சனம்

    அசீம் முகமது ஒளிப்பதிவில் எஸ்டேட், மற்றும் காடு லொகேஷன் ஆகியவற்றை படமாக்கிய விதம் சிறப்பு. நீல் செபஸ்டியன் இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

    மொத்தத்தில் ‘கடைசீல பிரியாணி’ சுவைக்கலாம்.
    பழம்பெரும் நடிகை சரோஜா தேவியை நடிகர் விஷால் அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து நலம் விசாரித்து இருக்கிறார்.
    நடிகர் விஷால் நடிப்பில் தற்போது எனிமி திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆனந்த் சங்கர் இயக்கிய இப்படத்தை வினோத் தயாரித்து இருந்தார். இப்படத்தை தொடர்ந்து குறும்பட இயக்குனர் து.பா.சரவணன் இயக்கத்தில் உருவாகி வரும் வீரமே வாகை சூடும் படத்தில் விஷால் நடித்துள்ளார்.

    விஷால்

    இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை அடுத்து அறிமுக இயக்குனர் வினோத்தின் இயக்கத்தில் தற்போது விஷால் நடித்து வருகிறார். இந்நிலையில் பழம்பெரும் நடிகை சரோஜாதேவியை அவரது வீட்டிற்கு சென்று நடிகர் விஷால் சந்தித்துள்ளார். அவரின் உடல்நலம் குறித்து விசாரித்த பிறகு அவருடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
    மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களையும் ஒரு வருட போராட்டத்துக்குப் பின் பிரதமர் மோடி திரும்பப் பெற்றுள்ளார்.
    மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும், ஆகவே அந்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர். பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாய பெருமக்கள் பல மாதங்களாக இந்த போராட்டத்தை நடத்தி வந்தனர்.

    விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தியும் நடிகர் கார்த்தி முன்பு அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இன்று காலை மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். தமிழக முதல்வர் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் இந்த முடிவை வரவேற்றுள்ளனர்.

    கார்த்தி

    நடிகர் கார்த்தி, "மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக நம் பிரதமர் அறிவித்திருப்பது, தங்கள் உயிரை ஈந்து போராடிய எளிய வேளாண் மக்களின் ஒருவருட இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி. போராடியவர்களுக்கும் புரிந்து கொண்ட அரசுக்கும் அன்பும் நன்றியும்" என தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
    கியுபிரேம் மூவி சார்பில் டாக்டர் அரவிந்த். கே மற்றும் ஒயிட் சாண்ட் புரோடக்சன்ஸ் சார்பில் அபய் குமார் ஆகிய இருவரும் தயாரிக்கும் கிரவுன் படத்தின் முன்னோட்டம்.
    இந்திய சினிமாவில் முதன்முறையாக 3D தொழில்நுட்பத்தில் கதாநாயகியை சூப்பர் ஹீரோவாக வைத்து உருவாகும் திரைப்படம் கிரவுன் (Crown). இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, இங்கிலீஷ் மற்றும் அரபிக் போன்ற மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. 

    இதில் கதாநாயகியாக சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் மிஸ் இந்தியா பட்டம் வென்ற அதிதி வர்ஸ் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஹாலிவுட், அரபிக், சைனா, சவுத் கொரியா போன்ற நாட்டைச் சேர்ந்த நடிகர்களும் இந்தி, தெலுங்கு, தமிழ் திரையுலகின் முக்கிய நட்சத்திரங்களும் நடிக்க உள்ளனர்.
     படத்தை நரேன் பிரநிஸ் ராவ் என்பவர் இயக்குகிறார் இவர் மலேசியாவில் செட்டிலான தமிழன் ஆவார்.

    ஜோகி சர்மா, பொன்சங்கர் மற்றும் கே.பி.பிரபு ஆகிய மூவர்கள் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்கள். இப்படத்திற்கு இசை மரியா ஜெரால்டு, சண்டைப் பயிற்சி திலீப் சுப்பராயன், கலை இயக்குனர் ரேம்போன் பால்ராஜ், எடிட்டர் ஜே.ஜெய ராஜேந்திர சோழன்.

    கிரவுன் படத்தின் போஸ்டர்

    இதில் ஒளிப்பதிவாளர் பொன்சங்கர், தமிழில் தமிழன் என்று சொல் மற்றும் லிவிங் டுகெதர் என்ற படங்களின் இயக்குனர் ஆவார். அதேபோல் எடிட்டர் ஜே.ஜெய ராஜேந்திர சோழன் மீண்டும் வா அருகில் வா எனும் படத்தின் இயக்குனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    மேலும் பல ஹாலிவுட் படங்களுக்கு கிராபிக்ஸ் பணிகளை மேற்கொண்ட தொழில்நுட்ப கலைஞர்களை கொண்டு வி.ஜானகிராமன் மேற்பார்வையில் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தை கியுபிரேம் மூவி சார்பில் டாக்டர் அரவிந்த். கே மற்றும் ஒயிட் சாண்ட் புரோடக்சன்ஸ் சார்பில் அபய் குமார் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.
    கேரளாவில் பிரபல சின்னத்திரை நடிகை வீட்டில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளை நடந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கண்ணூபுரத்தை சேர்ந்தவர் ஸ்ரீகலா(வயது24). இவர் கேரள சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானார். மேலும் சினிமாவிலும் சிறு, சிறு வேடங்களில் நடித்து வருகிறார்.

    இவர் கண்ணூபுரம் பகுதியில் தனது தந்தை மற்றும் தங்கை ஜெயாவுடன் வசித்து வருகிறார். தினமும் வீட்டில் இருந்து படப்படிப்பிடிப்புக்கு செல்வது வழக்கம்.

    நேற்று காலை வழக்கம்போல் ஸ்ரீகலா தனது வீட்டில் இருந்து சினிமா படப்பிடிப்புக்கு புறப்பட்டு சென்றார். வீட்டில் அவரது தந்தையும், தங்கையும் மட்டுமே இருந்தனர். இந்த நிலையில் ஸ்ரீகலாவின் தங்கை தனது தந்தையுடன் பொருட்கள் வாங்குவதற்காக மதியம் அந்த பகுதியில் உள்ள கடைவீதிக்கு சென்றனர்.

    பின்னர் அவர்கள் மாலை 3 மணியளவில் வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த 2 பேரும் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் இருந்த அலமாரி திறந்து கிடந்ததுடன், பொருட்களும் ஆங்காங்கே சிதறி கிடந்தன. அலமாரியில் வைத்திருந்த 20 பவுன் தங்க நகை திருடு போய் இருந்தது.

    இவர்கள் 2 பேரும் வெளியில் சென்றதை நோட்டமிட்ட நபர்கள் வீட்டிற்குள் புகுந்து கதவை உடைத்து, உள்ளே நுழைந்து அலமாரியை உடைத்து, அதில் இருந்த நகையை திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து சின்னத்திரை நடிகை ஸ்ரீகலாவின் தங்கை ஜெயா கண்ணூபுரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

    தொடர்ந்து போலீசார் அந்த வீட்டில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


    பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
    நடிகர் சூர்யாவின் 40-வது படம் ‘எதற்கும் துணிந்தவன்’. பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சத்யராஜ், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    சூர்யா

    இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் வீடியோ மூலம் அறிவித்து இருக்கிறார்கள். அந்த வீடியோவில் எதற்கும் துணிந்தவன் பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
    ×