என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிக்பாஸ் சீசன் ஒன் நிகழ்ச்சியில் வெற்றியாளராக தேர்வான ஆரவ் தற்போது படங்களில் நடித்து வருகிறார்.
    கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆரவ். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்த ஆரவ், சரண் இயக்கிய ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தின் மூலம் ஹீரோவானார்.  

    ஆரவ்வும், நடிகை ராஹியும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து பெற்றோர்கள் சம்மதத்துடன் அவர்களது திருமணம் கடந்த ஆண்டு செப்டம்பர் 6-ந் தேதி நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

    ஆரவ்

    திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில், தற்போது இந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து ஆரவ்வுக்கு சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
    பிளிப்கார்ட்டின் லேடீஸ் அண்டு ஜென்டில்மென் சீசன் 2 நிகழ்ச்சியில் தனக்கு நடந்த பாலியல் வன்முறை குறித்து பிரபல இந்தி சீரியல் நடிகை தேவோலீனா பட்டாச்சார்ஜி கூறியுள்ளார்.
    மும்பை:

    பிரபல இந்தி சீரியல் நடிகை மற்றும் பரத நாட்டியக்கலைஞருமான தேவோலீனா பட்டாச்சார்ஜி, சமீபத்தில் தனக்கு சிறுவயதில் ஏற்பட்ட பாலியல் வன்முறை குறித்து கூறி இருந்தார். 

    அதில்  தனது சிறுவயதில் கணித டியூஷன் ஆசிரியர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக கூறினார்.  மேலும் இது குறித்து போலீசில் புகார் அளிக்க விரும்பியதாகவும், ஆனால், பெற்றோர் மறுத்ததால் தன்னால் அதை செய்ய முடியவில்லை என்றும் கூறினார். 

    பிளிப்கார்ட்டின் லேடீஸ் அண்டு ஜென்டில்மென் சீசன் 2 நிகழ்ச்சியில் தேவோலீனா இந்த சம்பவம் குறித்து கூறியிருப்பதாவது, 

    “அவர் அங்கு மிகச் சிறந்த ஆசிரியராக இருந்தார். எல்லோரும் அவரிடம் டியூஷனுக்குச் செல்வார்கள். எல்லா நல்ல மாணவர்களும், எனது இரண்டு சிறந்த நண்பர்களும் அவரிடம்  தான் டியூஷனுக்குச் சென்றனர். 

    திடீரென்று, ஒரு வாரம், அவர்கள் (என் நண்பர்கள்) டியூஷன் செல்வதை நிறுத்திக் கொண்டனர்.அப்புறம் நான் மட்டும் டியூஷன் போனேன். 

    அப்போது ஆசிரியர்  என்னிடம் தவறாக நடந்து கொண்டார் . வீட்டுக்குத் திரும்பி வந்து அதுகுறித்து அம்மாவிடம் சொல்லிவிட்டேன். நாங்கள் ஆசிரியரின் வீட்டுக்குச் சென்று, அவரின் மனைவியிடம்  புகார் அளித்தோம். ஆனால், நான் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், என் பெற்றோர் அதற்கு சம்மதிக்கவில்லை.

    இது சமுதாயத்திற்கும் அனைத்து பெற்றோருக்குமான எனது அறிவுரை. உங்கள் பிள்ளைகள் இது போன்ற துன்பங்களை எதிர்கொள்ளும் போதெல்லாம், தயவுசெய்து, நடவடிக்கை எடுங்கள்” என கூறி உள்ளார்.
    எனிமி படத்தை தொடர்ந்து விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்திருக்கு படத்தை குடியரசு தினத்தில் வெளியிட இருக்கிறார்.
    எனிமி படத்தை தொடர்ந்து விஷால் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘வீரமே வாகை சூடும்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி உள்ளார். டிம்பிள் ஹயாதி நாயகியாக நடிக்க, யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, ஆர்.என்.ஆர்.மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

    அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் சாமானியன் ஒருவனின் கதையில் விஷாலின் மாறுபட்ட நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. ஐதராபாத்தின் பல பகுதிகளிலும், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. 

    விஷால்

    தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தை அடுத்த ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு 2022 ஜனவரி 26ம் தேதி படத்தை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
    கொரோனா தொற்று காரணமாக கமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
    தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. 4 சீசனை தொடர்ந்து 5வது சீசனையும் கமல் தொகுத்து வழங்கி வருகிறார்.

    தற்போது நடிகர் கமலுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால், சில வாரங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகி, ஓய்வு எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வி எழுந்து இருந்தது.

    விஜய் சேதுபதி

    இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி இதற்கு முன் மாஸ்டர் செப் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஏ.எல்.அழகப்பன் மற்றும் பி.மங்கையர்க்கரசி இணைந்து தயாரித்துள்ள சித்திரைச் செவ்வானம் படத்தின் முன்னோட்டம்.
    சமுத்திரக்கனி நடிப்பில், இயக்குனர் விஜய் எழுத்தில், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சித்திரைச் செவ்வானம்’. லாக்கப், க.பெ.ரணசிங்கம், மதில், ஒரு பக்க கதை, மலேஷியா டு அம்னீஷியா, டிக்கிலோனா, விநோதய சித்தம் உள்ளிட்ட படங்களை வழங்கிய ஜீ5, இப்படத்தை டிசம்பர் 3ஆம் தேதி முதல் ஓடிடி தளத்தில் வெளியிடுகிறது.

    இப்படத்தில் முன்னணி இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பூஜா கண்ணன் மற்றும் ரீமா கல்லிங்கல் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். பூஜா, சாய் பல்லவியின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.

    சித்திரைச் செவ்வானம் போஸ்டர்

    இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைப்பாளராகவும், பிரவீன் கே.எல். படத்தொகுப்பாளராகவும், ஒளிப்பதிவாளர்களாக மனோஜ் பரமஹம்சா மற்றும் கே.ஜி.வெங்கடேஷ் பணிப்புரிந்துள்ளனர். 

    பிரபல இயக்குனர் விஜய் அவர்கள் இப்படத்தை எழுதி வெளியிடுகிறார். ஏ.எல்.அழகப்பன் மற்றும் பி.மங்கையர்க்கரசி இணைந்து தயாரித்துள்ளனர்.
    கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் கமலை, நடிகர் ரஜினிகாந்த் போன் மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து இருக்கிறார்.
    நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் சென்னை போருரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்ததாகவும், பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானதால் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்றும் கமல் தெரிவித்து இருந்தார். 

    ரஜினி - கமல்

    இதையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘அன்பு நண்பர் கலைஞானி கமல்ஹாசன் அவர்கள் கொரோனா தொற்றிலிருந்து விரைந்து மீண்டு, தனது பணிகளைத் தொடர விழைகிறேன் என்று கூறினார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், போன் மூலம் கமலை தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து விசாரித்து இருக்கிறார்.

    கௌரி கிஷன் அனகா நடிப்பில் ஓரின சேர்க்கையாளர்களை ஆதரிக்கும் மகிழினி இசை ஆல்பம் யூடியூப்பில் வெளியாகியுள்ளது.
    96, மாஸ்டர், கர்ணன், படங்களில் நடித்த கௌரி கிஷனும், நட்பே துணை, டிக்கிலோனா படங்களில் நடித்த அனகாவும் மகிழினி என்ற இசை ஆல்பத்திற்காக இணைந்துள்ளனர். வி ஜி பாலசுப்ரமணியன் எழுதி இயக்கி, ட்ரெண்டிங் என்டர்டெயின்மென்ட் மற்றும் கௌஸ்துபா மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பில், ஓரின சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக உருவாகியுள்ள இந்த மகிழினி ஆல்பம் சரிகமா ஒரிஜினல்ஸால் வெளியிடப்பட்டுள்ளது.

    மகிழினி ஆல்பம்
    மகிழினி ஆல்பம்

    மகிழினியில் கௌரியும் அனகாவும் ஓரின சேர்க்கையாளர்களாக நடித்திருக்கிறார்கள். இருவருக்கும் இடையேயான உறவு குறித்து அவர்களது குடும்பத்தினரை புரிந்துகொள்ள வைப்பதற்காக எடுக்கும் முயற்சிகளில் அவர்கள் எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதே ஆறு நாட்களில் படமாக்கப்பட்ட மகிழினி ஆல்பத்தின் கருவாகும்.

    அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தில் இணை இயக்குநராக பணியாற்றி வரும் மகிழினி ஆல்பத்தின் இயக்குநர் பாலசுப்ரமணியன் கூறுகையில், "எல்ஜிபிடி என்று அழைக்கப்படும் ஓரின சேர்க்கையாளர்களை பற்றி சமுதாயத்திற்கு புரிய வைக்க வேண்டும் என்பதுதான் மகிழினியின் பின்னணியில் உள்ள எண்ணம். 

    அனகா - கௌரி கிஷன்

    சென்னையை சேர்ந்த மலர் (கௌரி) மற்றும் தில்லியில் இருந்து வரும் இந்துஜா (அனகா) பரதநாட்டியம் மீது கொண்ட பற்றால் சந்திக்கிறார்கள். ஒத்திகை ஒன்றின் போது அவர்களுக்குள் காதல் தீ பற்றுகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பதை மகிழினி காண்பித்து இருக்கிறார் இயக்குனர்.

    கோவிந்த் வசந்தாவின் இசை, மதன் கார்க்கியின் பாடல் வரிகள் மற்றும் கீர்த்தனா வைத்தியநாதனின் இசையமைப்பு ஆகியவை இந்த ஆல்பத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. 
    மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் விமல் நடிக்கும் புதிய படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமானவர் அவருடன் நடித்து வருகிறார்.
    பசங்க, களவாணி படங்களில் நடித்து பலருடைய கவனத்தை ஈர்த்தவர் விமல். இவர் நடிப்பில் இறுதியாக கன்னிராசி என்ற படம் திரைக்கு வந்தது. தற்போது புதிய படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் விமல்.

    மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கும் இந்த புதிய படத்தை உதய் புரோடக்சன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிச்சர்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கிறது. குடும்ப உறவுகளையும் மையமாக வைத்து உருவாகியுள்ள புதிய படத்தில் நடிகர் விமலின் சகோதரியாக அனிதா சம்பத் நடிக்கிறார். இவர் கடந்த பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    விமல்
    விமல் - பால சரவணன் - அனிதா சம்பத்

    தன் தங்கைக்கு திருமணம் செய்து வைக்க போராடும் ஒரு அண்ணனின் வாழ்வை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விமலுடன் பாண்டியராஜன், வத்சன், வீரமணி, ஆடுகளம் நரேன், பாலசரவணன், தீபா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
    ஜெய் பீம் பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'ஜெய் பீம்'. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்தனர். விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் கொண்டாடப்பட்டு வருகிறது.

    ஆனால், இப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை அவமதிக்கும் விதமான காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறி அது தொடர்பான அறிக்கையை பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக 'ஜெய் பீம்' படக்குழு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ரூ.5 கோடி இழப்பீடு தர வேண்டும் என்றும் கோரி வன்னியர் சங்கம் சார்பில் வழக்கறிஞர் மூலம் சூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    சூர்யா
    சூர்யா - இயக்குனர் ஞானவேல்

    இதுதொடர்பாக இயக்குனர் ஞானவேல், ஜெய்பீம் திரைப்படத்திற்கு எழுந்த சில எதிர்மறை கருத்துகள் நான் சற்றும் எதிர்பாராதவை. ஜெய்பீம் திரைப்பட ஆக்கத்தில் தனிப்பட்ட நபரையோ, குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை. மனவருத்தம் அடைந்தவர்களுக்கும், புண்பட்டவர்களுக்கும் உளப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று சமீபத்தில் கூறியிருந்தார்.

    இந்நிலையில், ஜெய்பீம் திரைப்பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது சிதம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவதூறு பரப்பியது, இரு சமூகத்தினர் இடையே வன்முறை தூண்டுவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது உள்ளிட்ட பிரிவுகளில், வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, சிதம்பரம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
    சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், புதிய படத்தில் நடிக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    ரஜினிகாந்த் நடித்து தீபாவளி பண்டிகையில் திரைக்கு வந்த அண்ணாத்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இதுவரை ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாக படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் ரஜினிகாந்த் புதிய படத்தில் நடிக்க தயாராவதாகவும் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் தொடங்கப்படலாம் என்றும் தகவல் பரவி உள்ளது. 

    சமீபத்தில் ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். தற்போது பூரண குணமடைந்து அடுத்த படத்தில் நடிக்க தன்னை தயார்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினியின் புதிய படத்தை இயக்கப் போவது யார் என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

    ஏற்கனவே துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமியை அழைத்து ரஜினி பாராட்டி தனக்கு கதை தயார் செய்யும்படி கூறியிருந்தார். எனவே அவரது இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. பின்னர் டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிப்பார் என்று பேசப்பட்டது. ஆனால் பீஸ்ட் படப்பிடிப்பு முடியாததால் ரஜினி படத்தை உடனே தொடங்குவது முடியாத காரியம் என்கின்றனர். 

    ரஜினிகாந்த்

    பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி மீண்டும் நடிப்பார் என்று இன்னொரு தகவலும் பரவி வருகிறது. ரஜினியின் புதிய படம் மற்றும் இயக்குனர் பற்றிய அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சி.ஐ.ஏப் என்னும் ஆங்கிலப்படம் தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.
    ரகசிய உளவாளியாக செயல்பட்டு வருகிறது ஒரு குரங்கு. தகுந்த பயிற்சியுடன் செயல்பட்டு வரும் அந்த குரங்கு, ஒரு தீவில் ரகசியமாக தவறான வேலை செய்து வரும் ஒருவரை கண்காணிக்க அந்த குரங்கு அனுப்பப்படுகிறது. அங்கு எதிர்பாராத விதமாக அந்த குரங்கு சிக்கிக் கொள்கிறது.

    இறுதியில் அந்த தீவில் இருந்து குரங்கு தப்பித்ததா? தீவில் நடக்கும் மர்ம என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    படத்தில் கதையின் நாயகனாக குரங்கை வைத்து அனிமேஷன் முறையில் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். குரங்கு செய்யும் வேலைகள் நம்மை ஓரளவிற்கு கவர்கிறது என்றே சொல்லலாம். ஆனால், கிராபிக்ஸ் காட்சிகள் பெரியதாக கைக்கொடுக்கவில்லை. 
    தமிழில் வெளியாகும் சிறிய பட்ஜெட் படங்கள் போல, இப்படம் அமைந்துள்ளது. காமெடி என்ற பெயரில் ரசிகர்களை சோதிக்கிறார்கள். குறிப்பாக தமிழில் பார்க்கும் போது வசனங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    விமர்சனம்

    குழந்தைகளை கவரும் நோக்கத்தில் படத்தை இயக்கி இருக்கிறார் அலி ஜமானி. ஆனால், அது ஒர்க்கவுட் ஆகவில்லை. குரங்கை சுற்றியே திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார். பின்னணி இசையையும், ஒளிப்பதிவும் கவரவில்லை.

    மொத்தத்தில் ‘சி.ஐ.ஏப்.’ சுவாரஸ்யம் குறைவு.
    சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் மாநாடு படத்தின் தயாரிப்பாளர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. இப்படத்தை வி ஹவுஸ் புரக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

    ‘திரைத்துறை வெகுநாட்களாக நலிந்துவிட்டது. படங்களை வீட்டிலிருந்தே பார்க்கும் முறை பிறந்ததிலிருந்து திரையரங்கங்கள் வெறிச்சோடத் துவங்கிவிட்டன. அதிலிருந்து மீண்டுவர பெரிய படங்களே உதவுகின்றன. அண்ணாத்த மக்களை திரையரங்கிற்கு வரவைத்தது. அம்பது விழுக்காடு இருக்கை ஆக்ரமிப்பு என்ற நிலையை மாற்றி நூறு சதவீத இருக்கை ஆக்ரமிப்பை தந்தது திரைத் துறையினருக்கு நெஞ்சில் பால் வார்த்தது. அனைவரும் தங்களின் அனுமதியை தொழில் செய்யும் வெகுமதியாகப் பார்த்தோம் நன்றியோடு!

    ஆனால், இப்போது வேக்சினேசன் செலுத்தினால் மட்டுமே திரையரங்க அனுமதி என்பது அத்தனை திரைத்துறையினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுக்க தடுப்பூசி இன்னும் கட்டாயமாக்கப்படவில்லை. பதினெட்டு வயதிற்கு கீழே உள்ளவர்களுக்கு இன்னும் தடுப்பூசியே கண்டுபிடிக்கவில்லை.

    அவர்கள் பள்ளிகளிலும் பொது இடங்களிலும் சென்று வர அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். உங்கள் ஆட்சியில் வேக்சினேசன் சிறப்பாகவே நடைபெற்று வருகிறது. நோய்த் தொற்றும் கட்டுக்குள் வந்துள்ளது. முகக் கவசம், சானிடைசர் போன்றவற்றால் தங்களை பாதுகாத்தே வருகின்றனர் மக்கள்.

    மாநாடு
    மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

    தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே திரையரங்கங்களில் அனுமதிக்க வேண்டும் என்ற உத்திரவு திரைத்துறையை வெகுவாகப் பாதிக்கும். ஆன்டிராய்டு போன் இல்லாதவர்கள் கூட படத்திற்கு வருவார்கள். அவர்களை சர்டிபிகேட் எடுத்துவரச் சொன்னால் திரையரங்கம் வருவதை அவர்கள் தவிர்ப்பார்கள்.

    அதுவும் திரையரங்கம் வந்து திருப்பி அனுப்பினால் அவர்கள் மீண்டும் திரையரங்குகளின் பக்கமே வரமாட்டார்கள். தயவுகூர்ந்து 18 வயதிற்கு கீழே உள்ளவர்கள் அனுமதிக்கப்படுவது போல விரைவில் தடுப்பூசி போட இருப்பவர்களையும் அனுமதித்து திரைத்துறையை வாழ வைக்க வேண்டுகிறோம்.

    விரைந்து முடிவெடுத்து நம் திரையுலகையும்... திரையரங்க அதிபர்களையும் காக்க வேண்டுகிறேன்.’ இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    ×