என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'.
    • இப்படம் தொடர்ந்து பல சர்வதேச விருதுகளை வென்று வருகிறது.

    ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது.

     

    ஆர் ஆர் ஆர்

    ஆர் ஆர் ஆர்


    இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம ராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும் நடித்திருந்தனர். இப்படம் அண்மையில் கோல்டன் குளோப் விருதை வென்றது. சமீபத்தில் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் இறுதி பட்டியலில் 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் பரிந்துரைக்கப்பட்டது.


    ஆர் ஆர் ஆர்

    ஆர் ஆர் ஆர்

    இந்நிலையில், ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் நாட்டு நாட்டு பாடலை நேரடியாக பாடவுள்ளனர். தெலுங்கு பாடலை பாடிய ராகுல் சிப்லிகுன்ச் மற்றும் கால பைரவா இருவரும் இந்த பாடலை பாடவுள்ளதாக ஆஸ்கர் அகடமி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா வருகிற மார்ச் 12ம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • விஜய்யின் வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
    • இப்படம் வெளியாகி இன்றுடன் 50 நாட்களை கடந்துள்ளது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் உலக அளவில் ரூ.300 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது.

     

    50 வது நாளில் வாரிசு திரைப்படம்

    50 வது நாளில் வாரிசு திரைப்படம்

    இந்நிலையில், 'வாரிசு' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 50 நாட்களை கடந்துள்ளதை ரசிகர்கள் இணையத்தில் போஸ்டர்கள் வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர். மேலும் சில திரையரங்குகளில் ரசிகர்கள் விஜய்யின் போஸ்டர்களுக்கு மாலை அணிவித்து கொண்டாவது போன்ற வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பான ஹாஷ்டாக்குகளையும் இணையத்தில் வைரலாக்கியுள்ளனர்.

    இப்படம் பிப்ரவரி 22-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
    • இவருக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.


    முக ஸ்டாலின் - கமல்ஹாசன்

    முக ஸ்டாலின் - கமல்ஹாசன்

     

    அந்த பதிவில், முதல்வர்களில் முதன்மையானவராகவும், தமிழ்நாட்டை அடக்கியாளத் துடிப்பவர்களின் கனவைத் தகர்ப்பவராகவும் திகழும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர், என் மனதிற்கினிய நண்பர், தளபதி திரு முக ஸ்டாலின் அவர்கள் நீடுழி வாழ இந்தப் பிறந்தநாளில் வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

    • ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் 'மார்க் ஆண்டனி' படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இரண்டாவது முறையாக விபத்து ஏற்பட்டுள்ளது.

    லத்தி படத்தை தொடர்ந்து தற்போது விஷாலின் 33-வது திரைப்படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு 'மார்க் ஆண்டனி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். மேலும் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.


    மார்க் ஆண்டனி

    மார்க் ஆண்டனி

    இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம், ஈவிபி பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் குமணன்சாவடியை சேர்ந்த முருகன் (33), என்பவர் லைட் மேனாக வேலை செய்ய வந்தபோது எதிர்பாராத விதமாக லைட் கம்பம் அவரது நெற்றியில் பட்டதில் காயம் ஏற்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.


    விபத்து ஏற்பட்ட படப்பிடிப்பு தளம்
    விபத்து ஏற்பட்ட படப்பிடிப்பு தளம்

    கடந்த வாரம் இதே படப்பிடிப்பு தளத்தில் சண்டை காட்சியின் போது கட்டுப்பாட்டை இழந்து வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது முறையாக நடந்த விபத்தில் லைட் மேன் காயம் அடைந்தது படப்பிடிப்பு தளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம் 'பஹீரா'.
    • 'பஹீரா' திரைப்படம் வருகிற மார்ச் மாதம் 3-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம் 'பஹீரா'. சைக்கலாஜிக்கல் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு கணேசன் சேகர் இசையமைத்துள்ளார்.


    பஹீரா

    பிரபுதேவா பல வேடங்களில் நடித்துள்ள 'பஹீரா' படத்தின் டிரைலர் 2021-ம் ஆண்டு வெளியானது. இப்படம் கடந்த ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் ஒத்தி வைக்கப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு இப்படம் வருகிற மார்ச் மாதம் 3-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.


    பஹீரா

    இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது டிரைலரை சமீபத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் இணையத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து இப்படத்தின் புதிய பாடலான 'குச் குச் ஹோத்தா ஹை' பாடல் இன்று வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் பாடல் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.




    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
    • இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா வீடியோ வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது, "தன்னுடைய 70-வது பிறந்தநாள் கொண்டாடும் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆயுளோடு நிறை செல்வங்களோடு ஓங்கு புகழோடு வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்"

    இவ்வாறு வீடியோவில் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.

    • இயக்குனர் ஆர். கண்ணன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'காசேதான் கடவுளடா'.
    • இப்படத்தில் நடிகர் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் சிவா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'காசேதான் கடவுளடா'. இதில் யோகிபாபு, சிவாங்கி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடிகை பிரியா ஆனந்த் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    காசேதான் கடவுளடா

    இந்நிலையில், சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ராம் பிரசாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில், சென்னை தி.நகரை சேர்ந்த ராஜ் மோகன் என்பவர் தன்னை சந்தித்து 'காசேதான் கடவுளடா' படத்தை எடுப்பதற்காக ரூ. 1 கோடியை 75 லட்சம் கடன் பெற்றதாகவும் படத்தை வெளியிடுவதற்கு முன்பு இந்த பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாக ஒப்பந்தம் செய்து கொண்டதாக அந்த மனுவில் அவர் கூறியிருக்கிறார்.

    இந்த ஒப்பந்தத்தை மீறி தயாரிப்பு நிறுவனம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதால் தனக்கு பெரிய நிதி இழப்பு ஏற்படும் என்பதால் பணத்தை திருப்பி கொடுக்கும் வரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று அந்த வழக்கில் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.


    காசேதான் கடவுளடா

    இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது ராஜ் மோகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒப்பந்தத்தின் படி குறிப்பிட்ட தொகை கொடுப்பட்டிருக்கிறது. மீதி தொகை கொடுக்கும் வரைக்கும் இந்த படம் வெளியிடப்படாது என்ற உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்திரவாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி இந்த மனுவிற்கு பதிலளிக்கும் படி ராஜ் மோகன் தரப்பிற்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை மார்ச் 2-ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

    • பத்து தல' திரைப்படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா, அடுத்ததாக சிம்பு நடிக்கும் 'பத்து தல' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.


    பத்து தல

    கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான 'முஃப்தி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதையடுத்து நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் பாடலான 'நம்ம சத்தம்' பாடல் வெளியாகி கவனம் பெற்றது.


    பத்து தல போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வருகிற மார்ச் 3-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இதற்கு இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


    • ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் -2 படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இந்தியன் -2 திரைப்படத்தில் நடிகர் விவேக் காட்சிகள் நீக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது.

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.


    இந்தியன் 2

    இந்த படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.


    இந்தியன் 2

    இதையடுத்து இந்தியன் இரண்டாம் பாகத்தில் நடிகர் விவேக் நடித்துள்ள காட்சிகள் நீக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தற்போது இதனை படக்குழு மறுத்துள்ளதாகவும் நடிகர் விவேக் குரலில் பேசும் பல குரல் கலைஞர்களுக்கான தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் யார் விவேக் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுப்பார் என்ற அறிவிப்பு வெளியாகும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

    • ஷாருக்கான், கஜோல் ஆகியோர் நடித்த படத்தின் பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கப்பட்டு வருகிறது.
    • தில்வாலே லே ஜயாங்கே, கபி குஷி கபி கம் போன்ற படங்களை ரீ மேக் செய்யவேண்டும் என்று யாரும் நினைக்கக்கூடாது என்று நடிகை கஜோல் கூறியுள்ளார்.

    ஒரு காலத்தில் ரசிகர்களிடம் வெற்றி பெற்ற திரைப்படங்களாக இருக்கும் படங்களை தற்போது ரீ மேக் செய்யும் கலாச்சாரம் தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த வகையில் தமிழில் பில்லா ரீ மேக் செய்யப்பட்டது. இதே போல இந்தியில் பல ஆண்டுகள் ஓடி சாதனை புரிந்த திரைப்படம் தில்வாலே துல்ஹனியா லே ஜயாங்கே திரைப்படம். இது 1995ம் ஆண்டு வெளியானது. மும்பையில் ஒரு திரையரங்கத்தில் மட்டும் தொடர்ந்து பல ஆண்டுகள் இந்தத் திரைப்படத்தைத் திரையிட்டு வந்தனர்.


    கஜோல்

    ஷாருக்கான், கஜோல் ஆகியோர் நடித்த படத்தின் பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்தப்படம் குறித்து சில நாட்களுக்கு முன்பு பேசிய நாயகி கஜோல், தில்வாலே லே ஜயாங்கே, கபி குஷி கபி கம் போன்ற படங்களை ரீ மேக் செய்யவேண்டும் என்று யாரும் நினைக்கக்கூடாது. அந்த மேஜிக்கை கொண்டு வரமுடியாது. அதை எவ்வளவு சிறப்பாக எடுத்தாலும் அந்த உணர்வைக் கொடுக்க முடியாது. என்று கூறியிருக்கிறார். அவர் இதை இதற்கு முன்பும் வலியுறுத்திக்கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடித்த திரைப்படம் 'ரன் பேபி ரன்'.
    • இப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

    இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடித்த திரைப்படம் 'ரன் பேபி ரன்'.இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, எஸ் யுவா ஒளிப்பதிவு செய்திருந்தார்.


    ரன் பேபி ரன்

    இப்படம் கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'ரன் பேபி ரன்' திரைப்படம் வருகிற மார்ச் 10-ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.


    • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா.
    • இவருக்கு படப்பிடிப்பு தளத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார்.

    2010ம் ஆண்டு வெளியான பானா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. அதன்பின்னர் மாஸ்கோவின் காவிரி, நீதானே என் பொன் வசந்தம், நான் ஈ, தெரி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார். மேலும் தெலுங்கிலும் பல படங்கள் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடி தென்னிந்திய திரையுலகை கவர்ந்தார்.



    சில தினங்களுக்கு முன்பு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சமந்தா சிகிச்சை பெற்று வருவதாகவும் இந்த நோய் குணமாக சிறிது காலம் ஆகும் என்றும் தெரிவித்து இருந்தார். இது திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமந்தா விரைவில் குணமடைய வாழ்த்தினர்.




    சிகிச்சை பெற்று வந்ததால் சில மாதங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த சமந்தா தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். சமந்தா நடிப்பில் சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் திரைப்படம் 5 மொழிகளில் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்துவந்த 'குஷி' படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது.



    இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் சமந்தாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார். கையில் காயங்களுடன் இருக்கும் சமந்தாவின் புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

    ×