என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் பயில்வான் ரங்கநாதன்.
    • இவர் சமூக வலைதளத்தின் வாயிலாக பிரபலங்கள் பலரை விமர்சித்து வருகிறார்.

    சினிமா பத்திரிகையாளரும், படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தும் பிரபலமானவர் பயில்வான் ரங்கநாதன். இவர் முந்தானை முடிச்சு, தர்மதுரை, ஜெய்ஹிந்த், தெனாலி, வில்லன், பகவதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது சினிமா குறித்தும் திரைத்துறை நடிகர், நடிகைகள் குறித்தும் பல விஷயங்களை சமூக வலைத்தளத்தின் வாயிலாக பகிர்ந்து வருகிறார். இவர் மீது திரைப்பிரபலங்கள் பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.


    பயில்வான் ரங்கநாதன்

    இந்நிலையில், பயில்வான் ரங்கநாதன் குறித்த இயக்குனர் வெங்கட் பிரபுவின் சமூக வலைதளப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அதில், "இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற இசையமைப்பாளர் "இசை வெல்லம்" பயில்வான் ரங்கநாதன் சாரின் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்காக மனமார்ந்த வாழ்த்துகள். எங்களுக்கு செம்ம பெருமையான தருணம், உங்கள் பணியின் பெரிய ரசிகன் சார். மேலும் விவரங்களுக்கு நாளை மாலை 5 மணிக்கு ஜி.வி.பிரகாஷ் பதிவை பார்க்கவும்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.


    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் -2’.
    • இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முதல் பாகத்தின் வரவேற்பால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


    பொன்னியின் செல்வன் -2

    மேலும் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படம் தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்தப் படத்தின் புரொமோஷனுக்காக படக்குழு இந்தியா முழுவதும் சென்று வருகின்றனர்.


    மணிரத்னம்

    சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் மணிரத்னம் கூறியதாவது, தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அவர்களுக்கு நன்றி. இந்த விஷயத்தை நான் இதற்கு முன்பே சொல்லி இருந்தாலும் மறுபடியும் சொல்கிறேன். நான் ராஜமவுலிக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். 'பாகுபலி' இரண்டு பாகங்களாக அவர் உருவாக்காவிட்டால் நானும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்கி இருக்க மாட்டேன். இது எனக்கு புது பாதையை உருவாக்கி தந்தது. நிறைய வரலாற்று கதைகளை எடுக்க முடியும் என்ற நம்பிக்கையை சினிமாத்துறையில் பலருக்கும் கொடுத்தது. இதை அவரை சந்தித்தும் நான் சொல்லி இருக்கிறேன் என்றார்.

    • பிரித்விராஜ் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் ஆடு ஜீவிதம்.
    • இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது.

    தமிழில் கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரித்விராஜ் மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார். இவர் தற்போது ஆடு ஜீவிதம் என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் பிளஸ்சி இயக்கி உள்ளார். பென்யாமின் புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக அமலாபால் நடித்துள்ளார்.


    ஆடு ஜீவிதம்

    இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சவுதி அரோபியாவுக்கு வேலைக்கு சென்று அங்கு ஓட்டகம் மேய்க்கும் ஒரு பட்டதாரி இளைஞன் பற்றிய கதையே இந்த படம். பிரித்விராஜ் ஒட்டகம் மேய்ப்பவராக நடித்து இருக்கிறார். இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த டிரைலரில் இடம்பெற்றிருந்த பிரித்விராஜ், அமலாபால் உதட்டு முத்தம் காட்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து அமலாபால் அதிரடியாக பதில் அளித்துள்ளார்.


    ஆடு ஜீவிதம்

    அவர் கூறியதாவது, இந்த படத்தின் கதையை சொல்லும் போதே பிரித்விராஜ், உதட்டு முத்தக்காட்சி பற்றி விளக்கமாக கூறினார். படத்திற்கும், கதைக்கும் அந்த முத்தக்காட்சி மிகவும் அவசியம் என்பதால்தான் நான் நடித்தேன். மேலும், கதைக்கு தேவை என்பதற்காக நிர்வாணமாகவே நடித்திருக்கிறேன். உதட்டு முத்தம் கொடுப்பது எல்லாம் ஒரு விஷயமே இல்லை என்று கூறினார்.

    • மேயாதமான் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர்.
    • இவர் நடிப்பில் வெளியான மான்ஸ்டர், மாஃபியா, யானை, அகிலன், பத்து தல, ருத்ரன் உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களை கவர்ந்தது.

    சின்னத்திரை சீரியல்களில் அறிமுகமாகி பின்னர் மேயாதமான் படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். அதன்பின்னர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, யானை, அகிலன், பத்து தல, ருத்ரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரின் கைவசம் தற்போது டிமாண்டி காலனி 2, பொம்மை, இந்தியன் 2 உள்ளிட்ட படங்கள் இருக்கிறது.


    பிரியா பவானி சங்கர்

    பிரியா பவானி சங்கர்

    இந்நிலையில் பிரியா பவானி சங்கர் தற்போது புடவையில் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.

    • என்.டி.ராமாராவ் தமிழக முதலமைச்சர்களாக இருந்த எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோருக்கும் நெருங்கிய நண்பராக இருந்தவர்.
    • 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள என்.டி.ஆர். மூன்று முறை தேசிய விருதுகளைப் பெற்றதோடு, தயாரிப்பாளராகவும் சினிமா இயக்குனராகவும் புகழ் பெற்று விளங்கினார்.

    தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நாயகனாகவும், திரையுலகில் சாதனையாளராகவும் இருந்தவர் என்.டி.ராமாராவ். இவர் தமிழக முதல்- அமைச்சர்களாக இருந்த எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோருக்கும் நெருங்கிய நண்பராக இருந்தவர். இவருடைய நூற்றாண்டு விழாவைப் பிரமாண்டமாகக் கொண்டாடத்திட்டமிட்டுள்ள னர். இதற்கான ஏற்பாடுகளை அவரது மகன் நடிகர் பால கிருஷ்ணா செய்து வருகிறார்.

    300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள என்.டி.ஆர். மூன்று முறை தேசிய விருதுகளைப் பெற்றதோடு, தயாரிப்பாளராகவும் சினிமா இயக்குனராகவும் புகழ் பெற்று விளங்கினார். 1982-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சி என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த என்.டி.ஆர்., 1983 முதல் 1989 வரையிலும் பின்னர் 1994 முதல் 1995 வரையிலும் ஒருங்கிணைந்த ஆந்திர மாநில முதல்-மந்திரியாக செயல்பட்டார். 1984 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலின் போது முன்னாள் முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக என்.டி.ஆர். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

    என்.டி.ஆரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள இருக்கிறார். இது பற்றி பாலகிருஷ்ணா வெளியிட்டிருக்கும் வீடியோவில் கூறியிருப்பதாவது, வரும் 28-ந் தேதியன்று விஜயவாடாவில் மறைந்த என்.டி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வார். ஆந்திராவின் முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோருடன், நானும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

    என்.டி.ஆரின் கலை மற்றும் அரசி யலுக்கான பங்களிப்பைப் போற்றும் வகையில், அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    • மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியின் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முதல் பாகத்தின் வரவேற்பால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    மேலும் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படம் தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்தப் படத்தின் புரொமோஷனுக்காக படக்குழு இந்தியா முழுவதும் சென்று வருகின்றனர்.



    இந்நிலையில் பொன்னியின் செல்வன் -2 படக்குழு புரொமோஷனுக்காக மும்பைக்கு சென்றுள்ளனர். அருண்மொழி வர்மனாக நடித்துள்ள ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லக்ஷ்மி (பூங்குழலி) மற்றும் சோபிதா துதிபாலா (வானதி) இருவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பூங்குழலி மற்றும் வானதியுடன் மும்பையில் என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.


    • கர்நாடகா மாநிலம், நெலமங்களா அருகே உள்ள ஆதர்ஷநகரில் வசித்து வந்தவர் சம்பத்ஜெயராம்
    • இவர் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தார்.

    கர்நாடகா மாநிலம், நெலமங்களா அருகே உள்ள ஆதர்ஷநகரில் வசித்து வந்தவர் சம்பத் ஜெயராம் (வயது35). இவருக்கு திருமணமாகி  ஒருவருடம் ஆகியுள்ளது. இவரது மனைவி தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    சம்பத் ஜெயராம் கன்னட திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தார். இவர் நடித்த ஸ்ரீ பாலாஜி போட்டோ ஸ்டுடியோ சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றிருந்தது. மேலும் இவர் நடித்த அக்னி சாஷி என்ற தொடர் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் ஆனது.

    இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு சம்பத் ஜெயராம் டிவி தொடர் நிகழ்ச்சியை முடித்துவிட்டு தாமதமாக வீடுதிரும்பியதாக தெரிகிறது. இதனால் வீட்டில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டில் தனது அறையில் சம்பத் ஜெயராம் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நெலமங்களா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக கிடந்த அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் போதிய பட வாய்ப்புகள் கிடைக்காததால் விரக்தியில் இருந்த சம்பத் ஜெயராம் வீட்டில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    மேலும் இது குறித்து சம்பத்ஜெயராம் தாய் ஜெயம்மா எனது மகனின் சாவில் மர்மம் இருப்பதாக புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.டிவி நடிகர் சம்பத் ஜெயராம் தற்கொலை ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்கள் பலரும் அவரது இறப்பிற்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர். 

    • குஷ்பு தமிழில் நடிக்க தொடங்கியதும் தமிழில் எழுதவும், பேசவும் கற்றுக் கொண்டார்.
    • விரைவாகவே டப்பிங் பேசவும் ஆரம்பித்துவிட்டார்.

    தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த நடிகை குஷ்பு இப்போது அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். குஷ்பு தமிழில் நடிக்க தொடங்கியதும் தமிழில் எழுதவும், பேசவும் கற்றுக் கொண்டார். விரைவாகவே டப்பிங்கும் பேச ஆரம்பித்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்தாலும் தெலுங்கில் அதிக அளவு நடிக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- தெலுங்கு திரையுலகம் சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு மாறியதால் தான் தெலுங்கில் அதிக அளவில் நடிக்க முடியாமல் போனது. ஏற்கனவே எனது குடும்பத்தினரை மும்பையில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்துவிட்ட நிலையில் மீண்டும் ஹைதராபாத்துக்கு செல்ல விரும்பவில்லை.

    தற்போது சினிமா உலகம் எவ்வளவோ வளர்ந்து விட்டது. அப்போது கேரவன் வசதி எல்லாம் கிடையாது. அந்த காலத்தில் நாங்கள் இருட்டு அறையில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மேக்கப் போடுவோம். பாத்ரூமில் உடை மாற்றுவோம். மேக்கப் இல்லாத போது மஞ்சள் பொடியை வைத்து முகத்தில் கலர் கரெக்ஷன் செய்தோம். அது கோவில் காட்சிகளுக்கு கை கொடுத்தது. தற்போது கிராபிக்ஸ் தொழில் நுட்பம் வந்து விட்டது. எல்லாமே மாறிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

    • இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

    இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


    கங்குவா

    கங்குவா

    தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கங்குவா' திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.


    கேஜிஎஃப் பி.எஸ்.அவினாஷ்

    கேஜிஎஃப் பி.எஸ்.அவினாஷ்

    பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கோவா மற்றும் பிஜூ தீவுகளில் நடைபெற்று வந்ததையடுத்து தற்போது கொடைக்கானலில் நடைபெறுவதாக தகவல் வெளியான நிலையில், கங்குவா படப்பிடிப்பு கொடைக்கானல் மலைப்பகுதியில் 3 வாரங்கள் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் படத்தின் முக்கியமான வரலாற்று பகுதிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதில் கேஜிஎஃப் படத்தில் நடித்த பி.எஸ்.அவினாஷ் இணைந்துள்ளதாகவும் பேசப்படுகிறது.

    • செக் மோசடி வழக்கில் தண்டனையை எதிர்த்து இயக்குனர் லிங்குசாமி செய்த மேல்முறையீடு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.
    • லிங்குசாமிக்கு நிபந்தனையுடன் விதித்த 6 மாத சிறை தண்டனையை நிறுத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    திரைப்பட இயக்குனர் லிங்குசாமி, அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள திருப்பதி பிரதர்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனம், கடந்த 2014-ம் ஆண்டு பி.வி.பி. கேப்பிடல் நிறுவனத்திடம் இருந்து ரூ.1 கோடியே 3 லட்சம் கடன் வாங்கியது. அந்த தொகைக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.1 கோடியே 35 லட்சத்தை காசோலையாக அவர்கள் திருப்பி வழங்கினர்.



    அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லை என்று திரும்பி வந்தது. அதையடுத்து லிங்குசாமி, அவரது சகோதரர் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, இருவருக்கும் தலா 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ந் தேதி தீர்ப்பளித்தார். அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றம், கீழ்கோர்ட்டு வழங்கிய தண்டனையை உறுதி செய்தது.


    லிங்குசாமி

    லிங்குசாமி

    இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் லிங்குசாமி, சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன்பு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது காசோலை தொகையில் ஏற்கனவே 20 சதவீதத்தை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்துள்ளதாகவும், மேலும் 20 சதவீதத்தை டெபாசிட் செய்ய தயாராகவுள்ளதாகவும் லிங்குசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதி, 20 சதவீதத்தை 6 வாரங்களில் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் லிங்குசாமிக்கு விதித்த 6 மாத சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    • சிவகார்த்திகேயன் நடிப்பில் ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அயலான்.
    • இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

    டாக்டர், டான், பிரின்ஸ் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் அயலான். இப்படத்தை இயக்குனர் ஆர்.ரவிகுமார் இயக்கியுள்ளார். ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


    அயலான்

    அயலான்


    பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் அறிவிப்பு இன்று காலை 11.04 மணிக்கு வெளியாகும் என அறிக்கை வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது. அறிவித்தபடி இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதனபடி அயலான் திரைப்படம் வருகிற தீபாவளி தினத்தன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இதனை இணையத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். 

    • இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மகாராஜா படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தில் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதியின் 50வது படத்தை 'குரங்கு பொம்மை' படத்தை இயக்கி பிரபலமடைந்த இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்குகிறார். இப்படத்திற்கு மகாராஜா என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நட்டி (எ) நட்ராஜ் சுப்ரமணியம், முனீஷ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    அனுராக் காஷ்யப் 

    அனுராக் காஷ்யப் 

    இப்படத்தின் கதாநாயகன் போலவே எதிர்கதாநாயகன் கதாபாத்திரமும் வலுவானதாக இருப்பதால் அதில் முக்கிய நடிகர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து நடிக்க வைக்க வேண்டும் என்பதில் படக்குழு தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் பாலிவுட் இயக்குனரும், நடிகருமான அனுராக் காஷ்யப் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து படக்குழு அவரிடம் பேச்சு வார்த்தை நடித்தி வருவதாகவும் விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதற்குமுன்பு விஜய் சேதுபதி, நயன்தாரா, அதர்வா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் அனுராக் காஷ்யப் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×