என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    சுந்தர்.சி. இயக்கத்தில் ஆர்யா, ஜெயம் ரவி, ஸ்ருதி ஹாசன் இணைந்து நடிக்க உள்ள `சங்கமித்ரா' படத்தின் தொடக்க விழா பிரான்சில் உள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரம்மாண்டமாக நடக்க உள்ளது.
    எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் என நட்சத்திரப் பட்டாளங்களுடன் வெளியான பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்திய சினிமா வராலாற்றில் ரூ.1227 கோடியை வசூலித்து வரலாற்று சாதனையை படைத்திருக்கிறது. இன்னமும் திரையங்குகளில் மக்கள் கூட்டம் அலையென கூடி வருகிறது.

    இந்திய சினிமாவை பொறுத்த வரையில், ஒரு நேரத்தில் எந்த மாதிரியான படம் ட்ரெண்டாக செல்கிறதோ, அதை பின்பற்றி தொடர்ந்து பல்வேறு படங்கள் வெளியாகும். அந்த வகையில், பாகுபலியை தொடர்ந்து சிம்புவின் `அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படமும் இரு பாகங்களாக வெளியாக இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.



    இந்நிலையில், சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ஜெயம் ரவி இணைந்து நடிக்க உள்ள படம் `சங்கமித்ரா' படமும் இரு பாகங்களாக வெளியாக இருக்கிறது. இப்படத்தை 3 பாகங்களாக வெளியிடவும் படக்குழு முயற்சி செய்து வருகிறது. வரலாற்றுக் கதையில் பிரமாண்டமாக உருவாகவுள்ள இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 101-வது படமாக பெரும் பொருட்செலவில் தயாரிக்க உள்ளது. "மொசர்ட் ஆப் மெட்ராஸ்" என்றழைக்கப்படும் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

    இப்படத்திற்காக ஆர்யா, ஜெயம் ரவி இருவரும் ஒன்றரை வருடம் கால்ஷீட் கொடுத்ததுடன், தங்களது உடல் எடையையும் அதிகரித்து வருகின்றனர். அதேநேரத்தில் குதிரை சவாரி, வாள் சண்டை உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளையும் எடுத்து வருகின்றனர்.



    இப்படத்தில், ஆர்யா, ஜெயம் ரவிக்கு ஜோடியாக முன்னணி நடிகைகளை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வரும் படக்குழு, ஸ்ருதி ஹாசனை ஒரு ஹீரோயினாக ஒப்பந்தம் செய்துள்ளது. ஸ்ருதியும் இப்படத்திற்காக லண்டனில் வாள் பயிற்சி எடுத்து வருகிறார்.

    ஆக மிகப்ரெிய நட்சத்திரப் பட்டாளங்களுடன் உருவாக உள்ள இப்படத்தின் தொடக்க விழா அடுத்த வாரம் (மே 18-ல்) பிரான்சில் நடைபெற உள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில் நடைபெற உள்ளது.

    இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜுன் முதற்பாதியில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
    `அவதார்' படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் முழுக்க முழுக்க தண்ணீருக்குள் இருக்கும்படி எடுக்கப்பட உள்ளதாக இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்துள்ளார்.
    கடந்த 2009-ம் ஆண்டு வெளியாகி உலகமெங்கும் பிரம்மாண்ட வசூலைக் குவித்த படம் 'அவதார்'. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் 2.8 பில்லியன் டாலர்களை வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் வரலாற்று சாதனை படைத்தது. மேலும் `டைட்டானிக்' படத்தின் வசூல் சாதனையையும் 'அவதார்' முறியடித்திருந்தது.

    அதனைத் தொடர்ந்து 'அவதார்' படத்தின் மேலும் 4 பாகங்கள் வெளியாகும் என ஜேம்ஸ் கேமரூன் அறிவித்திருந்தார். அதன்படி `அவதார் படத்தின் அடுத்த 4 பாகங்கள் எப்போது வெளியாகும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டிருந்தது. அதன்படி `அவதார் 2' - டிசம்பர் 18 2020, `அவதார் 3' - டிசம்பர் 17 2021, `அவதார் 4' - டிசம்பர் 20 2024, `அவதார் 5' - டிசம்பர் 19 2025 தேதிகளில் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



    இந்நிலையில் இப்படத்தில் `ஃபியர் தி வாக்கிங் டெட்' படத்தில் நடித்த பிரபலம் கிளிஃப் கர்ட்டிஸ் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கர்ட்டிஸ் டோனாவோரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். மேலும் மெட்கயினா இனத்தின் தலைவரும் இவர் தான் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

    `அவதார்' படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் (`அவதார்' உலகம்) தண்ணீருக்கு அடியில் இருப்பது போல காட்சிப்படுத்தப்பட இருக்கின்றன. அதற்காக ஆழ்கடலில் படத்தின் காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாக ஜேம்ஸ் கேமரூன் சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.
    விதார்த் - ரவீணா நடிப்பில் வெளியாக உள்ள `ஒரு கிடாயின் கருணை மனு' ரிலீசாவதற்கு முன்பே சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டுக்களை பெற்றுள்ளது.
    ஈராஸ் இன்டர்நே‌ஷனல் மீடியா லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘ஒருகிடாயின் கருனை மனு’.

    விதார்த் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக டப்பிங் கலைஞர் ரவீணா அறிமுகமாகிறார். இவர்களுடன் ஜார்ஜ், ஹலோ கந்தசாமி, கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

    ‘காக்காமுட்டை’ இயக்குனர் மணிகண்டனின் உதவியாளராக பணியாற்றிய சுரேஷ் சங்கையா இப்படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுக்கிறார்.



    கிராமத்து பின்னணியில் 3 நாட்களில் நடக்கும் கதையில், வேண்டுதலுக்காக பலியிட ஒரு ஆடு கோவிலுக்கு கொண்டு போகப்படுகிறது. அப்போது நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்களே கதையாக எடுக்கப்பட்டுள்ளது.

    சமீபத்தில் நியூயார்க் நகரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இந்த திரைப்படத்துக்கு பிரம்மாண்ட வரவேற்ப்பு கிடைத்தது. படத்தை பார்த்த இந்திய வம்சா வழியினர் படக்குழுவை பாராட்டி இருக்கிறார்கள்.

    நமது மண்ணின் பெருமையையும், குணத்தையும் சார்ந்த `ஒரு கிடாயின் கருணை மனு' தமிழர்களுக்கு உலக அளவில் பெருமை சேர்க்கும் என படத்தை பார்த்த சர்வதேச படக் குழுவினரும் தெரிவித்திருக்கின்றர்.
    சமீபத்தில் வெளியாகி பல்வேறு சாதனைகளை படைத்து வரும் `பாகுபலி-2' படத்திற்கு போட்டியாக, அமீர்கான் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான `தங்கல்' படம் சீனாவில் 90 கோடியை அள்ளி இருக்கிறது.
    எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகி பல்வேறு சாதனைகளை படைத்து வரும் படம் `பாகுபலி-2'. `பாகுபலி' படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் ரிலீசானது.

    `பாகுபலி' படத்தின் முதல் பாகம் பாக்ஸ் ஆபீஸில் ரூ.650 கோடி வசூலித்திருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள `பாகுபலி-2', ரிலீசாகிய 10 நாட்களில் ரூ.1227 கோடியை எட்டியுள்ளது. இந்தியாவில் மட்டும் `பாகுபலி-2'-ன் வசூல் வேட்டை ரூ.850 கோடியை தாண்டி தொடர்கிறது.

    இதுஒருபுறம் இருக்க நித்தேஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான 'தங்கல்' படம் சீனாவில் டப் செய்யப்பட்டு சமீபத்தில் வெளியானது.



    வெளியாக 4 நாட்களில் சீனாவில் மட்டும் `தங்கல்' ரூ.90.60 கோடியை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இப்படத்தின் மொத்த வசூல் ரூ.803 கோடியாக உயர்ந்துள்ளது.

    விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்ற இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.375 கோடிகளை வசூலித்து இந்திய வசூலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    இளன் இயக்கத்தில் கிருஷ்ணா, சந்திரன், நந்தினி இணைந்து நடித்துள்ள ‘கிரகணம்’ படத்தின் முன்னோட்டம்.
    கே.ஆர். பிலிம்ஸ் சார்பில் தயாராகும் படம் ‘கிரகணம்’.

    இதில் கிருஷ்ணா, சந்திரன், இணைந்து நடிக்கிறார்கள். நந்தினி என்ற புதுமுகம் நாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் கருணாஸ், கருணாகரன், ஜெயபிரகாஷ், பாண்டி, சிங்கப்பூர் தீபன் ஆகியோர் நடித்துள்ளனர்.

    இசை - கே.எஸ்.சுந்தர மூர்த்தி, ஒளிப்பதிவு - ஸ்ரீசரவணன், படத்தொகுப்பு - மணிகுமரன் சங்கரா, கலை - விஜய், தயாரிப்பு - சரவணன், கார்த்திக், இணை தயாரிப்பு - சிவக்குமார். இயக்கம் - இளன்.



    “ ‘கிரகணம்’ ஒரு புதிய கோணத்தில் சொல்லப்படும் புதுவிதமான கதை. சந்திர கிரகணம் நிகழும் ஒரு நாள் இரவில் அந்த கதையின் கதாபாத்திரங்கள் வாழ்விலும் இருள் சூழ்கிறது. அந்த இருள் ஒரு மணி நேரம் தான். அதற்குள் அவர்களின் வாழ்வில் என்ன என்ன திருப்பங்கள் வருகிறது என்பதை பரபரப்பாகவும் திகிலாகவும் சொல்லும் வகையில் திரைக்கதை அமைத்திருக்கிறேன்” என்றார்.

    “ஒரு நாள், ஓர் இரவு என்றெல்லாம் கதைகளை சொல்லும் இன்றைய இயக்குனர்கள் மத்தியில் ஒரு மணிநேரத்தில் நடக்கும் சம்பவத்தை இந்த படத்தில் இயக்குனர் வித்தியாசமாக சொல்லி ஆச்சர்யப்படுத்துகிறார்” என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.
    திருச்சியை அடுத்த பொன்மலையில் நடந்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை "மெல்லிசை மன்னர்'' எம்.எஸ்.விஸ்வநாதன் கேட்டு ரசித்துப் பாராட்டினார்.
    திருச்சியை அடுத்த பொன்மலையில் நடந்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை "மெல்லிசை மன்னர்'' எம்.எஸ்.விஸ்வநாதன் கேட்டு ரசித்துப் பாராட்டினார்.

    கம்ïனிஸ்டு கட்சிக்காக அண்ணன் பாவலர் வரதராஜனுடன் சேர்ந்து, இளையராஜா இசை நிகழ்ச்சிகள் நடத்தி வந்த காலக்கட்டம் அது.

    அப்போது நடந்த நிகழ்ச்சிகளை இளையராஜா நினைவு கூர்ந்தார்:

    "இளம் வயதில், என் நண்பர்களில் எனக்கு முதன்மையானவர்கள் இருவர். ஒருவர் கரியணம்பட்டி எம்.சுப்பிரமணி. என் வகுப்புத் தோழன். இரண்டாவது பாரதிராஜா.

    பாரதி இல்லாத வாழ்க்கையை என்னால் நினைத்துக்கூட பார்க்க இயலாது. இன்று வரை அந்த நட்பில் குறைவில்லை.

    படிக்கும் நேரத்தில் மணியுடன் அதிகமாகப் பழகவில்லை என்றாலும், பி.யு.சி.யில் இருந்து என்ஜினீயரிங் படித்து முடிக்கும் வரை இருந்த நட்பு, அதன் பின்னும் - சினிமாவில் வாய்ப்பு கிடைத்த பிறகும் தொடர்ந்தது.

    மதுரையில் தங்க நேரும்போதெல்லாம் மணியுடன்தான் அதிகமாக இருப்பேன். சினிமா, வைகை மணல்வெளி, திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஏரிக்கரை, மீனாட்சி கோவில் என்று நாட்கள் கழியும்.

    விடுமுறை காலங்களில், ஒன்று நான் கரியணம்பட்டியில் மணியுடன் தங்குவேன். அல்லது மணி என் வீட்டில் தங்குவார்.

    மாலை நேரங்களில் புல்லாங்குழலை எடுத்துக்கொண்டு கரியணம்பட்டி ஏரிக்கரை நந்தவனம் அல்லது மேற்கே வீராந்தோப்புக்கு சென்று நான் வாசிக்க - அல்லது பாஸ்கர் இருந்தால் பாஸ்கர் வாசிக்க, இதமாகப் பொழுதுபோகும்.

    போதாதற்கு "கல்கி''யின் வந்தியத்தேவனும், குந்தவையும், வானதியும், சிவகாமியும், பார்த்திபனும் எங்கள் கற்பனைகளைத் தூண்டி, அந்த சரித்திர காலத்திற்கே இழுத்துச் சென்று விடுவார்கள்.

    அவ்வப்போது வீட்டில் இசை பிராக்டிஸ் செய்து கொண்டிருப்போம். நண்பர்கள் கூடிவிடுவார்கள். ஆளுக்கொரு பாடலாகச் சொல்ல, வாசித்துக் கொண்டிருப்போம்.

    இடையில், திடீரென்று தம்பி அமர் எழுதிய பாடலுக்கு, நான் இசை அமைத்த பாடலை வாசிப்பேன்.

    "இது எந்தப் படத்தில் வரும் பாடல்?'' என்று பலர் கேட்பார்கள். `நம் பாடல், சினிமாப் பாடலின் தரத்துக்கு உயர்ந்து விட்டதே' என்று மனதுக்குள் சந்தோஷமாக இருக்கும்.

    "படம் இன்னும் வரவில்லை. எம்.எஸ்.வி. இசை அமைத்த பாடல்'' என்போம்.

    நண்பர்கள் குழுவில் இரண்டொருவர் தவிர எல்லோரும் எம்.எஸ்.வி.யின் ரசிகர்கள். அடிக்கடி நாங்கள் அவர் பாடலையே வாசிப்பதால், அத்தனை ஈர்ப்பு.

    அப்படியே சீட்டாட்டம் தொடங்குவோம். "நாக் அவுட்'' - 25 காசு!

    யார் கடைசியில் ஜெயிக்கிறாரோ, அவர் பண்ணைபுரம் பஸ் ஸ்டாண்டில் உள்ள சுப்புசாமி நாயக்கர் கடையில் இட்லி - டிபன் வாங்கித்தர வேண்டும்.தி.மு.க. வெற்றி

    1967 தேர்தலில் தி.மு.கழகம் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.

    1957 தேர்தலில் 50 எம்.எல்.ஏ.க்களைக் கொண்டிருந்த கம்ïனிஸ்டு கட்சி, 1962-ல் 11 ஆகக் குறைந்து, 1967-ல் 2 எம்.எல்.ஏக்களை மட்டுமே பெற்றது. பாலதண்டாயுதமும், சி.ஏ.பாலனும் தூக்கு மேடையிலிருந்து திரும்பி, தி.மு.க.வுக்கு எதிராகப் பிரசாரம் செய்தும் பலன் இல்லை.

    தி.மு.கழகம் மந்திரிசபை அமைத்தது. அண்ணா முதல்-அமைச்சர் ஆனார்.

    1967 கடைசியிலோ, 1968 ஆரம்பத்திலோ, பொன்மலை ரெயில்வே காலனியில் எங்கள் கச்சேரி இருந்தது. நல்ல கூட்டம். கச்சேரி முடிந்து, பொன்மலை தோழர்களுடன் சாப்பிடப்போனோம்.

    அப்போது, எங்கள் கச்சேரியை எம்.எஸ்.விஸ்வநாதன் கேட்டுக்கொண்டிருந்தார் என்று தோழர்கள் சொன்னார்கள். எங்களுக்கு `ஷாக்'

    அடித்தது."எம்.எஸ்.வி. அண்ணன் எங்கள் கச்சேரியை கேட்டாரா!'' என்று நாங்கள் ஆச்சரியத்துடன் கேட்க, நண்பர்கள் `ஆமாம்' என்று மீண்டும் சொன்னார்கள்.

    எம்.எஸ்.வி.யின் மாமா வீடு பொன்மலையில் இருந்தது. சென்னை போகும் வழியில் அங்கு தங்கியிருக்கிறார். அப்போது எங்கள் கச்சேரியைக் கேட்டிருக்கிறார் என்று தெரிந்து கொண்டோம்.

    இரவு வெகு நேரமாகி விட்டதால், எம்.எஸ்.வி. தூங்கச் சென்றிருக்கலாம் என்று நினைத்தோம். மறுநாள் காலை அவரைச் சந்திக்க வேண்டும் என்று தீர்மானித்தோம்.

    அன்றிரவு திருச்சி உறைïரில், கட்சி ஆபீசில் தங்கினோம். தூக்கம் வரவில்லை. மறுநாள் எம்.எஸ்.வி.யைப் பார்ப்பது பற்றியே சிந்தனை.

    மறுநாள் காலையில் முதல் வேலையாக, எம்.எஸ்.வி. அவர்களைப் பார்த்துவிட்டு வருமாறு தம்பி அமரை அனுப்பினோம். `எப்போது வருவான், எப்போது வருவான்' என்று காத்திருந்தோம். அமர் திரும்பி வந்தான். `என்ன ஆச்சு, என்ன ஆச்சு?' என்று கேட்டோம்.

    `எம்.எஸ்.வி. இரவே சென்னைக்கு புறப்பட்டுவிட்டார்' என்ற செய்தியைக் கேட்டு அதிர்ந்து போனோம். என்றாலும், அமர் சொன்ன விவரங்கள் எங்களுக்கு ஆறுதல் அளித்தன.

    "எம்.எஸ்.வி.யின் மாமாவுடன் அரை மணி நேரம் பேசிவிட்டு வருகிறேன். நாம் கச்சேரி செய்தபோது, எம்.எஸ்.வி. அண்ணன் வீட்டுக்கு வெளியே ஈசிசேரைப் போட்டு உட்கார்ந்து, கச்சேரியை ரசித்துக் கேட்டிருக்கிறார். `இந்தப்பசங்க, நல்லா வாசிக்கிறாங்க' என்று பாராட்டியிருக்கிறார்...''

    இவ்வாறு அமர் சொன்னதும் ஆனந்தத்தில் மிதந்தோம். அதே சமயம், `ஆகா! எப்பேர்ப்பட்ட மேதை நம் பாட்டைக் கேட்டிருக்கிறார்! அவரை சந்திக்க முடியாமல் மிஸ் பண்ணிவிட்டோமே' என்ற வருத்தமும் மேலிட்டது.''

    இவ்வாறு கூறினார், இளையராஜா.

    காஷ்மீரில் துளிர் விடும் காதல் காலத்தில் `ரங்கா' படக்குழு படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பியுள்ளது.
    பாஸ் மூவிஸ் சார்பில் விஜய் கே செல்லையா தயாரிக்கும் `ரங்கா' படத்தின் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரின் பஹால்கம் மற்றும் குல்மார்க் உள்ளிட்ட இடங்களில் நடந்தது. சிபிராஜ் - நிகிலா விமல் நடிக்கும் இந்தப் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்துள்ளது.   

    இயக்குனர் வினோத்தின் யோசனைப்படி, படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்தி உள்ளனர். எனினும் அதற்கான சூழ்நிலை, அரசியல் ரீதியாகவும் இல்லை. பாதுகாப்பு ரீதியாகவும் இல்லை, இயற்கையும் ஆதரவாக இல்லை என பலர் அச்சுறுத்திய நிலையில், காஷ்மீரில் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளதாக விஜய் கே செல்லையா தெரிவித்திருக்கிறார்.



    முக்கியமான காட்சிகளை, காஷ்மீரில் யாரும் கண்டிராத இடங்களில் படமாக்கி இருப்பதாகவும், உடல் ரீதியாகவும் மிக சிரமப்பட்டோம். அவலாஞ்சி எனப்படும் பனி புயல் எங்களை மிரட்டியது, துரத்தியது. சற்றும் சளைக்காமல் மிகுந்த சிரமத்துக்கு இடையே படப்பிடிப்பை முடித்ததாக கூறினார். காதல் காட்சிகள் மிக சிறப்பாக வந்து உள்ளன. சண்டை இயக்குனர் திலீப் சுப்புராயன் மற்றும் அவருடைய குழுவினர் அந்த பனி பிரதேசத்தையே தங்கள் சண்டை காட்சி அமைப்புகளால் தீப்பிழம்பு ஆக்கினார்கள் என்றால் மிகை ஆகாது என்றார்.

    தற்போது படப்பிடிப்பு முடிந்து சென்னை வந்து விட்டோம், இங்கு அடிக்கும் வெயில் மிக கொடுமையாக இருக்கிறது என்று தயாரிப்பாளர் விஜய் கே செல்லையா தெரிவித்தார்.
    `பாகுபலி' படத்தில் வில்லனாக நடித்திருக்கும் நடிகர் ராணா இப்படத்திற்காக தன்னைத்தானே மிகவும் வருத்திக்கொண்டாராம்.
    ‘பாகுபலி-2’ படத்தின் நாயகன் பிரபாஸ் இந்த படத்துக்காக தனது எடையை 100 கிலோவாக அதிகரித்தார்.

    இந்த படத்தில் வில்லனாக நடித்த ராணா நாயகனை விட பெரிய உடல் அமைப்பு கொண்டவராக இருக்க வேண்டும் என்று இயக்குனர் ராஜமவுலி விரும்பினார். இதற்காக ராணா தீவிர பயிற்சி மேற்கொண்டார். இதற்காக முட்டை, இறைச்சி ஆகியவற்றை உடற்பயிற்சியாளர் ஆலோசனைப்படி அதிகமாக உண்டார்.

    ராணாவுக்கு உடற்பயிற்சி அளிப்பதற்காக வெளிநாட்டு பயிற்சியாளர் வரவழைக்கப்பட்டார். அவர் சொன்னபடி தினமும் பலமணி நேரம் உடற்பயிற்சி மேற்கொண்டார். இதன் மூலம் ராணா தனது உடல் எடையை 106 கிலோவாக அதிகரித்தார்.



    உடல் எடை மட்டும் அதிகரித்தால் போதாது. கட்டுக் கோப்பான உடல் அமைப்பு நீடிக்க வேண்டும். இதற்காக சர்வதேச உடற்பயிற்சியாளர் ஆலோசனைப் படி உடலை கட்டுக்கோப்பாக கொண்டு வந்தார்.

    ‘பாகுபலி-2’ படத்தில் ராணாவின் வில்லன் தோற்றத்துக்கு அவரது நடிப்புடன் உடல் தோற்றமும் பிரமாண்டமாக தெரிந்தது.

    ராணாவின் வில்லத்தனத்திற்கு அவரது ஒவ்வொரு உடல் அசைவும் மிகப்பெரிய பரிமாணத்தை கொடுத்தது. இதன் மூலம் நாயகன் பிரபாஸ் அளவுக்கு ராணாவும் பேசப்படுகிறார். இதற்கு கட்டுக்கோப்பான அவரது உடல் அமைப்பே காரணம் என்று திரை உலகினரும், ரசிகர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

    `பாகுபலி' படத்தில் கட்டப்பா வேடத்தில் சத்யராஜை தவிர வேறு யாரும் இப்படி நடிக்க முடியாது என்று 90-களில் அவருடன் டூயட் பாடிய நடிகை குஷ்பு பாராட்டு தெரிவித்துள்ளார்.
    ‘பாகுபலி’, ‘பாகுபலி-2’ ரூ.1000 கோடி வசூல் குவித்து உலக சாதனை படைத்துள்ளது. முதல் பாகம் பாகுபலியை கட்டப்பா கொன்றது ஏன்? என்ற கேள்வியுடன் முடிந்தது. இதற்கான பதில் என்ன? என்பதே ‘பாகுபலி-2’.

    இந்த படத்தின் இரண்டு பாகத்திலும் கட்டப்பாவாக நடித்த சத்யராஜ் மிகவும் பேசப்பட்டார். அவருடைய பாத்திரம்தான் 2-ம் பாகத்தின் முக்கிய அம்சமாக அமைந்தது. `பாகுபலி' கதையில் உயிரோட்டமே அவர்தான் என்று சொல்லும் அளவு சிறப்பான நடிப்பால் சத்யராஜ் அனைவரையும் கவர்ந்தார்.



    கதையின் முக்கிய பாத்திரம் சத்யராஜ் என்பதால், அவரை வைத்து கர்நாடகாவில் பிரச்சினையை ஏற்படுத்தினார்கள். அது ‘பாகுபலி-2’க்கு அதிக விளம்பரத்தை கொடுத்தது. இந்த படத்தின் பிரமாண்டம். மற்ற நடிகர் - நடிகைகள் பற்றி பலரும் பாராட்டி இருக்கிறார்கள்.

    இதில், சத்யராஜ் நடிப்பு பற்றி நடிகை குஷ்பு புகழ்ந்து இருக்கிறார். இது குறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ள குஷ்பு... ‘பாகுபலி' படத்தில் வரும் கட்டப்பா வேடத்தில் சத்யராஜ் சார் தவிர வேறு யார் நடித்தாலும் அவரைப் போல் இவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியாது. இன்னொரு ரகசியம். அவருடன் நான் தான் அதிக படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி பல்வேறு சாதனைகளை படைத்து வரும் `பாகுபலி-2' இன்னும் சில நாட்களில் அடுத்த ரூ.1000 கோடி இலக்கை எட்டவிருக்கிறது.
    எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகி பல்வேறு சாதனைகளை படைத்து வரும் படம் `பாகுபலி-2'. `பாகுபலி' படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் ரிலீசானது.

    `பாகுபலி' படத்தின் முதல் பாகம் பாக்ஸ் ஆபீஸில் ரூ. 650 கோடி வசூலித்து சாதனை படைத்திருந்தது. இதையடுத்து தற்போது வெளியாகியுள்ள `பாகுபலி-2' ரிலீசாகிய 9 நாட்களிலேயே ரூ.1065 கோடியை வசூல் செய்து இந்திய சினிமாவையே ஆட்டம் காண வைத்துள்ளது.



    இந்நிலையில், படத்தின் வசூல் வேட்டை மேலும் உயர்ந்து அடுத்த ரூ.1000 கோடி என்ற இலக்கை எட்டவிருக்கிறது. அது எப்படி என்றால், இந்தியாவில் மட்டும் `பாகுபலி-2' ரூ.850 கோடி வசூல் செய்துள்ளது. எனவே இன்னும் சில நாட்களில் இந்திய வசூலில் இப்படம் ரூ.1000 கோடியை எட்டி இந்திய சினாமாவில் வரலாற்று சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் மட்டும் `பாகுபலி-2' ரூ.100 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இங்கிலாந்தில் பாக்ஸ் ஆபிஸில் முதல் 10 இடங்களுக்குள் `பாகுபலி-2' இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    நடிகர் சங்க பொதுச் செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் கமி‌ஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரையடுத்து, ‘பாகுபலி-2’ திருட்டு விசிடி விற்றதாக 16 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    நடிகர் சங்க பொதுச் செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் நேற்று போலீஸ் கமி‌ஷனர் கரன் சின்காவை சந்தித்து மனு கொடுத்தார்.

    அதில், ‘பாகுபலி-2’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியானது. இதுபோன்று புதிய படங்கள் இணையதளத்தில் வெளியாவதை தடுக்க வேண்டும்.

    ‘பாகுபலி-2’ படத்தின் திருட்டு விசிடிகள் மற்றும் புதிய படங்களின் திருட்டு விசிடிக்கள் சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் விற்கப்படுகின்றன. இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.



    இதையடுத்து சென்னையில், திருட்டு விசிடி விற்பவர்களை பிடிக்க 11 படைகள் அமைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து சென்னையில் பர்மாபஜார், நேதாஜிபஜார், அமைந்தகரை, சத்யா பஜார், ரத்தன் பஜார் உள்பட பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    இதில் ‘பாகுபலி-2’ ‘கவண்’, ‘டோரா’ உள்பட பல புதிய பட திருட்டு விசிடிக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஏராளமான சிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை விற்பனை செய்தது தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டனர்.

    விஜய் சேதுபதி - திரிஷா முதன்முறையாக இணைந்து நடிக்கவிருக்கும் `96' படத்தில் இருவரின் சிறிய வயது கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான கதாபாத்திரங்களை படக்குழுவினர் தேடி வருகின்றனர்.
    மெட்ராஸ் என்டர் பிரைசஸ் எஸ்.நந்த கோபால் அடுத்து தயாரிக்கும் படம் ‘96’. இந்த படத்தில் முதல் முறையாக விஜய் சேதுபதியுடன் திரிஷா ஜோடி சேர்ந்து நடிக்கிறார். இந்த படத்தை புதுமுக இயக்குனர் சி.பிரேம் குமார் இயக்குகிறார். இவர், விஜய் சேதுபதிக்கு பெயர் வாங்கி கொடுத்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் ஒளிப்பதிவாளர். இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் காதலர் தினமான பிப்ரவரி 14-ந் தேதி வெளியானது.

    இதன் முதல் கட்டபடப்பிடிப்பு விரைவில் கும்பகோணம் பகுதியில் நடைபெறுகிறது. இதில் இளம் வயது விஜய்சேதுபதி, திரிஷா வேடத்தில் நடிப்பதற்கான நடிகர், நடிகை தேர்வு நடைபெற்று வருகிறது.



    இன்னும் சில பாத்திரங்களுக்கும் தேவையான நடிகர்களை படக்குழு தேர்வு செய்து வருகிறது. ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராகும் பிரேம்குமார் இந்த படத்தில் இயக்கத்தை மட்டும் கவனிக்கிறார். என். சண்முகம் ஒளிப்பதிவு செய்கிறார்.
    ×