என் மலர்
ஆட்டோ டிப்ஸ்
டொயோட்டா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் முதல்முறையாக நீ்ண்ட கால வாரண்டியை அறிவித்து இருக்கிறது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் 2021 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகன பேட்டரிக்கான வாரண்டியை எட்டு ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக அறிவித்து இருக்கிறது. சந்தையில் பேட்டரிக்கு வழங்கப்படும் வாரண்டிகளில் இதுவே அதிகம் ஆகும்.
நேற்று (ஜூலை 28) இயற்கை பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்பட்டதை தொடர்ந்து டொயோட்டா இந்த அறிவிப்பை வெளியிட்டது. புதிய அறிவிப்பு டொயோட்டா செல்ப்-சார்ஜிங் ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக அமைந்து இருக்கிறது.

தற்போது கேம்ரி ஹைப்ரிட் மற்றும் வெல்பயர் மாடல்களை டொயோட்டா விற்பனை செய்து வருகிறது. இரு மாடல்களின் பேட்டரிக்கும் முன்னதாக 1 லட்சம் கிலோமீட்டர் அல்லது மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே வாரண்டி வழங்கப்பட்டது.
புது அறிவிப்பின்படி, இந்த வாரண்டி எட்டு ஆண்டுகள் அல்லது 1.6 லட்சம் கிலோமீட்டர்கள் என அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சலுகை ஆகஸ்ட் 1 ஆம் தேதி அமலுக்கு வருகிறது. முன்னதாக ப்ரியஸ் மற்றும் கேம்ரி போன்ற மாடல்களில் எலெக்ட்ரிக் தொழில்நுட்பத்தை டொயோட்டா அறிமுகம் செய்தது. தற்போது கேம்ரி மற்றும் வெல்பயர் மாடல்களில் ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கின்றன.
ஹூண்டாய் நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் புதிய காம்பேக்ட் மாடலை குறைந்த விலையில் வெளியிட இருக்கிறது.
இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தை மெல்ல சூடுபிடிக்கத் துவங்கி இருக்கிறது. பல்வேறு முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களும் இந்திய சந்தையில் குறைந்த விலை எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் ஹூண்டாய் நிறுவனமும் இந்திய சந்தைக்கென பிரத்யேக எலெக்ட்ரிக் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
புதிய எலெக்ட்ரிக் கார் காம்பேக்ட் மாடல் ஆகும். இது ஏற்கனவே விற்பனை செய்யப்படும் கோனா இ.வி. மாடலின் கீழ் நிலைநிறுத்தப்பட இருக்கிறது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் புது எலெக்ட்ரிக் மாடலை அறிமுகம் செய்ய ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

'எலெக்ட்ரிக் சந்தையின் பெருவாரியான பங்குகளை குறிவைக்கும் நோக்கில் புதிய எலெக்ட்ரிக் காரை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இந்திய சந்தைக்கு ஏற்ற எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய இருக்கிறோம்.'
'இந்த எலெக்ட்ரிக் மாடல் அதிக ரேன்ஜ், குறைந்த விலை, விற்பனையாளர்கள் மற்றும் சார்ஜிங் உள்கட்டமைப்பு என பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் வகையில் இருக்கும். இதுகுறித்த பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது,' என ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் விளம்பரம், விற்பனை மற்றும் சர்வீஸ் பிரிவு இயக்குனர் தருன் கார்க் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
லம்போர்கினி நிறுவனம் உருஸ் மாடலின் புது வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
லம்போர்கினி இந்தியா நிறுவனம் தனது சூப்பர்-பாஸ்ட் உருஸ் எஸ்.யு.வி. மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. 2018 ஆம் ஆண்டு அறிமுகமான லம்போர்கினி உருஸ் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் உருஸ் பியல் கேப்சூல் எடிஷனை லம்போர்கினி அறிமுகம் செய்தது.

தற்போது உருஸ் மாடலின் கிராபைட் கேப்சூல் எடிஷனை லம்போர்கினி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடல் அதிக பிராகசமான பெயின்டிங், உள்புறம் புதிய நிற ஆப்ஷன்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.
ஆடம்பரம் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார் மாடல்களுக்கான வரவேற்பு இந்தியாவில் அதிகரிக்கலாம் என லம்போர்கினி எதிர்பார்க்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு விற்பனைக்கு லம்போர்கினி நிர்ணயித்த இலக்கில் 50 சதவீதத்தை கடந்துவிட்டது. இத்துடன் 2024 வாக்கில் மூன்று மாடல்களின் எலெக்ட்ரிக் வேரியண்டை லம்போர்கினி அறிமுகம் செய்ய இருக்கிறது.
ஹோண்டா நிறுவனத்தின் 2022 அமேஸ் பேஸ்லிப்ட் மாடல் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஹோண்டா நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட விற்பனை மையங்களில் அமேஸ் பேஸ்லிப்ட் மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிகாரப்பூர்வ முன்பதிவு குறித்து ஹோண்டா இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை. எனினும், சில விற்பனை மையங்கள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் முன்பதிவை மேற்கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய சந்தையில் ஹோண்டா அமேஸ் பேஸ்லிப்ட் மாடல் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. முன்னதாக இரண்டாம் தலைமுறை அமேஸ் மாடல் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது. புதிய அமேஸ் பேஸ்லிப்ட் மாடல் இரண்டாம் தலைமுறை ப்ரியோ பிளாட்பார்மில் உருவாகி வருகிறது.

2022 அமேஸ் பேஸ்லிப்ட் மாடலில் புதிய எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், ட்வீக் செய்யப்பட்ட கிரில், பம்ப்பர், புதிய அலாய் வீல்கள் வழங்கப்படும் என தெரிகிறது. மேலும் இதன் பின்புறமும் சில மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய நிறங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது.
புதிய ஹோண்டா அமேஸ் பேஸ்லிப்ட் மாடல் இரண்டு வித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்றும் இதன் விலை ரூ. 6.57 லட்சத்தில் துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விற்பனை செய்யப்படும் அமேஸ் பேஸ்லிப்ட் மாடல் விலை ரூ. 6.22 லட்சத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.99 லட்சம் ஆகும்.
வோக்ஸ்வேகன் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய டைகுன் மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
வோக்ஸ்வேகன் நிறுவனம் டைகுன் எஸ்.யு.வி. மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய டைகுன் மாடல் செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

டைகுன் எஸ்.யு.வி. மாடலுக்கான முன்பதிவு ஆகஸ்ட் மாதம் துவங்கும் என வோக்ஸ்வேகன் இந்தியா நிர்வாக இயக்குனர் அசிஷ் குப்தா தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். டைகுன் மாடல் பல்வேறு வேரியண்ட்கள், பலவித என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்தியாவில் புதிய டைகுன் மாடலின் விலை ரூ. 12 லட்சத்தில் துவங்கும் என தெரிகிறது.
புதிய வோக்ஸ்வேகன் டைகுன் மாடல் MQB பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இந்த காரில் இந்திய பயனர்கள் மற்றும் இந்திய சாலைக்கு ஏற்ற வகையில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. வோக்ஸ்வேகன் டைகுன் மாடல் 1 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 108 பி.ஹெச்.பி. பவர், 175 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 148 பி.ஹெச்.பி. பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகின்றன.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய ஸ்கூட்டர் மாடல் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது.
இந்திய சந்தையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சில தினங்களுக்கு முன் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவை ஓலா எலெக்ட்ரிக் துவங்கியது. முன்பதிவு துவங்கிய 24 மணி நேரத்தில் இந்த ஸ்கூட்டரை வாங்க சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து இந்த ஸ்கூட்டர் பற்றிய விவரங்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்த வரிசையில் தற்போது ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பத்துவித நிறங்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. இந்த தகவல் ஓலா எலெக்ட்ரிக் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அதிக நிறங்கள், எல்.இ.டி. லைட்டிங், அசத்தலான தோற்றம் என பல்வேறு அம்சங்கள் இருப்பதால் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது. மேலும் இந்த ஸ்கூட்டரை சார்ஜ் செய்ய பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. பாஸ்ட் சார்ஜிங் பயன்படுத்தும் பட்சத்தில் இந்த ஸ்கூட்டரை 0 முதல் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 18 நிமிடங்களே ஆகும் என தெரிகிறது.
இந்தியாவில் ரெனால்ட் நிறுவனத்தின் டஸ்டர் மாடல் உற்பத்தி நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரெனால்ட் டஸ்டர் மாடல் விற்பனை நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. டஸ்டர் மிட்-சைஸ் எஸ்.யு.வி. மாடல் உற்பத்தி இந்தியாவில் நிறுத்தப்பட்டு புதிய தலைமுறை டஸ்டர் மாடல் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்திய சந்தையின் மிட்-சைஸ் எஸ்.யு.வி. பிரிவில் டஸ்டர் மாடல் 2012 வாக்கில் களமிறங்கியது.
அறிமுகமானது முதல் இந்திய சந்தையில் புதிய டஸ்டர் மாடல் அமோக வரவேற்பை பெற்றது. பின் பல்வேறு புது மாடல்கள் அறிமுகமாவது, புது அப்டேட்களை பெறுவது போன்ற காரணங்களால் டஸ்டர் விற்பனை சரிய துவங்கியது. பி.எஸ். 6 அப்டேட் செய்யப்பட்டதும் டஸ்டர் மாடலில் டீசல் என்ஜின் மற்றும் AWD வேரியண்ட் விற்பனையை ரெனால்ட் நிறுத்தியது.

அந்த வரிசையில், தற்போது விற்பனை செய்யப்படும் டஸ்டர் மாடல் உற்பத்தியை அக்டோபர் 2021 மாதத்தில் நிறுத்த ரெனால்ட் திட்டமிட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட டஸ்டர் மாடல் அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.
புதிய தலைமுறை டஸ்டர் மாடலில் பல்வேறு புது அம்சங்கள் வழங்கப்படும் என்றும் இந்த மாடல் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. தற்போதைய டஸ்டர் மாடல் 1.5 லிட்டர் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த என்ஜின்கள் முறையே 154 பி.ஹெச்.பி. பவர், 105 பி.ஹெச்.பி. பவர் வழங்குகின்றன.
டாடா நெக்சான் இவி மாடல் இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் 71 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் அதிகம் விற்பனையாகி இருக்கிறது. ஜூன் 2021 மாதத்தில் நெக்சான் இ.வி. மாடல் 650 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இது முந்தைய மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது 33.7 சதவீதம் அதிகம் ஆகும்.
இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் நெக்சான் இவி மட்டும் 71 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. 2021 மே மாதத்தில் எம்.ஜி. இசட்.எஸ். 102 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. இதைத் தொடர்ந்து எம்.ஜி. இசட்.எஸ். இவி மாடல் 250 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இந்த கார் 27.3 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது.

டாடா டிகோர் இவி மற்றும் ஹூண்டாய் கோனா இவி மாடல்கள் முறையே 8 மற்றும் 7 யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகமானது முதல் நெக்சான் இ.வி. மாடல் இதுவரை 5500 யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. நெக்சான் இவி மாடலில் 30.2kWh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த எலெக்ட்ரிக் மோட்டார் 127 பி.ஹெச்.பி. பவர், 245 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் ஆட்டோமேடிக் டிரான்ஸ்ஷன் வழங்கப்படுகிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் தனது எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் விலையை உயர்த்தி இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது EQC எலெக்ட்ரிக் மாடல் விலையை ரூ. 4.7 லட்சம் வரை உயர்த்தி இருக்கிறது. அதன்படி மெர்சிடிஸ் பென்ஸ் EQC துவக்க விலை ரூ. 1.04 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என மாறி இருக்கிறது.

செப்டம்பர் மாத வாக்கில் மெர்சிடிஸ் பென்ஸ் EQC இரண்டாம் கட்ட யூனிட்கள் கொண்டுவரப்பட இருக்கின்றன. முன்னதாக இந்த மாடலுக்கான முன்பதிவு மார்ச் மாத வாக்கில் துவங்கியது. இவற்றின் வினியோகம் அடுத்த சில மாதங்களில் துவங்கும் என தெரிகிறது. பென்ஸ் EQC மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 471 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் EQC மாடல் 405 பி.ஹெச்.பி. பவர், 765 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 5.1 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு 180 கிலோமீட்டரில் செல்லும்படி கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரில் பாஸ்ட் சார்ஜிங் வசதி இருப்பதால் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 40 நிமிடங்களே ஆகும்.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது கே.டி.எம். 250 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் விற்பனையை அதிகப்படுத்த புது திட்டம் தீட்டி இருக்கிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கே.டி.எம். 250 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் மாடலுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது. அதன்படி இந்த மோட்டார்சைக்கிள் விலை ரூ. 25 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது. விலை குறைப்பு ஜூலை 14இல் துவங்கி ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.

புதிய சலுகை மூலம் 250 அட்வென்ச்சர் மாடல் விற்பனையை அதிகப்படுத்த பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டு இருக்கிறது. கே.டி.எம். 250 அட்வென்ச்சர் மாடலில் 248சிசி DOHC 4-வால்வு ஒற்றை சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த என்ஜின் 30 பி.எஸ். பவர், 24 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் பவர் அசிஸ்ட் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்ப்படுகிறது. இத்துடன் WP APEX சஸ்பென்ஷன் கிட், போஷ் நிறுவனத்தின் ஏ.பி.எஸ். சிஸ்டம் போன்ற அம்சங்கள் உள்ளது.
டெல்லா சைபர்டிரக் கதவுகளில் கைப்பிடி இருக்காது என எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார்.
எலெக்ட்ரிக் பிக்-அப் டிரக் மாடலான சைபர்டிரக் சர்வதேச சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் உள்ள தொழில்நுட்பம் மற்றும் புதுவித அம்சங்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.
அந்த வரிசையில், 'டெஸ்லா சைபர்டிரக் மாடலில் கைப்பிடிகள் இருக்காது. அது வாகன உரிமையாளரை கண்டறிந்து கதவுகளை தானாக திறக்கும்,' என டெஸ்லா தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார்.

2019 நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது முதல் டெஸ்லா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடலாக சைபர்டிரக் இருக்கிறது. சைபர்டிரக் மாடல் டெக்சாஸ் நகரில் உள்ள டெஸ்லா ஜிகாபேக்டரியில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஸ்போர்ட்ஸ் கார் மாடலுக்கு இணையான திறன் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சவுகரியத்தை வழங்கும் அதிநவீன தொழில்நுட்பங்களை சைபர்டிரக் கொண்டிருக்கிறது.
சைபர்டிரக் உற்பத்தி வடிவம் முன்னதாக காட்சிப்படுத்தப்பட்ட மாடலை விட சற்றே வேறுப்பட்டு இருக்கும். மேலும் இந்த மாடலில் 4-வீல் டிரைவ் வசதி வழங்கப்பட்டு இருப்பதால் குறுகிய வளைவுகளை எளிதில் கடக்க முடியும். டெஸ்லா சைபர்டிரக் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 6.5 நொடிகளில் எட்டிவிடும்.
மாருதி சுசுகி நிறுவனத்தின் புது உற்பத்தி ஆலை மிகப் பெரும் முதலீட்டில் உருவாகி வருகிறது.
மாருதி சுசுகி நிறுவனம் ஹரியானாவில் புது உற்பத்தி ஆலையை கட்டமைக்க திட்டமிட்டு உள்ளது. இந்த உற்பத்தி ஆலையை உருவாக்க மாருதி சுசுகி நிறுவனம் ரூ. 18 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது. இந்த ஆலையில் ஆண்டிற்கு 7.5 லட்சம் முதல் 10 லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்ய முடியும்.
குருகிராமில் இயங்கி வரும் மாருதி ஆலையை இடமாற்றம் செய்ய வேண்டிய கட்டாயத்தால், புது ஆலை உருவாகிறது. 300 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வரும் குருகிராம் உற்பத்தி ஆலை அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட காரணமாகி இருக்கிறது. இது மாருதி சுசுகி நிறுவனத்தின் முதல் உற்பத்தி ஆலை ஆகும். இந்த ஆலையில் இருந்தே மாருதி 800 முதல் மாடலாக வெளியானது.

குருகிராம் உற்பத்தி ஆலை 1983 முதல் செயல்பட்டு வருகிறது. இத்தனை ஆண்டுகளில் இப்பகுதி கணிசமான வளர்ச்சி பெற்று தற்போது அதிக நெரிசல் மிகுந்த நகரமாக மாறி இருக்கிறது. இதனால் இப்பகுதியில் உதிரி பாகங்களை எடுத்து செல்வது மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களை ஆலையில் இருந்து வெளியே கொண்டு வருவது போன்ற செயல்பாடுகள் கடுமையாகி இருக்கின்றன.
மேலும் இப்பகுதியில் வாழும் மக்களுக்கு இந்த ஆலை தொந்தரவாக இருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் நினைக்கின்றனர். இந்த ஆலையில் தற்போது ஆல்டோ, வேகன் ஆர் போன்ற மாடல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த ஆலை ஆண்டிற்கு 7 லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது.






