என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கத்தை தவறவிட்ட வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்று வெண்கல பதக்கத்தை நூலிழையில் தவறவிட்ட இந்திய வீரர்களுக்கு தனது பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலான அல்ட்ராஸ் காரை பரிசாக வழங்குகிறது. இதற்கான அறிவிப்பை டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் வெளியிட்டது.

     டாடா அல்ட்ரோஸ்

    "இந்த வீரர்கள் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பங்கேற்று, பல்வேறு இளம் வீரர்கள் தங்கள் வழியை பின்பற்ற  ஊக்கம் கொடுத்துள்ளனர். இவர்களின் திறமையை அங்கீகரிக்கும் வகையிலும், இவர்களது கடின உழைப்பு மற்றும் அர்பணிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அல்ட்ராஸ் மாடலின் தங்க நிற வேரியண்டை வழங்குகிறோம்."

    "உலகளவில் அதீத திறன் பெற்ற வீரர்களை எதிர்த்து விளையாடிய நம் நாட்டு வீரர்கள் நூலிழையில் பதக்கத்தை தவறவிட்டாலும், ஒட்டுமொத்த இந்தியர்களின் இதயங்களை வென்று மேலும் பல தடகள வீரர்கள் உருவாக உத்வேகத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர்" என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் ஸ்கூட்டர் மாடலின் புது விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சில தினங்களில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஸ்கூட்டரின் பெரும்பாலான அம்சங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டன. மேலும் இதற்கான முன்பதிவும் துவங்கி நடைபெற்று வருகிறது.

    உலகிலேயே அதிகளவு முன்பதிவு செய்யப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், ஓலா ஸ்கூட்டர் தான் என அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது. வெளியீட்டுக்கு முன் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

     ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    அதன்படி ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.4kWh பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தை 4.5 நொடிகளில் எட்டிவிடும் என்றும் மணிக்கு அதிகபட்சம் 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்றும் கூறப்படுகிறது.

    மஹிந்திரா நிறுவனத்தின் கார் மாடல்களுக்கு இந்திய சந்தையில் அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.


    மஹிந்திரா நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட விற்பனையாளர்கள் மஹிந்திரா கார்களுக்கு இந்திய சந்தையில் அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கின்றனர். இவை ஆகஸ்ட் மாதம் முழுக்க வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகள் தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் இலவச அக்சஸரீக்கள் வாயிலாக வழங்கப்படுகின்றன.

    மஹிந்திரா XUV500 மாடலுக்கு ரூ. 50 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 6500 கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன. ஸ்கார்பியோ வாங்குவோருக்கு ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 4500 கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 17 ஆயிரம் மதிப்புள்ள அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன.

     மஹிந்திரா கார்

    மஹிந்திரா மராசோ வாங்குவோருக்கு ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5200 கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. XUV300 மாடலுக்கு ரூ. 10,480 தள்ளுபடி, ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 4 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன.

    பொலிரோ வாங்குவோருக்கு ரூ. 3500 தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 3 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

    வால்வோ நிறுவனத்தின் XC40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் இந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமாக இருந்தது.


    வால்வோ நிறுவனத்தின் XC40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் கார் இந்திய வெளியீடு தாமதமாகி இருக்கிறது. கார் உற்பத்திக்கு அத்தியாவசிய உதிரிபாகங்களில் ஒன்றாக செமிகண்டக்டர் இருக்கிறது. இதற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால், இந்த எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகமாகிறது. 

     வால்வோ XC40 ரீசார்ஜ்

    இதன் காரணமாக இந்த மாடலுக்கான முன்பதிவும் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. முந்தைய தகவல்களின்படி வால்வோ XC40 ரீசார்ஜ் இந்த ஆண்டே இந்திய சந்தையில் அறிமுகமாகும் என கூறப்பட்டது. தற்போது உலகம் முழுக்க செமிகண்டக்டர் பாகத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பல்வேறு வாகன உற்பத்தியாளர்களும் வாகன வெளியீட்டில் மாற்றங்களை செய்து வருகின்றன.

    சர்வதேச சந்தையில் வால்வோ XC40 ரீசார்ஜ் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் 4 எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக வால்வோ ஏற்கனவே தெரிவித்து இருந்தது.

    டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ராவின் வெற்றியை பெட்ரோல் விற்பனையாளர் ஒருவர் வித்தியாசமாக கொண்டாடி இருக்கிறார்.


    குஜராத் மாநிலத்தின் பருச் பகுதியை சேர்ந்த பெட்ரோல் விற்பனை மையத்தில் இரண்டு நாட்களுக்கு இலவச பெட்ரோல் வழங்கப்பட்டது. இலவச பெட்ரோல் அனைவருக்கும் வழங்காமல், நீரஜ் எனும் பெயர் கொண்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. 

    டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்று அசத்திய நீரஜ் சோப்ராவை பெருமைப்படுத்தும் விதமாக இந்த சலுகையை, பெட்ரோல் விற்பனை மையத்தின் முதலாளி அயுப் பதான் அறிவித்தார். இலவச பெட்ரோல் பெற, வாடிக்கையாளர் தங்களின் பெயர் இடம்பெற்றுள்ள அடையாள சான்றை காண்பிக்க வேண்டும். அடையாள சான்றில் நீரஜ் அல்லது சோப்ரா என இடம்பெற்று இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தது.

     இலவச பெட்ரோல் வழங்கிய பருச் பெட்ரோல் மையம்

    இரண்டு நாட்களுக்கு அறிவிக்கப்பட்ட இந்த சலுகை நேற்று (திங்கள் கிழமை) மாலையுடன் நிறைவுற்றது. இந்த சலுகையில் மொத்தம் 30 பேர் வரை பயனடைந்ததாக அயுப் பதான் தெரிவித்தார். நீரஜ் பெயர் கொண்ட ஒவ்வொருவருக்கும் ரூ. 501 மதிப்புள்ள பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டு உள்ளது.

    டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ராவின் வெற்றியால் ஒட்டுமொத்த நாடும் பெருமை பெற்றுள்ளது. இவரின் வெற்றியை இந்திய குடிமக்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் பலர் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து செய்தி மற்றும் பரிசு அறிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா, நீரஜ் சோப்ராவுக்கு புத்தம் புதிய மஹிந்திரா XUV700 மாடலை பரிசாக வழங்குவதாக அறிவித்தார்.
    மஹிந்திரா நிறுவனத்தின் எஸ்.யு.வி. மாடல்களுக்கென பிரத்யேக லோகோ அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தனது எஸ்.யு.வி. மாடல்களுக்கென புது லோகோவை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த லோகோ முதலில் மஹிந்திரா XUV700 மாடலில் வழங்கப்பட இருக்கிறது. 

     மஹிந்திரா

    "புதிய லோகோ மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்புளோர் தி இம்பாசிபில் (Explore the Impossible) வாக்கியத்தை பரைசாற்றும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய சவால்களை எதிர்கொள்ளும் நோக்கத்தை இந்த லோகோ பிரதிபலிக்கிறது."



    "2022 ஆண்டிற்குள் நாட்டின் 823 நகரங்களில் செயல்பட்டு வரும் 1300 விற்பனை மற்றும் சர்வீஸ் டச்பாயின்ட்களில் புது லோகோ காணப்படும். புதிய சின்னத்தை படிப்படியாக வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க இருக்கிறோம்," என மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோடிவ் பிரிவு தலைமை செயல் அதிகாரி வீஜே நக்ரா தெரிவித்தார்.

    இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகன விற்பனையை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு புது சலுகைகளை அறிவித்து வருகிறது.


    இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை பதிவு செய்வதற்கான கட்டணத்தை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்துள்ளது. இதன் மூலம் இந்தியர்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை அதிகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

     எலெக்ட்ரிக் வாகனம்

    புது அறிவிப்பின்படி பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கு பதிவு சான்று பெறவும், புதுப்பிக்கவும் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் இதை சார்ந்து இயங்கும் தொழிற்சாலைகளுக்கு இந்த அறிவிப்பு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

    இந்தியாவின் சில மாநிலங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பதிவு கட்டணம் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுவிட்டது. தற்போதைய அறிவிப்பின்படி இந்தியா முழுக்க அனைத்து மாநிலங்களிலும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பதிவு கட்டணம் ரத்தாகி இருக்கிறது. இந்த அறிவிப்பு எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக அமைந்து இருக்கிறது.

    ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் நடைபெற இருந்த நியூ யார்க் ஆட்டோ விழா ரத்து செய்யப்படுகிறது.


    கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக 2021 நியூ யார்க் ஆட்டோ விழா ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆண்டும் இதே காரணத்திற்காக நியூ யார்க் ஆட்டோ விழா ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. டெல்டா வேரியண்ட் அச்சம் காரணமாக இந்த ஆண்டிற்கான விழாவையும் ரத்து செய்வதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

     நியூ யார்க் ஆட்டோ விழா

    "அனைத்து அறிகுறிகளும் சாதகமாகவே இருந்தன, விழா இதுவரை இல்லாத அளவு உறுதியாக ஒருங்கிணைந்தது, ஆனால் இன்று கதை முற்றிலும் மாறிவிட்டது" என நியூ யார்க் ஆட்டோ விழா தலைவர் மார்க் ஸ்கெயின்பர்க் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்.

    மக்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க ஆட்டோ விழாவில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் என மன்ஹாட்டன் நகர மற்றும் உள்ளூர் அதிகாரிகள் வழங்கிய விதிமுறைகளும் விழா ரத்து செய்யப்பட காரணிகளாக கூறப்படுகின்றன. இந்த ஆண்டின் நியூ யார்க் ஆட்டோ விழா ஆகஸ்ட் 19 ஆம் தேதி நடைபெற இருந்தது. 
    2022 பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் துவங்க இருந்த இந்தியா ஆட்டோ எக்ஸ்போ விழா புதிய தேதிகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.


    2022 இந்தியா ஆட்டோ எக்ஸ்போ விழா ஒத்திவைக்கப்படுகிறது. கொரோனாவைரஸ் தொற்றின் மூன்றாவது அலை அச்சம் காரணமாக இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் செயல்பட்டு வரும் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஆலோசனை செய்து இந்த முடிவு எடுக்கப்பட்டது என இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சம்மேளனம் தெரிவித்து இருக்கிறது. 

     ஆட்டோ எக்ஸ்போ கோப்புப்படம்

    இந்தியாவில் நடைபெற்று வரும் மிகப்பெரும் ஆட்டோ நிகழ்வுகளில் ஒன்றாக இந்தியா ஆட்டோ எக்ஸ்போ இருக்கிறது. வழக்கமாக இவ்விழாவில் பெரும்பாலானோர் கலந்து கொள்வார்கள். இதுபோன்ற விழாவில் தனி மனித இடைவெளியை கடைப்பிடிப்பது சற்றே சவாலான காரியம் என்பதால், தொற்று பரவும் அபாயம் அதிகம் ஆகும். 

    முந்தைய அறிவிப்பின் படி 2022 இந்தியா ஆட்டோ எக்ஸ்போ விழா 2022 பிப்ரவரி 2 ஆம் தேதி துவங்கி பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெற திட்டமிடப்பட்டது. இவ்விழா கிரேட்டர் நொய்டாவில் நடைபெற இருந்தது. 
    ஸ்கோடா நிறுவனத்தின் குஷக் மாடலின் சக்திவாய்ந்த 1.5 லிட்டர் TSI வேரியண்ட் விரைவில் வினியோகம் செய்யப்பட இருக்கிறது.


    ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் 2021 குஷக் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் முன்பதிவில் 6 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. எனினும், எந்தெந்த வேரியண்ட் மற்றும் டிரான்ஸ்மிஷன் யூனிட்கள் அதிகம் விற்பனையாகி இருக்கின்றன என்ற தகவலை ஸ்கோடா வெளியிடவில்லை.

    இந்திய சந்தையில் ஸ்கோடா குஷக் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் ரூ. 10.50 லட்சம், எக்ஸ்-ஷோரூம் துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. குஷக் எஸ்.யு.வி. 1 லிட்டர் TSI வினியோகம் கடந்த மாதம் துவங்கியது. இதன் சக்திவாய்ந்த வேரியண்டான 1.5 லிட்டர் TSI வினியோகம் இம்மாதம் துவங்கும் என கூறப்படுகிறது.

     ஸ்கோடா குஷக்

    ஜூலை 2021 மாதத்தில் ஸ்கோடா ஆட்டோ இந்திய விற்பனை 234 சதவீதம் அதிகரித்ததாக அந்நிறுவனம் அறிவித்தது. ஜூலை மாதத்தில் மட்டும் 3080 கார்களை ஸ்கோடா விற்பனை செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூலையில் ஸ்கோடா நிறுவனம் 922 கார்களையே விற்பனை செய்து இருந்தது. 

    இந்தியாவில் ஸ்கோடா குஷக் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17.6 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் மொத்தத்தில் ஏழு வேரியண்ட், மூன்று மாடல்களில் கிடைக்கிறது.
    எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் புதிய ஒன் எஸ்.யு.வி. மாடல் அந்நிறுவனத்தின் சிக்மா ஆர்கிடெக்ச்சரில் உருவாகி இருக்கிறது.


    எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது புதிய எஸ்.யு.வி. மாடலான எம்.ஜி. ஒன் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளது. புதிய எம்.ஜி. ஒன் - பபிள் ஆரஞ்சு மற்றும் வைல்டுனஸ் கிரீன் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. எம்ஜி நிறுவனத்தின் அதிநவீன டிசைன் மற்றும் தொழில்நுட்பங்களை வெளிப்படுத்தும் வகையில் புதிய எம்ஜி ஒன் எஸ்.யு.வி. உருவாகி இருக்கிறது.

     எம்ஜி ஒன்

    புதிய ஒன் எஸ்.யு.வி. மாடல் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் சிக்மா ஆர்கிடெக்ச்சரில் உருவாகி இருக்கிறது. இதே பிளாட்பார்மை எலெக்ட்ரிக் பவர்டிரெயின்களிலும் பயன்படுத்த முடியும். புதிய எம்ஜி ஒன் கனெக்டெட் கார் ஆகும். தற்போதைய புகைப்படங்களின் படி எம்ஜி ஒன் ஸ்போர்ட் டிசைன் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

    எம்ஜி ஒன் மாடல் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 170-180 பி.ஹெச்.பி. பவர், 250-260 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்கும் என தெரிகிறது. 

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் பத்து எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கிறது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் இ.வி. மாடல் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் பகுதிகளில் நெக்சான் இ.வி. மாடல் அதன் டீசல் வேரியண்டிற்கு இணையான வரவேற்பை பெற்று வருகிறது. 

    முன்னதாக ஜூன் மாத வாக்கில் நெக்சான் இ.வி. மாடல் 650 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. இத்துடன் 2021 ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் நெக்சான் இ.வி. மொத்தத்தில் 1715 யூனிட்கள் விற்பனையானது. 

     நெக்சான் இ.வி.

    பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக பலர் எலெக்ட்ரிக் மாடல்களை வாங்க துவங்கி இருக்கின்றனர். மேலும் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பேம் 2 திட்டத்தின் கீழ் அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நெக்சான் இ.வி. மாடலுக்கான தட்டுப்பாடு மேலும் அதிகரித்து இருக்கிறது. 

    2025 வாக்கில் இந்திய சந்தையில் பத்து எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டு இருக்கிறது. இத்துடன் சார்ஜிங் சார்ந்த உள்கட்டமைப்புகளில் முதலீடு செய்யவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

    ×