என் மலர்
ஆட்டோ டிப்ஸ்
மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் தனது வாகனங்கள் உற்பத்தி பணிகள் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
மஹிந்திரா நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் ஏழு நாட்களுக்கு வாகனங்கள் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்து இருக்கிறது. ஆட்டோமொபைல் சந்தையில் செமிகண்டக்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட இருக்கின்றன.
செமிகண்டக்டர் சிப்களுக்கான தட்டுப்பாடு காரணமாக உற்பத்தி ஆலைகள் மூடப்படுகின்றன. சந்தையில் செமிகண்டக்டர் தட்டுப்பாடு மேலும் மோசமடையும் என தெரிகிறது. கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அத்தியாவசிய பொருட்களின் உற்பத்தி மட்டுமே நடைபெற்று வந்தது.

ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது முதல் வாகனங்கள் விற்பனை கணிசமாக அதிகரித்து வருகிறது. எனினும், செமிகண்டக்டர் உற்பத்தி தற்போதைய தேவைக்கு ஏற்ப நடைபெறவில்லை. செமிகண்டக்டர் சிப் குறைபாடு காரணமாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளன.
மாருதி சுசுகி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் புது அறிவிப்பு காரணமாக கார் வாங்குவோர் கவலை அடைந்துள்ளனர்.
மாருதி சுசுகி நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் தனது கார் உற்பத்தி பணிகளை 60 சதவீதம் வரை குறைப்பதாக அறிவித்து இருக்கிறது. நாட்டின் முன்னணி பயணிகள் வாகன உற்பத்தியாளரான மாருதி சுசுகி, சந்தையில் நிலவும் சிப்செட் தட்டுப்பாடு காரணமாக உற்பத்தி குறைக்கப்படுவதாக தெரிவித்து உள்ளது.
கடந்த மாதம் சுசுகி மோட்டார் குஜராத் உற்பத்தி ஆலையில், செமிகண்டக்டர் தட்டுப்பாடு காரணமாக சில நாட்கள் உற்பத்தி நிறுத்தப்பட்டது. செப்டம்பரில் ஹரியானா மற்றும் சுசுகி மோட்டார் குஜராத் ஆலைகளிலும் உற்பத்தி குறைக்கப்பட்டு இருக்கிறது.

ஜூன் மாதம் உற்பத்தி பணிகள் முழுவீச்சில் நடைபெற்ற போது, மாருதி நிறுவனம் 1,70,719 யூனிட்களை உற்பத்தி செய்து இருந்தது. செப்டம்பரில் மாருதி நிறுவனம் 68 ஆயிரம் யூனிட்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டு உள்ளது. பண்டிகை காலக்கட்டத்தில் இதுபோன்ற சூழல் சந்தையில் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
டாடா நிறுவனத்தின் நெக்சான் இ.வி. கார் டார்க் எடிஷன் மாடல் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்சான் இ.வி. மாடலின் விலையை இந்தியாவில் மூன்றாவது முறையாக உயர்த்தி இருக்கிறது. இந்தியாவில் நெக்சான் எலெக்ட்ரிக் கார் ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது. நெக்சான் இ.வி. பேஸ் வேரியண்ட் மற்றும் டார்க் ரேன்ஜ் வேரியண்ட்களின் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
நெக்சான் இ.வி. மற்ற வேரியண்ட்களின் விலை ரூ. 9 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. விலை உயர்வின் படி நெக்சான் இ.வி. மிட்-ரேன்ஜ் வேரியண்ட் விலை ரூ. 15.65 லட்சம் என்றும் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 16.65 லட்சம் என்றும் மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்தியாவில் டாடா நெக்சான் இ.வி. மாடல் மாதாந்திர சந்தா அடிப்படையிலும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. மாதாந்திர சந்தா விலை ரூ. 29,500 முதல் துவங்குகிறது.
இந்தியாவில் கார்களின் விற்பனை விலை விரைவில் குறைக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றாக வரி குறைப்பு இருந்து வருகிறது. விரைவில் இந்த கோரிக்கைக்கு ஒன்றிய அரசு செவி சாய்க்கும் என தகவல் வெளியாகி உள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி குறைப்பு காரணமாக ஏற்படும் விளைவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயார் என வருவாய் அதிகாரி ஒருவர் தெரிவித்து இருக்கிறார்.
தற்போது இருசக்கர வாகனங்கள், கார் மற்றும் டிரக் உள்ளிட்டவைகளுக்கு இந்தியாவில் 28 சதவீதம் வரி வசூல் செய்யப்படுகிறது. இத்துடன் பல்வேறு மாநில வரி சேர்த்து வாகனங்கள் விலை மேலும் அதிகமாகும். இதன் காரணமாக வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை குறைக்க ஆட்டோமொபைல் துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

உலகின் மிகப்பெரும் ஆட்டோமொபைல் சந்தைகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. எனினும், நூற்றில் எத்தனை பேர் வாகனம் வைத்திருக்கின்றனர் என்ற எண்ணிக்கையில் மேற்கத்திய நாடுகள் மற்றும் சீனாவுடன் ஒப்பிடும் போது குறைவாகவே இருக்கிறது.
வோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
வோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் டைகுன் எஸ்.யு.வி. மாடலை செப்டம்பர் 23 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. புதிய டைகுன் மாடல் விலை இந்திய சந்தையில் கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
வோக்ஸ்வேகன் இந்தியாவின் எஸ்.யு.வி.டபிள்யூ. பிரிவில் அறிமுகமாகும் முதல் மாடலாக டைகுன் வெளியாகிறது. இந்த மாடல் இந்திய சந்தையின் மிட்-சைஸ் எஸ்.யு.வி. பிரிவில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் எம்.கியூ.பி. ஏ.ஒ. ஐ.இ. பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது.

புதிய டைகுன் மாடலில் 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. பெட்ரோல் யூனிட் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 148 பி.ஹெச்.பி. பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இதன் 1 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் 113 பி.ஹெச்.பி. பவர், 175 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் புதிய எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகமாக இருக்கின்றன.
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். மேலும் பல்வேறு முன்னணி வாகன உற்பத்தியாளர்கள், எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய துவங்கி உள்ளனர்.
ஏற்கனவே டாடா நெக்சான் இ.வி. துவங்கி மெர்சிடிஸ் பென்ஸ் இ.கியூ.சி. என பல்வேறு எலெக்ட்ரிக் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன. இதுதவிர பல்வேறு இதர எலெக்ட்ரிக் மாடல்கள் இந்தியாவில் அறிமுகமாக இருக்கின்றன. அந்த வகையில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கும் புது எலெக்ட்ரிக் மாடல்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.
டாடா அல்ட்ரோஸ் இ.வி. - 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த எலெக்ட்ரிக் மாடல் அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அல்ட்ரோஸ் இ.வி. மாடலில் நெக்சான் இ.வி.-யில் வழங்கப்பட்டதைவிட 40 சதவீதம் பெரிய பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
மஹிந்திரா இ.கே.யு.வி.100 - இந்திய சந்தையில் குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை இந்த மாடல் பெறும் என கூறப்படுகிறது. இதில் வழங்கப்படும் பேட்டரி, முழு சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிகிறது.

டெஸ்லா மாடல் 3 - அமெரிக்க எலெக்ட்ரிக் கார் உற்பத்தியாளரின் மாடல் 3 இந்தியாவில் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் வரை செல்லும். இதன் விலை ரூ. 55 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
ஹூண்டாய் இ.வி. - ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் வெளியிட பிரத்யேக எலெக்ட்ரிக் காரை உருவாக்கி வருகிறது. இந்த எலெக்ட்ரிக் மாடல் விலை குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
டாடா டிகோர் இ.வி. - டாடாவின் டிகோர் இ.வி. மாடல் சிப்டிரான் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இதன் விவரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், விலை அடுத்த வாரம் அறிவிக்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் கார் 170 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் விரைவில் இந்தியாவில் வெளியாக இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டிகோர் இ.வி. எலெக்ட்ரிக் கார் விவரங்களை சமீபத்தில் வெளியிட்டது. வெளியீட்டை தொடர்ந்து டிகோர் இ.வி. மாடல் தற்போது விற்பனையகம் வரத்துவங்கி இருக்கிறது. அடுத்த வாரம் டிகோர் இ.வி. மாடலின் விலை அறிவிக்கப்பட இருக்கிறது.
டாடாவின் புதிய டிகோர் இ.வி. மாடலில் சிப்டிரான் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. சிப்டிரான் தொழில்நுட்பம் பயன்படுத்தும் இரண்டாவது கார் டிகோர் இ.வி. ஆகும். மேலும் இதில் உள்ள சிப்டிரான் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

மேம்பட்ட சிப்டிரான் தொழில்நுட்பம் கொண்ட புதிய டிகோர் இ.வி. மாடலில் 55 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார், 26kWh லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இவை 170 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகின்றன.
டிகோர் இ.வி. காரை முழுமையாக சார்ஜ் செய்ய 8.5 மணி நேரம் ஆகும். பாஸ்ட் சார்ஜிங் பயன்படுத்தினால் 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 1 மணி நேரம் ஆகும். இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 250 கிலோமீட்டர் வரை செல்லும்.
முன்னதாக டாடா டிகோர் இ.வி. முன்பதிவு துவங்கியது. இந்தியாவில் டிகோர் இ.வி. மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் ஆகும்.
டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது 300சிசி மாடலை இந்தியாவில் மேம்படுத்த இருக்கிறது.
டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் 2021 அபாச்சி ஆர்.ஆர்.310 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக இந்த மாடல் இந்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகமாக இருந்தது. எனினும், கொரோனா பெருந்தொற்று காரணமாக இதன் வெளியீடு தாமதமானது.
இந்திய சந்தையில் டி.வி.எஸ். அபாச்சி ஆர்.ஆர்.310 மாடல் 2017 டிசம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. பின் 2019 மே மாத வாக்கில் இந்த மாடல் மேம்படுத்தட்டு ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் புதிய நிறங்களில் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து 2020 ஜனவரியில் இதன் என்ஜின் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் மாற்றப்பட்டது.

இந்த வரிசையில் 2021 அபாச்சி ஆர்.ஆர்.310 மாடல் இந்தியாவில் அறிமுகமாகிறது. புதிய 2021 டி.வி.எஸ். அபாச்சி ஆர்.ஆர்.310 மாடலில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன்புற சஸ்பென்ஷன், டி.வி.எஸ். யூரோக்ரிப் ப்ரோடார்க் எக்ஸ்டிரீம் ரப்பர் டையர்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
டெஸ்லா நிறுவனத்தின் மாடல் 3 எலெக்ட்ரிக் கார் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெஸ்லா நிறுவனத்தின் மாடல் 3 விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என தெரிகிறது. முன்னதாக பலமுறை மாடல் 3 எலெக்ட்ரிக் கார் இந்திய சாலைகளில் பரிசோதனை செய்யப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
சமீபத்தில் முழுமையாக மறைக்கப்பட்ட டெஸ்லா மாடல் 3 மும்பை நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன விற்பனையை டெஸ்லா இன்னும் துவங்கவில்லை. எனினும், டெஸ்லா இந்தியா மோட்டார்ஸ் பெயரில் கர்நாடக மாநிலத்தில் நிறுவனம் பதிவு செய்யப்பட்டுவிட்டது.

இத்துடன் பெங்களூரு நகரில் ஆய்வு மற்றும் உற்பத்தி மையத்தை கட்டமைக்கும் பணிகளில் டெஸ்லா ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி டெஸ்லாவின் முதல் உற்பத்தி ஆலை கேரளா அல்லது மகாராஷ்டிரா மாநிலத்தில் கட்டமைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஐ20 என் லைன் மாடல் சில வாரங்களில் விற்பனைக்கு வர இருக்கிறது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் என் லைன் சீரிஸ் இந்திய வெளியீட்டை சமீபத்தில் உறுதிப்படுத்தியது. இந்த மாடல் ஆகஸ்ட் 24 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அடுத்த வாரம் அறிமுகமாகும் நிலையில், இதன் விற்பனை சில வாரங்களில் துவங்குகிறது.
ஐ20 என் லைன் மட்டுமின்றி வரும் ஆண்டுகளில் மேலும் சில என் லைன் மாடல்களை அறிமுகம் செய்ய ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தோற்றத்தில் புதிய ஐ20 என் லைன் மாடல் தற்போது சர்வதேச சந்தையில் விற்பனையாகும் மாடலை விட சற்றே வித்தியாசமாக இருக்கும் என தெரிகிறது. இந்த மாடல் கேஸ்கேடிங் கிரில், என் லைன் லோகோ, என் லைன் சார்ந்த ஸ்டைலிங் கொண்டிருக்கிறது.
ஹூண்டாய் ஐ20 என் லைன் மாடலில் 1 லிட்டர் டர்போ ஜி.டி.ஐ. என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 118 பி.ஹெச்.பி. திறன், 172 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இருசக்கர வாகன விற்பனையில் புது சாதனையை படைத்து இருக்கிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஹோண்டாவுடன் அமைத்திருந்த கூட்டணியை பிரிந்து தனி நிறுவனமாக மாறி 10-வது ஆண்டு விழாவை சமீபத்தில் கொண்டாடியது. கொண்டாட்டத்தின் அங்கமாக ஹீரோ நிறுவனம் உலகின் மிகப் பெரும் மோட்டார்சைக்கிள் லோகோவை உருவாக்கியது. இந்த முயற்சிக்கு கின்னஸ் சாதனை கிடைத்தது.
உலகின் பெரும் லோகோவை உருவாக்க ஹீரோ நிறுவனம் 1845 ஸ்பிலென்டர் மோட்டார்சைக்கிள்களை பயன்படுத்தியது. ஆந்திர பிரதேச மாநிலத்தின் சித்தூர் பகுதியில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் ஆலையில் இந்த சாதனை படைக்கப்பட்டது.

கின்னஸ் சாதனையை தொடர்ந்து ஹீரோ மோட்டோகார்ப் மற்றொரு சாதனையை படைத்து இருக்கிறது. எவ்வித திட்டமும் இன்றி ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் அதிக மோட்டார்சைக்கிள் யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. உலகளாவிய விற்பனையில் இந்த சாதனை படைக்கப்பட்டு இருக்கிறது.
என்ட்ரி லெவல் துவங்கி பிரீமியம் மோட்டார்சைக்கிள் வரை அனைத்து வகையான மாடல்களும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதாலேயே இந்த சாதனை சாத்தியமானது என ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது.
சென்னையை சேர்ந்த வினாடா ஏரோமொபிலிட்டி நிறுவனம் உலகின் மிகப்பெரிய கண்காட்சியில் ஹைப்ரிட் பறக்கும் காரை அறிமுகம் செய்கிறது.
பறக்கும் கார்களை உற்பத்தி செய்யும் பணிகளில் உலகின் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. போக்குவரத்து துறையில் பறக்கும் கார் தொழில்நுட்பம் பெரும் புரட்சியை ஏற்படுத்தலாம் என கருதப்படுகிறது. பறக்கும் கார் துறையில் சென்னையை சேர்ந்த வினாடா ஏரோமொபிலிட்டி நிறுவனம் புது மைல்கல் எட்ட திட்டமிட்டுள்ளது.
தானியங்கி முறையில் செயல்படும் ஹைப்ரிட் பறக்கும் கார் மாடலை வினாடா ஏரோமொபிலிட்டி நிறுவனம் அக்டோபர் 5 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. இந்த மாடல் லண்டனில் நடைபெற இருக்கும் உலகின் மிகப்பெரும் ஹெலிடெக் பொருட்காட்சியில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது ஆசியாவில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் ஹைப்ரிட் பறக்கும் கார் மாடல் ஆகும்.

இரண்டு இருக்கைகளை கொண்டிருக்கும் பறக்கும் கார் இயற்கை எரிவாயு மற்றும் மின்திறன் கொண்டு இயங்குகிறது. ஹைப்ரிட் பறக்கும் கார் 1100 கிலோ எடை கொண்டுள்ளது. இந்த பறக்கும் கார் 1300 கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
இந்த ஹைப்ரிட் பறக்கும் கார் 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 120 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டுள்ளது. இந்த பறக்கும் கார், 3 ஆயிரம் அடி உயரத்தில் தொடர்ச்சியாக 60 நிமிடங்கள் வரை செல்லும்.






