என் மலர்
ஆட்டோ டிப்ஸ்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பயணிகள் வாகன மாடல்களின் விலையை அடுத்த மாதம் மாற்றியமைக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பயணிகள் வாகனங்களின் விலை உயர்த்தப்பட இருப்பதாக அறிவித்து இருக்கிறது. விலை உயர்வு ஜனவரி 2022 முதல் அமலுக்கு வருகிறது. தொடர்ந்து செலவீனங்கள் அதிகரித்து வருவதை காரணம் காட்டி டாடா மோட்டார்ஸ் கார் மாடல்கள் விலையை உயர்த்துகிறது.
பயணிகள் வாகனங்கள் பிரிவில் டாடா மோட்டார்ஸ் தற்போது நெக்சான், ஹேரியர், சபாரி, அல்ட்ரோஸ், டிகோர் மற்றும் டியாகோ போன்ற மாடல்களும், எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் நெக்சான் இ.வி. மற்றும் டிகோர் இ.வி. போன்ற மாடல்களும் விற்பனை செய்யப்படுகிறது.

'உதிரி பாகங்கள், இதர பொருட்கள் மற்றும் செலவீனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஜனவரி 2022 முதல் கார்களின் விலையை உயர்த்தும் நிலைக்கு நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது,' என டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன வியாபார பிரிவு தலைவர் சைலேஷ் சந்திரா தெரிவித்தார்.
ஹூண்டாய் நிறுவனம் உருவாக்கி வரும் பறக்கும் கார் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
பறக்கும் கார் மாடல்களை உருவாக்கும் பணிகளில் உலகின் பல்வேறு நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன. சில நிறுவனங்கள் தங்களின் ப்ரோடோடைப் மாடல்களையும் ஏற்கனவே அறிமுகம் செய்து, சில விவரங்களையும் வெளியிட்டுள்ளன.
அந்த வரிசையில் ஹூண்டாய் தனது பறக்கும் கார் கான்செப்ட் மாடலை கடந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்தது. இந்த மாடல் 2028 வாக்கில் வர்த்தக ரீதியில் பயன்பாட்டுக்கு கொண்டுவர ஹூண்டாய் திட்டமிட்டு வருகிறது.

ஐரோப்பாவுக்கான ஹூண்டாய் மூத்த அதிகாரி மைக்கேல் கோல் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், பறக்கும் கார்கள் தான் எதிர்காலம் என நம்புகிறோம். இந்த தசாப்தம் முடிவதற்குள் ஹூண்டாய் பறக்கும் கார் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம்.
மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலான பலேனோ இந்திய விற்பனையில் பத்து லட்சம் யூனிட்களை கடந்துள்ளது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல் இந்திய விற்பனையில் பத்து லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. நெக்சா விற்பனையகங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் பலேனோ மாடல் மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரீமியம் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது.
இந்திய சந்தையில் அதிவேகமாக பத்து லட்சம் யூனிட்கள் விற்பனையை கடந்த ஹேட்ச்பேக் மாடல் என்ற பெருமையை மாருதி சுசுகி பலேனோ பெற்று இருக்கிறது. இந்திய சந்தையின் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல்கள் பிரிவில் பலேனோ மாடல் மட்டும் 25 சதவீதத்திற்கும் அதிக பங்குகளை பெற்று இருக்கிறது.

மாருதி சுசுகி பலேனோ மாடல் இந்தியாவில் ஹூண்டாய் ஐ20, டொயோட்டா கிளான்சா, டாடா அல்ட்ரோஸ் மற்றும் ஹோண்டா ஜாஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இந்தியாவில் பலேனோ மாடல் 2015 ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ஒரே வருடத்தில் இந்த கார் ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனையை கடந்தது.
ரெனால்ட் நிறுவனத்தின் கார் மாடல்களுக்கு இந்தியாவில் அசத்தலான சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் ஊரக தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகின்றன.
ரெனால்ட் டிரைபர் pre-MY2021 மற்றும் MY2021 என இருவிதங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் pre-MY2021 மாடலுக்கு ரூ. 60 ஆயிரம் வரையிலான சலுகைகளும் MY2021 மாடலுக்கு ரூ. 45 ஆயிரம் வரையிலான சலுகைகளும் வழங்கப்படுகிறது.

ரெனால்ட் டஸ்டர் மாடலுக்கு ரூ. 1.30 லட்சம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் விவசாயிகள், கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு ரூ. 15 ஆயிரம் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரெனால்ட் க்விட் மாடலுக்கு ரூ. 35 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.
புதிய கைகர் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலுக்கு ரூ. 25 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் சிறப்பு சலுகைகள் டிசம்பர் 31 வரை வழங்கப்பட இருக்கின்றன.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய 650 சீரிஸ் மோட்டார்சைக்கிள் மாடல்கள் நிமிடங்களில் விற்றுத்தீர்ந்தன.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 650 ட்வின்ஸ் ஆனிவர்சரி எடிஷன் மோட்டார்சைக்கிள் விற்பனை துவங்கிய 120 நொடிகளில் விற்றுத்தீர்ந்தது. இந்த விற்பனையில் மொத்தம் 120 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டன. மிலனில் நடைபெற்ற இ.ஐ.சி.எம்.ஏ. 2021 விழாவில் ராயல் என்பீல்டு 650 ட்வின் ஆனிவர்சரி எடிஷன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
சர்வதேச சந்தையில் மொத்தம் 480 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுவதாக ராயல் என்பீல்டு அறிவித்தது. இவற்றில் 120 யூனிட்கள் இந்தியாவுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு, விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. எனினும், விற்பனை துவங்கிய நொடிகளிலேயே 120 யூனிட்களும் விற்றுத்தீர்ந்ததாக ராயல் என்பீல்டு அறிவித்து இருக்கிறது.

லிமிடெட் எடிஷன் ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் ஆனிவர்சரி எடிஷன் மாடல்களில் ரிச் பிளாக் குரோம் பெயிண்டிங் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 120 ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்டது. ஸ்பெஷல் எடிஷன் மாடல்களில் பிரத்யேக பிளாக்டு-அவுட் ராயல் என்பீல்டு அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் வினியோக தேதியை அறிவித்து இருக்கிறது.
ஓலா எஸ்1 சீரிஸ் ஸ்கூட்டர் மாடல்கள் இந்த மாதமே வினியோகம் செய்யப்பட இருப்பதாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மற்றும் இணை நிறுவனர் பாவிஷ் அகர்வால் தெரிவித்தார். புதிய ஸ்கூட்டர் மாடல்கள் டிசம்பர் 15 ஆம் தேதி முதல் வினியோகம் செய்யப்பட இருக்கின்றன.
'ஸ்கூட்டர்கள் தயாராகி வருகின்றன. உற்பத்தி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. டிசம்பர் 15 ஆம் தேதி முதல் வினியோகம் துவங்க இருக்கிறது.' என பாவிஷ் அகர்வால் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

முன்னதாக இந்த ஸ்கூட்டர்கள் அக்டோபர் 25 முதல் நவம்பர் 25 ஆம் தேதிகளுக்குள் வினியோகம் செய்யப்படும் என ஓலா எலெக்ட்ரிக் அறிவித்து இருந்தது. பின் வினியோக பணிகள் திட்டமிட்டப்படி துவங்கவில்லை. இதுகுறித்து ஸ்கூட்டர்களை முன்பதிவு செய்தவர்களுக்கு ஓலா எலெக்ட்ரிக் மின்னஞ்சலும் அனுப்பி இருந்தது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2021 நவம்பர் மாதத்திற்கான வாகன விற்பனை விவரங்களை வெளியிட்டு உள்ளது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் நவம்பர் மாதத்தில் அதிகம் விற்பனையாகும் மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளராக உருவெடுத்து இருக்கிறது. உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதியில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஹீரோ மோட்டோகார்ப்-ஐ முந்தியுள்ளது.
2021 நவம்பர் மாதத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 3,38,473 யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது. இது 2020 நவம்பர் மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது 12 சதவீதம் சரிவடைந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 3,84,993 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது.

நீண்ட காலம் இந்திய சந்தையில் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளராக இருந்த ஹீரோ மோட்டோகார்ப் 2021 நவம்பர் மாதத்தில் 3,29,185 யூனிட்களை விற்பனை செய்தது. 2021 நவம்பரில் ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை 39 சதவீதம் சரிவடைந்துள்ளது.
லம்போர்கினி நிறுவனத்தின் உருஸ் மாடல் விற்பனையில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இத்தாலியை சேர்ந்த சூப்பர்கார் உற்பத்தியாளரான லம்போர்கினியின் உருஸ் மாடல் அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக இருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், லம்போர்கினி உருஸ் மாடல் விற்பனையில் இதுவரை 16 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது.
டிசம்பர் 4, 2017 அன்று அறிமுகம் செய்யப்பட்ட லம்போர்கினி உருஸ் மாடல் விற்பனையில் அந்நிறுவனத்தின் கலர்டோ மாடலை முந்தியுள்ளது. 2004 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கலர்டோ மாடல் 2014 வரையிலான காலக்கட்டத்தில் 14,022 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. இதுதவிர 2014 முதல் விற்பனை செய்யப்பட்டு வரும் லம்போர்கினி ஹரிகேன் மாடலை புதிய உருஸ் மாடல் பின்னுக்குத் தள்ளும் என தெரிகிறது.

தற்போது லம்போர்கினி நிறுவனம் உருஸ் மாடலின் பேஸ்லிப்ட் வேரியண்டை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடலில் பிளக்-இன் ஹைப்ரிட் பவர்டிரெயின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. லம்போர்கினி உருஸ் மாடலில் ட்வின் டர்போ 4 லிட்டர் வி8 என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் 650 பி.எஸ். திறன், 850 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
ஆடி நிறுவனத்தின் 2022 கியூ7 மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
2022 ஆண்டு ஆடி நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கும் முதல் வாகனம் 2022 கியூ7 மாடல் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு பல்வேறு எலெக்ட்ரிக் மாடல்களை அறிமுகம் செய்த ஆடி, சமீபத்தில் மேம்பட்ட கியூ5 மாடலை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஆடி நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 45 சதவீதம் எஸ்.யு.வி. மாடல்கள் ஆகும். ஆடி கியூ7 பல்வேறு ஆடம்பர வசதிகள் நிறைந்த பிரீமியம் மாடல் ஆகும். அம்சங்களை பொருத்தவரை புதிய கியூ7 மாடலில் ரியர்-சைடு ஏர்பேக், ஹீடெட் ஓ.ஆர்.வி.எம்.-கள், மேம்பட்ட டையர் பிரெஷர் மாணிட்டரிங் சிஸ்டம் மற்றும் அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் உள்ளன.

2022 ஆடி கியூ 7 மாடலில் மேட்ரிக்ஸ் எல்.இ.டி. ஹெட்லைட், டெயில்-லைட்கள், பெரிய ஏர் இன்டேக், வட்ட வடிவ வீல் ஆர்ச்கள் உள்ளன. சர்வதேச சந்தையில் புதிய ஆடி கியூ7 மாடல் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய மாடல் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் நவம்பர் மாதத்திற்கான வாகன விற்பனை விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதி சுசுகி 2021 நவம்பர் மாத விற்பனையில் 9 சதவீத சரிவை சந்தித்துள்ளது. கடந்த மாதம் மட்டும் மாருதி சுசுகி நிறுவனம் 1,39,184 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் மாருதி சுசுகி நிறுவனம் 1,53,233 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது.
கடந்த மாதம் விற்பனையான 1,09,726 பயணிகள் வாகனங்களில் 70 சதவீத யூனிட்கள் மினி மற்றும் காம்பேக்ட் பிரிவை சேர்ந்த ஆல்டோ, வேகன்ஆர், பலேனோ, ஸ்விப்ட் போன்ற மாடல்கள் ஆகும்.

காம்பேக்ட் பிரிவு மட்டுமின்றி மிட்-சைஸ் மற்றும் யுடிலிட்டி வாகன பிரிவுகளை சேர்ந்த சியாஸ், எர்டிகா மற்றும் எக்ஸ்.எல்.6 உள்ளிட்டவை 25 சதவீதம் விற்பனையாகி இருக்கின்றன. கடந்த மாதம் மட்டும் மாருதி நிறுவனம் 1,089 சியாஸ் யூனிட்களை விற்பனை செய்திருந்தது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2021 நவம்பர் மாத இருசக்கர வாகன விற்பனை விவரங்களை வெளியிட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் முன்னணி இருசக்கர உற்பத்தியாளரான பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2021 நவம்பர் மாதத்தில் மட்டும் 1,44,953 மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து இருக்கிறது. பஜாஜ் நிறுவனத்தின் உள்நாட்டு வாகன விற்பனை கடந்த மாதம் 23 சதவீதம் சரிவடைந்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 1,88,196 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. உள்நாட்டு விற்பனை மட்டுமின்றி இருசக்கர வாகன ஏற்றுமதியும் இரண்டு சதவீதம் சரிவடைந்துள்ளது. கடந்த மாதம் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 1,93,520 யூனிட்களை ஏற்றுமதி செய்தது. கடந்த ஆண்டு நவம்பரில் 1,96,797 யூனிட்களை பஜாஜ் ஆட்டோ ஏற்றுமதி செய்திருந்தது.

ஒட்டுமொத்தமாக பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் இருசக்கர வாகன விற்பனை கடந்த மாதம் 12 சதவீதம் சரிவடைந்துள்ளது. கடந்த மாதம் மட்டும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 3,38,473 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. நவம்பர் 2020 மாதத்தில் பஜாஜ் ஆட்டோ 3,84,993 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. இது உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்யப்பட்ட யூனிட்களும் அடங்கும்.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்தியாவில் தனது இரண்டாவது உற்பத்தி ஆலையை கட்டமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஓசூரில் தனது இரண்டாவது உற்பத்தி ஆலையை கட்டமைக்கிறது. ஏத்தர் 450 எக்ஸ் மற்றும் ஏத்தர் 450 பிளஸ் மாடல்களுக்கு கிடைத்திருக்கும் அமோக வரவேற்பு காரணமாக புதிய ஆலை கட்டமைக்கப்படுகிறது.
இந்த ஆலை முழு வீச்சில் செயல்பாட்டுக்கு வரும் போது ஏத்தர் நிறுவனத்தால் ஆண்டுக்கு நான்கு லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்ய முடியும். தற்போது ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஆண்டுக்கு 1,20,000 யூனிட்களை உற்பத்தி செய்து வருகிறது. இதே ஆலையில் லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தியில் கவனம் செலுத்தப்பட இருக்கிறது.

நவம்பர் 2020 முதல் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் மாதாந்திர விற்பனையில் 20 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து வருவதாக தெரிவித்து இருக்கிறது. நிர்வாகம் மற்றும் உற்பத்தி திறன் பிரிவுகளில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ரூ. 650 கோடிகளை முதலீடு செய்ய திட்டமிட்டு இருக்கிறது. மேலும் புது சந்தைகளில் களமிறங்கவும் ஏத்தர் எனர்ஜி திட்டமிட்டு இருக்கிறது.






