என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    சியோமி நிறுவனம் உருவாக்கி வரும் புதிய கார் உற்பத்தி ஆலையில் ஆண்டுக்கு 3 லட்சம் யூனிட்கள் உற்பத்தி செய்ய முடியும் என தகவல் வெளியாகி உள்ளது.


    சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி பீஜிங் நகரில் புதிதாக கார் உற்பத்தி ஆலையை கட்டமைத்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த ஆலையில் சியோமி எலெக்ட்ரிக் கார்கள் உற்பத்தி செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 

    இரண்டு கட்டங்களாக சியோமி உற்பத்தி ஆலை உருவாக்கப்படுகிறது. இதுதவிர தலைமையகம், விற்பனை, ஆய்வு பணிகளுக்கான அலுவலகங்களை சியோமி கட்டமைக்க இருக்கிறது. 2024 ஆம் ஆண்டு இந்த ஆலை முழு வீச்சில் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது. 

    புதிய எலெக்ட்ரிக் கார் பிரிவில் சியோமி நிறுவனம் ஆயிரம் கோடி டாலர்களை முதலீடு செய்ய இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் புதிய வியாபரத்தை சியோமி பதிவு செய்தது.
    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் அசத்தல் நிதி சலுகைகளை வழங்க வங்கியுடன் கூட்டணி அமைத்துள்ளது.


    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் இண்டஸ்இண்ட் வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. அதன்படி டொயோட்டா வாடிக்கையாளர்களுக்கு இண்டஸ்இண்ட் வங்கி சார்பில் அசத்தலான நிதி சலுகைகள் வழங்கப்பட இருக்கின்றன.

    இண்டஸ்இண்ட் வங்கி டொயோட்டா கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையின் பேரில் மிக குறைந்த வட்டி வழங்குகிறது. இந்த சலுகை தனியார் மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கான கார்களுக்கும் பொருந்தும். இண்டஸ்இண்ட் டொயோட்டா விற்பனையாளர்களுடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு நிதி சலுகைகளை வழங்குகிறது.

     டொயோட்டா கார்

    "கிளான்சா மற்றும் அர்பன் குரூயிசர் மாடல்களால் பி பிரிவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதிகரித்து வரும் வரவேற்பை தொடர்ந்து வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்த டொயோட்டா வாகனங்களை நாடு முழுக்க கொண்டு சேர்க்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்," என டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவன விற்பனை மற்றும் விளம்பர பிரிவு இணை மேலாளர் வைஸ்லைன் சிகாமணி தெரிவித்தார்.
    ஹூண்டாய் நிறுவனத்தின் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது.


    ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் முழுமையான எலெக்ட்ரிக் கார் மாடலை இந்தியாவில் விற்பனை செய்யும் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்திய சந்தையில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் கணிசமான விற்பனையை பதிவு செய்து வருகிறது. 

    அந்த வரிசையில், ஹூண்டாய் நிறுவனம் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் மாடலை இந்தியாவில் சோதனை செய்து வருகிறது. இந்த கார் சென்னையில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இந்த எலெக்ட்ரிக் கார் உண்மையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

     ஹூண்டாய் ஐயோனிக் 5

    சர்வதேச சந்தையில் ஹூண்டாய் ஐயோனிக் 5 மாடல் பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் ஆட்டோ பிளஷ்-ஃபிட்டிங் டோர் ஹேண்டில்கள், பாராமெட்ரிக் பிக்சல் டிசைன் கொண்டிருக்கிறது. ஐயோனிக் 5 மாடல் ஹூண்டாய் மோட்டார் குழுமத்தின் பிரத்யேக பி.இ.வி. ஆர்கிடெக்ச்சரில் உருவாகி இருக்கிறது.

    இந்த எஸ்.யு.வி. 58 கிலோவாட் ஹவர் அல்லது 72.6 கிலோவாட் ஹவர் பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 481 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. மேலும் இது மணிக்கு அதிகபட்சம் 185 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

    வோக்ஸ்வேகன் நிறுவனம் 2021 டிகுவான் பேஸ்லிப்ட் மாடலின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.


    வோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் 2021 டிகுவான் பேஸ்லிப்ட் மாடல் டிசம்பர் 7 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது. இந்த பேஸ்லிப்ட் மாடல் வோக்ஸ்வேகன் இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் அறிமுகமாகிறது.

    முன்னதாக மேம்பட்ட டிகுவான் மாடல் 2020 வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கிறது. இந்தியாவில் புதிய பேஸ்லிப்ட் மாடல் ஜீப் காம்பஸ், ஹூண்டாய் டக்சன் மற்றும் சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

     2021 வோக்ஸ்வேகன் பேஸ்லிப்ட்

    பேஸ்லிப்ட் டிகுவான் மாடல் மட்டுமின்றி வோக்ஸ்வேகன் நிறுவனம் மிட்-சைஸ் பிரீமியம் எஸ்.யு.வி. மாடலை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய இருக்கிறது. புதிய டிகுவான் பேஸ்லிப்ட் மாடலில் எல்.இ.டி. மேட்ரிக்ஸ் ஹெட்லேம்ப், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், மேம்பட்ட பம்ப்பர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    2021 வோக்ஸ்வேகன் டிகுவான் பேஸ்லிப்ட் மாடலில் 2 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ-சார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 187 பி.ஹெச்.பி. திறன், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    ரெனால்ட் நிறுவனத்தின் எண்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் மாடல் இந்திய விற்பனையில் புது மைல்கல் எட்டியது.


    ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது க்விட் ஹேட்ச்பேக் மாடல் இந்திய விற்பனையில் 4 லட்சத்திற்கும் அதிக யூனிட்களை கடந்துள்ளது. 2015 ஆம் ஆண்டு அறிமுகமானது முதல் க்விட் மாடல் ரெனால்ட் நிறுவன விற்பனையில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    பத்தாவது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் அங்கமாக ரெனால்ட் நிறுவனம் சமீபத்தில் 2021 க்விட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் ரெனால்ட் க்விட் விலை ரூ. 4.11 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 5.56 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     ரெனால்ட் க்விட்

    ரெனால்ட் க்விட் மாடல் 0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 53 பி.ஹெச்.பி. திறன், 72 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 67 பி.ஹெச்.பி. திறன் மற்றும் 91 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. இவற்றுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகின்றன.

    இந்திய சந்தையில் ரெனால்ட் க்விட் மாடல் மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ, ஹூண்டாய் சாண்ட்ரோ மற்றும் டேட்சன் ரெடி-கோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
    ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் பெங்களூரை சேர்ந்த இ.வி. சார்ஜிங் உள்கட்டமைப்பு நிறுவனத்துடன் இணைந்து ஒரு லட்சம் சார்ஜர்களை கட்டமைக்க இருக்கிறது.


    ஹீரோ எலெக்ட்ரிக் மற்றும் சார்ஸர் நிறுவனங்கள் இணைந்து அடுத்த மூன்று ஆண்டுகளில் நாடு முழுக்க சுமார் ஒரு லட்சம் சார்ஜர்களை கட்டமைக்க திட்டமிட்டுள்ளன. நாட்டின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ எலெக்ட்ரிக் பெங்களூரை சேர்ந்த இ.வி. சார்ஜிங் ஸ்டார்ட்-அப் நிறுவனமான சார்ஸர் உடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.

    கூட்டணியின் அங்கமாக சார்ஸர் நிறுவனம் நாட்டின் 30 நகரங்களில் முதற்கட்டமாக 10 ஆயிரத்திற்கும் அதிக சார்ஜர்களை கட்டமைக்கிறது. ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் தனது விற்பனை மையங்களில் கிரானா சார்ஸர்களை நிறுவ இருக்கிறது. தற்போது ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் நாடு முழுக்க 20 நகரங்களில் விற்பனை மையங்களை கொண்டிருக்கிறது. 

     கிரானா சார்ஸர்

    இ.வி. சார்ஜிங்கை அனைவரிடமும் கொண்டுசேர்க்கும் வகையில் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் சார்ஜர்களை உள்ளூர் கடைகள் மற்றும் ஏராளமான பொது இடங்களில் கட்டமைக்க திட்டமிட்டு இருக்கிறது.
    ஆடி நிறுவனத்திற்கு விற்கப்பட்டதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், மெக்லாரென் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.


    மெக்லாரென் குழுமத்தை ஆடி நிறுவனம் முழுமையாக விலைக்கு வாங்கப் போவதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன. மெக்லாரென் பார்முலா 1 குழுவை முழுமையாக வாங்குவதற்கான பணிகளில் ஆடி ஈடுபட்டு வந்தது. இதன் மூலம் ஆடி நிறுவனம் 2026-இல் நடைபெற இருக்கும் பார்முலா 1 பந்தயத்தில் களமிறங்க இருப்பதாக கூறப்பட்டது.

    ஏற்கனவே லம்போர்கினி மற்றும் வோக்ஸ்வேகன் குழுமத்தில் நிர்வகிக்கும் பங்குகளை ஆடி நிறுவனம் கைப்பற்றி வைத்திருக்கிறது. அந்த வகையில், தற்போது பார்முலா 1 உலகில் கால்பதிக்கவும் ஆடி திட்டமிட்டு வருகிறது. பெருந்தொற்று காலக்கட்டத்தில் மெக்லாரென் நிறுவனம் தொடர் இழப்பு காரணமாக 1,200 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. 

     மெக்லாரென்

    "மெக்லாரென் குழுமம் ஆடி நிறுவனத்திற்கு விற்கப்பட்டதாக வலம்வரும் செய்திகளை அறிவோம். இந்த தகவலில் துளியும் உண்மையில்லை. ஒப்பந்ததாரர்கள், உதிரிபாகங்களை வினியோகம் செய்வோர் மற்றும் கார் உற்பத்தியாளர்களுடன் தொடர்ந்து சந்திப்புகள் மற்றும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. எனினும், மெக்லாரென் குழுமத்தின் உரிமையாளர் பிரிவில் இதுவரை எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை," என மெக்லாரென் தெரிவித்து இருக்கிறது.
    சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்வதால் மாருதி சுசுகி நிறுவன கார் உற்பத்தி சரிந்துள்ளது.


    மாருதி சுசுகி நிறுவனம் அக்டோபர் மாதத்திற்கான உற்பத்தி விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. கடந்த மாதம் மட்டும் மாருதி சுசுகி நிறுவனம் 1,34,779 யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மாருதி நிறுவனம் 1,82,490 யூனிட்களை உற்பத்தி செய்து இருந்தது. 

    அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும் போது 26 சதவீதம் குறைவு ஆகும். மின்சார உதிரிபாகங்கள் குறைபாடு காரணமாக உற்பத்தியில் சரிவு ஏற்படுவதாக மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. எனினும், பாதிப்பை முடிந்தவரை குறைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

     மாருதி சுசுகி கார்

    மினி ஹேட்ச்பேக் மாடல்களான ஆல்டோ மற்றும் எஸ் பிரெஸ்ஸோ உபற்பத்தி 25.6 சதவீதம் சரிந்துள்ளது. காம்பேக்ட் பிரிவு வாகனங்களான வேகன்ஆர், ஸ்விப்ட், டிசையர், பலேனோ, இக்னிஸ் மற்றும் இதர மாடல்கள் உற்பத்தி 63.41 சதவீதம் சரிந்துள்ளது.
    மினி இந்தியா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகமாகும் முன்பே விற்றுத்தீர்ந்தது.


    மினி இந்தியா நிறுவனத்தின் மினி கூப்பர் எஸ்.இ. எலெக்ட்ரிக் கார் விற்றுத்தீர்ந்தது. மொத்தம் 30 யூனிட்கள் விற்பனைக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், முன்பதிவு துவங்கிய 2 மணி நேரத்தில் அனைத்து யூனிட்களும் விற்றுத்தீர்ந்ததாக மினி இந்தியா அறிவித்தது.

    இதுபற்றிய அறிவிப்பு மினி இந்தியா அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி உள்ளது. புதிய மினி கூப்பர் எஸ்.இ. மாடலுக்கான முன்பதிவு அக்டோபர் 29 ஆம் தேதி துவங்கியது. இந்திய சந்தையில் மினி எலெக்ட்ரிக் மாடல் முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

     மினி கூப்பர் எஸ்.இ.

    மினி கூப்பர் எஸ்.இ. விலை விவரங்கள் மற்றும் வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், புதிய கூப்பர் எஸ்.இ. மாடல் முழு சார்ஜ் செய்தால் 270 கிலோமீட்டர் வரை செல்லும் என கூறப்படுகிறது. இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 184 ஹெச்.பி. திறன் மற்றும் 270 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
    வோக்ஸ்வேகன் நிறுவனம் தனது 2021 டி ராக் மாடல் முன்பதிவை திடீரென நிறுத்தி இருக்கிறது.


    வோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் 2021 டி ராக் மாடலுக்கான முன்பதிவை நிறுத்தியது. டி ராக் மாடலுக்கான இரண்டாம் கட்ட யூனிட்கள் விற்றுத்தீர்ந்த நிலையில் முன்பதிவு நிறுத்தப்பட்டு இருக்கிறது. இறக்குமதி செய்யப்படும் வோக்ஸ்வேகன் டி ராக் விலை ரூ. 21.35 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஒற்றை வேரியண்ட்டில் விற்பனை செய்யப்படும் டி ராக் எஸ்யுவி 1.5 லிட்டர் TSI பெட்ரோல் என்ஜினுடன் கிடைக்கிறது. இந்த என்ஜின் 148 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

     வோக்ஸ்வேகன் டி ராக்

    காரின் உள்புறம் டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல், 10.25 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, பானரோமிக் சன்ரூப் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

    ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது விற்பனையை நீட்டிக்க திட்டமிட்டுள்ளது.


    ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் கொல்கத்தா, கோயம்புத்தூர், மதுரை, விசாகபட்டினம் மற்றும் விஜய்வாடா என ஐந்து புதிய நகரங்களில் விற்பனையை நீட்டிக்க இருப்பதாக அறிவித்து உள்ளது. இதன் மூலம் ரெவோல்ட் மோட்டார்ஸ் நாடு முழுக்க 14 முக்கிய நகரங்களில் மொத்தம் 19 விற்பனை மையங்களை கொண்டிருக்கும்.

    முன்னதாக அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் மூன்று நகரங்களில் விற்பனையை துவங்க இருப்பதாக ரெவோல்ட் மோட்டார்ஸ் அறிவித்தது. தொடர்ந்து பெட்ரோல் விலை அதிகரித்து வருவதை ஒட்டி எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. 

     ரெவோல்ட் மோட்டார்சைக்கிள்

    ரெவோல்ட் ஆர்.வி.400 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளில் 72 வோல்ட், 3.24 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் மணிக்கு அதிகபட்சம் 85 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் விற்பனையை மீண்டும் ஒத்திவைத்தது.


    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான விற்பனை டிசம்பர் 16 ஆம் தேதி துவங்கும் என தெரிவித்தது. முன்னதாக இந்த விற்பனை இன்று (நவம்பர் 1) துவங்க இருந்தது. 

    ஏற்கனவே இந்த மாடல்களின் வினியோகம் அக்டோபர் மாதத்தில் துவங்க இருந்தது. எனினும், முந்தைய அறிவிப்பின் படி தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் நவம்பர் 10 ஆம் தேதி முதல் டெஸ்ட் ரைடு துவங்குகிறது. வினியோகம் இம்மாத இறுதியில் துவங்கும் என ஓலா எலெக்ட்ரிக் அறிவித்தது.

     ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    இந்தியாவில் ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ விலை முறையே ரூ. 99,999 மற்றும் ரூ. 1,29,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
    ×