என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் தனது எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் விலையை உயர்த்தி இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது EQC எலெக்ட்ரிக் மாடல் விலையை ரூ. 4.7 லட்சம் வரை உயர்த்தி இருக்கிறது. அதன்படி மெர்சிடிஸ் பென்ஸ் EQC துவக்க விலை ரூ. 1.04 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என மாறி இருக்கிறது.

செப்டம்பர் மாத வாக்கில் மெர்சிடிஸ் பென்ஸ் EQC இரண்டாம் கட்ட யூனிட்கள் கொண்டுவரப்பட இருக்கின்றன. முன்னதாக இந்த மாடலுக்கான முன்பதிவு மார்ச் மாத வாக்கில் துவங்கியது. இவற்றின் வினியோகம் அடுத்த சில மாதங்களில் துவங்கும் என தெரிகிறது. பென்ஸ் EQC மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 471 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் EQC மாடல் 405 பி.ஹெச்.பி. பவர், 765 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 5.1 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு 180 கிலோமீட்டரில் செல்லும்படி கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரில் பாஸ்ட் சார்ஜிங் வசதி இருப்பதால் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 40 நிமிடங்களே ஆகும்.
டி.வி.எஸ். நிறுவனம் உருவாக்கி வரும் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளரான டி.வி.எஸ். மோட்டார் விரைவில் க்ரியான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருக்கிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவை பலப்படுத்த டி.வி.எஸ். நிறுவனம் ரூ. 1000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

முன்னதாக 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் டி.வி.எஸ். க்ரியான் கான்செப்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் க்ரியான் எலெக்ட்ரிக் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் பிரீமியம் பிரிவில் அசத்தல் அம்சங்களுடன் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
டி.வி.எஸ். க்ரியான் மாடல் அந்நிறுவனத்தின் ஓசூர் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மாடலை உருவாக்கும் பணிகளில் சுமார் 500 பொறியாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. டி.வி.எஸ். க்ரியான் மாடலில் 12 kW லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 5.1 நொடிகளில் எட்டிவிடும்.
ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த அல்காசர் மாடல் இந்திய முன்பதிவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் அல்காசர் மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமான முதல் மாதத்திலேயே அல்காசர் மாடல் முன்பதிவில் 11,600 யூனிட்களை கடந்துள்ளது.
கிரெட்டா மாடலை தழுவி பெரிய வீல்பேஸ் கொண்டு உருவாகி இருக்கும் ஹூண்டாய் அல்காசர் ஆறு மற்றும் ஏழு பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது. தற்போது முன்பதிவு செய்யப்பட்டு இருக்கும் 11,600 யூனிட்களில் 5 ஆயிரத்து 600 யூனிட்கள் ஏற்கனவே வினியோகம் செய்யப்பட்டுவிட்டன.

ஹூண்டாய் அல்காசர் மாடலுக்கான முன்பதிவு ஜூன் 9 ஆம் தேதி துவங்கியது. இந்தியாவில் அல்காசர் மாடல் துவக்க விலை ரூ. 16.3 லட்சம் ஆகும். இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் ஆகும்.
புதிய ஹூண்டாய் அல்காசர் மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் பெட்ரோல் என்ஜின் 157 பிஹெச்பி பவர் வழங்குகிறது. டீசல் மோட்டார் 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.
பெனலி நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனை மையங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இத்தாலி நாட்டு சூப்பர்பைக் உற்பத்தியாளரான பெனலி இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய சந்தையில் மூன்று புது மோட்டார்சைக்கிள் வேரியண்ட்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதுதவிர இந்திய சந்தையில் விற்பனை மையங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த பெனலி திட்டமிட்டுள்ளது.

புது மாடல்களில் பெனலி 502C பவர் குரூயிசர் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பெனலி நிறுவனம் - TRK502, TRK502X, லியோன்சினோ, இம்பீரியல் 400 மாடல்களை விற்பனை செய்து வருகிறது. பெனலி இந்தியா எதிர்கால திட்டம் குறித்து அந்நிறுவன வியாபார பிரிவு தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் விகாஸ் ஜபக் கூறும் போது,
"இந்தியாவில் 250 முதல் 500 சிசி பிரிவில் அதிக கவனம் செலுத்த திட்டமிட்டு இருக்கிறோம். ஊரடங்கு பிறப்பிக்கப்படும் முன் 30 விற்பனை மையங்கள் இயங்கி வந்தன. நாட்டில் நிலைமை சீராகும் பட்சத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டு புது விற்பனை மையங்களை திறக்க திட்டமிட்டுள்ளோம்." என தெரிவித்தார்.
இந்தியாவில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க 24 மணி நேரத்தில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், முன்பதிவு துவங்கிய 24 மணி நேரத்தில் ஒரு லட்சம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. முன்பதிவில் இத்தகைய வரவேற்பை பெற்று இருக்கும் முதல் ஸ்கூட்டராக இது அமைந்துள்ளது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு ஜூலை 15 ஆம் தேதி துவங்கியது. முன்பதிவு கட்டணம் ரூ. 499 ஆகும். ஓலா எலெக்ட்ரிக் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் நடைபெற்ற முன்பதிவிற்கு வாடிக்கையாளர்கள் அமோக வரவேற்பை கொடுத்துள்ளனர்.
“இந்தியா முழுக்க எங்களின் முதல் எலெக்ட்ரிக் வாகனத்திற்கு வாடிக்கையாளர்கள் கொடுத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது. இத்தகைய வரவேற்பு கிடைத்திருப்பது, பயனர்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற துவங்கி இருப்பதை வெளிப்படுத்துகிறது. எங்களது திட்டத்தில் இது மிகப்பெரிய மைல்கல் ஆகும். ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முன்பதிவு செய்து எலெக்ட்ரிக் புரட்சியில் இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி. இது துவக்கம் தான்!" என ஓலா குழும தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்தார்.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது கே.டி.எம். 250 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் விற்பனையை அதிகப்படுத்த புது திட்டம் தீட்டி இருக்கிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கே.டி.எம். 250 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் மாடலுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது. அதன்படி இந்த மோட்டார்சைக்கிள் விலை ரூ. 25 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது. விலை குறைப்பு ஜூலை 14இல் துவங்கி ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.

புதிய சலுகை மூலம் 250 அட்வென்ச்சர் மாடல் விற்பனையை அதிகப்படுத்த பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டு இருக்கிறது. கே.டி.எம். 250 அட்வென்ச்சர் மாடலில் 248சிசி DOHC 4-வால்வு ஒற்றை சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த என்ஜின் 30 பி.எஸ். பவர், 24 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் பவர் அசிஸ்ட் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்ப்படுகிறது. இத்துடன் WP APEX சஸ்பென்ஷன் கிட், போஷ் நிறுவனத்தின் ஏ.பி.எஸ். சிஸ்டம் போன்ற அம்சங்கள் உள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தின் eKUV100 எலெக்ட்ரிக் கார் சோதனை துவங்கி நடைபெற்று வருகிறது.
மஹிந்திரா நிறுவனம் eKUV100 எலெக்ட்ரிக் கார் மாடலை 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்தது. தற்போது இந்த மாடலின் ப்ரோடக்ஷன் வேரியண்ட் சோதனை துவங்கி இருக்கிறது. இது ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ப்ரோடோடைப் மாடலை போன்றே காட்சியளிக்கிறது.
புதிய eKUV100 அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியாகி இருக்கும் ஸ்பை படங்களில் eKUV100 கருப்பு நிறம் கொண்டிருக்கிறது. காரின் வெளிப்புறம் சிறு மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டு இருக்கிறது. இதன் ஒட்டுமொத்த தோற்றம் தற்போது விற்பனையாகும் KUV100 போன்றே காட்சியளிக்கிறது.

மஹிந்திரா eKUV100 பேட்டரி திறன் பற்றி எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 147 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதில் வழங்கப்படும் பேட்டரியை 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய ஒரு மணி நேரம் ஆகும்.
மேலும் இதன் எலெக்ட்ரிக் மோட்டார் 54 பி.ஹெச்.பி. பவர், 120 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்கும் என தெரிகிறது. இந்தியாவில் eKUV100 விலை ரூ. 10 லட்சத்திற்குள் நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
போர்டு நிறுவனத்தின் பிகோ மாடல் புது வேரியண்ட் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
போர்டு இந்தியா நிறுவனம் கடந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் பிகோ மற்றும் ஆஸ்பையர் ஆட்டோமேடிக் வேரியண்ட்கள் விற்பனையை நிறுத்தியது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் போர்டு நிறுவனம் மீண்டும் பெட்ரோல் ஆட்டோமேடிக் வேரியண்ட்களை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

இவை இம்மாத இறுதியில் அறிமுகமாகும் என்றும் இந்த வேரியண்டில் முன்னதாக வழங்கப்பட்ட 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படாது என கூறப்படுகிறது. இதற்கு மாற்றாக 1.2 லிட்டர் டிராகன் பெட்ரோல் என்ஜின் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இந்திய சந்தையில் பிகோ மாடல் மாருதி சுசுகியின் ஸ்விப்ட், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இரு மாடல்களிலும் ஏ.எம்.டி. யூனிட் வழங்கப்படுகிறது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் மேக்சி ஸ்கூட்டர் மாடல் இந்திய வெளியீடு உறுதி செய்யப்பட்டது.
பி.எம்.டபிள்யூ மோட்டராட் நிறுவனம் இந்தியாவில் புதிய மேக்சி ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருக்கிறது. புது ஸ்கூட்டருக்கான டீசரை பி.எம்.டபிள்யூ. வெளியிட்டு இருக்கிறது. எனினும், ஸ்கூட்டரின் பெயர் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
சமீபத்தில் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் C 400 X மற்றும் C 400 GT என இரு மேக்சி ஸ்கூட்டர்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. அந்த வகையில் இந்த இருமாடல்களில் ஒன்றை பி.எம்.டபிள்யூ. இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு மாடல்களும் 350சிசி என்ஜின் கொண்டிருக்கின்றன.

தற்போதைய தகவல்களின் படி பி.எம்.டபிள்யூ. மோட்டராட் நிறுவனம் C 400 GT மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது. இந்த மாடலை பி.எம்.டபிள்யூ. கடந்த ஆண்டு அப்டேட் செய்து சில புது அம்சங்களை வழங்கி இருந்தது. மேலும் இது யூரோ 5 / பிஎஎஸ் 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது.
இந்த ஸ்கூட்டரில் 350சிசி, ஒற்றை சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 33.5 பி.ஹெச்.பி. பவர், 35 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 139 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
இந்திய சந்தையில் 2021 பி.எம்.டபிள்யூ. C 400 GT விலை ரூ. 6 லட்சத்திற்கும் அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியீட்டின் போது இந்த மாடலுக்கு போட்டியாக இந்திய சந்தையில் வேறு எந்த ஸ்கூட்டரும் விற்பனை செய்யப்படாது.
டெல்லா சைபர்டிரக் கதவுகளில் கைப்பிடி இருக்காது என எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார்.
எலெக்ட்ரிக் பிக்-அப் டிரக் மாடலான சைபர்டிரக் சர்வதேச சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் உள்ள தொழில்நுட்பம் மற்றும் புதுவித அம்சங்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.
அந்த வரிசையில், 'டெஸ்லா சைபர்டிரக் மாடலில் கைப்பிடிகள் இருக்காது. அது வாகன உரிமையாளரை கண்டறிந்து கதவுகளை தானாக திறக்கும்,' என டெஸ்லா தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார்.

2019 நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது முதல் டெஸ்லா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடலாக சைபர்டிரக் இருக்கிறது. சைபர்டிரக் மாடல் டெக்சாஸ் நகரில் உள்ள டெஸ்லா ஜிகாபேக்டரியில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஸ்போர்ட்ஸ் கார் மாடலுக்கு இணையான திறன் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சவுகரியத்தை வழங்கும் அதிநவீன தொழில்நுட்பங்களை சைபர்டிரக் கொண்டிருக்கிறது.
சைபர்டிரக் உற்பத்தி வடிவம் முன்னதாக காட்சிப்படுத்தப்பட்ட மாடலை விட சற்றே வேறுப்பட்டு இருக்கும். மேலும் இந்த மாடலில் 4-வீல் டிரைவ் வசதி வழங்கப்பட்டு இருப்பதால் குறுகிய வளைவுகளை எளிதில் கடக்க முடியும். டெஸ்லா சைபர்டிரக் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 6.5 நொடிகளில் எட்டிவிடும்.
லம்போர்கினி நிறுவனத்தின் ஹூராகேன் STO மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது.
லம்போர்கினி நிறுவனம் இந்தியாவில் ஹூராகேன் STO மாடலை அறிமுகம் செய்தது. புது சூப்பர் கார் விலை ரூ. 4.99 கோடி, எக்ஸ்-ஷோரூம் ஆகும்.

லம்போர்கினி ஹூராகேன் STO மாடலில் 5.2 லிட்டர் வி10 என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் LDF கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 630 பி.ஹெச்.பி. பவர், 565 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
புதிய லம்போர்கினி கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.0 நொடிகளிலும் 200 கிலோமீட்டர் வேகத்தை 9 நொடிகளிலும் எட்டிவிடும். இந்த கார் மணிக்கு 310 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. லம்போர்கினி ஹூராகேன் STO மூன்று டிரைவ் மோட்களை கொண்டுள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் AMG E53 மற்றும் AMG E63 S செடான் மாடல்கள் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கின்றன.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் AMG E53 மற்றும் AMG E63 S சக்திவாய்ந்த செடான் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. புது AMG மாடல்களின் துவக்க விலை ரூ. 1.02 கோடி ஆகும். இவற்றுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
வேரியண்ட் மற்றும் விலை விவரங்கள்:
மெர்சிடிஸ் பென்ஸ் AMG E53 4மேடிக் பிளஸ் பிரீமியம் ரூ. 1.02 கோடி
மெர்சிடிஸ் பென்ஸ் AMG E63 S 4மேடிக் பிளஸ் பிரீமியம் ரூ. 1.70 கோடி
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. புதிய பென்ஸ் AMG E53 மாடல் மோஜேவ் சில்வர் மற்றும் டிசைனோ ஹெசிந்த் ரெட் நிறத்தில் கிடைக்கிறது. மெர்சிடிஸ் AMG E63 S மாடல் டிசைனோ செலிநைட் கிரே நிறத்தில் கிடைக்கிறது.

புதிய AMG E53 மாடலில் 3 லிட்டர், 6 சிலிண்டர் ட்வின்-டர்போ சார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 429 பி.ஹெச்.பி. பவர், 520 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 9 ஸ்பீடு AMG ஸ்பீடுஷிப்ட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இந்த மாடல் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4.5 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது அதிகபட்சமாக மணிக்கு 249 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.
மெர்சிடிஸ் AMG E63 S மாடலில் 4 லிட்டர் ட்வின்-டர்போ வி8 பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 603 பி.ஹெச்.பி. பவர், 850 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.4 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு 299 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.






