என் மலர்tooltip icon
    • குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும்.
    • இன்று எளிய முறையில் மாம்பழ ஐஸ்கிரீம் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    பெரிய மாம்பழம் - 2

    பால் - 1 கோப்பை

    வெண்ணிலா ஐஸ்கிரீம் - 1 கோப்பை

    ஜெல்லி - 2 மேஜைக் கரண்டி

    செய்முறை :

    பாலை சுண்டக் காய்ச்சி குளிர வைக்கவும்.

    மாம்பழத்தை கழுவி தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

    அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு கூழாக அரைத்துக் கொள்ளவும்.

    குளிரவைத்த பாலுடன் ஜெல்லி சேர்த்து நன்கு அடித்துக் கலந்து, அதனையும் மாம்பழச் சாறுடன் சேர்க்கவும்.

    பால் கலந்த மாம்பழச்சாற்றை குளிர்சாதனப் பெட்டியில் சுமார் 2 மணி நேரம் வைத்து குளிர வைக்கவும்.

    பின்னர் வெளியே எடுத்து வெண்ணிலா ஐஸ்கிரீம் சேர்த்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான மாம்பழ ஐஸ்கிரீம் ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • திருவானைக்காவல் திருத்தலத்தில் உள்ளது, ஜம்புகேஸ்வரர் ஆலயம்.
    • அம்பாளின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி என்பதாகும்.

    திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் திருத்தலத்தில் உள்ளது, ஜம்புகேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் அம்பாளின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி என்பதாகும். முன் காலத்தில் இத்தல அம்பாள் உக்கிர கோலத்தில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. பொதுவாக அம்பாளின் உக்கிரத்தை சாந்தப்படுத்த, ஸ்ரீசக்கரத்தை பிரதிஷ்டை செய்வார்கள்.

    ஆனால் இந்த ஆலயத்திற்கு வந்த ஆதிசங்கரர், ஸ்ரீசக்கரத்திற்கு பதிலாக, இரண்டு தாடங்கங்களை (காதில் அணியும் அணிகலன்) ஸ்ரீசக்கரம் போல் உருவாக்கி, அம்பாளுக்கு பூட்டிவிட்டார். இதையடுத்து அம்பாள் சாந்தமானாள். மேலும் உக்கிரமான தாயை, பிள்ளைகளான விநாயகரும், முருகப்பெருமானும் சாந்தப்படுத்தும் வகையில், அம்பாளுக்கு எதிரே விநாயகரையும், பின்புறம் முருகப்பெருமானையும் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்தார்.

    இந்தக் கோவிலில் ஜம்பு தீர்த்தக்கரையில், முருகப்பெருமான் வீற்றிருக்கிறார். இவர் எங்கும் இல்லாத வகையில் தன்னுடைய காலுக்கு அடியில் ஒரு அசுரனை மிதித்து அடக்கிய நிலையில் காணப்படுகிறார். இத்தலம் வந்த அருணகிரிநாதர், தனக்கு காமம் என்னும் எதிரியால் தொந்தரவு வரக்கூடாது என்று வேண்டியிருக்கிறார். இதையடுத்து காமத்தை ஒரு அசுரனாக்கிய முருகப்பெருமான், அந்த அசுரனை தன் காலில் போட்டு மிதித்துக் கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். முருகப்பெருமானின் இந்த அமைப்பை வேறு எங்கும் காண முடியாது.

    • வெந்தயம் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும்.
    • குடல்புண் உள்ளவர்கள் மிளகை அதிகம் சேர்த்து கொள்ளக்கூடாது.

    நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் இருந்து, சில நோய்களுக்கு மருந்துகளை எளிய முறையில் தயாரிக்கலாம் என சித்த மருத்துவ குறிப்புகளில் கூறப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    * கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் இவற்றை தண்ணீரில் கொதிக்கவைத்து, ஆறவைக்க வேண்டும். அந்த நீரை வடிகட்டி குடித்தால் அஜீரணத்திலிருந்து நிவாரணம் கிட்டும்.

    * அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வயிற்றுவலி போன்றவற்றை குறைக்க மிளகு அருமருந்து. உணவில் மிளகை சேர்த்துக்கொள்வதால் இவை ஏற்படாமல் தவிர்க்கலாம்.

    * மிளகு சாப்பிடுவதால் வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரக்கிறது. அது வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை சரிசெய்கிறது. ஆனால் குடல்புண் உள்ளவர்கள் மிளகை அதிகம் சேர்த்து கொள்ளக்கூடாது.

    * வெந்தயம் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும். சிறிதளவு வெந்தயத்தை வறுத்து, சோம்பும், உப்பும் சேர்த்து அரைத்து மோரில் கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு நிற்கும். மேலும் வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து முகத்தில் பூசி வர பருக்கள் குறையும்.

    * கசகசாவை நன்கு ஊறவைத்து அரைத்து மோருடன் கலந்து குடித்துவந்தால் சீதபேதி கட்டுப்படும்.

    * சர்க்கரை நோய் உள்ளவர்கள் பாகற்காய், அவரைப்பிஞ்சு ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளவும். இறுக்கமான காலணிகள் அணிவதை தவிர்க்க வேண்டும்.

    * நாவல்பழம் அடிக்கடி சாப்பிட, சர்க்கரை நோய் கட்டுப்படும். தினமும் கையளவு நாவல்பழங்களை சாப்பிட்டால், சிறுநீர்க்குழாயில் ஏற்படும் தொற்று குணமாகும். சிறுநீர்க்குழாயில் காணப்படும் பாக்டீரியாவை அழிக்கக்கூடிய ரசாயனங்கள் நாவல்பழத்தில் உள்ளன.

    * பாதாம்பருப்பில் வைட்டமின் 'ஈ' சத்து அதிக அளவில் உள்ளது. தினமும் சிறிதளவு பாதாம் பருப்புகள் சாப்பிடுவதன் மூலம் சருமம், தலைமுடி, நகங்கள் ஆகியவை பளபளப்பாகும்.

    • கோபுரத்தை ஆண்கள் இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி கும்பிட வேண்டும்.
    • பெண்கள் தங்கள் இரு கைகளையும் நெஞ்சுக்கு நேராகவும் வைத்துக் கும்பிட வேண்டும்.

    முதலில் கோபுரத்தை நெருங்கும்போது, ஆண்கள் இரு கைகளையும் தலைக்கு மேலும்; பெண்கள் தங்கள் இரு கைகளையும் நெஞ்சுக்கு நேராகவும் வைத்துக் கும்பிட வேண்டும். பெண்கள் ஒருபோதும் இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கிவைத்து வணங்கக்கூடாது.

    அதன்பின் உள்ளே நுழைந்து, கொடிமரத்தின் அருகில் விழுந்து வணங்கி, வலம்வர வேண்டும். ஆலயங்களில் கொடிமரம் தாண்டி, எந்தச் சன்னிதியிலும் விழுந்து வணங்கக்கூடாது. வலம் வரும்போது கருவறையின் பின்னால் இருக்கும் தெய்வங்களையும் வணங்க வேண்டும்.

    அப்படியே வலம் வந்து மூலவர் தரிசனம் முடித்து, மறுபடியும் கொடிமரத்தின் அருகில் விழுந்து வணங்க வேண்டும். அதன்பின் சற்றுநேரம் ஆலயத்தில் ஒரு பக்கமாக அமர்ந்து, பின்பு வெளியேவர வேண்டும்.

    சைவ ஆகமங்கள் 28; பாஞ்ச ராத்திரம், வைகானசம் என்பவை வைணவ ஆகமங்கள். இந்த இரண்டிற்கும் சில வேறுபாடுகள் இருக்குமே தவிர, வழிபாட்டு முறைகளில் வேறுபாடு இருக்காது.

    • புடவையை சரியாக அணிந்தால், பருமனான பெண்களை கூட, ஒல்லியாக காட்டமுடியும்.
    • பெண்களின் அழகிற்கு, கூடுதல் அழகு சேர்க்கும் கலைக்குதான், ‘புடவை’ என்று பெயர்.

    பெண்களின் அழகிற்கு, கூடுதல் அழகு சேர்க்கும் கலைக்குதான், 'புடவை' என்று பெயர். இதன் ஸ்பெஷல் என்ன தெரியுமா...? புடவையை முறையாக தேர்ந்தெடுத்து, சரியாக அணிந்தால், பருமனான பெண்களை கூட, ஒல்லியாக காட்டமுடியும். அதேபோல, ஒல்லியான பெண்களையும் கொஞ்சம் பருமனாக காட்டமுடியும். இந்த மாயாஜாலம், புடவைகளில் மட்டுமே சாத்தியம்.

    * நம் ஊரில், என்னென்ன புடவை வகைகள் இருக்கிறது?

    பட்டு, கைத்தறி, பனாரஸ், காட்டன், டிசைனர் எம்ப்ராய்டரி, டிசைனர் பார்டிவேர், டிசைனர் திருமண புடவைகள், டிசைனர் லெஹங்கா, ஹாப் டிஷ்யு, ப்ரேசோ, நெட்டட், ஜெக்கார்ட் வேலைப்பாடு, ஷிபான், ஜார்ஜ்ஜெட்… இப்படி பல வகை துணிகளில் புடவைகள் கிடைக்கின்றன. பிரி ஸ்டைல், டிரெடிஷ்னல், தென் இந்திய முறை, வட இந்திய முறை, மடிசார், கேன் கேன், குஜராத்தி பல்லு, சிங்கிள் பிலீட்ஸ்.. இப்படி புடவைகளுக்கு ஏற்ப உடுத்தும் முறைகள் வேறுபடும்.

    * கட்டுவதற்கு சுலபமானது எது? கடினமானது எது?

    இதில் ஜார்ஜ்ஜெட், ஷிபான் மற்றும் சாப்ட் சில்க் ஆகியவை கட்டுவதற்கு சுலபமானவை. அயன் செய்யவேண்டிய தேவை இருக்காது. அதேபோல மடித்து, மோல்ட் செய்வதும் எளிதானது. ஆனால் கனமான பட்டு புடவைகள் குறிப்பாக காஞ்சி பட்டு, கனமான கல் வேலைப்பாடுகள் கொண்ட புடவைகளை கட்டுவது கொஞ்சம் சிரமமானது. ஏனெனில் இதை நினைத்தபடி மடிப்பதும், 'பின்' குத்துவதும், கையாள்வதும் கடினமாக இருக்கும்.

    * எவ்வளவு நேரத்தில் புடவை கட்டலாம்?

    ஒருசில கொண்டாட்டங்களில் மட்டும் புடவை கட்டுபவர்கள், அதிகபட்சம் அரை மணி நேரம் எடுத்து கொள்வார்கள். மாதத்திற்கு ஓரிரு முறை உடுத்துபவர்கள், 15 முதல் 20 நிமிடங்களில் புடவையை கட்டிவிடுவார்கள். தினந்தோறும் புடவை கட்டுபவர்களுக்கு, 10 நிமிடமே போதுமானதாக இருக்கும். ஆனால் புடவை எக்ஸ்பெர்ட்ஸ், 2 நிமிடத்திலேயே கட்டிமுடித்துவிடுவார்கள்.

    * பெண்கள் புடவை விஷயத்தில், செய்யும் தவறுகள் என்ன?

    புடவைக்கு ஓரம் அடிக்காமல் அணிவது, உள் பாவாடையை கொலுசு இருக்கும் கணுக்காலில் நிற்கும்படியாக அணியாமல் ஒழுங்கற்று மேல்-கீழாக இருக்கும்படி அணிவது, உடலுக்கு சம்பந்தமில்லாத முறையில் மடிப்பு (பிலீட்ஸ்) எடுப்பது, புடவையை அயன் செய்யாமல் அணிவது, பிலீட்ஸ்-ஐ இடுப்பில் சொருகி அதை சரிசெய்யாமல் விடுவது, புடவை உடலில் நிற்பதற்காக நிறைய இடங்களில் பின் குத்துவது... இப்படி நிறைய தவறுகளை செய்கிறார்கள்.

    * புடவையை சிறப்பான முறையில் அணிவது எப்படி?

    'பிலீட்ஸ்' எனப்படும் முந்தானை மடிப்புகளை முன்கூட்டியே தயாரித்துவிட வேண்டும். புடவையின் ரகத்திற்கு ஏற்ப உள்பாவாடை வகைகளை தேர்வு செய்வது சிறப்பு. குறிப்பாக, பட்டு புடவைகளுக்கு லேசான ஷேப்வேர் உள்ளாடைகள் சிறப்பாக இருக்கும். அதேபோல லேசான புடவைகளுக்கு காட்டன் பாவாடைகள் கச்சிதமாக இருக்கும். அதிக விலை கொடுத்து வாங்கி அணியும் புடவைக்கு ஏற்ப உள்ளாடையும் தரமானதாக இருக்க வேண்டும்.

    புடவைக்கு கட்டாயம் பால்ஸ் தைக்கவேண்டும். அப்போதுதான் பார்டர் மடங்கும் பிரச்சினை இருக்காது. எப்போதும் புடவையின் நிறம் மற்றும் மெட்டீரியலுக்குப் பொருத்தமான உள்பாவாடையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். புடவையை கணுக்கால் வரை கட்டாமல், இரண்டு பாதங்களின் சுண்டு விரல்களும் மறையும்படியாகக் கட்ட வேண்டும். ஹீல்ஸ் அணியும் பெண்கள், புடவை கட்டிவிட்டு ஹீல்ஸ் அணியும்போது உயரம் போதாமல் போய்விடும் என்பதால், ஹீல்ஸ் அணிந்தபடியே புடவை கட்டி உயரத்தைச் சரிசெய்துகொள்ளலாம்.

    பிலீட்ஸை பிளவுஸுடன் 'பின்' செய்யும்போது, கழுத்தில் நெருடலாக இருப்பதுபோல தோன்றினால், பிலீட்ஸை அடுக்கிய பின், முதல் மடிப்பை மட்டும் சற்றே தளர்த்தி, சற்று கீழே இறக்கி 'பின்' செய்யலாம். டிரான்ஸ்பரன்ட் மற்றும் நெட்டட் புடவை கட்டும்போது, பிலீட்ஸை இடுப்புப் பகுதியில் பிளவுஸோடு 'பின்' செய்ய வேண்டும். பிலீட்ஸ் ஒன்றை ஒன்று ஓவர்லாப் செய்யாமல் இருக்க, 2, 3-வது பிலீட்ஸை பிளவுஸோடு உள்பக்கமாக பின் செய்ய வேண்டும். இதனால், அடிக்கடி பிலீட்ஸை அட்ஜஸ்ட் செய்யத் தேவை இருக்காது.

    * புடவை கலாசாரம் தமிழ்நாட்டில் எப்படி நவீனமாகி இருக்கிறது?

    உறவினர்களை கொண்டு புடவை கட்டிய காலம் மலையேறி, இன்று புடவை கட்டிவிட 'சாரி டிரேப்பிங்' எக்ஸ்பெர்ட்களை அழைக்கும் அளவிற்கு முன்னேறிவிட்டது. மேலும் சமூக வலைத்தளங்களும், பெண்களின் புடவை மோகத்தை சூடேற்றிவிட்டுள்ளன. மேக்கப், புடவை அலங்காரம் சம்பந்தமான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் குவிந்துகிடப்பதால், அழகு கலையில் புதுமைகளை எதிர்பார்க்கிறார்கள்.

    * சிறப்பாக புடவை கட்ட தெரிந்தவர்கள், 'சாரி டிரேப்பிங்' எக்ஸ்பெர்ட்டாக ஆகமுடியுமா?

    நிச்சயமாக. இதற்கு எந்தவிதமான தியரி படிப்புகளும் அவசியம் இல்லை. அனுபவமும், பயிற்சியும்தான் அவசியம். அது பெண்களுக்கு இயற்கையாக இருந்தால், சிறப்பாக இருக்கும். கொஞ்சம் தடுமாறுபவர்கள், 'சாரி டிரேப்பிங்' பயிற்சி பெற்று, புடவை கட்டிவிடும் வேலை செய்யலாம். சொன்னால் நம்பமாட்டீர்கள்...! இன்று நிறைய கல்லூரி பெண்களும், குடும்ப தலைவிகளும் பகுதி நேரமாக சாரி டிரேப்பிங் வேலை செய்கிறார்கள். ஏன்..? ஆண்களும், சாரி டிரேப்பிங் பயிற்சி களை முடித்துவிட்டு, நிறைய பெண்களுக்கு புடவை கட்டிவிடுகிறார்கள்.

    2 நிமிடத்திலேயே பட்டுப்புடவை கட்டிவிடலாமா?

    ஆம்...! இப்போது எல்லாமே நவீனம்தான். 'பாக்ஸ் போல்டிங்' முறையில் ரெடிமேட் உடைகளை போல புடவை தயாராகிவிடும். முந்தானை எடுப்பதில் தொடங்கி எல்லா வேலைகளும் முன்கூட்டியே முடிக்கப்பட்டு, அயன் செய்து தயாராக வைத்துவிடுவார்கள். அதை ரெடிமேட் உடைபோல அப்படியே எடுத்து உடுத்தவேண்டியதுதான்.

    • திருவிழா 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • கொடியேற்றம் நடந்து 17 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறும்.

    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் அமாவாசைக்கு பின்னர் வரும் திங்கட்கிழமை அன்று கொடியேற்றம் நடந்து 17 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறும்.

    இதில் தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் இருந்தும், அண்டைமாநிலமான புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வருகை தந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை தரிசித்து செல்வார்கள்.

    இந்த ஆண்டு வருகிற 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது. இதையொட்டி நகரத்தார்கள் சார்பாக 52-ம் ஆண்டு பூச்சொரிதல் விழா நேற்று இரவு நடந்தது. இதையொட்டி மேளதாளத்துடன், வாணவேடிக்கையுடன் அம்மன் மின் அலங்காரத்தில் நான்கு ரத வீதி பவனி வந்தார். இதில் பெண்கள் பூத்தட்டு மற்றும் பால்குடம் எடுத்து வந்தனர்.

    அர்ச்சகர் சண்முகவேல் அம்மனுக்கு திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்து, பூச்சொரிதல் விழா, சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • 108 திவ்ய தேசங்களில் இந்த ஆலயம் 65-வது திவ்ய தேசமாகும்.
    • சுமார் 600 அடி உயரம் உள்ள மலை மீது இந்த கோவில் அமைந்திருக்கிறது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளது சோளிங்கர் யோக நரசிம்மர் ஆலயம். மலையின் மீது யோக நரசிம்மர் வீற்றிருக்கிறார். மலையின் அடிவாரத்தில் உற்சவர் மட்டும் அருள்பாலிக்கிறார். இவரது பெயர் 'பக்தவச்சலப் பெருமாள்'. மலையின் ஒரு பகுதியில் யோக ஆஞ்சநேயரும் தரிசனம் தருகிறார்.

    108 திவ்ய தேசங்களில் இந்த ஆலயம் 65-வது திவ்ய தேசமாகும். தொண்டை நாட்டில் உள்ள 22 திவ்ய தேசங்களில் இந்த சோளிங்கர் யோக நரசிம்மர் ஆலயம் மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. ஏனெனில் காஞ்சிபுரத்திற்கும், திருப்பதிக்கும் இடையில் இந்த திவ்ய தேசம் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தை பராங்குச சோழன் என்ற மன்னன் 3-ம் நூற்றாண்டில் கட்டியிருக்கிறான். எனவே இவ்வாலயம் சோழசிம்மபுரம் என்று அழைக்கப்பட்டு, பின்னர் சோளிங்கபுரம் என்றானது. அதுவே மருவி 'சோளிங்கர்' என்று அழைக்கப்படுகிறது.

    தல வரலாறு

    பக்த பிரகலாதனுக்காக காட்சி கொடுத்த நரசிம்மரின் அவதாரத்தை தரிசிக்க, வசிஷ்டர், காசியபர், அத்ரி, ஜமதக்னி, கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர் ஆகிய சப்த ரிஷிகளும் விரும்பினர். ஆனால் பிரகலாதனுக்கு காட்சி கொடுத்த உக்கிர கோலத்தை நீக்கி, சாந்தமாக காட்சியளிக்க வேண்டும் என்று அவர்கள் நரசிம்ம பெருமாளை வேண்டினர். அதற்காக அவர்கள் 7 பேரும் நரசிம்மரை நினைத்து தவம் இருந்த தலம் இதுவாகும். ஒரு காலத்தில் விஸ்வாமித்திர முனிவர், இத்தலத்தில் சிறிதுநேரம் நரசிம்மனை வழிபட்டு, 'பிரம்மரிஷி' பட்டத்தைப் பெற்றார். அதுபோல் தங்களுக்கும் நரசிம்மரின் தரிசனம் உடனடியாக கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, சப்த ரிஷிகளும் இந்த தலத்தை தேர்வு செய்து தவம் இயற்றினர். இதையடுத்து சப்த ரிஷிகளின் விருப்பப்படி, நரசிம்மர் தன்னுடைய கோபத்தை தணித்து யோக நிலையில் காட்சி அளித்தார். அந்த கோலத்திலேயே இந்த ஆலயத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கவும் செய்கிறார்.

    சுமார் 600 அடி உயரம் உள்ள மலை மீது யோக நரசிம்மர் கோவில் அமைந்திருக்கிறது. அடிவாரத்தில் இருந்து இந்த ஆலயத்தை அடைவதற்கு 1,305 படிக்கட்டுகளை கடந்து செல்ல வேண்டும். மலையின் மீது ஒரு ஏக்கர் பரப்பளவில், 200 அடி நீளம், 150 அடி அகலத்தில் யோக நரசிம்மர் கோவில் அமைந்திருக்கிறது. இங்கே சிம்ஹ கோஷ்டாக்ருதி விமானத்தின் கீழ் யோக நரசிம்மர் அருள்பாலித்து வருகிறார். இந்த நரசிம்மப் பெருமாளை, திருமங்கையாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள்.

    மூலவரான யோக நரசிம்மர் கிழக்கு நோக்கி யோகாசனத்தில் அமர்ந்துள்ளார். இவர் சாளக்கிராம மாலை அணிந்திருக்கிறார். இவரது வடிவத்தை சிலா வடிவம் என்று போற்றுகின்றனர். அருகில் தாயார் அமிர்தவல்லி இருக்கிறார். ஊரின் மையத்தில் உற்சவருக்கு தனிக்கோவில் அமைந்திருப்பது சிறப்புக்குரியது. பிரம்மோற்சவம் போன்ற விழாக்கள் அனைத்தும் அங்குதான் நடைபெறும். இங்கிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, மலை மீதுள்ள யோக நரசிம்மர் ஆலயம்.

    இந்த மலை மீது 24 நிமிடங்கள் இருந்தாலே, ஒருவர் முக்தியை அடைவார் என்று சொல்லப்படுகிறது. மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்தது, நரசிம்மர் அவதாரம். இறைவன் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறார் என்று பறைசாற்றிய அவதாரம் இது. அதோடு தன் பக்தர்களுக்காக உடனடியாக காட்சி தந்து அருள்பாலிப்பவர். எனவே நரசிம்மரை வழிபடுபவர்களுக்கு, அவர்கள் வேண்டிய வரம் உடனடியாக கிடைக்கும் என்பது ஐதீகம்.

    பெருமாளுக்கு, ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு வழிபாட்டு நடைமுறைகள் இருக்கின்றன. சில கோவில்களில் மொட்டை போடுவார்கள், சில கோவில்களில் உண்டியல் காணிக்கை செலுத்துவார்கள். ஆனால் சோளிங்கர் யோக நரசிம்மர் ஆலயத்தில் இவை எதுவும் செய்ய வேண்டியதில்லை. ஒரே கல்லின் மீது குன்றுபோல் அமைந்த இந்த மலை மீது 1,300 படிகளைக் கடந்து வந்து யோக நரசிம்மரை தரிசித்தாலேயே போதுமானது, பக்தர்கள் கேட்கும் வரங்களை அவர் அளித்து விடுவார்.

    இத்தல இறைவனுக்கு கற்கண்டு, வெல்லம், வாழைப்பழம், தயிர்சாதம் நைவேத்தியமாக படைக்கிறார்கள். வேட்டி-சேலையும் நேர்த்திக்கடனாக செலுத்தப்படுகிறது. வெள்ளிக்கிழமை தோறும் இத்தல நரசிம்மருக்கும், தாயாருக்கும் அபிஷேகம் நடைபெறும். அப்போது இறைவனை அபிஷேகிக்கும் பால், தயிர், தேன், சர்க்கரை, ஆகியவற்றை பிரசாதமாக வழங்குகிறார்கள். மனவளர்ச்சி குன்றியவர்கள், பில்லி, சூனியம், ஏவல், தீராத வியாதி இருப்பவர்கள், யோக நரசிம்மரை வழிபட்டால் விரைவில் குணமாவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். தாம்பத்ய பிரச்சினை, குழந்தையின்மை, திருமணத்தடை நீக்கும் தலமாகவும் இது விளங்குகிறது. இந்த கோவிலுக்கு மலையேறும் பக்தர்கள், மலைப்பாதையின் வழியில், சிறுசிறு கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து வழிபடுகிறார்கள். இதனால் புதிய வீடு கட்டும் யோகம் வாய்க்கும் என்று நம்புகிறார்கள்.

    இந்த ஆலயத்தில் கார்த்திகை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். கார்த்திகை மாதத்தில்5 வெள்ளிக்கிழமைகள், 5 ஞாயிற்றுக்கிழமைகள் விசேஷ பூஜைகள் செய்யப்படும். சித்திரை மாதத்தில் 10 நாள் பிரம்மோற்சவம் நடைபெறும். வைகாசியில் நரசிம்மர் ஜெயந்தி, காஞ்சி கருடசேவை, ஆடிப் பூரம், ஆவணியில் பவித்ரோற்சவம், புரட்டாசியில் நவராத்திரி, ஐப்பசியில் மணவாளமாமுனி உற்சவம், மார்கழியில் ராப்பத்து, பகல் பத்து உற்சவம், தை பொங்கல் விழா, மாசியில் தொட்டாச்சாரியா உற்சவம் போன்றவை நடைபெறுகின்றன. யோக நரசிம்மராக கண் மூடிய நிலையில் இருக்கும் இத்தல மூலவர், கார்த்திகை மாதத்தில் மட்டும் கண் திறந்து அடியாளர்களுக்கு அருள்புரிவதாக ஐதீகம். குறிப்பாக கார்த்திகை ஞாயிற்றுக்கிழமையில் இந்த நரசிம்மரை வழிபடுவது மிகவும் விசேஷமாக சொல்லப்படுகிறது.

    சங்கு, சக்கரத்துடன் ஆஞ்சநேயர்

    யோக நரசிம்மர் அருளும் மலைக்கு எதிரில் 406 படிகளுடன் அமைந்த அழகிய குன்றின் மீது, யோக ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். நான்கு கரங்களுடன் இருக்கும் இவர் ஒரு கையில் சங்கும், மற்றொரு கையில் சக்கரமும், மீதமுள்ள இரண்டு கரங்களில் ஜெபமாலையும் தாங்கி காட்சி தருகிறார். சிறிய மலையில் இருந்து பார்த்தால் யோக ஆஞ்சநேயரின் கண்கள் நேராக பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரின் திருவடி நோக்கி இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளதாம்.

    சப்த ரிஷிகள் இந்த மலையில் தவம் இருந்தபோது, அவர்களுக்கு காலன், யோகன் என்ற இரண்டு அரக்கர்களால் இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து பெருமாள், ஆஞ்சநேயரை இத்தலம் சென்று சப்த ரிஷிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி ஆணையிட்டார். அதன்படி ஆஞ்சநேயர் இங்கு வந்து, இரண்டு அரக்கர்களுடன் போரிட்டார். ஆனால் அரக்கர்களை வெல்ல முடியவில்லை. இதையடுத்து பெருமாளிடம் இருந்து அவரது சங்கு, சக்கரத்தை வாங்கி, அதனைக் கொண்டு இரண்டு அரக்கர்களையும் விரட்டியடித்து, ரிஷிகளுக்கு பாதுகாப்பு அளித்தார். அதன்பிறகுதான் சப்த ரிஷிகளுக்கு பெருமாள், யோக நரசிம்மராக இங்கு காட்சியளித்தார். அந்தக் காட்சியை ஆஞ்சநேயரும் கண்டுகளித்தார்.

    அப்போது நரசிம்மர், "நீயும் இங்கு யோக நிலையில், என்னுடைய சங்கு, சக்கரத்தை ஏந்தி இரு. என்னுடைய பக்தர்களின் குறையை போக்கி அவர்களுக்கு அருள்புரிவாயாக" என்றார். அதன்படியே நரசிம்மர் கோவிலுக்கு அருகில் உள்ள குன்றில், ஆஞ்சநேயரும் யோக நிலையில் அருள்பாலித்து வருகிறார்.

    அமைவிடம்

    வேலூரில் இருந்து 52 கிலோமீட்டர் தூரத்திலும், ராணிப்பேட்டையில் இருந்து 29 கிலோமீட்டர் தூரத்திலும், திருத்தணியில் இருந்து 26 கிலோமீட்டர் தூரத்திலும் சோளிங்கர் யோக நரசிம்மர் ஆலயம் இருக்கிறது.

    • விருந்தாளிகள் அடிக்கடி வரும் வீடு அல்லாஹ் நேசிக்கும் வீடு.
    • அத்தகைய வீட்டில் இறைவனின் கருணையும், அருளும் நிரம்பி இருக்கும்.

    விருந்தினரை உபசரிப்பதன் அவசியம் குறித்து இஸ்லாம் அதிகமாக வலியுறுத்தியுள்ளது. விருந்தினர்களை உபசரிப்பது ஒரு வணக்கமாகும் என்றும், விருந்து அளித்து உபசரிப்பது இறைநம்பிக்கையின் ஒரு அங்கம் என்றும் இஸ்லாம் குறிப்பிட்டுள்ளது. விருந்தினர்களை உபசரிக்காதவரிடம் இறை நம்பிக்கையும், மறுமை நம்பிக்கையும் இருக்க முடியாது என்று நபிமொழி வலியுறுத்துகிறது.

    "யார் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புகிறாரோ, அவர் தனது விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபுஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

    "யார் விருந்தழைப்பை ஏற்க மறுக்கிறாரோ, அவர் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்துவிட்டார்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபுஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

    விருந்துக்கு அழைக்கும்போது அதை மறுப்பவர்கள் அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் கட்டுப்பட்டவர்களாக இருக்க முடியாது என்பதில் இருந்து விருந்துக்கு பதிலளிப்பதும் கடமை என்பதை நாம் உணரலாம்.

    விருந்தோம்பல் குறித்த ஒரு சரித்திர நிகழ்வை காண்போம்:

    ஒரு பெண், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தனது கணவர் அதிக விருந்தினர்களை அழைப்பதாகவும், அவர்களுக்கு உணவு தயாரித்து உபசரிப்பதில் தான் சோர்வடைந்து விடுவதாகவும் நபிகளாரிடம் முறையிட்டார்.

    நபி (ஸல்) அவர்கள் அந்தப்பெண்ணுக்கு உடனடியாக பதில் சொல்லவில்லை. அவர் சொல்வதை பொறுமையாக கேட்டுக்கொண்டார். சிறிது நேரம் கழித்து அந்தப்பெண் அங்கிருந்து சென்றபிறகு, அந்தப்பெண்ணின் கணவரை நபிகளார் அழைத்தார். அவரிடம், "நான் இன்று உங்கள் வீட்டுக்கு விருந்தாளியாக வருகிறேன்" என்று கூறினார்கள்.

    அந்த மனிதர் மிகவும் மகிழ்ச்சியடைந்து, உங்கள் வருகைக்காக நான் சிறப்பான ஏற்பாடு செய்கிறேன் என்றபடி தன் வீட்டிற்கு சென்றார்.அங்கு தனது மனைவியிடம் "அல்லாஹ்வின் தூதர் இன்று நம் வீட்டிற்கு விருந்தினராக வருகிறார்கள்" என்று கூறினார்.

    அவரது மனைவியும் இதைக்கேட்டு மகிழ்ந்தார். உடனே நபிகளாரை உபசரிக்கும் ஏற்பாடுகளில் கணவன்-மனைவி இருவரும் ஈடுபட்டார்கள். சுவையான உணவு வகைகளை தயாரித்தனர். நபிகளாரும் அவர்கள் வீட்டுக்கு வந்து விருந்து உபசரிப்பை அன்புடன் ஏற்றுக்கொண்டார்கள்.

    பின்னர், நபி ஸல் அவர்கள் அந்த மனிதரிடம், "நான் உங்கள் வீட்டை விட்டு வெளியேறும்போது உங்கள் வீட்டின் கதவை உங்கள் மனைவியைப் பார்க்கச் சொல்லுங்கள்" என்று கூறிவிட்டு புறப்பட்டார்கள்.

    நாயகம் அவர்கள் கூறியபடி கணவர் தன் மனைவியிடம் தெரி விக்க, அவரும் நபிகள் புறப்படும் போது தனது வீட்டின் வாசல் கதவு பகுதியை பார்த்தார். அப்போது அந்த வீட்டில் இருந்த தீங்கு விளைவிக்கும் உயிரினங்கள் மற்றும் தீய சக்திகள் வீட்டைவிட்டு வெளியேறியது. இதைப்பார்த்து அந்த பெண்ணும் அவரது கணவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் அந்த தம்பதிகள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது நபிகளார் கூறும்போது, "உங்கள் வீட்டுக்கு வந்த விருந்தாளி உங்கள் வீட்டை விட்டு வெளியேறும்போது அவருடன் எல்லாவிதமான தீமைகளும், சோதனைகளும், இன்னல்களும், தீங்கிழைக்கும் உயிரினங்களும் உங்கள் வீட்டை விட்டு வெளியேறும்" என்றார்கள்.

    விருந்தாளிகள் அடிக்கடி வரும் வீடு அல்லாஹ் நேசிக்கும் வீடு. அத்தகைய வீட்டில் இறைவனின் கருணையும், அருளும் நிரம்பி இருக்கும். நபி (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்களிடம் பேசும்போது: 'அல்லாஹ் ஒரு மக்களுக்கு நன்மையை நாடினால், அவர்களுக்கு அன்பளிப்பை அனுப்புகிறான்', என்றார்கள். அப்போது தோழர்கள், 'நாயகமே அது என்ன அன்பளிப்பு?' என்று கேட்டார்கள். இதற்கு நபிகளார் பதில் அளிக்கையில், "விருந்தாளி வரும் வீட்டில் உள்ள பாவங்கள் வெளியேற்றப்படுகின்றன" என்றார்கள்.

    மற்றுமொரு நிகழ்வை காண்போம்:

    ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் தங்களது வீட்டில் இருந்து புறப்பட்டார்கள். அப்போது அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் அங்கு வந்தார்கள்.

    "இந்த நேரத்தில் எங்கே செல்கிறீர்கள்?" என்று அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.

    அவ்விருவரும் "பசி" என்றனர்.

    "நீங்கள் எதற்காகப் புறப்பட்டுள்ளீர்களோ அதற்காகவே நானும் புறப்பட்டுள்ளேன்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    பின்னர் மூவரும் அன்சாரி தோழர் ஒருவரின் வீட்டிற்கு சென்றனர். நபி (ஸல்) அவர்களையும், அவர்களின் இரு தோழர்களையும் கண்டு, "எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இன்றைய தினம் சிறந்த விருந்தினர்களைப் பெற்றவர், என்னைவிட யாரும் இல்லை" என்று அவர் கூறினார்.

    பின்னர் நபிகளாருக்கும் அவரது தோழர்களுக்கும் சிறப்பான விருந்தளித்து கவுரவித்தார். அப்போது, "அல்லாஹ்வின் மீது ஆணையாக! இந்த பாக்கியம் பற்றியும் மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள். பசியோடு வந்தீர்கள், வயிறு நிரம்பி திரும்பிச் செல்கிறீர்கள்" என்று அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபுஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்).

    விருந்தினர்களை உபசரிப்பது எத்தகைய சிறப்பு மிக்கது என்பதையும், இதன் மூலம் ஒருவர் பல்வேறு சிறப்புகளை பெற முடியும் என்பதையும் நாம் அறிந்து கொள்ளலாம்.

    அப்துல் அஹது, சென்னை.

    • குறிப்பிட்ட பானங்களை பருகினால், உடல் எடை குறைவதோடு கோடை உஷ்ணத்தில் இருந்தும் தங்களை பாதுகாத்துக்கொள்ளலாம்.
    • கோடை காலத்தில் பழங்கள், காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

    உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் தற்போது குறிப்பிட்ட பானங்களை பருகினால், உடல் எடை குறைவதோடு மட்டுமின்றி- கோடை உஷ்ணத்தில் இருந்தும் தங்களை பாதுகாத்துக்கொள்ளலாம். அத்தகைய பானங்கள் பற்றி பார்ப்போம்!

    எலுமிச்சை-வெள்ளரி பானம்: சிறிய வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை பழம் இரண்டையும் சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். அதனை அகன்ற ஜாரில் போட்டு இரண்டு டம்ளர் நீர் நிரப்பிக்கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு புதினா இலைகளையும் சேர்த்து அரைக்கவேண்டும். இந்த சாறினை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் பருகி வரலாம். இது குறைந்த கலோரிகளை கொண்டது. அதனால் உடலில் சேரும் கலோரிகளை கட்டுப்படுத்துவதோடு, நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்ளவும் உதவும். இதனை பருகினால் நாள் முழுவதும் உற்சாகத்துடன் செயல்படலாம்.

    லவங்கப்பட்டை, ஸ்ட்ராபெர்ரி பானம்: 4-5 ஸ்ட்ராபெர்ரி பழங்களை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். சிறிதளவு லவங்கப்பட்டை, புதினா சேர்த்து மிக்சியில் போட்டு அரைக்கவும். அதனை வடிகட்டி, ஒரு மணி நேரம் கழித்து பருகலாம். இரவில் பிரிட்ஜில் வைத்துவிட்டு காலையிலும் பருகலாம். கோடை காலத்தில் உடல் வெப்பத்தை குறைப்பதோடு, எடை குறையவும் உதவும்.

    மோர்: பசியின்மை, செரிமான கோளாறு கொண்டவர்களுக்கும், அதிக உடல் எடை கொண்டவர்களுக்கும் மோர் சிறந்த நிவாரணம் தரும். வயிறு சார்ந்த பிரச்சினைகளை கொண்டவர்கள் தினமும் மோர் அருந்துவது நல்லது. மிக்சியில் ஒரு டம்ளர் மோர் ஊற்றி அதனுடன் சிறிதளவு புதினா, கொத்தமல்லி இலைகள், சிறிதளவு கேரட் சேர்த்து விழுதாக அரைத்து, பருகலாம்.

    எலுமிச்சை சாறு கலந்த கிரீன் டீ: கிரீன் டீயில் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி மற்றும் பாலிபினால்கள் இருக்கின்றன. இவை உடல் எடையை குறைக்க உதவும். சூடான நீரில் கிரீன் டீ பேக் ஒன்றை போடவும். அதனுடன் அரை எலுமிச்சை பழ சாறு கலந்து பருகலாம். வெறுமனே கிரீன் டீ பருகுவதற்கு பதிலாக எலுமிச்சை பழ சாறு சேர்ப்பது சிறந்த பலனை கொடுக்கும்.

    எலுமிச்சை, இஞ்சி, தேன் பானம்: அகன்ற பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீர் ஊற்றி கொதிக்கவிடவும். அதனுடன் ஒரு துண்டு இஞ்சியை நறுக்கி சேர்க்கவும். நன்கு கொதித்ததும் இறக்கிவிட்டு தலா ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, தேன் கலந்து இரண்டு நிமிடங்கள் மூடி வைக்கவும். பின்பு அந்த நீரை வடிகட்டி பருகவும். உடல் எடை குறைப்புக்கு இது சிறந்த பானமாக கருதப்படுகிறது.

    கேரட் - ஆரஞ்சு ஜூஸ்: கேரட்டில் நார்ச்சத்து, பீட்டா கரோட்டின் போன்றவை இருப்பதால் பசியை கட்டுப்படுத்தும். குறைவாக சாப்பிடுவதற்கும் வழிவகுக்கும். ஆரஞ்சு பழத்தில் இருக்கும் வைட்டமின் சி எடையை குறைப்பதோடு, நீர்ச்சத்தையும் தக்கவைக்கும். கேரட், ஆரஞ்சு பழம் இரண்டையும் தோல் நீக்கி மிக்சியில் போட்டு அரைத்து ஜூஸாக்கிக்கொள்ளவும். அதனுடன் சிறிதளவு மிளகு தூள், உப்பு சேர்த்து பருகவேண்டும்.

    காய்கறி-பழ ஜூஸ்: கோடை காலத்தில் பழங்கள், காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். அவைகளில் இருக்கும் நார்ச்சத்துக்கள் பசியை கட்டுப்படுத்தி, அதிகமாக உணவு சாப்பிடுவதை தடுக்கும். கேரட், ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, கீரை, பீட்ரூட் போன்றவற்றை ஜூஸாக்கி பருகலாம். அவற்றுடன் சிறிதளவு கல் உப்பு, மிளகு தூள் சேர்த்துக்கொள்ளலாம். இவற்றில் பெரும்பாலானவை கிளைசெமிக் குறியீட்டு எண்களை குறைவாக கொண்டிருப்பதால் சர்க்கரை அளவையும் கட்டுக்குள்வைக்கும்.

    அன்னாசி லெமனேட் பானம்: அன்னாசி பழத்தில் எடையை குறைக்க உதவும் கொழுப்பு அமில ஆக்சிடென்டுகள் இருக்கின்றன. ஒரு அன்னாசி பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் அரைத்து ஜூஸாக்கி கொள்ளவும். அதனுடன் எலுமிச்சை பழசாறு, சிறிதளவு மிளகு தூள் கலந்து பருகலாம். காலை வேளையில் இந்த பானத்தை பருகுவது எடையை குறைப்பதோடு, புத்துணர்ச்சியையும் தரும்.

    பீட்ரூட்-புதினா ஜூஸ்: இரண்டு பீட்ரூட்களை தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் லேசாக அரைத்துக்கொள்ளவும். அதனுடன் ஒரு கைப்பிடி புதினா இலை, இரண்டு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து ஜூஸாக்கி தேவைக்கு நீர் கலந்து பருகலாம். பீட்ரூட் இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்டது. அதில் நார்ச்சத்தும் அதிகம். வயிற்று ஆரோக்கியத்தை பாதுகாக்கக்கூடியது. குடலை சுத்தம் செய்வதுடன் கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் உதவும்.

    • இனிமையான தருணங்களை நினைத்துப் பார்க்க இப்போது யாருக்கும் நேரமில்லை.
    • கண்டித்து உணர்த்துபவர்களிடம் தயக்கம் இன்றி மன்னிப்பு கேட்கலாம்.

    "சிட்சித்து, உம்முடைய வேதத்தைக்கொண்டு போதிக்கிற மனுஷன் பாக்கியவான்".

    அன்பானவர்களே, 'சிட்சித்து' என்றால் 'கடிந்து கொள்ளுதல்' அல்லது 'கண்டித்து உணர்த்துதல்' என்று பொருள் படும். தேவனால் கண்டித்து உணர்த்தப்படுகிற மனிதன் பாக்கியவான். ஏன் எனில் தீங்கு அல்லது தீமை வருவதற்கு முன்பாக அவர் நம்மை கண்டித்து உணர்த்துகிறார்.

    வேதம் சொல்கிறது, "இதோ, தேவன் தண்டிக்கிற மனுஷன் பாக்கியவான், ஆகையால் சர்வ வல்லவருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிரும்" என்று யோபுவின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.

    ஆம், பிரியமானவர்களே! எவர் மேல் கர்த்தர் அன்பு வைத்திருக்கிறாரோ அவர்களை கண்டித்து, எச்சரித்து, தீமை செய்யாதபடி அவரை பாதுகாக்கிறார். தன் மீது அன்பு செலுத்துபவர்களை, ஒரு தகப்பனைப்போல கர்த்தர் பாதுகாத்து, கண்டித்து வழி நடத்துகின்றார்.

    ஒரு தகப்பன் தான் நேசிக்கும் மகன் அல்லது மகள் தவறு செய்கிற போது உடனடியாக மனம் பதறிப்போய் அந்த செயலைக்கண்டிக்கிறார். இது அவர் தன் மகன் அல்லது மகள் மீது வைத்திருக்கும் அன்பு, பாசத்தினால் வருவது. ஒரு சிறிய தவறு பெரிய குற்றத்தில் கொண்டு போய் விடாதபடி எச்சரித்து திருத்துவது ஒரு அன்பான தந்தையின் கடமை. பெற்றோர் தங்கள் பிள்ளைகள் மீது வைத்துள்ள நிபந்தனை இல்லாத, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத பாசத்தின், அன்பின் வெளிப்பாடாக இது அமைகின்றது. அதுபோலவே தேவனும் நம்மீது எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அன்புடன் செயல்படுகின்றார்.

    ஆகவே, தேவன் ஒரு விஷயத்தில் நம்மை எச்சரிக்கிறார் என்றால் நாம் மனம்திரும்பி நல்ல வழியில் வாழ வேண்டும் என்றே விரும்புகிறார் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். அதுபோலவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கண்டித்து வளர்க்கிறார்கள் என்றால், வருங்காலத்தில் அவர்கள் சிறந்தவர்களாக மாற வேண்டும் என்பதற்காகத்தான்.

    பெற்றோரிடம் இருந்து எச்சரிக்கை, கண்டிப்பு வரும் போது அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டு மனம் மாற வேண்டும். மாறாக அதை எதிர்ப்பதோ, அதற்காக பெற்றோர் மீது கோபம் கொள்வதோ, ஆலோசனை கூறுபவர்களை வெறுப்பதோ கூடாது. ஆனால் இன்றைக்கு நாம் வாழும் உலகில், நம்மால் உதவி பெற்றவர்களுக்கு ஏதோ ஒரு விஷயத்தில் நாம் அறிவுரை, ஆலோசனை வழங்கினால் அவர்கள் நம்மை எதிரியாய் பார்க்கும் நிலை தான் உள்ளது.

    நட்போ, காதலோ, குடும்பமோ எல்லா உறவுகளுமே இப்போதெல்லாம் தொட்டால் சுருங்கும் தொட்டாஞ்சிணுங்கியாக அல்லது சற்றே அழுத்தினால் உடைந்துவிடும் முட்டைகளாக மாறிவருகின்றன.

    ஏதோ ஒரு விஷயத்தில் மாற்றுக்கருத்து வந்துவிட்டாலோ, அல்லது தவறைச் சுட்டிக்காட்டி விட்டாலோ அவ்வளவு தான்... ஒன்று விலகல்.. அல்லது நீடித்த மவுனம்.. அல்லது நிரந்தர பிரிவு. இதுதான் இன்றைய வாழ்வியல் வழக்கமாக உள்ளது.

    அதுநாள் வரை நிகழ்ந்த பல அன்பான, இனிமையான தருணங்களை நினைத்துப் பார்க்க இப்போது யாருக்கும் நேரமில்லை.

    செடிக்குத் தண்ணீர் ஊற்றி மரமாக்கிய தோட்டக்காரனாய் இருந்தாலும் ஒரு இலையைக் கிள்ள அவனுக்கு உரிமை இல்லாத சூழல் தான் இப்போது காணப்படுகிறது. `தண்ணீர் ஊற்றியது ஏனோ கணக்கில் இல்லை; இலை கிள்ளியதுதான் கணக்கு' என்பதுபோல உலக வாழ்க்கை காணப்படுகின்றது.

    குழந்தைகள் கடற்கரையில் மணிக்கணக்கில் கட்டும் மணல் வீட்டின் உறுதியும், ஆயுளும் எவ்வளவு நேரம் நீடிக்குமோ அதுபோலத்தான் உறவுகள், நட்பின் ஆயுட்காலம் என்பது போல மாறிப்போனது கவலைப்பட வேண்டிய விஷயம்.

    உறவுகள் பலவீனப்படாமல் நீடிக்க.. அன்பான தருணங்களையும், தக்க சமயத்தில் கிடைத்த பரஸ்பர உதவிகளையும் பாராட்டலாம். அவற்றை அடிக்கடி நினைத்துப் பார்க்கலாம். சுட்டிக்காட்டப்படும், எச்சரிக்கை விடப்படும், கண்டித்து உணர்த்தப்படுகிற தவறுகளை பிடிவாதமாக மறுக்கக்கூடாது. ஒருவேளை நாம் செய்வது தவறுதானா என்று நிதானமாக சிந்தித்துப்பார்க்க வேண்டும். ஒரு வேளை நாம் செய்வது தவறென்றால் அச்சூழ்நிலையை விட்டு மாற வேண்டும்.

    கண்டித்து உணர்த்துபவர்களிடம் தயக்கம் இன்றி மன்னிப்பு கேட்கலாம். அப்படி மன்னிப்பு கேட்காவிட்டால் கூட 'நான்' என்ற வீம்பைத் தொடராமல், மன்னிக்கும் பண்பை வளர்த்துக்கொள்ளலாம்.

    நம் மீது கூறப்படும் கண்டிப்புகளை, எச்சரிக்கைகளை, நல் ஆலோசனைகளை, மாற்றுக் கருத்துக்களை அப்படியே உதறி விடக்கூடாது. அவைகள், நம் நன்மைக்காக நாம் மனந்திருந்தி நல்ல வழியில் வாழ்வதற்காக கூறப்பட்டவை என்பதை ஏற்க வேண்டும். அதை ஆலோசனை செய்து முடிவெடுக்க வேண்டும்.

    இறைவன் மூலம் வரும் எச்சரிக்கைகள், பெற்றோர் மூலம் வரும் ஆலோசனைகள் எப்போதுமே நம்மை நல்வழிப்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    'பிரம்பும்' கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்' என்று வேதாகமம் சொல்கிறது. ஆகவே பெற்றோர்கள், ஆசிரியர்கள், நல்ல நண்பர்கள் மூலம் நமக்கு வருகின்ற கண்டிப்புகள், ஆலோசனைகள் நம்மை நாளைக்கு உயர்வான இடத்தில் நிச்சயமாக கொண்டு போய் சேர்க்கும்.

    நல் ஆலோசனைகளை ஏற்போம், நாளும் நல்வழியில் நடப்போம்.

    நெல்லை மானேக்சா.

    • தினமும் விளக்கேற்றினால் வீட்டில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறையும்.
    • எந்தக் கிழமையில் விளக்கேற்றினால் எந்த மாதிரியான பலன் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம்.

    வார நாட்களில் எந்தக் கிழமையில் விளக்கேற்றினால் எந்த மாதிரியான பலன் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம்.

    * ஞாயிறு:- இறை சிந்தனை தோன்றும். பித்ரு தோஷம், இதயம், வயிறு, ரத்தம், நரம்பு சம்பந்தப்பட்ட நோய் அகலும்.

    * திங்கள்:- மனவளர்ச்சி பிரச்சினை உள்ள குழந்தைகளுக்கு அது சீராகும். கவலை, பயம், தாழ்வு மனப்பான்மை மறையும்.

    *செவ்வாய்:- செவ்வாய் தோஷம், முன்கோபம், கேதுவால் ஏற்படும் பிரச்சினைகள் அகலும். பெண்களுக்கு திருமணத் தடை நீங்கும்.

    * புதன்:- கல்வியில் தடை இருந்தால் அது அகலும். ஞாபக மறதி சரியாகும்.

    * வியாழன்:- புத்திரதோஷம், குழந்தைகளால் ஏற்படும் பிரச்சினைகள், குடும்பத்தில் மகிழ்ச்சியின்மை போன்றவை சரியாகும். ஆண்களின் திருமணத் தடை விலகும்.

    * வெள்ளி:- தம்பதிகளிடையே ஒற்றுமை குறைவு இருந்தால் அது சீராகும். கடன் பிரச்சினை, மனவேதனை நீங்கும்.

    * சனி:- ஆரோக்கிய குறைபாடு, தொழில் நஷ்டம், வேலையில் நிரந்தரமின்மை போன்ற பிரச்சினைகள் அகலும். ராகுவால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.

    • மொத்தம் 2,232 சுலோகங்கள் 649 நாட்கள் பாராயணம் செய்யப்பட்டது.
    • ஒவ்வொரு வசனமும் ஒரு மந்திரம்.

    மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டி 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 25-ந்தேதி திருமலையில் ஏழுமலையான் கோவில் எதிரே உள்ள நாத நீராஞ்சன மண்டபத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தால் பாலகாண்ட பாராயண நிகழ்ச்சி தொடங்கியது. அந்த நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவடைந்தது.

    புகழ்பெற்ற சமஸ்கிருத அறிஞரும், தேசிய சமஸ்கிருத பல்கலைகழகத்தின் பேராசிரியருமான பிரவா ராமகிருஷ்ண சோமயாஜி பங்கேற்று பாலகாண்டத்தில் உள்ள சுலோகங்களை விளக்க உதாரணங்களுடன் ஏறக்குறைய 2 ஆண்டுகளாக விளக்கி உலக பார்வையாளர்கள், பக்தர்களை வியக்க வைத்தார்.

    பாலகாண்டத்தின் 77 அத்தியாயங்களில் இருந்து மொத்தம் 2,232 சுலோகங்கள் 649 நாட்கள் பாராயணம் செய்யப்பட்டதாக, திருமலை தர்மகிரி வேத விஞ்ஞான பீடத்தின் முதல்வர் குப்பா சிவசுப்பிரமணிய அவதானி கூறினார்.

    அவர் மேலும் பேசியதாவது:-

    உலக நலன் கருதி திருப்பதி தேவஸ்தானம் நடத்தும் பாராயண யாகத்தின் ஒரு பகுதியாக மந்திரம் பாராயணம் தொடங்கியது. அதில் உள்ள ஒவ்வொரு வசனமும் ஒரு மந்திரம். பாலகாண்டத்தின் மொத்த 77 சர்க்கங்களில் 649 நாட்களுக்கு 2,232 சுலோகங்கள் சொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு வசனமும் அர்த்தத்துடன் உள்ளது. அதைச் சமுதாயத்துக்குப் பொருத்தி பண்டிதர்கள் கருத்துரை வழங்கி உள்ளனர்.

    பேடி ஆஞ்சநேயர் சன்னதியில் ராம அவதாரமான வெங்கடேஸ்வரசாமி சன்னதியில் நாதநீராஞ்சன மண்டபத்தில் பாலகாண்ட பாராயணம் செய்வது மிகப் பெரிய விஷயம். வால்மீகி மகரிஷியிடம் ராம நாமஸ்மரணம் எங்கு நடந்தாலும் அங்கே அனுமன் இருப்பார். வால்மீகி மகரிஷி குருவாக மாறி ராமாயணத்தை உலகுக்கு வழங்கினார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அறிஞர்கள் சேஷாச்சாரியுலு, மாருதி ஆகிேயார் மற்ற அறிஞர்களுடன் சேர்ந்து நேற்று 74-77 சர்க்கங்களில் இருந்து 166 சுலோகங்களை ஓதினார்கள்.

    எஸ்.வி.இசை மற்றும் நடனக் கல்லூரியின் இசை விரிவுரையாளர் வந்தனா நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ராம ஜெயராம சிருங்கார ராமரை வழங்கினார். முடிவில் தனது குழுவினருடன் பஜரே ரகுவீரத்தை மெல்லிசையாக வழங்கினார்.

    அதைத்தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) தர்மகிரி வேத விஞ்ஞான பீடத்தில் 67 அறிஞர்களுடன் சம்பூர்ண அகண்ட சுந்தர காண்ட பாராயணம் காலை 6 மணியில் இருந்து இரவு 11 மணி வரை தொடர்ந்து கிட்டத்தட்ட 18 மணி நேரம் நடக்கிறது.

    இந்த நிகழ்ச்சி எஸ்.வி.பி.சி. பக்தி சேனலில் தலைமை நிர்வாக அதிகாரி சண்முகக்குமார் மேற்பார்வையில் உலக பக்தர்களுக்காக நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

    நாளை (புதன்கிழமை) காலை 7 மணியில் இருந்து காலை 8 மணி வரை அயோத்தியா காண்டம் நாத நீராஞ்சன மண்டபத்தில் நடக்கிறது. இதிகாசமான ராமாயணத்தின் இந்தப் பகுதியில் அதிகபட்ச சுலோகங்களின் எண்ணிக்கை 4308 ஆக உள்ளது.

    ×