search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    கேட்கும் வரங்களை தரும் சோளிங்கர் யோக நரசிம்மர் திருக்கோவில்
    X

    கேட்கும் வரங்களை தரும் சோளிங்கர் யோக நரசிம்மர் திருக்கோவில்

    • 108 திவ்ய தேசங்களில் இந்த ஆலயம் 65-வது திவ்ய தேசமாகும்.
    • சுமார் 600 அடி உயரம் உள்ள மலை மீது இந்த கோவில் அமைந்திருக்கிறது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளது சோளிங்கர் யோக நரசிம்மர் ஆலயம். மலையின் மீது யோக நரசிம்மர் வீற்றிருக்கிறார். மலையின் அடிவாரத்தில் உற்சவர் மட்டும் அருள்பாலிக்கிறார். இவரது பெயர் 'பக்தவச்சலப் பெருமாள்'. மலையின் ஒரு பகுதியில் யோக ஆஞ்சநேயரும் தரிசனம் தருகிறார்.

    108 திவ்ய தேசங்களில் இந்த ஆலயம் 65-வது திவ்ய தேசமாகும். தொண்டை நாட்டில் உள்ள 22 திவ்ய தேசங்களில் இந்த சோளிங்கர் யோக நரசிம்மர் ஆலயம் மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. ஏனெனில் காஞ்சிபுரத்திற்கும், திருப்பதிக்கும் இடையில் இந்த திவ்ய தேசம் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தை பராங்குச சோழன் என்ற மன்னன் 3-ம் நூற்றாண்டில் கட்டியிருக்கிறான். எனவே இவ்வாலயம் சோழசிம்மபுரம் என்று அழைக்கப்பட்டு, பின்னர் சோளிங்கபுரம் என்றானது. அதுவே மருவி 'சோளிங்கர்' என்று அழைக்கப்படுகிறது.

    தல வரலாறு

    பக்த பிரகலாதனுக்காக காட்சி கொடுத்த நரசிம்மரின் அவதாரத்தை தரிசிக்க, வசிஷ்டர், காசியபர், அத்ரி, ஜமதக்னி, கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர் ஆகிய சப்த ரிஷிகளும் விரும்பினர். ஆனால் பிரகலாதனுக்கு காட்சி கொடுத்த உக்கிர கோலத்தை நீக்கி, சாந்தமாக காட்சியளிக்க வேண்டும் என்று அவர்கள் நரசிம்ம பெருமாளை வேண்டினர். அதற்காக அவர்கள் 7 பேரும் நரசிம்மரை நினைத்து தவம் இருந்த தலம் இதுவாகும். ஒரு காலத்தில் விஸ்வாமித்திர முனிவர், இத்தலத்தில் சிறிதுநேரம் நரசிம்மனை வழிபட்டு, 'பிரம்மரிஷி' பட்டத்தைப் பெற்றார். அதுபோல் தங்களுக்கும் நரசிம்மரின் தரிசனம் உடனடியாக கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, சப்த ரிஷிகளும் இந்த தலத்தை தேர்வு செய்து தவம் இயற்றினர். இதையடுத்து சப்த ரிஷிகளின் விருப்பப்படி, நரசிம்மர் தன்னுடைய கோபத்தை தணித்து யோக நிலையில் காட்சி அளித்தார். அந்த கோலத்திலேயே இந்த ஆலயத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கவும் செய்கிறார்.

    சுமார் 600 அடி உயரம் உள்ள மலை மீது யோக நரசிம்மர் கோவில் அமைந்திருக்கிறது. அடிவாரத்தில் இருந்து இந்த ஆலயத்தை அடைவதற்கு 1,305 படிக்கட்டுகளை கடந்து செல்ல வேண்டும். மலையின் மீது ஒரு ஏக்கர் பரப்பளவில், 200 அடி நீளம், 150 அடி அகலத்தில் யோக நரசிம்மர் கோவில் அமைந்திருக்கிறது. இங்கே சிம்ஹ கோஷ்டாக்ருதி விமானத்தின் கீழ் யோக நரசிம்மர் அருள்பாலித்து வருகிறார். இந்த நரசிம்மப் பெருமாளை, திருமங்கையாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள்.

    மூலவரான யோக நரசிம்மர் கிழக்கு நோக்கி யோகாசனத்தில் அமர்ந்துள்ளார். இவர் சாளக்கிராம மாலை அணிந்திருக்கிறார். இவரது வடிவத்தை சிலா வடிவம் என்று போற்றுகின்றனர். அருகில் தாயார் அமிர்தவல்லி இருக்கிறார். ஊரின் மையத்தில் உற்சவருக்கு தனிக்கோவில் அமைந்திருப்பது சிறப்புக்குரியது. பிரம்மோற்சவம் போன்ற விழாக்கள் அனைத்தும் அங்குதான் நடைபெறும். இங்கிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, மலை மீதுள்ள யோக நரசிம்மர் ஆலயம்.

    இந்த மலை மீது 24 நிமிடங்கள் இருந்தாலே, ஒருவர் முக்தியை அடைவார் என்று சொல்லப்படுகிறது. மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்தது, நரசிம்மர் அவதாரம். இறைவன் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறார் என்று பறைசாற்றிய அவதாரம் இது. அதோடு தன் பக்தர்களுக்காக உடனடியாக காட்சி தந்து அருள்பாலிப்பவர். எனவே நரசிம்மரை வழிபடுபவர்களுக்கு, அவர்கள் வேண்டிய வரம் உடனடியாக கிடைக்கும் என்பது ஐதீகம்.

    பெருமாளுக்கு, ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு வழிபாட்டு நடைமுறைகள் இருக்கின்றன. சில கோவில்களில் மொட்டை போடுவார்கள், சில கோவில்களில் உண்டியல் காணிக்கை செலுத்துவார்கள். ஆனால் சோளிங்கர் யோக நரசிம்மர் ஆலயத்தில் இவை எதுவும் செய்ய வேண்டியதில்லை. ஒரே கல்லின் மீது குன்றுபோல் அமைந்த இந்த மலை மீது 1,300 படிகளைக் கடந்து வந்து யோக நரசிம்மரை தரிசித்தாலேயே போதுமானது, பக்தர்கள் கேட்கும் வரங்களை அவர் அளித்து விடுவார்.

    இத்தல இறைவனுக்கு கற்கண்டு, வெல்லம், வாழைப்பழம், தயிர்சாதம் நைவேத்தியமாக படைக்கிறார்கள். வேட்டி-சேலையும் நேர்த்திக்கடனாக செலுத்தப்படுகிறது. வெள்ளிக்கிழமை தோறும் இத்தல நரசிம்மருக்கும், தாயாருக்கும் அபிஷேகம் நடைபெறும். அப்போது இறைவனை அபிஷேகிக்கும் பால், தயிர், தேன், சர்க்கரை, ஆகியவற்றை பிரசாதமாக வழங்குகிறார்கள். மனவளர்ச்சி குன்றியவர்கள், பில்லி, சூனியம், ஏவல், தீராத வியாதி இருப்பவர்கள், யோக நரசிம்மரை வழிபட்டால் விரைவில் குணமாவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். தாம்பத்ய பிரச்சினை, குழந்தையின்மை, திருமணத்தடை நீக்கும் தலமாகவும் இது விளங்குகிறது. இந்த கோவிலுக்கு மலையேறும் பக்தர்கள், மலைப்பாதையின் வழியில், சிறுசிறு கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து வழிபடுகிறார்கள். இதனால் புதிய வீடு கட்டும் யோகம் வாய்க்கும் என்று நம்புகிறார்கள்.

    இந்த ஆலயத்தில் கார்த்திகை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். கார்த்திகை மாதத்தில்5 வெள்ளிக்கிழமைகள், 5 ஞாயிற்றுக்கிழமைகள் விசேஷ பூஜைகள் செய்யப்படும். சித்திரை மாதத்தில் 10 நாள் பிரம்மோற்சவம் நடைபெறும். வைகாசியில் நரசிம்மர் ஜெயந்தி, காஞ்சி கருடசேவை, ஆடிப் பூரம், ஆவணியில் பவித்ரோற்சவம், புரட்டாசியில் நவராத்திரி, ஐப்பசியில் மணவாளமாமுனி உற்சவம், மார்கழியில் ராப்பத்து, பகல் பத்து உற்சவம், தை பொங்கல் விழா, மாசியில் தொட்டாச்சாரியா உற்சவம் போன்றவை நடைபெறுகின்றன. யோக நரசிம்மராக கண் மூடிய நிலையில் இருக்கும் இத்தல மூலவர், கார்த்திகை மாதத்தில் மட்டும் கண் திறந்து அடியாளர்களுக்கு அருள்புரிவதாக ஐதீகம். குறிப்பாக கார்த்திகை ஞாயிற்றுக்கிழமையில் இந்த நரசிம்மரை வழிபடுவது மிகவும் விசேஷமாக சொல்லப்படுகிறது.

    சங்கு, சக்கரத்துடன் ஆஞ்சநேயர்

    யோக நரசிம்மர் அருளும் மலைக்கு எதிரில் 406 படிகளுடன் அமைந்த அழகிய குன்றின் மீது, யோக ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். நான்கு கரங்களுடன் இருக்கும் இவர் ஒரு கையில் சங்கும், மற்றொரு கையில் சக்கரமும், மீதமுள்ள இரண்டு கரங்களில் ஜெபமாலையும் தாங்கி காட்சி தருகிறார். சிறிய மலையில் இருந்து பார்த்தால் யோக ஆஞ்சநேயரின் கண்கள் நேராக பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரின் திருவடி நோக்கி இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளதாம்.

    சப்த ரிஷிகள் இந்த மலையில் தவம் இருந்தபோது, அவர்களுக்கு காலன், யோகன் என்ற இரண்டு அரக்கர்களால் இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து பெருமாள், ஆஞ்சநேயரை இத்தலம் சென்று சப்த ரிஷிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி ஆணையிட்டார். அதன்படி ஆஞ்சநேயர் இங்கு வந்து, இரண்டு அரக்கர்களுடன் போரிட்டார். ஆனால் அரக்கர்களை வெல்ல முடியவில்லை. இதையடுத்து பெருமாளிடம் இருந்து அவரது சங்கு, சக்கரத்தை வாங்கி, அதனைக் கொண்டு இரண்டு அரக்கர்களையும் விரட்டியடித்து, ரிஷிகளுக்கு பாதுகாப்பு அளித்தார். அதன்பிறகுதான் சப்த ரிஷிகளுக்கு பெருமாள், யோக நரசிம்மராக இங்கு காட்சியளித்தார். அந்தக் காட்சியை ஆஞ்சநேயரும் கண்டுகளித்தார்.

    அப்போது நரசிம்மர், "நீயும் இங்கு யோக நிலையில், என்னுடைய சங்கு, சக்கரத்தை ஏந்தி இரு. என்னுடைய பக்தர்களின் குறையை போக்கி அவர்களுக்கு அருள்புரிவாயாக" என்றார். அதன்படியே நரசிம்மர் கோவிலுக்கு அருகில் உள்ள குன்றில், ஆஞ்சநேயரும் யோக நிலையில் அருள்பாலித்து வருகிறார்.

    அமைவிடம்

    வேலூரில் இருந்து 52 கிலோமீட்டர் தூரத்திலும், ராணிப்பேட்டையில் இருந்து 29 கிலோமீட்டர் தூரத்திலும், திருத்தணியில் இருந்து 26 கிலோமீட்டர் தூரத்திலும் சோளிங்கர் யோக நரசிம்மர் ஆலயம் இருக்கிறது.

    Next Story
    ×