search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நல்லதை ஏற்போம்... நல்வழியில் நடப்போம்...
    X

    நல்லதை ஏற்போம்... நல்வழியில் நடப்போம்...

    • இனிமையான தருணங்களை நினைத்துப் பார்க்க இப்போது யாருக்கும் நேரமில்லை.
    • கண்டித்து உணர்த்துபவர்களிடம் தயக்கம் இன்றி மன்னிப்பு கேட்கலாம்.

    "சிட்சித்து, உம்முடைய வேதத்தைக்கொண்டு போதிக்கிற மனுஷன் பாக்கியவான்".

    அன்பானவர்களே, 'சிட்சித்து' என்றால் 'கடிந்து கொள்ளுதல்' அல்லது 'கண்டித்து உணர்த்துதல்' என்று பொருள் படும். தேவனால் கண்டித்து உணர்த்தப்படுகிற மனிதன் பாக்கியவான். ஏன் எனில் தீங்கு அல்லது தீமை வருவதற்கு முன்பாக அவர் நம்மை கண்டித்து உணர்த்துகிறார்.

    வேதம் சொல்கிறது, "இதோ, தேவன் தண்டிக்கிற மனுஷன் பாக்கியவான், ஆகையால் சர்வ வல்லவருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிரும்" என்று யோபுவின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.

    ஆம், பிரியமானவர்களே! எவர் மேல் கர்த்தர் அன்பு வைத்திருக்கிறாரோ அவர்களை கண்டித்து, எச்சரித்து, தீமை செய்யாதபடி அவரை பாதுகாக்கிறார். தன் மீது அன்பு செலுத்துபவர்களை, ஒரு தகப்பனைப்போல கர்த்தர் பாதுகாத்து, கண்டித்து வழி நடத்துகின்றார்.

    ஒரு தகப்பன் தான் நேசிக்கும் மகன் அல்லது மகள் தவறு செய்கிற போது உடனடியாக மனம் பதறிப்போய் அந்த செயலைக்கண்டிக்கிறார். இது அவர் தன் மகன் அல்லது மகள் மீது வைத்திருக்கும் அன்பு, பாசத்தினால் வருவது. ஒரு சிறிய தவறு பெரிய குற்றத்தில் கொண்டு போய் விடாதபடி எச்சரித்து திருத்துவது ஒரு அன்பான தந்தையின் கடமை. பெற்றோர் தங்கள் பிள்ளைகள் மீது வைத்துள்ள நிபந்தனை இல்லாத, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத பாசத்தின், அன்பின் வெளிப்பாடாக இது அமைகின்றது. அதுபோலவே தேவனும் நம்மீது எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அன்புடன் செயல்படுகின்றார்.

    ஆகவே, தேவன் ஒரு விஷயத்தில் நம்மை எச்சரிக்கிறார் என்றால் நாம் மனம்திரும்பி நல்ல வழியில் வாழ வேண்டும் என்றே விரும்புகிறார் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். அதுபோலவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கண்டித்து வளர்க்கிறார்கள் என்றால், வருங்காலத்தில் அவர்கள் சிறந்தவர்களாக மாற வேண்டும் என்பதற்காகத்தான்.

    பெற்றோரிடம் இருந்து எச்சரிக்கை, கண்டிப்பு வரும் போது அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டு மனம் மாற வேண்டும். மாறாக அதை எதிர்ப்பதோ, அதற்காக பெற்றோர் மீது கோபம் கொள்வதோ, ஆலோசனை கூறுபவர்களை வெறுப்பதோ கூடாது. ஆனால் இன்றைக்கு நாம் வாழும் உலகில், நம்மால் உதவி பெற்றவர்களுக்கு ஏதோ ஒரு விஷயத்தில் நாம் அறிவுரை, ஆலோசனை வழங்கினால் அவர்கள் நம்மை எதிரியாய் பார்க்கும் நிலை தான் உள்ளது.

    நட்போ, காதலோ, குடும்பமோ எல்லா உறவுகளுமே இப்போதெல்லாம் தொட்டால் சுருங்கும் தொட்டாஞ்சிணுங்கியாக அல்லது சற்றே அழுத்தினால் உடைந்துவிடும் முட்டைகளாக மாறிவருகின்றன.

    ஏதோ ஒரு விஷயத்தில் மாற்றுக்கருத்து வந்துவிட்டாலோ, அல்லது தவறைச் சுட்டிக்காட்டி விட்டாலோ அவ்வளவு தான்... ஒன்று விலகல்.. அல்லது நீடித்த மவுனம்.. அல்லது நிரந்தர பிரிவு. இதுதான் இன்றைய வாழ்வியல் வழக்கமாக உள்ளது.

    அதுநாள் வரை நிகழ்ந்த பல அன்பான, இனிமையான தருணங்களை நினைத்துப் பார்க்க இப்போது யாருக்கும் நேரமில்லை.

    செடிக்குத் தண்ணீர் ஊற்றி மரமாக்கிய தோட்டக்காரனாய் இருந்தாலும் ஒரு இலையைக் கிள்ள அவனுக்கு உரிமை இல்லாத சூழல் தான் இப்போது காணப்படுகிறது. `தண்ணீர் ஊற்றியது ஏனோ கணக்கில் இல்லை; இலை கிள்ளியதுதான் கணக்கு' என்பதுபோல உலக வாழ்க்கை காணப்படுகின்றது.

    குழந்தைகள் கடற்கரையில் மணிக்கணக்கில் கட்டும் மணல் வீட்டின் உறுதியும், ஆயுளும் எவ்வளவு நேரம் நீடிக்குமோ அதுபோலத்தான் உறவுகள், நட்பின் ஆயுட்காலம் என்பது போல மாறிப்போனது கவலைப்பட வேண்டிய விஷயம்.

    உறவுகள் பலவீனப்படாமல் நீடிக்க.. அன்பான தருணங்களையும், தக்க சமயத்தில் கிடைத்த பரஸ்பர உதவிகளையும் பாராட்டலாம். அவற்றை அடிக்கடி நினைத்துப் பார்க்கலாம். சுட்டிக்காட்டப்படும், எச்சரிக்கை விடப்படும், கண்டித்து உணர்த்தப்படுகிற தவறுகளை பிடிவாதமாக மறுக்கக்கூடாது. ஒருவேளை நாம் செய்வது தவறுதானா என்று நிதானமாக சிந்தித்துப்பார்க்க வேண்டும். ஒரு வேளை நாம் செய்வது தவறென்றால் அச்சூழ்நிலையை விட்டு மாற வேண்டும்.

    கண்டித்து உணர்த்துபவர்களிடம் தயக்கம் இன்றி மன்னிப்பு கேட்கலாம். அப்படி மன்னிப்பு கேட்காவிட்டால் கூட 'நான்' என்ற வீம்பைத் தொடராமல், மன்னிக்கும் பண்பை வளர்த்துக்கொள்ளலாம்.

    நம் மீது கூறப்படும் கண்டிப்புகளை, எச்சரிக்கைகளை, நல் ஆலோசனைகளை, மாற்றுக் கருத்துக்களை அப்படியே உதறி விடக்கூடாது. அவைகள், நம் நன்மைக்காக நாம் மனந்திருந்தி நல்ல வழியில் வாழ்வதற்காக கூறப்பட்டவை என்பதை ஏற்க வேண்டும். அதை ஆலோசனை செய்து முடிவெடுக்க வேண்டும்.

    இறைவன் மூலம் வரும் எச்சரிக்கைகள், பெற்றோர் மூலம் வரும் ஆலோசனைகள் எப்போதுமே நம்மை நல்வழிப்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    'பிரம்பும்' கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்' என்று வேதாகமம் சொல்கிறது. ஆகவே பெற்றோர்கள், ஆசிரியர்கள், நல்ல நண்பர்கள் மூலம் நமக்கு வருகின்ற கண்டிப்புகள், ஆலோசனைகள் நம்மை நாளைக்கு உயர்வான இடத்தில் நிச்சயமாக கொண்டு போய் சேர்க்கும்.

    நல் ஆலோசனைகளை ஏற்போம், நாளும் நல்வழியில் நடப்போம்.

    நெல்லை மானேக்சா.

    Next Story
    ×