என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. அதில் புதிய ஸ்மார்ட்போன் 100 எம்.பி. கேமரா கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    சியோமி நிறுவனத்தின் புதிய Mi மிக்ஸ் 4 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. சாம்சங், ஹூவாய் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் தங்களின் ஃபிளாக்‌ஷிப் மாடல்களை அறிமுகம் செய்து வரும் நிலையில், சியோமியும் இந்த பட்டியலில் இணைகிறது.

    அந்த வகையில் சியோமி தனது Mi மிக்ஸ் 4 மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் புதிய ஸ்மார்ட்போனில் மேம்பட்ட டிஸ்ப்ளே, சிறப்பான கேமரா ஹார்டுவேர் மற்றும் புதிய வசதிகள் வழங்கப்படும் என தெரிகிறது. 

    புதிய Mi மிக்ஸ் 4 ஸ்மார்ட்போனில் வாட்டர்ஃபால் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. இதேபோன்ற ஸ்கிரீன் நெக்ஸ் 3 மாடலிலும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே 90 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும். சிறப்பான ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே வழங்க செல்ஃபி கேமரா பாப்-அப் வகையில் வழங்கப்படலாம்.

    Mi சார்ஜ் டர்போ 30 வாட்

    புகைப்படங்களை எடுக்க 108 எம்.பி. திறன் கொண்ட கேமராவினை சியோமி வழங்கும் என கூறப்படுகிறது. ஏற்கனவே சியோமி மற்றும் சாம்சங் அதிக திறன் கொண்ட கேமராவினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் புதிய Mi மிக்ஸ் மாடலில் சியோமி 108 எம்.பி. சென்சாரை வழங்கலாம். 

    இத்துடன் சியோமி Mi மிக்ஸ் 4 மாடலில் 40 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வயர்லெஸ் சார்ஜிங் கொண்டிருக்குமா அல்லது வழக்கமான வயர் சார்ஜர் கொண்டிருக்குமா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. முன்னதாக சியோமி தனது Mi சார்ஜ் டர்போ 30 வாட் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. 
    வார்ட்ரோப்கள் அல்லது மேஜை டிராயரில் நீங்கள் விரும்பும் ஆவணங்களை பத்திரமாக வைக்க உதவுகிறது இந்த ‘ஸ்மார்ட் கியூப்’ என்ற பெயரிலான நவீன பூட்டு.
    வீடுகளிலேயே சில விஷயங்களை பத்திரமாக வைக்க வேண்டியிருக்கும். பணியாளர்கள் அதிகம் புழங்கும் வீடுகளில் ரகசியம் கருதி சில ஆவணங்களை நீங்கள் பத்திரமாக வைக்க நினைக்கலாம். இப்போதைய நவீன வீடுகளில் இட வசதி கருதி பீரோக்கள் பயன்படுத்துவது கிடையாது. வார்ட் ரோப் மட்டுமே. இத்தகைய வார்ட்ரோப்கள் அல்லது உங்களது மேஜை டிராயரில் நீங்கள் விரும்பும் ஆவணங்களை பத்திரமாக வைக்க உதவுகிறது இந்த ‘ஸ்மார்ட் கியூப்’ என்ற பெயரிலான நவீன பூட்டு. இதை உங்கள் ஸ்மார்ட்போன் மூலம் மட்டுமே திறக்க முடியும். இதனால் மற்றவர்களால் நீங்கள் பாதுகாப்பாக வைத்திருக்கும் பகுதிகளை திறக்க முடியாது.

    சில வீடுகளில் குழந்தைகளிடமிருந்து மருந்துப் பொருட்களை பாதுகாப்பாக வைக்க வேண்டிய அவசியம் ஏற்படும். அதுபோன்ற சமயங்களில் இந்த ஸ்மார்ட் கியூப் நிச்சயம் உதவியாக இருக்கும். இதை யாரேனும் உடைக்க முயற்சித்தால் உடனடியாக ஸ்மார்ட்போனுக்கு தகவல் வந்துவிடும். இதன் விலை சுமார் ரூ.10,200.
    ட்விட்டரின் சி.இ.ஓ. ஜாக் டோர்சேவின் ட்விட்டர் கணக்கு மர்மநபர்களால் ஹேக் செய்யப்பட்டது எப்படி என்பதை பார்ப்போம்.
    உலகில் உள்ள அனைவராலும் பரவலாக பயன்படுத்தும் ஒரு இயங்கு தளம் ட்விட்டர் ஆகும். முக்கிய தகவல்களை பரிமாறும் தளமாக ட்விட்டர் செயல்பட்டு வருகிறது. இந்த ட்விட்டரின் சி.இ.ஓ ஜாக் டோர்சேவின் ட்விட்டர் கணக்கே, மர்ம நபர்களால் நேற்று மதியம் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

    ஹேக் செய்யப்பட்ட அவரது கணக்கில் இருந்து இனத்தூண்டலை பிரதிபலிக்கும் விதமாக சில தகவல்கள் பகிரப்பட்டன. சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாக இந்த ட்விட்டுகள் பகிரப்பட்ட நிலையில், அதன் பின்னர் தானாகவே அழிக்கப்பட்டன.

    இது எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து  ட்விட்டர் நிறுவனம் கூறுகையில், ‘ஜாக்கின் கணக்கு தற்போது முழு பாதுகாப்புடன் உள்ளது. ட்விட்டர் செயல்பாடுகள் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ட்விட்டர் தரப்பில் தவறில்லை.

    ஹேக்கிங்

    ட்விட்டர் கணக்குடன் இணைக்கப்பட்ட ஜானின் செல்போனே ஹேக் செய்யப்பட்டதற்கான காரணம். க்ளவுட் ஹோப்பர் வழியாக ஹேக்கர்கள் கணக்கில் ஊடுருவியுள்ளனர். முதலில் ஜாக் டோர்சேவின் செல்போன் எண்ணை கட்டுப்பாட்டில் கொண்டு வந்த அவர்கள், எஸ்.எம்.எஸ் மூலம் ட்விட் பதிவாகும்படி செய்துள்ளனர்’ என கூறப்பட்டுள்ளது.

    ட்விட்டர் சி.இ.ஓ ஜாக் டோர்சேவின் ட்விட்டர் கணக்கே ஹேக் ஆகியிருப்பது  பயனாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து ட்விட்டர் பாதுகாப்பு அம்சங்களை சுய பரிசோதனை செய்ய வேண்டும் என சமூக வலைத்தளங்களில் ட்விட்டர் பயனாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  



    கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து ஸ்கேன் செய்யப்படும் புகைப்படங்களை பிடிஎப் ஆக எளிதாக மாற்றும் கேம் ஸ்கேனர் செயலி நீக்கப்பட்டுள்ளது.
    லட்சக்கணக்கான மக்களால் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட செயலிதான் கேம் ஸ்கேனர். இதனை பயன்படுத்தி ஸ்கேன் செய்யப்படும் புகைப்படங்களை பிடிஎப் ஆக எளிதாக மாற்றலாம். பெரிய அளவில் பயன்பட்ட இந்தச் செயலி மீது மால்வேர் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள்  கூகுளுக்கு தெரிவித்தனர்.

    இதனையடுத்து கேம் ஸ்கேனர் செயலியை கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது. மால்வேர் தாக்குதல் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் மட்டுமே இருப்பதாகவும்,  ஐஓஎஸ் வெர்ஷனில் வழக்கம்போல் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேம் ஸ்கேனர்  செயலியில் வணிக வருவாய்க்காக  ஏராளமான விளம்பரங்கள் இடம்பெறும் என்றும், இதில் உள்ள போலி விளம்பரங்கள் மூலம் மால்வேர் உருவாகிறது என கண்டறியப்பட்டுள்ளது.

    கூகுள் ப்ளே ஸ்டோர்

    இதன் மூலம் பயனர்களின் வங்கிக் கணக்கு தகவல்கள் மற்றும் தனிப்பட்ட ரகசியங்கள் ஹேக்கர்களால் திருடப்படலாம் எனவும் தெரிய வந்துள்ளது. ஓசிஆர் எனப்படும் ஆப்டிகல் கேரக்டர் ரெகக்னிஷன் மூலம் ஸ்மார்ட் போன் வழியாக ஊடுருவி தகவல்கள் திருடப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இதனை உறுதி செய்த கூகுள் நிறுவனம், இந்த செயலியை உடனே நீக்கும்படி பயனாளர்களையும்  அறிவுறுத்தியது. பாதுகாப்பு அம்சங்களில் கவனம் செலுத்தும் கூகுள், பாதுகாப்பு குறைபாடுகள் கொண்ட செயலிகளை அடுத்தடுத்து நீக்கி வருகிறது.

    சமீபத்தில் சூப்பர் செல்ஃபி, சிஓஎஸ் கேமரா, பாப் கேமரா மற்றும் ஒன் ஸ்ட்ரோக் லைன் பஸில் உள்ளிட்ட 80-க்கும் அதிகமான செயலிகளை கூகுள் நீக்கியது குறிப்பிடத்தக்கது.

    இன்ஸ்டாகிராம் செயலியில் பிழை கண்டறிந்த இந்தியருக்கு ஏழு லட்சம் ரூபாய் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.



    இன்ஸ்டாகிராமில் பிழை கண்டறிந்த சென்னை வாலிபருக்கு 10000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 7.2 லட்சம்) பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பிழையை கண்டறிந்த லக்‌ஷமன் முத்தையா ஜூலை மாதத்திலும் இன்ஸ்டா பிழையை கண்டறிந்திருந்தார். அப்போது அவருக்கு 30,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 21.6 லட்சம்) பரிசு அறிவிக்கப்பட்டது.

    முத்தையா தற்சமயம் கண்டறிந்திருக்கும் பிழையும், கடந்த முறையை போன்றதாகும். கடந்த முறை இவர் கண்டறிந்த பிழையை கொண்டு எவர் வேண்டுமானாலும், இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்களை தடையமின்றி ஹேக் செய்துவிடக்கூடிய சூழல் இருந்தது. எனினும், இந்த பிழை சரிசெய்யப்பட்டு விட்டது.

    லக்‌ஷமன் முத்தையா ஃபேஸ்புக் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    இன்ஸ்டாகிராம் சர்வெரில் பாஸ்வேர்டு ரீசெட் குறியீடுகளை வழங்கும் முறையில் கோளாறு இருப்பதாகவும், இதை கொண்டு பல்வேறு பயனர்களுக்கான பாஸ்வேர்டு ரீசெட் குறியீடுகளை உருவாக்கிக் கொள்ள முடியும் என முத்தையா இம்முறை கண்டறிந்திருக்கிறார்.

    இதனை உறுதிப்படுத்திய ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பாதுகாப்பு குழு 10,000 டாலர்கள் சன்மானம் வழங்குவதாக அறிவித்துள்ளது. முத்தையா கண்டறிந்திருக்கும் பிழையை கொண்டு இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்களை மிக சுலபமாக ஹேக் செய்திட முடியும்.
    ஆப்பிள் நிறுவனத்தின் 2019 செப்டம்பர் நிகழ்வில் அதிகம் எதிர்பார்க்கப்படும் புதிய சாதனங்கள் பற்றிய விவரங்களை பார்ப்போம்.
    ஆப்பிள் நிறுவன சாதனங்கள் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. இன்னும் சில நாட்களில் ஆப்பிள் நிறுவனம் தனது 2019 ஐபோன் மாடல்களுடன் புதிய ஆப்பிள் சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், 2019 செப்டம்பர் நிகழ்வில் ஆப்பிள் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படும் சாதனங்கள் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    ஐபோன் - கோப்புப்படம்

    ஐபோன்

    ஆப்பிள் நிறுவனம் 2017 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை மூன்று ஐபோன்களை வெளியீடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது. இதே வழக்கத்தை பின்பற்றி இந்த ஆண்டும் ஆப்பிள் நிறுவனம் மூன்று ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்யலாம். இவை கடந்த ஆண்டு வெளியான ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR மாடல்களின் மேம்பட்ட வெர்ஷன்களாக இருக்கும் என தெரிகிறது. புதிய ஐபோன்களில் அதிகபட்சம் மூன்று பிரைமரி கேமராக்கள் வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐபேட் ப்ரோ - கோப்புப்படம்

    ஐபேட் ப்ரோ மாடல் புதிதாக ஏ13 பிராசஸர்களுடன் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய பிராசஸர் தவிர ஐபேட் மாடல்களில் மேம்பட்ட கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இத்துடன் ஆப்பிள் நிறுவனம் 10.2 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட லோ-எண்ட் ஐபேட் ஒன்றையும் அறிமுகம் செய்யலாம்.

    மேக்புக் ப்ரோ - கோப்புப்படம்

    இந்த ஆண்டு செப்டம்பர் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் புதிய மேக்புக் ப்ரோ மாடலை அறிமுகம் செய்யலாம். இதில் 16-இன்ச் ஸ்கிரீன் மற்றும் மெல்லிய பெசல்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது. இதேபோன்று ஆப்பிள் இதர மாடல்களையும் அப்டேட் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐபோன், ஐபேட் வாட்ச் வரிசையில் ஆப்பிள் நிறுவனம் புதிதா வாட்ச் சீரிஸ் 5 அறிமுகம் செய்யும் என தெரிகிறது. புதிய ஆப்பிள் வாட்ச் மாடலில் OLED டிஸ்ப்ளே வழங்கப்படும் என்றும் இதனை ஜப்பான் டிஸ்ப்ளே இன்க் நிறுவனம் வினியோகம் செய்யும் என்றும் கூறப்படுகிறது.

    விவோ நிறுவனத்தின் புதிய இசட் சீரிஸ் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



    விவோ நிறுவனம் தனது இசட் சீரிசில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. முன்னதாக ஜூலை மாதத்தில் விவோ இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போனினை விவோ அறிமுகம் செய்தது.

    இந்நிலையில், தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்கலில் செப்டம்பர் மாத முதல் வாரத்தில் விவோ புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் விவோ இசட்1எக்ஸ் என்ற பெயரில் அறிமுகமாகும் என தெரிகிறது.

    மேலும் இது சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ இசட்5 மாடலின் ரீ-பிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது.

    விவோ இசட்1 ப்ரோ

    விவோ இசட்1எக்ஸ் ஸ்மார்ட்போன் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் விவோ இசட்1 ப்ரோ மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க இந்த ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. பிரைமரி கேமரா கொண்ட மூன்று பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்படுகிறது.

    இதுதவிர புதிய ஸ்மார்ட்போனின் செல்ஃபி கேமராவில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 20,000 பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்படும் என தெரிகிறது. புதிய ஸ்மார்ட்போன் பற்றி விவோ இதுவரை எவ்வித தகவலையும் வழங்கவில்லை. 
    கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதுபற்றிய விவரங்களை பார்ப்போம்.



    கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 என்ற பெயரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்துடன் புதிய இயங்குதளத்துக்கான லோகோவையும் வெளியிட்டது. 

    நீண்ட காலமாக கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு இயங்குதளங்களுக்கு இனிப்பு வகைகளின் பெயர்களை சூட்டுவதை வாடிக்கையாக கொண்டிருந்தது. இந்நிலையில், பழைய வழக்கத்தை மாற்றி புதிய இயங்குதளத்தை ஆண்ட்ராய்டு 10 என அழைப்பதாக தெரிவித்து இருக்கிறது.

    ஆண்ட்ராய்டு 10

    இதுவரை ஆண்ட்ராய்டு கியூ என அழைக்கப்பட்ட புதிய இயங்குதளம் இனி ஆண்ட்ராய்டு 10 என அழைக்கப்பட இருக்கிறது. புதிய இயங்குதளம் முன்பை போன்று இனிப்பு வகைகளின் பெயர்களை கொண்டிருக்காது. இதற்கு மாற்றாக எண் அடிப்படையில் அழைக்கப்படும்.

    ஆண்ட்ராய்டு வெர்ஷன்களுக்கு ஏற்கனவே சூட்டப்பட்ட பெயர்களில் சில பெயர்கள் அனைவருக்கும் புரியும் வகையில் இல்லை. இதன் காரணமாகவே பெயர் சூட்டுவதில் மாற்றம் செய்யப்படுகிறது. ஆண்ட்ராய்டு லோகோ மற்றும் நிறம் முன்னதாக 2014 ஆம் ஆண்டு மாற்றப்பட்டது. அதன் பின் தற்சமயம் கூகுள் பெயர், லோகோ உள்ளிட்டவற்றை மாற்றியிருக்கிறது. 

    புதிய லோகோவின் வடிவமைப்பு ஆண்ட்ராய்டு ரோபோட்டை தழுவி உருவாக்கப்பட்டிருப்பதாக கூகுள் தெரிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் வரும் வாரங்களில் வெளியிடப்படுகிறது.
    ரியல்மி பிராண்டு புதிய ஸ்மார்ட்போன் சீரிசை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில் சக்திவாய்ந்த அம்சங்கள் வழங்கப்படுகிறது.



    ரியல்மி பிராண்டின் ரியல்மி 5 மற்றும் ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போன்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இத்துடன் ரியல்மி எக்ஸ்.டி. ஸ்மார்ட்போனினை 64 எம்.பி. பிரைமரி கேமராவுடன் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்தது. 

    அந்த வரிசையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ரியல்மி பிராண்டு புதிய சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அடுத்த வாரம் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிகிறது. இதனை உணர்த்தும் வகையில் ரியல்மி பிராண்டு மூத்த விளம்பர அதிகாரி சு கி டீசர் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

    புதிய டீசரின் படி புதிய சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சக்திவாய்ந்த அம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சீரிஸ் எந்த பெயரில் அறிமுகமாகும் என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. 

    முன்னதாக குவால்காமின் அதிநவீன சிப்செட் கொண்ட ஸ்மார்ட்போன்களை ரியல்மி பிராண்டு அறிமுகம் செய்தது. இதுதவிர பிளாக் ஷார்க் மற்றும் நுபியா பிராண்டு ஏற்கனவே ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துவிட்டது.
    ஃபேஸ்புக் தளத்தில் பயனர் புகைப்படங்களை பொது வெளியில் அம்பலப்படுத்துவது பற்றி வைரலாகும் தகவலின் உண்மை பின்னணியை பார்ப்போம்.



    ஃபேஸ்புக் வலைத்தளத்தில் பயனர்கள் பதிவேற்றம் செய்த புகைப்படங்களை பொதுவெளியில் அந்நிறுவனம் அம்பலப்படுத்திவிடும் என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவுகிறது. 

    வைரலாகும் தகவலில் பயனர்கள் தங்களது புகைப்படங்களை பாதுகாத்துக் கொள்ள ஃபேஸ்புக் எனது புகைப்படம் அல்லது குறுந்தகவல்களை பகிர்ந்து கொள்ள எந்த உரிமையும் கிடையாது (FACEBOOK DOES NOT HAVE MY PERMISSION TO  SHARE PHOTOS OR MESSAGES) என்ற வாக்கில் தகவல் ஒன்றை ஸ்டேட்டஸ் ஆக பதிவிட கோருகிறது. 

    ஃபேஸ்புக் வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    ஃபேஸ்புக்கில் வைரலாகும் பதிவை கொண்டு குறியீடுகளை ஆய்வு செய்ததில் இது ஃபேஸ்புக் மட்டுமின்றி ட்விட்டரிலும் வைரலாகி இருப்பது தெரியவந்துள்ளது. இதேபோன்ற தகவல் ஏழு ஆண்டுகளுக்கு முன் வைரலானது. பின் அது போலியென கண்டறியப்பட்டது. தற்சமயம் இதே பதிவு மீண்டும் வைரலாகியுள்ளது.

    வைரல் பதிவுகளில் ஃபேஸ்புக் அதன் பயனர்கள் பதிவிட்ட தரவுகளுக்கு உரிமை கோரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஃபேஸ்புக் விதிமுறைகளில், “ஃபேஸ்புக் மற்றும் ஃபேஸ்புக் நிறுவன சேவைகளில் பயனர்கள் பிதிவிடும் அவர்களது சொந்த தகவல்களுக்கு அவர்கள் தான் உரிமையாளர்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.  

    ஃபேஸ்புக் விதிமுறைகள் ஸ்கிரீன்ஷாட்
    ஃபேஸ்புக் விதிமுறைகள் ஸ்கிரீன்ஷாட்

    இதுதவிர பயனர்கள் பதிவிடும் தகவல்களை, பதிவேற்றம் செய்து அவற்றை உலகம் முழுக்க பிரசுரம் செய்ய, பயன்படுத்த, காட்சிப்படுத்த அவர்கள் அனுமதியளிப்பதாக ஃபேஸ்புக் விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பயனர்கள் பதிவிடும் தரவுகளுக்கு ஃபேஸ்புக் அனுமதி வைத்திருப்பினும், அதற்கு உரிமை கோர முடியாது.

    இதனால் ஃபேஸ்புக் பற்றி வைரலாகும் பதிவுகளில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது. போலி செய்திகளால் பலர் பாதிக்கப்படுகின்றனர். சமூக வலைத்தளங்களில் வலம் வரும் தகவல்களை ஆய்வு செய்து, அவற்றின் உண்மைத்தன்மையை நன்கு அறிந்த பின் அவற்றை பகிர்ந்து கொள்ள வேண்டும். போலி செய்திகளால் உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன.
    இந்திய டெலிகாம் சந்தையில் 4ஜி டவுன்லோடுகளில் ரிலையன்ஸ் ஜியோ மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.



    இந்திய டெலிகாம் சந்தையில் ஜூலை மாதம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நாட்டின் அதிவேக 4ஜி டவுன்லோடு வேகம் வழங்கிய நிறுவனங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. ஜூலை மாதத்தில் ஜியோவின் 4ஜி டவுன்லோடு வேகம் நொடிக்கு 21 மெகாபைட் (21Mbps) ஆக இருந்தது. ஜூன் மாதம் இது 17.6Mbps ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்ட தகவல்களின்படி ஏர்டெல் டவுன்லோடு வேகம் 8.8Mbps ஆகவும், வோடபோன் 7.7Mbps ஆகவும், ஐடியா செல்லுலார் 6.6Mbps ஆக இருந்தது. பி.எஸ்.என்.எல். நிறுவனம் அதிவேக 3ஜி நெட்வொர்க் ஆக இருந்தது.

    போன் பயன்பாடு - கோப்புப்படம்

    ஜுலையில் பி.எஸ்.என்.எல். சராசரி டவுன்லோடு வேகம் 2.5 Mbps ஆக இருந்தது. இதைத் தொடர்ந்து ஐடியா 2 Mbps, வோடபோன் 1.9 Mbps மற்றும் ஏர்டெல் 3ஜி 1.4 Mbps வேகம் வழங்கியிருக்கின்றன. டவுன்லோடு வேகம் தவிர அப்லோடு வேகங்களில் வோடபோன் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.

    வோடபோன் நிறுவனம் ஜுலை மாதம் 5.8 Mbps அப்லோடு வேகம் வழங்கியிருக்கிறது. ஐடியா செல்லுலார் 5.3 Mbps அப்லோடு வேகமும், ஜியோ 4.3 Mbps, ஏர்டெல் நிறுவனம் 3.2 Mbps அப்லோடு வேகம் வழங்கியிருக்கின்றன.

    பயனர் வீடியோ பார்க்கும் போது டவுன்லோடு வேகம் முக்கிய பங்காற்றுகிறது. டவுன்லோடு வேகம் கொண்டே இணைய பிரவுசிங், மின்னஞ்சல் பயன்பாடு உள்ளிட்டவற்றை மேற்கொள்ளப்படுகின்றன. பயனர் புகைப்படங்கள், வீடியோக்களை மின்னஞ்சல் அல்லது சமூக வலைத்தளங்கள் மூலம் பகிர்ந்து கொள்ளும் போது அப்லோடு வேகம் தேவைப்படுகிறது.
    கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரில் ஆட்வேர் கொண்டிருந்த செயலிகளை அதிரடியாக நீக்கியுள்ளது. இதுபற்றிய விவரங்களை பார்ப்போம்.
    கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரில் இருந்து 85 செயலிகளை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. டிரென்ட் மைக்ரோ எனும் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்து தெரிவித்த தகவல்களை கொண்டு கூகுள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறது.

    செயலிகளில் தீங்கு ஏற்படுத்தும் தன்மை கொண்ட ஆட்வேர்கள் மறைந்திருந்ததை டிரென்ட் மைக்ரோ குழு கண்டறிந்தது. இது கூகுள் பிளே ஸ்டோரில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வழக்கமான ஆட்வேர்களை போன்று இல்லாமல் இவற்றில் தோன்றும் விளம்பரங்களை க்ளோஸ் செய்வது கடினமாகும்.

    ஆட்வேர் - கோப்புப்படம்

    ஆட்வேர்களின் தன்மை கூகுள் பிளேவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கண்டறிந்திருக்கிறோம். டிரென்ட் மைக்ரோ புதிய ஆட்வேர்களை AndroidOS_Hidenad.HRXH என கணித்திருக்கிறது. இவை வழக்கமாக தோன்றும் விளம்பரங்களை போன்றில்லாமல் இவற்றில் பின்பற்றப்பட்டும் வழிமுறைகளால் இவற்றை க்ளோஸ் செய்வதே கடினமானதாகும் என டிரென்ட் மைக்ரோ தெரிவித்துள்ளது.

    ஆட்வேர் நிறைந்ததாக கண்டறியப்பட்ட செயலிகளில் பெரும்பான்மையானவை புகைப்படம் மற்றும் கேமிங் சார்ந்து உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை சுமார் 80 லட்சத்திற்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்திருந்தனர். இதில் சூப்பர் செல்ஃபி, காஸ் கேமரா, ஒன் ஸ்டிரோக் லைன் பஸுல் உள்ளிட்டவை பிரபல செயலிகளாக அறியப்படுகின்றன.

    இந்த செயலிகள் வெவ்வேறு டெவலப்பர் அக்கவுண்ட்களில் இருந்து பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றை பல்வேறு டிஜிட்டல் சான்றிதழ்கள் மூலம் கையெழுத்திடப்பட்டு இருக்கின்றன. எனினும், இவை ஒரே மாதிரியான அம்சங்கள் மற்றும் கோட்களை பயன்படுத்தியிருக்கின்றன.

    ×