search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹேக்கர்கள்"

    • மருத்துவர்களின் விவகாரங்களை வைத்தே எந்த மருத்துவமனையில் தரவுகள் திருடப்பட்டது என்பதை கிளவுடு செக் அமைப்பு கண்டுபிடித்துள்ளது.
    • கடந்த வாரம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நோயாளிகளின் தரவுகளை ஹேக் செய்து ரூ.200 கோடி வேண்டுமென ஹேக்கர்கள் பேரம் பேசினர்.

    திருப்பூர்:

    இந்த நவீன உலகில் எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. ஷாப்பிங் முதல் டேட்டிங் வரை எல்லாம் ஆன்லைன் வழியாகவே நடக்கிறது. இதனால் பொதுமக்கள் குறித்து பல தரவுகள் ஆன்லைனில் தான் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வழியாகத் தரவுகளைச் சேமித்து வைக்கும்போது, அவை திருடப்படும் வாய்ப்புகளும் இருக்கிறது. ஹேக்கர்கள் இந்த தரவுகளைத் திருடி விற்று வருகின்றனர்.

    வெளிநாடுகளில் நிகழும் இந்த சம்பவம் தற்போது தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது. திருப்பூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் 1.50 லட்சம் நோயாளிகளின் தனிப்பட்ட தரவுகளை சில ஹேக்கர்கள் திருடியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சைபர் கிரைம் தளங்கள் மற்றும் டெலிகிராம் மூலம் அந்த டேட்டாக்களை விற்பனை செய்யும் முயற்சியிலும் இறங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இந்த ஹேக்கிங்கை முதலில் கிளவுடு செக் என்ற அமைப்பு கண்டுபிடித்துள்ளது. இந்த மருத்துவமனைக்கும், இந்த ஹேக்கிங்கிற்கும் தொடர்பு இல்லை எனவும், மூன்றாம் தரப்பு நபரிடம் இருந்தே தரவுகள் திருடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

    குறிப்பாக கடந்த 2007 முதல் 2011 வரையிலான நோயாளிகளின் தரவுகள் ஹேக் செய்யப்பட்டு இருப்பதாக கிளவுடு செக் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. ஹேக்கர்கள் தங்களிடம் நோயாளிகளின் டேட்டா இருப்பதை காட்ட சிறு தரவுகளை அனைவரும் பார்க்கும் வகையில் பொதுவெளியிலும் பகிர்ந்துள்ளனர். திருடப்பட்ட தரவுகளில் நோயாளிகளின் பெயர்கள், பிறந்த தேதிகள், முகவரி, பாதுகாவலரின் பெயர்கள் மற்றும் மருத்துவரின் விவரங்கள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

    இந்த மருத்துவர்களின் விவகாரங்களை வைத்தே எந்த மருத்துவமனையில் தரவுகள் திருடப்பட்டது என்பதை கிளவுடு செக் அமைப்பு கண்டுபிடித்துள்ளது. இந்த ஹேக்கிங் குறித்து உறுதி செய்யப்பட்ட உடனே சம்பந்தப்பட்ட நபர்களிடம் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டதாக கிளவுடுசெக் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் பழனிசாமி கூறுகையில், எங்களது மருத்துவமனையில் நோயாளிகளின் விபரங்கள் குறித்த தகவல்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கிளவுடு செக் அமைப்பிடமிருந்து எங்களுக்கு தகவல் கிடைத்தது. இது எத்தனை சதவீதம் உண்மை என்று தெரியவில்லை. ஏனெனில் எங்கள் மருத்துவமனையில் நோயாளிகளின் பெயர் மற்றும் முகவரி விபரங்கள் மட்டுமே பெறுவதாகவும், மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் பின்பற்றுவது போன்ற நடைமுறைகளை இங்கு பின்பற்றுவது இல்லை. அதனால் எங்களது தரவுகள் வெளியே செல்ல வாய்ப்புகள் இல்லை என்றார்.

    மேலும் கிளவுடு செக் அமைப்பு எங்களிடம் மருத்துவமனையின் தரவுகளை ஹேக் செய்ய முடியாத அளவிற்கு சாப்ட்வேர் இருப்பதாகவும் அதை வாங்கும் படியும் தெரிவித்துள்ளனர். எனவே அது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளோம். எங்களை பொறுத்தவரை இது ஒரு வதந்தி மட்டுமே. எங்களது மருத்துவமனையின் எந்த தரவுகளும் ஹேக் செய்யப்படவில்லை என்றார்.

    கடந்த வாரம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நோயாளிகளின் தரவுகளை ஹேக் செய்து ரூ.200 கோடி வேண்டுமென ஹேக்கர்கள் பேரம் பேசினர். தற்போது திருப்பூர் தனியார் மருத்துவமனையில் நோயாளிகளின் தரவுகள் ஹேக் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×