search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாட்பாட்"

    • ஏஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் ஜெமினி சாட்பாட் கருவியை கூகுள் உருவாக்கியது
    • ஜெமினி எல்லா நேரங்களிலும் நம்பத்தகுந்த ஒரு கருவி அல்ல என்கிறது கூகுள்

    இணையதள தேடலில் உலகின் பெரும்பான்மையான பயனர்களின் தேடல் இயந்திரமாக (search engine) இருப்பது அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் கூகுள் (Google) நிறுவனத்தின் கூகுள் தேடல் இயந்திரம்.

    கூகுள், செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence) மையமாக கொண்டு இயங்கும் ஜெமினி (Gemini) எனும் சாட்பாட் கருவியை உருவாக்கியது.

    இந்நிலையில், ஒரு பயனர், இந்த சாட்பாட்டிடம், "பிரதமர் நரேந்திர மோடி ஒரு ஃபாசிசவாதியா?" என கேள்வி கேட்டதற்கு "ஃபாசிச கொள்கைகள் உடைய சில திட்டங்களை செயல்படுத்தியவராக பிரதமர் மோடி குற்றம் சாட்டப்பட்டுள்ளார்" என பதிலளித்தது.

    தொடர்ந்து அந்த சாட்பாட் அளித்த விரிவான பதிலில் பிரதமர் குறித்து ஆட்சேபகரமான பல கருத்துகள் இருந்தன.

    அதே சமயம், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் குறித்த கேள்விகளுக்கு ஜெமினி சரியான பதில் அளிக்கவில்லை.

    இதை தொடர்ந்து உரையாடலின் "ஸ்க்ரீன் ஷாட்டை" ஒரு பத்திரிகையாளர் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜிவ் சந்திரசேகருக்கு அனுப்பினார்.

    இது குறித்து அமைச்சர் கூகுள் நிறுவனத்திடம் ராஜிவ் சந்திரசேகர் விளக்கம் கேட்டிருந்தார்.

    செயற்கை நுண்ணறிவு சார்ந்த மென்பொருள் கருவிகளும் செயலிகளும் முழுமையாக நம்பத்தகுந்தவை இல்லை என்பதை காரணம் காட்டி கிரிமினல் குற்றச்சாட்டிலிருந்து தப்பித்து கொள்ள முடியாது என அவர் கூகுளை எச்சரித்திருந்தார்.


    இந்நிலையில், இந்த குறைபாடு குறித்து கூகுள் விளக்கம் அளித்துள்ளது.

    அதன் பதிலில் கூகுள் தெரிவித்திருப்பதாவது:

    ஜெமினி எல்லா நேரங்களிலும் நம்பத்தகுந்த ஒரு சாதனம் அல்ல.

    அதிலும், சமகால நாட்டு நடப்புகள், அரசியல் மற்றும் உடனடி செய்திகள் ஆகியவற்றில் அதன் திறன் இன்னும் முழுமை பெறவில்லை.

    இந்நிலையை மாற்ற எங்கள் வல்லுனர்கள் செயலாற்றி வருகின்றனர்.

    எந்த நாட்டின் சட்டதிட்டங்களையும் மீறாத வகையில் அதன் உருவாக்கத்தில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.

    இவ்வாறு அந்நிறுவனம் பதிலளித்துள்ளது.

    • ஒபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி முன்னணியில் இருந்து வருகிறது
    • கூகுள் நிறுவனத்தின் பார்ட் செயலியும் பிரபலமாகி வருகிறது

    செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி சாட்பாட் எனப்படும் உரையாடல் மென்பொருளை உருவாக்குவதில் நாளுக்கு நாள் அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையே போட்டி வலுத்து வருகிறது.

    ஐ.டி. துறையில் சேவை மேலாண்மை அனுபவத்தை மேம்படுத்த சாட்பாட்கள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    ஒபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி முன்னணியில் இருக்கும் நிலையில், கூகுள் நிறுவனத்தின் பார்ட் செயலியும் பிரபலமாகி வருகிறது.

    இணையத்தில் இருந்து கிடைக்கும் கோடிக்கணக்கான பயனாளர்களின் தகவல்களை கொண்டு இயந்திர கற்றல் தொழில்நுட்பம் மூலம் 'லார்ஜ் லேங்குவேஜ் மாடல்' எனப்படும் ஒரு மென்பொருள் கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. இதனை கொண்டு உருவாக்கப்படும் செயலிகள்தான் சாட்பாட்கள்.

    ஆனால் சாட்ஜிபிடி மற்றும் பார்ட் இரண்டும் தனியுரிமை வகையை சேர்ந்தவை. இவற்றை இலவசமாக பயன்படுத்த முடியாது. இதில் உள்ள புரோகிராமிங் குறியீடுகளை கணினி ஆராய்ச்சியாளர்கள் பார்க்கவோ பரிசீலனை செய்யவோ அனுமதி கிடையாது.

    இந்நிலையில் முகநூல் வலைதளத்தை நடத்தி வரும் மெட்டா நிறுவனம் நேரடியாக ஒரு சாட்பாட்டை உருவாக்காமல் அதற்கு பதிலாக லாமா எனும் ஒரு 'லார்ஜ் லேங்குவேஜ் மாடல்' வடிவத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதனை காப்புரிமை கட்டுப்பாடில்லாத, பயன்படுத்த அனுமதி தேவைப்படாத, கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லாத இலவச ஓபன் ஸோர்ஸ் எனப்படும் வகையில் கொண்டு வந்திருக்கிறது.

    இதனைக் கொண்டு ஆராய்ச்சியாளர்களும் கணினி நிறுவனங்களும் இலவசமாக பதிவிறக்கி, பரிசீலித்து, பின்பு தங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றங்களுடன் கட்டமைத்து புதிது புதிதாக பல சாட்பாட்களை உருவாக்க முடியும்.

    ஆர்வலர்களும் நிபுணர்களும் லாமா மொழி மாதிரியை கொண்டு பல புதுமைகளையும் உருவாக்க முடியும்.

    ஒரு செயலியை வடிவமைக்க உருவாக்கும் மென்பொருள் பரிசீலிக்கப்படும் வகையில் இருந்தால், தரவுகளின் பாதுகாப்பை வலுவாக்கவும், எதிர்கால செயலாக்க குறைபாடுகளையும், சிக்கல்களையும் முதலிலேயே கண்டறியவும் முடியும்.

    தற்போது பிரபலமாக இருக்கும் சாட்பாட்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஏற்கனவே விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. சாட்பாட்களின் உரையாடல்கள் பல நேரங்களில் திசை திரும்பி செல்வதாக கூறப்படுகிறது.

    உலகெங்கும் உள்ள பல்லாயிரக்கணக்கான மென்பொருள் நிபுணர்கள் இலவச பெரு மொழி மாதிரிகளை கொண்டு எண்ணற்ற சாட்பாட்களை உருவாக்க முடியும் என்பதால் லாமாவிற்கு மிகுந்த வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×