என் மலர்
நீங்கள் தேடியது "விமான கட்டணம்"
- ரெயில், பஸ்களில் டிக்கெட் கிடைக்காத பயணிகள் விமான பயணத்தை தேர்வு செய்து வருகிறார்கள்.
- ஜூன் முதல் வாரத்தில் சென்னையில் இருந்து பெரும்பாலான நகரங்களுக்கு செல்லும் விமானங்களில் கட்டணம் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை உள்ளது.
ஆலந்தூர்:
கோடை விடுமுறையையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.
ஏற்கனவே வரும் நாட்களுக்கான ரெயில் மற்றும் ஆம்னி பஸ்களில் டிக்கெட்டுகள் முன்பதிவு முடிந்து விட்டன. ரெயில்களில் காத்திருப்போர் பயணிகளின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.
இதைத்தொடர்ந்து இப்போது பெரும்பாலானோர் தற்போது அரசு விரைவு பஸ்களை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். அதிலும் தற்போது பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் இருக்கையை முன்பதிவு செய்யாமல் அவசரமாக கடைசி நேரத்தில் செல்லும் பயணிகள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.
இதேபோல் ரெயில், பஸ்களில் டிக்கெட் கிடைக்காத பயணிகள் விமான பயணத்தை தேர்வு செய்து வருகிறார்கள். ஏற்கனவே உள்நாட்டு பயணத்துக்கு விமான பயணத்தை தேர்வு செய்வது அதிகரித்து உள்ளது. தற்போது கோடை விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, கோவை, மும்பை, திருவனந்தபுரம், டெல்லி, கொச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது.
இதன் காரணமாக விமான டிக்கெட்டுகளின் கட்டணமும் அதிரடியாக உயர்ந்து உள்ளது. ஜூன் முதல் வாரத்தில் சென்னையில் இருந்து பெரும்பாலான நகரங்களுக்கு செல்லும் விமானங்களில் கட்டணம் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை உள்ளது.
சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.6500 முதல் ரூ.10 ஆயிரம், திருச்சி-ரூ.4400 முதல் ரூ.8 ஆயிரம், கோவை-ரூ.3400 முதல் ரூ.5 ஆயிரம், கொச்சி-ரூ.5600 முதல் ரூ.8500, மும்பை-ரூ.4300 முதல் ரூ.7 ஆயிரம், டெல்லி-ரூ.6400 முதல் ரூ.13 ஆயிரம், திருவனந்தபுரம்-ரூ.3700 முதல் ரூ.6 ஆயிரம், தூத்துக்குடி ரூ.5 ஆயிரம் முதல் ரூ.9500 வரை உள்ளது.
இதேபோல் ஆம்னி பஸ்களில் கட்டணமும் அதிகரித்து உள்ளது. மதுரைக்கு ரூ.1090 முதல் ரூ.2 ஆயிரம் வரையும், திருச்சிக்கு ரூ.1600 முதல் ரூ.2700 வரையும், கோவை-ரூ.1400 முதல் ரூ.2 ஆயிரம் வரையும், தூத்துக்குடி-ரூ.950 முதல் ரூ.3 ஆயிரம் வரையும், கொச்சி-ரூ.1300 முதல் ரூ.3 ஆயிரம் வரையும், திருவனந்தபுரம்-ரூ.2500 முதல் ரூ.2700 வரையும் அதிகமாக உள்ளது.
ஆம்னி பஸ்கள் மற்றும் விமான டிக்கெட்டுகள் கட்டணம் உயர்வு காரணமாக சொந்த கார்கள் வைத்திருப்பவர் அதிலேயே தொலைதூர பயணம் மேற்கொள்வதும் அதிகரித்து உள்ளது. மேலும் வாடகை கார் டிரைவர்களை அமர்த்தியும் பயணம் செய்து வருகின்றனர்.
சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் அனைத்திலும் முன்பதிவு செய்து காத்திருக்கும் பயணிகளின் எண்ணிக்கை அடுத்த மாதம் 15-ந்தேதி வரை 50 முதல் 70 வரை உள்ளது. மதுரை செல்லும் தேஜஸ் விரைவு ரெயிலில் ஜூன் 5-ந்தேதிக்கு பிறகே இருக்கைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- புது சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல மக்கள் விருப்பம் காட்டி வருகின்றனர்.
- மொராக்கோ, துருக்கி, எகிப்து, அஸர்பே ஜியான் போன்ற நாடுகளுக்கு செல்ல விமான டிக்கெட் முன்பதிவு செய்கிறார்கள்.
சென்னை:
பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை விரைவில் தொடங்க உள்ளன. இதையடுத்து கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளிநாடுகள் மற்றும் வெளி ஊர்களுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மே மாதத்தில் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு விமான டிக்கெட் முன்பதிவு அதிகரித்து இருக்கிறது. சென்னையில் இருந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஸ்ரீலங்கா, ஹாங்காங் போன்ற நாடுகளுக்கு செல்ல முன்பதிவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மேலும் இந்த நாடுகளில் இருந்து சென்னை வருவதற்கு சுமார் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும், மத்திய கிழக்கு நாடுகளான ஈரான், ஈராக், பக்ரைன், சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ. 30 ஆயிரம் வரை டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளது.
இதேபோல் சென்னையில் இருந்து வியட்நாம், பாலத்தீவு, கம்போடியா போன்ற நாடுகளுக்கு செல்ல மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
ஆனால் சென்னையில் இருந்து இந்த நாடுகளுக்கு நேரடி விமான சேவை இல்லாததால், மற்ற மாநிலங்கள் வழியாக செல்ல வேண்டியுள்ளது. இதனால் கூடுதலாக விமான கட்டணம் செலவிட வேண்டி உள்ளது.
இந்த சுற்றுலா தலங்களுக்கு எப்போதுமே மக்கள் அதிகமாக சென்று வருவதாலும், இந்த இடங்களுக்கு விமான டிக்கெட் கட்டணங்கள் உயர்ந்துள்ளதாலும் மக்கள் புது இடங்களை தேர்வு செய்து வருகின்றனர். தற்போது புது சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல மக்கள் விருப்பம் காட்டி வருகின்றனர்.
அதன்படி மொராக்கோ, துருக்கி, எகிப்து, அஸர்பே ஜியான் போன்ற நாடுகளுக்கு செல்ல விமான டிக்கெட் முன்பதிவு செய்கிறார்கள்.
இதேபோல் உள்நாட்டிலும் சுற்றுலா செல்வதற்கு விமான பயணிகள் டிக்கெட் முன்பதிவு சூடு பிடித்து உள்ளது. மே மாதத்தில் சென்னையில் இருந்து ஸ்ரீ நகர் வழியாக டெல்லி செல்ல ஒரு வழி கட்டணம் ரூ.13 ஆயிரம் முதல் ரூ. 18 ஆயிரம் வரை உயர்ந்து உள்ளது. மேலும், சென்னையில் இருந்து அந்தமான் செல்ல ரூ. 8,000 முதல் ரூ. 10 ஆயிரம் வரை விமான டிக்கெட் கட்டணம் அதிகரித்து இருக்கிறது.
இது குறித்து டிராவல் ஏஜென்சிகள் கூறும்போது, தற்பொழுது கோடை காலமான மே மாதத்தில் சுற்றுலா பயணிகள் வெளிநாடுகளுக்கு செல்ல டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து வருகின்றனர். ஏனென்றால் சுற்றுலா விசா அவர்களுக்கு சரியான இடத்தில் கிடைத்திட வேண்டும்.
உள்நாட்டு சுற்றுலா செல்பவர்களுடைய எண்ணிக்கை ஏப்ரல் மாதம் இறுதியில் அல்லது மே மாதத் தொடக்கத்தில் அதிகமாக இருக்கும். கடந்த ஆண்டும் இதே போல் இருந்தது. குறிப்பாக ஜம்மு-காஷ்மீருக்கு பயணிகள் அதிகமாக சென்றது குறிப்பிடத்தக்கது என்றனர்.
- கட்டண உச்ச வரம்பை வருகிற 31-ந்தேதி முதல் நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
- மத்திய அரசின் இந்த அறிவிப்பால் விமான கட்டணங்கள் அதிகரிக்கும்.
புதுடெல்லி :
கொரோனா காலத்தில் பயணிகளிடம் விமான நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் உள்நாட்டு விமான டிக்கெட் கட்டணத்தில் மத்திய அரசு உச்ச வரம்பை நிர்ணயித்தது.
விமான நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிக்காமல் இருப்பதை உறுதி செய்வதுடன், மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே பயணம் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த கட்டண உச்ச வரம்பை வருகிற 31-ந்தேதி முதல் நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி உள்நாட்டு விமான நிறுவனங்கள் தாங்களே டிக்கெட் கட்டணத்தை நிர்ணயித்து கொள்ளலாம்.
இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், 'திட்டமிடப்பட்ட உள்நாட்டு சேவைகளின் தற்போதைய நிலை மற்றம் பயணிகளின் தேவையை மதிப்பாய்வு செய்த பிறகு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த கட்டண உச்ச வரம்பை அகற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. 31.8.2022-ந்தேதி முதல் இது அமலுக்கு வருகிறது' என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா தனது டுவிட்டர் தளத்தில், 'விமானங்களின் தினசரி தேவை மற்றும் விமான எரிபொருள் விலை போன்றவற்றை கவனமாக பரிசீலித்தபின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. விமான போக்குவரத்து வளர்ச்சிக்கான உறுதிப்படுத்தல் தொடங்கியுள்ளது. எதிர்காலத்தில் உள்நாட்டு போக்குவரத்தில் இந்தத் துறை வளர்ச்சியடையும் என்பதில் உறுதியாக உள்ளோம்' எனறு குறிப்பிட்டு இருந்தார்.
விமான டிக்கெட் கட்டண உச்ச வரம்பை நீக்கும் மத்திய அரசின் முடிவை விமான நிறுவனங்கள் வரவேற்று உள்ளன. ஆனால் மத்திய அரசின் இந்த அறிவிப்பால் விமான கட்டணங்கள் அதிகரிக்கும் என்பதால் பயணிகள் கவலை தெரிவித்து உள்ளனர்.