என் மலர்
வழிபாடு
- நரசிம்மர் அவதரித்த நட்சத்திரமான சுவாதியிலும் வழிபடுதல் சிறப்பு.
- வெவ்வேறு சமயத்தில் வெவ்வெறு தெய்வங்களை வழிபடுவது மரபாக உள்ளது.
நரசிம்மர் பாரதம் முழுதும் வணங்கப்பட்டாலும், தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் தான், அவருக்குத் தனிக்கோவிலும், சிறப்பு வழிபாடும் அதிகம்.
வைகாசி மாதம் வளர்பிறை சதுர்தசியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலை சந்திப்பொழுதில் நரசிம்மரை வழிபடுவதே நரசிம்ம ஜயந்தியாகும். சோமப்பிரதோஷமும், சனிப்பிரதோஷமும் சிறப்பு போல நரசிம்ம ஜெயந்தி திங்கட்கிழமையிலும், நரசிம்மர் அவதரித்த நட்சத்திரமான சுவாதியிலும் வழிபடுதல் சிறப்பு. இவ்விரதத்தை அனுஷ்டித்ததாலேயே, கயவனாக இருந்த சுவேதன், மறுபிறவியில், பிரகலாதனாகப் பிறந்து, பெருமாள் அருள் பெற்றதாக, விஷ்ணுவே கூறியிருப்பதால், அவர் நரசிம்மராக உருவெடுத்தது பிரகலாதனுக்காக மட்டுமல்ல, ஒரு முறை தான் அல்ல என்பதும் தெரிகிறது.
இறைவனை வழிபட எந்நேரமும் உகந்ததே என்றாலும், நம் வசதி கருதி, சில நல்-நிகழ்வுகளோடு தொடர்புடைய நாட்களில் அல்லது நேரத்திலாவது வழிபட வேண்டும் என்பதற்காகவே சதுர்த்தியில்/ சஷ்டியில்; செவ்வாய்/வெள்ளியில்; காலை அல்லது மாலையில் என்று வெவ்வேறு சமயத்தில் வெவ்வெறு தெய்வங்களை வழிபடுவது மரபாக உள்ளது.
அன்றாட நரசிம்மர் வழிபாட்டில், பிரதோஷ வேளை (சூரியன்மறைவுக்கு முன் 1.30 மணியும், பின் 1.30 மணியும்) ஆக மொத்தம் (மாலை 4.30 முதல் 7 .30 வரை 3 மணி) நேரம் சிறப்பு. அதுவும், சதுர்தசி நாளில் சிறப்பு. சித்திரை மாத வளர்பிறை அக்ஷய திருதியை வழிபாடும் சிறப்பு.
நரசிம்மர் விஷ்ணுவே என்பதால், பொதுவாக, விஷ்ணு வழிபாட்டில் பயன்படுத்தும், மலர்கள், வஸ்திரம், நைவேத்யம் ஆகியவற்றை உபயோகிக்கலாம். எனினும் செவ்வரளி போன்ற சிகப்பு வண்ண மலர்களும், சர்க்கரைப் பொங்கல், பானகம் போன்ற இனிப்புகளும் சிறப்பு.
ஹோமத்திற்கு தேன் கலந்த மல்லிகை மலர்கள் உகந்தது. குளுமைப் பொருளான சந்தனத்திலும் செஞ்சந்தனமும், சந்தனாதி தைலக்காப்பும் சிறப்பு. அவரவருக்கு ஏற்றபடி 1,3,6,8,10,19,32,62 அக்ஷர நரசிம்ம மந்திரத்தை ஜபிக்கலாம்; துதிகளைக் கூறிடலாம்.
- கடந்த 5-ந்தேதி ஓலைச்சப்பரத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற்றது.
- உற்சவர் சாரங்கபாணி, ஸ்ரீதேவி, பூமிதேவி தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார்.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்தலம் 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக போற்றப்படுகிறது.
இத்தலம் நாலாயிர திவ்ய பிரபந்தம் விளைந்த தலமாக கருதப்படும் பெருமையுடையது. ஆழ்வார்கள் தம் பிரபந்தங்களில் இப்பெருமானை 'குடந்தைக் கிடந்தான்' என அழகுற அழைக்கின்றனர். இக்கோவிலில் ஆராவமுதன் எனும் சார்ங்கபாணி பெருமாள் எழுந்தருளி உள்ளார். திருவரங்கனின் புகழை கூறும் பஞ்சரங்க திருத்தலங்களில் ஒன்றாகவும் விளங்குகின்றது.
மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெற்று வந்தது. கடந்த 5-ந்தேதி ஓலைச்சப்பரத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (சனிக்கிழமை) காலை நடைபெற்றது. இந்த தேர் தமிழகத்திலேயே 3-வது பெரிய தேர் என்ற பெருமை உடையதாகும். முன்னதாக உற்சவர் சாரங்கபாணி, ஸ்ரீதேவி, பூமிதேவி தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டு, தேரோட்டம் தொடங்கியது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது 4 ரதவீதிகளில் அசைந்தாடியபடி வலம் வந்து நிலையை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
பாதுகாப்பு பணியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர். நடமாடும் மருத்துவ குழுவினரும், தீயணைப்பு வாகனமும் தேரை பின்தொடர்ந்தவாறு சென்றது. தேரோட்டத்தை காண ஏராளமான பக்தர்கள் திரண்டதால் கும்பகோணம் மாநகரமே விழாக்கோலம் பூண்டது.
- இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமிக்கு 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலையில் மலையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சித்ரா பவுர்ணமி நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8.53 மணிக்கு தொடங்கி மறுநாள் 12-ம் தேதி (திங்கட்கிழமை) இரவு 10.48 மணிக்கு நிறைவடைகிறது. இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமிக்கு 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை அருணாசலேஸ்வரர் கோவில் மாட வீதியில் அடிப்படை வசதிகள் மேற்கொள்வது தொடர்பாக கலெக்டர் தர்ப்பகராஜ் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
- இன்று பிரதோஷம்.
- குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் அலங்காரம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு சித்திரை-27 (சனிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : திரயோதசி இரவு 6.47 மணி வரை பிறகு சதுர்த்தசி
நட்சத்திரம் : சித்திரை விடியற்காலை 4.14 மணி வரை பிறகு பவுர்ணமி
யோகம் : மரண, அமிர்தயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளல்
இன்று பிரதோஷம். குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் அலங்காரம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவி லில் இருந்து புறப்பாடு. மதுரகவி ஆழ்வார் திருநட்சத்திர வைபவம். இசைஞானியார் நாயனார் குரு பூஜை. தூத்துக்குடி ஸ்ரீ சங்கர ராமேசுவரர் ரதோற்சவம். சோள சிம்மபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆடும் பல்லக்கில் பவனி. கடையம் ஸ்ரீ வில்வவனநாதர் பூம்பல்லக்கில் புறப்பாடு. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடை மருதூர் கோவில்களில் மாலை சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளல்.
மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவர், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரெங்கராஜர் புறப்பாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பக்தி
ரிஷபம்-வெற்றி
மிதுனம்-நட்பு
கடகம்-நன்மை
சிம்மம்-உறுதி
கன்னி-திறமை
துலாம்- மகிழ்ச்சி
விருச்சிகம்-சுகம்
தனுசு- நலம்
மகரம்-சுபம்
கும்பம்-புகழ்
மீனம்-பயணம்
- ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமியன்று, இங்குள்ள சித்திரகுப்தருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.
- சித்ரா பவுர்ணமி அன்று, சித்ரகுப்தருக்கு விழா எடுப்பது சிறப்புக்குரியது.
'கோவில்' என்றாலே அது சிதம்பரம் நடராஜர் கோவிலைத் தான் குறிக்கும். அந்த அளவுக்கு மிகவும் பிரசித்திப் பெற்ற ஆலயமாக இந்த ஆலயம் திகழ்கிறது. காஞ்சிபுரத்தில் சித்ரகுப்தருக்கு தனிக்கோவில் அமைந்திருப்பது போல, சிதம்பரம் நடராஜர் கோவிலிலும் சித்ரகுப்தருக்கு தனிச்சன்னிதி அமைந்திருக்கிறது.
நடராஜர் ஆலயத்தில் உள்ள நூற்றுக்கால் மண்டபத்திற்கு வடக்கே சிவகாமி அம்பிகைக்கு தனிச் சன்னிதி உள்ளது. இதனை 'சிவகாமக் கோட்டம்' என்று அழைப்பார்கள். இதன் வெளிச்சுற்று பிரகாரத்தில் தென்கிழக்கு திசையில் சித்திரகுப்தருக்கு தனிச் சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. மேற்கு நோக்கி அமைந்துள்ள இந்த சன்னிதியில், சித்ரகுப்தர் அமர்ந்த நிலையில் கையில் எழுத்தாணியுடன் காட்சியளிக்கிறார். இவருக்கு அருகில் சனீஸ்வர பகவான் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமியன்று, இங்குள்ள சித்திரகுப்தருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் சித்தரகுப்தர் அவதரித்த தினமாகவும் கருதப்படுகிறது. சித்ரா பவுர்ணமியில் சித்திரகுப்தரை வழிபட்டால் ஆயுள் விருத்தியும், செல்வ விருத்தியும் உண்டாகும். எமதர்மனின் கணக்கராக இருந்து, உலக உயிர்களின் பாவ- புண்ணிய கணக்குகளை எழுதுபவர் சித்ரகுப்தர். எனவே அவர் அவதரித்த நாளில் அவரை வழிபடுவதால், நம்முடைய பாவங்கள் குறையும் என்பது நம்பிக்கை.
சித்ரா பவுர்ணமி அன்று, சித்ரகுப்தருக்கு விழா எடுப்பது சிறப்புக்குரியது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சித்திரகுப்தர் சன்னிதியில் சித்ரா பவுர்ணமியன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அன்று கோவிலில் ஏராளமான பக்தர்கள் சித்திரகுப்தர் சன்னிதியில் நெய் விளக்கு ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடுவது வழக்கம்.
- பிரியாவிடை -சுந்தரேசுவரர் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர்.
- சுவாமி-அம்மன் தேருக்கு முன்பு அலங்கரிக்கப்பட்ட யானை அழைத்துச் செல்லப்பட்டது.
மதுரை:
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாக்காலங்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை-சுந்தரேசுவரர் மதுரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திக்கு விஜயம் போன்ற வைபவங்களை தொடர்ந்து 10-ம் திருநாளான நேற்று திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது. மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவை காண ஏராளமானோர் திரண்டனர்.
தொடர்ந்து அன்னதானம், திருக்கல்யாண விருந்து, மொய் செலுத்துதல் போன்றவையும் நடைபெற்றன. சித்திரை திருவிழாவின் மற்றொரு முத்தாய்ப்பு நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக 2 தேர்களும் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தன.
இன்று அதிகாலை 4 முதல் 4.30 மணிக்கு மீனாட்சி அம்மன், பிரியாவிடை- சுந்தரேசுவரர் ஆகியோர் முத்தம்பல முதலியார் கட்டளை மண்டகப்படி, ராமநாதபுரம் சேதுபதி மகாராஜா மண்டகப்படிக்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து ஒரே பல்லக்கில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை- சுந்தரேசுவரர் கீழமாசி வீதியில் உள்ள தேரடிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன.
அதன்பிறகு பிரியாவிடை -சுந்தரேசுவரர் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர். அப்போது திரண்டிருந்தவர்கள் பக்தி கோஷம் எழுப்பினர். தேரோட்டம் தொடங்குவதற்கு முன்பு அங்குள்ள கருப்பண சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
காலை 5.05 மணிக்கு மேல் 5.29 மணிக்குள் மேஷ லக்கனத்தில் ரதாரோஹணம் நடைபெற்று காலை 6.30 மணிக்கு முதலில் சுவாமி தேரையும், தொடர்ந்து அம்மன் தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
மாசி வீதிகளிள் ஆடி அசைந்து வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரின் முன்பாக ஏராளமான சிவ பக்தர்கள் கைலாய வாத்தியங்களை முழங்கியபடியும், பல்வேறு இசைகளை இசைத்தபடியும் மீனாட்சி- சுந்தரேசுவரர் பதிகம் பாடியபடியும், ஹர ஹர சிவா என பக்தி முழக்கம் விண்ணைப்பிளக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துசென்று சாமி தரிசனம் செய்தனர்.
4 மாசி வீதிகளிலும் தேர்கள் அசைந்தாடி சென்றதை பொதுமக்கள் சாலையின் இருபுறமும் உள்ள உயர்ந்த கட்டிடங்களில் நின்றும் தரிசனம் செய்தனர். சுவாமி-அம்மன் தேருக்கு முன்பு அலங்கரிக்கப்பட்ட யானை அழைத்துச் செல்லப்பட்டது.
அதன் பிறகு விநாயகர், முருகன், நாயன்மார்கள் தனித்தனி சிறிய சப்பரங்களில் சென்றனர். மாசி வீதிகளை வலம் வந்த தேர்கள் மதியம் நிலையை வந்தடைந்தன. அதன் பிறகு சண்டிகேஸ்வரர் வீதி உலா நடைபெற்றது.
தேரோட்ட விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திருவிழாவை காணவந்த பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது. மக்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய வசதியாக போக்குவரத்தில் போலீசார் மாற்றங்கள் செய்து அதனை செயல்படுத்தினர்.
தேரோட்டத்தை தொடர்ந்து இன்று மாலையில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை- சுந்தரேசுவரர் சப்தாவர்ண சப்பரத்தில் மாசி வீதிகளை வலம் வருகின்றனர். நாளை (10-ந் தேதி) உச்சிக் காலத்தில் பொற்றாமரை குளத்தில் தீர்த்த திருவிழா நடக்கிறது. இரவு 10.15 மணிக்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் 16 கால் மண்டபத்தில் இருந்து விடை பெற்றுச் செல்கின்றனர். இந்த நிகழ்ச்சியோடு மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் வேடத்தில் சுந்தரராஜபெருமாள் கண்டாங்கி பட்டுடுத்தி நாளை தங்கப் பல்லக்கில் புறப்படுகிறார்.
நாளை மறுநாள் (11-ந் தேதி) மதுரை நோக்கி வரும் அழகரை வழியெங்கிலும் அமைக்கப்பட்டுள்ள மண்டகப்படிகளில் பக்தர்கள் திரண்டு வரவேற்கிறார்கள். மதுரையில் மூன்றுமாவடியில் நாளை மறுநாள் காலை 6 மணிக்கு எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. மூன்று மாவடியில் சர்க்கரை கிண்ணத்தில் தீபம் ஏற்றியும் சிறப்பு தீபாராதனை காட்டியும் அழகரை மதுரை மக்கள் வரவேற்க உள்ளனர்.
இதைத்தொடர்ந்து அன்று இரவு தல்லாகுளத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் அழகர் தங்குகிறார். அங்கு அவர் திருமஞ்சனம் கொள்கிறார். அங்கு அவருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன.
12-ந்தேதி காலை தங்க குதிரை வாகனத்தில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து மக்களுக்கு அருள் பாலிக்கிறார். அதன்பின் தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பாடாகி ஆயிரம் பொன் சப்பரத்தில் அதிகாலை 3.30 மணி அளவில் எழுந்தருள்கிறார். பின்னர் சித்ரா பவுர்ணமி தினத்தன்று முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நடைபெறுகிறது.
- சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
- திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு, சித்திரை-26 (வெள்ளிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : துவாதசி மாலை 4.56 மணி வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம் : அஸ்தம் நள்ளிரவு 1.45 மணி வரை பிறகு சித்திரை
யோகம் : அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை
இன்று சுபமுகூர்த்த தினம். சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் ரதோற்சவம். திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் தொட்டித் திருமஞ்சன காட்சி. உமாபதி சிவாச்சாரியார் குரு பூஜை. கடையம். சீர்காழி கோவில்களில் ஸ்ரீ சிவப்பெருமான் ரதோற்சவம். திருமாலிருஞ்சோலை. ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மனுக்கு அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு.
திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. பெருஞ்சரி ஸ்ரீ வாகீஸ்வரர் படைவீடு. ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. லால்குடி ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சனம், ஊஞ்சல் சேவை. மாடவீதி புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவ நல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை தலங்களில் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நன்மை
ரிஷபம்-உறுதி
மிதுனம்-நிறைவு
கடகம்-தெளிவு
சிம்மம்-இன்பம்
கன்னி-சாந்தம்
துலாம்- பக்தி
விருச்சிகம்-ஆக்கம்
தனுசு- களிப்பு
மகரம்-உற்சாகம்
கும்பம்-நலம்
மீனம்-நட்பு
- திருத்தேரில் சோமஸ்கந்தர்- உமாமகேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
- தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
அவினாசி:
கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும், காசிக்கு நிகரான சிறப்பும் பெற்ற திருப்பூர் மாவட்டம் அவினாசி அவிநாசிலிங்கேசுவரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர் திருவிழா நடைபெறும்.
அதேபோல் இந்த ஆண்டு கடந்த 1-ந்தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தேர் திருவிழா தொடங்கியது. திருவிழாவையொட்டி 5-ந்தேதி இரவு பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தனர்.
நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகளும் பெருமாளும் திருத்தேருக்கு எழுந்தருளும் வைபவம் நடைபெற்றது. இதையடுத்து தேரில் எழுந்தருளிய சுவாமியை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
இன்று (வியாழக்கிழமை ) காலை 8 மணிக்கு தேரின் மேல் வீற்றிருந்த சாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் 9 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. சிவாச்சார்யர்கள், ஆன்மீக பெருமக்கள், பக்தர்கள் 'அவிநாசியப்பா', 'அரோகரா', 'நமசிவாயா', சிவ... சிவ... என பக்தி கோஷமிட, சிவனடியார்கள் கைலாய வாத்தியம் முழங்க திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. திருத்தேரில் சோமஸ்கந்தர்- உமாமகேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி கோவை, ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கோவில் முகப்பில் இருந்து புறப்பட்ட தேரானது சிறிது தொலைவு இழுத்து செல்லப்பட்டு நிறுத்தப்படுகிறது. தேரின் 2 பின் சக்கரங்களிலும் ராயம்பாளையம் மற்றும் புதுப்பாளையம் சன்னை மிராசுகள் சன்னை போட்டு தேரை நகர்த்தி கொடுத்தனர்.
நாளை 9-ந்தேதி மீண்டும் காலை 9 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து மாலை 4 மணி அளவில் நிலை வந்து சேர உள்ளது. 10-ந் தேதி அம்மன் தேரோட்டம் நடக்கிறது. 11-ந்தேதி மாலை வண்டித்தாரை, பரிவேட்டையும் 12-ந்தேதி தெப்ப தேர் உற்சவமும் நடக்கிறது. 13-ந்தேதி மகா தரிசன விழாவும், 14-ந்தேதி மஞ்சள் நீர் விழாவும் நடக்கிறது.
தேரோட்டத்தில் கூட்ட நெரிசலை சமாளிக்க போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வெயிலின் தாக்கத்தால் ரத வீதிகளில் ஆங்காங்கே நீர்-மோர் வழங்கப்பட்டது.
அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம் கோவில் முகப்பில் உள்ள தேர் நிலையில் தொடங்கி ரத வீதிகள் வழியாக மீண்டும் நிலை வந்து சேரும் வகையில் இன்று முதல் 3 நாட்கள் நடத்தப்படுகிறது.
92 அடி உயரம், 400 டன் எடை கொண்ட இந்த தேர் திருவாரூர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தேருக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் 3-வது பெரிய தேர் ஆகும்.
- வெளிக்கோடை, உள்கோடை என தலா 5 நாட்கள் வீதம் 10 நாட்கள் நடைபெறும்.
- விழா 11-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.
திருச்சி:
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் நம்பெருமாள் கோடை திருநாள் (பூச்சாற்று உற்சவம்) வெளிக்கோடை, உள்கோடை என தலா 5 நாட்கள் வீதம் 10 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 2-ந்தேதி தொடங்கியது.
இதையொட்டி மாலை 6 மணி அளவில் உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு இரவு 7 மணிக்கு வெளிக்கோடை நாலுகால் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு புஷ்பம் சாத்துப்படி கண்டருளினார். பின்னர் அங்கிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
இந்த பூச்சாற்று உற்சவத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து நம்பெருமாள் உள்கோடை திருநாள் தொடங்கியது. இந்த விழா 11-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. 10-ந் தேதி வரை வீணை ஏகாந்த சேவை நடைபெறுகிறது. 12-ந்தேதி சித்ரா பவுணர்மி அன்று கஜேந்திரமோட்ச புறப்பாடு நடைபெறுகிறது. அன்று மாலை 6.15 மணி முதல் 6.45 மணிக்குள் ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி ஆற்று படித்துறையில் நம்பெருமாள் கஜேந்திர மோட்சம் கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் மற்றும் கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
- மாசி வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
- மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி கோவிலுக்குள் நடந்தது.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மனின் பட்டாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது மதுரையின் அரசியாக மீனாட்சிக்கு முடிசூட்டப்பட்டது. தொடர்ந்து மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக போரில் தேவர்களை வென்று, கடைசியாக சுந்தரேசுவரரிடம் போர் புரியும் திக்குவிஜயம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
சுந்தரேசுவரராக பிரகாஷ் பட்டர் மகன் கவுதம், மீனாட்சி அம்மனாக சிவசேகரன் பட்டர் மகன் சத்தியன் வேடம் தரித்து போர் புரிவது போன்று நடித்து காண்பித்தனர். இதனை காண மாசி வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
இதை முன்னிட்டு மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி கோவிலுக்குள் நடந்தது. அப்போது பல்வேறு சீர்வரிசைகள் பெண் வீட்டின் சார்பில் வழங்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து கோவிலில் உள்ள வடக்கு-மேற்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாணம் இன்று காலை நடைபெற்றது. இதற்காக திருமண மண்டபம் மற்றும் பழைய கல்யாண மண்டபம் ரூ.35 லட்சம் மதிப்பில் ஊட்டி, பெங்களூரு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 10 டன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
மீனாட்சி அம்மனுக்கு பூண் பூட்டும் போது வானில் இருந்து வண்ண மலர்கள் கொட்டும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
முன்னதாக இன்று அதிகாலை 4 மணி அளவில் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி மாப்பிள்ளை அழைப்பாக சித்திரை வீதிகளை வலம் வந்தனர். பின்னர் சுவாமி முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாகி ஊர்வலமாக வடக்கு-மேற்கு ஆடி வீதியில் திருக்கல்யாண மணமேடையில் எழுந்தருளினர்.
இன்று காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணி அளவில் ரிஷப லக்னத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது.
வேத மந்திரங்கள் ஓத, பவளக்கனிவாய் பெருமாள் தாரைவார்த்துக் கொடுக்க, பக்தர்களின் வாழ்த்தொலி விண்ணை முட்ட, மீனாட்சியம்மன் கழுத்தில் வைரக்கல் பதித்த தங்க திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது.
தொடர்ந்து அம்மனும், சுவாமியும் மணக்கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர்.
இரவு 7.30 மணிக்கு சுந்தரேசுவரர் தங்கஅம்பாரியுடன் கூடிய யானை வாகனத்திலும், மீனாட்சி அம்மன் ஆனந்தராயர் பூப்பல்லக்கிலும் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளை வலம் வருவார்கள்.
- மீனாட்சிக்கு திருமணம் என்றதும் மதுரை நகர் விழாக்கோலம் பூண்டுவிட்டது.
- மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கும் போது கூடவே பிரியாவிடை என்ற அம்மனும் சுவாமியுடன் உடன் இருப்பார்.
மதுரையின் அரசி மீனாட்சி அம்மனுக்கு, சுந்தரேசுவரருடன் இன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மீனாட்சியின் திருமணம் அன்று எப்படி நடந்தது என்று ஸ்தானீக பட்டர் ஹலாஸ் கூறியதாவது:-
மீனாட்சிக்கு திருமணம் என்றதும் மதுரை நகர் விழாக்கோலம் பூண்டுவிட்டது. நாட்டின் அரசிக்கு திருமணம் என்பதால் மக்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். திருமணத்திற்கு நாள் குறித்தது முதல் மணமகள் மீனாட்சியின் முகத்தில் வெட்கம் நிறைந்து காணப்பட்டது. மீனாட்சியிடம் உறுதி அளித்த நாளில் நானே நேரில் வந்து திருமணம் செய்து கொள்வேன் என்று சுந்தரேசுவரராகிய சிவபெருமான் கூறியிருந்தார். அதன்படி புலித்தோலை ஆடையாகவும், பாம்புகளை அணி கலன்களாகவும் கொண்டு காட்சி தரும் சிவபெருமான் அன்று மணக்கோலத்தில் சுந்தரேசுவரராக மதுரை மாப்பிள்ளையாக வந்தார். அவரது திருமுகத்தை கண்டு மதுரை மக்கள் பரவசம் அடைந்து தரிசித்தனர்.
மேலும் முக்கோடி தேவர்கள், மகரிஷிகள், சித்தர்கள் என பலரும் மதுரைக்கு வந்தார்கள். திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகப்பெருமான் வள்ளி தேவசேனா உடனும் பவளக்கனிவாய் பெருமாளும் நேரில் வந்து திருக்கல்யாணத்தை நடத்தி வைப்பார்கள். இது தவிர வியாக்ரபாதர், பதஞ்சலி மகரிஷிகளும் உள்ளிட்ட முனிவர்கள் இறைவனின் திருமணக்கோலத்தை காண மணமேடையில் காத்து இருப்பார்கள். இவ்வளவு சிறப்பு வாய்ந்த மீனாட்சி திருக்கல்யாணம் வைபவம் இன்று காலை பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் நிகழ இருக்கிறது.
மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கும் போது கூடவே பிரியாவிடை என்ற அம்மனும் சுவாமியுடன் உடன் இருப்பார். அவர் சுந்தரேசுவரரை விட்டு ஒரு கணமும் பிரியாத அம்மன். அதனால் தான் அந்த அம்மனுக்கு பிரியாவிடை என பெயர் வந்தது. மீனாட்சி அம்மனுக்கு பட்டத்தரசியாக மக்களை காக்கும் பொறுப்பு அதிகம் இருக்கிறது. அதே நேரத்தில் தன்னுடைய கணவரையும் பாதுகாக்க வேண்டும். ஆதலால் கணவனின் மீது கொண்ட அன்பு காரணமாகத்தான் பிரியாவிடை அன்னையாக காட்சி தருகிறாள்.
ஆட்சியையும் மக்களையும், கவனிக்கும் தன்னால் கணவனை கவனிக்க முடியாமல் போய்விடுமோ என்ற கவலை மீனாட்சி அம்மனுக்கு வந்திருக்கிறது. அதனால் தான் பிரியாவிடை உருவத்தில் சொக்கநாதருடன் கூடவே உற்சவ அன்னையாக பிரியாவிடை நாயகியாக வலம் வருகிறாள் என்றார்.
- மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம்.
- திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு சித்திரை-25 (வியாழக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : ஏகாதசி பிற்பகல் 3.16 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம் : உத்திரம் இரவு 11.23 மணி வரை பிறகு அஸ்தம்
யோகம் : மரண, சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை, எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருவள்ளூர் வீரராகவப் பெருமாள்
ஸ்ரீ வேணுகோபாலன் திருக்கோலமாய் காட்சி
இன்று சர்வ ஏகாதசி. சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம். சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் புஷ்ப பல்லக்கிலும் பவனி. திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் ரதோற்சவம். திருஉத்திரகோச மங்கை ஸ்ரீ மங்களேஸ்வரி அம்மன் சிவலிங்க பூஜை செய்தருளிய காட்சி. குறுக்குத் துறை ஸ்ரீ முருகப் பெருமான் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. மைசூர் மண்டபம் எழுந்தருளல். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம்.
ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுரிய நாராயணப் பெருமாள் திருமஞ்சனம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-செலவு
ரிஷபம்-ஆதரவு
மிதுனம்-ஆர்வம்
கடகம்-பெருமை
சிம்மம்-ஈகை
கன்னி-உழைப்பு
துலாம்- கவனம்
விருச்சிகம்-அமைதி
தனுசு- வரவு
மகரம்-நிறைவு
கும்பம்-கடமை
மீனம்-இரக்கம்






