என் மலர்
வழிபாடு
- இளம்பெண் வடிவில் வந்த அம்மன் சிரித்து மறைந்தாள்.
- கனவில் வளையல் போட்டுக் கொள்ள வந்தவள் சமயபுரம் அன்னையே என்பதை உணர்ந்து கொண்ட அவர், சக வியாபாரிகளிடமும் கூறினார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் பிரசித்தி பெற்ற ஆகாச மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆகாச மாரியம்மனுக்கு திருவுருவத் திருமேனி கிடையாது. ஜோதி வடிவில் அம்மனை பக்தர்கள் வழிபடுகின்றனர். சமயபுரம் மாரியம்மனே இந்த கோவிலில் அருவமாக இருந்து ஆட்சி செய்கிறார் என்கிறார்கள்.
தல வரலாறு
சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு, திருநறையூரில் கவரைச் செட்டியார்கள் என்ற வணிக சமூகத்தார் பாரம்பரியமாக கண்ணாடி வளையல் வியாபாரம் செய்து வந்தனர். இவர்கள் குதிரையில் ஊர் ஊராக சென்று வியாபாரம் செய்யும் பழக்கத்தை உடையவர்கள். ஒருமுறை, சமயபுரம் கோவிலுக்கு பங்குனி பெருவிழாவின்போது வணிகம் செய்ய வந்தனர். இரவில் அங்கேயே தங்கி, உறங்கினர்.
அவர்களில் பெரியவர் ஒருவரின் கனவில் தோன்றியசமயபுரம் மாரியம்மன், இளம்பெண் வடிவம் எடுத்து கைகளுக்கு கண்ணாடி வளையல்களை அணிவிக்க கூறினார். அந்த பெரியவரும் அப்பெண்ணின் பொன்னிற கைகளில் வளையல் அணிவிக்க முயன்றார். ஆனால் அணியும்போது வளையல்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக உடைந்து கீழே விழுந்தது. இதனால் வியாபாரி குழப்பமடைந்து, என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார்.
தெய்வீக அம்சமாக தோற்றமளித்த அப்பெண்ணின் கைகளை வளையல்களால் அலங்கரிக்க முடியவில்லையே என்று வருத்தப்பட்டவர், ''தாயே, வளையல்கள் அனைத்தும் உடைந்து விட்டன. உன் அழகிய கைகளை வளையல்களால் அலங்கரிக்க என்னிடம் இப்போது வளையல்கள் இல்லை. என் ஊருக்கு வந்தால் உன் இரு கைகளுக்கும் விதவிதமான வளையல்கள் அணிவித்து அலங்கரிப்பேன். உனக்கு முல்லை, மல்லிகை மலர்களைச் சூட்டுவேன்'' என்று அன்புடன் வேண்டினார்.
இதைக்கேட்டு இளம்பெண் வடிவில் வந்த அம்மன் சிரித்து மறைந்தாள். உடனே, வியாபாரி கனவு கலைந்து எழுந்தார். அவரின் அருகில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த வளையல்கள் அனைத்தும் உடைந்திருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். தவிர, அவருடன் வந்திருந்த மற்ற வியாபாரிகளுக்கு அம்மை போட்டிருப்பதையும் கண்டார். இதனால் அந்த பெரியவர் மிகவும் மனம் வருந்தினார். இது சமயபுரத்தாளின் சோதனை என்பதை அறிந்த அவர் கோவிலை நோக்கிக் கைகூப்பி வணங்கி நின்றார்.
விடிந்ததும் கோவில் அர்ச்சகர் அந்த வியாபாரியிடம், ''ஐயா, வெளியூரிலிருந்து வந்திருக்கும் வளையல் வியாபாரி தாங்கள் தானே? உடைந்த வளையல்களுக்கு பதிலாக இந்த பொற்காசுகளை வைத்துக் கொள்ளுங்கள். சமயபுரத்தாள் இதை உங்களிடம் கொடுக்கச் சொன்னார்'' என்றார். மேலும், அம்மை நோய் தாக்கியவர்களுக்கு மாரியம்மனின் அருட்பிரசாதமான திருநீற்றை வழங்கினார். அவர்கள் அதை நெற்றி மற்றும் உடல் முழுவதும் பூசியவுடன் அம்மை நோய் குணமடைந்து எழுந்தார்கள்.
கனவில் வளையல் போட்டுக் கொள்ள வந்தவள் சமயபுரம் அன்னையே என்பதை உணர்ந்து கொண்ட அவர், சக வியாபாரிகளிடமும் கூறினார். இதனால் மகிழ்ச்சி அடைந்த வியாபாரிகள், தங்கள் அனைவருக்கும் அன்னை காட்சி தரவேண்டும் என்று வேண்டினார்கள். அதை ஏற்று அன்னை ஆகாயத்தில் அன்ன வாகனத்தில் காட்சி தந்து அருளாசி வழங்கினாள். அன்னையை தரிசித்த வியாபாரிகள், ''தாயே, ஆகாச மாரி.. ஆகாச மாரி..'' என போற்றி புகழ்ந்து வணங்கினர். பின்பு, ''எங்கள் ஊருக்கு வந்து அருள வேண்டும்'' என்று ஆகாச மாரியம்மனை மனமுருக வேண்டினார்கள்.
இதைக் கேட்ட சமயபுரம் மாரியம்மன் அவர்களிடம், ''உங்கள் ஊர் எது?'' என்று கேட்க, ''நளிர்வாய் முல்லை முறுவலிக்கும் திருநறையூர்'' என்றனர். அவர்களது பக்தியை மெச்சிய அன்னை, ''முல்லைக்கும், மல்லிக்கும், கை வளையல்களுக்கும் ஆண்டுதோறும் வைகாசி மாத அமாவாசைக்கு அடுத்த வெள்ளிக்கிழமை சமயபுரத்திலிருந்து ஆகாச மார்க்கமாக திருநறையூருக்கு வந்து, பத்து நாட்கள் தங்கிவிட்டு மீண்டும் சமயபுரம் திரும்பி விடுவேன்'' என்று அருளினாள். சமயபுரத்தாள் சொன்னதுபோல் ஒவ்வொரு வருடமும் திருநறையூர் தலம் வந்து தங்கி அலங்காரத்துடன் காட்சி தந்து அருள்புரிகிறாள் என்பது ஐதீகம்.

வெள்ளிக்குடத்துடன் ஆகாச மாரியம்மன்
வைகாசி திருவிழா
இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், வைகாசி மாதம் அமாவாசையை அடுத்த வெள்ளிக்கிழமை தொடங்கி, பதிமூன்று நாட்களுக்கு திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. அப்போது சமயபுரம் மாரியம்மன் ஆகாய மார்க்கமாக இங்கு வந்து, திருவிழாவுக்கு என்று செய்யப்படும் விக்ரகத்தில் சேர்ந்து தரிசனம் கொடுப்பதாக ஐதீகம். இந்த ஊர் மக்கள் அளிக்கும் கண்ணாடி வளையல்கள், மல்லிகை, முல்லை பூக்களை ஏற்றுக் கொள்வதற்காகவே சமயபுரத்தாள் ஆகாய மார்க்கமாக இந்த ஊருக்கு வந்து திருவிழாவில் கலந்து கொள்கின்றாள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
திருவிழா நடைபெறும் அனைத்து நாட்களும் செப்புக் குடத்தில் கலசம் வைக்கப்பட்டு விழா எடுக்கப்படுகின்றது. கலச நீரும், அம்மனுக்குச் சாத்தப்படும் எலுமிச்சை மாலையில் உள்ள எலுமிச்சம் பழமும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. திருவிழாவில் தர்ப்பை புல்லால் அம்மன் உருவாக்கப்படுகிறார். ஒவ்வொரு நாளும் லட்சுமி, சரஸ்வதி, மதனகோபாலன் போன்ற பல்வேறு வடிவங்களில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு காட்சி தருகிறாள். கடைசி நாளில் ராஜராஜேஸ்வரி வடிவத்தில் உச்சம் பெறுகிறாள்.
பதிமூன்றாம் நாள் அம்மன் நின்ற கோலத்தில் தேரில் சமயபுரத்திற்கு எழுந்தருள்வதுடன் விழா நிறைவு பெறுகிறது. அச்சமயம் அம்மன் கையில் வெள்ளிக்குடம் சுமந்தவாறு வீதியுலா நடைபெறும். இதன்மூலம், அம்மன் சமயபுரம் செல்கிறாள் என்பது நம்பிக்கை. இக்கோவிலில், வைகாசி மாதம் நடைபெறும் திருவிழாவை தவிர மற்ற நாட்களில் அம்மன் உருவமற்றவராக அதாவது சூட்சும ரூபத்தில் இருக்கிறார்.

கோவில் தோற்றம்
திருமணத் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்குள்ள அம்மனை வேண்டிக்கொள்கின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், அம்மனுக்கு மல்லிகைப் பூ, வளையல்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். மேலும், காவடிகள், அங்கப்பிரதட்சணம், மாவிளக்கு ஏற்றுதல் போன்ற பல்வேறு நேர்த்திக்கடனை செலுத்தி வழிபடுகிறார்கள்.
அமைவிடம்
கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 10 கிலோமீட்டர் தொலைவில் நாச்சியார்கோவிலில் (திருநறையூர்) அமைந்துள்ளது, ஆகாச மாரியம்மன் கோவில்.
- திருக்குற்றாலம் ஸ்ரீ குற்றாலநாதர் புறப்பாடு.
- திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு புரட்டாசி-23 (வியாழக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : திருதியை பின்னிரவு 3.02 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம் : பரணி நள்ளிரவு 12.30 மணி வரை பிறகு கிருத்திகை
யோகம் : சித்த, மரணயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சனம்
சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருக்குற்றாலம் ஸ்ரீ குற்றாலநாதர் புறப்பாடு. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமான் அபிஷேகம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சனம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு.
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சனம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திரரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவானுக்கு கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நற்செயல்
ரிஷபம்-இன்பம்
மிதுனம்-போட்டி
கடகம்-சுபம்
சிம்மம்-ஆதரவு
கன்னி-அமைதி
துலாம்- புகழ்
விருச்சிகம்-நன்மை
தனுசு- தனம்
மகரம்-நிறைவு
கும்பம்-சிறப்பு
மீனம்-உறுதி
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
பிரச்சனைகள் தீரும் நாள். புதிய தொழில் முயற்சி வெற்றி தரும். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.
ரிஷபம்
நன்மைகள் நடைபெறும் நாள். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் பதவிகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றும்.
மிதுனம்
வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டும் நாள். அடுத்தவர் நலனில் அக்கறை செலுத்தியதற்கு ஆதாயம் உண்டு. குழப்பங்கள் அகலும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
கடகம்
அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். வரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும்.
சிம்மம்
நினைத்தது நிறைவேறும் நாள். மதிநுட்பத்தால் மகத்தான காரியங்களைச் செய்து மகிழ்வீர்கள். வீடு மாற்றங்கள் உறுதியாகலாம். இல்லத்தாருடன் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும்.
கன்னி
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். எதிரிகளின் பலம் கூடும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாது. வீண் விரயங்கள் உண்டு.
துலாம்
வளர்ச்சி கூடும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டமொன்றை தீட்டுவீர்கள். சொத்துகளில் ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.
விருச்சிகம்
திட்டமிட்ட காரியம் சிறப்பாக நடைபெறும் நாள். பேச்சுத் திறமையால் பிரபலஸ்தர்களிடம் காரியமொன்றை சாதித்துக் கொள்வீர்கள். விட்டுப் போன வரன்கள் மீண்டும் வரலாம்.
தனுசு
மனக்குழப்பம் அகலும் நாள். நட்பு வட்டம் விரிவடையும். மாற்று இனத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியை கொண்டு வந்து சேர்ப்பர். உத்தியோகத்தில் கெடுபிடி அதிகரிக்கும்.
மகரம்
பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும் நாள். பிள்ளைகளின் சுபகாரிய பேச்சுகள் முடிவாகும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். நேற்று சந்தித்தவர்களால் சில நன்மைகள் உண்டு.
கும்பம்
புகழ்கூடும் நாள். பொருளாதார முன்னேற்றம் உண்டு. மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள்.
மீனம்
தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வருவர். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். வருமானம் திருப்தியளிக்கும்.
- வேடன் உருவில் வந்த முருகப்பெருமான், அருணகிரிநாதருக்கு வழிகாட்டியதாக கூறப்படுகிறது.
- எந்த முருகன் கோவிலிலும் இல்லாத வகையில், நைவேத்தியமாக சுருட்டு படைக்கும் பழக்கம் இக்கோவிலுக்கு உண்டு.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது, விராலிமலை முருகன் கோவில். மலைமேல் அமைந்துள்ள இந்த கோவிலில் முருகப்பெருமான் வள்ளி - தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து அருள்பாலித்து வருகிறார்.
தல வரலாறு
ஒரு காலத்தில் இந்தப் பகுதி குரா எனும் ஒரு வகை மரங்கள் நிறைந்த காடாக இருந்துள்ளது. ஒரு முறை வேடன் ஒருவன் வேட்டையாட வந்தபோது, வேங்கை ஒன்று அவன் கண்ணில் பட்டது. அவன், அதனை வேட்டையாட வேண்டும் என்பதற்காக விரட்டி சென்றான். அப்போது, அந்த வேங்கை வேகமாக ஓடி ஒரு குரா மரத்துக்கு அருகில் வந்ததும் காணாமல் மறைந்தது. இதனைக் கண்ட வேடன் ஆச்சரியப்பட்டான்.
அப்போது, திடீரென்று அங்கு தோன்றிய மயிலும், விபூதி வாசனையும் அங்கே முருகப்பெருமான் சூட்சுமமாக இருப்பதை உணர்த்தியது. பிறகு, ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, அவ்விடத்தை ஆறுமுகனாரின் உறைவிடமாகக் கொண்டு முருகனின் விக்ரகத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினர் என்று கூறப்படுகிறது.
ஒரு முறை அருணகிரி நாதர் திருச்சியில் உள்ள வயலூர் தலத்துக்கு வந்தார். அங்குள்ள முருகப்பெருமானை திருப்புகழ் பாடி விட்டு புறப்படும்போது, 'விராலிமலைக்கு வா' என்று முருகப்பெருமான் அசரீரியாக அழைத்தார். இதையடுத்து, விராலிமலையை நோக்கி பயணித்த அருணகிரிநாதருக்கு விராலிமலை முருகன் இருக்கும் இடம் புலப்படவில்லை. அப்போது வேடன் உருவில் வந்த முருகப்பெருமான், அருணகிரிநாதருக்கு வழிகாட்டியதாக கூறப்படுகிறது. பின்பு அருணகிரிநாதர், விராலிமலை முருகப்பெருமானை வழிபட்டு அஷ்டமா சித்தி பெற்றார் என்கிறது தல புராணம்.
அருணகிரிநாதர், திருப்புகழில் இத்தலத்து முருகப் பெருமானை 18 முறை மனமுருகிப் பாடியுள்ளார். வசிஷ்டரும், அவரது மனைவி அருந்ததி தேவியாரும் இங்கு வந்து முருகப்பெருமானை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றதாக கூறப்படுகிறது.

கோவில் அமைப்பு
கோவில் 207 படிகளுடன் மலை உச்சியில் அமைந்துள்ளது. கோவிலில் இடும்பன், மீனாட்சி சுந்தரேசுவரர், சந்தானக்கோட்டம், காசி விஸ்வநாதர் விசாலாட்சி ஆகியோரது சன்னிதிகள் உள்ளன. கருவறையில் முருகப்பெருமான், சுமார் பத்தடி உயரத்தில் கம்பீரமான தோற்றத்துடன் காட்சி தருகிறார். இவர் ஆறுமுகங்கள், பன்னிரு கரங்களுடன், வள்ளி - தெய்வானை சமேதராக கல்யாண திருக்கோலத்தில் அருள்புரிகின்றார். பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, அகத்தியர், அருணகிரிநாதர், சண்டிகேஸ்வரர், பைரவர் சன்னிதிகளும் உள்ளன.
இந்த ஆலயத்தில் காற்றாடி மண்டபம் ஒன்று அமைந்துள்ளது. மலை அடிவாரத்தின் தென்பகுதியில் சரவணப் பொய்கை உள்ளது.
விழாக்கள்
கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், கந்த சஷ்டித் திருவிழா (சூரசம்காரம்), கார்த்திகை தீபம், நவராத்திரி விழா, தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்பட பல்வேறு திருவிழாக்கள் வெகுவிமரிசையாக நடைபெறும்.
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், நேர்த்திக்கடனாக தங்களுக்கு குழந்தை பிறந்ததும் இங்கு வந்து ஆறுமுகனிடம் குழந்தையை கொடுத்து விடுவர். பின்பு குழந்தையின் தாய்மாமன் அல்லது சிற்றப்பன்மார்கள் மூலம் ஆறுமுகனிடம் தவிட்டைக் கொடுத்து, குழந்தையை பெற்றுக்கொள்கின்றனர்.
எந்த முருகன் கோவிலிலும் இல்லாத வகையில், நைவேத்தியமாக சுருட்டு படைக்கும் பழக்கம் இக்கோவிலுக்கு உண்டு. ஒரு சமயம் கருப்பமுத்து என்ற பக்தர், பெருங்காற்று, மழைக்கு இடையில் வீட்டுக்கு செல்ல முடியாமல் குளிரில் நடுங்கி நின்றார். அப்போது அவருக்கு அருகில் நின்ற ஒருவர் குளிருக்கு இதமாக இருக்கும் என சுருட்டு ஒன்றை கொடுத்துள்ளார். பின்பு இருவரும் ஆற்றை கடந்து செல்லும்போது, அருகில் இருந்த நபரை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர் கோவிலுக்கு சென்று பார்த்தபோது, அங்கு முருகப்பெருமானுக்கு முன்பாக சுருட்டு இருப்பதைகண்டு, தம்மோடு வந்தது முருகப்பெருமான் என்பதை உணர்ந்து கொண்டார். அதன்பின்பு தான் கோவிலில் சுருட்டு படைக்கும் வழக்கம் ஏற்பட்டதாக கூறுகிறார்கள்.
கோவில், காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
திருச்சியில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவிலும், புதுக்கோட்டையில் இருந்து வடமேற்கே 40 கிலோமீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது. திருச்சி பேருந்து நிலையத்தில் இருந்து கோவிலுக்குச் செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
சந்தோஷம் கூடும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்து கொள்வீர்கள். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சிகள் கைகூடும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும்.
ரிஷபம்
நட்பு வட்டம் விரிவடையும் நாள். பொருளாதார நிலை உயரும். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். அத்தியாவசியப் பொருட்களை வாங்கி சேர்க்க முன்வருவீர்கள்.
மிதுனம்
முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். ஆரோக்கியம் சீராகும். பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும்.
கடகம்
தன்னம்பிக்கையோடு பணிபுரிந்து தடைகளை அகற்றிக்கொள்ள வேண்டிய நாள். கொடுக்கல், வாங்கல்களில் ஏற்பட்ட குழப்பங்கள் மாறும். விட்டுப்போன விவாக பேச்சுகள் மீண்டும் வந்து சேரும்.
சிம்மம்
யோகமான நாள். பழைய வாகனத்தைக் கொடுத்து புதிய வாகனம் வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் குரலுக்குச் செவிசாய்ப்பர்.
கன்னி
யோசித்து செயல்பட வேண்டிய நாள். பொறுப்புகள் அதிகரிக்கும். கையிருப்பு கரையும். வாகன பழுதுச்செலவுகளால் வாட்டம் ஏற்படும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
துலாம்
கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் நாள். வருமானம் திருப்தி தரும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க கொஞ்சம் அலைச்சல்களை சந்திப்பீர்கள்.
விருச்சிகம்
தொழில் ரீதியாக எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும் நாள். குடும்ப உறுப்பினர்களின் குறைகளை தீர்க்க முன்வருவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.
தனுசு
சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டிய நாள். உடன்பிறப்புகள் வழியில் நல்ல தகவல் வரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மனதை புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது.
மகரம்
செல்வநிலை உயரும் நாள். கடமையை நிறைவேற்றுவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும் பதவிகளும் கிடைக்கும். பயணம் பலன் தரும்.
கும்பம்
யோகமான நாள். காரிய வெற்றிக்கு கண்ணியமிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிறருக்காக பொறுப்பு சொல்லி வாங்கிக்கொடுத்த தொகை வந்துசேரும்.
மீனம்
ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். அதிகாலையிலேயே நல்ல தகவல் வரலாம். தொழிலில் கூடுதல் லாபம் உண்டு. பொதுவாழ்வில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
- மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு புரட்டாசி-22 (புதன்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : பிரதமை காலை 7.40 மணி வரை பிறகு துவிதியை பின்னிரவு 3.48 மணி வரை பிறகு திருதியை
நட்சத்திரம் : அசுவினி பின்னிரவு 2.08 மணி வரை பிறகு பரணி
யோகம் : மரண, சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்மருக்கு திருமஞ்சனம்
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வேங்கடேசப் பெருமாள் ஆடும் பல்லக்கில் பவனி. ருத்தர பசுபதியார் குரு பூஜை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்மருக்குத் திருமஞ்சனம். திருநெல்வேலி சமீபம் 4-ம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை தலத்தில் திருமஞ்சனம். கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு.
விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் அபிஷேகம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பக்தி
ரிஷபம்-நன்மை
மிதுனம்-சிந்தனை
கடகம்-பரிசு
சிம்மம்-உற்சாகம்
கன்னி-வரவு
துலாம்- உயர்வு
விருச்சிகம்-சாந்தம்
தனுசு- லாபம்
மகரம்-பயணம்
கும்பம்-நற்செயல்
மீனம்-புகழ்
- அண்டத்தைப் பாதுகாப்பதற்காக விஷ்ணு எடுத்த முதல் அவதாரம் இதுவாகும்.
- கலியுகத்தின் இறுதியில் தர்மத்தை நிலைநாட்டவும், அதர்மத்தை அழிக்கவும் எடுக்கப்படும் பத்தாவது அவதாரம்.
பெருமாளின் அவதாரங்கள் என்பவை பூமியில் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டவும், பக்தர்களைக் காக்கவும் பகவான் விஷ்ணு எடுக்கும் வடிவங்கள் ஆகும். விஷ்ணுவின் பத்து முக்கிய அவதாரங்கள் தசாவதாரங்கள் என அழைக்கப்படுகின்றன.
அதன் விவரம் வருமாறு:-
1. மச்சாவதாரம், 2. கூர்மாவதாரம், 3. வராக அவதாரம், 4. நரசிங்க அவதாரம், 5. வாமன அவதாரம், 6. பரசுராம அவதாரம், 7. ராம அவதாரம், 8. பலராம அவதாரம், 9. கிருஷ்ண அவதாரம், மற்றும் 10. கல்கி அவதாரம்.
மச்ச அவதாரம் (மீன்):
அண்டத்தைப் பாதுகாப்பதற்காக விஷ்ணு எடுத்த முதல் அவதாரம் இதுவாகும்.
கூர்ம அவதாரம் (ஆமை):
பிரபஞ்சம் புதைந்திருந்தபோது அதைப் பாதுகாக்கவும், சமுத்திர மந்தனத்தின் போது மந்தர மலையைத் தாங்கவும் இந்த அவதாரம் எடுக்கப்பட்டது.

வராக அவதாரம் (பன்றி):
பூமியை இரண்யாட்சன் என்ற அரக்கனிடம் இருந்து மீட்டெடுத்த அவதாரம் இது.
நரசிங்க அவதாரம் (சிங்க-மனிதன்):
இரண்யகசிபு என்ற அரக்கனை வதம் செய்து பக்தன் பிரகலாதனைக் காத்த அவதாரம்.
வாமன அவதாரம் (குள்ள உருவம்):
மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அழித்து, உலகை மூன்று அடிகளால் அளந்த குள்ள உருவம் எடுத்த அவதாரம்.
பரசுராம அவதாரம்:
பிராமணர்களைக் கொன்ற சத்திரியர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய அவதாரம்.
ராம அவதாரம்:
தீய சக்திகளை அழித்து, அறநெறியுடன் வாழ்ந்த மனித உருவம் எடுத்த அவதாரம்.
பலராம அவதாரம்:
பலத்தின் அடையாளமாகத் திகழ்ந்த அவதாரம்.
கிருஷ்ண அவதாரம்:
கீதை போதனைகளை உலகுக்கு வழங்கிய, அன்பையும் பக்தியையும் போதித்த அவதாரம்.
கல்கி அவதாரம்:
கலியுகத்தின் இறுதியில் தர்மத்தை நிலைநாட்டவும், அதர்மத்தை அழிக்கவும் எடுக்கப்படும் பத்தாவது அவதாரம்.
- சேர மன்னர் தனது மகளின் வயிற்றுவலிக்கு மருத்துவரிடம் தீர்வு காண முடியாததால் ஜோதிடரை அணுகினார்.
- திருமணத்தடை நீங்க கோவிலுக்கு வந்து வழிபடுகின்றனர்.
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் இயற்கை எழில் சூழ்ந்த நெல் வயல்களுக்கு நடுவே அப்பன் வெங்கடாசலபதி கோவில் அமைந்துள்ளது. கோவில்கள் சூழ்ந்த நகரமாக போற்றப்படும் சேரன்மாதேவியில் பழமைவாய்ந்த 9 பெருமாள் கோவில்கள், சிவன் கோவில்கள், அம்மன் கோவில்கள் உள்ளன.
தல வரலாறு
அப்பன் வெங்கடாசலபதி கோவில், விஜயநகர பேரரசு ஆட்சியின்போது கட்டப்பட்டது. இக்கோவில் சுவரில் தமிழ், சமஸ்கிருத எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. இங்கு அருள்பாலிக்கும் அப்பன் வெங்கடாசலபதியை திருப்பதியில் வீற்றிருக்கும் ஏழுமலையானுக்கு இணையாக வணங்குகின்றனர். பசுமை போர்த்திய வயல்கள், வாழை தோட்டங்களைக் கடந்து இக்கோவிலுக்கு செல்வோருக்கு மன அமைதி, பேரானந்தம் கிடைக்கிறது.
சேர மன்னர் தனது மகளின் வயிற்றுவலிக்கு மருத்துவரிடம் தீர்வு காண முடியாததால் ஜோதிடரை அணுகினார். ''மகளுக்கு ஏற்பட்ட வயிற்று வலியை தீர்க்க வேண்டும்'' என்று வேண்டினார். அதற்கு ஜோதிடர், ''தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள அப்பன் வெங்கடாசலபதியை வணங்கி, உன் மகளுக்கு மிளகு ரசம் வைத்து கொடு'' என்று கூறினார். அதன்படியே மன்னர், அப்பன் வெங்கடாசலபதியை வணங்கி தனது மகளுக்கு மிளகு ரசம் வைத்து கொடுத்தார். அப்போது, ஆச்சரியப்படும் விதமாக மன்னர் மகள் குணமடைந்தார். எனவே இக்கோவிலில் தயாராகும் மிளகு ரசம் சிறப்பு வாய்ந்தது.
நோய்களை தீர்க்கும் தலம்
இங்குள்ள தாமிரபரணி நதியில் நீராடி அப்பன் வெங்கடாசல பதியை தரிசித்தால் தீராத எந்த கொடிய நோயாக இருந்தாலும் நீங்கும். ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமியை வணங்கி குணம் பெற்றுள்ளனர். அவ்வாறு நன்மை கிடைக்கப் பெற்றவர்கள், நேர்த்திக்கடனாக மிளகு அதிகமாக போட்டு வெண்பொங்கல் தயாரித்து கோவிலில் படைத்து பக்தர்களுக்கு வழங்குகின்றனர்.
இதேபோன்று திருமணத்தடை நீங்கவும் கோவிலுக்கு வந்து வழிபடுகின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்கள் மாதந்தோறும் திருவோண நட்சத்திர தினத்தன்று கோவிலுக்கு வந்து பெருமாளுக்கு பாயசம் படைத்து வழிபட வேண்டும். அவ்வாறு தொடர்ந்து 9 மாதங்கள் கோவிலுக்கு வந்து பாயசம் படைத்து வழிபட்ட பலரும் குழந்தை பாக்கியம் கிடைத்ததாக தெரிவிக்கின்றனர்.
கல்வெட்டுகள்
கோவிலில் மூலவர் அப்பன் வெங்கடாசலபதி கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். கோவிலின் தாயார் அலர்மேல் மங்கை மற்றும் பத்மாவதி தாயார், உற்சவர் சீனிவாசன். கோவிலில் சுமார் 60 பழங்கால கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில் முதன்மையானது கி.பி. 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டிய மன்னர் ஜடாவர்மன் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்தது. அதில், மன்னர் ஜடாவர்மன் தனது மைத்துனர் ரவிவர்மாவின் ஆலோசனையின்பேரில், கி.பி 1200-ம் ஆண்டு சேரன்மாதேவி என்ற சதுர்வேதி மங்கலத்தின் கிழக்கு கிராமமான கருங்குளப்பற்று நிலத்தை இறைவனுக்கு தினசரி காணிக்கை செலுத்துவதற்கும், இந்த கோவிலில் வேதங்கள் மற்றும் புராணங்களை ஓதுவதற்கும் முற்றிலும் வரி விலக்கு அளித்து உத்தரவிட்டது பொறிக்கப்பட்டு உள்ளது.

கோவில் தோற்றம்
திருவிழாக்கள்
கோவிலில் புரட்டாசி பிரம்மோற்சவம், பங்குனி உத்திரம், மாசி மகம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி, சிரவண தீபம் போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடும், கருட சேவையும் நடைபெறுகிறது. திருவோண நட்சத்திர தினம் சிறப்பு வாய்ந்ததாக கொண்டாடப்படுகிறது.
அமைவிடம்
இக்கோவில், சேரன்மாதேவி - கல்லூர் - நெல்லை சாலையில் ராமசாமி கோவிலுக்கு வடக்கே சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. வீரவநல்லூரில் இருந்து 6 கி.மீ., நெல்லையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது.
- பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம்.
- ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியிருக்கிறார்கள்.
சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம். இதில் முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும், நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள்.
தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது 'தேவாரம்' என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர்.
இந்த தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.
பாடல்:-
பாகமும் தேவியை வைத்துக்கொண்டு பைவிரி துத்திப் பரியபேழ்வாய்
நாகமும் பூண்டநள் ளாறுடைய
நம்பெரு மான்இது என்கொல் சொல்லாய்
போகமும் நின்னை மனத்துவைத்துப்
புண்ணியர் நண்ணும் புணர்வுபூண்ட
ஆகம்உ டையவர் சேரும்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
- திருஞானசம்பந்தர்
விளக்கம்:-
ஒரு பாகத்தில் உமாதேவியை வைத்துக் கொண்டு, நஞ்சினையும், அகன்ற படத்தையும், பிளந்த வாயையும் உடைய நாகத்தை அணிகலனாய் பூண்டு, நள்ளாற்றில் வீற்றிருக்கும் பெருமானே! உன்னை மனதில் நினைத்து, இன்பம் அடையும் புண்ணியர்களான அடியவர்கள் விளங்கும் கூடல் ஆலவாயின்கண் விரும்பி தங்குவதற்கு என்ன காரணமோ? சொல்வாயாக!
- திருப்பதி ஏழுமலையான் சகஸ்ரகலசாபிஷேகம்.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி புறப்பாடு.
இந்த வார விசேஷங்கள்
7-ந் தேதி (செவ்வாய்)
* கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் ஊஞ்சலில் காட்சி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.
* தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
8-ந் தேதி (புதன்)
* கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் ஆடும் பல்லக்கில் பவனி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* திருப்பதி ஏழுமலையான் சகஸ்ரகலசாபிஷேகம்.
* சமநோக்கு நாள்.
9-ந் தேதி (வியாழன்)
* சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* திருப்போரூர் முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
10-ந் தேதி (வெள்ளி)
* சங்கடஹர சதுர்த்தி.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் பவனி.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.
* திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்க மயில் வாகனத்தில் பவனி.
11-ந் தேதி (சனி)
* திருக்குற்றாலம் குற்றாலநாதர் புறப்பாடு.
* திருவரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீர ராகவப் பெருமாள், மதுரை கூடலழகர் பெருமாள் ஆகிய தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.
* மன்னார்குடி ராஜகோபாலசுவாமி புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
12-ந் தேதி (ஞாயிறு)
* சஷ்டி விரதம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* பாபநாசம் சிவபெருமான் பவனி.
* சமநோக்கு நாள்.
13-ந் தேதி (திங்கள்)
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* கீழ்திருப்பதி கோவிந்த ராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* மேல்நோக்கு நாள்.
- தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு.
- ஆறுமுக மங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலையில் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு புரட்டாசி-21 (செவ்வாய்க்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : பவுர்ணமி காலை 9.50 மணி வரை பிறகு பிரதமை
நட்சத்திரம் : ரேவதி பின்னிரவு 3.41 மணி வரை பிறகு அசுவினி
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம்
சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வேங்கடேச சுவாமி ஊஞ்சலில் காட்சி. தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு சம்ஹார அர்ச்சனை.
ஆறுமுக மங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலையில் அபிஷேகம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-முயற்சி
ரிஷபம்-புகழ்
மிதுனம்-இன்பம்
கடகம்-நேர்மை
சிம்மம்-நற்செய்தி
கன்னி-நன்மை
துலாம்- உயர்வு
விருச்சிகம்-லாபம்
தனுசு- செலவு
மகரம்-வெற்றி
கும்பம்-தாமதம்
மீனம்-உழைப்பு
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
முன்னேற்றம் கூடும் நாள். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு உண்டு. தேக நலனில் அக்கறை செலுத்தவும். சில நேரங்களில் நீங்கள் விட்டுக்கொடுத்து போவது நல்லது.
ரிஷபம்
யோகமான நாள். பிரியமானவர்களோடு ஏற்பட்ட பிரச்சனை தீரும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு. குடும்ப அமைதிக்காக வழிபாடுகளை மேற்கொள்வீர்கள்.
மிதுனம்
நெருக்கடி நிலை அகலும் நாள். வாய்ப்புகள் வாயில் தேடி வரும். மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி கூடும். இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
கடகம்
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். சேமிப்பு கரையாதிருக்க சிக்கனத்தை கடைப்பிடிப்பீர்கள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
சிம்மம்
கவலைகள் தீரக் கடவுள் வழிபாட்டை மேற்கொள்ளவேண்டிய நாள். கடன் சுமை அதிகரிக்கும். உறவினர் வழியில் மனக்கசப்பு உருவாகும். வரவைவிடச் செலவு கூடும்.
கன்னி
தடைகள் அகலும் நாள். தனவரவு திருப்தி தரும். வியாபார விருத்திக்கு புதிய கூட்டாளிகள் வந்திணைவர். உத்தியோகத்தில் நீடிப்பதா வேண்டாமா என்ற சிந்தனை அதிகரிக்கும்.
துலாம்
எதிரிகளின் பலம் கூடும் நாள். எல்லோரையும் அனுசரித்துச்செல்வது நல்லது. நேற்று எடுத்த முடிவை இன்று மாற்றிக்கொள்வீர்கள். வாங்கல், கொடுக்கல்களில் கவனம் தேவை.
விருச்சிகம்
வாயிலைத்தேடி வருமானம் வந்து சேரும் நாள். வழிபாடுகளில் மனதை செலுத்துவீர்கள். நேற்றைய கனவு இன்று பலிதமாகும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.
தனுசு
செல்வாக்கு உயரும் நாள். வரவு வந்தாலும் செலவு கூடுதலாகும். முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது. பயணங்களில் தாமதம் ஏற்படும்.
மகரம்
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். பணத்திற்காக செய்திருந்த ஏற்பாடுகள் பலன் தரும். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளின் உத்தியோக முயற்சி கைகூடும்.
கும்பம்
நிம்மதி குறையும் நாள். வரவைவிடச் செலவு கூடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் தொல்லை உண்டு. வீடு கட்ட அல்லது வாங்க செய்த ஏற்பாடு தாமதப்படும்.
மீனம்
எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும் நாள். புதிய மனிதர்களின் அறிமுகத்தால் பொருளாதார வளர்ச்சி கூடும். பெற்றோர்களின் பாசமழையில் நனைவீர்கள்.






