என் மலர்
நீங்கள் தேடியது "viralimalai murugan temple"
- வேடன் உருவில் வந்த முருகப்பெருமான், அருணகிரிநாதருக்கு வழிகாட்டியதாக கூறப்படுகிறது.
- எந்த முருகன் கோவிலிலும் இல்லாத வகையில், நைவேத்தியமாக சுருட்டு படைக்கும் பழக்கம் இக்கோவிலுக்கு உண்டு.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது, விராலிமலை முருகன் கோவில். மலைமேல் அமைந்துள்ள இந்த கோவிலில் முருகப்பெருமான் வள்ளி - தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து அருள்பாலித்து வருகிறார்.
தல வரலாறு
ஒரு காலத்தில் இந்தப் பகுதி குரா எனும் ஒரு வகை மரங்கள் நிறைந்த காடாக இருந்துள்ளது. ஒரு முறை வேடன் ஒருவன் வேட்டையாட வந்தபோது, வேங்கை ஒன்று அவன் கண்ணில் பட்டது. அவன், அதனை வேட்டையாட வேண்டும் என்பதற்காக விரட்டி சென்றான். அப்போது, அந்த வேங்கை வேகமாக ஓடி ஒரு குரா மரத்துக்கு அருகில் வந்ததும் காணாமல் மறைந்தது. இதனைக் கண்ட வேடன் ஆச்சரியப்பட்டான்.
அப்போது, திடீரென்று அங்கு தோன்றிய மயிலும், விபூதி வாசனையும் அங்கே முருகப்பெருமான் சூட்சுமமாக இருப்பதை உணர்த்தியது. பிறகு, ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, அவ்விடத்தை ஆறுமுகனாரின் உறைவிடமாகக் கொண்டு முருகனின் விக்ரகத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினர் என்று கூறப்படுகிறது.
ஒரு முறை அருணகிரி நாதர் திருச்சியில் உள்ள வயலூர் தலத்துக்கு வந்தார். அங்குள்ள முருகப்பெருமானை திருப்புகழ் பாடி விட்டு புறப்படும்போது, 'விராலிமலைக்கு வா' என்று முருகப்பெருமான் அசரீரியாக அழைத்தார். இதையடுத்து, விராலிமலையை நோக்கி பயணித்த அருணகிரிநாதருக்கு விராலிமலை முருகன் இருக்கும் இடம் புலப்படவில்லை. அப்போது வேடன் உருவில் வந்த முருகப்பெருமான், அருணகிரிநாதருக்கு வழிகாட்டியதாக கூறப்படுகிறது. பின்பு அருணகிரிநாதர், விராலிமலை முருகப்பெருமானை வழிபட்டு அஷ்டமா சித்தி பெற்றார் என்கிறது தல புராணம்.
அருணகிரிநாதர், திருப்புகழில் இத்தலத்து முருகப் பெருமானை 18 முறை மனமுருகிப் பாடியுள்ளார். வசிஷ்டரும், அவரது மனைவி அருந்ததி தேவியாரும் இங்கு வந்து முருகப்பெருமானை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றதாக கூறப்படுகிறது.

கோவில் அமைப்பு
கோவில் 207 படிகளுடன் மலை உச்சியில் அமைந்துள்ளது. கோவிலில் இடும்பன், மீனாட்சி சுந்தரேசுவரர், சந்தானக்கோட்டம், காசி விஸ்வநாதர் விசாலாட்சி ஆகியோரது சன்னிதிகள் உள்ளன. கருவறையில் முருகப்பெருமான், சுமார் பத்தடி உயரத்தில் கம்பீரமான தோற்றத்துடன் காட்சி தருகிறார். இவர் ஆறுமுகங்கள், பன்னிரு கரங்களுடன், வள்ளி - தெய்வானை சமேதராக கல்யாண திருக்கோலத்தில் அருள்புரிகின்றார். பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, அகத்தியர், அருணகிரிநாதர், சண்டிகேஸ்வரர், பைரவர் சன்னிதிகளும் உள்ளன.
இந்த ஆலயத்தில் காற்றாடி மண்டபம் ஒன்று அமைந்துள்ளது. மலை அடிவாரத்தின் தென்பகுதியில் சரவணப் பொய்கை உள்ளது.
விழாக்கள்
கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், கந்த சஷ்டித் திருவிழா (சூரசம்காரம்), கார்த்திகை தீபம், நவராத்திரி விழா, தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்பட பல்வேறு திருவிழாக்கள் வெகுவிமரிசையாக நடைபெறும்.
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், நேர்த்திக்கடனாக தங்களுக்கு குழந்தை பிறந்ததும் இங்கு வந்து ஆறுமுகனிடம் குழந்தையை கொடுத்து விடுவர். பின்பு குழந்தையின் தாய்மாமன் அல்லது சிற்றப்பன்மார்கள் மூலம் ஆறுமுகனிடம் தவிட்டைக் கொடுத்து, குழந்தையை பெற்றுக்கொள்கின்றனர்.
எந்த முருகன் கோவிலிலும் இல்லாத வகையில், நைவேத்தியமாக சுருட்டு படைக்கும் பழக்கம் இக்கோவிலுக்கு உண்டு. ஒரு சமயம் கருப்பமுத்து என்ற பக்தர், பெருங்காற்று, மழைக்கு இடையில் வீட்டுக்கு செல்ல முடியாமல் குளிரில் நடுங்கி நின்றார். அப்போது அவருக்கு அருகில் நின்ற ஒருவர் குளிருக்கு இதமாக இருக்கும் என சுருட்டு ஒன்றை கொடுத்துள்ளார். பின்பு இருவரும் ஆற்றை கடந்து செல்லும்போது, அருகில் இருந்த நபரை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர் கோவிலுக்கு சென்று பார்த்தபோது, அங்கு முருகப்பெருமானுக்கு முன்பாக சுருட்டு இருப்பதைகண்டு, தம்மோடு வந்தது முருகப்பெருமான் என்பதை உணர்ந்து கொண்டார். அதன்பின்பு தான் கோவிலில் சுருட்டு படைக்கும் வழக்கம் ஏற்பட்டதாக கூறுகிறார்கள்.
கோவில், காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
திருச்சியில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவிலும், புதுக்கோட்டையில் இருந்து வடமேற்கே 40 கிலோமீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது. திருச்சி பேருந்து நிலையத்தில் இருந்து கோவிலுக்குச் செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.
- விராலிமலையில் உள்ளது பிரசித்தி பெற்ற முருகன் கோவில்.
- தேரோட்டம் வருகிற 12-ந்தேதி நடக்கிறது.
விராலிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு மலைமேல் முருகன் வள்ளி-தெய்வானையுடன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு கடந்த 4-ந் தேதி முருகன் வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் அங்குள்ள கொடிமரத்தில் காப்பு கட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 12-ந் தேதி நடக்கிறது. இதனால் கோவிலின் அடிவாரத்தில் உள்ள தேரை தூய்மை செய்யும் பணி நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து தூய்மை செய்யும் பணி முடிந்து தேருக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது.
அதன்பின்னர் அலங்காரம் செய்யும் பணிகள் தொடங்கியது. மேலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வைகாசி விசாகத்திற்கு கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிரமமின்றி படிகளில் ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய ஏதுவாக வெயிலின் தாக்கம் பாதங்களில் தெரியாதவாறு படிகளில் கூலிங் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்துடன் இணைந்து மண்டகபடிதாரர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.
இத்தனை சிறப்புமிக்க இத்தலத்தில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்தாண்டும் கந்தசஷ்டி விழாவானது இன்று(வியாழக்கிழமை) காலை கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.
இதனைதொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை, மாலை வேளைகளிலும் நாகம், பூதம், சிம்மம், மயில் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் முருகன் வள்ளி-தெய்வானையுடன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 13-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முருகன், சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சியும், அன்று மாலை 6 மணிக்கு விராலிமலை கீழ ரதவீதியில் சூரசம்ஹாரமும் நடக்கிறது.
தொடர்ந்து முருகன் தங்க கேடயத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிக்கிறார். 14-ந்தேதி மலைமேல் உள்ள முருகனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
வருவாய்த்துறையின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் 509 பயனாளிகளுக்கு ரூ.76 லட்சம் மதிப்பீட்டிலும், விராலிமலையில் 301 பயனாளிகளுக்கு ரூ.55 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று விராலிமலை மலங்குளம் ரூ.1 கோடியே 63 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட உள்ளது. இதேபோல் விராலிமலை சந்தை ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. விராலிமலை முருகன் கோவில் மலைக்கு பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் நேரடியாக செல்லும் வகையில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கப்பட உள்ளது. மேலும் விராலிமலை ஊராட்சியை பேரூராட்சியாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விராலிமலை சுற்று வட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மணப்பாறை அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. திருச்சியில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் புற்றுநோய் சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன் தினம் முருகன், வள்ளி-தெய்வானையுடன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் விராலூருக்கு சென்றார். பின்னர் நேற்று அதிகாலை அங்கிருந்து விராலிமலைக்கு வந்தார். அதனைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் முருகன், வள்ளி-தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

சிறப்பு அலங்காரத்தில் முருகன், வள்ளி-தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.
தொடர்ந்து காலை 10 மணிக்கு புதுக்கோட்டை திருக்கோவில்கள் செயல் அலுவலர் ராமராஜா, விராலிமலை தாசில்தார் செல்வவிநாயகம் ஆகியோர் தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். பின்னர் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. அப்போது கூடிநின்ற திரளான பக்தர்கள் தேங்காய், பழம் படைத்து முருகனை வழிபட்டனர். பின்னர் 11.15 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது.
இதில் விராலிமலை, புதுக்கோட்டை, இலுப்பூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தையொட்டி ஆங்காங்கே பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் மேற்பார்வையாளர் மாரிமுத்து, மண்டகபடிதாரர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் தலைமையில் ஏராளமான போலீசார் செய்திருந்தனர். பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தொடர்ந்து இன்று மதுரை சாலையில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழா நடக்கிறது. நாளை விடையாற்றியுடன் விழா நிறைவடைகிறது.






