search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விராலிமலை முருகன் கோவிலில் நேற்று வைகாசி விசாக தேரோட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.
    X
    விராலிமலை முருகன் கோவிலில் நேற்று வைகாசி விசாக தேரோட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.

    விராலிமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம்

    விராலிமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் காலை, மாலை என இரு வேளைகளிலும் மயில், நாகம், பூதம், யானை, சிம்மம், குதிரை போன்ற பல்வேறு வாகனங்களில் முருகன் வள்ளி-தெய்வானையுடன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன் தினம் முருகன், வள்ளி-தெய்வானையுடன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் விராலூருக்கு சென்றார். பின்னர் நேற்று அதிகாலை அங்கிருந்து விராலிமலைக்கு வந்தார். அதனைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் முருகன், வள்ளி-தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.


    சிறப்பு அலங்காரத்தில் முருகன், வள்ளி-தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    தொடர்ந்து காலை 10 மணிக்கு புதுக்கோட்டை திருக்கோவில்கள் செயல் அலுவலர் ராமராஜா, விராலிமலை தாசில்தார் செல்வவிநாயகம் ஆகியோர் தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். பின்னர் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. அப்போது கூடிநின்ற திரளான பக்தர்கள் தேங்காய், பழம் படைத்து முருகனை வழிபட்டனர். பின்னர் 11.15 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது.

    இதில் விராலிமலை, புதுக்கோட்டை, இலுப்பூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தையொட்டி ஆங்காங்கே பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் மேற்பார்வையாளர் மாரிமுத்து, மண்டகபடிதாரர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் தலைமையில் ஏராளமான போலீசார் செய்திருந்தனர். பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தொடர்ந்து இன்று மதுரை சாலையில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழா நடக்கிறது. நாளை விடையாற்றியுடன் விழா நிறைவடைகிறது.
    Next Story
    ×