என் மலர்
வழிபாடு
- சதுரகிரியில் பிரசித்தி பெற்ற சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது.
- இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை.
திருமங்கலம்:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரியில் பிரசித்தி பெற்ற சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளதால் ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சாமிதரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி வருகிற 29-ந் தேதி புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 27-ந் தேதி (புதன்கிழமை) முதல் 30-ந்தேதி வரை பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
10 வயது உட்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது. மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. மலைப் பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது.
இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை உள்பட பல்வேறு கட்டுப் பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது. அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மழை பெய்யும் அறிகுறிகள் தென்பட்டால் மலையேற பக்தர்களுக்கு தடை வைக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.
- துளசி திருமாலுக்கு மிகவும் உகந்த ஒருவகைச் செடியின் இலையாகும்.
- துளசி ஊறிய புனித நீரும் நல்ல மருந்தாகிறது.
துளசி திருமாலுக்கு மிகவும் உகந்த ஒருவகைச் செடியின் இலையாகும். துள+சி எனப் பிரித்து ஒப்பில்லாத செடி என இதனைக் கூறுவர். "திருத்துழாய்" என்று அழைக்கப்படும் துளசியைத்தான் பிரசாதமாக வழங்குகிறார்கள். செம்புப் பாத்திரத்தில் நல்ல சுத்தமான நீரை ஊற்றி அதில் துளசியை இட்டு வைத்திருப்பார்கள். இதைத்தான் தீர்த்தமாக வழங்குவார்கள். துளசி ஊறிய புனித நீரும் நல்ல மருந்தாகிறது. இதனால் மனம்கூட நல்ல தூய்மை பெறும்.
துளசியை கார்த்திகை பவுர்ணமியில் பூஜிக்க எல்லா சித்திகளும் ஏற்படும். எப்போதும் தர்மம் செய்யும்போது ஒரு துளசி இலை வைத்தே தானம் செய்ய வேண்டும் என தர்மசாஸ்திரம் கூறுகிறது. பொருளைவிட துளசி மேன்மையானதால் துளசிதானம் கொடுக்கப்படுகிறது என்றே கூறுவர்.
துளசி தீர்த்தம் வயிறை சுத்திகரித்து ரணம் ஏற்பட வழி செய்யும். மரணப் படுக்கையில் இருப்பவர்க்கு துளசித் தீர்த்தம் கொடுக்க, விஷ்ணு லோகம் போக வாய்ப்பு கிடைக்கும் என்பர். துளசிக்கு சமஸ்கிருதத்தில் 'பிருந்தா' எனப்பெயர். காடு போல் துளசி வளர்ந்திருக்கும் தலத்திற்கு பிருந்தாவனம் எனப்பெயர். இதனால்தான் துளசிக் காடாகிய பிருந்தாவனம் ராமருக்குரிய விருப்பமான தலமானது.
பூஜைக்குப் பூக்களை அர்ப்பணிக்கும் போது அன்று பூத்த மலர்களையே கீழே உதிர்வதற்கு முன்பிருக்கும் நிலையில் பறித்து பயன்படுத்த வேண்டும் என்பது நியதி. இதனால் பழைய பூ, புதிய பூ என்ற வேறுபாடுகள் உள்ளன. ஆனால் பூஜைக்குரிய துளசியில் இம்மாதிரியான நிலைகள் இல்லை. எப்போதும் புதிய நிலையைக் கொண்டது துளசி. எனவே பூஜைக்கு எப்போதும் உகந்ததாகத் துளசி கருதப்படுகிறது. புரட்டாசி மாதம் முழுவதும் தினமும் வழிபாட்டுக்கு துளசி பயன்படுத்துவது மிக, மிக நல்லது.
பெண்கள் சுமங்கலிகளாக வாழ துளசி பூஜை முக்கியமாகும். வீட்டில் துளசி மாடம் அமைத்து அதற்கு விளக்கேற்றி, காலை, மாலை பூஜை செய்து மாடத்தினை வலம் வந்து வணங்க வேண்டும். துளசி மாடத்தை பூஜிக்க வேறு துளசியில் இருந்தே தழைகள் பறிக்க வேண்டும். கோவில்களில் துளசியைப் பிரசாதமாகக் கொடுத்தால் ஒரு தழையை காதில் வைத்துக் கொள்ள வேண்டும். "யார் துளசி பத்திரம் கொண்டு வருகிறானோ அவனுடன் நானும் ஓடி வருகிறேன்" என்றார் பகவான்.
துளசிச் செடிகள் அதிகமாக இருக்கின்ற வீடு மிக புனிதம் உடையதாவதால் யமகிங்கரர்கள் அங்கு வர மாட்டார்கள். நர்மதை நதியின் தரிசனம், கங்கையில் குளியல் துளசி தள ஸ்பரிசம் இம்மூன்றும் துளசிக்கு சமமானவை.
திருமணத் தடைகள் ஏற்பட்டு மன அமைதி இழப்போர், மன அமைதியற்றவர்கள், செல்வம் நிறைய அளவில் இருந்தும் நற்பணிகளைச் செய்ய முடியாத நிலையில் உள்ளோர், நல்ல எண்ணங்கள் கைகூட வேண்டுமென்று முயலுவோர், சமய பேதம் சிறிதுமின்றித் திங்கட்கிழமை தோறும் அதிகாலையில் நீராடி தூய ஆடை அணிந்து, தூய மனத்தினராய், தொட்டாற் சிணுங்கியையும் துளசியையும் ஒன்றாக வைத்து வளர்த்து வரும் தொட்டியைக் கொண்டு வந்து அதற்கு அலங்காரம் செய்ய வேண்டும். தூப தீபம் காட்ட வேண்டும், கற்பூரம் ஏற்றி வழிபட வேண்டும், பழம் ஏதேனும் வைத்து வழிபட வேண்டும். இவ்விதமாக வழிபடும்போது இருபத்தியொருமுறை அந்தத் தொட்டியைச் சுற்றி வந்து வணங்க வேண்டும் இவ்விதம் தொடர்ந்து வழிபட்டு வந்தால் நாலாவது வார இறுதியில் நல்ல பலன்களைப் பெற்று சிறப்படையலாம்.
- சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம்.
- திருப்பதி ஏழுமலையப்பன் ரதோற்சவம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, புரட்டாசி 7 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: நவமி காலை 6.10 மணி வரை பிறகு தசமி விடியற்காலை 4.௦2 மணி வரை பிறகு ஏகாதசி
நட்சத்திரம்: பூராடம் காலை 10.37 மணி வரை பிறகு உத்திராடம்
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. நாட்டரசன்கோட்டை குணசீலம் தலங்களில் ஸ்ரீ எம்பெருமான் பவனி. தல்லாகுளம் ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள் காலை வெண்ணைத்தாழி சேவை. ஏனாதிநாத நாயனார் குருபூஜை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் குதிரை வாகனத்தில் வையாளி சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பொருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. திருப்பதி ஏழுமலையப்பன் ரதோற்சவம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வெற்றி
ரிஷபம்-பெருமை
மிதுனம்-தேர்ச்சி
கடகம்-லாபம்
சிம்மம்-சுகம்
கன்னி-வரவு
துலாம்- சுபம்
விருச்சிகம்-தாமதம்
தனுசு- கண்ணியம்
மகரம்-ஆதாயம்
கும்பம்-விருப்பம்
மீனம்-யோகம்
- திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் அதிகாலை 3 மணி அளவில் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது.
- புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் கடலூரில் இருந்து திருவந்திபுரத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு இருந்தன.
கடலூர்:
கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும்.
இக்கோவிலில் கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சாமி கும்பிட்டு செல்வார்கள். இந்த நிலையில் புரட்டாசி மாதம் என்பதால் இந்த மாதம் முழுவதும் தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் மொட்டை அடித்து தங்கள் நேர்த்திக்கடன் செலுத்திவிட்டு தேவநாத சாமியை தரிசனம் செய்து செல்வது வழக்கம்.
இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் அதிகாலை 3 மணி அளவில் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தேவநாதசாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து காலை 5 மணி முதல் பொதுமக்களை சாமி தரிசனத்திற்கு அனுமதித்தனர். முன்னதாக அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான மக்கள் திருவந்திபுரம் பகுதியில் திரண்டனர். பின்னர் தங்கள் நேர்த்திக் கடன் செலுத்துவதற்கு சாலக்கரை இலுப்பை தோப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூடாரத்தில் மதியம் வரை 3 ஆயிரம் பக்தர்கள் மொட்டை அடித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துவர்.
இதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கோவில் முன்பு அமைத்திருந்த நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா" என்ற பக்தி கோஷம் எழுப்பி சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கதாகும். இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் கடலூரில் இருந்து திருவந்திபுரத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு இருந்தன. மேலும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையில் 150-க்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
- பக்தர்களுக்கு தேவஸ்தான சார்பில் உணவு, குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.
- நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் காத்திருந்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா கோலமாக நடந்து வருகிறது. பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான தங்க கருட சேவை நேற்று இரவு நடந்தது.
கருட சேவையை காண நேற்று நாடு முழுவதிலும் இருந்து 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் மாட வீதிகளில் குவிந்தனர்.
இன்று காலை அனுமந்த வாகனத்தில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வந்தார். அங்கு குவிந்திருந்த பக்தர்கள் கற்பூரம் மற்றும் தீபாராதனை செய்து வழிபட்டனர்.
மேலும் பக்தி பரவசத்துடன் கோவிந்தா கோஷமிட்டனர்.
இன்று மாலை தங்க தேரோட்டம் நடக்கிறது. பிரம்மோற்சவ விழா மற்றும் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 72,650 பேர் தரிசனம் செய்தனர். 27,410 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.33 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் காத்திருந்தனர். சாமி தரிசனத்திற்கு 24 மணி நேரமானது.
பக்தர்களுக்கு தேவஸ்தான சார்பில் உணவு, குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.
- குச்சனூர் சனி பகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் கண்ணாடி சப்பரத்தில் பவனி.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, புரட்டாசி 6 (சனிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: அஷ்டமி காலை 8.10 மணி வரை பிறகு நவமி
நட்சத்திரம்: மூலம் காலை 11.48 மணி வரை பிறகு பூராடம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
குச்சனூர் சனி பகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். ஸ்ரீவில்லிபுத்தூர் சமீபம் திருவண்ணாமலை ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடு. கரூர் தான்தோன்றி ஸ்ரீகல்யாண வேங்கடேசப் பெருமாள் திருக்கல்யாணம். திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் காலை சூரியப் பிரபையிலும், இரவு சந்திரப் பிரபையிலும் புறப்பாடு. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாச பெருமாள் சூர்ணாபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜருக்கு அலங்கார திருமஞ்சன சேவை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் கண்ணாடி சப்பரத்தில் பவனி.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பொறுமை
ரிஷபம்-ஆசை
மிதுனம்-உயர்வு
கடகம்-கடமை
சிம்மம்-கண்ணியம்
கன்னி-தெளிவு
துலாம்- செலவு
விருச்சிகம்-மகிழ்ச்சி
தனுசு- மாற்றம்
மகரம்-பாராட்டு
கும்பம்-ஜெயம்
மீனம்-வரவு
- தொண்டை மானுக்கு ஏழுமலையான் மீது பற்றும், பாசமும் அதிகம்.
- தினமும் பொன்மலர்களால் அர்ச்சனை செய்வதற்குரிய ஏற்பாடுகளை செய்திருந்தான்.
ஏழுமலையானுக்கு புரட்டாசி சனிக்கிழமைதான் உகந்த நாள் என்பதன் பின்னணியில் ஒரு கதை உள்ளது. அந்த கதை வருமாறு:-
மன்னன் தொண்டை மானுக்கு ஏழுமலையான் மீது பற்றும், பாசமும் அதிகம். எனவே திருவேங்கடவனுக்கு ஆலயம் அமைத்து தினமும் பொன்மலர்களால் அர்ச்சனை செய்வதற்குரிய ஏற்பாடுகளை செய்திருந்தான். அதன்படியே பூஜையும் செய்து வந்தான். ஒருநாள் பூஜையின்போது பொன்மலர்களுக்கிடையே மண்மலர்களும் வந்து விழுவதைக் கண்டான். திடுக்கிட்ட அவன், அவை மண்மலர்கள்தானா எனக் கூர்ந்து நோக்கினான்.
அவை மண்மலர்கள்தான் என்பதை மீண்டும் மீண்டும் பூஜையில் வந்து விழுந்த மலர்கள் சந்தேகமே இல்லாமல் நிரூபித்தன. கதவுகள் அனைத்தையும் மூடி விட்டு மன்னன் மீண்டும் பூஜையைத் தொடர்ந்தபோதும் அவ்வாறே நிகழ்ந்தது. மன்னனின் மனம் குழப்பத்துக்கு உள்ளாகியது. தனது வழிபாட்டில் ஏதேனும் பிழை இருக்குமோ என உள்ளுக்குள் வருந்தினான்.
குருவை என்ற கிராமம் ஒன்றில் பீமய்யா என்ற குயவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். பிறவியிலேயே அவனுக்கு கால் ஊனம். தனது குலத்தொழிலான மண்பாண்டங்கள் செய்தலை நேர்மை தவறாமல் ஏழுமலையான் மீது அயராத பக்தி கொண்டு செய்து வந்தான். வேங்கடவனும் அவன் பக்திக்கு மெச்சி, தன் திருவுருவத்தை அவனுக்கு கனவில் காட்டி பின்பு மறைந்து விட்டார்.
பீமய்யாவுக்கு திருமால் கனவில் காட்சியளித்த நாள், புரட்டாசி மாத சனிக்கிழமை விடியற்காலை நேரம். பீமய்யாவும், தனது கனவில் தோன்றிய திருமாலின் வடிவத்தை அப்படியே செய்தான். அதன்பின்னர் மண்ணால் ஏழுமலையானின் உருவத்தை வடித்து, மலர்கள் தூவி வழிபட்டு வந்தான். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை நாளில் தவறாமல் விரதம் அனுசரித்து வந்த பீமய்யன், பெருமாளின் சிந்தனையிலேயே தொழிலையும் செய்து வந்தான்.
இவ்விதம் தொழில் செய்து கொண்டிருக்கும் போதே, கண்மூடி தியானத்தில் ஆழ்ந்து விடுவான். அச்சமயங்களில்தான் என்ன செய்கிறோம் என்பதை அறியா நிலையிலேயே, பிசைந்து கொண்டிருக்கும் களி மண்ணையே மலர்களாக பாவித்து பெருமாளுக்கு அர்ச்சிப்பான். காலப்போக்கில் இதுவே அவனது அன்றாட அலுவலாகவும் ஆகி விட்டது. இது இப்படியிருக்க, குழப்பத்திலிருந்த தொண்டைமான் ஒருநாள் அபூர்வக் கனவொன்றைக் கண்டான்.
அக்கனவில் வேங்கடநாதன் தோன்றி, `தமது பக்தன் பீமய்யன் செய்யும் பூஜையே தமக்கு மிகுந்த மனநிறைவை அளிப்பதாகவும், அந்தப் பூஜையை நீயும் செய்து பார், அப்போது உண்மை விளங்கும்' என்று கூறி மறைந்தார். தொண்டைமானும் திருமால் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று பீமய்யன் செய்யப்போகும் பூஜையை மறைந்திருந்து கவனித்தான்.
தினமும் செய்வது போலவே, பீமய்யன் தான் வடிவமைத்திருந்த வேங்கடவனின் சிலை அருகே அமர்ந்து மண்பாண்டங்களை செய்து கொண்டே, கண்மூடி மண் மலர்களைத் தூவி இறை வனை வழிபடு வதை கண்டான் தொண்டைமன்னன். உடனே பீமய்யனைச் சென்று கட்டித் தழுவிய தொண்டைமான் அவனிடம், `உன் பக்தி உயர்வான பக்தி.
உனது வழிபாட்டைத் திருமால் ஏற்றுக் கொண்டு விட்டார் என்பதை நான் புரிந்து கொண்டேன்' என்றான். இதற்கிடையில் அந்தப் பரந்தாமன் பீமய்யனின் கனவிலும் தோன்றி, `உன் பக்தி யின் பெருமையை என்று பிறர்கூற அறிகின் றாயோ அன்றே உனக்கு முக்தி அளித்து, வைகுந்தத்துக்கு அழைத்துக் கொள்வேன்' எனக் கூறியிருந்தார்.
அதன்படியே தொண்டைமான், பீமய்யனின் பக்தியை பாராட்டியதைக் கேட்ட மறுகணமே அவனுக்கு முக்தி கிடைத்தது. எனவே புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து, ஏழுமலையானை மனம் உருக வழிபட்டால், செல்வமும், நிம்மதியும் கிடைக்கும் என்பதோடு, முக்தியும் வாய்க்கும் என்பது ஐதீகம். புரட்டாசி மாத சனிக்கிழமை விரதத்துக்கு இப்படியொரு மகத்துவம் இருக்கிறது.
- கல்ப விருட்ச வாகன வீதிஉலா.
- பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான நேற்று காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு சர்வ பூபால வாகன வீதி உலா நடந்தது. இன்று கருடசேவை நடக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை 'கல்ப விருட்ச' வாகன வீதிஉலா நடந்தது.
கல்ப விருட்சம் என்பது மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் தெய்வீக மரம். விஸ்வாகராமரால் சொர்க்கத்தில் இருந்து கொண்டு வரப்பட்டதாகும். கல்ப விருட்ச வாகனத்தில் 'ராஜமன்னார்' அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் எழுந்தருளிய உற்சவர் மலையப்பசாமி, தன்னை வணங்கும் பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவேன் என்பதை உணர்த்தவே கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்தார்.
வீதிஉலாவின் போது நான்கு மாட வீதிகளில் கூடியிருந்த திரளான பக்தர்கள் கோவிந்த நாமங்களை முழங்கி சாமி தரிசனம் செய்தது விண்ணில் எதிரொலித்தது.
வாகன வீதி உலாவுக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட குதிரைகள், யானைகள், காளைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டன. ஆண், பெண் பக்தர்கள் மகாவிஷ்ணு, ஸ்ரீதேவி, பத்மாவதி தாயார், நரசிம்மர், ஆஞ்சநேயர் உள்ளிட்ட வேடமிட்டு ஆடி, பாடி சென்றனர். பல்வேறு கலைஞர்கள் நடனம், கோலாட்டம், நாட்டுப்புற நடனம் ஆடினர். மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன.
வாகன வீதிஉலாவில் திருமலை மடாதிபதிகள், தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பூமண.கருணாகர்ரெட்டி எம்.எல்.ஏ, முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை 'சர்வ பூபால' வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை பல்லக்கு வாகன வீதிஉலா நடக்கிறது. அதில் உற்சவர் மலையப்பசாமி 'மோகினி' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இரவு 7 மணியளவில் 'சிகர' நிகழ்ச்சியாக கருட சேவை (தங்கக் கருட வாகன வீதிஉலா) தொடங்கி நடக்கிறது.
- இன்று மூலவர், உற்சவருக்கு அணிவிக்கப்படுகிறது.
- வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது.
திருப்பதி:
ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகள் நேற்று திருமலைக்கு வந்தன. அந்த மாலைகளுக்கு பெரிய ஜீயர் மடத்தில் பூஜைகள் செய்யப்பட்டது. இன்று மூலவர், உற்சவருக்கு அணிவிக்கப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 'சிகர' நிகழ்ச்சியாக இன்று (வெள்ளிக்கிழமை) இரவு கருடசேவை நடக்கிறது.
தங்க கருட வாகனத்தில் எழுந்தருளும் உற்சவர் மலையப்பசாமிக்கும், மூலவர் வெங்கடாசலபதிக்கும் அணிவிப்பதற்காக தமிழகத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கோதாதேவி 'சூடிக்கொடுத்த மாலைகள்' மற்றும் கிளிகள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் நேற்று திருமலைக்கு வந்தன.
முதலில் திருமலை பேடி ஆஞ்சநேயர் கோவிலுக்கு அருகில் உள்ள பெரியஜீயர் மடத்துக்கு ஆண்டாள் சூடிய மாலைகள் கொண்டு வரப்பட்டன. அங்கு பெரிய ஜீயர் சுவாமி, சின்னஜீயர் சுவாமி தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
அதன் பிறகு பெரிய ஜீயர் மடத்தில் இருந்து திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி, தமிழகத்தைச் சேர்ந்த அறநிலையத்துறை இணை கமிஷனர் செல்லதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் நிர்வாக அதிகாரி முத்துராஜா, அறங்காவலர் குழு உறுப்பினர் மனோகரன் ஆகியோர் கோதாதேவியின் மாலைகளை ஏழுமலையான் கோவில் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று மூலவர் சன்னதிக்குள் கொண்டு சென்றனர்.
அப்போது திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து திருமலைக்கு கோதாதேவி மாலைகள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அதன்படி கோதாதேவி மாலைகள் திருமலைக்கு வந்தன. கருடசேவையின்போது புனித மாலைகள் மூலவருக்கும், உற்சவருக்கும் அணிவித்து அலங்கரிக்கப்படும், என்றார். மாலைகள் ஊர்வலத்தில் டெல்லி தகவல் மைய உள்ளூர் ஆலோசனைக் குழு தலைவர் வேமிரெட்டிபிரசாந்தி, திருமலை கோவில் துணை அதிகாரி லோகநாதம், ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் அதிகாரிகள் ரங்கராஜன், சுதர்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- தீபத் திருவிழா வருகிற நவம்பர் மாதம் 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
- பஞ்ச மூர்த்திகள் தேர்களுக்கு சிறப்பு பூஜை செய்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் நடப்பட்டது.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற நவம்பர் மாதம் 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழா தொடர்ந்து 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.
10-ம் நாள் விழாவான நவம்பர் மாதம் 26-ந் தேதி காலையில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது. திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் மகா தீபத்தன்று தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். இவ்விழாவிற்கான பூர்வாங்க பணிகள் தொடங்குவதற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன்பு நடைபெற்றது.
முன்னதாக அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவிலின் 3-ம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகருக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பின்னர் சம்பந்த விநாயகர் சன்னதில் இருந்து பந்தக்கால் கோவிலின் ராஜகோபுரம் முன்பு கொண்டு வரப்பட்டது.
தொடர்ந்து சிவாச்சாரியார்கள் தேரடி வீதியில் உள்ள முனீஸ்வரன் கோவில் மற்றும் பஞ்ச மூர்த்திகள் தேர்களுக்கு சிறப்பு பூஜை செய்தனர். அதன் பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் சொல்ல மங்கள வாத்தியம் முழங்க ராஜகோபுரம் எதிரில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ், கோவில் இணை ஆணையர் ஜோதி, கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மீனாட்சிசுந்தரம், ராஜாராம், கோமதி குணசேகரன், பெருமாள், சைபர் கிரைம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பழனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- கருணை மிகுந்த ஆஞ்சநேயசாமி, சனியின் பிடியில் இருந்து காப்பாற்றுவார்.
- ஆஞ்சநேயரை வணங்கும் பக்தர்களை சனிபகவான் தொந்தரவு செய்வதில்லை.
கிரக தோஷமுள்ளவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று வழிபட்டால் கருணை மிகுந்த ஆஞ்சநேயசாமி, சனியின் பிடியில் இருந்து காப்பாற்றுவார். இதற்குப் புராணத்தில் ஒரு கதை உண்டு.
ஒரு சமயம் சனி பகவான் ஆஞ்சநேயரைப் பிடிக்க அவரிடம் அனுமதி கேட்டார். சனியின் நச்சரிப்புத் தாங்காமல் ஆஞ்சநேயர், என் தலைமீது அமர்ந்து கொள் என்று சொன்னதும், ஆஞ்சநேயர் தலையில், சனி அமர்ந்தார். இதுதான் சமயம் என்று அங்கிருந்த பெரிய பாறாங்கல்லை தன் வாலில் எடுத்துத் தன் தலை மீது அமர்ந்திருக்கும் சனியின் தலைமீது வைத்தார்.
பாறாங்கல்லின் பாரம் தாங்காமல் மூச்சு வாங்கிய சனி, தன்னை விடுவிக்கும்படி ஆஞ்சநேயரிடம் மன்றாடவே, என்னையும் என்னை வணங்கும் பக்தர்களுக்கும் இனி தொந்தரவு கொடுக்க மாட்டேன் என்று வாக்குறுதி கொடு என்று சொல்லவே, ஆஞ்சநேயரின் கட்டளைக்கு அடிபணிந்தார் சனி, அன்றில் இருந்து ஆஞ்சநேயரை வணங்கும் பக்தர்களை சனிபகவான் தொந்தரவு செய்வதில்லை.
- சனிக்கிழமை விரதம் இருப்பது திருப்பதி ஏழு மலையானுக்கு மிகவும் உகந்தது.
- தசாவதாரத்தில் எந்த அவதாரத்திலும் சேராதது ஸ்ரீ வெங்கடேசன் அவதாரம்.
புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது திருப்பதி ஏழு மலையானுக்கு மிகவும் உகந்தது. தசாவதாரத்தில் எந்த அவதாரத்திலும் சேராதது ஸ்ரீ வெங்கடேசன் அவதாரம். பக்தர்களின் நலனுக்காக அவர் திருமலையில் எழுந்தருளி இருக்கிறார்.
புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் முதலில் வீட்டில் பூஜை அறையை சுத்தம் செய்து கோல மிட வேண்டும். பின்னர் அலமேலு மங்கையுடன் கூடிய வெங்கடேசப்பெருமாள் படத்தை அலங்கரிக்க வேண்டும். இரு பக்கங்களிலும் ஐந்துமுக குத்து விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். பூஜைக்குரியவற்றை சேகரித்து வைத்து ராகு காலம், எமகண்டம் நேரம் இல்லாமல் நல்ல நேரத்தில் மாவிளக்கேற்றி பூஜிக்க வேண்டும். சர்க்கரைப்பொங்கல், வடை எள் சாதத்தை நிவேதனமாக படைக்கலாம்.
புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் மாவிளக்கு ஏற்றி, பூஜைகள் செய்ய வேண்டும். அரிசிமாவு, வெல்லம் ஆகியவற்றை கலந்து மாவில் ஒரு பகுதியை இளநீர் விட்டு பிசைந்து தீபம் போல் செய்து மீதி மாவை குவித்து அதன்மேல் பஞ்சினால் பூவத்திபோல் செய்து அதை தீபத்தில் வைத்து சுத்தமான நெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். அதன் பிறகு பூஜைகள் செய்து ஆரத்தி காட்டவேண்டும்.
பூஜை முடிந்ததும் தேங்காயை துருவி, மாவுடன் அதனை கலந்து அனைவருக்கும் பிரசாதமாக கொடுக்கலாம். துளசி தண்ணீர், புளிசாதம் மற்றும் எலுமிச்சை சாதம் வைத்து வேங்கடவனை வழிபடுவதும், துளசி, தாமரை மற்றும் குங்குமத்தால் அர்ச்சிப்பதும் விசேஷம். புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை விரதத்தை மேற்கொண்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். செல்வம் செழிக்கும். துன்பங்கள் விலகும்.






