என் மலர்
வழிபாடு
- சனிக்கிழமை விரதம் இருப்பது திருப்பதி ஏழு மலையானுக்கு மிகவும் உகந்தது.
- தசாவதாரத்தில் எந்த அவதாரத்திலும் சேராதது ஸ்ரீ வெங்கடேசன் அவதாரம்.
புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது திருப்பதி ஏழு மலையானுக்கு மிகவும் உகந்தது. தசாவதாரத்தில் எந்த அவதாரத்திலும் சேராதது ஸ்ரீ வெங்கடேசன் அவதாரம். பக்தர்களின் நலனுக்காக அவர் திருமலையில் எழுந்தருளி இருக்கிறார்.
புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் முதலில் வீட்டில் பூஜை அறையை சுத்தம் செய்து கோல மிட வேண்டும். பின்னர் அலமேலு மங்கையுடன் கூடிய வெங்கடேசப்பெருமாள் படத்தை அலங்கரிக்க வேண்டும். இரு பக்கங்களிலும் ஐந்துமுக குத்து விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். பூஜைக்குரியவற்றை சேகரித்து வைத்து ராகு காலம், எமகண்டம் நேரம் இல்லாமல் நல்ல நேரத்தில் மாவிளக்கேற்றி பூஜிக்க வேண்டும். சர்க்கரைப்பொங்கல், வடை எள் சாதத்தை நிவேதனமாக படைக்கலாம்.
புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் மாவிளக்கு ஏற்றி, பூஜைகள் செய்ய வேண்டும். அரிசிமாவு, வெல்லம் ஆகியவற்றை கலந்து மாவில் ஒரு பகுதியை இளநீர் விட்டு பிசைந்து தீபம் போல் செய்து மீதி மாவை குவித்து அதன்மேல் பஞ்சினால் பூவத்திபோல் செய்து அதை தீபத்தில் வைத்து சுத்தமான நெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். அதன் பிறகு பூஜைகள் செய்து ஆரத்தி காட்டவேண்டும்.
பூஜை முடிந்ததும் தேங்காயை துருவி, மாவுடன் அதனை கலந்து அனைவருக்கும் பிரசாதமாக கொடுக்கலாம். துளசி தண்ணீர், புளிசாதம் மற்றும் எலுமிச்சை சாதம் வைத்து வேங்கடவனை வழிபடுவதும், துளசி, தாமரை மற்றும் குங்குமத்தால் அர்ச்சிப்பதும் விசேஷம். புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை விரதத்தை மேற்கொண்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். செல்வம் செழிக்கும். துன்பங்கள் விலகும்.
- சரணாகதி அடைந்தவர்களை துன்பம் நெருங்க விடுவாரா மகாவிஷ்ணு?
- சனியின் ஆதிக்கத்தைக் குறைக்க பெருமாளை விரதம் இருந்து வழிபட வேண்டும்.
புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் சனிபகவானால் ஏற்படும் கஷ்டங்கள் தீரும் என்பது ஐதீகம். ஏன் அப்படி? அதற்கும் ஆதாரமாக ஒரு புராணக் கதை சொல்லப்படுகிறது. பல காலத்திற்கு முன் பெருமாள் கோவிலில் பூஜை செய்யும் அந்தணர் ஒருவர் இருந்தார். அவர் மிகவும் வறிய நிலையில் இருந்தாலும், நீதியும் நாணயமும் தவறாதவர். பெருமாளிடத்தில் மிகுந்த பக்திகொண்டவர். அவருக்கு ஜாதகப்படி ஏழரைச்சனி பிடிக்கும் காலம் நெருங்கியது. அதனால் அவர் பல துன்பங்களுக்கு ஆளாவார் என்பது அந்த பக்தவத்சலனுக்குத்தெரிந்து போனது.
தன்னையே நம்பி சரணாகதி அடைந்தவர்களை துன்பம் நெருங்க விடுவாரா மகாவிஷ்ணு? நேராக சனி பகவானிடம் சென்றார். 'நீ என் பக்தனை பிடிக்கக்கூடாது' என்று கேட்டுக் கொண்டார். ஆனால் சனி பகவானோ, அது என் கடமை அல்லவா? அதைச் செய்யாமல் இருக்க என்னால் முடியாதே? அதை விதித்ததும் தாங்கள் தானே?' என்று கேட்டார். சனி பகவானின் சொற்களில் இருந்த நியாயத்தை மகா விஷ்ணு உணர்ந்தார்.
திருமால் அதற்கு வேறு ஒரு மார்க்கத்தை யோசித்தார். 'சனி பகவானே... நீ என் பரம பக்தனை ஏழரை ஆண்டுக்காலம் பிடித்துக்கொள்ளாதே... ஏழரை நாழிகை மட்டுமே பிடித்துக்கொண்டு பிறகு விட்டுவிடு' என்றார். சனி பகவானும் அப்படியே செய்தார்.
இறுதியில் விட்டுச் செல்லும் போது திருமகள் அருளால் பெரும் செல்வத்தைப் பெற்றார் அந்த அந்தணர். சனி பகவானது கோபத்தையும் ஆதிக்கத்தையும் குறைக்க பெருமாள் ஒருவரால்தான் முடியும். அதனால் தான் புதனின் ராசியான கன்னி ராசியில் சூரியன் இருக்கும் சமயம் புதனின் நட்பு கிரகமான சனியின் ஆதிக்கத்தைக் குறைக்க பெருமாளை விரதம் இருந்து வழிபடுகிறோம்.
- பிரமோற்சவத்தின் 5-வது நாளான இன்று காலை மோகினி அவதாரத்தில் ஏழுமலையான் எழுந்தருளினார்.
- பக்தர்களுக்கு தேவையான நீர், உணவு, பாதுகாப்பு ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்துள்ளது.
திருப்பதி:
திருப்பதி பிரமோற்சவ விழாவில் நேற்று இரவு சர்வபூபால வாகனத்தில் உற்சவ மூர்த்திகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் கோவில் நிர்வாகம், ஆண்டாள் தேவிக்கு சூட்டிய மலர் மாலைகள், இலைகளால் செய்யப்பட்ட பச்சைக்கிளி, மலர் ஜடை ஆகியவற்றை திருப்பதி மலைக்கு கொண்டு வந்தனர்.
அங்கு பெரிய ஜீயர் மடத்தில், ஜீயர்கள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, மலர் மாலைகள், பச்சைக்கிளி, மலர் ஜடை ஆகியவற்றை ஏழுமலையான் கோவில் மாடவீதிகளில் ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
பின்னர் தேவஸ்தான அர்ச்சகர்களிடம் ஒப்படைத்தனர். அவர்கள் ஆண்டாள் மாலையை ஏழுமலையானுக்கு சமர்ப்பித்தனர்.
பிரமோற்சவத்தின் 5-வது நாளான இன்று காலை மோகினி அவதாரத்தில் ஏழுமலையான் எழுந்தருளினார்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து இன்று இரவு 7 மணிக்கு கருட சேவை நடக்கிறது. தங்க கருடவாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளுகிறார்.
இதில் சுமார் 3 லட்சம் முதல் 4 லட்சம் வரை பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருட சேவையையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
கோவில் முகப்பு முதல், பஸ் நிறுத்தம் வரை சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அதிகமாக கூடிய இடங்களில் நெரிசல் ஏற்பட்டது.
பக்தர்களுக்கு தேவையான நீர், உணவு, பாதுகாப்பு ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்துள்ளது. மேலும், கருட சேவையை முன்னிட்டு திருமலைக்கு பக்தர்கள் பைக்குகளில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவிலில் சாமி தரிசனத்திற்கு 24 மணி நேரமாகிறது.
- தானமாக பெற்ற அரிசியை கொண்டு பொங்கல் செய்து படைப்பார்கள்.
- பெருமாளுக்கு திருக்குடை சமர்ப்பிக்கும் வைபவமும் நடைபெறும்.
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசியில் திருப்பதி போன்ற முக்கிய தலங்களில் பிரம்மோற்சவம் நடக்கும். குலதெய்வ பூஜைகளை செய்யவும் காணிக்கை, நேர்த்தி கடன்கள் செலுத்தவும் இந்த மாதம் சிறந்தது. புரட்டாசி மாதம் முழுவதும் அசைவ உணவுகளை துறந்து விரதம் இருப்பார்கள். சனிக் கிழமைகளில் வீட்டில் உள்ளவர்கள் திருநாமம் அணிந்து சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், சுண்டல், வடை பாயாசம், நைவேத்யமாக படைத்து பெருமாளை வழிபடுவர். பலர் கையில் உண்டியல் ஏந்தி நாராயணா... கோபாலா... கோவிந்தா... என்று திருநாமங்களை உரக்க கூறியபடி வீடு வீடாக சென்று பணம், அரிசி, தானம் பெறுவர். பணத்தை திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்துவர். தானமாக பெற்ற அரிசியை கொண்டு பொங்கல் செய்து படைத்து அனைவருக்கும் வழங்குவர்.
பல இடங்களில் உறியடி திருவிழாவும், பெருமாளுக்கு திருக்குடை சமர்ப்பிக்கும் வைபவமும் நடைபெறும். அனைத்து விஷ்ணு தலங்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்து கொண்டே இருக்கும்.குடும்பத்தினருடன் பெருமாள் தலங்களுக்கு பாத யாத்திரையாக சென்று தரிசனம் செய்து நேர்த்திக்கடன் காணிக்கை செலுத்துபவர்களும் உண்டு. புரட்டாசி மாதத்தில் மேற்கொள்ளப்படும் சனிக் கிழமை விரதம் சர்வ மங்களங்களையும் அருளும்.
அதுவும் மூன்றாம் சனிக்கிழமை வழிபாடு அதி சிறப்பானது. இந்த மாதத்தில் செய்யும் தானதர்மம் மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது. சனிக்கிழமை அன்று இல்லாதோர், இயலாதோர், சாலையோரம் வசிப்பவர்கள், தொழுநோயாளிகள், பாரம் சுமப்பவர்கள், முதியோர்கள் போன்றவர்களுக்கு உணவு, உடை வழங்குவது சிறந்த புண்ணியமாக சொல்லப்படுகிறது. சனி திசை நடப்பில் இருப்பவர்கள், ஏழரை சனி, அஷ்டம சனி, கண்ட சனி என்று சனியின் பிடியில் இருப்பவர்கள் புரட்டாசி சனிக்கிழமையில் விரதம் இருந்து பெருமாளை தரிசித்து பிரார்த்தனை செய்தால் தடைகள் நீங்கும். சுபயோக சுபயோகம் கூடிவரும்.
- வருடம் முழுவதும் நமது துன்பங்களை நீக்கி ஆனந்தம் தருவார்.
- ஏழரை சனியால் பிடிக்கப்பட்டவர்கள் விரதம் இருந்தால் சனியின் தொல்லை நீங்கும்.
செப்டம்பர் 23-ந் தேதி புரட்டாசி முதல் சனிக்கிழமை. புரட்டாசி மாதம் பெருமாளின் அனுகிரகம் நிறைந்த மாதம். இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமை பெருமாள் விரதத் திற்கு உகந்தவை.
புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமை பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டால் மிகவும் சிறப்பான வரங்களை தந்து வருடம் முழுவதும் நமது துன்பங்களை நீக்கி ஆனந்தம் தருவார். அதிலும், ஏழரை சனியால் பிடிக்கப்பட்டவர்கள் விரதம் இருந்தால் சனியின் தொல்லை நிச்சயம் நீங்கும்.
சனி பகவான் கலியுகத்தில் முதல் முதலாக வரும் வழியில் நாரதர் சனிபகவானிடம் தாம் பூலோகத்தில் எங்கு வேண்டுமானாலும் உங்கள் சக்தியின் மூலம் யாரை வேண்டுமானால் துன்பப்படுத்தலாம். ஆனால் திருமலை பக்கம் சென்று விடாதீர்கள் என்று அவரை தூண்டி விடுவது போல கூறினார். அதைக் கேட்ட சனி பகவான், எதை செய்ய வேண்டாம் என்று நாம் சொல்கிறோமோ அதையே நாம் செய்வது போலவே சனி பகவானும் என்னை யார் என்ன செய்ய முடியும் என்று திருமலையின் மேல் தன் காலை வைத்தார்.
கால் வைத்ததும் அடுத்த நொடி சனி பகவான் பயங்கரமாக தூக்கி வீசப்பட்டார். திருமலையில் யார் இருக்கிறார் என தெரிந்தும் மற்றவரை துன்பப்படுத்தி இன்பம் காணும் சனிபகவானே துன்பப்பட்டு நடு நடுங்கி தன்னையும் படைத்து வழிநடத்தும் மகாவிஷ்ணுவே இங்கு திருவேங்கடவனாக இருப்பதை கண்டு அவர் பாதம் பணிந்து மன்னிப்பு கேட்டார்.
கோபம் கொண்ட பெருமாள் சனிபகவானிடம் என்னையே நினைத்து வாழும் என்னுடைய பக்தர்களுக்கு நீ எந்த துன்பமும் கொடுக்க கூடாது என்ற நிபந்தனையுடன் மன்னிப்பு வழங்கினார். சனியும் பணிவுடன் உங்களின் உண்மையான பக்தர்களை நான் என்றும் துன்பப்படுத்த மாட்டேன் என்று கூறினார்.
பிறகு சனிபகவான் பெருமாளிடம், மகாபிரபு! எனக்கு ஒரு வரம் தரவேண்டும் என்று கேட்டார். நான் பிறந்தது புரட்டாசி சனிக்கிழமை அதனால் அந்த நாளை தங்களுக்கு உகந்த நாளாக தங்கள் பக்தர்கள் பூஜித்து வேண்டினால் அவர்களுக்கு வேண்டிய வரத்தை தாங்கள் தரவேண்டும்! என்ற வரத்தை கேட்டார்.
பெருமாளும் சனிதேவனுக்கு வரத்தை அளித்து சனிக்கிழமையை தனக்கு உகந்த நாளாக ஏற்றுக் கொண்டார். அதனால் தான் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாக உருவானது.
சனிபகவானை ஆயுள்காரகன் என்பர். இவர் சூரியன் மற்றும் சாயா தேவியின் புதல்வர் ஆவார். இவர் பிறந்ததும் புரட்டாசி சனிக்கிழமை. சனி கிரகத்தைக் கட்டுப்படுத்துபவராக இருப்பவர் பெருமாள். சனிக்கு அதிபதி அவரே. எனவே, சனிக்கிழமைகள் பெருமாளுக்கு மிகவும் உயர்ந்த உகந்த நாளாக ஆனது.
பெருமாள் துதி
ஓம் ஹ்ராம் ஹ்ரீம் க்லீம்
ஓம் நமோ ஸ்ரீ வேங்கடேசாய நமஹ
திருமலை பெருமாளின் திருவருளை பெற பலவித வழிகளில் இந்த மந்திரமும் ஒன்று. இந்த துதியை தினமும் பாடி வந்தால் ஒருவரது பொருளாதார நிலையில் திருப்திகரமான நல்ல மாற்றங்கள் உண்டாகும்.
- ஸ்ரீநிவாச பெருமாள் முன்பு அன்னக்கூட உற்சவம் நடைபெறும்.
- எட்டு சன்னதிகளிலும் எட்டு மாவிளக்குகள் ஏற்றப்படும்.
குடும்பத்தில் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டி ஒவ்வொரு இல்லத்திலும் உள்ள பெண்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் மாவிளக்கேற்றி மாதவனையும் மகாலட்சுமியையும் வழிபடுவர். ஆனால் ஸ்ரீ மகா லட்சுமியே நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று மாவிளக்கேற்றி மகாவிஷ்ணுவை வழிபடுவதை நீங்கள் எங்காவது பார்த்ததுண்டா?
சென்னை பெசன்ட் நகர் ஸ்ரீ அஷ்ட லட்சுமி கோவிலில் தான் ஒவ்வொரு ஆண்டும், புரட்டாசி மாதம் வரும், 3-வது சனிக்கிழமை அன்று அன்னை மகாலட்சுமி மாவிளக்கேற்றும் சடங்கு நடை பெறுகிறது.
இவ்வாலயத்தில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை காலையில் வழக்கம் போல் தினசரி பூஜைகள் நடந்து முடிந்த பிறகு சுமார் 9 மணிக்கு மேல் இந்த வழிபாடுகள் தொடங்கும். பகல் 10 மணிக்கு மேல் இங்கு உற்சவ மூர்த்தியாக உள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் முன்பு அன்னக்கூட உற்சவம் நடைபெறும்.
அதன் பிறகு இங்குள்ள அஷ்ட லட்சுமிகளின் சன்னதிகளில் ஒரு சன்னதிக்கு ஒரு மாவிளக்கு என்ற விகிதத்தில் எட்டு சன்னதிகளிலும் எட்டு மாவிளக்குகள் ஏற்றப்படும். (இவற்றை ஸ்ரீ மகா லட்சுமியே ஏற்றுவதாக ஐதீகம்) பிறகு அவை அனைத்தும் ஒவ்வொன்றாக உற்சவர் ஸ்ரீ நிவாசப் பெருமாள் முன்பு கொண்டு செல்லப்பட்டு அந்த எட்டு மாவிளக்கின் தீபச் சுடர்களாலும் பெருமானின் முன்பு ஒரு பெரிய அகண்ட தீபம் ஏற்றப்படும்.
மாலை சுமார் 5 மணியளவில் சஹஸ்ரநாம அகண்ட பாராயணம் பூஜைகளும், நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்களைப் பாடி பகவானை சேவித்தலும் வரிசையாக நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீ மகாலட்சுமியே மாவிளக்கேற்றி மாதவனை வழிபடும் இந்த ஆராதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் பெருமாளின் திவ்ய கருணையை பெறலாம்.
- பிள்ளை-பேரன் எனப் பரம்பரை தழைக்கும். சவுபாக்கியங்கள் அனைத்தும் கிட்டும்.
- சர்வ மங்கலங்களையும் அருளும்.
அமுக்தாபரண விரதம்: புரட்டாசி வளர்பிறை சப்தமியில், உமா - மகேஸ்வரரை பூஜை செய்து 12 முடிச்சுகள் கொண்ட கயிற்றை (சரடை) வலக்கையில் கட்டிக் கொள்வார்கள். இந்த விரதம் சந்ததி செழிக்க அருள்செய்யும். பிள்ளை - பேரன் எனப் பரம்பரை தழைக்கும். சவுபாக்கியங்கள் அனைத்தும் கிட்டும்.
ஜேஷ்டா விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியன்று மூதேவியை நோக்கிச் செய்யப்படும் விரதம் இது. 'எங்களை நீ பிடிக்காதே!' என்று மூதேவியை வேண்டுவதாக உள்ள விரதம்.
சஷ்டி - லலிதா விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியைக் குறித்துக் கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதம் சர்வ மங்கலங்களையும் அருளும்.
கபிலா சஷ்டி விரதம்: புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து, பழுப்பு (தாமிர) வண்ணம்கொண்ட பசு மாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதம் இது. சித்திகளைத் தரும்.
- வெண்ணெயும், சர்க்கரையும் கலந்த கலவையான நவநீதமும் படைப்பதுண்டு.
- எல்லோரும் பக்தி பெருக்குடன், கோவிந்தா, கோவிந்தா என்று கோஷமிட வேண்டும்.
வெங்கடா சலபதிக்கு நிவேதனம் செய்யும் பொருட்களில் சர்க்கரைப் பொங்கல் மற்றும் வடை இடம் பெறுவதுண்டு. சிலர் பாயாசமும் படைப்பர். வெண்ணெயும், சர்க்கரையும் கலந்த கலவையான நவநீதமும் படைப்பதுண்டு.
அன்புடன் இலையை அர்ப்பணித்தாலும் ஏற்பேன் என்று கீதையில் கண்ணன் கூறியது இங்கே கருதத்தக்கது. பெருமாளுக்குப் படையலிட்டுப் பூஜை செய்யும்போது உறவினர்களையும், நண்பர்களையும் அழைத்து கலந்து கொள்ள செய்ய வேண்டும்.
எல்லோரும் பக்தி பெருக்குடன், கோவிந்தா, கோவிந்தா என்று கோஷமிட வேண்டும். பூஜை முடிந்த பிறகு பக்திப் பாடல்களைப் பாடி வணங்கி, வழிபாடு செய்வர். பிறகு வீட்டிற்கு வந்துள்ள விருந்தினர்களுக்கு உணவளித்து, தாம்பூலம் கொடுப்பர். இப்படி அவரவர் இருப்பிடத்திலேயே கோவிந்தா என்ற திருநாமத்தைக் கூறியபடி இருந்தால் பெருமாளே அந்த இல்லத்துக்கு எழுந்தருள்வார்.
- சர்க்கரை பொங்கலுக்கும் இதற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.
- பெருமாளுக்கு அக்கார அடிசல் செய்து வணங்கினால் என்ன கேட்டாலும் கிடைக்கும்.
''மாதவா, என் மனதுக்கு பிடித்த அரங்கனே எனக்கு மணவாளனாக வந்தால் நூறு அண்டா வெண்ணையும், நூறு அண்டா அக்காரசஅடிசலும் உனக்கு நிவேதனமாகத் தருகிறேன்...'' திருமாலிருஞ்சோலை அழகரிடம் ஆண்டாள் இப்படி வேண்டிக் கொண்டாள். அவள் மனம் போலவே அரங்கன் அவளுக்கு மாலை சூடி தன்னுடன் ஐக்கியம் செய்துகொண்டார்.
ஆண்டாள், தான் வேண்டியபடி நூறு அண்டா வெண்ணெயும், நூறு அண்டா அக்காரஅடிசலும் பகவானுக்குக் கொடுத்தாளா, இல்லையா...? சுமார் முந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு சந்தேகம் ராமானுஜருக்கு வந்தது. உடனே அந்த மகான் என்ன செய்தார் தெரியுமா?
நூறு அண்டா வெண்ணெயும், நூறு அண்டா அக்கார அடிசலும் நிவேதனம் செய்து அழகரை ஆராதனை செய்தார். ஆண்டாளின் வேண்டுதலை தானே நிறைவேற்றினார். அதனால், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அவர் வந்தபோது, வாசலுக்கே ஓடிவந்து, வாருங்கள் அண்ணா...! என்று கூப்பிட்டாளாம் ஆண்டாள்.
இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் வருடத்துக்கு ஒருமுறை இந்த சம்பவத்தை உத்சவமாக கொண்டாடுகிறார்கள். அன்று அக்காரஅடிசல் பிரசாதமும் உண்டு.
அக்காரை என்றால் சர்க்கரை. அடிசல் என்பது குழைய வெந்த சாதம். பார்க்க சர்க்கரைப் பொங்கல் போல இருந்தாலும் சர்க்கரை பொங்கலுக்கும் இதற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.
புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு அக்கார அடிசல் செய்து வணங்கினால் பெருமாளிடம், நாம் என்ன கேட்டாலும் கிடைக்கும்.
- வளர்பிறை சதுர்த்தியில் விநாயகரைக் குறித்து செய்யப்படும் விரதம் சித்தி விநாயக விரதம்.
- வளர்பிறை அஷ்டமியில் செய்யப்படும் விரதம் தூர்வாஷ்டமி விரதம்.
சித்தி விநாயக விரதம்!
புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகரைக் குறித்து செய்யப்படும் விரதம் இது. தேவகுரு பிருகஸ்பதியால் உபதேசிக்கப்பட்டது. இந்நாளில் உடல் - உள்ள சுத்தியோடு விரதமிருந்து பிள்ளையாரை வழிபட காரிய சித்தி உண்டாகும்.
அன்று பிள்ளையாருக்கு அறுகம்புல்லால் அர்ச்சனை செய்து, மோதகமும் சர்க்கரைப் பொங்கலும் நைவேத்தியம் செய்து வழிபடுங்கள். இதனால், காரியத் தடங்கல்களும் வறுமையும் நீங்கும். புத்திர சம்பத்து உண்டாகும். கடன் பிரச்சினைகள் விலகி, தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.
தூர்வாஷ்டமி விரதம்!
புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் செய்யப்படும் விரதம் இது. இந்த விரத நாளில், வடக்கு நோக்கிப் படர்ந்திருந்து, நன்கு வெண்மை படர்ந்த அருகம் புற்களைக்கொண்டு சிவனையும் விநாயகரையும் வழிபட வேண்டும். இதனால் குடும்பம் செழிக்கும்.
புரட்டாசி பவுர்ணமி!
ஐப்பசி பவுர்ணமி மட்டுமின்றி, சித்திரை முதற் கொண்டு பன்னிரு மாதங்களிலும் வரும் பவுர்ணமி திருநாளில் சிவனாரை வழிபடுவது மிகவும் சிறப்பு. அந்த வகையில் புரட்டாசி பவுர்ணமி தினத்தில் வீட்டில் விரதமிருந்து சிவபெருமானை வழிபடுவதாலும், அருகிலுள்ள சிவாலயங் களுக்குச் சென்று வில்வார்ச்சனை செய்து, நெய்தீபங்கள் ஏற்றிவைத்து வழிபடுவதாலும் விசேஷ பலன்கள் கைகூடும்.
பிள்ளையார் பக்தரான கிருச்சமத முனிவரின் மகன் பலி.அவனும் பிள்ளையாரை வழிபட்டு பல வரங்க ளைப் பெற்றான். அந்த வரங்களில் குறிப்பிடத்தக்கவை பொன், வெள்ளி மற்றும் இரும்பாலான பறக்கும் கோட்டைகள். அவற்றைக்கொண்டு மூவுலகங்களையும் துன்புறுத்தினான், திரிபுரங்களுக்கும் அதிபதி யான அந்த அசுரனின் தொல்லைகளைப் பொறுக்க முடியாத தேவர்களும் முனிவர்களும் சிவபிரானைச் சரணடைந்தனர்.
அவர்களை ரட்சிக்கத் திருவுளம்கொண்ட பிள்ளையார் அசுரன்மீது போர்தொடுத்தார். போரின் முடிவில் கடும் சீற்றத்துடன் பாய்ந்தது சிவ கணை. திரிபுரனாகிய பலி, சிவனாரின் திருவடிகளில் ஒன்றிக் கலந்தான். அப்படி அவன் வீடுபேறடைந்த திருநாள், புரட்டாசி மாத பவுர்ணமி தினமாகும். அந்த நாளை பாகுளி என்று அழைப்பார்கள். இந்தப் புண்ணிய திருநாளில் சிவ வழிபாடு செய்பவர்களைத் துன்பங்கள் நெருங்காது.
புரட்டாசி பவுர்ணமி தினத்தில் காலை வேளையில் சிவ வழிபாடு செய்ய, முற்பிறப்பில் செய்த பாவங்கள் நீங்கும். நண்பகலில் சிவ வழிபாடு செய்ய, முற்பிறப்பில் செய்த பாவங்கள் மட்டும் இல்லாமல், இந்தப் பிறவியில் செய்த பாவங்களும் நீங்கும். மாலை பிரதோஷ வேளையில் சிவ வழிபாடு செய்தால், சிவபெருமானின் அருளால் ஏழேழு பிறவிகளில் செய்து முற்றிய பாவங்கள் எல்லாமே நீங்குவதுடன், விரும்பிய எல்லா வேண்டுதல்களும் நிறைவேறும்.
ஞான கவுரியை வழிபடுவோம்!
கவுரி என்ற திருநாமம் அம்பாளைக் குறிப்பது. கிரிகுலங் களின் அரசியான தேவியை கவுரி என்று சிறப்பிக்கின்றன ஞான நூல்கள். ஸ்ரீகவுரி தேவியை வழிபடுவது, உலகிலுள்ள அனைத்து தேவ, தேவியர்களையும் வழிபடுவதற்குச் சமமாகும். வீட்டில் ஸ்ரீகவுரிதேவியை வழிபடுவதால் இல்லறம் செழிக்கும். வீட்டில் செல்வம், தானியம், மகிழ்ச்சி ஆகிய அனைத்தும் எப்போதும் நிறைந்திருக்கும். கன்னிப் பெண்கள் கவுரி தேவியை வழிபடுவதால், அவர்களுக்கு மனம் நிறைந்த கணவன் வாய்ப்பான். கவுரி தேவியை சோடச கவுரி தேவியர் என்று பதினாறு வடிவங்களில் வழிபடுவார்கள்.
ஞான கவுரி, அமிர்த கவுரி, சுமித்ர கவுரி, சம்பத் கவுரி, யோக கவுரி, வஜ்ர ச்ருங்கல கவுரி, த்ரைலோக்ய மோஹன கவுரி, சுயம்வர கவுரி, கஜ கவுரி, கீர்த்தி கவுரி, சத்யவீர கவுரி, வரதான கவுரி, ஐஸ்வர்ய மகா கவுரி, சாம்ராஜ்ய மகா கவுரி, அசோக கவுரி, விஸ்வ புஜா மகா கவுரி ஆகிய பதினாறு தேவியர் குறித்த வழிபாடுகளை ஞான நூல்கள் விவரிக்கின்றன. இந்த தேவியரில் ஸ்ரீஞான கவுரியை புரட்டாசி மாதம் வளர்பிறை தசமி திருநாளில் வழிபட்டால், தடைகள் நீங்கி, நினைத்த காரியம் நினைத்தபடி வெற்றி பெறும்.
வீரர்கள் தங்களது வெற்றிக்காக இந்த தேவியை புரட்டாசி வளர்பிறை பிரதமையில் வழிபடுவார்கள். நாமும் புரட்டாசியில் இந்த அம்பிகையை வழிபட்டு, அளவில்லா ஞானமும் செல்வமும் பெற்று மகிழ்வோம்.
நவகிரக நாயகியாகத் திகழும் ஆதி பராசக்தி, சூரிய மண்டலத்தில் தீப்தா என்ற திருப்பெயருடன் திகழ்கிறாளாம். அதேபோல், சந்திர மண்டலத்தில் அமிர்த கவுரியாகவும், செவ்வாய் மண்டலத்தில் தாம்ர கவுரியாகவும், புத மண்டலத்தில் ஸ்வர்ண கவுரியாகவும், சுக்கிர மண்டலத்தில் சுவேத கவுரி யாகவும், சனி மண்டலத்தில் சாம்ராஜ்ய கவுரியாகவும், ராகு மற்றும் கேது மண்டலங்களில் முறையே கேதார, கேதீசு வர கவுரியாகவும் திகழ்கிறாளாம்.
அவ்வகையில் குரு மண்ட லத்தில் அன்னை ஞான கவுரியாக அருள்பாலிக்கிறாள். ஆகவே, இந்தத் தேவியை அனுதினமும் வழிபட்டு வந்தால், ஞானத்தையும், திருமணப் பேற்றையும், நல்வாழ்வையும் தருவாள்.
மகாலட்சுமி விரதம்!
புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாள்கள் லட்சுமி தேவியைப் பிரார்த்தித்துச் செய்யப்படும் விரதம் இது. ஒவ்வொரு நாளும் பக்தியோடு விரதம் இருந்து, திருமகள் துதிப்பாடல்களைப் படித்துத் திருமகளை வழிபட்டுவந்தால், நம் வறுமைகள் நீங்கும்; வாழ்க்கை வளம் பெறும்.
இந்த 16 தினங்களில் அனுதினமும் மகாலட்சுமி தேவிக்கு நெய் தீபங்கள் ஏற்றிவைத்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, கீழ்க்காணும் லட்சுமி ஸ்தோத்திரத்தைச் சொல்லி வழிபடுங்கள். மேலும், தங்களது சக்திக்கு உகந்தவாறு ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள். இதனால், ரோகங்கள், மனத் துயரங்கள், சஞ்சலங்கள் ஆகிய யாவையும் நீங்கி புது நம்பிக்கைப் பிறக்கும். தேவியின் திருவருளால் வீட்டில் செல்வகடாட்சம் உண்டாகும்; நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும்.
கண்ணன் சொன்ன அனந்த விரதம்!
புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தசியன்று அனந்த பத்மநாதனைத் தியானித்துக் கடைப்பிடிக்கவேண்டிய விரதம், அனந்த விரதம். விரத நாளன்று காலையில் நீராடி, தூய்மையான ஆடை அணிந்து, பூஜைக்குரிய இடத்தைப் பசுஞ்சாணத்தால் மெழுகி, ஐந்து விதமான வண்ணங்களில் கோலம் போட்டு, தீர்த்தக் கலசம் வைத்து அனந்த பத்மநாபனைத் தியானித்து பூஜை செய்ய வேண்டும்.
பூஜையின்போது, ஐந்து படி கோதுமை மாவில் வெல்லம் சேர்த்து, 28 அதிரசங்கள் செய்ய வேண்டும். இவற்றில் 14 அதிரசங்களை வேதியர்களுக்குத் தந்து, தாம்பூலம் மற்றும் தட்சிணையும் வழங்க வேண்டும். மீதியை நாம் உண்ண வேண்டும்.
அதேபோன்று, பூஜைக்குரிய பொருள்கள் அனைத்தும் 14 என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும். பக்தியுடன் இந்த விரதத்தைச் செய்தால் தீராத வினைகளெல்லாம் தீரும். அளவிட முடியாத ஐஸ்வர்யங்கள் வந்து சேரும். 14 வருடங்கள் இந்த விரதத்தை முறைப்படி கடைப்பிடித்து வழிபடும் அன்பர்களுக்கு நல்லன யாவும் வசமாகும். அவருக்குத் தோல்வி என்பதே இல்லை என்கின்றன ஞான நூல்கள். மிக அற்புதமான இந்த விரதத்தைக் கண்ண பரமாத்மா, பாண்டவர்களுக்கு உபதேசித்தார்.
கண்ணன் சொன்ன விரதம் இது. இதன்படி விரதம் இருந்து, சகல பாக்கியங்களையும் பாண்டவர்கள் பெற்றார்கள். இதை அனந்த சதுர்த்தசி விரதம் என்றும் சொல்வார்கள்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரிய பெருமாள் யானை வாகனத்தில் புறப்பாடு.
- ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ராஜாங்க சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, புரட்டாசி 5 (வெள்ளிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சப்தமி காலை 9.42 மணி வரை. பிறகு அஷ்டமி.
நட்சத்திரம்: கோட்டை நண்பகல் 12.40 மணி வரை. பிறகு மூலம்.
யோகம்: மரண/அமிர்தயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: காலை 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று ஜேஷ்டாஷ்டமி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரிய பெருமாள் யானை வாகனத்தில் புறப்பாடு. நாட்டரசன்கோட்டை குணசீலம் தலங்களில் ஸ்ரீஎம்பெருமாள் புறப்பாடு. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீசீனிவாசப் பெருமாள் காலை வெள்ளி பல்லக்கில் பவனி. அஹோபிலம் 1-வது பட்டம் ஸ்ரீஅழகியசிங்கர் திருநட்சத்திர வைபவம். ராமேசுவரம் பர்வதவர்த்தி னியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை. மாடவீதி புறப்பாடு. தல்லாகுளம் ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் ராஜாங்க சேவை, மாலை மோகனாவதாரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பக்தி
ரிஷபம்-உறவு
மிதுனம்-பணிவு
கடகம்-சிந்தனை
சிம்மம்-முயற்சி
கன்னி-ஊக்கம்
துலாம்- நன்மை
விருச்சிகம்- பாசம்
தனுசு- விருத்தி
மகரம்- தெளிவு
கும்பம்- பதவி
மீனம்- லாபம்
- உற்சவர் மலையப்பசாமி ‘யோக நரசிம்மர்’ அலங்காரத்தில் பவனி.
- விஜயவாடாவைச் சேர்ந்த கலைஞர்கள் பஜனை.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான நேற்று காலை சிம்ம வாகனத்திலும், இரவு முத்துப்பந்தல் வாகனத்திலும் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை சிம்ம வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி 'யோக நரசிம்மர்' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வீதிஉலா முன்னால் அலங்கரிக்கப்பட்ட யானைகள், காளைகள், குதிரைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டன.
தமிழகம், கர்நாடகத்தில் இருந்து வந்திருந்த கலைஞர்கள் பாரம்பரிய கலை நிகழ்ச்சியை நடத்தினர். விஜயவாடாவைச் சேர்ந்த கலைஞர்கள் பஜனை பாடல்களை பாடினர். கோலாட்டமும் ஆடினர்.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை முத்துப்பந்தல் வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி 'காளிங்க நர்த்தன' அலங்காரத்தில் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை சர்வ பூபால வாகன வீதிஉலா நடக்கிறது.






