என் மலர்tooltip icon

    வழிபாடு

    • திருச்செந்தூர் முருகப்பெருமான் கோவிலில் பவனி.
    • சங்கரன் கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, புரட்டாசி 16 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சதுர்த்தி காலை 10.30 மணி வரை. பிறகு பஞ்சமி.

    நட்சத்திரம்: கார்த்திகை இரவு 10.57 மணி வரை. பிறகு ரோகிணி.

    யோகம்: சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று கார்த்திகை விரதம். சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை குடியருளல். திருச்செந்தூர் முருகப்பெருமான் கோவிலில் பவனி. சங்கரன் கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு. வடபழனி, சிறுவாபுரி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை தலங்களில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-செலவு

    ரிஷபம்-நிறைவு

    மிதுனம்-வரவு

    கடகம்-சுகம்

    சிம்மம்-பாராட்டு

    கன்னி-பண்பு

    துலாம்- இயல்பு

    விருச்சிகம்-தெளிவு

    தனுசு- வாழ்வு

    மகரம்- உழைப்பு

    கும்பம்- தாமதம்

    மீனம்- கடமை

    • திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையார் கோவில்களில் காலை கணபதி ஹோமம்.
    • சிவபெருமான் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, புரட்டாசி 15 (திங்கட்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: திருதியை காலை 11.28 மணி வரை பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம்: பரணி இரவு 10.58 மணி வரை பிறகு கார்த்திகை

    யோகம்: சித்த, மரணயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று சங்கடஹர சதுர்த்தி. மகாபரணி பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர், மதுரை முக்குறுணி விநாயகர், மலைக்கோட்டை மாணிக்க விநாயகர், உப்பூர் வெயிலுகந்த விநாயகர், திருவலஞ்சுழி சுவேத விநாயகர், திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையார் கோவில்களில் காலை கணபதி ஹோமம், அபிஷேகம், அலங்கார சேவை. திருமயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீசுவரர், திருவான்மியூர் திரிபுரசுந்தரியம்பாள் சமேத மருந்தீசுவரர், பெசன்ட் நகர் அராளகேசியம்பாள் சமேத ரத்தினகிரீசுவரர் கோவில்க ளில் சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வாழ்வு

    ரிஷபம்-நலம்

    மிதுனம்-வெற்றி

    கடகம்-பொறுமை

    சிம்மம்-மகிழ்ச்சி

    கன்னி-உயர்வு

    துலாம்- புகழ்

    விருச்சிகம்-ஆதரவு

    தனுசு- உற்சாகம்

    மகரம்-சாந்தம்

    கும்பம்-நன்மை

    மீனம்-நட்பு

    • பிரம்மனுக்கும், சிவபெருமானுக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது.
    • சிவபெருமான் முன்பு நந்தி சிலை இல்லை.

    மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே உள்ள பஞ்சவதி கபாலீசுவரர் மகாதேவ் ஆலயத்தில் சிவபெருமான் முன்பு நந்தி சிலை இல்லை. நாட்டிலேயே நந்தி இல்லாத சிவன் கோவில் இதுமட்டும் தான்.

    ஒருமுறை இந்திரசபையில் பிரம்மனுக்கும், சிவபெருமானுக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது. வெகுண்டெழுந்த சிவபெருமான் பிரம்மாவின் தலையை கொய்தார். இந்த செயலால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதற்கு பரிகாரம் தேடி பூலோகம் முழுவது அலைந்து திரிந்தார்.

    ஒருநாள் சோமேஸ்வரர் என்ற இடத்திற்கு சிவபெருமான் வந்தபோது பசு ஒன்று தன் கன்றுடன் பேசுவதைக் கண்டார். பிரம்மஹத்தி தோஷத்திற்கு ஆளான கன்றுக்கு தாய் பசு பரிகாரம் சொல்லிக்கொண்டு இருந்தது.

    பஞ்சவதி அருகே வந்ததும், கோதாவரி ஆற்றில் பசுங்கன்று நீராடி தனது பிரம்மஹத்தி பாவத்தில் இருந்து விடுபட்டு பழைய நிலைக்கு திரும்பியது. அதேஇடத்தில் சிவபெருமானும் நீராடி தனது பாவத்தை போக்கிக்கொண்டார். பின்னர் அருகே இருந்த மலையில் சிவபெருமான் குடிகொண்டார். சிவனை பின்தொடர்ந்து சென்ற பசு அவருக்கு முன் மண்டியிட்டு அமர்ந்தது. ஆனால் இதற்கு சிவபெருமான் ஒப்புக்கொள்ளவில்லை.

    தன்னை பிரம்மஹத்தில் பாவத்தில் இருந்து விடுவித்ததால் நீ எனக்கு குருவுக்கு சமமானவர் என்றும் அதனால் என் முன்னால் அமரவேண்டாம் என்றும் நந்தியை கேட்டுக்கொண்டார் சிவபெருமான். ஆனால் நந்தியோ சிவபெருமான் மீது கொண்ட அளவுகடந்த பக்தியால் கோவிலில் இருந்து வெறியேற மறுத்து தன்னை அனுமதிக்குமாறு சிவபெருமானிடம் மன்றாடியது. இருப்பினும் சிவபெருமான் கண்டிப்புடன் வெளியேற சொன்னதால் அந்த சிவாலயத்தில் இருந்து கண்ணீருடன் வெளியேறியது நந்தி என்று புராணவரலாறு கூறுகிறது. எனவே பஞ்சவதி கபாலீசுவரர் மகாதேவ் கோவிலில் நீங்கள் நந்தி இல்லாத சிவபெருமானை தான் தரிசிக்க முடியும்.


    • 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயம்.
    • புனுகீஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார்.

    மிருகங்கள் இறைவனை பூஜித்து பேறு பெற்ற தலங்கள் நம் நாட்டில் பல உண்டு. குற்றாலம், திருவானைக்கா, மதுரை ஆகிய தலங்களில் யானையும், நல்லூரில் சிங்கமும், சாத்தமங்கையில் குதிரையும், கருவூர், பட்டீஸ்வரம, பேரூர் ஆகிய தலங்களில் பசுவும், சிவபுரத்தில் பன்றியும், தென் குரங்காடுதுறை, வடகுரங்காடுதுறை ஆகிய ஊர்களில் குரங்குகளும், சோலூரில் மீனும், திருத்தேவன் குடியில் நண்டும் பூஜித்து பேறு பெற்றன. அதேபோல் புனுகுப் பூனை ஒன்று சிவபெருமானை மயிலாடுதுறைக்கு அருகேயுள்ள கூறைநாடு எனும் தலத்தில் பூஜித்துப் பேறு பெற்றது. அதனாலேயே இங்குள்ள ஈசன் புனுகீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

    அம்பாளின் பெயர் சாந்த நாயகி. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயம் இது. ஆலயம் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் நெடிதுயர்ந்த ஏழு நிலை ராஜ கோபுரம் உள்ளே நுழைந்ததும் விசாலமான மண்டபம். எதிரே பலிபீடமும், உயரமான கொடிமரமும். மண்டபத்தின் இடதுபுறம் அன்னை சாந்த நாயகியின் சந்நதி உள்ளது.

    அம்பிகை நான்கு கரங்களுடன், நின்ற நிலையில் புன்னகை தவழ அருள் பாலிக்கிறாள். மேல் இரு கரங்களில் மாலையையும், தாமரை மலரையும் தாங்கி, கீழ் இரண்டு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் அன்னை திகழ்கிறாள். அடுத்துள்ள மகாமண்டப நுழைவாயிலில் துவாரபாலகர்கள் காவல் காக்க, இறைவனின் அர்த்த மண்டபம் விளங்குகிறது.

    கருவறையில் இறைவன் புனுகீஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். இறைவனின் தேவக்கோட்டத்தின் வடபுறம் துர்க்கை, பிரம்மா, கிழக்கே லிங்கோத்பவர், தெற்கே தட்சிணாமூர்த்தி, ஜுரதேவர் போன்றோர் திருமேனிகள் உள்ளன. உட்பிராகாரத்தின் மேற்கில் பிள்ளையார், வடக்கில் நடராஜர், சிவகாமி, மகாலட்சுமி, சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், தெற்கில் நேசநாயனார், கிழக்கில் பைரவர், சூரியன் ஆகியோரை தரிசிக்கலாம்.

    அம்மன் பிராகாரத்தின் வடக்குப் பகுதியில் சண்டிகேஸ்வரி அருள்பாலிக்கிறாள். வெளி பிராகாரத்தின் வடகிழக்கு மூலையில் கலசமண்டபம் உள்ளது. இங்குள்ள சனி பகவான் கிழக்கு திசை நோக்கி தரிசனம் அருள்கிறார். இந்த அமைப்பு அபூர்வமானது என்கின்றனர்.

    ஆலயத்தின் தல விருட்சம் பவழமல்லி மரம். ஆலயத்தின் தீர்த்தமான திருக்குளம் ஆலயத்தின் தென்புறம் உள்ளது. இந்த ஆலயம் வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி ஆலயத்தை போன்ற வடிவமைப்பில் அமைந்துள்ளதாக கூறுகின்றனர். சிவபெருமான் எழுந்தருளியுள்ள மயிலாடுதுறைக்கு மேற்கே பல நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு காடு இருந்தது. அரசு, கொங்கு, தேக்கு, அகில், சந்தனம், மூங்கில், நாவல், மா முதலிய மரங்கள் அடர்ந்து வளர்ந்து அது ஒரு அழகிய வனமாகத் திகழ்ந்தது. பறவையினங்களும், விலங்கினங்களும் பகையின்றி அந்தக் காட்டில் வாழ்ந்து வந்தன.

    அங்கு தேவர்களும், திருமாலும், பிரம்மனும் வழிபடுவதற்காகவும், உயிரினங்கள் உய்யவும், பவழமல்லிகை நிழலில் லிங்க வடிவில் தானே தோன்றி எழுந்தருளியிருந்தார் சிவபெருமான். அந்த வனத்தில் ஒரு புனுகுப் பூனை, தன் துணையுடனும், குட்டிகளுடனும் வாழ்ந்து வந்தது. அதனிடமிருந்து வெளிப்பட்ட புனுகு வாசனை அந்த வனம் முழுவதும் ரம்மியமாக பரவியிருந்தது.

    திடீரென்று ஒருநாள் அந்த புனுகு பூனைக்கு ஞானம் வந்தது. "இதுவரை சாதாரணமான செயல்களையே செய்து வாழ்ந்து விட்டோமே! இது என்ன வாழ்க்கை! சிவபெருமானை வணங்கி பேரருளைப் பெற வேண்டும்" என அந்தப்பூனை நினைத்தது. யானை, குதிரை, பசு, எருது, பன்றி, குரங்கு, பாம்பு, நண்டு, வண்டு, ஈ, எறும்பு, முயல், தவளை ஆகியன எல்லாம் இறைவனைப் பூஜித்து நற்பேறு பெற்றுள்ளன.

    நாமும் அவ்வாறே நற்கதியடைய வேண்டும் என்று எண்ணிய அந்தப் பூனை சிவபெருமானின் லிங்கத் திருமேனியைத் தேடி அலைந்தது. வயல் சூழ்ந்த ஒரு சோலையில் இறைவனின் லிங்கத் திருமேனியைக் கண்டது அந்த பூனை. மட்டற்ற மகிழ்ச்சி கொண்டு லிங்கத்திருமேனி முழுவதும் புனுகினை அப்பியது. வில்வத் தளிர்களை வாயினால் கவ்வி இறைவனின் முடியில் சாத்தியது. இறைவனை வலம்வந்து வணங்கியது.

    இப்படியே சிவபெருமானைப் பல நாட்கள் அந்த புனுகுப்பூனை வணங்க மனம் மகிழ்ந்த இறைவன் அதற்கு தேவ வடிவைக் கொடுத்து கயிலாயத்திற்கு அழைத்துக்கொண்டார். புனுகுப்பூனைக்கு இறைவன் அருள்புரிந்தமை அறிந்த பிரம்மன், திருமால், தேவர்கள் அனைவரும் பவழ மல்லிகை நிழலில் சிவபெருமான் அமர்ந்திருந்த இடத்தை வந்தடைந்து பணிந்து துதித்துப் பாடினர்.

    'இவரே புனுகீசர்' என்று அந்த இறைவனுக்குப் பெயரிட்டு வணங்கினர். சோழ மன்னன் தன் காலத்தில் காட்டுப் பகுதியை அழித்து புனுகீசருக்கு அதே இடத்தில் ஒரு ஆலயத்தை அமைத்தான். இதுவே இந்த ஆலயத்தின் தல வரலாறு.

    இந்தப் புனுகுப்பூனை பற்றிய இன்னொரு தல வரலாறும் உண்டு: சிவபெருமானை மதியாமல் தட்சன் யாகம் நடத்தினான். தேவேந்திரன் அந்த யாகத்தில் கலந்து கொண்டதால் சிவபெருமானின் சினத்திற்கு ஆளாகி சாபம் பெற்றான். அந்த தேவேந்திரனே இறைவன் மகிழும் வண்ணம் புனுகுப்பூனை வடிவெடுத்து பூஜை செய்து சாப விமோசனம் அடைந்து, இழந்த இந்திர பதவியை மீண்டும் பெற்றான். இந்த ஆலயத்தில் உள்ள சுவாமி விமானம் கருங்கல்லினால் ஆனவர்.

    ஆலயத்தின் உள்ளே தென்புறம் மிகப்பெரிய கல்யாண மண்டபமும், சுமார் 1500 பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய உணவுக் கூடமும் உள்ளன. மிகவும் குறைந்த வாடகைக்கு இதை மக்கள் பயன்படுத்தி மனம் மகிழ்கிறார்கள். ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. நூற்றுக்கணக்கில் பக்தர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறுகின்றனர். சித்திரை மாதம் நடைபெறும் பிரமோற்சவத்தின்போது 13 நாட்களும் இறைவனும் இறைவியும் வீதியுலா வருவதுண்டு. இங்கு 63 நாயன்மார்களின் உற்சவத் திருமேனிகள் கண்களைக் கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை மூல நட்சத்திரத்தில் 63 நாயன்மார்களும் வீதியுலா வருவதுண்டு.

    நவராத்திரி நாட்களில் தினசரி இங்குள்ள துர்க்கைக்கு விதவிதமாக அலங்காரம் செய்வதுண்டு. தினசரி நான்கு கால பூஜை நடைபெறும் இந்த ஆலயம் காலை 6 முதல் இரவு 9 மணிவரை திறந்திருக்கும். கன்னிப் பெண்கள் இறைவிக்கு மாங்கல்யம் செய்து அணிவிக்க அவர்களுக்கு விரைந்து திருமணம் நடைபெறும் எனவும், அம்மனை அங்கப்பிரதட்சணம் செய்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நாகை மாவட்டம் மயிலாடுதுறை பேருந்து நிலையத்துக்கு மேற்கே இரண்டு கி.மீ. தூரத்தில் உள்ளது கூறைநாடு.

    • மத்திய திருப்பதி என்று அழைக்கப்படுகிறது.
    • புதுவையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது.

    புதுவையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில். மத்திய திருப்பதி என்று அழைக்கப்படும் இங்கு வலம்புரி ஸ்ரீமகாகணபதி, பட்டாபிஷேக ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி, ஸ்ரீவாரி வெங்கடாசலபதி மற்றும் 36 அடி விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். அக்கோவிலில் ஸ்ரீவாரி வெங்கடாசலபதிக்கு புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு சேவைகள் நடப்பது வழக்கம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை காலையில் திருமஞ்சனமும், சனிக்கிழமை காலையில் ஸ்வர்ணபுஷ்ப சிறப்பு சங்கல்பம் மற்றும் விசேஷ அர்ச்சனை நடைபெறும்.

    அதன்படி, புரட்டாசி மாதத்தின் 2-வது சனிக்கிழமையான நேற்று வெங்கடாசலபதி சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவையொட்டி காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீபஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்டின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் கோதண்ட ராமன், செயலாளர் நரசிம்மன், உப தலைவர் யுவராஜன், அறங்காவலர்கள் பழனியப்பன், செல்வம், கோவில் நிர்வாக அதிகாரி பாலசுப்ரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • 15 நாட்கள் பிரம்மோற்சவம் நடக்கும்.
    • கொடியேற்றத்துடன் தொடங்கி 21 நாட்கள் நடக்கும்.

    சித்தூர்:

    சித்தூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று காணிப்பாக்கத்தில் உள்ள சுயம்பு வரசித்தி விநாயகர் கோவில். கோவிலுக்கு சித்தூர் மாவட்டம் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.

    ஒவ்வொரு ஆண்டும் காணிப்பாக்கம் விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவம் நடக்கும். மற்ற கோவில்களில் 9 நாட்கள், 11 நாட்கள், 15 நாட்கள் பிரம்மோற்சவம் நடக்கும். ஆனால், காணிப்பாக்கம் விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி அன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி 21 நாட்கள் நடக்கும்.

    பிரம்மோற்சவ விழாவின் 13-வது நாளான நேற்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து காலை ராவணாசூர வாகன வீதி உலா நடந்தது. அதில் உற்சவர் வரசித்தி விநாயகர் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    மாலை யாளி வாகனத்தில் உற்சவர் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    முன்னதாக அகரம்பள்ளி, சின்னகாம்பள்ளி உள்பட 5 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள் காணிப்பாக்கம் கோவிலுக்கு வந்து பூஜைகளை செய்து யாளி வாகன வீதிஉலாவை தொடங்கி வைத்தனர். வாகன வீதிஉலாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மாடவீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூர மற்றும் நெய் தீப ஆரத்தி காண்பித்தும் சாமி தரிசனம் செய்தனர். சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பாக அன்னதானம், குடிநீர், மோர் வழங்கப்பட்டது.

    • ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
    • உருத்திர பசுபதி நாயனார் குருபூஜை.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, புரட்டாசி 14 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: துவிதியை நண்பகல் 12.49 மணி வரை பிறகு திருதியை

    நட்சத்திரம்: அசுவினி இரவு 11.26 மணி வரை பிறகு பரணி

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். கரூர் தான்தோன்றி ஸ்ரீ கல்யாண வேங்கடேசப்பெருமாள் ஆடும் பல்லக்கில் பவனி. ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி புறப்பாடு. உருத்திர பசுபதி நாயனார் குருபூஜை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்த ராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-இன்பம்

    ரிஷபம்-அவதி

    மிதுனம்-அமைதி

    கடகம்-பிரீதி

    சிம்மம்-பரிசு

    கன்னி-நலம்

    துலாம்- பண்பு

    விருச்சிகம்-நன்மை

    தனுசு- புகழ்

    மகரம்-களிப்பு

    கும்பம்-உழைப்பு

    மீனம்-சாதனை

    • பா.ஜனதா ஆன்மீகம் மற்றும் ஆலய பிரிவு மாவட்ட தலைவர் அதிசயம் குமார் தலைமையில் கிரிவலம் விமரிசையாக தொடங்கியது.
    • காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சுமார் 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பஞ்சபூத தலங்களில் ஒன்றான காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சுமார் 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் பவுர்ணமியையொட்டி கிரிவலம் நடந்தது. பா.ஜனதா ஆன்மீகம் மற்றும் ஆலய பிரிவு மாவட்ட தலைவர் அதிசயம் குமார் தலைமையில் கிரிவலம் விமரிசையாக தொடங்கியது.

    நெசவாளர் அணி மாநில துணைத் தலைவர் நாகூசா கலந்து கொண்டு கிரிவலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழாவில் ஆலய வெளிப்பிரகாரத்தில் சிவனடியார்கள் திருவாசகம் பாடல்களை பாடி கைலாய வாத்திய இசையுடன் வலம் வந்து ஈஸ்வரன் அனுகிரகம் கிடைக்க வேண்டினார்கள்.

    இதில் விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட தலைவர் சிவானந்தம். கூரம் விஸ்வநாதன். திலகர் குமாரசாமி, ஆன்மீக பிரிவு மாவட்ட துணைத் தலைவர் ரெயில்வே வெங்கடேசன், சிவ. ஈஸ்வரி. துளசி சாமி உள்ளிட்ட சிவனடியார்கள், பொதுமக்கள் என மொத்தம் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் பவுர்ணமி தினத்தன்று தொடர்ந்து கிரிவலம் நடைபெறும் என விழா குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    • திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
    • கரூர் தான்தோன்றி ஸ்ரீகல்யாண வேங்கடேசப் பெருமாள் ஊஞ்சல் காட்சி.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, புரட்டாசி 13 (சனிக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: பிரதமை பிற்பகல் 2.34 மணி வரை. பிறகு துவிதியை.

    நட்சத்திரம்: ரேவதி நள்ளிரவு 12.17 மணி வரை. பிறகு அசுவினி.

    யோகம்: மரண/சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று மகாளயபட்சம் ஆரம்பம். திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். கரூர் தான்தோன்றி ஸ்ரீகல்யாண வேங்கடேசப் பெருமாள் ஊஞ்சல் காட்சி. ஸ்ரீவில்லிபுத்தூர் சமீபம் திருவண்ணா மலையில் ஸ்ரீசீனிவாசப் பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் பவனி. தேவக்கோட்டை ஸ்ரீரெங்கநாதர் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீசீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மகிழ்ச்சி

    ரிஷபம்-ஆதாயம்

    மிதுனம்-சிறப்பு

    கடகம்-புகழ்

    சிம்மம்-சோதனை

    கன்னி-பிரீதி

    துலாம்- நலம்

    விருச்சிகம்-நன்மை

    தனுசு- மேன்மை

    மகரம்- களிப்பு

    கும்பம்- சோர்வு

    மீனம்- அமைதி

    • தமிழ்நாட்டிலேயே ஒரே ஒரு இடத்தில்தான், சரஸ்வதி தேவிக்கு கோவில் இருக்கிறது.
    • ராகு காலத்தில் எந்த காரியமும் செய்யமாட்டார்கள்.

    சரஸ்வதி கோவில்

    கல்விக்கு அதிபதியான சரஸ்வதிக்கு, பல கோவில்களில் விக்கிரகங்கள் வைக்கப்பட்டிருப்பதை காண முடியும். சில கோவில்களில் தனியாக சிறிய சன்னிதிகளும் இருக்கும். ஆனால் தமிழ்நாட்டிலேயே ஒரே ஒரு இடத்தில்தான், சரஸ்வதி தேவிக்கு என்று தனியாக கோவில் இருக்கிறது. அது நாகப்பட்டினம் மாவட்டம் கூத்தனூரில் உள்ளது. பெரும் புலவரான ஒட்டக்கூத்தருக்கு, சோழ மன்னன் தானமாக வழங்கிய ஊர் என்பதால் இது 'கூத்தனூர்' என்று பெயர் பெற்றது. அந்த புலவர் தன்னுடைய புலமைக்கு அருள்பாலித்த சரஸ்வதிக்கு, அவ்வூரில் ஒரு கோவிலை அமைத்தார். தமிழில் ராமாயணம் எழுதிய கம்பர், இத்தல சரஸ்வதி மீது, 'சரஸ்வதி அந்தாதி' பாடியுள்ளார்.

    ராகு கால பூஜை

    ராகு காலத்தில் எந்த காரியமும் செய்யமாட்டார்கள். ஆனால் அந்த கால வேளையில் ராகு பகவானை மட்டும் பூஜிக்கலாம். ராகு பகவானை துதிக்க, திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகராஜர் கோவில் பிரசித்தி பெற்றதாகும். அங்கு ராகு காலத்தில், நாகவள்ளி மற்றும் நாகக்கன்னி சமேத ராகு பகவானுக்கு பால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

    பிரம்மன் கோவில்

    தஞ்சையை அடுத்த திருவையாறு அருகில் உள்ளது திருக்கண்டியூர். இது பிரம்மனின் ஆணவம் அழிப்பதற்காக அவரது ஐந்து தலைகளில் ஒன்று சிவபெருமானால் கொய்யப்பட்ட இடமாகும். இந்த ஆலயத்தில் நான்கு முகங்களுடன் பிரம்மனுக்கு தனி கோவில் அமைந்திருக்கிறது. இது தவிர திருப்பட்டூரில் பிரம்மன் தனி சன்னிதியில் அருள்பாலித்து வருகிறார்.

    தொங்கும் தூண்

    கல்லிலே கலைவண்ணம் படைத்த தமிழர்கள், தங்களது எண்ணங்களை கலையாக்கி, சிலையாக்கி, திருக்கோவில்கள் தோறும் நிறுவி உள்ளனர். தர்மபுரி அருகேயுள்ள தகடூர் என்ற ஊர், மன்னன் அதியமான் கோலோச்சிய நகரமாகும். இங்குள்ள கல்யாண காமாட்சி சமேத மல்லிகார்ச்சுனேசுவரர் திருக்கோவிலில் நவக்கிரக மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்திற்குள் காணப்படும் கல் தூண் ஒன்றை, `தொங்கும் தூண்' என்று அழைக்கின்றனர். ஏனெனில் இந்த தூண், தரையில் படாமல் அந்தரத்தில் நிற்கிறது. இதன் அடிப்பாகத்தில் குச்சி அல்லது காகிதத்தை ஒரு புறம் நுழைத்து மறுபுறம் எடுத்துவிடலாம்.

    உச்சிப்பிள்ளையார்

    திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில், மலை மீது 273 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலை அடைய 417 படிகள் ஏறி செல்ல வேண்டும். இந்த மலையை ஒரு பக்கம் இருந்து பார்த்தால் சிவனின் வாகனமான ரிஷபமாகவும், மற்றொரு பக்கம் இருந்து பார்த்தால் சக்தியின் வாகனமான சிம்மமாகவும், இன்னொரு திசையில் இருந்து பார்த்தால் தும்பிக்கையை நீட்டி அமர்ந்த கோலத்தில் விநாயகராகவும் மூன்று வடிவங்களில் காட்சி தருகிறது.

    • இந்திய நாட்டில் சில மர்மம் நிறைந்த பழங்கால இடங்களும் உண்டு.
    • ஒரே இரவில் பேய்களால் கட்டப்பட்டது.

    இந்தியாவில் ஏராளமான வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் மற்றும் கோவில்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கோவில்களும் ஒரு தனித்துவமான வரலாற்றையும் புராண கதைகளையும் கொண்டிருக்கும்.

    பல புராதன கோவில்களும் கோட்டைகளும் அடங்கிய இந்திய நாட்டில் சில மர்மம் நிறைந்த பழங்கால இடங்களும் உண்டு. அதில் ஒன்று தான் இந்த கக்கன்மாத் சிவன் கோவில். இந்த கோவில் ஒரே இரவில் பேய்களால் கட்டப்பட்டது என்று வரலாற்று கதைகள் கூறுகிறது. அதுவும் சிவ பெருமானே இந்த கோவில் பேய்களால் கட்டப்பட வேண்டும் என்று கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

    மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகரத்தில் இருந்து கிட்டத்தட்ட 65 கிமீ தொலைவில் உள்ள சிஹோனியாவில் அமைந்துள்ளது இந்த கக்கன்மாத் கோவில். சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில்களில் இதுவும் ஒன்றாகும். இது பேய்களால் கட்டப்பட்ட கோவில் என்று பலர் கூறுகின்றனர். அதுவும் ஒரே இரவில் பேய்களால் கட்டப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

    தரையில் இருந்து சுமார் 115 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கோவில் புனிதம் என்பதை விட, மர்மமான கோவில் என்று தான் உள்ளூர்வாசிகளால் கூறப்படுகிறது.

    பொதுவாக கோவில் என்றால் கற்களை ஒன்றோடு ஒன்று அடுக்கி சிமெண்ட் பூசி கட்டப்பட்டு இருக்கும். ஆனால் இந்த கோவில் சுண்ணாம்பு, சிமெண்ட் மற்றும் கலவை எதுவும் இல்லாமல், வெறும் கற்களை கொண்டே கட்டப்பட்டுள்ளது. இதுவும் பலருக்கு மர்மமாக தோன்றுகிறது.

    புராண கதைகளின்படி, இக்கோவில் கட்டுவதற்கு சிவபெருமான் பேய்களுக்கு ஆணையிட்டாராம். அதுவும் அடுத்த நாள் காலை விடிவதற்குள் தனக்கு ஒரு கோவில் கட்டவேண்டும் என்று கூறினாராம். பேய்களால் கற்களை கொண்டு அடுக்கி இந்த கோவில் கட்டப்பட்டது என்றும், கோவில் கட்டுமானம் முடிவதற்குள் விடிந்ததால் அப்படியே விட்டுவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.

    இன்னும் சிலர் கக்கன்மாத் கோவில் 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்றும், அந்த சமயத்தில் கச்வாஹா வம்சத்தின் கிர்த்தி மன்னன் தனது மனைவிக்காக கட்டப்பட்டதாகவும் நம்புகிறார்கள். மேலும் அவர் ஒரு சிவபெருமானின் பக்தர் என்றும் சுற்றி ஒரு சிவன் கோவில் கூட இல்லாததால், அவர் அதைக் கட்டினார் என்றும் பலரால் நம்பப்படுகிறது.

    இந்த கோவிலை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததாகவும், அது எப்படி கட்டப்பட்டது என்பதை அறிய முடியவில்லை என்றும் பலர் நம்புகிறார்கள். இங்குள்ள பல சிலைகள் உடைந்த நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கோயில் மத்திய பிரதேசத்தின் அற்புதமான கோவிலாக கருதப்படுகிறது.

    இந்த கோவிலின் மையத்தில் ஒரு பிரமாண்டமான சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது. 120 அடி உயரமுள்ள இந்த கோவிலின் மேல் பகுதியும், கருவறையும் பல நூறு ஆண்டுகளுக்கு பிறகும் பாதுகாப்பாக உள்ளது. இதில் மற்றொரு அம்சம் என்னவென்றால், இந்த கோவிலை சுற்றியுள்ள அனைத்து கோவில்களும் உடைந்திருந்தாலும், கக்கன்மாத் கோவில் இன்றும் பாதுகாப்பாக உள்ளது.

    • வெங்கலராஜனுக்கு இரும்பை தங்கமாக்கும் ரகசியம் தெரிந்து இருந்தது.
    • முதன் முதலில் பனைமரம் பதித்த பொற்காசு வெளியிட்ட அரசன்

    முதலில் வனங்களில் சுற்றித்திரிந்த மனிதன், பின்னாளில் குழுக்களாக வாழத்தொடங்கினான். அந்த குழுக்களுக்கு ஒருவரை தலைவனாக நியமித்தான். இப்படி தொடங்கியதுதான் மன்னராட்சி முறை.

    சமவெளிகளுக்கு வந்த மனிதர்களை கட்டிக்காக்கும் பொறுப்பு அன்றைய காலகட்டத்தில் மன்னர்களுக்கு இருந்தது. அவர்கள் ஆட்சி பொறுப்பை பார்த்ததோடு, எதிரி நாட்டு மன்னர்களிடம் இருந்து தங்களது மக்களை பாதுகாக்க பல்வேறு படைபிரிவுகளோடு வசித்து வந்தனர்.

    அதுமட்டுமின்றி அரசர்கள் தாங்கள் குடும்பத்துடன் வசிக்க பிரமாண்ட அரண்மனைகளை கட்டினர். அப்படி கட்டப்பட்ட அற்புதமான ஒரு அரண்மனை குமரி மாவட்டத்தில் இன்றைய மணக்குடி கடற்கரை பகுதியில் இருந்தது என்றால் நம்புவதற்கு கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். அது வெங்கல கோட்டை என்று அழைக்கப்பட்டது. அந்த கோட்டையில் இருந்து ஆட்சி செய்து வந்த அரசன்தான் வெங்கலராஜன்.

    தற்போது வெங்கலராஜபுரம் என்று அழைக்கப்படும் முறம்பில் அரண்மனை அமைத்து ஆண்ட குறுநில மன்னன் வெங்கலராஜன். இலங்கையில் உள்ள குறுங்கடல் சூழ்ந்த புத்தளம் என்கிற குறுநாட்டில் வீரசேகர சோழனுக்கும் தங்கப்பொன்னம்மை என்னும் காயத்ரி தேவிக்கும் மகனாக பிறந்தவர். 1525-ம் ஆண்டு (ஆங்கில ஆண்டு) பிறந்துள்ளார். அதாவது ஆவணி மாதம் 1-ந் தேதி பிறந்துள்ளார்.

    கல்வியிலும், கலையிலும் சிறந்து விளங்கிய வெங்கலராஜனுக்கு இரும்பை தங்கமாக்கும் ரகசியம் தெரிந்து இருந்தது. அதாவது இரும்பின் மேல் பச்சிலை மூலிகையை தடவி அதை தங்கமாக்கும் வித்தை அவருக்கு கைவந்த கலையாக இருந்தது.

    இலங்கையின் கண்டி மன்னனின் ஆட்சிப்பகுதிக்கு உட்பட்ட புத்தளம் என்னும் குறுநிலப்பகுதியை வெங்கலராஜன் ஆட்சி செய்தான். முதன் முதலில் பனைமரம் பதித்த பொற்காசு வெளியிட்ட அரசன் இவர் தான். இலங்கை மண்ணில் மணமுடித்த வெங்கலராஜனுக்கு துறைமுகத்தழகி, சங்குமுகத்தழகி என்று 2 மகள்கள் பிறந்தனர். இருவரும் கல்வியிலும், கலைகளிலும் தேர்ச்சி பெற்றனர்.

    அழகிலும் காண்போரை கவர்ந்திழுக்கும் வகையில் பொலிவுடன் காணப்பட்டனர். தந்தை வீரசேகரசோழன் காலமான பின்பு வெங்கல ராஜனுக்கு பல்வேறு வழிகளில் தொல்லைகள் வந்து சேர்ந்தன. குறிப்பாக வட இந்தியாவில் இருக்கும் இன்றைய ஒடிசா கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்கு வந்தவர்களாலும், ஆந்திர மன்னர்களாலும் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது.

    அந்த காலக்கட்டத்தில் இலங்கைக்கு வந்த போர்த்துக்கீசியர்கள் வட இலங்கையின் செல்வ வளங்களை கவர்ந்து செல்ல முனைந்தது. புத்தளம் என்னும் குறுநிலத்தை ஆண்டு வந்த வெங்கலராஜனிடம் தங்கப் பாளங்களும், நகைகளும் இருப்பதை அறிந்த போர்ச்சுக்கீசியர்கள், வெங்கலராஜனுக்கு தொல்லைகள் கொடுக்கத் தொடங்கினர்.

    வெங்கல ராஜனிடம் இருந்த செல்வமே அவனுக்கு எமனாக வந்தது. இதனால் தன் வம்சத்தை தன்னோடு அழிந்து போக விடாமல் தடுக்கவும், தலைமுறையை காத்திடவும் நினைத்தான். இதனால் குமரி நாட்டுக்கு வர பெரிய தோணி ஒன்றில் பொன்னையும், பொருட்களையும் ஏற்றினான். இன்னொரு தோணியில் வித்தகர்களையும், கலைஞர்களையும், வைத்தியர்களையும், அண்ணாவிகளையும், கொல்லர், பொற்கொல்லர்களையும், நிர்வாக அமைச்சர்களையும் ஏற்றினான். மூன்றாம் தோணியில் குடும்பத்தார்களையும் ஆவணங்களையும் ஏற்றினான்.

    அந்த தோணிகள் இலங்கை புத்தளத்தில் இருந்து புறப்பட்டு தென்குமரியை வந்தடைந்தன. இப்போதைய மணக்குடிக்கு வந்த அவர்கள் பாசறையையும், காயலுக்கு கிழக்கே கன்னியாகுமரி சாலையில் உள்ள முறம்பில் அரண்மனையையும், குடியிருப்பையும் அமைத்தனர்.

    முகிலன் தலைமையில் உள்ள ஆட்சியாளர்கள் தங்குவதற்கு ஒரு குடியிருப்பை நிறுவி அவர்களை அங்கே தங்க வைத்தான். இன்றும் அந்த இடம் முகிலன்குடியிருப்பு என்றே அழைக்கப்பட்டு வருகிறது. வெங்கலக் கதவுடன் அரண்மனை கட்டி ஆண்டதால் இன்றும் அந்த இடம் வெங்கலக்கதவடிவிளை என்றே அழைக்கப்படுகிறது. பத்திரப் பதிவுகளிலும் வெண்கலக்கதவடிவிளை என்றே அழைக்கப்படுகிறது.

    இப்போது இருக்கும் தலக்குளத்திற்கு அன்றைய பெயர் வாட்டக்களி பெரியகுளம் ஆகும். இன்றும் அரசு ஆவணங்களில் இந்த பெயரே உள்ளது.

    வெங்கலராஜனின் 2 மகள்களும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தனர். தன் மகள்கள் வளர வளர வெங்கலராஜன் மனதில் பயமும் வளர தொடங்கியது. அழகே ஆபத்தாகி விடுமோ? என்று அஞ்சினான். ஆகவே தன் மகள்கள் இருவரிடமும் தன்னுடைய அனுமதி இன்றி புதிய இடங்களுக்கு செல்லக்கூடாது என்றும், குறிப்பாக கோட்டையை விட்டு வெளியே போகக்கூடாது என்றும் கட்டளையிட்டான்.

    இதற்கிடையேல் வெங்கலராஜன் அரண்மனை, அதைச் சுற்றிலும் குடியிருப்புகள், அகன்ற வீதிகள் கட்டி முடித்தான். தொடர்ந்து கோட்டை ஒன்றை கட்ட விரும்பினான். இதற்கு நிறைய வேலையாட்கள் தேவைப்பட்டனர். அவனது முன்னோர்கள் ஆண்ட குரும்பூர் பகுதியில் அறிமுகமான பலர் வாழ்ந்து வந்தனர். எனவே அங்கு சென்று கோட்டை கட்ட தேவையான ஆட்களை கொண்டு வர வேண்டும் என்று தன் பரிவாரங்களோடு குரும்பூருக்கு சென்றார்.

    இன்றைய பறக்கையில் அப்போது பட்சி ராஜா கோவில் ஒன்று இருந்தது. அந்த கோவில் திருவிழா மிகவும் பிரபலமானதாக இருந்தது. அந்த விழாவுக்கு தந்தையின் கட்டளையை மீறி துறைமுகத்தழகியும், சங்கு முகத்தழகியும் சென்றனர். அதுவே பின்னால் சோதனை காலமாக அமையும் என்று அவர்கள் நினைக்கவில்லை.

    விழாவுக்கு வந்திருந்த வஞ்சி நாட்டு இளவரசன் ராமவர்மன், இருவரின் அழகைக் கண்டு மனம் மயங்கினான். இதில் அழகுக்கு அழகு சேர்க்கும் பதுமைபோல ஜொலித்த துறைமுகத்தழகியை எப்படியும் அடைய வேண்டும் என்று மனதுக்குள் மன்மத கோட்டையையே கட்டினான். திருவிழா முடிந்து சகோதரிகள் 2 பேரும் அரண்மனை திரும்பினர்.

    அதே சமயத்தில் கோட்டை கட்டும் பணியாளர்களை அழைத்து வருவதற்காக குரும்பூர் சென்ற வெங்கலராஜனும் அரண்மனை திரும்பினான். அப்போது ஓலையோடு வஞ்சி நாட்டு ஒற்றன் ஒருவன் வந்தான். அவனிடம் இருந்த ஓலையை வாங்கி வெங்கலராஜன் படித்து பார்த்த போது, அந்த சொற்கள் அவனை சுட்டு சாம்பலாக்கின.

    தான் குரும்பூர் சென்றபோது தன் மகள்கள் இருவரும் கோட்டைக்குள்தான் இருந்தார்களா? என்பதை தன் மனைவியிடம் கேட்டுத் தெரிந்தான். மகள்கள் இருவரையும் அழைத்து 'நான் இல்லாத போது என் அனுமதி பெறாமல் நீங்கள் எங்கே போயிருந்தீர்கள்' என்று கேட்டான். அதற்கு அவர்கள் இருவரும், 'பறக்கை பட்சிராஜா கோவிலில் நடைபெற்ற ஆராட்டு விழாவுக்கு சென்றோம், தங்களை மன்னியுங்கள்' என்றனர்.

    வஞ்சி நாட்டு ஒற்றன் கொண்டு வந்த ஓலையில் தான் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று எண்ணி தந்தையை பார்த்தனர் மகள்கள். வெங்கல ராஜன் ஓலையை தன் மகள்களிடம் கொடுத்து, படித்துப் பாருங்கள் என்றான்.

    ஓலையின் வாசகம் இதுதான், 'வெங்கல ராஜனுக்கு வஞ்சி நாட்டு இளவரசன் ராமவர்மன் எழுதிக் கொள்வது. உன் மகள்கள் இருவரின் அழகிலும் நான் பெரிதும் மயங்கி நிற்கின்றேன். அதிலும் குறிப்பாக உன் மூத்த மகள் துறைமுகத்தழகியை அடைய வேண்டும் என்ற ஆசை என்னை வெகு தூரத்துக்கு கொண்டு வந்து விட்டது. ஆகவே உடனடியாக உன் மூத்த மகள் துறைமுகத்தழகியை என் அந்தப்புரத்திற்கு அனுப்பி வை' என்று எழுதப்பட்டு இருந்தது.

    மடலை படித்து முடித்த துறைமுகத்தழகியின் கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுத்தது. ஆராட்டு விழா சென்று அகப்பட்டோம் என்று நினைத்து மனம் வருந்தினாள். தந்தை தன் மகளின் கண்ணீரை பார்த்து மனம் வருந்தினார்.

    ஓலையை கொண்டு வந்த ஒற்றனை அழைத்த வெங்கல ராஜன், 'என் மகளை வஞ்சி நாட்டு இளவரசனின் அந்தப்புர அழகியாக அனுப்பி வைக்க முடியாது என்று சொல் போ' என்று கூறி அனுப்பி வைத்தான்.

    காலம் மெல்ல மெல்ல நகர்ந்தது. குரும்பூர் நகரில் இருந்து கூட்டி வந்த பணியாட்கள் கடற்கரையில் இருந்து பொற்றையடி வரை உள்ள நிலப்பரப்பை வரையறை செய்து கோட்டை கட்டத் தொடங்கினர். இருபுறமும் இருந்து மணலை எடுத்து முதலில் கோட்டை அமைப்பை உருவாக்கினர்.

    கடற்கரையில் கற்களை கொண்டும், சுண்ணாம்பு சுதை கொண்டும் கோட்டை கட்டும் பணி சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

    ஒரு நாள் காலையில் ரவிவர்மன் தன் படைகளோடு கோட்டையை சூழ்ந்து முற்றுகையிடத் தொடங்கினான். அப்போது வெங்கல ராஜன் அஞ்சி ஓட மனமின்றி கோட்டைக்குள் இருந்தபடியே தன் குடிகளையும் உள்ளே அமர வைத்து வெண்கல கதவினை உள்ளிருந்தபடியே பூட்டிக் கொண்டான்.

    வெங்கலராஜன் உள்ளிருந்தபடியே, கோட்டைக்கு வெளியே முற்றுகையிட்டுக் கொண்டிருந்த வஞ்சி நாட்டு வீரர்களை கவனித்துக் கொண்டிருந்தான். கோட்டை கதவும் திறக்கவில்லை, வஞ்சிநாட்டு வீரர்களும் அகன்று போகவில்லை. போரும் நடக்கவில்லை. ஏன் என்றால் துறைமுகத்தழகியை உயிரோடு அழைத்துப் போக வேண்டும் என்பதே படைக்கு இடப்பட்ட கட்டளை. இதனை காப்பாற்ற வீரர்கள் பலநாட்களாக கோட்டையை சுற்றிலும் நின்றனர்.

    திடீரென்று ஒரு நாள் போர்பறை ஒலித்தது. பொறுத்தது போதும் எழுந்து போருக்கு புறப்படுங்கள் என்பது இதன் பொருளாகும். இதனை அறிந்த வெங்கலராஜனும், ஆசை மகள்களும் மிகவும் துயரப்பட்டனர். தன் தந்தையின் கலக்கத்தை உணர்ந்து கொண்ட துறைமுகத்தழகி மனம் வருந்தினாள்.

    வெங்கல ராஜனோ தன் மகளை வஞ்சி மன்னன் விரும்பும் படியாக அனுப்புவதற்கு தயாராக இல்லை. துறைமுகத்தழகி தனது தந்தையிடம் வந்து, 'ஒரு மாபெரும் வீரன் நீங்கள். வீரனுக்கு அழகு விவேகம். தாங்கள் என் தலையை வெட்டி கோட்டைக்கு வெளியே தூக்கி எறியுங்கள். அதனை பார்த்து வஞ்சி மன்னன் அஞ்சி ஓடுவான்' என்று தைரியமாக தந்தையிடம் கூறினாள்.

    எண்ணற்ற கேள்விகளுக்கு இடையே ஒரு முடிவோடு வாளை எடுத்த வெங்கல ராஜன் தன் மகளை வெட்டி தலையை தூக்கி கோட்டைக்கு வெளியே எறிந்தான். வருவாள் என்று எண்ணி மகிழ்ந்து நின்ற வஞ்சி நாட்டு மன்னன் கைகளில் தலை ஒன்று விழுவதைக் கண்டு தலைதெறிக்க ஓடினான். கண்ணியத்தையும், தான் விரும்பும் கற்பையும் காத்து நிற்க வேண்டும் என்கிற உணர்வு உடைய பெண்ணை நான் இப்போதுதான் பார்க்கிறேன் என்று புலம்பிக்கொண்டே தன் படைகளோடு அஞ்சி விடைபெற்றான் வஞ்சி மன்னன்.

    பின்னர் வெங்கலக்கோட்டை கதவு திறந்து மக்களும், மன்னனும் தன் இளவரசியின் தலையை தூக்கி வைத்து அழுது புலம்பினர். பின்னர் வெங்கலராஜன், மகளின் உடலையும், தலையையும் கொண்டு சென்று சந்தனக் கட்டைகளை அடுக்கி அதன் மேல் வைத்து எரியூட்டி காடாற்றி முடித்தான். இன்றும் இந்த பகுதிக்கு காடேற்றி என்னும் பெயரே நிலைத்திருக்கிறது.

    பின்னர் மகள் இறந்த துக்கம் தாளாமல் வெங்கலராஜனும் தனது மார்பில் வாளை பாய்ச்சி உயிர் துறந்தான் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து ஒரு நாள் இரவு 60 அடி உயரத்துக்கு அரபிக்கடல் ஆர்ப்பரித்து எழுந்து உலகையே விழுங்க வந்தது. இன்று சுனாமி என்று அழைக்கப்படும் ஆழிப்பேரலையின் சீற்றத்தால் அரண்மனையும், கோட்டையும் குடிகள் வாழ்ந்த வீடுகளும் அழிந்து முடிந்தது.

    மன்னன் வெங்கலராஜன் அறக்கட்டளை தலைவர் கவிஞர் நீலம் மதுமயன், இந்த மன்னன் வெங்கல ராஜன் அறக்கட்டளையை சுமார் 10 ஆண்டுகளாக வெங்கல ராஜபுரம் (கோவில்விளை) என்னும் முகவரியில் நடத்தி வருகிறோம். இந்த அறக்கட்டளையின் நோக்கம் மன்னன் வெங்கல ராஜனின் புகழைப் பரப்புவது ஆகும். அவரைப்பற்றி அறியாதவர்கள் மத்தியில் அவரது பெருமைகளையும், வரலாற்றையும் தெரியப்படுத்துவதை பணியாக செய்து வருகிறோம்.

    ×