என் மலர்
வழிபாடு
- பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நடந்து வருகிறது.
- பவித்திர மாலைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
திருப்பதி:
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று அதிகாலை மூலவர் பத்மாவதி தாயாரை சுப்ரபாதத்தில் துயிலெழுப்பி, சகஸ்ர நாமார்ச்சனை, நித்யார்ச்சனை செய்யப்பட்டது. பின்னர் பவித்திர மாலைகள் சமர்ப்பணம் நடந்தது. அப்போது மூலவர் பத்மாவதி தாயார், உற்சவர் பத்மாவதி தாயார், உபகோவில்கள், பரிவார தேவதைகள், விமானப் பிரகாரம், கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றுக்கு பவித்திர மாலைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அதன்பிறகு மாலை மற்றும் இரவில் யாகசாலையில் வைதீக காரியக்கர்மங்கள் நடந்தன.
- திருமலையில் அனந்த பத்மநாபசாமி விரதம் கடைப்பிடிக்கப்பட்டது.
- புஷ்கரணியில் சுதர்சன சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி.
திருப்பதி:
திருமலையில் அனந்த பத்மநாபசாமி விரதம் கடைப்பிடிக்கப்பட்டது. அதையொட்டி ஸ்ரீவாரி புஷ்கரணியில் சுதர்சன சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
திருமலையில் ஆண்டுதோறும் 'சுக்ல சதுர்தசி' அன்று அனந்த பத்மநாபசாமி விரதம் கடைப்பிடிப்பது வழக்கம். இந்த நாளில் நாடு முழுவதும் உள்ள 108 திவ்ய தேச கோவில்களில் ஆண்டு தோறும் அனந்த பத்மநாபசாமி விரதம் நடக்கும். 108 திவ்ய தேச கோவில்களில் முதன்மையானவர் 'திருமால்' என்பதால், அனந்த பத்மநாபசாமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
அதன்படி நேற்று திருமலையில் அனந்த பத்மநாபசாமி விரதம் அனுசரிக்கப்பட்டது. காலை 6 மணிக்கு சுதர்சன சக்கரத்தாழ்வாரை கோவிலில் இருந்து பூவராகசாமி கோவில் அருகில் உள்ள ஸ்ரீவாரி புஷ்கரணியின் கரைக்கு கொண்டு சென்றனர். அங்கு, சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை செய்த பின், ஸ்ரீவாரி புஷ்கரணியில் சாஸ்திர ரீதியாக 'சக்கர ஸ்நானம்' எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
இந்தச் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் கடைசிநாள், வைகுண்ட துவாதசி, ரத சப்தமி, அனந்த பத்மநாபசாமி விரதம் ஆகிய முக்கிய நாட்களில் மட்டுமே நடப்பது சிறப்பம்சமாகும்.
சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி முடிந்ததும் ஸ்ரீவாரி புஷ்கரணியில் இருந்து ஏழுமலையான் கோவிலுக்குள் சுதர்சன சக்கரத்தாழ்வாரை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
பெண்களின் நலனுக்காக வரலட்சுமி விரதம் கடைப்பிடிப்பதுபோல், ஆண்களின் நலன் மற்றும் செல்வ செழிப்புக்காக அனந்த பத்மநாபசாமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
சமுத்திரத்தில் சேஷ சயனத்தில் வீற்றிருக்கும் திவ்ய மங்கல வடிவமே அனந்த பத்மநாபன். இந்த விரதத்தில் பூமியின் பாரத்தை சுமக்கும் அனந்தனும், ஆதிசேஷனை படுக்கையாகக் கொண்டு வழிபடப்படும் மகா விஷ்ணுவை பக்தர்கள் வழிபடுகின்றனர்.
ஆதிசேஷன் மீது சயன கோலத்தில் அருள்பாலிக்கும் அனந்த பத்மநாபசாமி வீற்றிருக்கும் மகா விஷ்ணுவை வேண்டி, இந்த விரதத்தை கடைப்பிடிப்பவர்கள் செல்வ செழிப்போடு வாழ்வர் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
- திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
- இன்று இரவு பவுர்ணமியை முன்னிட்டு தங்க கருட வாகன சேவை நடைபெறுகிறது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வாரம் பிரமோற்சவ விழா நடந்தது. இதனால் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்து இருந்தது.
பிரமோற்சவ விழா நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்தாலும் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் குறைந்த நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர்.
தற்போது பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டு உள்ளது. திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
வி.ஐ.பி.கள் பிரேக் தரிசனத்தில் அனுமதிக்கப்படுவதால் நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த சாதாரண பக்தர்கள் 30 மணி நேரம் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தனர்.
மேலும் இன்று இரவு பவுர்ணமியை முன்னிட்டு தங்க கருட வாகன சேவை நடைபெறுகிறது. இதனால் கூட்டம் அதிகரித்து வருகிறது.
திருப்பதியில் நேற்று 54, 620 பேர் தரிசனம் செய்தனர். 24,234 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.98 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பார் என்பது ஐதீகம்.
- குன்றின் மீது அமைந்துள்ள நரசிம்மர் தலம் மிகவும் வித்தியாசமானது.
நாளை என்பது நரசிம்மரிடத்தில் இல்லை' என்பது ஆன்றோர் வாக்கு. நரசிம்மரிடத்தில் நம்பிக்கையோடு கோரிக்கைகளை சமர்ப்பித்தால் அவர் உடனுக்குடன் பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பார் என்பது ஐதீகம். தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் நரசிம்மர் திருத்தலங்கள் அமைந்துள்ளன. சில தலங்கள் மிகவும் விசேஷமானவை. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர் வட்டத்தில் இடர்குன்றம் என்ற கிராமத்தில் குன்றின் மீது அமைந்துள்ள நரசிம்மர் தலம் மிகவும் வித்தியாசமானது. சிறிய தலமாக இருந்தாலும் சக்தி மிக்க தலமாக விளங்கி வருகிறது.
தொண்டை மண்டலத்தில் இடையன் காடு என்ற ஒரு சிற்றூர் இருந்தது. தற்போதைய காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் இணைந்த பகுதியானது முற்காலத்தில் தொண்டை மண்டலம் என்று அழைக்கப்பட்டது. இப்பகுதியில் இளைஞன் ஒருவன் ஆடு, மாடுகளை மேய்த்து வந்தான். அவ்வப்போது மரத்தடியில் அமர்ந்து தியானிப்பது அவனுடைய வழக்கமாக இருந்தது.
ஒருசமயம் அந்த இளைஞனுக்கு நரசிம்மரை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் எழ, பெரியோர்களிடம் அதற்கான வழியை கேட்டான். அவர்கள் தவமியற்றினால் நரசிம்மரை தரிசிக்கலாம் என்று தெரிவித்தார்கள். ஒருநாள் அந்த இளைஞன் காட்டிற்குள் ஒரு குன்றின் அருகே நடந்து சென்ற போது 'இந்த குன்றே ஹரி. இங்கே நீ தவமியற்றினால் நரசிம்ம மூர்த்தியை தரிசிக்கலாம்' என்ற அசரீரி வாக்கு எழ, அந்த இளைஞன் அந்த குன்றின் மீது அமர்ந்து நரசிம்ம மூர்த்தியை நினைத்து தவமியற்றினான்.
ஒரு சித்ரா பவுர்ணமி தினத்தன்று நரசிம்ம மூர்த்தி அந்த இளைஞனுக்கு காட்சி கொடுத்தார். அப்போது அந்த இளைஞன் நரசிம்மரிடம் 'தாங்கள் இங்கேயே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும். பக்தர்களின் இடர்களை நீக்கி அருள வேண்டும்' என்ற வேண்டுதலை சமர்ப்பிக்க நரசிம்மரும் அந்த மலைக்குன்றில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளினார். நரசிம்ம மூர்த்தியை தன் தவத்தால் தரிசித்த அந்த இளைஞனே பிற்காலத்தில் இடைக்காடர் என்று அழைக்கப்பட்ட சித்தர் என்று கூறப்படுகிறது. இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாய் நரசிம்மர் ஐந்து தலை நாகத்தின் கீழ் எழுந்தருளியுள்ளார்.
இப்பகுதி மக்கள் இத்தலத்திற்கு வந்து நரசிம்மரிடம் வேண்ட அவர்களின் இடர்கள் எல்லாம் உடனுக்குடன் நீங்கியதாக ஐதீகம். இக்குன்று 'இடர்குன்று' என அழைக்கப்பட்டு, பின்னர் மருவி 'இடர்குன்றம்' என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.
எழுபத்தியோரு படிக்கட்டுகளை கடந்து சென்றால் சிறிய கருவறையில் சுயம்பு மூலவராக நரசிம்மர் காட்சி தருகிறார். கருவறையில் சுயம்பு மூலவருக்கு முன்பாக லட்சுமி நரசிம்மர் சிலாத்திருமேனியாக எழுந்தருளியுள்ளார். பெரியாழ்வார், பேயாழ்வார், உடையவர், தேசிகர் ஆகியோர் சிலா ரூபத்தில் எழுந்தருளியுள்ளனர். சுயம்பு நரசிம்ம மூர்த்திக்கு எதிர்புறத்தில் பெரிய திருவடி கருடாழ்வார் மூலவரை நோக்கி அமைந்துள்ளார். லட்சுமி நரசிம்மர் உற்சவராகவும் அமைந்துள்ளார்.
சுயம்பு நரசிம்மருக்கு அருகில் இடைக்காடர் காட்சி தருகிறார். மலைப்பாதையின் வழியில் சிறிய திருவடி அனுமனுக்கு ஒரு சன்னிதி அமைந்துள்ளது. பிரதி சனிக்கிழமைகளில் அனுமனுக்கு வடைமாலை சமர்ப்பித்து விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன.
நரசிம்ம ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, சித்ரா பவுர்ணமி ஆகிய தினங்களில் இத்தலத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும், சுவாதி நட்சத்திர தினத்தன்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
தினமும் காலை வேளைகளில் ஒருகால பூஜை நடைபெறுகின்றது. இத்தலத்திற்கு வந்து சுயம்பு நரசிம்மமூர்த்தியை தரிசித்தால் நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.
தினமும் காலை எட்டு மணி முதல் பத்து மணி வரையிலும் இத்தலம் பக்தர்களின் தரிசனத்திற்காகத் திறந்திருக்கும். சனிக்கிழமைகளில் மட்டும் காலை ஏழு மணி முதல் பதினொன்று முப்பது வரையிலும் மாலை ஐந்து மணி முதல் இரவு ஏழு மணி வரையிலும் திறந்திருக்கும்.
திருப்போரூர்-செங்கல்பட்டு வழித்தடத்தில் கொட்டமேடு சந்திப்பில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இடர்குன்றம் அமைந்துள்ளது. மானாமதியில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவிலும் திருப்போரூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், திருக்கழுக்குன்றத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் இடர்குன்றம் அமைந்துள்ளது.
- மலைக்கோவிலில் இருந்து பாரவேல் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு வந்தடையும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
- விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
பழனி:
தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனி மலைக்கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று நவராத்திரி விழா. 9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்று வருகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா அடுத்த மாதம் 15-ந்தேதி மலைக்கோவிலில் காப்பு கட்டுதலுடன் தொடங்க உள்ளது. அன்றைய தினம் உச்சிகால பூஜையின்போது காப்பு கட்டப்படும். 9ம் நாளான 23-ந்தேதி மலைக்கோவிலில் பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, அதனைத் தொடர்ந்து 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறுகிறது.
மலைக்கோவிலில் இருந்து பாரவேல் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு வந்தடையும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசாமி கோதை மங்கலம் புறப்பட்டு அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறும்.
நவராத்திரி விழாவில் அன்றையதினம் பகல் 2 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு இரவு 8 மணிக்கு மேல் சம்ரோட்ஷண பூஜைக்கு பின்னர் நடை திறக்கப்படும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
- சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
- திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, புரட்டாசி 12 (வெள்ளிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: பவுர்ணமி மாலை 4.34 மணி வரை. பிறகு பிரதமை.
நட்சத்திரம்: உத்திரட்டாதி நள்ளிரவு 1.27 மணி வரை. பிறகு ரேவதி
யோகம்: சித்த/அமிர்தயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: காலை 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை. மதுரை சமீபம் மடப்புறம் பத்திரகாளி அம்மனுக்கு அபிஷேகம் செய்ய நன்று. கரூர் தான்தோன்றி ஸ்ரீகல்யாண வேங்கடேசப் பெருமாள் துளசி பிருந்தாவனம். திருவிடைமருதூர் பிருகத்குசாம்பிகை புறப்பாடு. ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை. மாடவீதி புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பண்பு
ரிஷபம்-பெருமை
மிதுனம்-விருத்தி
கடகம்-பக்தி
சிம்மம்-பணிவு
கன்னி-குழப்பம்
துலாம்- தாமதம்
விருச்சிகம்-முயற்சி
தனுசு- ஆசை
மகரம்- ஆக்கம்
கும்பம்- பரிசு
மீனம்- ஆதாயம்
- சிவலிங்கத்தை சுற்றி பல அற்புதங்கள் நிகழ்கிறதாம்.
- ஒரு நாளில் மூன்று முறை சிவன் நிறம் மாறுகிறார்.
புராணங்களில் சிவனுக்கு பல அவதாரங்கள் இருந்தது குறித்து அறிந்திருப்போம். ராஜஸ்தானில் இருக்கும் சிவன் கோயிலில் இருக்கும் சிவலிங்கத்தை சுற்றி பல அற்புதங்கள் நிகழ்கிறதாம். இங்கு ஒரு நாளில் மூன்று முறை சிவன் நிறம் மாறுகிறார் என்றால் நம்ப முடிகிறதா?
கோயில் வரலாறு
தோல்பூர் மாவட்டத்தில் இருக்கும் அச்சலேஸ்வர் கோவில் பல நூற்றாண்டுக்கு முன்பு கட்டப்பட்டது. இங்கு குடிகொண்டிருக்கும் சிவனை மக்கள், அச்சலேஸ்வர் மகாதேவ் என்கிறார்கள். இந்தக் கோவிலில் நந்தி சிலையும் வைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் உள்ள கோவில்களை சுல்தான்கள் தாக்கியபோது, நந்தி சிலை ஆயிரக்கணக்கான தேனீக்களை படையெடுப்பாளர்கள் மீது அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
அதன் பிறகு படையெடுப்பாளர்கள் கோவிலை உடைக்காமல் திரும்பியுள்ளார்கள். சுமார் 5 வருடங்களுக்கு முன்பாக சிவலிங்கத்தின் ஆழத்தை கண்டறிய தோண்டப்பட்டது. ஆனால் 100 அடிக்கு மேல் தேடியும், சிவலிங்கத்தின் முனையை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த காரணத்தால் அகழாய்வு பாதியில் நிறுத்தப்பட்டது.
நிறம் மாறும் சிவலிங்கம்
ராஜஸ்தானின் தோல்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அச்சலேஸ்வர் கோவிலில் தான் இந்த அதிசயம் நடக்கிறது. இங்குள்ள சிவலிங்கத்தின் நிறம் ஒரே நாளில் மூன்று முறை மாறுகிறது. சம்பல் ஆற்றின் பள்ளத்தாக்கில் அமைந்து இக்கோயிலில் பக்தர்கள் ஆண்டு முழுவதும் தரிசனம் செய்ய விரைகிறார்கள். சிவலிங்கத்தின் நிறம் மாறுவதை காண விரும்பாத சிவ பக்தர்கள் உண்டா?
எப்படி?
இந்த கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் வண்ணம் காலையில் சிவப்பாக காட்சியளிக்கிறது. சூரியன் உச்சிக்கு வரும் மதிய வேளையில் காவி நிறமாகவும், மாலையில் கோதுமை நிறத்திலும் மாறுகிறதாம். சிலர் இதனை சிவனருளால் நிகழும் அற்புதம் என நம்புகின்றனர். விஞ்ஞானிகளோ சூரியனின் கதிர்களால் சிவலிங்கத்தின் நிறம் மாறுவதாக கூறிவருகின்றனர்.
தோல்பூர் மாவட்டத்தில் இருக்கும் இந்தக் கோவிலை அடைவது ஒரு சாகசம் என்று தான் சொல்லவேண்டும். இங்கு செல்ல ஆறுகள் வழியாக பயணிக்க வேண்டும். இந்த ஆறுகளின் ஆழம் அதிகம் கிடையாது என்றாலும், மழைகாலத்தில் சிரமம் தான். இங்கு சென்று வழிபட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும் என கூறப்படுகிறது.
- உண்மையில் மூதேவி இல்லை. இவள் பெயர், முதல் தேவி அல்லது மூத்த தேவி
- சமஸ்கிருதத்தில், ஜேஷ்டா தேவி என்று அழைப்பர்.
ஜேஷ்டா தேவி வழிபாடு:
இந்த தேவி, உண்மையில் மூதேவி இல்லை. இவள் பெயர், முதல் தேவி அல்லது மூத்த தேவி ஆகும். இவளை சமஸ்கிருதத்தில், ஜேஷ்டா தேவி என்று அழைப்பர். ஜேஷ்டா என்றால், முதல் என்று பொருள். தமிழில், சேட்டை என்று கூறுகின்றனர். தசமகா வித்யாவில், தூமாவதி என்கிற பெயரில், ஒரு தேவி பூஜிக்கப்படுகிறார். அவளை, தூம்ர வாராஹி என்றும், ஜேஷ்டா என்றும் குறிப்பிடுகின்றன. ஜேஷ்டா தேவியின் சிற்ப அமைப்பை பூர்வகரனாகமம், லிங்க புராணம் போன்ற நூல்கள் குறிப்பிடுகின்றன. ஒன்றரை அடி உயரமும், இரண்டரை அடி அகலமும் உள்ள கல்லில் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.
ஜேஷ்டா தேவி சிலையின் வலப்புறம் காளை மாட்டு தலையை கொண்ட ஆண் உருவமுடைய மகன் குளிகனும் இடப்புறம் மகள் மாந்தினியும் காணப்படுகின்றனர். பல்லவர் காலத்தில் உச்சத்தில் இருந்த ஜேஷ்டா தேவி வழிபாடு, பிற்கால சோழர் காலத்துக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கைவிடப்பட்டுள்ளது. இருப்பினும், தமிழகத்தின் வடமாவட்டங்களில் உள்ள பல்லவர் கால, சோழர் கால சிவன் கோயில்களில் இன்றும் ஜேஷ்டா தேவி வழிபாடு காணப்படுகிறது. ஜேஷ்டா தேவி வழிபாடு செல்வ வளத்தை பெருக்குவதோடு ஆரோக்கிய வாழ்வின் முக்கிய தேவையான நிம்மதியான தூக்கத்தையும் தருகிறது என சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.
தூக்கமின்மை:
ஒருவர் எவ்வளவு சம்பாரித்தாலும் எத்தனை கோடி சொத்து வைத்திருந்தாலும் அவருக்கு தூக்கம் வரவில்லை என்றால் அத்தனை சொத்துக்களும் வீண்தான். ஆழ்ந்த தூக்கம், அடுத்த நாள் பொழுதை சுறுசுறுப்புடன் தொடங்குவதற்கு மிக அவசியம். ஆனால் உண்மை என்னவென்றால், இரவில் தூக்கம் இல்லாமல் புரண்டு தவிப்பவர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் நீண்ட நேரம் கடந்த பின்னரே சிரமப்பட்டு தூங்குகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் காலையில் விழிக்கும்போது உடல் சோர்ந்து காணப்படுவார்கள். கண்களும் பொலிவற்று காணப்படும்.
அதன் தாக்கத்தால் அன்றைய பொழுதை தடுமாற்றத்துடன்தான் கடக்கமுடியும். நம்மில் பலர் இரவில் தூக்கம் வராமல் சிரமப்பட்டிருக்கிறோம், குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள். இவர்களுக்கு இரவு சாப்பிட்டு படுத்தவுடன் தூக்கம் வராததால், படம் பார்ப்பது, நன்பர்களுடன் மெசேஜ்மூலம் பேசுவது, பாடல்கள் கேட்பது அல்லது புரண்டு புரண்டு படுப்பது என செய்வதுண்டு
"மெத்தையை வாங்கினேன், தூக்கத்தை தொலைத்தேன்" என கவிஞர் கண்ணதாசன் எழுதினார். ஆம்! நல்ல தூக்கம் ஒரு வரப்பிரசாதாம். ஆனால் எப்படிப்பட்ட தூக்கம் என்பதை ஒருவர் ஜாதகத்திலுள்ள கிரக நிலைகளே தீர்மாணிக்கின்றன.
நிம்மதியான தூக்கத்திற்கான ஜோதிட காரணங்கள்:
1. நன்றாக தூங்கினாலும் சரி! தூக்கமின்மையால் அவதியுற்றாலும் சரி! அதனால் பாதிப்படைவது மூளைதான். மேலும் தூக்கமின்மைக்கும் நரம்புகளுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. இந்த மூளைக்கும் நரம்பிற்க்கும் அதிபதியான வித்யாகாரகனான புதபகவான்தான் தூக்கத்திற்க்கு முக்கிய காரக கிரகமாகும். ஆயில்யம், கேட்டை மற்றும் ரேவதி ஆகிய மூன்று நட்சத்திரங்களும் புதனின் ஆளுகைக்கு உட்பட்ட நட்சத்திரங்கள் ஆகும். ஒருவருக்கு மூளை கோளாருகள், மன அமைதியின்மை, கோமா நிலை போன்றவற்றையெல்லாம் புதனின் அசுப சேர்க்கைகள் ஏற்படுத்திவிடுகிறது.
2. ஒருவருக்கு நல்ல தூக்கம் வேண்டுமென்றால் அவருக்கு நல்ல மனநிலை வேண்டும். அதிக மகிழ்ச்சி, கோபம், அதிக பயம் இதுபோன்ற உணர்வுகள் தூக்கத்தை கெடுத்துவிடுகிறது. ஆக ஒருவருக்கு நல்ல மனோநிலை அமைய சந்திரனின் அருளாசி முக்கியமானதாகும்.
3. இரவின் காரகன் சந்திரன் ஆகும். அந்த சந்திரன் ஒருவர் ஜாதகத்தில் எப்படி இருக்கிறார் என்பதை பொருத்தே ஒருவரின் இரவு பொழுதின் தன்மையையும் தூக்கத்தையும் தீர்மாணிக்கமுடியும். இரவில்தான் தூங்கவேண்டும் என்பது இயற்க்கையின் நியதி. ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் கெட்டுவிட்டால் அவருக்கு தூக்கம் என்பது ஏக்கம் நிறைந்ததாகவே இருக்கும்.
4. அடுத்ததாக தூக்கத்தை தீர்மானிக்கும் கிரகம் சுக்கிரன் ஆகும். சுக்கிரன் என்றாலே சுகம்தான் நினைவிற்கு வரும். நல்ல சுவையான உணவு (சுக்கிரன்), குளுமையான சூழ்நிலை (சுக்கிரன்) இனிமையான இசை (சுக்கிரன்) வசதியான படுக்கைகள் மற்றும் நறுமணம் மிக்க மலர்கள் மற்றும் சுவை நிறைந்த பழங்கள் (சுக்கிரன்) கூடவே அழகான மற்றும் அன்பான மனைவி (சுக்கிரன்) இவையெல்லாம் நினைத்து பார்க்கும்போதே இனிமையும் தூக்கம் வருவது போன்ற உணர்வும் ஏற்படுகிறதல்லவா. இவையெல்லாம் சுகமானதாகவும் சுவை மிக்கதாகவும் அமைய ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக அமைய வேண்டும்.
5.ஒரு ஜாதகத்தில் புதன் சந்திரன் சுக்கிரன் ஆகிய மூன்றும் கேந்திர பலம், திரிகோண பலம் பெற்று நல்ல நிலையில் அமைந்துவிட்டால் அவர்கள் வாழ்க்கை சந்தோஷம் நிறைந்ததாக இருப்பதோடு இனிமையான தூக்கத்திற்க்கு குறைவிருக்காது. இந்த மூன்று கிரகங்களில் ஒரு கிரகம் பலமிழந்துவிட்டாலும் அந்த ஜாதகரின் தூக்கம் சுகமானதாக அமையாது.
6. கர்ம வினைக்கும் தூக்கத்திற்க்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. தவறான காரியங்கள் தொடர்ந்து செய்யும் ஒருவரின் கர்மவினையால் தூக்கம் கேள்விக்குறியாகிவிடும். கர்ம வினையை தெரிவிக்கும் கிரகங்கள் சனி, ராகு, கேது மற்றும் குருவாகும். சனி, ராகு மற்றும் கேது லக்னத்திலோ அல்லது பூர்வ புண்ணிய ஸ்தானங்களிலோ அல்லது கேந்திர திரிகோணங்களிலோ அல்லது லக்னாதிபதி, சந்திரன் மற்றும் சூரியனோடு நின்று கர்ம வினையை தெரிவிக்கும் கிரகங்களாகும். குரு மறைமுகமாக கர்ம வினையை தெரிவிப்பவர் ஆவார்.
7 . பாவக ரீதியாக ஒருவர் தூக்க சுகத்தை அனுபவிக்க லக்ன பாவம் பலமாகவும் அசுப கிரகங்கள் தொடர்பில்லாமலும் சுப கிரக சேர்க்கையும் பெற்று இருக்க வேணெடும். ஓருவர ஜாதகத்தில் லக்னம் கெட்டுப்போன நிலையில் எந்தகிரகம் எந்த சுகம் தந்தாலும் அது ஒட்டை பாத்திரத்தில் நிரப்பிய நீர் போன்று ஜாதகருக்கு பலனளிக்காமல் போய்விடும். சூரியன் முதல் பாவத்துக்கு அதிபதி மற்றும் ஆத்ம காரகன் ஆகின்றார். மற்றும் செவ்வாய் காலபுருஷ ராசிக்கு லக்னாதிபதி ஆகின்றார். இவற்களின் நிலையும் நிம்மதியான தூக்கத்திற்க்கு முக்கியமானதாகும்.
8. அடுத்தது தூக்கத்திற்கென்றே ஜாதகத்தில் சிறப்பித்து கூறப்பட்ட பாவம் 12-ம் பாவமாகும். எனவேதான் இதனை அயன சயன போக மோட்ச ஸ்தானம் என சிறப்பாக கூறப்படுகிறது. ஒரு ஜாதகத்தில் 12-ம் பாவம் வலுவாகவே கூடாது. தூக்கத்தை பொருத்தவரை 12ம் பாவாதிபதியின் நிலையை கொண்டும் அதனோடு தொடர்பு கொள்ளும் கிரகங்களை கொண்டும் தூக்கத்தின் தன்மையை தீர்மானித்துவிடலாம். 12-ம் பாவத்தில் சுப கிரகங்கள் இருப்பது சிறப்பல்ல. புதனோ சுக்கிரன் அல்லது சந்திரன் இவர்கள் யாராவது ஒருவர் 12-ம் பாவத்தில் நின்றுவிட்டால் அவர்கள் தூக்கம் முறையற்றதாக எப்போது வேண்டுமானாலும் தூக்கிக்கொண்டே இருப்பார்கள். காலபுருஷனுக்கு 12-ம்பாவ அதிபதியான குரு கெட்டுவிட்டால் அவர்களுக்கு நல்ல தூக்கம் என்பது கனவில் கூட கிடைக்காது.
9. அடுத்தது தூக்கத்தினை தீர்மானிக்கும் பாவங்கள் சுகஸ்தானம் எனப்படும் 4-ம் பாவம், பாவாத்பாவத்தில் 4-க்கு 4 ஆன. ஏழாம் பாவம் எனப்படும் களத்திர ஸ்தானமும் 7-க்கு 4 ஆன பத்தாம் பாவம் எனப்படும் கர்ம ஸ்தானமும் ஆகும். காலபுருஷனுக்கு கேந்திரவஸ்தானங்களிலோ அல்லது ஜெனன ஜாதக கேந்திர ஸ்தானங்களிலோ சனி அமர்ந்துவிட்டால் அவர்களுக்கு ஆயுள் முழுவதும் கோழி தூக்கம்தான்.
10. ஒருவர் ஜாதகத்தில் சுகஸ்தானம் கெட்டுவிட்டாலோ அல்லது சுகஸ்தானாதிபதி அசுப சேர்க்கை பெற்று விட்டாலோ அவர்களின் சுகம் மற்றும் தூக்கம் கேள்விக்குறிதான். அவர்களுக்கு அன்னை மற்றும் அன்னைக்கினையான பெண்களாலும் சொத்துக்களாலும் வாகனங்களாலும் தூக்கம் பறிபோகும்.
11. கணவன்-மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் எனப்படுகிறது. ஆண் ஜாதகத்தில் ஏழாம் பாவம் கெட்டுவிட்டால் மனைவியாலும் பெண் ஜாதகத்தில் ஏழாம் பாவம் கெட்டுவிட்டால் கணவனாலும் தூக்கம் பறிபோகும். மற்றும் நண்பர்களும் நமது தூக்கத்தை சூறையாடிவிடுவார்கள்.
12. சுகஸ்தானமான 4-ம் பாவத்திற்க்கு 7-ம் பாவம் பத்தாம் பாவமாகும். எனவே ஒருவருடைய சுகமும் வேலையின் தன்மையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகும். ஒன்று வலுக்கும்போது மற்றொன்று செயலிழந்துவிடும். ஒருவர் தூக்கத்தையே கதி என்று இருப்பதும் வேலையே கதி என்று இருப்பதும் தீர்மானிப்பது இந்த இருபாவ தொடர்புகளாகும்.
ஜேஷ்டா தேவி கோயில்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானி ஆற்றங்கரை அருகே கெஞ்சனூர் கிராமம் உள்ளது. இங்கு பழமை வாய்ந்த மேகலீஸ்வரி, நேமிலீஸ்வரர் சிவன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஜேஷ்டா தேவியை லலிதாபரமேஸ்வரி என்னும் பெயரில் மக்கள் வணங்கி வருகின்றனர்.
- பத்மாவதி தாயார் கோவிலில் 3 நாள் வருடாந்திர பவித்ரோற்சவம் தொடங்கியது.
- ஆஞ்சநேயருக்கு பவித்ர மாலைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
திருப்பதி:
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நடந்தது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 3 நாள் வருடாந்திர பவித்ரோற்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று அதிகாலை சுப்ர பாதத்தில் மூலவர் பத்மாவதி தாயாரை துயிலெழுப்பி சஹஸ்ர நாமார்ச்சனை, காலை 8.30 மணியளவில் கோவிலில் இருந்து உற்சவா் பத்மாவதி தாயாரை யாக சாலைக்கு கொண்டு வந்து சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது. உற்சவர் முன்னிலையில் கும்ப ஆவாஹனம், சக்ராதி மண்டல பூஜை, சதுஸ்தான அர்ச்சனை, அக்னி பிரதிஷ்டை, பவித்ர பிரதிஷ்டை நடந்தன.
அதைத்தொடர்ந்து மாலை 3 மணியில் இருந்து 4 மணி வரை ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் நடந்த பவித்ரோற்சவ விழாவின் 2-வது நாளான நேற்று முன்தினம் காலை சுப்ரபாதம், தோமால சேவை, சகஸ்ர நாமார்ச்சனை நடந்தது. காலை 6.30 மணியில் இருந்து 8.30 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமியை கோவிலில் இருந்து யாக சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு வைதீக காரியக்கர்மங்கள் நடந்தது. காலை 9 மணியில் இருந்து 11 மணி வரை திருமஞ்சனம் நடந்தது. பின்னர் மூலவர், உற்சவர்கள், துணை சன்னதிகள், பரிவார தேவதைகளுக்கு விமானப் பிரகாரம், கொடி மரம், பலிபீடம், ஆஞ்சநேயருக்கு பவித்ர மாலைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
பவித்ரோற்சவத்தின் 3-வது நாளான நேற்று காலை சுப்ரபாதம், தோமால சேவை, சஹஸ்ர நாமார்ச்சனை நடந்தது. அதன் பிறகு யாகசாலைக்கு உற்சவமூர்த்திகளை கொண்டு வந்து வைதீக காரியக்கர்மங்கள் செய்யப்பட்டன. காலை 10.30 மணியில் இருந்து மதியம் 12.30 மணி வரை திருமஞ்சனம், மாலை 5.30 மணியில் இருந்து 6.30 மணி வரை உற்சவமூர்த்திகள் கோவிலின் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இரவு 7.30 மணியில் இருந்து 9.30 மணி வரை கோவிலின் யாக சாலையில் காரியக்கர்மங்கள், பூர்ணாஹுதி நடந்தது. இதோடு பவித்ரோற்சவம் நிறைவடைந்தது.
- சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, புரட்டாசி 11 (வியாழக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சதுர்த்தசி மாலை 6.46 மணி வரை பிறகு பவுர்ணமி
நட்சத்திரம்: பூரட்டாதி பின்னிரவு 2.50 மணி வரை பிறகு உத்திரட்டாதி
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தா வனத்தில் ஸ்ரீராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன அலங்கார சேவை. ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நலம்
ரிஷபம்-முயற்சி
மிதுனம்-உண்மை
கடகம்-உண்மை
சிம்மம்-நற்சொல்
கன்னி-சுகம்
துலாம்- துணிவு
விருச்சிகம்-ஆக்கம்
தனுசு- நேர்மை
மகரம்-அமைதி
கும்பம்-லாபம்
மீனம்-உறுதி
- ஆன்மாவின் பாவ புண்ணிய கணக்குகள் விசாரிக்கப்படும்.
- நினைத்தாலோ, தரிசித்தாலோ, பெயரைச் சொன்னாலோ முக்தியை கிடைக்கும்.
பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப ஆன்மா பிறப்பதும் மறைவதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பிறப்பெடுத்த ஜீவன் மறைந்ததும் வைகுண்ட வாசலை நோக்கி செல்கிறது. அப்போது அங்கு அந்த ஆன்மாவின் பாவ புண்ணிய கணக்குகள் விசாரிக்கப்படும். அநேக புண்ணியங்களை செய்த ஆன்மா வைகுண்டத்தில் அனுமதிக்கப்பட்டு பரமபதத்தை அடையும். பாவம் செய்த ஆன்மாக்கள் நரகத்துக்கு அனுப்பப்படும் என்பது நம்பிக்கை.
பாவங்கள் செய்த ஆன்மா என்றாலும், பரம்பொருளின் கருணையால், இறுதி வாய்ப்பாக இந்த கேள்வி கேட்கப்படும். 'பூலோக வைகுண்டமாம் திருவெள்ளறையின் திருக்கோபுரத்தை தொலைவிலாவது தரிசித்த புண்ணியம் உமக்குண்டா!' ஆம் என்று அந்த ஆன்மா கூறினால், அந்த ஆன்மா உடனே வைகுண்டத்தில் அனுமதிக்கப்படுமாம்.
நினைத்தாலோ, தரிசித்தாலோ, பெயரைச் சொன்னாலோ முக்தியை அளிக்கும் திருவெள்ளறை கோயில் திருவரங்கத்துக்கு இணையான பெருமை கொண்டது என்பார்கள் பெரியோர்கள். சோழ நாட்டு திவ்ய தேசங்களில் இது நான்காவது திருத்தலம்.
திருமகள் ஷேத்திரம், ஸ்வேதகிரி, நீலிகா வனம், வராகபுரி, உத்தம ஷேத்திரம், ஹித ஷேத்திரம் என்றெல்லாம் போற்றப்படுகிறது திருவெள்ளறை. சிபி மன்னன் காலத்தில் திருமாலோடு 3700 வைஷ்ணவ பெரியோர்கள் வாழ்ந்த தலம் இது.
மாலவனின் பக்தனான சிபி மன்னன் இங்கு வந்திருந்தபோது அவனுக்கு வராஹ மூர்த்தி அருட்காட்சி தந்து ஆட்கொண்டார். அப்போது மார்க்கண்டேய மகரிஷியின் ஆணைப்படி இங்கு திருமாலுக்கு பிரமாண்ட ஆலயம் எழுப்பி வழிபட்டான் சிபி. திருமகள் தவமிருந்து பெருமாளை அடைந்த தலமும் இது. இங்குள்ள பெருமாள் ஸ்ரீபுண்டரீகாட்ச பெருமாள் எனப்படுகிறார். ஆம், அழகிய தாமரை கண்களைக் கொண்டவர் இவர்.
கருவறையில் நின்ற திருக்கோலத்தில், கிழக்கு திருமுக மண்டலமாக காட்சி தருகிறார் ஶ்ரீபுண்டரீகாட்சப் பெருமாள். பெருமாளுக்கு அருகே சூரிய, சந்திரா் சாமரம் வீச, கருடனும் ஆதிசேஷனும் நின்ற திருக்கோலத்தில் பெருமாளை வணங்கிக் கொண்டிருக்கின்றனர். பெருமாளின் திருவடியில் மார்க்கண்டேயர் தவம் செய்யும் கோலத்தில் அமா்ந்துள்ளார்.
திருவெள்ளறை தலத் தீர்த்தமான பூங்கிணற்றில் திருமகள் பங்கஜவல்லி (பங்கயச்செல்வி) தவமிருந்த வேளையில் திருமால் ஆலிலை துயின்ற ஆதிபிரான் கோலத்தில் காட்சி அளித்து திருமகளுக்கு அருள் செய்தார். எனவே ஸ்ரீபுண்டரீகாட்ச பெருமாள் கிருஷ்ணனின் அம்சமானவர் என்றும் கூறப்படுகிறது. பங்கயச் செல்வி, பரிமளதேவி, செண்பகவல்லி என்றெல்லாம் போற்றப்படும் தாயாருக்கே இங்கு எல்லா முதல் மரியாதையும் என்பது இங்கு விசேஷத் தகவல். பெருமாள் வழங்கிய வரத்தின்படி இன்றும் எல்லா உற்சவத்திலும் தாயாரே முன்னே செல்வார். திருமால் அவரைப் பின்தொடர்ந்து செல்வார்.
இத்தலத்து பெருமாளை பெரியாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் 24 பாசுரங்களில் பாடி பெருமை சேர்த்துள்ளார்கள். கூட நிகமாந்த மகாதேசிகரும் மணவாள மாமுனிகளும் மங்களாசாசனம் செய்த தலமும் கூட இது. ஸ்ரீராமானுஜரின் சீடரான எங்களாழ்வார் பிறந்த தலமும் திருவெள்ளறையே. ராமானுஜர் இங்கு வந்தபோது தாயாருக்கு நைவேத்தியம் செய்த பிரசாதத்தை ராமானுஜருக்கு அளித்து பசி போக்கினாராம். அதனால் இன்றும் தாயாருக்கு அமுது செய்யப்பட்ட பிரசாதமே ராமானுஜருக்கு படைக்கப்படுகிறது.
இங்குள்ள சுவஸ்திக் வடிவ திருக்குளமும் உத்தராயன - தட்சிணாயன வாசல்களும் சிறப்பானவை. பெருமாள் சந்நிதிக்கு இரு வாசல்கள் படியேறிச் செல்லும் வகையில் உள்ளன. ஆன்மாக்கள் உய்வு பெற, தை முதல் ஆனி மாதம் வரை உத்தராயன வாசல் வழியாகவும், ஆடி முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயன வாசல் வழியாகவும் சென்று வழிபடும் முறை இன்றும் உள்ளது.
இங்குள்ள புகழ்பெற்ற 'ஸ்வஸ்திக் குளம்' என்ற சக்கரக்குளத்தின் சிறப்பு, ஒரு துறையில் குளிப்பவா்களை எதிர் துறையில் குளிப்பவா்கள் பார்க்க முடியாது என்பதே. ஸ்வஸ்திக் வடிவ நான்கு புறத்திலும் 52 படிகள் உள்ளன. இக்குளத்தினை `நாலு மூலைக்கேணி, மாற்பிடுகு பெருங்கிணறு' என்றும் அழைப்பர்.
ஶ்ரீதேவி, பூதேவி, சூரியன், சந்திரன், ஆதிசேஷன், குபேரன் ஆகியோர் இன்றும் அன்றாடம் இங்குள்ள சுவாமியை வழிபடுவதாக ஐதீகம். திருமகள் தங்கி இருந்த பூங்கிணறு, திவ்ய தீா்த்தம், வராஹ தீா்த்தம், குசஹஸ்தி தீா்த்தம், சந்திர புஷ்கரணி தீா்த்தம், பத்ம தீா்த்தம், புஷ்கல தீா்த்தம், மணிகா்ணிகா என 8 தீர்த்தங்கள் இங்கு உள்ளன.
ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்த ஆலயத்தில் பல்லவமன்னன் தந்திவா்மன் காலத்து (805-ம் ஆண்டு) கல்வெட்டு தொடங்கி விஜயநகர அரசர்கள் காலத்து கல்வெட்டுகள் வரை இந்த ஆலயத்தின் பெருமைகளைக் கூறுகின்றன. வரலாற்று பெருமைகளும் புராண மகிமைகளை கொண்ட இந்த திருவெள்ளரைத் திருத்தலம் திருமகளின் பரிபூரண கடாட்சத்தைக் கொண்டுள்ளது.
அதேபோல் கருணைக் கடலான செந்தாமரைக் கண்ணனாம் புண்டரீகாட்சப் பெருமானின் அருளையும் கொண்டுள்ளது. வாய்ப்பு கிடைப்பவர்கள் திருவெள்ளரைத் திருத்தலத்துக்கு சென்று வாருங்கள். செய்த வினைகள் யாவும் அழிந்து எளிதில் பெருமானின் கருணைக்கு ஆளாகலாம் என்பது ஆன்றோர் வாக்கு.
அமைவிடம்:
திருச்சியில் இருந்து துறையூர் செல்லும் பாதையில் 20 கி.மீ தொலைவில் மண்ணச்சநல்லூர்க்கு அருகில் திருவெள்ளறை திருத்தலம் உள்ளது.
- எறும்புகள் நுழைவதற்காக துளைகளை விட்டு செதுக்கிய சிலை.
- கதவுகல் 120 கூரிய உலோகக் குமிழ்கள் அமைக்கப்பட்டுள்ளன.
உலகத்திலேயே மிகச்சிறிய உயிரினமான எறும்புகள் நுழைவதற்காக துளைகளை விட்டு செதுக்கிய சிலை இந்த கோயிலில் மட்டும்தான் உள்ளது.
தொன்று தொட்டு விளங்கிவரும் தமிழ் பாரம்பரியத்தில் கட்டிடக்கலைக்குப் புகழ்பெற்றவர்கள் தமிழர்கள். தமிழர்களின் கட்டிடக்கலைக்கு மிகப்பெரிய சான்றாக தஞ்சை பெரிய கோயில் உள்ளது. அதைப்போலவே அரிய பொக்கிஷமாகத் திகழும் தாரமங்கலம் கயிலாசநாதர் ஆலயம் உள்ளது. தாரமங்கலம் சேலத்தில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது.
மேற்கு பார்த்தபடி அமைந்த சிவன் கோயில் இது, இந்த பழைமையான சிவன் கோயில் தமிழர்களின் சிற்பக்கலைகளுக்கு மேலும் ஒரு சான்று எனலாம். இந்த கோயிலில் மூலவர் கயிலாசநாதர், தாயார் கற்பகாம்பாள் அருள் பாலிக்கிறார்கள்.
இக்கோயிலிலுள்ள இறைவனை சந்திரனும், சூரியனும் வந்து தொழுது செல்வதாக கூறப்படுகிறது. இந்த ஊருக்கு தாரமங்கலம் என்று பெயர் வரக்காரணம், சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் இங்கு திருமணம் நடந்தது என்றும், திருமால் தாரை வார்த்துக் கொடுத்து மணவிழாவினை நடத்தியதால் 'தாரமங்கலம்' என்ற பெயர் வந்ததென்றும் கூறுவர்.
தல வரலாறு:
கிபி 12-ம் நூற்றாண்டில் கெட்டி முதலியார் இங்கு ஆட்சி செய்து வந்தார். அப்போது பசுக்கள் தினந்தோறும் மேய்ச்சலுக்கு போகும்போது ஒரு பசு மட்டும் குறிப்பிட்ட புற்றினில் தினமும் பால் சுரக்கிறது என்று தகவல் வந்தவுடன் அவர் அந்த புற்றை தோண்டி பார்த்தபோது சிவலிங்கம் காணப்பட்டது. அதனால் அவர் அங்கேயே வழிபாடு செய்ததாகவும் பிறகு வந்த மன்னர்கள் அங்கு கோயில் எழுப்பியதாகவும் வரலாற்றில் கூறப்படுகிறது.
கோயிலின் சிறப்புகள்:
இக்கோயிலிலுள்ள இறைவனை சந்திரனும், சூரியனும் வந்து தொழுது செல்வதாகக் கூறப்படுகிறது. ஆண்டுதோறும் உத்தராயண, தட்சணயான புண்ணிய காலங்களில் மாலை வேளையில் சூரியனின் கதிர்களும், சந்திரன் ஒளியும் சிவலிங்கத்தின் மீது படுகின்றன.
அதாவது, சூரிய ஒளி மூலஸ்தான சிவலிங்க மூர்த்தி மேல் விழுவதை சூரிய பூஜை என்று கூறுவர். சூரியனுடைய கதிர்கள் ராஜகோபுர வாயிலின் வழியே வந்து, நந்தி மண்டபத்தின் ஊடே புகுந்து, பின் மூன்று உள்வாயிலையும் கடந்து சிவலிங்கத்தின் மேல் படுவது அபூர்வமாக கருதப்படுகிறது.
சந்திரனுக்கும், சூரியனுக்கும் தாரகாபதி, தாரகன் என்ற பெயர்கள் இருப்பதால் தாரமங்கலம் என்ற பெயர் உண்டாயிற்று என்றும் கூறுவார்கள். கோயிலில் உள்பிரகார தூண்கள் எல்லாவற்றிலும் அற்புதமான சிற்ப வேலைப்பாடு அமைந்த திருவுருவங்கள் காணப்படுகின்றன. கோயில் என்பது இறைவனின் இருப்பிடம் என்பதைத் தாண்டி மக்களின் 'பாதுகாப்பு அரண்' என்னும் கொள்கையில் இந்தக் கோயில் அமைந்துள்ளது.
எதிரி நாட்டு படை தாக்க வரும்போது பொன், பொருள், மக்களைப் பாதுகாக்கும் வீதம் இந்த கோயில் அமைக்கப்பட்டுள்ளது. ராஜகோபுரம் 90 அடி உயரம் கொண்டது. வாசலில் 20 அடி கொண்ட வேங்கை மரத்தினாலான கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கதவுகளிலும் 60 கூர்மையான உலோகக் குமிழ்கள் வீதம் மொத்தம் 120 கூரிய உலோகக் குமிழ்கள் அமைக்கப்பட்டுள்ளன. யானை வைத்து கதவுகளை உடைக்கும் அந்த காலத்தில் யானை முட்டி மோதி உடைக்கும் போது குத்தி கிழித்துவிடும்படி நுணுக்கமாக இவை அமைக்கப்பட்டுள்ளன.
சிங்கமுகமும் மனித தலையும் கொண்ட யாழியின் வாயில் உள்ள கல் உருண்டையை நாம் எவ்வாறு வேண்டுமானலும் உருட்டலாம் ஆனால் கல்லை வெளியே எடுக்க முடியாது. கோபுரத்தை அடுத்துள்ள சிவப்பு பவளக்கல் படிகளில் 5 நிமிடம் அமர்ந்தாலே போதும் நம் உடலில் உள்ள வெப்பம் தணிந்து விடும். இந்த சிறப்புகள் தமிழ்நாட்டில் எங்கேயும் கிடையாது.
இந்த கோயிலின் கோபுரங்கள் ஒரு தேர் போலவும் யானைகள் குதிரைகள் கட்டி இழுப்பதுபோலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பு.
உலகத்திலேயே மிகச்சிறிய உயிரினமான எறும்புகள் நுழைவதற்காக துளைகளை விட்டு செதுக்கிய சிலை இந்த கோயிலில் மட்டும்தான் உள்ளது. எறும்புகள் நுழைந்து வரும் அளவுக்கு மட்டுமே துவாரம் உள்ள ஒரு மனிதனின் முகம் அமைக்கப்பட்டுள்ளது.
ஊர்ந்து கொண்டிருக்கும் எறும்புகள் அந்த சிற்பத்தின் காது வழியாக உள்ளே சென்று பின்னர் மூக்கு வழியாக வெளியே வரலாம். பிறகு தாடியில் உள்ள துவாரங்கள் வழியே உள்ளே நுழைந்து மறுபக்கம் சென்று மற்றொரு காது வழியாக வெளியே செல்லும் வகையில் நுண்ணிய துவாரங்களைக் கொண்டதாகக் கல்லில் சிலை செதுக்கியுள்ளனர்.
வளைந்த வாளுடனும், நீண்ட தாடி, தலைப்பாகையுடனும் படை எடுத்துவரும் மாலிக்கபூரின் வீரர்கள், அதை எதிர்த்து குறுவாள், கேடயத்துடன் எதிர்கொள்ளும் தமிழக மன்னர்களின் போர்க் காட்சிகள் பல இங்கு செதுக்கப்பட்டுள்ளன.
சோழ, பாண்டிய நாடுகளில் இருந்த செல்வங்களை எல்லாம் கொள்ளையிட்ட பின்னர் அவற்றைத் தன்னுடன் வந்திருந்த யானை மற்றும் ஒட்டகங்களின் மீது பொதி மூட்டையாய் ஏற்றிக் கொண்டு திரும்பிச் செல்லும் காட்சியும் சித்திரங்களாக உள்ளது.
தன்னுடைய தாய் நாட்டுக்குத் திரும்பிச் செல்லும் மாலிக்கபூரை இப்பகுதியில் வழிமறித்துத் தாக்குதல் நடத்த கெட்டி முதலியின் வீரர்கள் போர் வியூகம் அமைத்துள்ள காட்சி.
பின்னர், மதுரையில் கொள்ளையடித்த செல்வங்களை எல்லாம் யானை மற்றும் ஒட்டகங்களின் மீது ஏற்றிக் கொண்டு வந்த மாலிக்கபூரின் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்கள் கொண்டு வந்த செல்வங்களை எல்லாம் கெட்டி முதலியின் வீரர்கள் பறித்துக்கொண்ட பிறகு, முதுகில் சுமையில்லாமல் யானை ஒன்று மாலிக்கபூரோடு செல்வது போன்ற ஒரு காட்சி போன்றவை ஆலயத்தின் சுற்றுச்சுவரில் செதுக்கப்பட்டுள்ளன.
அந்த செல்வங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தைக் காட்டும் வகையில் சில குறிப்புகளை இந்த சித்திரங்களில் காட்டியுள்ளனர். வாழ்வில் கட்டாயம் காண வேண்டிய சிற்பக் களஞ்சியமாக இந்த கோயில் அமைந்துள்ளது.






