என் மலர்tooltip icon

    வழிபாடு

    • சவுபாக்கியங்களையும் அளிக்கக் கூடியது சூல விரதம்.
    • தை அமாவாசை தினத்தன்று அனுஷ்டிக்க வேண்டும்.

    "சகல விதமான சவுபாக்கியங்களையும் அளிக்கக் கூடியது அஷ்ட மகா விரதங்களில் ஒன்றான சூல விரதம். சூல விரதத்தை, சூரியன் மகர ராசியில் இருக்கும் போது அதாவது தை அமாவாசை தினத்தன்று அனுஷ்டிக்க வேண்டும்.

    அன்றைய தினம் அதிகாலையில் விழித்தெழுந்து சூலபாணியாகிய சிவபெருமானை உள்ளத்தில் வணங்கி, வழிபட்டு, வெளியே சென்று, சிவாலயத்திற்குள் இருக்கும் மங்கள தீர்த்தத்தில் நீராடி சந்தியாவந்தனம் முதலிய கர்மாக்களை நியமத்தோடு செய்து, பிறகு உமாதேவியோடு கூடிய சிவபெருமானின் விக்கி ரகத்தை வைத்துக் கொண்டு, அபிஷேகமும், நைவேத்தியமும் செய்ய வேண்டும்.

    பிறகு மத்தியான வேளையில் திருநீறு, ருத்திராட்ச மாலைகளைத் தரித்த சிவபக்தர்களுக்குத் தன் பொருளாதார சக்திக்கு ஏற்றவாறுதானதர்மங்கள் செய்ய வேண்டும்.

    அதன்பின் சிவாலயத்திற்குச் சென்று பிரதட்சிண வழிபாடுகள் செய்து, கோயிலுக்கு நம்மால் முடிந்த காணிக்கையும் செலுத்தி இறைவனை வணங்க வேண்டும். பிறகு சிவ பக்தர்களுடன் அமர்ந்து ஒரே ஒருமுறை மட்டும் உணவு உட்கொள்ள வேண்டும்.

    இப்படியாக இச்சூல விரதத்தை யார் அனுஷ்டிக்கிறார்களோ அவர்கள் தங்களுடைய விரோதிகள் அனைவரையும் வென்று, தீராத கொடிய நோய்களில் இருந்தும் விடுபட்டு தீர்க்காயுள், புத்திரச் செல்வங்கள், தாங்கள் விரும்பிய பொருட்களையெல்லாம் அடைந்து, சகல சவுபாக்கியங்களையும் அனுபவித்து மகிழ்வார்கள். முடிவில் சிவபாக்கியத்தையும் அடைவார்கள்.

    மகாவிஷ்ணு இவ்விரதத்தை அனுஷ்டித்து, தனக்கு ஏற்பட்ட பொல்லாத தலைவலியை நீங்கப் பெற்றார். மேலும் கொடிய அசுரனான காலநேமியைச் சம்ஹாரம் செய்தார்.

    ஜமதக்னி முனிவரின் புதல்வனும், மிக பலசாலியுமான பரசுராமரும் இவ்விரதத்தை அனுஷ்டித்து அதன் மகிமையால் தன் விரோதியும் ராவணனையும் மிஞ்சும் பராக்கிரமசாலியான கார்த்தவீர்யார்ஜுனனைக் கொன்றார். பிரம்மனும் சூல விரதத்தை அனுஷ்டித்து தனக்கு ஏற்பட்டிருந்த கொடிய வயிற்றுவலி நீங்கப்பெற்றான்.

    சுதர்மன் என்பவன் இவ்விரத மகிமையால் மரணத் தையே வென்றான். மேகாங்கன் என்னும் அரசனும் இவ்விரதத்தை கடைபிடித்து அதன் பயனாக வித்வான்களான ஆயிரம் புத்திர, பௌத்திரர்களைப் பெற்றெடுத்து, அளவற்ற போகங்களையும் அனு பவித்து இறுதியில சிவலோகத்தை அடைந்தான்.

    இவர்களைப் போலவே இன்னும் பலர் இவ்விரதத்தை அனுஷ்டித்து தாங்கள் விரும்பியவற்றை அடையப்பெற்று இறுதியில் கயிலாயத்தையும் அடைந்தார்கள். ஆகையினால் மேலான சூல விரதத்தை யார் அனுஷ்டிக்கிறார்களோ, அவர்கள் தம் பகைவர்களை வென்றும், கொடிய நோய்களில் இருந்து நீங்கியும் மேலான நிம்மதியான வாழ்க்கையை அனுபவிக்கலாம. தோஷ நிவர்த்திப் பெறுவார்கள் இன்னும் ஏனைய பாவங்களில் இருந்தும் விடுபட்டு, பரமேஸ்வரரின் திருவருளால் சகல செல்வங்களையும் பெறுவார்கள்.

    • இன்று சுக்கிரனுக்கு உரிய கிழமை.
    • திருமாலுக்கு உரிய சிறந்த நட்சத்திரம் திருவோணம்.

    இன்று சுக்கிரனுக்கு உரிய கிழமை. சந்திரனுக்குரிய திருவோண நாள். திருமாலுக்கு உரிய சிறந்த நட்சத்திரம் திருவோணம். திருவோணத்தான் உலகு ஆளும் என்பார்களே என்று திருவோண நட்சத்திரத்தின் சிறப்பைச் சொல்வார்கள். ஒவ்வொரு திருவோண நட்சத்திரத்திலும் விரதமிருந்து திருமாலை வழிபடுவது பூர்வஜென்ம வினைகளைப் பூண்டோடு ஒழிக்கும். கும்பகோணத்திற்கு அருகே உள்ள ஒப்பிலியப்பன் கோயில் போன்ற சில தலங்கள் திருவோணத்தின் சிறப்பை சொல்லும் தலங்களாகும். அனேகமாக எல்லா பெருமாள் கோயில்களிலும் திருவோணச் சிறப்பு வழிபாடுகளும், திருமஞ்சனமும் நடைபெறும்.

    சில கோயில்களில் உள்பிரகாரப் புறப்பாடும் உண்டு. இன்றைய தினம் காலை எழுந்து சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு திருவோண விரதத்தை ஆரம்பிக்க வேண்டும் மாலையில் துளசிமாலை யோடு சென்று அருகில் உள்ள பெருமாள் கோயிலில் விளக்கேற்றி தரிசனம் செய்துவிட்டு வீட்டிற்கு வந்து பூஜை அறையில் விளக்கேற்றி சுவாமியை வணங்கி பாலோ பழமோ நிவேதனம் செய்து விரதத்தை முடிக்க வேண்டும்.

    • ஸ்ரீதேவி பாகவதத்தை சிரவணம் செய்தால் தோஷங்கள் விலகி விடும்.
    • பாவ, புண்ணியங்கள் தான் நம் வாழ்வை தீர்மானிக்கும் சக்திகள்.

    நமது முன்னோர்கள் எத்தகைய பாவ, புண்ணியம் செய்தார்கள் என்பது நமக்கு தெரியாது. ஆனால் அந்த பாவ, புண்ணியங்களும் நம் வாழ்வை தீர்மானிக்கும் சக்திகளுள் ஒன்றாகத்திகழ்கின்றன.

    ஒரு வேளை நம் முன்னோர்கள் படுபாதக செயல்கள் செய்திருந்தால், அது மறைமுகமாக நம்மை வெகுவாகத் தாக்க கூடும். இத்தகைய பாதிப்புகளில் இருந்து நம்மை நாம் தற்காத்து கொள்ள ஸ்ரீதேவி பாகவதம் உதவுகிறது.

    ஸ்ரீதேவி பாகவதத்தை சிரவணம் செய்தால் நம் முன்னோர்கள் செய்த பாவங்களும், அதனால் ஏற்பட்ட தோஷங்களும் விலகி விடும். இதன் பின்னணியில் ஒரு கதை உள்ளது. அந்த கதை வருமாறு:-

    திருதராஷ்டிரின் மகன்களான 100 கவுரவர்களுக்கும் பாண்டு மன்னனின் மகன்களான பஞ்ச பாண்டவர்களுக்கும் இடையே போர் ஏற்பட்டது. அந்த போரில் பஞ்சபாண்டவர்கள் பக்கம் நின்ற கிருஷ்ணபகவான் அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்து பாண்டவர்களின் வெற்றிக்கு கை கொடுத்தார்.

    பாண்டவர்களின் வெற்றியை அசுவத்தாமனால் பொறுக்க இயலவில்லை. அவர்கள் மீது அபாண்ட அஸ்திரத்தை பிரயோகித்தான். அதனால் இரு குலத்தாருக்கும் ஒரே சந்ததியாக இருந்த உபபாண்டவர் கருகி ஓர் பிண்டமாக கீழே விழுந்து விட்டார்.

    அப்பிண்டத்தை இறைவன் ஸ்ரீகிருஷ்ணன் எழுப்பி பரிஷத் எனும் அரசனாக மாற்றினான். அவன் தன் கர்வத்தினால் தியான நிஷ்டையில் இருந்த ஓர் முனிவரின் கழுத்தில் செத்த பாம்பை போட்டான். முனிவர் அவனுக்கு மரண சாபமிட்டார்.

    இதனால் பயந்து போன பரிஷத் மன்னன் கங்கை நதியின் நடுவில் அரண்மனை கட்டி, பாதுகாப்புடன் இருந்தான். ஆனால் விதி யாரை விட்டது, எலுமிச்சை பழத்தில் ஒரு புழு உருவில் வந்து பாம்பாக மாறி பரீஷத் மகாராஜாவை கொன்றது. இதனால் பரிஷத் மகாராஜாவின் ஒரே மகன் ஜனமோஜயன் கோபம் கொண்டு வெகுண்டெழுந்து சர்ப்ப யாகம் செய்யத் தொடங்கினான்.

    ஆனால் யாகம் பாதியில் நின்று விட்டது. `என் தாத்தாவின் தந்தை யுதிஷ்டிரர் தொடங்கிய யாகம் பாதியில் சிசுபாலனின் இறப்பால் நின்று விட்டது. இப்போது நான் செய்யும் சர்ப்பயாகமும் பாதியில் நின்று விட்டது. என் தந்தையோ மோட்சத்திற்கு இடமின்றி தவிக்கின்றார். என் குடும்பத்து பாவ தோஷங்களை எப்படி நீக்குவது, என் தந்தையின் ஆத்மா வை எப்படிக் கரையேற்றுவது? என்று தவித்தான்.

    அப்போது ஸ்ரீதேவி பாகவதத்தின் மகிமையை குரு மூலம் அறிந்தான். உடனே ஜனமேஜயன் தேவிபாகவத கதையை சிரவணம் செய்தான். இதனால் அவனது முன்னோர்களின் பாவங்கள் நீங்கியது. சிரவணம் முடித்த பிறகு ஸ்ரீதேவி யக்ஞத்தினை முடித்தாள்.

    உடனே 'ஜனமேஜயா, உன் வம்சத்து பாவங்கள் நீங்கி விட்டன' என்று அசரீரி குரல் எழும்பியது. எனவே நம் குடும்பத்தில் எத்தகைய பாவ காரியங்கள் அறிந்தோ, அறியாமலோ நம் முன்னோர்கள் செய்திருந்தாலும் ஸ்ரீதேவி பாகவதம் அவற்றைப் போக்கி விடும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    • திருப்போரூர் முருகப்பெருமாள் கிளி வாகன சேவை.
    • மதுரை மீனாட்சி அம்மன் வைரக்கிரீடம் சாற்றியருளல்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, தை 26 (வெள்ளிக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சதுர்த்தி காலை 7.52 மணி வரை. பிறகு அமாவாசை நாளை விடியற்காலை 4.34 மணி வரை. பிறகு பிரதமை.

    நட்சத்திரம்: திருவோணம் நள்ளிரவு மணி 12.23 வரை பிறகு அவிட்டம்.

    யோகம்: மரண/சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று தை அமாவாசை. திருவோண விரதம். ராமேசுவரம், வேதாரண்யம், திருவள்ளூர் தலங்களில் பித்ரு தர்ப்பணம் செய்வது நன்று. மதுரை மீனாட்சி அம்மன் வைரக்கிரீடம் சாற்றியருளல். நெல்லை, தென்காசி, சங்கர நயினார்கோவில் தலங்களில் லட்சத்தீப காட்சி. வேதாரண்யம், சிவபெருமான் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சன சேவை, மாலையில் ஊஞ்சல் சேவை. திருமஞ்சன சேவை, மாடவீதி புறப்பாடு திருப்போரூர் முருகப்பெருமாள் கிளி வாகன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பண்பு

    ரிஷபம்-ஆக்கம்

    மிதுனம்-வரைவு

    கடகம்-கவனம்

    சிம்மம்-வெற்றி

    கன்னி-செலவு

    துலாம்- ஜெயம்

    விருச்சிகம்-முயற்சி

    தனுசு- பொறுமை

    மகரம்-போட்டி

    கும்பம்-கடமை

    மீனம்-கண்ணியம்

    • தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது.
    • சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும்.

    தஞ்சாவூா்:

    தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது. கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்வதுடன் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. பெரிய கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    ஆண்டு தோறும் பெரிய கோவிலில் சித்திரை திருவிழா, சதயவிழா, ஆஷாட நவராத்திரி விழா உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதில் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது. ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி பெரியநாயகி அம்மன் சன்னதி வளாகத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    அதன் பின்னர் பந்தக்காலுக்கு பால், தயிர், மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு அபிசேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழில் தேவாரம், திருமுறைகள் பாடி பந்தக்கால் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    இதில் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர்கள் மாதவன், மணிகண்டன் மற்றும் சிவாச்சாரியார்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். சித்திரை திருவிழாவுக்கான கொடியேற்றம் ஏப்ரல் மாதம் 6-ந்தேதி ஏற்றப்படுகிறது. அன்றிலிருந்து தொடர்ந்து 18 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    ஏப்ரல் 18-ந் தேதி பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் 20-ந் தேதி நடைபெறுகிறது. 23-ந் தேதி கொடி இறக்கத்துடன் சித்திரை திருவிழா நிறைவுபெறும்.

    • தவக் காலம் வருகிற 14-ந்தேதி முதல் தொடங்குகிறது.
    • கிறிஸ்தவர்கள் உபவாசம் இருந்து ஜெபிப்பார்கள்.

    சென்னை:

    கிறிஸ்தவர்களின் தவக் காலம் வருகிற 14-ந்தேதி முதல் தொடங்குகிறது. இயேசு வனாந்தரத்தில் நோன்பு இருந்த 40 நாட்களை நினைவு கூர்ந்து கிறிஸ்தவர்கள் உபவாசம் இருந்து ஜெபிப்பார்கள். இந்த காலத்தை தவக் காலம், தபசு காலம், இலையுதிர் காலம் என்று கூறுவது உண்டு.

    40 நாட்கள் கிறிஸ்தவர் கள் நோன்பு இருந்து தம்மை தாமே வெறுத்து தங்களுக்கு பிடித்த காரியங்களை தவிர்த்து ஆண்டவனை தியானிப்பார்கள். உண்ணும் உணவு, உடைகள் போன்ற அலங்காரங்களை தவிர்த்து பிறருக்கு உதவி செய்து ஆன்மீக வலிமையை இக்காலக் கட்டத்தில் பெறுவார்கள்.

    தவக்காலத்தின் முதல் நாளான சாம்பல் புதன்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இது யூதர்களின் பாரம்பரியம். காலப்போக்கில் அனைத்து திருச்சபைகளும் `சாம்பல் புதன்' நாளை பின்பற்றி வருகிறார்கள்.

    குறிப்பாக கத்தோலிக்க திருச்சபை மக்கள் ஓலையினால் ஆன சிலுவையை எரித்து அதன் சாம்பலை நெற்றியில் பூசிக் கொள்வது வழக்கம். தவக்காலத்தின் தொடக்க நாளான சாம்பல் புதன் கிழமை வருகிற 14-ந்தேதி அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் கிறிஸ்தவ ஆலயங்களில் காலையிலும் மாலையிலும் சிறப்பு ஆராதனை நடைபெறும்.

    அதனைதொடர்ந்து 6 வெள்ளிக்கிழமைகள் சிறப்பு வழிபாடு நடைபெறும். இயேசு உபவாசம் இருந்த தபசுக் காலத்தில் கிறிஸ்தவர்கள் கஷ்ட நாட்களாக கருதி அனைத்து வழிபாடுகளிலும் எளிமையாக பங்கேற்பார்கள். ஏழைகளுக்கு உதவி செய்யும் தியாக நாட்களாக இவை பின்பற்றப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து புனித வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்படும் அந்த நாட்களை நினைவு கூர்ந்து புனிதவாரம் அனுசரிக்கப்படுகிறது. பெரிய வியாழன், புனித வெள்ளியை தொடர்ந்து இயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மார்ச் மாதம் 31-ந்தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

    • பித்ரு வழிபாடு செய்ததற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.
    • மக்களிடம் பித்ருக்கள் மீதான நம்பிக்கை இருக்கிறது.

    ஒருவர் மரணம் அடைந்த பிறகு, அவர் ஆத்மா என்ன ஆகிறது? எங்கு போகிறது? எப்போது மறுபிறப்பு எடுக்கிறது? இந்த கேள்விகளுக்கு உலகம் முழுவதும் மாறுபட்ட, முரண்பட்ட தகவல்களே பதில்களாக உள்ளன. ஆன்மா மீது நம்பிக்கை இல்லாதவர்கள் அவற்றை கண்டு கொள்வதில்லை.

    ஆன்மா மீது முழு நம்பிக்கை வைத்திருப்பவர்கள், மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்று அழைத்து உரிய மரியாதை, பூஜை செய்து வழிபடுகிறார்கள். உலகில் பெரும்பாலான மக்களிடம் பித்ருக்கள் மீதான நம்பிக்கை இருக்கிறது.

    சங்க காலத்துக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த தமிழர்கள், பித்ரு வழிபாடு செய்ததற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. பித்ரு வழிபாட்டை ஆதி தமிழர்கள் இறை வழிபாட்டுக்கு நிகராக கடை பிடித்தனர்.

    ஒரு வருடத்தை அயனம், பருவம், மாதம், பட்சம் (15 நாட்கள்), வாரம், நாள், ராசி, திதி, யோகம், கரணம் என பல விதமாக நம் மூதாதையர்கள் கணக்கிட்டு, மிக, மிக துல்லியமாக பித்ரு வழிபாடு செய்தனர். ஒவ்வொரு மாதமும் நாள், ராசி, திதி ஆகியவை ஒன்று சேருவதை கணக்கிட்டு பூஜைகள், விரதங்களை மேற்கொண்டனர்.

    அவர்களது இத்தகைய துல்லியமான கணக்கீடுதான் அவர்களுக்கு 100 சதவீதம் முழுமையான பலன்களைப் பெற்றுக் கொடுத்தது. அந்த வரிசையில்தான் தை அமாவாசை தர்ப்பண வழிபாட்டை ஏற்படுத்தி இருந்தனர்.

    மகாளய பட்சத்தின் 15 நாட்களும் மறைந்த முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இன்று பூலோகத்துக்கு வருவதை கணக்கிட்டு பித்ருக்கள் பசியாற தர்ப்பணம் கொடுக்கும் நடைமுறையை ஏற்படுத்தினார்கள்.

    • அன்னதானம் செய்வதுடன், ஆடை தானமும் செய்கிறார்கள்.
    • முன்னோர்கள் தெய்வமாக நம்முடன் இருப்பார்கள்.

     திருச்சிக்கு அருகில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில், தை அமாவாசை அன்று புதிய வட்டமான மூங்கில் தட்டில் வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழங்கள், மலர்ச்சரங்கள், வாழைக்காய், பூசனிக்காய் வைத்து, அதனை கோவில் அர்ச்சகரிடம் கொடுத்து அம்மன் சன்னதியில் சமர்ப்பிக்கிறார்கள். மறைந்த தங்கள் பெற்றோரின் பெயர், நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்யச் சொல்கிறார்கள்.

    பிறகு, பூஜை செய்யப்பட்ட அந்தத் தட்டினை வயதான ஒருவரிடம் தட்சினை (பணம்) கொடுத்து சமர்ப்பிக்கிறார்கள். அல்லது வயதான சுமங்கலியிடம் கொடுத்து, அவர்கள் கால்களில் விழுந்து ஆசி பெறுகிறார்கள். வசதி படைத்தோர் அன்று அன்னதானம் செய்வதுடன், ஆடை தானமும் செய்கிறார்கள். இதேபோல் சில கோவில்களில் இந்த பிதுர் பூஜை நடைபெறுகிறது.

     தஞ்சையில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்கு செல்லும் பாதையில், கண்டியூரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது திருப்பூந்துருத்தி. இந்த தலமும் அமாவாசை தினத்தன்று பித்ருபூஜை செய்ய ஏற்ற தலம் என்பார். இத்தலத்தில் கவுசிக முனிவரின் வேண்டுகோளுக்கேற்ப, காசி கங்கை உள்பட பதின் மூன்று கங்கைகளும் பதின்மூன்று இடங்களில் பீறிட்டு வந்தனவாம்.

    மேலும் அமாவாசையன்று இறைவன் இத்தலத்தில் தோன்றியதால், அந்த நாளில் இங்கு வழிபாடு செய்தால் பிதுர்தோஷம் நீங்கும். முன்னோர்கள் தெய்வமாக நம்முடன் இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

     இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல், தற்போது சதுரகிரி மலையிலுள்ள சுந்தர மகாலிங்கர் ஆலய அமாவாசை விழா விளங்குகிறது. சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் என ஈசன் இரண்டு சிவலிங்க மூர்த்தங்களாக கோவில் கொண்டுள்ள இத்தலத்தில் ஒவ்வொரு அமாவாசையும் பவுர்ணமியும் மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. தை அமாவாசை மிகவும் போற்றப்படுகிறது.

    அந்த நாளில் இந்த மலை உச்சியில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ள அமாவாசைக்கு ஒரு நாள் முன்னதாகவே பக்தர்கள் தகுந்த உணவு, தேவையான மருந்து, மாத்திரையுடன் வந்து விடுகிறார்கள்.

    அடிவாரத்தில் இருந்து சுமார் நான்கு மணி நேரம் மலையில் நடந்து சென்று மகாலிங்க சுவாமியைத் தரிசித்த பிறகு தங்கள் துன்பங்களும் பாவங்களும் நீங்கியதாக உணர்கிறார்கள். தை அமாவாசையன்று நடைபெறும் பிதுர் பூஜைக்குரிய பொருட்களை மலையடிவாரத்தில் இருந்தே வாங்கிச் சென்று இறைவனின் சந்நிதியில் சமர்ப்பித்து தங்கள் முன்னோர்களையும் மறைந்த பெற்றோர்களையும் நினைவு கூர்ந்து வழிபடுகிறார்கள். இதனால் அவர்களின் ஆசி கிட்டும் என்பதுடன் பிதுர்தோஷமும் விலகிவிடும்.

    • தெய்வமே முதல் பித்ரு காரியம் செய்தவர்.
    • வராகர் பிண்டம் வைத்து பித்ரு காரியம் செய்தார்.

    தெய்வமே முதல் பித்ரு காரியம் செய்தவர் என்று மகாபாரதம் கூறுகிறது. இதை -நாராயணர், நாரதருக்குச் சொல்வதாக வருகிறது.

    வராக அவதாரத்தில் பூமியைக் கடலில் இருந்து வெளியே கொண்டு வந்த போது, மத்தியானம் வந்து விட்டது. மத்தியா நிஹம் செய்ய வேண்டி வராகர் ஆயத்தம் செய்த போது, தெற்றுப்பல்லில் கொஞ்சம் மண் ஓட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்தார். தலையை ஆட்டி அவர் உதறின போது அவை மூன்று உருண்டையாக பூமிக்குத் தென்புறத்தில் போய் விழுந்தன. அவையே மூன்று தலைமுறை பித்ருக்களாக ஆகினர்.

    அவர்களுக்கு வராகர் பிண்டம் வைத்து பித்ரு காரியம் செய்தார். பித்ரு காரியத்தை ஸ்தாபித்தவரும் அவர்தான். அதை நடத்தி உலகக்கு வழி காட்டியரும் அவர்தான். சரீரம் இல்லாதவர்களுக்குப் பிண்டம் தர வேண்டும் என்றும், பித்ருக்களுக்குத் தருவது தன்னையே அடைகிறது என்றும் வராகர் எடுத்துரைத்தார்.

    பூமி எங்கிலும் நீர் நிறைந்திருந்த போது, நிலப்பகுதிகளை வெளியே கொண்டு வந்த அந்த இறை சக்தி, வராகம் எனப்பட்டது. குகை போன்ற பூமிக்குள் நுழைந்து, அதை வெளியே கொண்டு வந்ததால் அந்த தெய்வம் கோவிந்தன் எனப்பட்டது.

    கோ என்றால் பூமி, அவிந்தம் என்றால் அதை அடைந்து வெளிக்கொணருதல் என்று பொருள். கோவிந்தா என்றால் இருளாகிய குகையில் இருந்து, நம்மை வெளிக் கொண்டு வருபவன் என்று பொருள். பூமியை வெளியே கொண்டு வந்தவுடன் உலகத்தினருக்கு என்ன செய்ய வேண்டும் என்று தர்மத்தை உபதேசிக்கவே அவர் வ்ரிஷாகபி எனப்படுகிறார். அவர் சொன்ன முக்கிய போதனை தர்மம் பித்ருகாரியம் செய்ய வேண்டும் என்பதே.

    • 500 வருடங்களுக்கு மேலான மிகவும் பழமையானது.
    • நெய் தீபம் மட்டுமே ஏற்றப்படும் என கூறப்படுகிறது.

    500 வருடங்களுக்கு மேலான மிகவும் பழமையானது மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில். மதுரையை ஆட்சி செய்த நாயக்கர் காலத்தில் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது தேவதானப்பட்டி. அந்த பகுதியில் அடர்ந்த வனப்பகுதியாக இருந்த போது வங்கிசாபுரி எனும் பகுதியை ஒரு ஜமீன் ஆண்டு வந்தார். அவர் பெயர் பூசாரி நாயக்கர்.

    கோயில் வரலாறு:

    இந்த ஜமீனில் இருந்த மாடுகள் வனப்பகுதியில் உள்ள உணவுக்காக தினமும் அனுப்பி வைக்கப்படும். அப்படி தினமும் அனுப்பிவைக்கப்படும் மாடுகள் சென்று திரும்பும்போது ஒரு மாடு மட்டும் தனியாக வனப்பகுதிக்குள் செல்வதை தினந்தோறும் வாடிக்கையாக வைத்திருந்தது, இதனை பார்த்த மாடு மேய்ப்பவர் ஒருவர் ஒருநாள் அந்த மாடு பின்பு தொடர்ந்து சென்ற போது அந்த மாடு ஒரு புற்றுக்குள் பால் பீச்சிக்கொண்டிருப்பதை பார்த்து மேய்ப்பாளர் அதிர்ச்சி அடைந்தார். அப்போது அவருக்கு கண் பார்வை பறிபோனதாக கூறப்படுகிறது.

     மூங்கில் அணை:

    உடனே மாடு மேய்ப்பாளர் இந்த சம்பவம் குறித்து ஜமீன்தாரிடம் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. ஜமீன்தார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுகொண்டிருந்த போது சம்பந்தப்பட்ட பகுதியில் சென்று பார்த்தபோது ஏதோ தெய்வ குற்றம் செய்ததாக அவருக்கு தோன்றியதாக கூறப்படுகிறது. அப்போது அந்த இடத்தில் ஒரு அசரீரியாக ஒரு பெண்ணின் குரல் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

    அசரீரியில்தான் இந்த பகுதியில் முன்பு ஆட்சி செய்ததாகவும் அரக்கனை வதம் செய்துவிட்டு அமைதியாக இருக்கும் இந்த வனப்பகுதியிலேயே தான் தங்கி விட்டதாகவும் பெண்ணின் அசரீரி குறல் கூறியதாக கூறப்படுகிறது. அசரீரியின் இந்த பகுதியில் உள்ள மஞ்சள் ஆற்றில் ஒரு பெட்டி வரும் எனவும் அந்த பெட்டியை மூங்கில்அணை கொண்டு தடுத்து நிறுத்தி இந்த ஆற்று அருகிலேயே பெட்டியை வைத்து பூஜை செய்து வழிபடுமாறு கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

    கெட்டுப்போகாத நெய்:

    அதனைத் தொடர்ந்து இந்த கோவில் உருவாக்கப்பட்டதாகும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த கோவில் அருகே குடியிருப்புகள் ஏதும் இருக்க கூடாது என கூறப்படுகிறது. இந்த கோவில் கருவறைக்குள் இதுவரை யாரும் சென்றதில்லை எனவும், கருவறையில் வெளியே இருக்கும் கதவை காமாட்சி அம்மனாக தரிசித்து வருகின்றதாக கூறப்படுகிறது.

    மேலும் இந்த கோவிலில் தேங்காய் உடைக்கப்படும் வழக்கம் இல்லை எனவும் நெய் தீபம் மட்டுமே ஏற்றப்படும் என கூறப்படுகிறது. குறிப்பாக இந்த கோவிலில் அருகே உள்ள ஒரு மண் குடுவையில் உள்ள நெய் இது வரையில் கெட்டுப்போகாதவாறு பல நூற்றாண்டுகளாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.

    இந்த நெய்யில் எறும்பு, ஈ போன்ற எதுவும் அண்டாதது ஒரு அதிசயமாக பார்க்கப்படுகிறது. இந்த கோவிலின் கருவறை உள்ளே குடிசையாக பல நூற்றாண்டுகளாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. பல்வேறு அதிசயங்கள் அடங்கிய இந்த கோவிலுக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு அடுத்த ஆன்மிக தலமாக இங்குள்ள மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில் பிரசித்திபெற்று விளங்குகிறது.

    • பிதுர் வழிபாட்டிற்கு புண்ணியமான தினம்.
    • அமாவாசைத் திதிக்கு அதிக சிறப்பு உண்டு.

    தை மாதத்தில் மகர ராசியில் சஞ்சரிக்கும் சூரியன். சந்திரன், பூமி ஆகிய இருகிரகங்களுடன் ஒரு நேர் கோட்டில் (0 பாதையில்) அமையும் தினமே தை அமாவாசை திதியாக அனுஷ்டிக்கப் பெறுகின்றது.

    சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர். சந்திரன் மனதுக்கு அதிபதியானவர். இதனால் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பனவற்றை எல்லாம் தரவல்லவர்.

    சூரியனைப் `பிதுர் காரகன்' என்றும், சந்திரனை `மாதுர் காரகன்' என்றும் சோதிடம் கூறுகின்றது. அதனால் சூரியனும் சந்திரனும் பிதா-மாதாவாக வழிபடும் தெய்வங்களாக இந்துக்கள் கருதுகின்றனர்.

    இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, பவுர்ணமி தினங்களில் வழிபட வேண்டும். அமாவாசை தினத்தில் தந்தையை இழந்தவர்களும், பவுர்ணமி தினத்தில் அன்னையை இழந்தவர்களும் வழிபடுவது புராதன காலம் தொட்டு பின்பற்றிவரும் ஒரு வழக்கமாகும்.

    அமாவாசை திதி, மாதா மாதம் நிகழ்ந்தாலும் அவற்றுள் தைமாதத்திலும், ஆடி மாதத்தில் வரும் அமாவாசைத் திதிக்கு அதிக சிறப்பு உண்டு.

    இந்துக்கள் ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உள்ள ஆறு மாதம் உத்தராயண காலம் என்றும், ஆடி முதல் மார்கழி வரை உள்ள காலம் தட்சணாயன காலம் என்றும் அழைப்பர். உத்தராயண கால ஆரம்ப மாதமாக தை மாதம் வருவதால் தை அமாவாசையும், தட்சணா கால ஆரம்ப மாதமாக ஆடி மாதம் வருவதால், ஆடி மாதத்தில் வரும் அமாவாசைத் திதி பிதுர் வழிபாட்டிற்கு புண்ணியமான தினம் என சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.

    பிதிர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதுர்களின் தோஷங்களில் இருந்து தோஷ நிவர்த்தி பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

    அமாவாசை, பவுர்ணமி ஆகிய இரண்டு விரதங்களும் முறையே காலமான தந்தை, தாய் ஆகியோரைக் குறித்து அவர்களின் (சந்ததியினரால்) பிள்ளைகளால் அனுட்டிக்கப்படும் விரதங்கள் ஆகும். ஒவ்வொரு மாதத்திலும் இந்த விரதங்களுக்குரிய தினங்கள் வருகின்றன. இவ்விரதங்களை அனுஷ்டிப்பவர்கள் ஆசார சீலர்களாக உபவாசம் இருந்தும் அவ்வாறு இருக்க இயலாதவர் ஒரு பொழுது உண்டும் அனுஷ்டிப்பர்.

    இத்தினத்தில் புண்ணியத் தீர்த்தங்களில் நீராடித் தூய்மையாராய் பிதிர், தருப்பணம் செய்தும் பிண்டதானம், சிரார்த்தம் செய்தும் இறைவனை வழிபட்டும் தானமும், விருந்தினர், சுற்றந்தார், ஏழைகள், ஆதரவற்றோர் ஆகியோருக்கு உணவும் அளித்தும் அவர்களுடன் போசனம் செய்து விரதக் கொள்கையுடன் இருப்பர். இறந்த தந்தை, தாயார் நற்கதி அடைதற் பொருட்டும், பிதிகளாக எம்மைச் சுற்றும் அவர்களை மகிழ்வித்து அவர்களின் ஆசி பெறவும் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் பிள்ளைகள் விரதங்களை அனுஷ்டிக்கிறார்கள். பிதிர்கள் மகிழ்வுற்றால் அம்மனை சிறக்கும் என்பது ஐதீகம்.

    யாழ்ப்பாணத்தில் சிறப்பான நாட்கள் (கனத்த நாட்கள்) என அழைக்கப்படும் விளக்கீடு, தீபாவளி போன்ற தினங்களில் "வீட்டுக்குப் படைத்தல்" என்னும் நிகழ்வு வழக்கத்தில் உள்ளது. அண்மையில் யாரவது அந்த வீட்டில் இறந்திருந்தால் தவறாது வீட்டுக்குப் படைத்து பிதிர்களை மகிழ்விப்பர்.

    சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமியும், ஆடி, தை மாதங்களில் வருகின்ற அமாவாசையும் சிறப்புப் பொருந்தியன என்று சைவ நுல்கள் கூறுகின்றன.

    இரு வேறு சக்திகளான சூரியன், சந்திரன் ஒன்றாக இணையக் கூடிய நாளே அமாவாசையாக கொள்ளப்படுகிறது. எல்லா திதியிலும், ஏதாவது ஒரு கிரகம் திதி தோஷம் (வலுவிழப்பது) அடையும். ஆனால் அமாவாசை தினத்தன்று எந்தக் கிரகமும் திதி தோஷம் பெறுவதில்லை.

    இதன் காரணமாக அமாவாசை திதியில் சில விஷயங்களை மேற்கொள்ளப்பட்டால் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைய முடியும். மருந்து உண்ணுதல், நோயாளிகள் குளித்தல் உள்ளிட்ட பல விஷயங்களை அமாவாசை திதியன்று துவங்கலாம் என சித்த நூல்கள் கூறுகின்றன. எந்த ஒரு பரிகாரமாக இருந்தாலும் அமாவாசையன்று செய்தால் அதற்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். ராகு-கேது பரிகாரம், சர்ப்பதோஷம், சனி, செவ்வாய் கிரகங்களால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் இந்த மாதிரியானவற்றிற்கு அமாவாசை திதியன்று பரிகாரம் செய்வது நல்லது.

    சங்க காலத்திலும் இதுபோன்ற விடயங்களும் நடைமுறையில் இருந்துள்ளது. முன்னோருக்கு திதி செய்வது, தர்ப்பணம், ஆற்றில் புனித நீராடுவது போன்றவை அமாவாசை தினத்தில் மேற்கொள்ளப்பட்டதை சங்க கால நூல்களும் உறுதி செய்துள்ளன.

    மனிதப் பிறவி மகத்தான பிறவி. மனிதனாகப் பிறந்தால் தான், இறைவனை எளிதில் அடைய முடியும். வேறு எந்தப் பிறவிக்கும், இந்த சிறப்பு கிடையாது. வானுலகில் தேவராக இருந்தாலும் கூட, இறைவனைத் தரிசிக்கத்தான் முடியுமே ஒழிய, அவரோடு இரண்டறக் கலக்க முடியாது.

    ஆக, இத்தகைய அரிய மானிடப்பிறவியைத் தந்த நம் முன்னோருக்கு, நன்றி தெரிவிக்க வாரிசுகள் நடத்தும் ஒரு விழாவாக அமாவாசை, பவுர்ணமியை எடுத்துக் கொள்ளலாம். சூரியனின் வடக்கு திசை பயணம் துவங்கும் உத்ராயண காலத்தின் துவக்கமான தை மாதம், மிகவும் புனிதமானது. அந்த மாதத்தில் வரும் அமாவாசையில், கடற்கரை தலங்களுக்குச் சென்று, முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வணங்குதல் மானிடராக பிறந்த ஒவ்வொருவரது ஆன்மீகக் கடமையாகும். இந்த கடமையை தவறவிடாதீர்கள்.

    • மதுராவை கண்ணன் ஆட்சி செய்தான்.
    • துவாரகை கடலில் மூழ்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.

    கண்ணனாக பிறக்க திருமால், தேர்ந்தெடுத்த திருத்தலம் வட மதுரை. இந்த ஊர் கிருதாயுகத்தில் வாமனரின் ஆசிரமமாகவும், திரேதாயுகத்தில் சத்ருக்கனனால் ஆளப்பட்ட இடமாகவும் இருந்தது. கண்ணனுக்கு பல திருப்பெயர்கள் இருப்பினும் மதுரையார் மன்னன்' எனும் பெயர் மிகவும் சிறப்பானது. வடமதுரையை தலைநகராகக் கொண்டே யாதவர்கள் ஆண்டு வந்தனர்.

    வசுதேவர், அயர்ந்திருந்த யசோதைக்கு அருகில் கண்ணனை விட்டு, அவள் பெற்றிருந்த பெண் குழந்தையை எடுத்து வந்து கம்சனிடம் கொடுத்தார். தேவகி மகனாய் பிறந்தவன், கோகுலத்தில் யசோதையின் மகனாய் வளர்ந்தான். கோகுலத்தின் செல்லப் பிள்ளையாகவும் சிறந்தான். தன்னை அழிக்க வந்த கண்ணன் உயிரோடு இருப்பது அறிந்து, கம்சன் அனுப்பிய அனைத்து அகரர்களும் அழிந்தனர்.

    கண்ணனுக்கு வயது பத்து. 'கண்ணனை மதுரைக்கு அழைத்து வந்து கொல்வோம்' என்று மாமன் கம்சன் திட்டமிட்டான். அக்ரூவரைக் கோகுலத்துக்கு அனுப்பினான். கற்றறிந்தவரான அக்ரூவர், கண்ணன் யார் என்பதை அறிந்து கொண்டார். அவனை கட்டித் தழுவினார். இறுதியில் கம்சன் சொன்ன செய்தியைக் கூறினார்.

    மதுரைக்குள் தேர் நுழைந்தது. கம்சன், கண்ணனை அழிக்க முதலில் குவாலயபீடம் எனும் மதம் பிடித்த யானை, அதற்கு தப்பினால் முஷ்டிகன் - சானுரன் எனும் மல்லர்கள். இறுதியில் நாமே கொல்லலாம் என்று திட்டமிட்டிருந்தான். ஆனால் வழியிலேயே குவாலயபீடம் என்ற யானையின் தந்தத்தை முறித்து அழித்தான் கண்ணன்.

    பின்னர் கம்சனின் இருப்பிடம் சென்று மல்லர்களுடன் போரிட்டு அவர்களையும் வீழ்த்தினான். இறுதியில், உயர்ந்த மாடத்தில் அமர்ந்திருந்த கம்சனிடம் நேராக சென்று, அவன் கிரீடத்தைத் தள்ளி, அவனையும் பூமியில் தள்ளினான். அவன்மேல் அமர்ந்து நெஞ்சில் மீண்டும் மீண்டும் ஒங்கிக் குத்தினான். நெஞ்சில் சிறிதும் ஈரமில்லாத கம்சன் அழிந்துபோனான்.

    பின்னர் மதுராவை கண்ணன் ஆட்சி செய்தான். அந்த நேரத்தில் மகதநாட்டு மன்னன் ஜராசந்தன் பலமுறை படையெடுத்து மதுராவை தாக்கினான். ஒவ்வொரு முறையும் தோற்றுப்போனாலும். மீண்டும் மதுராவை கைப்பற்றத் துடித்தான். அதனால் கண்ணன். 'இங்கிருந்தால் தானே இவன் போருக்கு வருகிறான். நாம் இடம்பெயர்ந்து வேறு இடம் போவோம் என்று புறப்பட்டு விட்டார்.

    கண்ணன் துவாபரயுகத்தில் ஆட்சி செய்த துவாரகை கடலில் மூழ்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் துவாரகையில் இருந்து 18 கி.மீ. தொலைவில் காங்ரோலி துவாரகை எனும் ஊர் உள்ளது. இவ்வூரில் 'ராஜ்சமந்த்' எனும் பெரிய ஆழமான ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரிக்கரையில் அழகான இயற்கைச் சூழலில் கண்ணன் கோவில் அமைந்துள்ளது.

    இத்தல இறைவனின் மீது ஆடை, ஆபரணங்கள் சாற்றுவார்கள். சில சமயங்களில் எவ்வளவு பசை தடவினாலும் அதில் ஆடை, ஆபரணங்கள் ஒட்டாதாம். அப்போது அர்ச்சகர்கள் பாதாம், கற்கண்டு, வெண்ணெய் என கண்ணனுக்குப் பிடித்தவற்றை நைவேத்தியமாக செய்து, "கண்ணே. கண்மணியே, செல்லக் கண்ணா, நீ நல்ல பிள்ளை அல்லவா? பிடிவாதம் செய்யலாமா? உன் அருள்பெற பக்தர்கள் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நீதானே அருள்செய்ய வேண்டும் எனவே, அலங்காரம் செய்துகொள்" என்று செல்லமாகக் கொஞ்சியும், கெஞ்சியும் வேண்டுவார்களாம். அதன் பின்பு ஆடை ஆபரணங்கள் சரியாகப் பொருந்திக் கொள்ளும் அதிசயம் நிகழ்வதாக சொல்கிறார்கள்.

     ராஜஸ்தான் மாநிலத்தின் தெற்குப் பகுதில் அமைந்த ராஜஸ்மண்ட் மாவட்டத்தில் உள்ளது காங்ரோலி துவாரகை. உதய்ப்பூரில் இருந்து 68 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஊர் இருக்கிறது.

    ×