search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தை அமாவாசையின் சிறப்புகள்
    X

    தை அமாவாசையின் சிறப்புகள்

    • பிதுர் வழிபாட்டிற்கு புண்ணியமான தினம்.
    • அமாவாசைத் திதிக்கு அதிக சிறப்பு உண்டு.

    தை மாதத்தில் மகர ராசியில் சஞ்சரிக்கும் சூரியன். சந்திரன், பூமி ஆகிய இருகிரகங்களுடன் ஒரு நேர் கோட்டில் (0 பாதையில்) அமையும் தினமே தை அமாவாசை திதியாக அனுஷ்டிக்கப் பெறுகின்றது.

    சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர். சந்திரன் மனதுக்கு அதிபதியானவர். இதனால் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பனவற்றை எல்லாம் தரவல்லவர்.

    சூரியனைப் `பிதுர் காரகன்' என்றும், சந்திரனை `மாதுர் காரகன்' என்றும் சோதிடம் கூறுகின்றது. அதனால் சூரியனும் சந்திரனும் பிதா-மாதாவாக வழிபடும் தெய்வங்களாக இந்துக்கள் கருதுகின்றனர்.

    இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, பவுர்ணமி தினங்களில் வழிபட வேண்டும். அமாவாசை தினத்தில் தந்தையை இழந்தவர்களும், பவுர்ணமி தினத்தில் அன்னையை இழந்தவர்களும் வழிபடுவது புராதன காலம் தொட்டு பின்பற்றிவரும் ஒரு வழக்கமாகும்.

    அமாவாசை திதி, மாதா மாதம் நிகழ்ந்தாலும் அவற்றுள் தைமாதத்திலும், ஆடி மாதத்தில் வரும் அமாவாசைத் திதிக்கு அதிக சிறப்பு உண்டு.

    இந்துக்கள் ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உள்ள ஆறு மாதம் உத்தராயண காலம் என்றும், ஆடி முதல் மார்கழி வரை உள்ள காலம் தட்சணாயன காலம் என்றும் அழைப்பர். உத்தராயண கால ஆரம்ப மாதமாக தை மாதம் வருவதால் தை அமாவாசையும், தட்சணா கால ஆரம்ப மாதமாக ஆடி மாதம் வருவதால், ஆடி மாதத்தில் வரும் அமாவாசைத் திதி பிதுர் வழிபாட்டிற்கு புண்ணியமான தினம் என சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.

    பிதிர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதுர்களின் தோஷங்களில் இருந்து தோஷ நிவர்த்தி பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

    அமாவாசை, பவுர்ணமி ஆகிய இரண்டு விரதங்களும் முறையே காலமான தந்தை, தாய் ஆகியோரைக் குறித்து அவர்களின் (சந்ததியினரால்) பிள்ளைகளால் அனுட்டிக்கப்படும் விரதங்கள் ஆகும். ஒவ்வொரு மாதத்திலும் இந்த விரதங்களுக்குரிய தினங்கள் வருகின்றன. இவ்விரதங்களை அனுஷ்டிப்பவர்கள் ஆசார சீலர்களாக உபவாசம் இருந்தும் அவ்வாறு இருக்க இயலாதவர் ஒரு பொழுது உண்டும் அனுஷ்டிப்பர்.

    இத்தினத்தில் புண்ணியத் தீர்த்தங்களில் நீராடித் தூய்மையாராய் பிதிர், தருப்பணம் செய்தும் பிண்டதானம், சிரார்த்தம் செய்தும் இறைவனை வழிபட்டும் தானமும், விருந்தினர், சுற்றந்தார், ஏழைகள், ஆதரவற்றோர் ஆகியோருக்கு உணவும் அளித்தும் அவர்களுடன் போசனம் செய்து விரதக் கொள்கையுடன் இருப்பர். இறந்த தந்தை, தாயார் நற்கதி அடைதற் பொருட்டும், பிதிகளாக எம்மைச் சுற்றும் அவர்களை மகிழ்வித்து அவர்களின் ஆசி பெறவும் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் பிள்ளைகள் விரதங்களை அனுஷ்டிக்கிறார்கள். பிதிர்கள் மகிழ்வுற்றால் அம்மனை சிறக்கும் என்பது ஐதீகம்.

    யாழ்ப்பாணத்தில் சிறப்பான நாட்கள் (கனத்த நாட்கள்) என அழைக்கப்படும் விளக்கீடு, தீபாவளி போன்ற தினங்களில் "வீட்டுக்குப் படைத்தல்" என்னும் நிகழ்வு வழக்கத்தில் உள்ளது. அண்மையில் யாரவது அந்த வீட்டில் இறந்திருந்தால் தவறாது வீட்டுக்குப் படைத்து பிதிர்களை மகிழ்விப்பர்.

    சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமியும், ஆடி, தை மாதங்களில் வருகின்ற அமாவாசையும் சிறப்புப் பொருந்தியன என்று சைவ நுல்கள் கூறுகின்றன.

    இரு வேறு சக்திகளான சூரியன், சந்திரன் ஒன்றாக இணையக் கூடிய நாளே அமாவாசையாக கொள்ளப்படுகிறது. எல்லா திதியிலும், ஏதாவது ஒரு கிரகம் திதி தோஷம் (வலுவிழப்பது) அடையும். ஆனால் அமாவாசை தினத்தன்று எந்தக் கிரகமும் திதி தோஷம் பெறுவதில்லை.

    இதன் காரணமாக அமாவாசை திதியில் சில விஷயங்களை மேற்கொள்ளப்பட்டால் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைய முடியும். மருந்து உண்ணுதல், நோயாளிகள் குளித்தல் உள்ளிட்ட பல விஷயங்களை அமாவாசை திதியன்று துவங்கலாம் என சித்த நூல்கள் கூறுகின்றன. எந்த ஒரு பரிகாரமாக இருந்தாலும் அமாவாசையன்று செய்தால் அதற்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். ராகு-கேது பரிகாரம், சர்ப்பதோஷம், சனி, செவ்வாய் கிரகங்களால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் இந்த மாதிரியானவற்றிற்கு அமாவாசை திதியன்று பரிகாரம் செய்வது நல்லது.

    சங்க காலத்திலும் இதுபோன்ற விடயங்களும் நடைமுறையில் இருந்துள்ளது. முன்னோருக்கு திதி செய்வது, தர்ப்பணம், ஆற்றில் புனித நீராடுவது போன்றவை அமாவாசை தினத்தில் மேற்கொள்ளப்பட்டதை சங்க கால நூல்களும் உறுதி செய்துள்ளன.

    மனிதப் பிறவி மகத்தான பிறவி. மனிதனாகப் பிறந்தால் தான், இறைவனை எளிதில் அடைய முடியும். வேறு எந்தப் பிறவிக்கும், இந்த சிறப்பு கிடையாது. வானுலகில் தேவராக இருந்தாலும் கூட, இறைவனைத் தரிசிக்கத்தான் முடியுமே ஒழிய, அவரோடு இரண்டறக் கலக்க முடியாது.

    ஆக, இத்தகைய அரிய மானிடப்பிறவியைத் தந்த நம் முன்னோருக்கு, நன்றி தெரிவிக்க வாரிசுகள் நடத்தும் ஒரு விழாவாக அமாவாசை, பவுர்ணமியை எடுத்துக் கொள்ளலாம். சூரியனின் வடக்கு திசை பயணம் துவங்கும் உத்ராயண காலத்தின் துவக்கமான தை மாதம், மிகவும் புனிதமானது. அந்த மாதத்தில் வரும் அமாவாசையில், கடற்கரை தலங்களுக்குச் சென்று, முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வணங்குதல் மானிடராக பிறந்த ஒவ்வொருவரது ஆன்மீகக் கடமையாகும். இந்த கடமையை தவறவிடாதீர்கள்.

    Next Story
    ×