என் மலர்tooltip icon

    வழிபாடு

    • அதிகாலை 4 மணியளவில் கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
    • கோவில் கொடிமரம் எதிரே உள்ள அகண்டத்தில் தீபம் ஏற்றப்படும்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரசித்து பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 29-ந் தேதி வெள்ளி தேரோட்டம் 30-ந் தேதி மகா தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது.

    இந்த நிலையில் தீபத்திருவிழா உற்சவத்தின் 10-வது நாளான இன்று மகா தீப பெருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது.

    விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை நேரங்களில் பிரகாரத்தில் சாமி, அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகள் உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.

    10-ம் திருநாளான இன்று அதிகாலை அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை, சிறப்பு ஹோமம் ஆகியவை நடந்தது.

     

    இதைத்தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அர்த்த மண்டபத்தில் யாகம் வளர்த்து அதிலிருந்து பரணி தீபத்தை சிவாச்சாரியார்கள் ஏற்றினர்.

    பரணி தீபம் சன்னதியில் இருந்து கொண்டு செல்லப்பட்டு வைகுண்ட வாசல் வழியாக மகா தீப மலைக்கு காட்டப்பட்டது. பிறகு, பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் பரணி தீபம் மூலம் 5 விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது. ஒவ்வொரு சன்னதியாக கொண்டு செல்லப்பட்டு அங்கு தீபம் ஏற்றப்பட்டது.

    மூலவர் சன்னதி வழியாக உண்ணாமலை அம்மன் சன்னதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் "அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா" என்று கோஷம் விண்ணதிர எழுப்பி வணங்கினர்.

    இதைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணி அளவில் அண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

    கோவில் வளாகத்தில் சரியாக மாலை 6 மணிக்கு அர்த்தநாரீஸ்வரர் தனி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார். இதே நேரத்தில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

    அப்போது கோவில் கொடிமரம் எதிரே உள்ள அகண்டத்திலும் தீபம் ஏற்றப்படும். மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிக்கும். 40 கிலோ மீட்டர் வரை மகா தீப ஜோதி தரிசனத்தை பார்க்க முடியும்.

    பரணி தீபத்தை முன்னிட்டு 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கோவில் வளாகம் முழுவதும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் கோவில் வளாகத்தில் செய்யப்பட்டு இருந்த மின்விளக்கு அலங்காரமும் பக்தர்கள் மனதை வெகுவாக கவர்ந்தது.

    விழாவை முன்னிட்டு சம்பந்த விநாயகருக்கு இன்று தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    பரணி தீபம் ஏற்றப்பட்டதையடுத்து பக்தர்கள் கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலையில் இன்று அதிகாலை வரை மழை பெய்ததால் காலையில் பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது.

    நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே இருந்தது. கிரிவலப்பாதையில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    24 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 4764 சிறப்பு பஸ்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது. இதேபோல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. 130 இடங்களில் கார் நிறுத்த இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆந்திர முன்னாள் மந்திரி நடிகை ரோஜா, நீதியரசர் மகாதேவன், ஐ.ஜி. அஸ்ரா கார்க், டி.ஐ.ஜி.தர்மராஜன், கலெக்டர் தர்ப்பகராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், முன்னாள் நகர மன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன், கோவில் தக்கார் மீனாட்சி சுந்தரம், டாக்டர் சேஷாத்ரி, அ.தி.மு.க. மாமன்ற உறுப்பினர் டாக்டர் பழனி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கொட்டும் பனி மற்றும் சாரல் மழையிலும் பரணி தீப தரிசனம் கண்டு மனம் உருக வழிபட்டனர்.

    வழக்கத்தைவிட இந்த ஆண்டு தீபத்திருவிழா கூடுதல் உற்சாகத்துடன் நடக்கிறது. இதுவரை எந்த ஆண்டும் இல்லாத அளவில் மகா தீபத்தை தரிசிக்க தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர். 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மகா தீபத்தை தரிசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கார்த்திகை மாதத்தில் வருகின்ற பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேருகின்ற நாள் தான் திருக்கார்த்திகை.
    • மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, பஞ்சுத் திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.

    கார்த்திகை மாதம் என்பது தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டிய சிறப்புக்குரிய மாதமாகும். கார்த்திகை மாதம் முழுவதும் தீபம் ஏற்ற முடியவில்லை என்றாலும் திருக்கார்த்திகை நாளிலாவது நிச்சயம் தீபம் ஏற்ற வேண்டும்.

    கார்த்திகை மாதத்தில் வருகின்ற பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேருகின்ற நாள் தான் திருக்கார்த்திகை. இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபத் திருநாள் நாளை கொண்டாடப்படுகிறது.

    கார்த்திகை திருநாளில் காலங்காலமாக மக்கள் தங்களுடைய வீடுகளிலும் கோவில்களிலும் அகல் விளக்குகள் ஏற்றி வைத்து, மிக வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள்.

    வீட்டில் விளக்கேற்றும்போது, நமது விருப்பத்திற்கேற்ற எண்ணிக்கையில் விளக்கேற்றலாம் என்றாலும் குறைந்தபட்சம் 27 விளக்காவது ஏற்றுவது சிறப்பாகும்.

    27 விளக்குகளும் 27 நட்சத்திரங்களை குறிப்பதாக அமைகின்றன. மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, பஞ்சுத் திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.

    முதலில் வாசலில் கோலத்தின் நடுவில் விளக்கு ஏற்ற வேண்டும். வாசல், நிலைவாசலில் தீபம் ஏற்றிய பிறகு வெளியில் ஏற்றிய ஒரு தீபத்தை எடுத்து வந்து வீட்டிற்குள் பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும். அதற்கு பிறகு வீட்டின் சமையல் அறை, படுக்கை அறை, கழிவறை, கூடம் என அனைத்து இடங்களிலும் எத்தனை விளக்குகள் ஏற்ற முடியுமோ அத்தனை விளக்குகள் ஏற்றலாம்.

    விளக்கை வெறும் தரையில் ஏற்றக்கூடாது. வாழை இலையின் மீது வைத்து ஏற்றலாம். ஒரு விளக்கை சாமி படத்தின் முன்பு வைத்து, நெய் தீபமாக ஏற்றி வழிபடுவது விசேஷமாகும்.

    • சிவபெருமானின் நெருப்பு வடிவத்தை கண்ட தேவர்கள் அனைவரும், அவரை இத்தலத்திலேயே தங்கும்படி வேண்டினர்.
    • கார்த்திகைத் தீபத் திருநாள், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வெகுவிமரிசையாக நடைபெறும்.

    கார்த்திகை தீபம் என்றாலே நம் நினைவுக்கு வருவது திருவண்ணாமலையில் ஏற்றப்படும் மகாதீபம் தான். ஆன்மிக பூமி, சித்த பூமி, நினைத்தாலே முக்தியை தரும் அற்புதத் தலம் என பல்வேறு சிறப்புகளை கொண்டது, உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருத்தலம்.

    திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. இந்த மகாதீபத்தை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். திருவண்ணாமலை மகாதீபத்தை தரிசிப்பது மகா புண்ணியம் என்பார்கள். இந்த தீபத்தை தரிசிப்பவர்களின் பாவங்கள் நீங்கும், முக்தி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த ஆண்டுக்கான மகாதீபம் இன்று ஏற்றப்படுகிறது.

    திருக்கார்த்திகை திருநாள் பற்றி பல புராணக் கதைகள் கூறப்படுகின்றன. இருப்பினும், சிவபெருமான் ஜோதி வடிவாக மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் காட்சி அளித்த நாளே, திருக்கார்த்திகை திருநாள் எனப் பலராலும் போற்றப்படுகிறது.

    ஒரு முறை மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும் 'யார் பெரியவர்?' என்ற போட்டி ஏற்பட்டது. இதற்கு முடிவு காண, சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். அப்போது சிவபெருமான் "என்னுடைய முடியையும், அடியையும் யார் முதலில் கண்டு வருகிறார்களோ, அவர்களே பெரியவர்" என்று பதிலளித்தார். பின்னர், சிவபெருமான் விண்ணுக்கும் மண்ணுக்குமாக மிகப்பெரிய நெருப்புப் பிழம்பாக மாறி நின்றார்.

    இதையடுத்து பிரம்மதேவர், அன்னப் பறவை வடிவம் கொண்டு, சிவபெருமானின் முடியைக் காணவும், திருமால் வராக (பன்றி) வடிவம் எடுத்து ஈசனின் அடியைக் காணவும் புறப்பட்டனர். ஆனால் பல கோடி ஆண்டுகள் ஆகியும் அவர்களால் ஈசனின் அடியையும், முடியையும் காண முடியவில்லை. திருமால், தன்னால் அடியைக் காண இயலவில்லை என்பதை ஈசனிடம் தெரிவித்தார்.

    ஆனால் பிரம்மனோ, தான் ஈசனின் முடியைக் கண்டுவிட்டதாக பொய் கூறியதுடன், அதற்கு சாட்சியாக சிவனின் தலையில் இருந்து விழுந்த தாழம்பூ ஒன்றையும் அழைத்து வந்திருந்தார். இதனால் கோபம் கொண்ட சிவபெருமான், பிரம்மனுக்கு பூலோகத்தில் கோவில் இருக்காது என்றும், தாழம்பூவை இனி சிரசில் சூடமாட்டேன் என்றும் சாபம் அளித்தார்.

    சிவபெருமானின் நெருப்பு வடிவத்தை கண்ட தேவர்கள் அனைவரும், அவரை இத்தலத்திலேயே தங்கும்படி வேண்டினர். இதையடுத்து சிவபெருமான் மலையாக உருமாறினார். பின்பு வழிபடுவதற்கு ஏற்றவாறு சுயம்பு லிங்கமாக மலையடிவாரத்தில் தோன்றினார். அந்த சுயம்புலிங்கத்தை மையமாக வைத்தே, தற்போதைய அண்ணாமலையார் ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது.

    சிவபெருமான் மலையாக வீற்றிருக்கும் காரணத்தால், திருவண்ணாமலை சிறப்புக்குரியதாக இருக்கிறது. பல யுகங்களை தாண்டி நிற்கும் இந்த மலையில் முனிவர்களும், சித்தர்களும் வலம் வந்து வழிபட்டிருக்கிறார்கள். சிவபெருமான் அக்னி ஜோதியாக தேவர்களுக்கு காட்சியளித்த நாளே, திருக்கார்த்திகை திருநாள் என்று கூறப்படுகிறது. எனவே கார்த்திகைத் தீபத் திருநாள், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வெகுவிமரிசையாக நடைபெறும்.

    கார்த்திகை தீபத் திருநாள் அன்று, அதிகாலையில் அண்ணாமலையார் சன்னிதியில் பரணி தீபம் ஏற்றப்படும். அந்த தீபத்தில் இருந்து மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றுவார்கள். பின்னர் அந்த தீபங்களை ஒன்றாக்கி, அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர். பரம்பொருளான சிவபெருமான் பல வடிவங்களாக இருக்கிறாா், அவரே பரம்பொருள் என்ற ஒருவராகவும் உள்ளார் என்பதே இதன் தத்துவம்.

    பின்னர் அண்ணாமலையார் அருகில் வைக்கப்பட்ட தீபம் மலைக்கு கொண்டு செல்லப்படும். மாலையில் கோவில் கொடிமரம் அருகில் உள்ள மண்டபத்திற்கு பஞ்ச மூர்த்திகள் எழுந்தருள்வர். அப்போது மூலஸ்தானத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் வெளியே வருவார். இந்த ஒருநாள் மட்டுமே அர்த்தநாரீஸ்வரர் தரிசனத்தைக் காண முடியும். மற்ற நாட்களில் அவர் சன்னிதியை விட்டு வெளியே வருவதில்லை. அவர் முன்பாக அகண்ட தீபம் ஏற்றப்படும்.

    அதன்பிறகே, 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். தீபம் ஏற்றுவதற்காக, 7½ அடி உயர கொப்பரையில், ஆயிரம் கிலோ காடா துணி, 3 ஆயிரம் கிலோ நெய், 2 கிலோ கற்பூரம் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. மகா தீபம் ஏற்றும் உரிமை, பர்வதராஜ குலத்தினருக்கு உரியது. இந்த மகா தீபம், தொடர்ச்சியாக 11 நாட்கள் எரியும். மலை உச்சியில் ஏற்றப்படும் இந்த தீபமானது, மலையை சுற்றியுள்ள சுமார் 30 கிலோமீட்டர் தூரத்துக்கும் தெரியும் என்கிறார்கள். எரிந்த தீபத்தில் இருந்து எடுக்கப்படும் கருப்பு நிற மையானது, ஆருத்ரா தரிசனத்தின்போது பக்தர்களுக்கு வினியோகிக்கப்படும்.

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடிவரும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். உத்தியோக முயற்சி அனுகூலம் தரும்.

    ரிஷபம்

    தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு உண்டு.

    மிதுனம்

    யோகமான நாள். அதிகாலையிலேயே ஆதாயம் தரும் தகவல் வந்து சேரும். நண்பர்களின் ஒத்துழைப்போடு தொழில் முன்னேற்றம் உண்டு. செல்வாக்கு மேலோங்கும்.

    கடகம்

    முன்னேற்றம் அதிகரிக்க முருகப்பெருமானை வழிபட வேண்டிய நாள். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நிலை மாறும்.

    சிம்மம்

    எதிர்காலம் இனிமையாக அமைய எடுத்த முயற்சிகள் வெற்றி தரும் நாள். இல்லம் கட்டிக் குடியேறும் எண்ணம் நிறைவேறும். திருமண வாய்ப்பு கைகூடும்.

    கன்னி

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். நேற்றைய சேமிப்புகள் இன்றைய செலவிற்கு கை கொடுக்கும். உணர்ச்சி வசப்படுவதன் மூலம் உறவினர் பகை ஏற்படலாம். அலைச்சல் அதிகரிக்கும்.

    துலாம்

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். தேவைகளுக்காக கடன் வாங்கும் சூழ்நிலை உண்டு. திட்டமிட்ட செயலொன்றில் திடீர் மாற்றங்களைச் செய்வீர்கள்.

    விருச்சிகம்

    வெற்றிகள் குவிய வேலவனை வழிபட வேண்டிய நாள். பக்கத்தில் உள்ளவர்களால் பக்கபலமாக இருப்பர். பணவரவு திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

    தனுசு

    பாடுபட்டதற்கு ஏற்ற பலன் கிடைக்கும் நாள். பம்பரமாகச் சுழன்று பணிபுரிந்து பாராட்டுக்களைப் பெறுவீர்கள். வருமானம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாகக் கிடைக்கும்.

    மகரம்

    குறைகள் அகலக் குகனை வழிபட வேண்டிய நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். வீட்டைச் சீரமைக்கும் பணி தொடரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    கும்பம்

    அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள். பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள்.

    மீனம்

    இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். தொல்லை தந்தவர்கள் தோள்கொடுத்து உதவ முன்வருவர். நண்பர்களால் உற்சாகமான சூழ்நிலை உருவாகும். வீடு கட்டும் முயற்சி பலன் தரும்.

    • திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசல நாயகர் ஜோதி சொரூபமாய் மகா தீப ஜோதி தரிசனம்.
    • பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு கார்த்திகை-17 (புதன்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : திரயோதசி காலை 10.13 மணி வரை பிறகு சதுர்த்தசி

    நட்சத்திரம் : பரணி மாலை 4.47 மணி வரை பிறகு கார்த்திகை

    யோகம் : சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரருக்கு இன்று மகாதீப தரிசனம், கார்த்திகை விரதம்

    இன்று திருக்கார்த்திகை, திருவண்ணாமலை தீபம். கார்த்திகை விரதம். திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசல நாயகர் ஜோதி சொரூபமாய் மகா தீப ஜோதி தரிசனம். பழனி ஸ்ரீ ஆண்டவர் தீபோற்சவ காட்சி. திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.

    ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் பெருமாள் புறப்பாடு. விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம், அலங்காரம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளியங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சன சேவை. கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வரவு

    ரிஷபம்-நன்மை

    மிதுனம்-சாந்தம்

    கடகம்-நலம்

    சிம்மம்-லாபம்

    கன்னி-வெற்றி

    துலாம்- அமைதி

    விருச்சிகம்-பொறுமை

    தனுசு- தேர்ச்சி

    மகரம்-ஊக்கம்

    கும்பம்-விவேகம்

    மீனம்-மாற்றம்

    • கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் இங்குள்ள மகா தீபமலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். மேலும் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம்.

    அதன்படி, இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 7.58 மணிக்கு தொடங்குகிறது. வெள்ளிக்கிழமை காலை 5.37 மணிக்கு முடிகிறது. அந்த நேரத்தில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.
    • திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    2-ந் தேதி (செவ்வாய்)

    * பிரதோஷம்.

    * திருப்பரங்குன்றம் ஆண்டவர் பட்டாபிஷேகம், இரவு பரணி தீபம்.

    * திருவண்ணாமலை அருணாசலேசுவரர் காலை கண்ணாடி விமானத்திலும், இரவு கயிலாச வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் புறப்பாடு.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * சமநோக்கு நாள்.

    3-ந் தேதி (புதன்)

    * திருக்கார்த்திகை.

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.

    * திருவண்ணாமலை தீபம்.

    * குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் நாராயணசுவாமி விசேஷ அலங்காரம்.

    * திருப்பரங்குன்றம், சுவாமிமலை தலங்களில் முருகப்பெருமான் ரத உற்சவம்.

    * கீழ்நோக்கு நாள்.

    4-ந் தேதி (வியாழன்)

    * பவுர்ணமி.

    * திருவண்ணாமலை அண்ணாமலையார் தெப்ப உற்சவம்.

    * நத்தம் மாரியம்மன் லட்சத்தீப காட்சி.

    * திருப்பதி ஏழு மலையான் புஷ்பாங்கி சேவை.

    * கீழ்நோக்கு நாள்.

    5-ந் தேதி (வெள்ளி)

    * திருவாஞ்சியம் முருகப்பெருமான், திருநாகேசுவரம் நாகநாத சுவாமி தலங்களில் விழா தொடக்கம்.

    * மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி புறப்பாடு.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.

    * மேல்நோக்கு நாள்.

    6-ந் தேதி (சனி)

    * திருவண்ணாமலை சுப்பிரமணியர் தெப்ப உற்சவம்.

    * திருவரங்கம் நம்பெருமாள், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், திருப்புல்லாணி ஜெகநாதப் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.

    * திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.

    * சமநோக்கு நாள்.

    7-ந் தேதி (ஞாயிறு)

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    * பத்ராசலம் ராமபிரான் புறப்பாடு.

    * மேல்நோக்கு நாள்.

    8-ந் தேதி (திங்கள்)

    * முகூர்த்த நாள்.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் தலங்களில் 1008 சங்காபிஷேகம்.

    * சமநோக்கு நாள்.

    • டோக்கன்கள் இல்லாத பக்தர்கள் மீதமுள்ள 7 நாட்களுக்கு நேரடியாக அனுமதிக்கப்படுவார்கள்.
    • டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு வருகிற 5-ந்தேதி ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் 30-ந் தேதி முதல் ஜனவரி 8-ந் தேதி வரை வைகுண்ட ஏகாதசி தரிசனம் நடைபெற உள்ளது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக முதல் 3 நாட்களுக்கு ஆன்லைனில் டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான டிக்கெட் ஆன்லைன் மூலம் வெளியிடப்பட்டது.

    கடந்த 27-ம் தேதி தொடங்கிய பதிவு நேற்று மாலை 5 மணிக்கு முடிந்தது. மொத்தம் 24,05,237 பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இன்று மதியம் 2 மணிக்கு ஆன்லைன் குலுக்கல் முறையில் பக்தர்களுக்கு தரிசன டிக்கெட ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களுக்கு செல்போன் மூலம் ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதில் உள்ள இணைப்பைத் திறந்து இலவச டோக்கன்களை பதிவிறக்கம் செய்யலாம்.

    டிசம்பர் 30-ந் தேதிக்கு 57 ஆயிரம் டோக்கன்களும், 31-ம் தேதிக்கு 64 ஆயிரமும், ஜனவரி 1-ம் தேதிக்கு 55 ஆயிரம் பக்தர்களுக்கு டிக்கெட் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    டோக்கன்கள் இல்லாத பக்தர்கள் மீதமுள்ள 7 நாட்களுக்கு நேரடியாக அனுமதிக்கப்படுவார்கள். அதே நேரத்தில், ரூ.1,000 தரிசனம் டிக்கெட் ஒதுக்கீடு ஒரு நாளைக்கு 15,000 என்ற விகிதத்திலும், ரூ.300 சிறப்பு நுழைவு தரிசனங்களும் 1,000 ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    இந்த டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு வருகிற 5-ந்தேதி ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    • திருக்கார்த்திகை நாளில் நிச்சயம் தீபம் ஏற்ற வேண்டும்.
    • கார்த்திகை மாதம் பவுர்ணமி நாளில் கிருத்திகை நட்சத்திரத்தில் திருக்கார்த்திகை வருகிறது.

    கார்த்திகை மாதம் என்பது தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டிய சிறப்புக்குரிய மாதமாகும்.

    கார்த்திகை மாதம் முழுவதும் தீபம் ஏற்ற முடியவில்லை என்றாலும் திருக்கார்த்திகை நாளிலாவது நிச்சயம் தீபம் ஏற்ற வேண்டும். அன்றைய தினம், நாம் இன்முகத்தோடு ஏற்றும் தீபமானது, நம் வாழ்வில் இன்பத்தை வாரி வழங்கும். கார்த்திகை மாதம் பவுர்ணமி நாளில் கிருத்திகை நட்சத்திரத்தில் திருக்கார்த்திகை வருகிறது. இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபத் திருநாள், 3-12-2025 நாளை (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது.

    திசைக்கேற்ப பலன்

    நாம் வீட்டில் விளக்கேற்றும்போது, எந்த திசையை நோக்கி விளகேற்றுகிறோமோ அதற்கேற்ப பலன்களை அடையலாம்.

    கிழக்கு

    துன்பங்கள் நீங்கும், ஐஸ்வர்யம் கிடைக்கும்

    மேற்கு

    கடன்கள் தீரும்

    வடக்கு

    சுபகாரியங்கள் நடைபெறும்

    தெற்கு திசை பார்த்து விளக்கேற்றக் கூடாது

    • திருப்பரங்குன்றம் ஸ்ரீ முருகப் பெருமானுக்குப் பட்டாபிஷேகம் தங்கக் குதிரையில் பவனி.
    • திருமயிலை, திருவான்மியூர் பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு கார்த்திகை-16 (செவ்வாய்க்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : துவாதசி நண்பகல் 12.29 மணி வரை பிறகு திரயோதசி

    நட்சத்திரம் : அசுவினி இரவு 6.23 மணி வரை பிறகு பரணி

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : பிற்பகல் 3.00 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம் : காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    பிரதோஷம், திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்

    பிரதோஷம். திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசல நாயகர் காலை கண்ணாடி விமானத்தில் பவனி. திருப்பரங்குன்றம் ஸ்ரீ முருகப் பெருமானுக்குப் பட்டாபிஷேகம் தங்கக் குதிரையில் பவனி. சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருமயிலை, திருவான்மியூர் பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.

    திருத்தணி, திருப்போரூர், வடபழனி குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம். 3-ஆம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமா நிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. திருநறையூர் ஸ்ரீசித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீசண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் காலை அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மாற்றம்

    ரிஷபம்-அன்பு

    மிதுனம்-பரிசு

    கடகம்-ஆதரவு

    சிம்மம்-ஊக்கம்

    கன்னி-உயர்வு

    துலாம்- ஈகை

    விருச்சிகம்-அமைதி

    தனுசு- ஆதாயம்

    மகரம்-புகழ்

    கும்பம்-போட்டி

    மீனம்-இன்பம்

    • கார்த்திகை மாதம் என்பது தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டிய சிறப்புக்குரிய மாதமாகும்.
    • தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் திருகார்த்திகை விரதம் இருந்து இறைவனை வழிபடுபவர்களுக்கு மோட்சம் கிடைக்கும்.

    இந்து மதத்தில், இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கமான ஒன்றாகும். பலர், தினமும் அதிகாலையில் இறைவனுக்கு விளக்கேற்றிவிட்டுதான், தங்கள் அன்றாட பணிகளை தொடங்குகிறார்கள். தினமும் விளக்கேற்ற முடியாதவர்கள், செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை அல்லது சிறப்புமிக்க விழா நாட்களிலாவது தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். ஆனால் தீபத்தையே இறைவனாக நினைத்து போற்றி வழிபடும் அற்புதமான நாள்தான், திருக்கார்த்திகை தீபத் திருநாள்.

    திருக்கார்த்திகை நாளில், கோவில்கள் மற்றும் வீடுகளில் வரிசையாக தீபங்களை ஏற்றி இறைவனை வழிபடுகிறார்கள். அன்றைய தினம், வீடு முழுவதும் ஒளியால் பிரகாசமடைந்து மனம் மகிழ்ச்சி அடைகிறது. தீப ஒளியானது எவ்வாறு இருளை நீக்கி ஒளியை பரப்புகிறதோ, அதேபோல நம் வாழ்வில் இருக்கும் துன்பங்கள், பிரச்சினைகள் எனும் இருள் நீங்கி, மகிழ்ச்சி எனும் ஒளியை பரப்புகிறது.

    கார்த்திகை மாதம் என்பது தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டிய சிறப்புக்குரிய மாதமாகும். கார்த்திகை மாதம் முழுவதும் தீபம் ஏற்ற முடியவில்லை என்றாலும் திருக்கார்த்திகை நாளிலாவது நிச்சயம் தீபம் ஏற்ற வேண்டும். அன்றைய தினம், நாம் இன்முகத்தோடு ஏற்றும் தீபமானது, நம் வாழ்வில் இன்பத்தை வாரி வழங்கும். கார்த்திகை மாதம் பவுர்ணமி நாளில் கிருத்திகை நட்சத்திரத்தில் திருக்கார்த்திகை வருகிறது. இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபத் திருநாள், 3-12-2025 (புதன்கிழமை) அன்று கொண்டாடப்படுகிறது.

    திருக்கார்த்திகை திருநாள் கொண்டாடுவதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்..

    ஒரு சமயம் சிவபெருமான் கயிலாயத்தில் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும்போது, பார்வதி தேவி விளையாட்டாக சிவபெருமானின் கண்களை மூடினார். இதனால் உலகமே இருளில் மூழ்கியது. உயிர்கள் அனைத்தும் துயரத்தில் வாடின. இச்செயலால் பார்வதி தேவிக்கு பாவம் ஏற்பட்டது. இதையடுத்து பார்வதி தேவி பாவவிமோசனம் வேண்டி, காஞ்சிபுரத்திற்கு வந்து சிவபெருமானை நினைத்து கடுந்தவம் புரிந்தார்.

    அப்போது பார்வதி தேவிக்கு காட்சி அளித்த சிவபெருமான், திருக்கார்த்திகை நாளில் திருவண்ணாமலைக்கு வரும்படி அருளினார். சிவபெருமானின் கட்டளைப்படியே திருவண்ணாமலை வந்தார் பார்வதி தேவி. அங்குள்ள பவளக்குன்று மலையில் வசித்து வந்த கவுதம மகரிஷி உதவியுடன் பர்ணசாலை அமைத்து தவம் இயற்றினார். கார்த்திகை மாதம், பவுர்ணமியும் கார்த்திகை நட்சத்திரமும் இணையும் நாளில் சிவபெருமான் பார்வதி தேவிக்கு ஜோதி வடிவில் காட்சி அளித்தார். பின்பு, தன் உடலின் இடப்பாகத்தை பார்வதி தேவிக்கு கொடுத்து அர்த்தநாரீஸ்வரராக அருள்பாலித்தார். அந்த நாளே திருக்கார்த்திகை என்று கொண்டாடப்படுகிறது.

    ஒரு சமயம் கயிலாயத்தில் நெய் தீப விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. அந்த விளக்கு அணையும் தருவாயில், அங்கு ஒரு எலி வந்தது. விளக்கில் இருந்த நெய்யின் வாசனையை அறிந்த எலி, அதை உண்ண நினைத்து திரியை இழுத்தது. அப்போது அந்த திரி தூண்டப்பட்டு பிரகாசமாக எரிய ஆரம்பித்தது. உடனே, அந்த எலியின் முன் தோன்றிய சிவபெருமான், மானிடப் பிறவி எடுத்து, ராஜயோக வாழ்வு வாழும்படி அருள் வழங்கினார். அந்த எலிதான் மறுபிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாக பிறந்தது என்று கூறப்படுகிறது.

    எண்ணற்ற செல்வங்களுக்கு அதிபதியாக இருந்த மகாபலி சக்கரவர்த்திக்கு கூடவே செருக்கும் வளர்ந்தது. ஒரு நாள் அகங்காரத்துடன் கோவிலுக்கு சென்ற அவர், பட்டாடைகள் தரையில் புரள அலட்சியமாக நடந்தார். அப்போது மகாபலி சக்கரவர்த்தியின் பட்டாடை, அங்கிருந்த அகல் விளக்கின் மீது பட்டு தீப்பற்றி எரிந்தது. இதனால் அவரின் உடலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, தனது ஆணவத்தை எண்ணி வருந்திய சக்கரவர்த்தி, இறைவனை இருகரம் கூப்பி வணங்கி பிரார்த்தனை செய்தார். தனது உடம்பில் ஏற்பட்ட தீ காயம் குணமடைய அருள்புரியுமாறு வேண்டினார்.

    உடனே இறைவன், "நீ நாள்தோறும் கோவிலில் விளக்குகளை வரிசையாக ஏற்றி, என்னை வழிபடு. காலப்போக்கில் உனது காயம் குணமடையும்" என்று அசரீரியாக கூறினார்.

    அதன்படி மகாபலி சக்கரவர்த்தி தினமும் கோவிலுக்கு சென்று, விளக்குகளை வரிசையாக அடுக்கி தீபம் ஏற்றி வழிபட்டார். இவ்வாறு தொடர்ந்து வழிபட, கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரம் கூடிய பவுர்ணமி திதியில் இறைவன் மனம் இரங்கி மன்னனுக்கு காட்சி அளித்தார். ஜோதி வடிவில் ஒளிப்பிழம்பாய் காட்சி அளித்த இறைவன், மன்னனின் நோயை நீக்கி அருள் வழங்கினார். இவ்வாறு தொடங்கிய தீப வழிபாடே, திருக்கார்த்திகை திருநாளாக கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது.

    திருக்கார்த்திகை விரதம்

    கார்த்திகை தீப திருவிழா என்பது நமது பாரம்பரிய வழிபாடுகளில் ஒன்றாகும். பொதுவாக கார்த்திகை மாதம் முழுவதும் மாலை நேரத்தில் வீடுகளில் விளக்குகள் ஏற்றப்படுகிறது. இருப்பினும் திருக்கார்த்திகை நாளன்று ஏற்றப்படும் தீப வழிபாடு தனிச் சிறப்பாகும். அன்றைய தினம் பல வகையான விளக்குகளால் தீபங்கள் ஏற்றினாலும், மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகள் ஏற்றி வழிபடுவது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.

    திருக்கார்த்திகை தினத்திற்கு முதல் நாள் பரணி நட்சத்திரம் வருகிறது. அன்றைய தினம் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் காலையில் மட்டும் உணவு சாப்பிட வேண்டும். மறுநாள் அதிகாலையில் எழுந்து, நீராடிவிட்டு இறைவனை வழிபட வேண்டும். அன்றைய தினம் முழுவதும் உணவு உண்பதை தவிர்த்துவிட்டு, தண்ணீர் மட்டுமே பருக வேண்டும். பின்பு, இரவு கோவிலுக்கு சென்று இறைவனை தரிசிக்க வேண்டும். பகல் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள், பழங்கள் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். பின்பு மறுநாள் காலையில் நீராடிவிட்டு பால் அருந்தி விரதத்தை முடித்துக்கொள்ளலாம்.

    தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் திருகார்த்திகை விரதம் இருந்து இறைவனை வழிபடுபவர்களுக்கு மோட்சம் கிடைக்கும். அவர்களின் சந்ததியினர் நல்வாழ்வு வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.

    திருக்கார்த்திகை தினத்தன்று, ஒவ்வொருவரும் தங்கள் குடும்ப வசதிக்கேற்ப விதவிதமாக, பல்வேறு எண்ணிக்கையில் அகல் விளக்கு தீபம் ஏற்றுகிறார்கள். முதலில் வீட்டின் வாசலில் உள்ள கோலத்தின் நடுவில் விளக்கேற்ற வேண்டும். பின்பு, வீட்டு வாசல், பூஜை அறை என வீடு முழுவதும் எத்தனை விளக்குகள் ஏற்ற முடியுமோ அத்தனை விளக்குகள் ஏற்றலாம். ஜோதி வடிவான இறைவனை நாம் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். லட்சுமி கடாட்சம் ஏற்படும். வாழ்வில் பிரகாசமான எதிர்காலம் உண்டாகும்.

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும் நாள். வரவு திருப்தி தரும். பூமி விற்பனையால் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு உண்டு.

    ரிஷபம்

    பொருளாதார நிலை உயரும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து காரியத்தை முடித்துக் கொடுப்பர். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.

    மிதுனம்

    குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையடையும் சந்தர்ப்பம் கைகூடிவரும். அயல்நாட்டில் வசிக்கும் நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர்.

    கடகம்

    நந்தி வழிபாட்டால் நன்மை கிடைக்கும் நாள். மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள். விட்டுப் போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம்.

    சிம்மம்

    நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும். சுப காரியப் பேச்சுக்கள் முடிவாகும். அரசு வேலைக்கு விண்ணப்பிக்கும் முயற்சி கைகூடும்.

    கன்னி

    வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சியில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் நெருக்கடி கொடுப்பர்.

    துலாம்

    ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும். வாகன யோகம் உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்த முற்படுவீர்கள்.

    விருச்சிகம்

    பொதுவாழ்வில் புகழ்கூடும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சு முடிவாகும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    தனுசு

    நன்மைகள் நடைபெறும் நாள். தனவரவு திருப்தி தரும். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக விளங்குவர். இடம் வாங்கும் முயற்சி கைகூடும்.

    மகரம்

    எதிரிகள் உதிரியாகும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். இனத்தார் பகை மாறும். தேக ஆரோக்கியம் தெளிவு பெறும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.

    கும்பம்

    பிறரை விமர்சிப்பதால் பிரச்சனைகள் ஏற்படும் நாள். வரன்கள் முடிவடைவதில் தாமதம் ஏற்படும். உடல் நலனில் கவனம் தேவை. உத்தியோக மாற்றம் பற்றிச்சிந்திப்பீர்கள்.

    மீனம்

    ஒளிமயமான வாழ்க்கைக்கு உறுதுணைபுரியும் நாள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள்.

    ×