என் மலர்
வழிபாடு
- பவுர்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள்.
- இரவில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்களும் பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதம் 8 நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்தநிலையில் வருகிற 22-ந்தேதி பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு அன்று மாலை 4.30 மணியிலிருந்து ஆறு மணிக்குள் சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெறுகிறது. பின்னர் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
24-ந்தேதி பங்குனி மாத பவுர்ணமி அன்று விடுமுறை நாளாக இருப்பதால் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். அதோடு பங்குனி மாத பவுர்ணமி முன்னிட்டு சுந்தர மகாலிங்க சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.
மொட்டை உள்ளிட்ட நேர்த்திக்கடன்களையும் பக்தர்கள் செலுத்த உள்ளனர். வருகிற 25-ந்தேதியுடன் நான்கு நாட்கள் அனுமதி முடிவடைய உள்ளது. சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்டவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்ப்பதோடு, ஓடைகளில் இறங்கி குளிக்கக்கூடாது, இரவில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது என்றும் வனத்துறையினர் அறிவித் துள்ளனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தரமகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர்.
- அன்னை கதீஜா (ரலி) அவர்களின் தியாகம்.
- நாமும் அவரின் தியாக வாழ்வை ரமலானில் நினைவுகூர்வோம்.
அன்னை கதீஜா (ரலி) அவர்களின் தியாகம்
நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த சத்திய மார்க்கத்தை முதலில் ஏற்றுக்கொண்டவர் அன்னை கதீஜா (ரலி) அவர்கள். இஸ்லாமிய வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் விதையாக இருந்தவர். நபி கொண்டு வந்த ஏகத்துவ ஓரிறைக் கொள்கைக்கு மக்காவில் எதிர்ப்பு கிளம்பிய போது, நபிக்கு அச்சுறுத்தல் வந்தபோது நபி (ஸல்) அவர்களுக்கு அரணாக அமைந்தவர் அன்னை கதீஜா (ரலி) அவர்கள். அவரின் பிறப் பையும், தியாக வாழ்வையும், மறைவையும் இஸ்லாமியர்கள் தெரிந்து கொள்வது அவசியமாகும்.
கதீஜா அவர்களின் தந்தை குவைலித் பின் அஸத் குரைஷி அஸதீ, தாய் பாத்திமா பின்த் ஸாயிதா ஆவார்கள். அவர் கி.பி. 556-ம் ஆண்டு மக்கா நகரில் பிறந்தார். இவருக்கு ஏற்கனவே இருமுறை திருமணம் நடைபெற்றது. முந்தைய இரு திருமணமான மணமகன்களும் இறந்துவிட்டனர். இவருக்கு 40 வயதாக இருக்கும் போது விதவையான இவரை நபி (ஸல்) அவர்கள் தமது 25-ம் வயதில் திருமணம் முடித்தார்கள். நபி (ஸல்) அவர்கள்ளுக்கு அன்னை கதீஜா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் அளப்பெரும் அருட்கொடை நாயகியாகத் திகழ்ந்தார்கள்.
அண்ணலார் அன்னையருடன் கால் நூற்றாண்டு காலம் வாழ்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் துக்கநேரத்தில் ஆறுதல் அளிக்கும் நபராகவும், சிரமமான நேரத்தில் உற்ற தோழியாகவும், வாழ்க்கைத் துணைவியாகவும், நபியின் தூதுவச் செய்திக்கு பல எதிர்ப்புகள் வந்தபோது நபியைக் காக்கும் அரணாகவும், நபிக்கு தமது உடலாலும், பொருளாலும் உதவிய தியாகச் சீமாட்டியாகவும் திகழ்ந்தார்கள்.
நபியின் வெற்றிக்கு பின் புலமாகவும், பக்கபலமாகவும் இருந்தார்கள். மக்கள் என்னை நிராகரித்த போது, கதீஜா (ரலி) என்னை நம்பினார். மக்கள் என்னை பொய்ப்பித்த போது, அவர் என்னை உண்மைப் படுத்தினார். மக்கள் என்னை ஒதுக்கியபோது, அவர் என்னைத் தமது பொருளால் அரவணைத்துக் கொண்டார். அவர் மூலமாகத் தான் அல்லாஹ் எனக்குக் குழந்தை பாக்கியத்தை வழங்கினான். அவரல்லாத மற்ற மனைவிகள் மூலம் அல்லாஹ் எனக்கு குழந்தைகள் வழங்காமல் செய்துவிட்டான் என நபி (ஸல்) கூறினார்.' (நூல்: அஹ்மது) 'நபி (ஸல்)
அவர்கள் மதீனாவுக்கு (ஹிஜ்ரத் செய்து) குடியேறுவதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்பு கதீஜா (ரலி) இறப்பெய்து விட்டார்கள். (அறிவிப்பாளர் : உர்வா பின் சுபைர் (ரலி), நூல்:புகாரி)
கதீஜா (ரலி) அவர்கள் நபித்துவத்தின் பத்தாம் ஆண்டு ரமலான் மாதத்தில் தமது 65-வது வயதில் மரணமானார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு வயது ஐம்பது. தமது மனைவி கதீஜா (ரலி) இறந்த பிறகும் அவரைப் பற்றி நினைவு கூர்ந்து கொண்டே இருப்பார்கள். அவரின் தோழிகளுக்கு அன்பளிப்புகளையும் வழங்கி வந்தார்கள்.
'நான் நபி (ஸல்) அவர்களிடம் உலகில் கதீஜாவைத் தவிர வேறெந்தப் பெண்ணும் இல்லாததைப் போல் நடந்து கொள்கிறீர்களே! என கேட்டபோது, அவர் புத்திசாலியாக இருந்தார். சிறந்த குணமுடையவராக இருந்தார். மேலும், அவர் வாயிலாகத்தான் எனக்கு பிள்ளைச் செல்வம் கிடைத்தது' என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)
'மர்யம்தான் (அப்போது) உலகப் பெண்களிலேயே சிறந்தவர். (தற்போது) உலகப் பெண்களிலேயே சிறந்தவர் கதீஜா (ரலி) ஆவார்.' (அறிவிப்பாளர்: அலி (ரலி), நூல்: புகாரி).
அன்னை கதீஜா இறந்த பிறகும் நபி (ஸல்) அவரை நினைவு கூர்ந்தார். நாமும் அவரின் தியாக வாழ்வை ரமலானில் நினைவுகூர்ந்து கொண்டிருக்கிறோம்.
- போர் வீரர்களுக்குத் தலைவராக இருந்து வந்தார்.
- செல்வத்தை சிவனடியார்க்கு கொடுத்து மனம் நிறைபவர்.
முனையடுவார் நாயனார், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். சோழ நாட்டில் திருநீடூரில் வேளாள குலத்தில் தோன்றியவர். "அறை கொண்டவேல் நம்பி முனையடுவார்க் கடியேன்" என்று திருத்தொண்டத் தொகை இவரைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
சிவபெருமான் திருவடியில் பேரன்புடையவர். பகைவர்களைப் போர்முனையில் வென்று பெற்ற செல்வத்தை சிவனடியார்க்கு கொடுத்து மனம் நிறைபவர். "போர் முனையிற் கொல்லும் தொழிலே புரினும் அடியர்க்கு அமுதளித்தல் பெரும் பேறாம்.'' என்ற சிந்தை உடையவர். வாய்மை உடையவர்.
சோழவள நாட்டில் உள்ள சிவத்தலங்களில் ஒன்றான திருநீடுர் பதியில் வீர வேளாளர் குடியிலே முனையடுவார் நாயனார் வாழ்ந்து வந்தார். இவர் போர் வீரர்களுக்குத் தலைவராக இருந்து வந்தார். இவர், தம்மோடு வீரமிக்க வேறு சில வீரர்களையும் சேர்த்துக்கொண்டு வீர அணி ஒன்றை அமைத்து வைத்துக்கொண்டு இருந்தார்.
தங்களை நாடி வரும் மன்னருக்கு உதவியாக களம் சென்று அம்மன்னர்க்கு வெற்றியைத் தேடித்தருவார். இது ஒரு பழங்கால வழக்கம். இவ்வழக்கத்தையே தமது தொழிலாலக்கொண்டு, வாழ்ந்து வந்த முனையடுவார் தமக்கு கிட்டிய ஊதியத்தைச் சிவன் கோயில் திருப்பணிக்கும், சிவனடியார்கள் திருத்தொண்டிற்கும் பயன்படுத்தினார்.
திருநீடுர்ப்பெருமான் பேரருளால் பொன்னும் பொருளும் புகழும் சேர்ந்தது. அத்தனையும் ஆண்டவனுக்கும் அடியவர்க்கும் செலவிட்டார். உலகில் பல்லாண்டு காலம் சிவத்தொண்டு புரிந்து வாழ்ந்தார். முனையடுவார் நாயனார் குருபூஜை பங்குனி மாதம் பூசம் நட்சத்திரமான இன்று கொண்டாடப்படுகிறது.
- பங்குனி மாதத்தின் வளர்பிறை ஏகாதசி அமலாகி ஏகாதசி .
- ஏகாதசி அன்று விரதம் இருப்பது நிலையான பலனைத் தரும்.
`அமலாகி' என்றால் நெல்லிக்காய். பத்மபுராணத்தின் படி, நெல்லிக்காய் மரம், விஷ்ணுவுக்கு உரியது. இந்த மரத்தில், ஸ்ரீஹரியும், லட்சுமி தேவியும் வசிக்கிறார்கள். இதன் காரணமாக, அமலாகி ஏகாதசி நாளில், விஷ்ணுவை அம்லா (நெல்லி) மரத்தடியில் அமர்ந்து வழிபடுகின்றனர். பங்குனி மாதத்தின் வளர்பிறை ஏகாதசி அமலாகி ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இது, "ஆம்லா ஏகாதசி'' என்றும், "ரங்பர்னி ஏகாதசி'' என்றும் அழைக்கப்படுகிறது.
மார்ச் 20,2024 புதன்கிழமை, அமலாகி ஏகாதசி. ஏகாதசி திதி ஆரம்பம். மார்ச் 20, 2024 மதியம் 12:21 மணிக்கு ஏகாதசி திதி முடிவடைகிறது. அமலாகி ஏகாதசி அன்று விரதம் அனுசரித்து, பகவான் ஸ்ரீமன் நாரயணனை வணங்குவதன் மூலம், அனைத்து பாவங்களில் இருந்தும் விமோசனம் கிடைக்கும். ஏகாதசி அன்று, விரதம் இருப்பது நிலையான பலனைத் தரும்.
மகாபாரதத்தில் கிருஷ்ணர், யுதிஷ்டிரருக்கு ஏகாதசி விரதத்தின் முக்கியத்துவத்தை விளக்குகிறார். இன்று விரதம் இருந்து, நாளை துவாதசி பாராயணம் செய்ய வேண்டும். அப்போதுதான் முழுபலன் கிட்டும்.
- மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சன சேவை.
- முளையிடுவார் நாயனார் குரு பூஜை.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, பங்குனி 7 (புதன்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: ஏகாதசி நாளை விடியற்காலை 5.26 மணி வரை. பிறகு துவாதசி.
நட்சத்திரம்: பூசம் நள்ளிரவு 1.30 மணி வரை. பிறகு ஆயில்யம்.
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று சர்வ ஏகாதசி. சுபமுகூர்த்த தினம். பரமக்குடி அன்னை முத்தாலம்மன் ரிஷப வாகனத்தில் பவனி. திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்வர கலசாபிஷேகம். பழனி ஸ்ரீமுருகப் பெருமான் வெள்ளி காமதேனு வாகனத்தில் புறப்பாடு. காஞ்சீபுரம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் ரிஷப வாகனத்தில் பவனி. முளையிடுவார் நாயனார் குரு பூஜை. சென்னை ஸ்ரீமல்லீஸ்வரர் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமிக்கு காலை சிறப்பு திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆர்வம்
ரிஷபம்-துணிவு
மிதுனம்-பணிவு
கடகம்-உறுதி
சிம்மம்-கவனம்
கன்னி-ஜெயம்
துலாம்- பரிவு
விருச்சிகம்-உதவி
தனுசு- சுபம்
மகரம்-பயணம்
கும்பம்-நற்செய்தி
மீனம்-இன்சொல்
- மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா முடிந்தவுடன் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா தொடங்குகிறது.
- 21-ந்தேதி கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் இருந்து கள்ளழகர் கோலத்தில் சுந்தர்ராஜ பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் மதுரைக்கு புறப்பாடாகிறார்.
உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை பெருவிழா அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதன் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் அடுத்த மாதம் 20ந்தேதி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மறுநாள் (21ந்தேதி) தேரோட்டம் நடக்கிறது.
மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா முடிந்தவுடன் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா தொடங்குகிறது. அதன்படி வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை), மறுநாள் (20-ந்தேதி) மாலை 6.00 மணிக்கு மேல் கள்ளழகர் கோவிலில் உள்ள தோளுக்கினியானின் திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி எழுந்தருளுகிறார். 21-ந்தேதி மாலை 6.10 மணிக்கு மேல் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் இருந்து கள்ளழகர் கோலத்தில் சுந்தர்ராஜ பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் மதுரைக்கு புறப்பாடாகிறார்.
அப்பன் திருப்பதி, பொய்கைக்கரைபட்டி, கள்ளந்திரி என வழிநெடுகிலும் நூற்றுக்கணக்கான மண்டகப்படிகளில் சுவாமி எழுந்தருளி அருள்பாலிக்கிறார். மறுநாள் 22-ந்தேதி மதுரை மூன்றுமாவடி பகுதியில் எதிர்சேவை நடக்கிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அவரை எதிர்கொண்டு வரவேற்கிறார்கள்.
மறுநாள் (23-ந்தேதி) காலை 5.51 மணிக்கு மேல் 6.10 மணிக்குள் கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் மதுரை வைகையாற்றில் இறங்கும் வைபவம் நடக்கிறது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்வார்கள். அதனைத் தொடர்ந்து மதியம் ராம ராயர் மண்டபத்தில் தண்ணீர் பீய்ச்சுதல் நடக்கிறது. தொடர்ந்து அண்ணாநகர் வழியாக இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் அழகர் எழுந்தருளுகிறார்.
24-ந்தேதி காலை அங்கிருந்து புறப்பாடாகி கருட வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு முதல் விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் தசாவதார கோலத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார்.
25-ந்தேதி அதிகாலை மோகினி அவதாரத்தில் காட்சியளிக்கும் கள்ளழகர் பிற்பகலில் ராஜாங்க அலங்காரத்தில் அனந்தராயர் பல்லக்கில் எழுந்தருளி ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு புறப்பாடாகிறார். இரவு பூப்பல்லக்கில் சுவாமி காட்சியளிக்கிறார்.
மறுநாள் (26-ந்தேதி) அழகர்மலைக்கு புறப்பாடாகும் அழகர் 27-ந்தேதி காலை 11 மணிக்குள் இருப்பிடம் சேருகிறார். 28-ந்தேதி உற்சவ சாற்று முறையுடன் கள்ளழகர் சித்திரை பெருவிழா முடிவடைகிறது.
மேற்கண்ட தகவலை கோவில் செயல் அலுவலர் கலைவாணன் தெரிவித்துள்ளார்.
- மார்ச் 9ஆம் தேதி தொடங்கிய விழா வருகின்ற மார்ச் 22ஆம் தேதி வரை வெகு விமர்சையாக நடைபெறுகிறது.
- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கேளூர் சித்தேரி கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு ஸ்ரீ பூங்காவனத்தம்மன் ரத உற்சவ விழா விமர்சையாக நடைபெற்றது.
மார்ச் 9ஆம் தேதி தொடங்கிய விழா வருகின்ற மார்ச் 22ஆம் தேதி வரை வெகு விமர்சையாக நடைபெறுகிறது இந்நிலையில் இன்று பங்குனி ஐந்தாம் நாள் ரத உற்சவ தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது இந்நிகழ்வில் அலங்கரிக்கப்பட்ட பூங்காவனத்தம்மன் தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இந்நிகழ்வை காண போளூர், கேளூர், துறிஞ்சிகுப்பம், சந்தவாசல், தேப்பனந்தல் அணைப்பேட்டை விளக்கனந்தல், கஸ்தம்பாடி, சமத்துவபுரம், கட்டிப்பூண்டி, ஆத்துவம்பாடி பால்வார்த்து வென்றான் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- அன்னை பார்வதி தேவி பரம சிவனை மணந்து கொண்ட அருமையான நாள்.
- சிவபெருமான், `கல்யாண சுந்தரரா’க காட்சியளித்தார்.
மீன ராசியில் சூரியன் இருக்கும் பொழுது, உத்திரம் நட்சத்திரம் வரும் வேளையில் `பங்குனி உத்திரம்' கொண்டாடப்படுகிறது. இதனை `பங்குனி உத்திரம் விரதம்' என்றும் சொல்வார்கள். அன்னை பார்வதி தேவி பரம சிவனை மணந்து கொண்ட அருமையான நாள்.
ராமபிரான், சீதா தேவியை மணந்த தினம், ஆண்டாள் திருக்கல்யாணம் நடந்தது என்று பல வகையான சிறப்புகள் வாய்ந்தது இந்த நாள். அன்றைய தினம் தெய்வீக திருமணங்களை நடத்துவதற்கு பொருள் உதவி செய்வது, அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பது போன்றவை, மிக மிக விசேஷமானதாகும்.
ராமாயண கல்யாணம்
அயோத்தி வந்த விஸ்வாமித்திரர், தசரத மகாராஜாவிடம், `வனத்தில் முனிவர்களை யாகம் செய்ய விடாமல் தடுக்கும் தீய சக்திகளை அழிக்க, ராம- லட்சுமணரை தன்னுடன் அனுப்பி வைக்க வேண்டும்' என்று கேட்கிறார். தசரதரின் ஒப்புதலின் பேரில் ராமனும், லட்சுமணனும் விஸ்வாமித்திரருடன் கானகம் சென்றனர். அங்கு யாகத்திற்கு இடையூறாக இருந்த தாடகை என்னும் அரக்கியை அழித்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் வழியில், அகலிகையின் சாபம் ராமனால் நீங்கியது.
பின்னர் அவர்கள் ஜனகர் ஆட்சி செய்து வந்த மிதிலாபுரி நோக்கி சென்றனர். நிலத்தை உழுத போது, பூமியில் புதைந்திருந்த பெட்டிக்குள் இருந்து கிடைத்த ஜனருக்கு கிடைத்த குழந்தைதான், சீதாதேவி. வளர்ந்து நின்ற சீதா தேவியை, 'தன்னிடம் இருக்கும் சிவ தனுசை வளைத்து நாண் ஏற்றும் ஆண் மகனுக்கே திருமணம் செய்து கொடுப்பேன்' என்று ஜனகர் அறிவித்திருந்தார்.
அதன்படி மிதிலாபுரி வந்த ராம பிரான், சிவ தனுசை தன் புஜபலத்தால் வளைத்தது மட்டுமல்ல, அந்த வில்லை உடைக்கவும் செய்தார். அப்போது ஜனகர், அங்கிருந்த தன்னுடைய புரோகிதரான சதாநந்தரை நோக்கி, "இவர்களுக்கு விவாகம் நடைபெற வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள்" என்றார்.
மேலும் "என் மற்றொரு மகள் ஊர்மிளையை லட்சுமணனுக்கும், என் சகோதரர் குசத்வஜருடைய குமாரிகளாகிய இருவரில் சுருதா கீர்த்தியை சத்ருக்ணனுக்கும், மாண்டவியை பரதனுக்கும் திருமணம் செய்ய எண்ணி உள்ளேன். அதற்கான ஏற்பாடுகளையும் செய்யுங்கள். இன்று மகம் நட்சத்திரம். அடுத்த மூன்றாவது நாள் உத்திரம் நட்சத்திரம். அன்றைய தினம் இந்த நான்கு திருமணங்களும் நடைபெற வேண்டும்" என்று கூறினார். அப்படி அந்த நால்வரின் திருமணம் நடைபெற்ற தினமே `பங்குனி உத்திரம்' ஆகும்.
சாஸ்திரங்களில் 8 விவாகங்களை பற்றி கூறப்பட்டுள்ளது. அவை பிராம்மம், தைவ்வம், ஆர்ஷம், பிராஜாபத்தியம், ஆசுரம், காந்தர்வம், ராட்சஸம், பைசாசம் ஆகியவை ஆகும்.
இந்த விஷயத்தை இப்போது மிக கவனத்துடன் பார்க்க வேண்டும். எட்டு விவாகங்களில் தற்போது, கன்னிகா தானம் மற்றும் காந்தருவம் (காதல் திருமணம்) மட்டும்தான் வழக்கத்தில் உள்ளது. இதிலும் எந்த இடத்திலும் பெண்ணுக்கும், பிள்ளைக்கும் நட்சத்திர பொருத்தம் பார்த்து திருமணம் செய்ய வேண்டும் என்று எந்த மகரிஷியும் கூறவில்லை.
தற்போது கலியுகத்தில் நாம் திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது கூட, பொதுவாக ருது ஆகாத பெண்களுக்கு மட்டும்தான் நட்சத்திர தோஷங்களும் (ஆயில்யம், மூலம்) ஆண், பெண் நட்சத்திரப் பொருத்தமும் பார்க்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ராசி நிச்சயம், லக்ன நிச்சயம், பெரியோர் நிச்சயம், குரு நிச்சயம், தெய்வ நிச்சயம் என்று ஐந்தையும் வரிசையாக கவனிக்க வேண்டும்.
லட்சுமணன், பரதன், சத்ருக்ணன் ஆகியோரின் திருமண விஷயத்தில், குரு நிச்சயம் தான் செயல்பட்டது. விஸ்வாமித்திரர், வசிஷ்டர், சதானந்தர் ஆகியோர் தசரதர் மற்றும் ஜனக மன்னர்களுக்கு ஆலோசனை சொல்லி, அதன்படி பரதன், சத்ருக்ணன், லட்சுமணன் ஆகியோரின் திருமணங்கள் முடிந்தன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த இருபெரும் முனிவர்கள் சொன்னதை ஜனகரும், தசரத மகாராஜாவும் ஏற்றுக் கொண்டார்கள். இதுதான் 'குரு நிச்சயம்' என சொல்லப்படுவது.

சிவன்- பார்வதி திருமணம்
முருகப்பெருமான் அவதாரம் செய்ய வேண்டிய காரணத்தால், பார்வதி மானுடப் பெண்ணாக பிறக்கிறார். கடும் தவத்தின் பயனாக சிவபெருமானை மணாளனாக அடைகிறார். திருமண நாளின் போது, சிவபெருமான் தன்னுடைய உடல் முழுவதும் விபூதி (சாம்பல்) தரித்து, யானைத் தோலில் ஆடை அணிந்து வருகை தந்தார்.
அப்போது பார்வதி தேவியின் விருப்பத்திற்கு இணங்க, சிவபெருமான் அலங்காரம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டார். இதையடுத்து பார்வதி தேவி தன் கையால் சிவபெருமானுக்கு திலகம் விட்டு, வண்ண வண்ண நிறங்களை உடலில் பூசி சிவனை அலங்கரித்தார். சிவபெருமான், `கல்யாண சுந்தரரா'க காட்சியளித்தார். இன்றும் கூட வட தேசங்களில் ஹோலி பண்டிகையின் போது, வண்ண நிறங்களை மற்றவரின் மீது பூசும் நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது.

முருகப்பெருமான் கல்யாணம்
முருகப்பெருமான் தேவர்களின் வேண்டுகோள்படி, சூரபத்மனை வதம் செய்தார். முருகப்பெருமானின் அரிய செயலுக்காகவும், தேவர்களின் துயரை அவர் துடைத்தெரிந்த காரணத்தாலும், தேவர்களின் தலைவனான தேவேந்திரன், தன்னுடைய மகள் தெய்வானையை முருகப்பெருமானுக்கு மணம் முடித்துக் கொடுத்தார். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருவாவினன் குடி எனப்படும் பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை போன்ற இடங்களில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்த பெரியாழ்வார், துளசி வனத்தில் ஒரு பெண் குழந்தையை கண்டெடுத்தார். அந்த பிள்ளைக்கு `கோதை' என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். அவளே பின்னாளில் `ஆண்டாள்' என்றானார். ஆண்டாளுக்கு பங்குனி உத்திரம் அன்றுதான் வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. இந்த நாளில் பெருமாள் கோவில்களில், ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவதைக் காணலாம்.
கடுமையான தவத்தில் இருந்த சிவபெருமானை நோக்கி, காம பாணம் செலுத்தி அவரது தியானத்தைக் கலைத்தான் மன்மதன். இதனால் அவனை தன்னுடைய நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார், சிவபெருமான். பின்னர் ரதி தேவியின் வேண்டுகோளுக்கு இணங்கி, மன்மதனை உயிப்பித்துக் கொடுத்தார். அந்த நாளும் பங்குனி உத்திர திருநாள்தான். இது தவிர பஞ்ச பாண்டவர்களில் அர்ச்சுனன் பிறந்ததும், ஐயப்பன் அவதரித்ததும் இந்த நன்னாளில்தான்.
இந்த நாளில் புண்ணிய நதிகளில் அல்லது குளங்களில் நீராடி, ஆலயங்களில் நடைபெறும் தெய்வீக திருக்கல்யாணங்களை காண்பது மிக மிக விசேஷம். பலர் விரதம் இருந்து பழனி, சுவாமிமலை போன்ற தலங்களுக்கு சென்று வழிபாடு செய்வார்கள். இந்திராணி இந்த விரதத்தை கடைப்பிடித்து இந்திரனை திருமணம் செய்து கொண்டாள் என்கிறது புராணம். சரஸ்வதியும் இந்த வரத்தை கடைப்பிடித்துதான், பிரம்மாவை மணம் புரிந்துகொண்டதாக சொல்லப்படுகிறது.
இந்த பங்குனி உத்திரம் அன்று விரதம் இருந்து தெய்வீக திருக்கல்யாணத்தை காண்பவர்கள் (ஆண், பெண்) அனைவருக்கும், இதுநாள் வரை திருமணத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். மேலும் இந்த நாளில் இறைவனின் திருக்கல்யாண வைபவத்தை காண்பவர்கள், திருமணம் ஆகி பிரிந்து இருந்தால் அவர்கள் ஒன்று சேரவும் வாய்ப்பு உண்டாகும்.
- ரமலான் மாதத்திற்கு தனிப்பெரும் சிறப்புகள் பல உண்டு.
- புனிதமான குர்ஆன் அருளப்பட்ட மாதம் என்று கூறுகிறது.
இஸ்லாமிய மாதங்களில் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதத்திற்கு தனிப்பெரும் சிறப்புகள் பல உண்டு. சிறப்புமிக்க அந்த நாட்களை நாம் கொஞ்சமும் வீணாக்கி விடக்கூடாது என்பது தான் இங்கு நாம் கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒன்று.
இந்த மாதத்தைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான் இப்படி: "ரமலான் மாதம் எத்தகைய (மகத்துவ முடைய)து என்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழி காட்டும் திருகுர்ஆன் (என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக் கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது. ஆகவே, உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும்.
ஆனால், (அக்காலத்தில் உங்களில்) யாராவது நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் (ரமலான் அல்லாத) மற்ற நாள்களில் (விட்டுப்போன நாள்களின் நோன்பைக்) கணக்கிட்டு (நோற்று) விடவும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவான கட்டளையைக் கொடுக்க விரும்புகின்றானே தவிர சிரமத்தைக் கொடுக்க விரும்பவில்லை.
மேலும், தவறிய நாள்களைக் கணக்கிடும்படி கட்டளையிட்டதெல்லாம், உங்கள் மீது கடமையாக உள்ள ஒரு மாத நோன்பின் எண்ணிக்கையை நீங்கள் முழுமை செய்வதற்காகவும்; (அவ்வாறே) அல்லாஹ் உங்களை நேரான பாதையில் நடத்தியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்து வதற்காகவும் (நோய், பிரயாணம் போன்ற சந்தர்ப்பங்களில் நோன்பு நோற்காதிருக்க உங்களுக்கு அனுமதி வழங்கியதற்காக) நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதற்காகவுமே ஆகும்". (திருக்குர்ஆன் 2:185)
இந்த மாதம் சாதாரணமான மாதம் அல்ல. அது புனிதமான குர்ஆன் அருளப்பட்ட மாதம் என்று கூறுகிறது. அது இறைவனால் இறக்கி அருளப்பட்ட வேத புத்தகம். குர்ஆன் என்பது ஓதிப்பார்ப்பதற்கு மட்டும் அல்ல, அது ஓதப்பட்டு அதில் உள்ளபடி அமல் செய்ய வேண்டும் என்பது தான் அதன் குறிக்கோள் ஆகும்.
அதே போன்று தான் இந்தப் புனித ரமலான் மாதத்தின் முப்பது நோன்புகளும் முறையாக நோற்கப்பட்டு குறையின்றி பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தான் இதன் நோக்கமாகும். ரமலான் நோன்பைப் பற்றி நபிகள் நாயகம் பல வழிகளில் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள்.
நோன்பிற்கு அதிகமான சிறப்பும், மகத்தான பன்மடங்கு கூலியும் உண்டு, நோன்பை மதித்து, கண்ணியப்படுத்தும் விதத்தில் அல்லாஹ் அதனை தனக்குரியது என கூறியுள்ளான். நபிகள் நாயகம் அல்லாஹ்விடமிருந்து அறிவிக்கும் நபிமொழி வழியாக கூறினார்கள்.
`ஆதமுடைய மகனின் செயல்கள் அனைத்திற்கும் நன்மை பன்மடங்காக வழங்கப்படும். ஒரு நன்மை பத்தாக, அதிலிருந்து எழுநூறாகக்கூட பெருகும். ஆனால் நோன்பைத் தவிர, ஏனெனில் அது எனக்குரியது, அதற்கு நானே கூலி வழங்குவேன், ஏனெனில் அவனது ஆசை மற்றும் உணவை எனக்காகவே அவன் விட்டிருக்கின்றான்'.
'நோன்பாளிக்கு இரு மகிழ்ச்சிகள் உள்ளன; ஒன்று அவன் நோன்பு திறக்கும் போது, மற்றது தனது இறைவனை அவன் சந்திக்கும் போது'. இப்படியெல்லாம் பல்வேறு சிறப்புகள் ரமலான் நோன்புக்கு உண்டு. அவற்றின் சிறப்புகளை நாம் தான் புரிந்து கொண்டு சரிவர செயல்பட வேண்டும்.
நோன்பைப் பற்றி அல்லாஹ் சொல்லும் போது: 'நீங்கள் நோன்பை முழுமையாக நிறைவேற்றுங்கள்' என்று கூறுகின்றான். நோன்பு என்பது சும்மா பசித்திருப்பதல்ல, அது ஒரு இறைவணக்கம். எனவே அதை நாம் மிக கவனமுடன் மிகச்சரியாக கடைப்பிடிக்க வேண்டும்.
'நோன்பு ஒரு கேடயமாகும். தவறான பேச்சு பேச வேண்டாம். யாராவது உம்மிடம் சண்டைக்கு வந்தால் `நான் நோன்பாளி' என்று அவரிடம் கூறிவிடவும்' (நூல்: புகாரி)
நோன்பின் மூலம் பசித்திருப்பதால் ஏழ்மையின் வழி உணரப்பட்டு, ஏழை, வறியவர், அநாதை, என்று தேவையுள்ளவர்களைத் தேடிச்சென்று உதவிக்கரம் நீட்டுவதை நோன்பு கற்றுக்கொடுக்கிறது.
இப்படியாக இந்த நோன்புக்குள் எண்ணற்ற நன்மைகள் அடங்கியிருக்கின்றன. குறிப்பாக கடைசி பத்து நாட்கள் மிகவும் முக்கியமானவை. அதனால் தான் "ஆயிரம் மாதங்களுக்கு நிகரான நன்மைகளை வழங்கும் 'லைலத்துல் கத்ர்' எனும் புனித இரவு இந்த இறுதி பத்து நாட்களில் தான் அடங்கி இருக்கிறது. அதை நீங்கள் தேடிப் பிடித்துக் கொள்ளுங்கள்" என்று நபிகள் நாயகம் சொன்னார்கள்.
இதனால் தான் இஃதிகாப் (தனித்திருத்தல்) என்ற அமலை இஸ்லாம் அறிமுகம் செய்திருக்கிறது என்பது இங்கு இணைத்துப் பார்க்கத்தக்கது.
சமுதாய சமநிலைத் திட்டங்களைக் கற்றுத்தரும் புனித ரமலான் நோன்பைப் புரிந்து முழு உலகிலும் சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்து வாழ்வாங்கு வாழ்வோமாக.
- வலுவின்மையில் தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்.
- இகழ்ச்சியிலும், இன்னலிலும் கிறிஸ்துவை முன்னிட்டு அகமகிழ்ந்தார்.
இறைமகன் இயேசு கிறிஸ்துவின் விண்ணுலகப் பயணத்திற்கு பிறகு அவருடைய சீடர்கள் மறை பரப்புப் பணியைச் செய்தனர். அவர்களோடு திருத்தூதுவர்கள் பலரும் இணைந்து இத்திருப்பணியைத் திறம்படச் செய்து வந்தனர். இவர்களில் மிகவும் முக்கியமானவர் தூய பவுல் அடிகளார். இவருடைய தீவிர நற்செய்திப் பணியின் காரணமாக பல திருச்சபைகள் உருவாயின. செயலற்றுப் போயிருந்த பல திருச்சபைகளை உயிர்ப்போடும், இறையியற் தெளிவோடும் செயல்பட வைத்தார்.
தூய பவுல், ஆண்டவரின் திருவாக்காக கூறுகிறார்: 'என் அருள் உனக்குப் போதும் வலுவின்மையில் தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்'. (2 கொரி.12:9)
தன் பலவீனத்தில் இறைபலத்தை உணர்ந்த தூய பவுல், யூத சமயத்தின் மீதிருந்த பக்தி வைராக்கியத்தினால் யூத சமயத்தின் தலைவர்களின் அனுமதியுடன் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவதற்காக தமஸ்கு சாலையில் பயணம் செய்தவர், கிறிஸ்துவின் தூதுவராக அழைக்கப்படுகிறார்.
தான் உருவாக்கிய பல திருச்சபைகளுக்கு கடிதங்களை எழுதி அவர்களோடு நல்ல தொடர்பில் இருந்தார். நற்செய்தி பணிக்காக பல்வேறு துன்பங்களையும், இழப்புகளையும், தண்டனைகளையும், சிறைக்கூட அனுபவங்களையும் மகிழ்ச்சியோடும், பெருமையோடும் ஏற்றுக்கொண்டார். தன் பலவீனங்களைக் குறித்தும் அவர் மேன்மை பாராட்டினார். 'என் வலுவின்மையே எனக்குப் பெருமை' (2 கொரி.12:5) என்கிறார்.
உடலில் தைத்த முள்
கடவுளின் வழிநடத்துதலை நேரடியாகவும், மறைமுகமாகவும், இறைத்தூதர்கள் மூலமாகவும் பல்வேறு வெளிப்பாடுகளை பெற்ற தூய பவுல் அடிகளார் தன் உடலில் இருக்கின்ற ஒரு மாபெரும் பலவீனத்தைக் குறித்து பெருமையோடு கூறுகிறார். தூய பவுல் அடிகளார் எவ்விதத்திலும் பெருமை அடையாதபடி துன்பப்படுத்தும் ஒரு நோயை அவர் அனுபவிக்க வேண்டியதாயிற்று.
அதனால் தான் 'உடலில் தைத்த முள்' என்பதற்கு பல்வேறு விளக்கங்கள் சொல்லப்படுகிறது. சிலர் `கிட்டப்பார்வை குறைபாடு' என்றும், வேறு சிலர் `மலேரியா காய்ச்சல்' என்றும், இன்னும் சிலர் `காக்காய் வலிப்பு' என்றும் கூறுவர். (கலா 4:13-15).
ஆனால் உண்மை அடிப்படையில் `உடலில்' என்பதை `உடலின் நிமித்தம்' என்று வாசிப்பது தான் மிகவும் பொருத்தமானது. அப்படியானால் இங்கே `முள்' எனக் குறிப்பிடுவது ஒரு கடுமை மிக்க ஆவிக்குரிய சோதனையைக் குறிக்கும். அவரின் பலவீனம் அவருடைய மறை பரப்பு பணியைப் பெரிதும் தடைசெய்யும் இன்னல்களை, வலிகளைக் கொடுத்த போதும் அச்சம் கொள்ளவும், நம்பிக்கை இழக்கும்படியான சோதனைக்குட்பட்டார் என்பது உண்மை.
அத்தகைய சோதனை ஏற்பட கடவுளின் அனுமதி இருந்தாலும் `அதை எனைக்குட்டும் சாத்தானின் தூதன்' எனக்கூறுகிறார். 'குட்டும்' எனும் போது தொடர்ந்து இடைவிடாமல் நிகழும் தன்மையை குறிப்பிடுகிறார். பவுல் அடிகளார், 'அதை என்னிடமிருந்து நீக்கிவிடுமாறு மூன்று முறை ஆண்டவரிடம் வருந்தி வேண்டினேன்' (2 கொரி 12:8) என்கிறார்.
ஆனால் ஆண்டவர், 'என் அருள் உனக்குப் போதும். வலுவின்மையில் தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்' என்கிறார். ஆண்டவர் இயேசு கெத்சமனே தோட்டத்தில் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும் என்று மூன்று முறை ஜெபித்தார். நேர்ந்த இன்னல் நீக்கப்படவில்லை. ஆனால் அதை தாங்குவதற்கு வலிமை அளிக்கும் விதமாக அப்போது விண்ணகத்திலிருந்து ஒரு தூதர் தோன்றி அவரை வலுப்படுத்தினார்.
அதேபோல் பவுல் அடியாருக்கும் ஆண்டவர் 'என் வல்லமை பூரணமாக விளங்கும்' என்ற பதிலையேத் தருகிறார். ஒருமுறை மட்டும் தான் இத்திருவாக்கு அருளப்படினும் அதன் நிறைபலனைத் தொடர்ந்து அனுபவித்து வருகிறார். பவுலடியார் தன் பலவீனத்தைக் குறித்துப் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறார். தன் வலுவின்மையிலும், இகழ்ச்சியிலும், இன்னலிலும் கிறிஸ்துவை முன்னிட்டு அகமகிழ்ந்தார். ஏனெனில் தான் வலுவற்றிருக்கும் போது வல்லமை பெற்றவனாக உணர்ந்தார்.
பிரியமானவர்களே, நீங்களும் உங்கள் பலவீனத்தைக் குறித்து வேதனைப்பட்டுக் கொண்டிருக்கலாம். உங்கள் பலவீனத்தால் உங்கள் வாழ்வு பொருளிழந்து, அருளிழந்து, மகிழ்விழந்து போனதாக நீங்கள் உணர்ந்து கொண்டிருக்கலாம்.
`கடவுளே இந்த பலவீனம் மட்டும் என் வாழ்வில் இல்லாமல் போயிருந்தால் நான் எப்படியோ இருந்திருப்பேன். என் வாழ்க்கைத் தரம் மென்மேலும் உயர்ந்து இருக்கும். என் வாழ்வில் இருக்கின்ற இந்த பலவீனம் என் வாழ்க்கையையே தலைகீழாக புரட்டிப் போட்டு விட்டது. என் வாழ்வின் முன்னேற்றத்தைக் குலைத்து என் வாழ்வின் நிலை உயரமுடியாமல் செய்துவிட்டது' என்று மனதிற்குள்ளாக நீங்கள் கலங்கிக்கொண்டிருக்கலாம்
ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். உங்களிடம் இருக்கும் இந்த பலவீனம் தான் கடவுளின் கிருபையை, வலிமையை, அன்பின் ஆழத்தை உங்களுக்கு உணர்த்துகிறது. உங்கள் பலவீனத்தில் தான் கடவுளின் நிறைவான இறையாற்றலை உங்களில் அனுபவிக்க வாய்ப்புத் தருகின்றது. உங்கள் பலவீனம் தான் இறைவனோடு உங்களுக்கு இருக்கின்ற உறவை, ஐக்கியத்தை வலுப்பெறச்செய்கின்றது. ஆதலால் உங்களுடைய பலவீனத்தைக் குறித்து தாழ்வு மனப்பான்மை கொள்ளாமல் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் நம் வலுவின்மையில் தான் கடவுளின் வல்லமை நிறைவாய் வெளிப்படும்!
- பிரம்மோற்சவத்தில் ஒருநாள், மண்டபத்தில் அரங்கநாதர் எழுந்தருள்வார்.
- இறைவனுக்கு `நவமுது' என்னும் கஞ்சியும் நைவேத்தியமாக படைக்கப்படும்.
ஸ்ரீரங்கம் அருகே உள்ள `அகண்ட காவிரி' என்ற ஊரில், சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விஷ்ணு பக்தை வாழ்ந்தாள். அவளுக்கு, ஒரே ஒரு மகன். அவனுக்கு, தான் வழிபடும் இறைவனான `அரங்கன்' என்ற பெயரையே வைத்தாள். அந்த பிள்ளை வளர்ந்து அப்பகுதியில் மாடு மேய்க்கும் தொழிலை செய்து வந்தான். நண்பகல் வேளையில் தன் பிள்ளை இருக்கும் இடத்திற்குச் சென்று அவனுக்கு `கஞ்சி' (தண்ணீர் ஊற்றி வைக்கப்பட்ட பழையசோறு), கொடுத்து விட்டு திரும்புவது அந்த தாயின் வழக்கம்.
குறிப்பிட்ட இடத்தில் ஒரு அகண்ட மரத்தின் அடியில் அமர்ந்து `அரங்கா..' என்று அழைத்ததும், அந்த பிள்ளை ஓடோடி வந்து தன் தாய் கொண்டு வந்த அமிர்தம் போன்ற அந்த கஞ்சியை பருகி விட்டு, தாயின் மடியில் படுத்து சற்று ஓய்வெடுத்து விட்டு, மீண்டும் மாடுகளை மேய்க்கச் செல்வான். அன்றும் அப்படித்தான் மகனுக்காக பழைய சோறு எடுத்து வந்திருந்தாள், அந்த விஷ்ணு பக்தை.
`அரங்கா..' என்ற ஒன்றை குரலுக்கே ஓடோடி வரும் மகன், அன்று ஐந்து.. ஆறு முறை அழைத்தும் வரவில்லை. `மகனுக்கு என்ன ஆனதோ..' என்று அந்தத் தாய் பரிதவித்த நேரத்தில்.. `அம்மா..' என்று அழைத்தபடி வந்தான் அந்தச் சிறுவன்.
"ஒரு கன்று வழி தவறி தூரமாக போய்விட்டது. அதை பிடித்து தாயிடம் கொண்டு போய் சேர்த்து விட்டு வர நேரமாகிவிட்டது" என்று, தன் தாயின் முகம் தாங்கி நின்ற கேள்விக்கு, முந்திக் கொண்டு அவனாகவே பதிலை தந்தான்.
பின்னர் தாய் அளித்த கஞ்சியை சுவைத்து அருந்தியவன், "இன்று நேரமாகி விட்டது.. ஓய்வெடுக்க நேரமில்லை" என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓடி மறைந்தான். மகன் சென்றதும் அந்த மரத்தின் நிழலில் சற்று ஓய்வெடுக்கலாம் என்று படுத்தாள், அந்தப் பெண்.
அப்போது `அம்மா.. அம்மா..' என்று சத்தம் கேட்டு விழித்தாள். அருகில் தன் மகன் நின்றிருந்தான். "என்னப்பா.. அதற்குள் வந்து விட்டாய்?" என்று கேட்டாள், அந்த தாய்.
அதற்கு அந்தச் சிறுவன்.. "என்னம்மா சொல்கிறீர்கள்? நான் இப்போதுதான் வருகிறேன். சாப்பாடு தாருங்கள்" என்று கேட்டான். "என்னப்பா சொல்கிறாய்.. இப்போதுதானே சாப்பிட்டு விட்டு போனாய்..." என்று அதிர்ச்சியாக கேட்டாள் தாய்.
`தன் மகன் இப்போதுதான் வருகிறான் என்றால்.. இதற்கு முன்பு இங்கே வந்து சாப்பிட்டு விட்டு போனது யார்?' என்ற கேள்வி தாய்க்கு எழுந்தது. அந்த கேள்வி மகனையும் தொற்றிக் கொண்டது.
மறுநாள் அந்த போலிச் சிறுவனை பிடிக்க இருவரும் ஒரு திட்டமிட்டனர். அதன்படி மதியம் சாப்பாடு கொண்டு வந்து, `அரங்கா.. ' என்று இரண்டு மூன்று முறை அழைக்க அந்தச் சிறுவன் வரவில்லை. உண்மையான மகன் ஒரு மரத்தின் பின்பாக மறைந்திருந்து, போலிச்சிறுவனை பிடிக்க காத்திருந்தான்.
அப்போது முன்தினம் அமுது உண்டச் சிறுவன் வந்து, தாயிடம் கஞ்சியை வாங்கிப் பருகினான். அதைப் பார்த்த உண்மையான மகன், ஓடோடிச் சென்று, "அம்மா.. நான்தான் உங்கள் மகன்" என்றான்.
அதற்கு மற்றொரு சிறுவனோ, "அம்மா நான்தான் உங்கள் மகன்" என்று கூறினான். இருவரும் மாறி மாறி அவ்வாறு சொன்னதும் அந்தத் தாய், "ரங்கநாதா.. இது என்ன விளையாட்டு?" என்று அரற்ற, "விளையாடத்தான் வந்தேன் அம்மா" என்று கூறிய அமுதுண்ட சிறுவன், திருவரங்கம் அரங்கநாதராய் காட்சி தந்தார். தாய்க்கும், பிள்ளைக்கும் ஆசி வழங்கி மறைந்தார்.
இந்த விஷயம் அறிந்த ராமானுஜர், அந்த தாய் வாழ்ந்த ஊருக்கு `ஜீயர்புரம்' என்று பெயரிட்டார். அதோடு அங்கே ஒரு மண்டபமும் கட்ட ஏற்பாடு செய்தார். பங்குனி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் ஒருநாள், அந்த மண்டபத்தில் அரங்கநாதர் எழுந்தருள்வார். அங்கே அந்த தாய்க்கு இறைவன் காட்சி தரும் நிகழ்வும், இறைவனுக்கு `நவமுது' என்னும் கஞ்சியும் நைவேத்தியமாக படைக்கப்படும்.
- 22-ந்தேதி பிரதோஷம்.
- 24-ந்தேதி ஹோலிப்பணடிகை, பவுர்ணமி.
19-ந்தேதி (செவ்வாய்)
* நாங்குநேரி வானமாமலை பெருமாள் கருட வாகன சேவை.
* கழுகுமலை முருகப்பெருமான் காலை காமதேனு வாகனத்திலும், இரவு வெள்ளி யானை வாகனத்திலும் பவனி.
* காரைக்குடி முத்துமாரி அம்மனுக்கு பொங்கல் வைத்து, அக்னி சட்டி எடுத்தல்.
* சமநோக்கு நாள்.
20-ந்தேதி (புதன்)
* முகூர்த்த நாள்.
* பழனி முருகப்பெருமான் வெள்ளி காமதேனு வாகனத்தில் புறப்பாடு.
* திருச்சி தாயுமானவர் வெள்ளி விருட்சப சேவை.
* மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் திருக்கல்யாணம்.
* மேல்நோக்கு நாள்.
21-ந்தேதி (வியாழன்)
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் வெள்ளி யானை வாகனத்தில் பவனி.
* ராமகிரி கல்யாண நரசிங்கப்பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா.
* மதுரை பிரசன்ன வேங்கடேசப்பெருமாள் வெண்ணெய் தாழி சேவை.
* கீழ்நோக்கு நாள்.
22-ந்தேதி (வெள்ளி)
* பிரதோஷம்.
* மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கோவில் ரத உற்சவம்.
* திருப்புல்லாணி ஜெகந்நாதப்பெருமாள் திருக்கல்யாணம்.
* கீழ்நோக்கு நாள்.
23-ந்தேதி (சனி)
* பழனி முருகப்பெருமான் கோவிலில் வெள்ளி ரத உற்சவம்.
* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பூம்பாவையை உயிர்ப்பித்தருளல்.
* பரமக்குடி முத்தாலம்மன் காமதேனு வாகனத்தில் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
24-ந்தேதி (ஞாயிறு)
* முகூர்த்த நாள்.
* பவுர்ணமி.
* ஹோலி பண்டிகை.
* நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில் தங்க தேரோட்டம்.
25-ந்தேதி (திங்கள்)
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் குதிரை வாகன புறப்பாடு.
* திருவல்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாணம்.
* மதுரை பிரசன்ன வேங்கடேசப்பெருமாள் குதிரை வாகனத்தில் வைகை எழுந்தருளல்.
* திருச்சி தாயுமானவர் தீர்த்தம்.
* மேல்நோக்கு நாள்.






