search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பிரதோஷம், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரியில் பக்தர்களுக்கு அனுமதி
    X

    பிரதோஷம், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரியில் பக்தர்களுக்கு அனுமதி

    • 23-ந்தேதி சித்திரை மாத பவுர்ணமி மிகவும் விசேஷமான நாளாகும்.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.

    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகா லிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா மூன்று நாட்கள், பிரதோஷத்திற்கு இரண்டு நாட்கள் என மாதம் 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    அந்த வகையில் வருகிற 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், 24-ந்தேதி காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட உள்ளது. 21-ந்தேதி சித்திரை மாத பிரதோஷத்தை முன் னிட்டு மாலை 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள் சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெறுகிறது.

    அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து மொட்டை உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்து வார்கள். 23-ந்தேதி சித்திரை மாத பவுர்ணமி மிகவும் விசேஷமான நாளாகும். அன்றைய தினம் சுந்தர மகாலிங்கம் சாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.

    24-ந்தேதியுடன் 4 நாள் அனுமதி முடிவடைகிறது. விடுமுறை நாட்களில் பிரதோஷம் மற்றும் சித்திரை மாத பவுர்ணமி வருவதால் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், திருச்சி, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் கோவிலுக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    அதேபோல் இரவில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை, எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களான பீடி, சிகரெட், பாலிதீன் பை, மது, போதை வஸ்து பொருட்கள் கொண்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    நான்கு நாட்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தரமகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர். வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் அவசியம் மருத்துவக் குழுவினர் இருப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×