என் மலர்
வழிபாடு
- குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை.
- இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆடி-25 (சனிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சஷ்டி பின்னிரவு 3.36 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம்: சித்திரை மறுநாள் விடியற்காலை 4.36 மணி வரை பிறகு சுவாதி
யோகம்: மரண அமிர்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் புறப்பாடு. குறுக்குத்துறை முருகப்பெருமான் திருவீதியுலா. மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் கிளி வாகனத்தில் பவனி. பெருமழலைக் குறும்பர் நாயனார் குரு பூஜை. சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பாராட்டு
ரிஷபம்-பரிவு
மிதுனம்-பண்பு
கடகம்-பதவி
சிம்மம்-யோகம்
கன்னி-வரவு
துலாம்- நலம்
விருச்சிகம்-சிந்தனை
தனுசு- மேன்மை
மகரம்-கவனம்
கும்பம்-பெருமை
மீனம்-திறமை
- கோ தானம் செய்தால் பித்ரு சாபம் நிவர்த்தி ஆகும்.
- தேன் தானம் செய்தால் இனிய குரல் கிடைக்கும்.
நாம் இல்லாதவருக்கு செய்யும் தானதர்மங்கள் நமக்கு பல்வேறு நன்மைகளை தரும். எந்த தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
மஞ்சள் தானம் - மங்களம் உண்டாகும்.
பூமி தானம் - இகபர சுகங்கள்.
ஆடை தானம் - சகல ரோக நிவர்த்தி.
கோ தானம் - பித்ரு சாபம் நிவர்த்தி அடையும்.
தில தானம் (எள்) - பாப விமோசனம் அடையலாம்.
வெல்லம் தானம் - குலம் அபிவிருத்தி அடையும்.
நெய் தானம் - வீடுபேறு அடையலாம்.
தேன் தானம் - இனிய குரல் கிடைக்கும்.
சொர்ண தானம் - கோடி புண்ணியம் உண்டாகும்.
வெள்ளி தானம் - பித்ருகள் ஆசி கிடைக்கும்.
தண்ணீர் தானம் - மனசாந்தி ஏற்படும்.
கம்பளி தானம் - துர்சொப்பனம், துர்சகுன பயம் நிவர்த்தி அடையும்.
பால் தானம் - சவுபாக்கியம்
சந்தனக்கட்டை தானம் - புகழ் கிடைக்கும்.
அன்ன தானம் - சகல பாக்கியங்களும் உண்டாகும்.
தானத்தில் சிறந்தது அன்னதானம். அன்னம் இட்டவீடு சின்னம் கெட்டுப்போகாது. பொன், பொருள் எவ்வளவு கொடுத்தாலும் மனம் திருப்தி கொள்வதில்லை. ஆனால் ஒருவன் வேண்டுமென்று கேட்ட வாயால் போதும் என சொல்லி மனநிறைவோடு எழுவது சாப்பிடும்போது மட்டுமே. தானம் செய்த குறுகிய நேரத்திலேயே பலனை தெரியப்படுத்துவது அன்னதானம்.
திருவண்ணாமலையில் அன்னதானம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் அளவிட முடியாதது. திருவண்ணாமலையில் யார் ஒருவர் பசித்தவர்களுக்கு உணவு கொடுக்கிறார்களோ அவர்களது கர்ம வினைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
- வண்டி வேடிக்கை கோலாகலமாக நடைபெற்றது.
- கடவுள் போன்று வேடமிட்டு நேர்த்திக் கடன் செலுத்துவது வழக்கம்.
மேட்டூர்:
சேலத்தில் ஆண்டுக்கு ஒருமுறை 22 நாட்கள் நடைபெறும் ஆடித்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. கோட்டை மாரியம்மன் கோவிலை மையமாக வைத்து அதனை சுற்றியுள்ள கிராமத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் ஆடித்திருவிழா களைகட்டும்.
ஆடி பண்டிகையின் போது பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடனை செலுத்துவர். இதன் ஒரு பகுதியாக வண்டி வேடிக்கை நிகழ்ச்சியில் பக்தர்கள் கடவுள் போன்று வேடமிட்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம்.

அந்த வகையில் சேலம் குகை மாரியம்மன் கோவில், காளியம்மன் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் நேற்று வண்டி வேடிக்கை கோலாகலமாக நடைபெற்றது.
இதில் மேச்சேரி சந்தைப்பேட்டையில் சின்ன மாரியம்மன் கோவில் திருவிழாவில் நேற்று இரவு அக்னி கரகம், அலகு குத்துதல், பொய்க்கால் குதிரை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.
இதையடுத்து வண்டிவேடிக்கை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இக்கோவிலில் பெண்கள் மட்டுமே அம்மன் வேடம் அணிந்து வலம் வரும் வண்டிவேடிக்கை நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
பிரமாண்ட வண்டியில் மின்னொளி ஜொலித்தபடி பெண்கள் கடவுள்களைப் போல் வேடம் அணிந்து வண்டிகளில் அமர வைக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். அகிலாண்டேஸ்வரி, உலகநாயகி, காமாட்சி, காலபைரவி, சத்திய சொரூபி, சரஸ்வதி தேவி, ஞானரூப தேவி, தாட்சாயணி தேவி, துர்க்கை, பகவதி, பார்வதி தேவி, மீனாட்சி, பத்ரகாளியம்மன், வேப்பிலைக்காரி, உமா தேவி, காயத்ரி தேவி, பெரிய நாயகி உள்ளிட்ட பல்வேறு அம்மன் சாமிகள் வேடம் அணிந்து அசத்தினர்.

இப்பெண்கள் வழிநெடுகிலும் பக்தர்களுக்கு ஆசி வழங்குவதுபோல் காட்சி தந்தனர். இது கடவுள் விண்ணுலகில் இருந்து மண்ணுலகிற்கு வந்து ஆசி வழங்குவது போல் இருந்தது. இதிகாசங்களை நினைவுபடுத்தும் வகையில் இந்த வண்டி வேடிக்கை நிகழ்ச்சி இடம் பெற்றிருந்தது.
வண்டியின் முன்பு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொய்க்கால் குதிரை நாட்டியம் ஆடியபடி ஊர்வலமாக வந்தனர். பொய்க்கால் குதிரை நாட்டியம் காண்போரை கவரும் வண்ணம் இருந்தது.
இவ்விழாவில் ஓமலூரான் தெரு, கோல்காரனூர், அழகா கவுண்டனூர் உள்ளிட்ட 12 பட்டி கிராம மக்கள் பங்கேற்றனர்.
- இறைவியின் திருநாமம், மருவார் குழலி.
- தீர்த்தத்தில் நீராடினால், சகல பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் திருச்செம்பொன்பள்ளி என்னும் செம்பனார்கோவில் திருத்தலத்தில் இருக்கிறது மருவார்குழலி உடனாய சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோவில். தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென் கரைத் தலங்களில், இது 42-வது திருத்தலமாகும். புராண காலத்தில் இந்த ஊர், லட்சுமிபுரி, இந்திரபுரி, கந்தபுரி என்று அழைக்கப்பட்டுள்ளது.

தல வரலாறு
பிரம்மாவின் மானச புத்திரராக பிறந்தவர், தட்சன். இவருக்கு பார்வதிதேவியே, மகளாகக் கிடைத்திருந்தாள். அவளுக்கு தாட்சாயிணி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். பின்னர் மகள் விருப்பப்படியே அவளை, சிவ பெருமானுக்கு மணம் முடித்தார்.
சில காலம் கழித்து தட்சன் ஒரு யாகத்தை நடத்தினான். அப்போது அகந்தையால், அந்த யாகத்திற்கு சிவபெருமானை அழைக்க மறுத்தான். இதையறிந்த தாட்சாயிணி, தன் தந்தையை நல்வழிபடுத்தும் எண்ணத்தில் யாகம் நடந்த இடத்திற்கு வந்தாள்.
ஈசனுக்கு அழைப்பு விடுக்காதது பற்றி மகள் கேட்டதில், தட்சன் கோபம் கொண்டான். ஆணவத்தின் உச்சத்தில் இருந்த அவன், தாட்சாயிணியையும், சிவனையும் கடும் வார்த்தைகளால் வசைபாடினான். இதனால் கோபம் கொண்ட தாட்சாயிணி, தட்சனின் யாகம் அழிந்து போகட்டும் என்று சாபமிட்டாள்.
பின்னர் சிவபெருமானிடம், தட்சனுக்கு தண்டனை வழங்கும்படி கேட்டுக்கொண்டாள். சிவபெருமான் தன்னுடைய அம்சமாக வீரபத்திரரையும், அவருக்கு துணையாக பத்ரகாளியையும் அனுப்பிவைத்தார். அவர்கள் தட்சனின் யாகத்தை அழித்தனர்.
இந்த நிலையில் சிவனை நிந்தித்த தட்சனுக்கு மகளாகப் பிறந்தது, தட்சனுக்கு சாபம் அளித்தது ஆகியவற்றை பாவமாக கருதிய தாட்சாயிணி, அந்த பாவம் நீங்க இத்தலத்தில் பஞ்சாக்னி வளர்த்து அதன் நடுவில் அமர்ந்து தவம் புரிந்தாள்.
சிவபெருமான், தாட்சாயிணிக்கு காட்சி கொடுத்து, பார்வதியாக தன்னுடன் சேர்த்துக்கொண்டார். மேலும் 'நீ இந்த தலத்தில் மருவார் குழலியம்மை என்ற திருநாமத்துடன் என்னருகில் இருந்து அருள் செய்வாய்' என்று கூறியதாக தல வரலாறு எடுத்துரைக்கிறது.
இவ்வாலயத்தின் அமைப்பு முறை மற்றும் இங்குள்ள ஜேஷ்டா தேவி ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது, இந்த ஆலயம் கி.பி 879 முதல் கி.பி. 907 வரை ஆட்சி செய்த ஆதித்த சோழன் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
கோச்செங்கண் சோழனும் இவ்வாலயத்தில் திருப்பணி செய்திருக்கிறான். இவ்வாலயத்தில் மூன்றாம் குலோதுங்கச் சோழன், ராஜராஜ சோழன், பிற்காலத்தில் தஞ்சையை ஆட்சி செய்த சரபோஜி மன்னர் காலத்திய கல்வெட்டுகள் உள்ளன.
தட்சனை மகனாகப் பெற பிரம்மாவும், திருமாலை கணவனாக அடைவதற்கு லட்சுமிதேவியும், லட்சுமியை மனைவியாக அடைந்ததற்கு திருமாலும், விருத்திராசுரனை வெல்ல வஜ்ஜிராயுதம் வேண்டி இந்திரனும், தாருகாசுரனை வதம் செய்ய முருகனும் இவ்வாலயத்தில் உள்ள சூரிய தீர்த்தத்தில் நீராடி, இவ்வாலய இறைவனை வழிபாடு செய்துள்ளனர். இவர்களைத் தவிர, குபேரன், வசிஷ்டர், அகத்தியர் ஆகியோரும் இத்தல இறைவனை வணங்கி இருக்கிறார்கள்.

ஆலய அமைப்பு
இவ்வாலயம் கிழக்கு நோக்கிய திருவாசலுடன் மாடக்கோவிலாக அமைந்துள்ளது. பலிபீடம், நந்தி மண்டபத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது வலப்புறத்தில் தெற்கு நோக்கிய நிலையில் அம்மன் சன்னிதி உள்ளது.
இறைவியின் திருநாமம், மருவார் குழலி. இவருக்கு புஷ்பாளகி, தாட்சாயிணி, சுகந்த குந்தளாம்பிகை, சுகந்தவன நாயகி என்ற பெயர்களும் உண்டு. மகாமண்டபத்தில் சூரிய மகா கணபதி, சூரிய லிங்கம், சந்திர லிங்கம், சுப்பிரமணியர், விஷ்ணு, தட்சிணாமூர்த்தி உள்ளனர்.
கருவறையில் மூலவர் சுவர்ணபுரீஸ்வரர், மேலும் கீழும் தலா 16 இதழ்களைக் கொண்ட தாமரை போன்ற ஆவுடையில் சுயம்பு லிங்கமாக வீற்றிருக்கிறார். இவர் தேவப்பிரியர், சுவர்ண லட்சுமீசர், செம்பொன் பள்ளியார் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.
கோஷ்டத்தில் கோஷ்ட கணபதி, தட்சிணாமூர்த்தி, அர்த்த நாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். இங்குள்ள பிட்சாடனத் திருக்கோலம் மிகப் பழைமையானது. அருகே சண்டிகேஸ்வரர் சன்னிதி உள்ளது.
திருச்சுற்றில் மேற்கில் தலவிநாயகரான, `பிரகாசப் பிள்ளையார்' உள்ளார். தவிர வன துர்க்கை, விசுவநாதர், சீனிவாசப் பெருமாள், சிபிகாட்சிநாதர் எனப்படும் மான் மழு ஏந்திய சிவபெருமான், ருத்ராட்ச மாலையும், சக்தி ஆயுதமும் தரித்த நான்கு கரங்களைக் கொண்ட பாலசுப்பிரமணியர், கஜலட்சுமி, ஜேஷ்டாதேவி, வீரபத்திரர், சூரியர், பைரவர் ஆகிய மூர்த்தங்களும், சேத்ரகால பைரவர் மற்றும் நவக்கிரக சன்னிதிகளும் காணப்படுகின்றன.
தென்மேற்கில் பிராமி, மகேஸ்வரி, கவுமாரி, சாமுண்டி, வைஷ்ணவி, வராகி, மகேந்திரி ஆகிய சப்த மாதர்களுடன் விநாயகர் மற்றும் சாஸ்தா உள்ளனர். கோவிலுக்கு அருகில் ஆலயத்தின் தல தீர்த்தமான சூரிய தீர்த்தமும், காவிரியும் உள்ளன. இவ்வாலய தல விருட்சமாக வன்னி மரமும், வில்வ மரமும் உள்ளன.

இவ்வாலய தீர்த்தத்தில் நீராடினால், சகல பாவங்களும் விலகும் என்பது ஐதீகம். நவக்கிரக தோஷத்திற்கு சிறந்த பரிகாரத்தலமாக இந்த ஆலயம் திகழ்கிறது. இங்கு துர்க்கை வழிபாடும் மிகவும் விசேஷம் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாலயத்தில் சித்திரை மாதம் 7-ம் நாளில் இருந்து 18-ம் நாள் வரை, பன்னிரண்டு நாட்கள் சூரிய பூஜை திருவிழா நடத்தப்படுகிறது.
ஆறுகால பூஜை நடைபெறும் இவ்வாலயம், தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
மயிலாடுதுறையில் இருந்து ஆக்கூர் செல்லும் சாலையில் செம்பனார்கோயில் திருத்தலத்தின் வடக்கு பகுதியில் சுவர்ண புரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
- இன்று கருட பஞ்சமி.
- இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் உற்சவம் ஆரம்பம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு, ஆடி 24 (வெள்ளிக்கிழமை)
பிறை: வளர்பிறை.
திதி: பஞ்சமி நள்ளிரவு 1.44 மணி வரை. பிறகு சஷ்டி.
நட்சத்திரம்: அஸ்தம் பின்னிரவு 2.09 மணி வரை. பிறகு சித்திரை.
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று கருட பஞ்சமி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரெங்கமன்னார் இரட்டைத் தோளுக்கினியானில் தீர்த்தவாரி. மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன் விருஷப சேவை. ராமேசுவரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன், திருவாடனை ஸ்ரீசிநேகவல்லியம்மன் கோவில்களில் திருக்கல்யாணம். சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீமாரியம்மன் தேரோட்டம். இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் உற்சவம் ஆரம்பம். திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத்சுந்தர குசாம்பாள் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை. மாடவீதி புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மாற்றம்
ரிஷபம்-மகிழ்ச்சி
மிதுனம்-போட்டி
கடகம்- பொறுமை
சிம்மம்-வளர்ச்சி
கன்னி-உவகை
துலாம்- உண்மை
விருச்சிகம்-செலவு
தனுசு- தெளிவு
மகரம்-இன்பம்
கும்பம்-முயற்சி
மீனம்-நற்செயல்
- ஆவணிமாத வளர்பிறை சதுர்த்தியே நாகசதுர்த்தி.
- நாக வழிபாடு செய்வது அவசியம்.
ஆடி அல்லது ஆவணிமாத வளர்பிறை சதுர்த்தியே நாகசதுர்த்தி என்று கொண்டாடுகிறோம். பொதுவாக சதுர்த்தி நாள் விநாயகருக்கு உரியது என்றாலும் இந்த குறிப்பிட்ட சதுர்த்தியை நாகங்களுக்கு உரிய நாளாக கொண்டாடுகின்றனர். இதன் பின்னணியில் ஒரு கதை உண்டு.
ஒருமுறை காட்டில் ஒரு பையனை நாகம் தீண்டியது. அவன் இறந்து போனான். அதைக் கண்டு அவனுடைய சகோதரி துடித்தாள். தன்னுடைய சகோதரனுக்கு உயிர் தரும்படி அவள் நாகராஜனை வேண்டிக்கொண்டாள். அதற்காக விரதம் இருந்தாள். அந்த விரதத்தின் பயனாக அந்த பெண்ணின் சகோதரன் மறுபடியும் உயிர் பெற்றான். அந்த நாள்தான் நாக சதுர்த்தியாகக் கொண்டாடுகின்றனர்.

இது பல பகுதிகளில் கொண்டாடப்படும் ஒரு விழா. நம்மூரில் பெண்கள் நாக பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களில் வழிபாடு நடத்துகின்றனர் அல்லது அம்மன் கோயிலில் பாம்பு புற்றுக்கு படையல், பூஜை செய்து வழிபடுகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் மற்றும் வடமாநிலங்களில் இது மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நாகத்திற்கு என்று சில கோயில்கள் உள்ளன. அதில் தெற்கே நாகர்கோவிலில் நாகராஜா கோவில் மிகவும் சிறப்பு பெற்றது.
நாகப்பட்டினத்திலும் கும்பகோணத்திலும் நாகநாதர் கோயில்கள் உண்டு. அங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பொதுவாகவே ஜாதகங்களில் ராகு-கேது எனும் சர்ப்ப கிரகங்களால் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தை பாக்கியம் தாமதப்படுகிறவர்கள், நாக வழிபாடு செய்வது அவசியம்.

அரச மரத்தடி, வேப்பமரம் அல்லது ஆலமரத்தடியில் உள்ள நாக பிம்பங்களுக்கு பால் அபிஷேகம் செய்து புதிய வஸ்திரம் கட்டி பூஜை செய்யலாம். திருப்புல்லாணி, ஸ்ரீமுஷ்ணம் போன்ற தலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.
- இன்று நாக சதுர்த்தி.
- நயினார்கோவில் ஸ்ரீ சவுந்தர நாயகியம்மன் தபசுக் காட்சி.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆடி-23 (வியாழக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சதுர்த்தி இரவு 11.47 மணி வரை பிறகு பஞ்சமி
நட்சத்திரம்: உத்திரம் இரவு 11.35 மணி வரை பிறகு அஸ்தம்
யோகம்: மரண, சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று நாக சதுர்த்தி. சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னார் வெட்டிவேர் சப்பரத்தில் பவனி. நயினார்கோவில் ஸ்ரீ சவுந்தர நாயகியம்மன் தபசுக் காட்சி. நாகப்பட்டினம் ஸ்ரீ நீலாயதாட்சியம்மன் ஊஞ்சலில் காட்சி. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சிறப்பு அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி காலை சிறப்பு குருவார திருமஞ்சனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-சாந்தம்
ரிஷபம்-விருத்தி
மிதுனம்-ஜெயம்
கடகம்-லாபம்
சிம்மம்-உயர்வு
கன்னி-முயற்சி
துலாம்- யோகம்
விருச்சிகம்-போட்டி
தனுசு- பரிவு
மகரம்-மகிழ்ச்சி
கும்பம்-நன்மை
மீனம்-நட்பு
- ஆண்டாள் குழந்தையாக கண்டெடுக்கப்பட்ட நாள் தான் ஆடிப்பூரம்.
- திருப்பாவை, நாச்சியார் திருமொழி, திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடப்படும்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு நந்தவனத்தில் நடந்த சம்பவம் இது. நந்தவனத்திற்கு பூக்கள் பறிக்க வந்த பெரியாழ்வார், திடீரென ஒரு குழந்தையின் அழுகுரலை கேட்டார். உடனே அந்த அழுகுரல் எங்கிருந்து வருகிறது என்று வேகமாக தேடினார்.

அங்கிருந்த துளசி மாடத்தை அவர் நெருங்கிய போது அழகான பெண் குழந்தை ஒன்று அங்கே அழுது கொண்டிருந்தது. ஓடிச்சென்று அந்த குழந்தையை தூக்கிய அவர், தெய்வீக முகங்களை கொண்ட அந்த குழந்தையை தன் நெஞ்சோடு அனைத்து கொஞ்சினார். குழந்தை அழுகையை நிறுத்தியது.
இறைவனே தனக்கு அந்த குழந்தையை அளித்ததாக கருதிய பெரியாழ்வார், அந்த குழந்தைக்கு கோதை நாச்சியார் என்று பெயரிட்டார். பிறகு அந்த குழந்தையை தன் குழந்தை போலவே பாசத்தை கொட்டி வளர்த்தார்.
அந்த குழந்தை வேறு யாருமல்ல. சூடிக்கொடுத்த சுடர்கொடியாள் ஆண்டாள் தான். ஸ்ரீவில்லிபுத்தூர் நந்தவனத்தில் ஆண்டாள் குழந்தையாக கண்டெடுக்கப்பட்ட நாள் தான் ஆடிப்பூரம்.
கிழக்கு நோக்கி இருக்கும் பெண் தெய்வங்களை வழிபட்டால் வாழ்க்கையில் எல்லாமே நலமாகும் என்பர். அதன்படி இவளிடம் வேண்டிக் கொள்பவை அனைத்தும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருமணமாகாத பெண்கள் துளசி மாலை வாங்கி வந்து ஆண்டாளுக்கு சாத்தி வணங்கி, பின் அதனை வாங்கி கழுத்தில் அணிந்து கொண்டு அருகில் இருக்கும் கண்ணாடி கிணற்றை சுற்றி வருகிறார்கள். தொடர்ந்து, கிணற்றை எட்டிப் பார்த்து விட்டு பின் மீண்டும் ஆண்டாளை வழிபடுகிறார்கள்.
இவ்வாறு வழிபடுகிறவர்களுக்கு கோவில் சார்பில் வளையல், மஞ்சள் கயிறு பிரசாதமாக கொடுக்கின்றனர். இதனால் தடைப்பட்ட திருமணங்கள் நடக்கும் என்பது நம்பிக்கை.
ஜனன கால ஜாதகத்தில் சுக்கிரன் நீசம், அஸ்தமனம் பெற்று வலிமை குறைந்தவர்கள் ஆடிப்பூர நாளில் அம்பிகையை வழிபட்டால் சுக்கர தோஷம் நீங்கி சகல ஐஸ்வர்யங்களும் பெருகும்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் ஆடிப்பூரத் தன்று ஆண்டாளை நந்த வனத்துக்கு எழுந்தருளச் செய்வார்கள். அப்போது திருப்பாவை, நாச்சியார் திருமொழி, திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடப்படும். இதனால் ஆண்டாள் மனம் குளிர்ந்து இருப்பாள்.
அந்த சமயத்தில் ஆண்டாளை வழிபட்டால் எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறும். அன்றைய தினம் ஸ்ரீவில்லிபுத்துர் செல்ல முடியாத இளம் கன்னிப் பெண்கள் வீட்டில் ஆண்டாள் படம் வைத்து மனதை ஒருநிலைப்படுத்தி திருப்பாவை, நாச்சியார் திருமொழி, திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடினால் திருமணத் தடை அகலும். மனம் விரும்பிய மணாளனை அடையலாம்.
அன்று அம்மனுக்கு சாற்றப்படும் வளையல்களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், சகல நலன்களையும், நீங்காத செல்வத்தையும் பெறலாம் என்பது ஐதீகம்.
- ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் தான் அம்மன் தோன்றினாள்.
- ஆண்டாள் தோன்றிய தினம் ஆடிபூரம்.
ஆடி மாதம் முழுவதும் அம்மனை விதம், விதமாக அலங்கரித்து வழிபடுவார்கள். குறிப்பாக ஆடிப்பூரம் தினத்தன்று அம்மனுக்கு வளையல் அணிவித்து செய்யப்படும் வழிபாடு மிகவும் சிறப்பானது. ஏனெனில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் தான் அம்மன் தோன்றினாள். இதனால் தமிழ்நாடு முழுவதும் வளையல் வழிபாடு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

திருமணத் தடை உள்ள கன்னிப்பெண்களும், குழந்தைச் செல்வம் கேட்டு அம்பாளின் அருள் பெறுவதற்காக பிரார்த்திக்கும் பெண்களும் இந்த வளையல் சாற்று வைபவத்தில் கலந்து கொண்டு பலன் பெறுவார்கள்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா 'முளைக்கொட்டு விழா' என்ற பெயரில் மிகச் சிறப்பாக ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. இந்த விழா நடைபெறும் பிரகாரத்திற்கு 'ஆடி வீதி' என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வளைகாப்பு விழா பதினாறு கால் மண்டபத்தில் ஆடிப்பூரத்தன்று மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. மேலும் அன்று தீமிதி வைபவமும் நடைபெறும்.
திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர், ஸ்ரீ காந்திமதி அம்பாள் ஆலயத்தில் அம்பிகைக்கு 'பூரம் கழித்தல்' எனப்படும் ருது நீராடல் வைபவமும், வளைகாப்பும் சிறப்பாக நடைபெறும்.
இதே போல் திருக்கருகாவூர் அம்மனுக்கும் ருது சாந்தி விழா வைபவம் நடைபெறும். அப்போது பக்தர்கள் கண்ணாடி வளையல்களை அம்மனுக்கு சமர்ப்பித்து, அர்ச்சித்து பெற்றுக் கொள்வார்கள்.

நாகப்பட்டினம் ஸ்ரீ நீலாயதாட்சி அம்மன், தனிக்கோவிலில் எழுந்தருளியுள்ளாள். இங்கு ஆடிப்பூரத்தன்று அம்பிகைக்குப் பூரம் கழித்தல் எனப்படும் ருது நீராடல் வைபவம் மிகச் சிறப்பாக நடைபெறும். அப்போது ஒன்பது கன்னிப்பெண்களை வரிசையாக உட்காரவைத்து நலங்கு வைத்து வெற்றிலைப்பாக்கு, பழம், பூ, சீப்பு, குங்குமச்சிமிழ் மற்றும் ரவிக்கைத்துணி ஆகியவற்றை வழங்குவார்கள்.
திருச்சி உறையூர் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள அன்னை குங்குமவல்லி அம்மனுக்குத் தை மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமை அன்று வளையல் சாற்று வைபவம் நடத்தப்படும்.
என்றாலும் ஆடிப்பூரத்தன்று சுமங்கலிகளும், கன்னிப்பெண்களும், குழந்தை வரம் வேண்டி காத்திருக்கும் தம்பதிகளும், சுகப்பிரசவம் வேண்டும் கர்ப்பிணிப்பெண்களும் அம்மனுக்கு வளையல்களை அர்ச்சனையின் போது பூஜைத்தட்டில் சமர்ப்பித்து, அர்ச்சித்து, அதனைப்பிரசாதமாகப் பெற்று தங்கள் கைகளில் அணிந்து கொள்வார்கள்.
சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ முண்டகக்கண்ணி அம்மன் கோவில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில், திருச்சி திருவனைக்கா ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி கோவில் உள்பட தமிழ்நாட்டில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடிப்பூரம் பெருவிழாவாக இன்று சிறப்பாக கொண்டாடப்படும்.
சென்னையில் இருந்து திருவள்ளூர் செல்லும் சாலையில் உள்ள புட்லூரில் அங்காளபரமேஸ்வரி அம்மன் நிறைமாத கர்ப்பிணியான வடிவத்தில் காட்சி தந்தாள். இதனால் தேவலோக பெண்கள் அம்பாளுக்கு வளையல்களை அணிவித்து அலங்காரம் செய்தார்கள். இதனால் அம்மனின் மனம் குளிர்ந்தது.
ஸ்ரீமகாவிஷ்ணு, விநாயகர் முன் தோப்புகரணம் போட்டதால் இன்றுவரை விநாயகர் முன் நாம் தோப்புகரணம் போடுவதுபோல, அம்மனுக்கு தேவலோகத்தினர் வளைகாப்பு நடத்தி, வளையல் அணிவித்து அம்மனை மகிழ்வித்ததால் இன்றுவரை அம்பாளின் பக்தர்களாகிய நாமும் அம்பாளுக்கு வளையல்களை அணிவித்து அம்மனின் மனதை சந்தோஷப்படுத்துகிறோம்.
அதுபோலவே இன்னும் ஒரு சம்பவமும் இருக்கிறது. பொதுவாகவே பெண்களுக்கு கைநிறைய கலர் கலராக வளையல் அணிந்து அழகு பார்க்க ஆசைப்படுவார்கள். அம்மனுக்கும் அந்த ஆசை இருக்காதா?. அவளும் பெண்தானே.
சக்திதேவி தன் ஆசையை எப்படி நிறைவேற்றிக்கொண்டாள் தெரியுமா? ஒரு வளையல் வியாபாரி ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வளையல்களை விற்க வருவது வழக்கம். ஒருநாள் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கொண்டு வந்த வளையல்களில் பாதி விற்றுவிட்டார் மீதி இருந்த வளையலை மறுநாள் விற்கலாம் என்று நினைத்தார்.

பெரியபாளையம் வரும்போது அவருக்கு மிகுந்த களைப்பு ஏற்பட்டது. நடக்க முடியாத அளவில் சோர்வடைந்தார். இதனால், அங்கு இருந்த ஒரு வேப்பமரத்தடியில் வளையல்களை வைத்துவிட்டு அந்த வளையல் வியாபாரி அங்கேயே தூங்கிவிட்டார். நல்ல தூக்கம்.
சில மணி நேரத்திற்கு பின் கண் விழித்து பார்த்தபோது, தன் அருகில் வைத்திருந்த வளையல்கள் காணாமல் போயிருப்பதை கண்டு பதறினார். சுற்றுமுற்றும் தேடினார். கிடைக்கவில்லை. கவலையுடன் தன் சொந்த ஊரான ஆந்திராவுக்கு சென்றுவிட்டார்.
அன்றிரவு, அந்த வளையல் வியாபாரியின் கனவில் அம்மன் தோன்றினாள். "நான் ரேணுகை பவானி. நீ கொண்டு வந்த வளையல்கள் என் கைகளை அலங்கரித்து இருக்கிறது பார். என் மனதை மகிழ்வித்த உனக்கு வரங்கள் அளிக்கிறேன்.
பல யுகங்களாக பெரியபாளையம் வேப்பமரத்தின் அடியில் புற்றில் சுயம்புவாக வீற்றிருக்கும் என்னை வணங்குபவர்களின் வாழ்க்கை செழிக்கும்." என்றாள் அம்பாள். தான் கண்ட கனவை தன் நண்பர்களிடத்திலும், உறவினர்களிடத்திலும் சொன்னார் வியாபாரி. அத்துடன் சென்னைக்கு அவர்களை அழைத்து வந்து, பெரியபாளையம் மக்களிடத்திலும் தான் கண்ட கனவை பற்றி சொன்னார்.
இதன் பிறகுதான் பெரியபாளையத்தில் சுயம்புவாக தோன்றிய அம்மனுக்கு ஆலயம் கட்டி வழிபாடு செய்தார்கள். அம்மனுக்கும் கைநிறைய வளையல் அணியவேண்டும் என்று ஆசை ஏற்பட்டதால்தான் அந்த வளையல் வியாபாரி வைத்திருந்த வளையல்களை எடுத்துக்கொண்டார் அம்பாள்.

வளையல் அணிய வேண்டும் என்ற ஆசையால்தான் புற்றில் இருந்தும் வெளிப்பட்டாள். அம்மனுக்கு அணிவித்த வளையல்களில் இரண்டு வாங்கி பெண்கள் அணிந்துகொண்டால், குடும்பத்தில் சுபிட்சங்கள் ஏற்படும். பிள்ளை வரம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்.
அகிலத்தின் நாயகி சந்தோஷப்பட்டால் அகில உலகமே மகிழ்சியடையும். அதேபோல ஆண்டாள் தோன்றிய தினம் ஆடிபூரம்.
இந்த நன்னாளில் ஆண்டாளை தரிசித்து பூமாலை, வளையல்களை கொடுத்து வணங்கி ஆண்டாளின் ஆசியை பெற்ற வளையல்களில் இரண்டு வளையல்களை அணியலாம்.
அதேபோல ஆண்கள் ஆண்டாளுக்கு அணிவித்த மலர்களை சிறிது வாங்கி தங்கள் சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டாலும் நல்ல முயற்சிகள் வெற்றி பெறும். மங்களங்கள் யாவும் கைகூடும்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் பெருந்தேரில் பவனி.
- சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் பொங்கல் விழா.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆடி-22 (புதன்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: திருதியை இரவு 9.51 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம்: பூரம் இரவு 9.03 மணி வரை பிறகு உத்திரம்
யோகம்: அமிர்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று திருவாடிப்பூரம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் பெருந்தேரில் பவனி. சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் பொங்கல் விழா. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி காலை திருமஞ்சன சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பவனி வரும் காட்சி. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி திருமஞ்சன அலங்கார சேவை. திருப்பரங்குன்றம் ஸ்ரீ முருகப் பெருமான் கோவிலில் பவனி வரும் காட்சி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நன்மை
ரிஷபம்-தாமதம்
மிதுனம்-நிறைவு
கடகம்-தெளிவு
சிம்மம்-உண்மை
கன்னி-பதவி
துலாம்- நிம்மதி
விருச்சிகம்-ஆசை
தனுசு- ஆர்வம்
மகரம்-பொறுமை
கும்பம்-ஓய்வு
மீனம்-இன்பம்
- அம்மனுக்கு பூரம் நட்சத்திரம் சிறப்புடையது.
- பக்தர்களுக்கு வளையல், குங்குமம் பிரசாதமாக வழங்கப்படும்.
பெரியபாளையம்:
பூரம் நட்சத்திரம் என்பது ஓம் என்னும் பிரணவ மந்திரத்தில் இருந்து சக்தி வெளிப்பட்ட நட்சத்திரம் ஆகும். சிவபெருமானுக்கு திருவாதிரை நட்சத்திரம் போன்று அம்மனுக்கு பூரம் நட்சத்திரம் சிறப்புடையாது.
இந்ந நிலையில் அம்மன் கோவில்களில் நாளை ஆடிப்பூரம் விழா விமரிசையாக நடைபெற உள்ளது.
திருவள்ளூரில் உள்ள தீர்த்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் உற்சவர் திருபுரசுந்தரி சிறப்பு அலங்காரத்தில் வளையல் பந்தலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளார்.

வழிபாடு முடிந்ததும் பக்தர்களுக்கு வளையல், குங்கும பிரசாதமாக வழங்கப்படும். புட்லூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டியும் கர்ப்பிணி பெண்கள் அம்மனை வழிபட்டு வளையல் பிரசாதத்தை வாங்கி செல்வார்கள்.
மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் ஆடிப்பூரம் விழா நேற்று தொடங்கியது. 2-வது நாளான இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இன்று ஆடிப்பூரம் செவ்வாய்க்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப் பட்டது. ஆடிப்பூரத்தை முன்னிட்டு நாளை காலை அம்மனுக்கு 1008 கலச அபிஷேகம் நடைபெறுகிறது.
இதைத்தொடர்ந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதியுலா நடைபெற உள்ளது. திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
பெரியபாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பவானி அம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா தற்போது விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஆடிப்பூர விழாவை முன்னிட்டு நாளை காலை சர்வ சக்தி மாதங்கி அம்மனுக்கு காயத்ரி ஹோமம், துர்கா ஹோமம், மகாலட்சுமி ஹோமம் உள்ளிட்டவை நடைபெறுகிறது.
இதன் பின்னர் 108 பால்குட அபிஷேகம் நடக்கிறது. மூலவருக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- நாகபஞ்சமி ஆடி மாத வளர்பிறை பஞ்சமி திதியில் கொண்டாடப்படுகிறது.
- ஜாதகத்தில் உள்ள நாக தோஷம் விலகும்.
வட இந்தியாவில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டாலும், தென்னிந்தியாவிலும் தவறாமல் கடைப்பிடிக்கப்படும் விரதங்களில் ஒன்றாக இருக்கிறது, 'நாக பஞ்சமி' விரதம். இது ஒவ்வொரு ஆடி மாத வளர்பிறை பஞ்சமி திதியில் கொண்டாடப்படும் ஒப்பற்ற நிகழ்வாகும். இந்த நிகழ்வு வந்ததற்கான காரணத்தை இங்கே பார்க்கலாம்.

ஒரு சமயம் பரீட்சித் மகாராஜா வனத்திற்கு வேட்டையாடச் சென்றார். அப்பொழுது தன்னுடைய படைகளை விட்டுப் பிரிந்து நீண்ட தூரம் சென்று விட்டார். இந்நிலையில் அவருக்கு தாகம் அதிகம் எடுத்ததால், தண்ணீரைத் தேடினார்.
ஓரிடத்தில் மகாசந்தர் என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். அவர் யார் என்பதை அறியாத பரீட்சித் மன்னன், அவரிடம் சென்று குடிக்க தண்ணீர் கேட்டான். ஆனால் அந்த முனிவர் அசைவற்ற நிலையில் தியானம் செய்து கொண்டிருந்தார்.
இதனால் கோபம் கொண்ட மன்னன், அருகில் இறந்து கிடந்த ஒரு பாம்பை அவரது கழுத்தில் போட்டு விட்டு, அங்கிருந்து சென்றுவிட்டான்.
மகாசந்த முனிவரின் மகன், சிறந்த சிவ யோகி ஆவார். அவர் தன் தந்தைக்கு நடந்த அநீதியை யோக சித்தியின் மூலம் அறிந்தார். பின்னர், "என் தந்தை யோகத்தில் இருக்கும் பொழுது, அவரது கழுத்தில் பாம்பை போட்டு அவமதித்தவன் யாராக இருந்தாலும், 'தட்சகன்' என்ற நாகம் கடித்து ஏழு நாட்களுக்குள் இறந்து விடுவான்" என்று சாபமிட்டார்.
பரீட்சித் மகாராஜா, தனக்கு ஏற்பட்ட சாபத்தைப் பற்றி அறிந்தார். சர்ப்பத்தின் கடியில் இருந்து தப்பிக்க நாகசம் என்ற பட்டினத்தில் ஒரு கோட்டையை கட்டி, அதில் பாதுகாப்பாக இருந்தார். மணி, மந்திர, ஔஷதங்களில் சிறந்தவர்கள் அனைவரும் தன்னை சுற்றி இருக்கும்படி பார்த்துக் கொண்டார்.
7-வது நாள் பரீட்சித் மகாராஜாவை கடிப்பதற்காக, நாகங்களின் தலைவனான தட்சகன், வயதான வேதியர் உருவம் எடுத்து வந்து கொண்டிருந்தான். இதற்கிடையில் மகாராஜாவை நாகத்தின் விஷத்தில் இருந்து காப்பாற்றுபவர்களுக்கு லட்சம் பொன் பரிசாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதைக் கேட்ட கஸ்யபன் என்ற மந்திரவாதியும் அங்கே வந்து கொண்டிருந்தான். வழியில் தட்சகனும், கஸ்யபனும் சந்தித்துக் கொண்டனர்.
மந்திரவாதியை சந்தித்த தட்சகன், தான் யார் என்பதை அவனிடம் கூறி தன்னுடைய வலிமையைக் காட்டினான். எதிரே இருந்த பசுமையான ஆலமரத்தை தட்சகன் கடிக்க, அடுத்த நொடியே அந்த ஆலமரம் எரிந்து சாம்பலானது.
அதைப் பார்த்த மந்திரவாதி, மந்திர ஒலியால் தீர்த்தமாக மாறியிருந்த நீரை, எரிந்துபோன ஆலயமரத்தின் மீது தெளித்தான். மறுநொடியே அந்த ஆலயம் பழையபடியே பசுமையாக உருமாறியது.
மந்திரவாதியின் வலிமையை உணர்ந்த தட்சகன், "கர்மவினையால் பரீட்சித் மகாராஜா இறக்க வேண்டும். அவன் தருவதாக சொன்ன லட்சம் பொன்னை நான் உனக்கு தருகிறேன், பெற்றுக்கொள்" என்று கூறி, லட்சம் பொன்னை கொடுத்து, மந்திரவாதியை திருப்பி அனுப்பினான்.
பின்னர் தட்சகன், மகாராஜா தங்கியிருந்த கோட்டையை அடைந்து, அங்கிருந்த காவலர்களிடம் உள்ளே செல்ல அனுமதி கேட்டான். ஆனால் அவர்கள், 'யாரும் அரசனை சந்திக்க முடியாது' என்று கூறி மறுத்துவிட்டனர்.
உடனே தட்சகன், காமரூப சக்தி உள்ள ஒரு நாகத்தை, ஒரு வேதியராக மாற்றினான். பின்னர் தான் ஒரு புழுவாக மாறி பழம் ஒன்றில் போய் அமர்ந்து கொண்டான். அந்த வேதியர், காவலர்களிடம், "நாங்கள் மன்னனுக்காக தரும் மந்திரித்த பிரசாதத்தை அவரிடம் கொடுங்கள்" என்று கூறி பழக்கூடையை வழங்கினார்.
அதை எடுத்துச் சென்று மகாராஜாவிடம், காவலர்கள் கொடுத்தனர். அதில் இருந்த கனியை எடுத்து மன்னன் சாப்பிட்டான். அப்போது அதனுள் புழுவாக இருந்த தட்சகன், பரீட்சித் மகாராஜாவை கடித்ததும், அவர் இறந்தார்.
பரீட்சித் மகாராஜா இறந்ததும், அவருடைய மகன் ஜனமேஜயனுக்கு பட்டாபிஷேகம் செய்யப்பட்டது. அவர் காசி தேசத்து அரசனான சுவர்ண வர்ணாகரன் மகள் வபுஷ்டை என்பவளை திருமணம் செய்து கொண்டான்.
ஒரு முறை ஜனமேஜயன் அரசவைக்கு, உத்துங்கர் என்ற முனிவர் வந்தார். அவர், "அரசே.. உனக்கு எதிரிகளே இல்லை என நினைத்துக் கொண்டிருக்கிறாயா?. உன் தகப்பனாரைக் கொன்ற தட்சகனை பற்றி உனக்குத் தெரியாதா?" எனக்கூறினார். பின்னர், "நீ ஒரு மிகப்பெரிய சர்ப்ப யாகம் செய்து தட்சகனை அழிக்க வேண்டும்" என்றார்.
அதைக் கேட்ட ஜனமேஜயன், "என்னால் சர்ப்பங்களின் தலைவனான தட்சகனை அழிக்க முடியுமா?" என கேட்க, அந்த முனிவரோ, "மன்னா.. உனக்கு தெரியாது. ஏற்கனவே நாகங்களுக்கு சாபம் உண்டு. எனவே நீ தைரியமாக அந்த யாகத்தை செய்" என்றார். அந்த சாபத்தைப் பற்றியும் மன்னனிடம் கூறினார்.
காசியப முனிவரின் மனைவிகளில் இருவர், கத்ரு மற்றும் வினதை. ஒரு சமயம் இவர்கள் இருவரும் வானில் உச்சைஸ்ரவஸ் என்ற குதிரையைக் கண்டனர். அந்த குதிரை கருப்பு நிறம் என்றாள், கத்ரு. வினதையோ அது வெள்ளை நிறம் என்று கூறினாள். இது அவர்களுக்குள் போட்டியாக மாறியது.
அப்போது கத்ரு, தன் பிள்ளைகளை அழைத்து, "ஓ சர்ப்பங்களே.. நீங்கள் விரைந்து சென்று, உச்சிஸ்ரவரஸ் குதிரையில் போய் ஒட்டிக் கொள்ளுங்கள். அப்போது அது கருப்பாக தெரியும்" என்றாள். அதற்கு சில நாகங்கள் ஒப்புக்கொண்டன. ஆனால் பல நாகங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் கோபம் கொண்ட கத்ரு, தனக்கு உதவி செய்ய மறுத்த பிள்ளைகளை நோக்கி, "நீங்கள் அனைவரும் பின்னாளில் ஒரு மன்னன் செய்யும் யாக குண்டத்தில் விழுந்து அழிவீர்கள்" என்று சாபமிட்டாள்.

உத்துங்கர் முனிவரிடம் இருந்து நாகங்களின் சாபத்தை அறிந்த ஜனமேஜயன், யாகம் செய்ய முன்வந்தான். யாகம் தொடங்கிவிட்டது. அப்போது தட்சகன் ஓடிச் சென்று இந்திரனை சரணடைந்து, அவனுடைய ஆசனத்தைச் சுற்றிக் கொண்டான்.
ஜனமேஜயன் யாகம் செய்யச் செய்ய, அந்த குண்டத்தில் வானில் இருந்து பல பாம்புகள் வந்து விழுந்தன. யாகத்தின் சக்தி, தட்சகனையும் குண்டத்தை நோக்கி இழுத்தது. இதனால் இந்திரனின் ஆசனமும், இந்திரனும் தட்சகனுடன் சேர்ந்து பூமிக்கு வந்தனர்.
அப்பொழுது இந்திரன், ஜரக்காரு முனிவரின் புதல்வரான ஆஸ்திகர் என்ற முனிவரை நினைத்து தியானம் செய்தார். உடனே ஆஸ்திக முனிவர் யாகசாலைக்கு வந்து, "தர்மாத்மாவான நீ இதை செய்ய வேண்டாம். இந்த யாகத்தை நிறுத்து" என்று ஜனமேஜயனை கேட்டுக்கொண்டார்.
அவரது வேண்டுகோளை ஏற்று, உத்துங்க முனிவரும், ஜனமேஜய மகாராஜாவும் யாகத்தை நிறுத்தினர். இந்த நிகழ்வு நடந்தது நாக பஞ்சமி அன்றுதான். எனவே ஆண்டுதோறும் அந்த நாளில் நாக பஞ்சமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
நேபாளத்தில் நாக பஞ்சமி மிகப்பெரிய விழாவாக கொண்டாடப்படும். அன்றைய தினம் நாகங்களை பூஜிப்பதால், ஜாதகத்தில் உள்ள நாக தோஷம் விலகும். அதோடு விஷத்தால் ஏற்படும் அபாயங்கள் நீங்கும்.






