என் மலர்
வழிபாடு
- இன்று சனி பிரதோஷம்.
- திருநள்ளாறு ஸ்ரீசனிபகவான் சிறப்பு அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆவணி-1 (சனிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: திரயோதசி மறுநாள் விடியற்காலை 4.46 மணி வரை. பிறகு சதுர்தசி.
நட்சத்திரம்: பூராடம் காலை 10.35 மணி வரை. பிறகு உத்திராடம்.
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று சனி பிரதோஷம். திருநள்ளாறு ஸ்ரீசனிபகவான் சிறப்பு அபிஷேகம். ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள், மன்னார்குடி ஸ்ரீராஜகோபாலசுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோவில், ஸ்ரீவரதராஜ மூலவர், உப்பிலியப்பன் கோவில், ஸ்ரீனிவாசனப் பெருமாள் கோவில்களில் காைல சிறப்பு ஸ்திரவார திருமஞ்சனம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீசவுமிய நாராயணப் பெருமாள் திருப்பவித்திர உற்சவம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.
இன்றைய ராசிபலன்
மேஷம்-லாபம்
ரிஷபம்-மாற்றம்
மிதுனம்-தேர்ச்சி
கடகம்-வரவு
சிம்மம்-நலம்
கன்னி-நன்மை
துலாம்- செலவு
விருச்சிகம்-ஆதாயம்
தனுசு- தாமதம்
மகரம்-வரவு
கும்பம்-சுபம்
மீனம்-கவனம்
- வெற்றிலையுடன் சுண்ணாம்பு, பாக்கு சேர்த்து போடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
- இதனால் நாம் என்ன சாப்பிட்டாலும் விரைவில் செரிமானமாகி விடும்.
ஒரு காலத்தில் சாப்பிட்டவுடன் வெற்றிலை போடும் பழக்கம் என்பது நமது தாத்தா, பாட்டிகள் மத்தியில் தவிர்க்க முடியாததாக இருந்து வந்தது.
வெற்றிலையுடன் சுண்ணாம்பு, பாக்கு சேர்த்து போடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். என்ன சாப்பிட்டாலும் செரிமானமாகி விடும்.
சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்போது தாம்பூலம் வைக்கும் பழக்கம் தற்போதும் நடைமுறையில் உள்ளது. இந்த தாம்பூல பாத்திரத்தில் வெற்றிலை, பாக்கு இருந்தால் மட்டுமே அது முழுமையான தாம்பூலமாக அமையும். எனவேதான் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கட்டுக்கட்டாக வெற்றிலைகளை வாங்கி தாம்பூல பைகளில் கொடுப்பது வழக்கம்.
இன்றைய இளம் தலைமுறை வெற்றிலையை மறந்து வரும் நிலையில், எத்தனை புது மாப்பிள்ளைகளுக்கு தெரியும் அந்த வெற்றிலையின் ரகசியம் என்பதும் மிகப்பெரிய கேள்வியாகவே மாறி இருக்கிறது.
மாறிவரும் உணவு பழக்க வழக்கங்களால் இன்றைய இளம் தலைமுறை வாலிபர்கள் திருமணத்துக்கு பிறகு இல்லற வாழ்வில் சறுக்கி வருகிறார்கள்.
இளம் வயதிலேயே ஏற்படும் தவறான பழக்க வழக்கங்கள் மற்றும் சவர்மா உள்ளிட்ட சிக்கன் உணவு வகைகள் போன்றவற்றால் ஆண்மைக்குறைவு ஏற்படுவதாக டாக்டர்கள் எச்சரித்து வருகிறார்கள்.
இந்த ஆண்மைக்குறைவுக்கு வெற்றிலை அருமருந்து என்பது இன்றைய இளம் தலைமுறைக்கு தெரியாத ஓர் உண்மையாகும். எனவே இன்றைய இளம் தலைமுறை வெற்றிலை போடும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இது எதை சாப்பிட்டாலும் செரிக்கும் தன்மையை வளர்க்க உதவும்.
வெற்றிலை போட்டால் வாய் மணக்கும். நல்ல மதிய உணவு விருந்துக்குப் பின் வெற்றிலை பரிமாறுவதைப் பாரம்பரியமாகக் கொண்டுள்ளோம்.
முன்பெல்லாம் கோவில் பூஜைகள் முதல் மருந்துகள் வரை வெற்றிலையை பலவிதமாக உபயோகித்து வந்துள்ளோம். இறைவனுக்கு எத்தனை பதார்த்தங்களை நிவேதனம் செய்தாலும் வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால் அந்நிவேதனம் முற்றுப் பெறுவதில்லை என்பர்.
இதில் குறைந்த கொழுப்பு மற்றும் மிதமான புரத உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது. இது அயோடின், பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2 மற்றும் நிகோடினிக் அமிலம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளன.
வெற்றிலை உடன் பாக்கு குறைவாகவும், சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும் சேர்த்து சாப்பிட்டால் பசி எடுக்காதவர்களுக்கு பசி எடுக்கும்.
வயிற்றுப்புண், வாய்ப்புண், வாயில் துர்வாடை பிரச்சனை உள்ளவர்கள், மாலையில் வெற்றிலை அதிகமாகவும், பாக்கு சுண்ணாம்பு குறைவாகவும் மென்றால் இந்த பிரச்சனைகள் குணமாகி வரும்.
ஒரு வெற்றிலையில் ஐந்தாறு துளசி இலைகளை வைத்து சிறிது கசக்கிப் பிழிய வருகிற சாற்றினை குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி, இருமல் குணமாகும்.
கொழுந்து வெற்றிலை மற்றும் மிளகு சாப்பிடுவதால் இரைப்பை குடல் வலி, அசிடிட்டி, செரிமானம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
உடலில் சுரக்கும் 24 விதமான அமினோ அமிலங்கள் வெற்றிலையில் உள்ளன. இந்த அமினோ அமிலங்களை வெற்றிலை மூலம் அடையும்போது ஜீரணம் எளிதாகிறது.
துவர்ப்புச் சுவை கொண்ட பாக்கு மலமிளக்கியாகச் செயல்படும். வயிற்றைச் சுத்தப்படுத்தக் கூடியது. சுண்ணாம்பின் அளவை சற்று அதிகமாக எடுத்துக் கொள்வதால் செரிமான சக்தி சீராவதுடன், உடலுக்குத் தேவையான இயற்கையான கால்சியம் சத்தும் சேர உதவும்.
வெற்றிலை என்பது மவுத்வாஷ் போன்றும் செயல்படும். வாய் துர்நாற்றம் நீங்கவும், பற்களில் கிருமிகள் சேராமல் காக்கவும் இது உதவும். கபம் சேர்வதைத் தடுக்கும். வெற்றிலைக்கு அரச இலை, மாவிலை போன்று தெய்வீக சக்தி உண்டு.
வெற்றிலைக்கு செல்வத்தின் தலைமகளாக உள்ள மகாலட்சுமியை ஈர்க்கும் ஆற்றல் உண்டு. தீய கர்ம வினைகளையும் இந்த வெற்றிலை அழிக்கும். செல்வமின்மையும் நமது மோசமான கர்மா தான் இவை எல்லாவற்றையும் நிவர்த்தி செய்ய வெற்றிலையை பயன்படுத்தலாம் என்பது ஐதீகம்.
- சபரிமலை கோவில் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும்.
- சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்ய வேண்டும்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மற்றும் மகரவிளக்கு காலங்கள் மட்டுமின்றி, ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். அதன்படி ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். பின்பு கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும். இன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. கோவில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும்.
நாளை (17-ந்தேதி) முதல் வருகிற 21-ந்தேதி வரை வழக்கமான பூஜைகள் நடைபெறும். தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜை வழிபாடுகள் நடைபெறும்.
மேலும் தந்திரி மகேஷ் மோகனரு தலைமையில் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும். பக்தர்கள் நாளை முதல் வருகிற 21-ந்தேதி வரை சாமி தரிசனம் செய்யலாம். சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
- திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்.
சாத்தூர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி சக்தி ஸ்தலங்களில் ஒன்றான இருக்கன்குடி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள்.

இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு இன்று காலை 9 மணிக்கு உற்சவர் அம்மனுக்கு கும்ப பூஜை, யாக பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகத்தின் போது பால், பன்னீர், ஜவ்வாது, தேன், இளநீர், தயிர், விபூதி, குங்குமம் உள்ளிட்ட 16 வகையான மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்றது.
திருவிழாவை காண மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் வாகனங்களிலும் வந்த வண்ணம் உள்ளனர்.
பக்தர்கள் வசதிக்காக ஏராளமான சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது.
கோவிலுக்கு வந்த பக்தர் கள் அம்மனை வேண்டி ஆயிரம் கண்பானை, தவழும் பிள்ளை, கரும்பு தொட்டில் குழந்தை, அக்கினிச்சட்டி, மாவிளக்கு பறக்கும்காவடி, தேர் இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

இன்று மாலை இரண்டு மணிக்கு மேல் ஆடிப்பெரும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான உற்சவர் அம்மன் ரிஷப வாகன பல்லக்கில் ஊர்வலமாக தெருக்களில் வீதியுலா வந்து ஆற்றில் இறங்கி கோவில் சென்றடையும் நிகழ்ச்சி நடைபெறும்.
கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக நவீன கழிப்பறை, குளியல் தொட்டி, தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை, மருத்துவ வசதிக்கான சுகாதார மையங்கள், மற்றும் பாதுகாப்பு வசதிக்காக ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையில் இரண்டு கூடுதல் சூப்பிரண்டுகள் மற்றும் 4 டி.எஸ்.பி.க்கள் உட்பட சுமார் 2,000-க்கும் மேற் பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவிழா ஏற்பாடுகளை இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி, கோவில் செயல் அலுவலர் ரமேஷ் மற்றும் கோவில் பரம்பரை அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோவில் அலுவலர்கள் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
- மனம் இனிக்கும் செய்திகள் வந்துசேரும்.
- விநாயகரை வணங்கினால் வெற்றி நிச்சயம்.
ஞானப் பழத்திற்காக விநாயகரும், முருகப்பெருமானும் போட்டி போட்டபோது, 'இந்த உலகத்தை யார் முதலில் சுற்றி வருகிறார்களோ, அவர்களுக்குத் தான் பழம்' என்று உமையவளும், சிவனும் முடிவெடுத்தார்கள்.
அந்த முடிவைக் கேட்ட முருகப்பெருமான், மயிலில் ஏறி உலகை வலம்வரத் தொடங்கினார். அவர் வருவதற்குள், 'பெற்றோரை சுற்றி வந்தால், உலகத்தைச் சுற்றியதற்கு சமம்' என்று கூறி, பழத்தைப் பெற்றுக்கொண்டார், விநாயகர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கைவாசல் வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவிலில், கனியை கையில் ஏந்தியிருக்கும் விநாயகரை நாம் தரிசிக்க முடியும்.
இந்த விநாயகரை வழிபட்டால், மனம் இனிக்கும் செய்திகள் வந்துசேரும். போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற நினைப்பவர்கள், இந்த விநாயகரை வணங்கினால் வெற்றி நிச்சயம்.

வாழ்வை வளமாக்கும் அரச மரம்
எத்தனை மரங்கள் இருந்தாலும், 'மரங்களின் அரசன்' என்று போற்றப்படுவது அரசமரம் தான். இந்த மரத்தில் மும்மூர்த்திகளும் வீற்றிருந்து அருள்வதாக சொல்கிறார்கள். இந்த மரத்தை 'தேவலோகத்து மரம்' என்றும் வர்ணிப்பார்கள். இம்மரத்தைச் சுற்றி வலம் வந்தால் பிரம்மா, விஷ்ணு, சிவன் அருள் நமக்குக் கிடைக்கும்.
அக்னி பகவான் குதிரை ரூபம் எடுத்து ஓடி அரச மரத்தில் புகுந்து கொண்டதால், இம்மரத்தின் குச்சிகளை ஹோமங்களுக்கு பயன்படுத்துகிறோம். பிரம்மாவின் சக்தி இம்மரத்தில் இருப்பதால் அரச மரக் காற்றை நாம் சுவாசித்தால், ஆயுள் வளரும்; ஆரோக்கியம் சீராகும்.
அரச இலைகளின் சல சலப்பு ஆலய மணி போல இருக்கும். அரச மரத்தடியில் விநாயகப்பெருமானையும், நாகராஜரையும் வைத்து வழிபடுவது வழக்கம். இவர்களை வழிபட்டால் காரியத் தடைகள் விலகும். கனிவான வாழ்க்கை அமையும்.
- வரன்கள் வருவதில் உள்ள தடைகள் அகலும்.
- இனிய வாழ்க்கைத் துணை அமையும் என்பதில் சந்தேகமில்லை.
திருமணத் தடை உள்ளவர்கள், தங்களின் சுய ஜாதகத்தை ஆராய்ந்து, அதற்கேற்ற சிறப்பு தலங்களைத் தேர்ந்தெடுத்து தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டால், வரன்கள் வருவதில் உள்ள தடைகள் அகலும்.
'வாழ்க்கைத் துணை அமையவில்லையே', 'வயதாகிக் கொண்டே போகின்றதே', 'வரன் ஏதும் பொருத்தமானதாக வரவில்லையே' என்று கவலைப்படுபவர்கள், பலன்தரும் பரிகாரங்களை மேற்கொண்டால் இனிய வாழ்க்கைத் துணை அமையும் என்பதில் சந்தேகமில்லை.

அந்த வகையில் திருமணஞ்சேரி திருத்தல வழிபாடு, உங்களுக்கு தித்திக்கும் வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.

சுக்ர சேஷத்திரமான திருவரங்கம், அக்னீஸ்வரர் வீற்றிருந்து அருள் வழங்கும் கஞ்சனூர், கல்யாண ஜகன்நாதர் அருள்புரியும் திருப்புல்லாணி, வள்ளி மணவாளன் அருளும் சிறுவாபுரி, தெய்வானையை முருகப்பெருமான் மணந்த இடமான திருப்பரங்குன்றம் போன்ற இடங்களுக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்டால் இல்லறம் நல்லறமாக முடியும்.

குரு பலம் கூடி வந்தால் தான் திருமணம் முடியும். எனவே. குருவிற்குரிய சிறப்பு தலங்களுக்குச் சென்றும் வழிபட்டு வரலாம். 'வானவருக்கு அரசனான வளம் தரும் குருவே' என்ற குரு கவசத்தை குருவின் சன்னிதியில் பாடி வழிபட்டால், தேடிவரும் வரன்கள் சிறப்பானதாக அமையும்.
- சிவன் கோவில் தெருவின் மையத்தில் அமைந்துள்ளது.
- 5 நிலை ராஜகோபுரத்துடன் இந்த ஆலயம் நம்மை வரவேற்கிறது.
கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் என்ற சின்ன கிராமத்தில் எழுந்தருளியுள்ளது, ஞான பார்வதி உடனாய சிவலோகநாதர் ஆலயம். பதவி யோகம் தரும் இந்த ஆலயத்தைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடுநாடு எனப்படும் இந்த பகுதியை, வீரேந்திர சோழன் ஆட்சி புரிந்து வந்தார். அவருக்கு கீழே நிறைய சிற்றரசர்கள் அந்தந்த பகுதிகளில் ஆட்சி செய்து வந்தனர்.
ஒரு காலகட்டத்தில் வீரேந்திர சோழனின் அரசுக்கு கீழே இருந்த சிற்றரசுகள் அனைத்தும் போதிய வருவாய் இல்லாததால், அரசுக்கு வரி கட்ட முடியவில்லை. அப்பொழுது வீரேந்திரசோழன் அனைத்து சிற்றரசர்களையும் அழைத்து, 'உடனடியாக வரி கட்ட வேண்டும். இல்லை என்றால் உங்கள் தேசத்தை எங்கள் வசம் ஆக்கிக் கொள்வோம்' என்று எச்சரிக்கை விடுத்தார். இதனால் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த சிற்றரசர்கள் செய்வதறியாமல் தவித்தனர்.
இந்த நிலையில் வயதான சிவபக்தர் ஒருவர், இந்த பகுதிக்கு வந்தார். அவர் எப்போதும் 'நமசிவாய' என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தபடியே இருப்பார்.
அவர் சிற்றரசர்கள் சிலரை சந்தித்து, உடனடியாக இந்த இடத்தில் சிவபெருமானுக்கு ஒரு ஆலயம் எழுப்புங்கள். உங்களின் அனைத்து பிரச்சனைகளும் உடனடியாக தீரும்' என்றார்.

இதையடுத்து அந்த பகுதியில் சிற்றரசர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு சிவாலயத்தை அமைக்க முடிவு செய்தனர். இதற்கு உரிய இடத்தை தேர்வு செய்யும் வேலையைத் தொடங்கினர்.
அப்பொழுது ஒரு அசரீரி, மேல்பட்டாம்பாக்கம் கிராமத்தில் குறிப்பிட்ட இடத்தில் கோவில் அமைக்கும்படி சொல்லியது. அதன்படியே அந்த இடத்தில் கோவில் அமைக்கும் பணியை மேற்கொண்டனர்.
கோவில் வேலைகள் அனைத்தும் முடிந்து கும்பாபிஷேகம் செய்வதற்கான நாள் நெருங்கியது. அந்த கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்வதற்காக சிற்றரசர்கள் அனைவரும் சென்று, வீரேந்திர சோழனை அழைத்தனர்.
ஆனால் வீரேந்திர சோழனோ, "எனக்கு தர வேண்டிய வரியை செலுத்தாமல், அனைவரும் சேர்ந்து ஒரு கோவிலைக் கட்டிவிட்டு, அதன் கும்பாபிஷேக விழாவிற்கு என்னையே அழைக்கவும் வந்திருக்கிறீர்கள்? உங்களுக்கு எவ்வளவு ஆணவம் இருக்க வேண்டும்" என்று கோபம் கொண்டார்.
அதற்கு சிற்றரசர்கள், "மன்னா.. இந்த இடத்தில் ஒரு கோவிலை அமைத்தால் அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்று ஒரு முதியவர் கூறினார். சிவனின் விருப்பம் அது என்று அவர் கூறியதால்தான், நாங்கள் சிவாலயத்தைக் கட்டினோம்" என்றனர்.
உடனே வீரேந்திர சோழன், "அந்த முதியவரை அழைத்து வாருங்கள்" என்று கட்டளையிட்டார். ஆனால் அரண்மனை காவலர்கள் அந்த தேசம் முழுவதும் தேடிப்பார்த்து அந்த முதியவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் சிற்றரசர்கள் சொல்வது பொய்யாக இருக்குமோ என்று வீரேந்திர சோழன் கருதினார்.
அப்போது அங்கே ஒலித்த அசரீரி, 'சிவனடியார் வேடத்தில் வந்து, எனக்கான ஆலயத்தை அமைக்கும்படி சிற்றரசர்களிடம் சொன்னது நான்தான்' என்று கூறியது.
அப்போதுதான் வீரேந்திர சோழனுக்கும், சிற்றரசர்களுக்கும் முதியவராக வந்தது சிவபெருமான்தான் என்பது தெரியவந்தது.
இதையடுத்து தன் தவறுக்கு வருந்திய வீரேந்திர சோழ மன்னன், இறைவனே இங்கு வந்து ஆலயம் அமைக்கச் சொல்லி இருப்பதை நினைத்து மகிழ்ந்தான். மேலும் அவன் சிற்றரசர்களைப் பார்த்து, "நீங்கள் ஆளும் பகுதி, இனி உங்களுடையது. அங்கே நீங்கள் சுதந்திரமாக செயல்படலாம். வரி செலுத்த வேண்டிய தேவை இல்லை" என்று கூறினார்.
மேலும் அனைத்து சிற்றரசர்களுக்கு, வீரேந்திர சோழனே முடி சூட்டி வைத்ததுடன், கோவில் கும்பாபிஷேகத்திலும் பங்கேற்று மனம் மகிழ்ந்தார்.

ஆலய அமைப்பு
சிவன் கோவில் தெருவின் மையத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. 5 நிலை ராஜகோபுரத்துடன் இந்த ஆலயம் நம்மை வரவேற்கிறது. அந்த கோபுரத்தைக் கடந்து சென்றால், பிரதோஷ நந்தி, பலிபீடம், கொடி மரம் ஆகியவை உள்ளன. அவற்றின் எதிரில் வலது பக்கம் சூரியன், இடது பக்கம் சந்திரன் உள்ளனர். இடது புறம் மேற்கு நோக்கியபடி ஞான பார்வதி அம்மன் அருளும் தனிச் சன்னிதி காணப்படுகிறது.
இந்த அன்னை நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். மேல் வலது கையில் தாமரையும், இடது கையில் நீலோத்பவ மலரையும் தாங்கியிருக்கிறார். மற்ற இரண்டு கரங்கள் அபய, வரத முத்திரை காட்டுகின்றன. அம்மனுக்கு நேர் எதிரில் நந்தியும், பலிபீடமும் இருக்கிறது.

அர்த்த மண்டபத்தைக் கடந்து சென்றால், கருவறையில் கிழக்கு திசை நோக்கியபடி பிரம்மபீடத்தின் மீது பாண லிங்கமாக சிவலோகநாதர் காட்சி தருகிறார். கருவறை கோஷ்டத்தின் வலது பக்கத்தில் முதலில் நாம் தரிசிப்பது நால்வர் சன்னிதி.
அடுத்தபடியாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, சண்டிகேஸ்வரர், விஷ்ணு துர்க்கை, விசுவநாதர்-விசாலாட்சி அம்மன் அருள்பாலிக்கிறார்கள். இடது பக்கம் வள்ளி-தெய்வானையுடன் சிங்காரவேலர் அருளும் சன்னிதியும், கஜலட்சுமி, நிருத்த கணபதி உள்ள சன்னிதியும் உள்ளன.
அடுத்ததாக ஆலயத்தின் தல விருட்சங்களான வன்னி, சரக்கொன்றை, வில்வம் ஆகியவை உள்ளன. ஆம்.. இந்த ஆலயத்தில் மூன்று தல விருட்சங்கள் இருக்கின்றன. இந்த மரங்களின் அருகில் நாகர், சரபேஸ்வரர், நரசிம்மர் அருள்கின்றனர்.
கோஷ்டத்தில் அதை சுற்றியுள்ள சுவர்களில் 63 நாயன்மார் களின் வரலாறுகள், பதாகைகளாக வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தில் மூன்று நந்திகள் மூன்று பலிபீடங்கள் உள்ளது ஒரு சிறப்பம்சமாகும்.
வாரம் தோறும் ஞாயிறு அன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையான ராகு காலத்தில், இத்தல இறைவனுக்கு தேன், கரும்புச்சாறு, மஞ்சள் பொடி ஆகியவை கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டால், பதவி உயர்வு, பறிபோன வேலை திரும்பக் கிடைப்பது போன்ற விஷயங்கள் நடைபெறுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள், இறைவனுக்கு புதிய வஸ்திரம் சாத்தி நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்
விழுப்புரத்தில் இருந்து கடலூர் செல்லும் சாலையில், விழுப்புரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, மேல்பட்டாம்பாக்கம். இந்த ஊரின் பேருந்து நிறுத்தம் அருகிலேயே சிவலோகநாதர் கோவில் இருக்கிறது.
- நாளை சனி பிரதோஷம் என்பதால் பக்தர்களின் வருகை என்பது அதிக அளவில் இருக்கும்.
- பக்தர்கள் இரவில் தங்குவதற்கு அனுமதி கிடையாது.
வத்திராயிருப்பு:
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் இந்த மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. இந்த சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்வதற்காக நாளை (சனிக்கிழமை) முதல் வருகிற 20-ந்தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலை ஏறி சாமி தரிசனம் செய்ய வனத்துறையினரும், மாவட்ட நிர்வாகமும் அனுமதி வழங்கியுள்ளனர். இந்தநிலையில் இந்த பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நாளை சனி பிரதோஷம் என்பதால் பக்தர்களின் வருகை என்பது அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
மேலும் மலையேற அனுமதிக்கப்பட்ட நாட்களில் எதிர்பாராதவிதமாக கனமழை பெய்தால் பக்தர்கள் பாதுகாப்பு கருதி மலையேற சென்று சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்படும். பக்தர்கள் இரவில் தங்குவதற்கு அனுமதி கிடையாது. தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளையும் வனத்துறையினர் விதித்துள்ளனர்.
- திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
- வரலட்சுமி விரதம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆடி-30 (வெள்ளிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: ஏகாதசி காலை 6.43 மணி வரை பிறகு துவாதசி நாளை விடியற்காலை 5.25 வரை
நட்சத்திரம்: மூலம் காலை 10.45 மணி வரை பிறகு பூராடம்
யோகம்: அமிர்த/சித்தயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: காலை 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
வரலட்சுமி விரதம். சர்வ ஏகாதசி. சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். இருக்கன்குடி மாரியம்மன் பெருந்திருவிழா. கோவை கந்தே கவுண்டர் சாவடி ஸ்ரீ மாகாளியம்மன் தேரோட்டம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சனம், ஊஞ்சல் சேவை. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் தங்க பல்லக்கில் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ பிரிகத் சுந்தர குசாம்பிகை புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-முயற்சி
ரிஷபம்-செலவு
மிதுனம்-புகழ்
கடகம்-உழைப்பு
சிம்மம்-கடமை
கன்னி-கட்டுப்பாடு
துலாம்- பரிசு
விருச்சிகம்-சிந்தனை
தனுசு- ஓய்வு
மகரம்-உறுதி
கும்பம்-திடம்
மீனம்-பயணம்
- பதினாறு வகை உபசாரங்களில் ஒன்று தீபாராதனை.
- பூஜை காலத்தில் பலவித தீபங்கள் காட்டப்பெறுகின்றன.
இறைவனை தீபமேற்றி வணங்குவதுதான் நமது வழக்கம். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தீபமேற்றுவதும், தினமும் தீபமேற்றுவதும் கடவுளை பூஜிக்கிற முக்கியமான சடங்குகளில் ஒன்றாக உள்ளது.
பதினாறு வகை உபசாரங்களில் ஒன்று தீபாராதனை. பூஜை காலத்தில் பலவித தீபங்கள் காட்டப்படுகின்றன. தீபாராதனைக் காலத்தில் தெய்வங்கள் பலவும் தீபங்களில் வந்து அமர்ந்து இறைவனை தரிசித்துச் செல்வார்கள் என்பது மரபு.
தீபத்தில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற 3 சக்திகளும் உள்ளன. தீப ஒளி புற இருளை அகற்றுகிறது. தீப பூஜை உள்ளத்தின் இருளைப் போக்குகிறது. அதாவது தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. மனதில் உள்ள கவலைகளைப் போக்குகிறது.
தினமும் காலையிலும், மாலையிலும், வீட்டிலும், வியாபார இடங்களிலும் விளக்கேற்றி வழிபட்டு வருபவர்களின் வறுமை அகலும். லட்சுமியின் அருள் கிடைக்கும்.
தீபங்கள் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்:
நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் சகலவிதமான சந்தோஷமும் வீட்டில் நிறைந்திருக்கும்.
நல்லெண்ணெய் எனப்படும் எள் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றிட, குடும்பத்தை ஆட்டிப்படைக்கும் எல்லா கஷ்டங்களும் தொலைந்து போகும்.
விளக்கெண்ணை ஊற்றி தீபம் ஏற்றுபவர்களுக்கு புகழ் அபிவிருத்தியாகும்.
வேப்ப எண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றும் கலந்து தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும்.
நெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் கலந்து தீபம் ஏற்றி அம்மனை வணங்கினால் தேவியின் அருள் கிட்டும்.
கிழக்கு திசையில் தீபம் ஏற்றி வணங்கிட துன்பம் அகலும், கிரகங்களின் சோதனை விலகும்.
மேற்கு திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லை, கிரக தோஷம், பங்காளி பகை ஆகியவை நீங்கும்.
வடக்கு திசையில் தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும், திருமணத்தடை, கல்வித்தடை ஆகியவை நீங்கி சர்வமங்களம் உண்டாகும்.
தெற்கு திசையில் தீபம் ஏற்றக்கூடாது. அது அபசகுனம் என அஞ்சப்படுகிறது.
கிரக தோஷங்கள் விலகி சுகம் பெற சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும்.
கணவன்-மனைவி உறவு நலம் பெறவும், மற்றவர்களின் உதவி பெறவும் வேப்ப எண்ணெய் தீபம் உகந்தது.
அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெற வழி செய்வது மணக்கு எண்ணெய் தீபம்.
எள் எண்ணெய் தீபம் என்றுமே ஆண்டவனுக்கு உகந்தது. நவக்கிரங்களை திருப்தி செய்யவும் ஏற்றது.
மனதில் தெளிவும், உறுதியும் ஏற்பட வேண்டுவோர் வேப்ப எண்ணெய், இலுப்ப எண்ணெய், நெய் மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற வேண்டும்.
தேங்காயை இரு பாதியாக உடைத்து அதில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றினால் எந்த காரியமும் சித்தியாகும் என்பது நம்பிக்கை.
- தீர்க்க சுமங்கலிப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
- இல்லத்தில் எப்போதும் செல்வம் நிறைந்திருக்கும்.
வரலட்சுமி விரத பூஜை செய்யும் போது, சுமங்கலிப் பெண்கள் நோன்பு சரடை வைத்து பூஜை செய்வார்கள். பூஜை முடிந்ததும் அந்த சரடை தங்கள் கணவன் கையால் கட்டிக்கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதால் அவர்களுக்கு தீர்க்க சுமங்கலிப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இதேபோல், இந்த பூஜையில் பங்கேற்கும் திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள், நல்ல கணவர் அமைய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வரலட்சுமியை வழிபடலாம். அந்த வழிபாட்டால் மனதில் எண்ணிய கணவர் வாய்ப்பார் என்பது நம்பிக்கை.

வரலட்சுமி விரதம் கொண்டாடப்படும் நாளன்றுதான் பாற்கடலில் மகாலட்சுமி தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.
இந்த மகாலட்சுமியை தனலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தான லட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என்ற அஷ்ட (எட்டு) லட்சுமிகளாக வழிபடுகிறோம்.

வரலட்சுமி விரதம் அன்று இந்த அஷ்ட லட்சுமிகளையும் மனதார வேண்டி பூஜித்தால் இல்லத்தில் எப்போதும் செல்வம் நிறைந்திருக்கும்.

விரதம் கடைபிடிக்கும் முறை!
இந்த விரதத்தை மேற் கொள்ளும் சுமங்கலிப் பெண்கள் முதல் நாளன்று வீட்டை நன்றாக கழுவி தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
வீட்டின் தென்கிழக்கு மூலையில் அழகான மண்டபம் அமைத்து, அதில் வாழை மரம், மாவிலை தோரணம் கட்ட வேண்டும்.
அங்கு சுவற்றில் படமாகவோ அல்லது வெள்ளியில் கிடைக்கும் வரலட்சுமி தேவியின் திருமுகத்தை வைக்க வேண்டும். வர லட்சுமிக்கு ஆடை, ஆபரணங்கள் அணிவிக்க வேண்டும்.
மண்டபத்தில் வாழை இலையின் மீது ஒரு படி அரிசியை பரப்பி, அம்மன் கலசத்தை தாமிர செம்பிலோ அல்லது வெள்ளியால் ஆன செம்பிலோ வைக்க வேண்டும். அந்த செம்பின் மீது சந்தனத்தை பூசி, அதன் மீது வரலட்சுமி அம்மனின் முகத்தை வரையலாம் அல்லது கடைகளில் கிடைக்கும் அம்மன் முகத்தை வாங்கி வந்து பதியலாம்.
கலசத்தின் உள்ளே தேவையான அளவு அரிசியைக் போட்டு அதன் வாய்ப்பகுதியில் மாவிலைகளை சுற்றி வைத்து நடுவில் ஒரு தேங்காயை வைக்கவேண்டும்.
அந்த தேங்காய்க்கு மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டு இட்டு பூ சூட்ட வேண் டும். இவை எல்லாவற்றையுமே முதல் நாள் மாலை யிலேயே செய்து விட வேண்டும்.
மறுநாள், வரலட்சுமி விரதம் அன்று பூஜையை ஆரம்பிக்க வேண்டும். பூஜை மண்டபத்தில் வரலட்சுமி அம்மன் படத்தை கிழக்கு முகமாக வைக்கவேண்டும். பூஜை செய்பவர் வலதுபுற மாக இருந்து பூஜை செய்யவேண்டும்.
சாதம், பாயாசம், வடை, கொழுக்கட்டை, இட்லி ஆகியவற்றில் ஏதே னும் ஒன்றை வைத்து நிவேத னம் செய்யவேண்டும். ஐந்து முக விளக்கை ஏற்றி வைக்கவேண்டும்.
எங்கள் வீட்டில் எழுந்த ருளியிருக்கும் வரலட்சுமியே எங்கள் இல்லத்தில் நிரந்தரமாக குடியேறி எல்லா ஐஸ்வரியங்களும் அருள்வாயே... என்று போற்றி மனம் உருக பாட வேண்டும்.
அன்று மாலையோ அல்லது மறுநாள் காலையோ வரலட்சுமி அம்மனுக்கு எளிமையான ஒரு பூஜை செய்து விட்டு அலங்கா ரத்தை அகற்றிக் கொள்ளலாம்.
பூஜைக்குப் பயன்படுத்திய பச்சரிசி, தேங்காய் போன்றவற்றை கொண்டு, அடுத்த வெள்ளிக்கிழமை பாயசம் செய்து நிவேதனம் செய்யலாம்.
இந்த விரதம் மேற்கொள்வதால் வீட்டில் எப்போதும் செல்வச் செழிப்பு நிறைந்திருக்கும்.
- மகாலட்சுமி நம் இல்லம் தேடி வருவதாக நம்பிக்கை.
- சுமங்கலிப் பெண் வேடத்தில் வீடு வீடாக வருவாள்.
ஒரு சமயம் மகாலட்சுமி எங்கு வாசம் செய்யலாம் என்பதை தேர்வு செய்வதற்காக வயதான சுமங்கலிப் பெண் வேடத்தில் வீடு வீடாக வந்தாள்.
முதலில் அவள் சென்ற வீட்டில் பொழுது விடிந்த பிறகும் தூங்கிக்கொண்டிருந்தார்கள். அதனால், அடுத்த வீட்டிற்கு சென்றாள். அந்த வீட்டில் சுத்தமே இல்லாமல் எங்கும் குப்பையாக இருந்தது. அதனால் மூன்றாவது வீட்டை தேடிச் சென்றாள் மகாலட்சுமி.
அந்த வீட்டில் கணவனும், மனைவியும் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். மனைவி தலைவிரி கோலத்தில் இருந்தாள். அதனால் நான்காவது வீட்டைத்தேடி நகர்ந்தாள். அந்த வீட்டின் வாசலில் அழகான கோலம் போடப்பட்டிருந்தது. பூஜையறையில் இல்லத்தரசியானவள் பக்தியுடன் பாடிக்கொண்டிருந்தாள்.

அந்த வீடு மங்களகரமாக காட்சியளித்தது. வாசலில் வயதான பெண் வேடத்தில் தேவி நிற்பதை கண்ட அந்த இல்லத்தரசி அங்கு வேகமாக வந்தாள். தேவியை வரவேற்று உபசரித்தாள். தேவிக்கு உண்பதற்கு பால் எடுத்து வர சமையலறைக்குள் சென்றாள். பாலுடன் திரும்பி வந்து பார்த்தபோது தேவி இல்லை. வீட்டிற்கு வந்த அம்மா எங்கே என்று அந்த இல்லத்தரசி தேடினாள். ஆனால் காணவில்லை.

இதையடுத்து தனது பூஜையை தொடர பூஜையறைக்குள் சென்றாள். அங்கு அறை முழுவதும் செல்வம் கொட்டிக்கிடந்தது. வயதான சுமங்கலிப் பெண் உருவில் தன் வீட்டுக்கு வந்தது செல்வத்தை வாரி வழங்கும் மகாலட்சுமிதான் என்பதை அறிந்த இல்லத்தரசி மகிழ்ந்தாள். எனவே வரலட்சுமி விரதம் அன்று மகாலட்சுமி நம் இல்லம் தேடி வருவதாக நம்பிக்கை.






