என் மலர்tooltip icon

    வழிபாடு

    • பைரவரை தேய்பிறை அஷ்டமியில் வழிபடுவது மிகவும் விசேஷம்.
    • பழவகைகள் வைத்து வழிபாடு செய்வது மிகவும் உத்தமம்.

    பைரவரை தேய்பிறை அஷ்டமியில் வழிபடுவது மிகவும் விசேஷமானது. அவருக்கு ஏற்ற வேண்டிய தீபம், செய்ய வேண்டிய அபிஷேகம், படைக்க வேண்டிய நைவேத்தியம் பற்றி பார்க்கலாம்.


    தீபம்

    சிறு வெள்ளைத் துணியில் மிளகை வைத்து அதை சிறிய முடிச்சாக கட்டி, அதை அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் இட்டு பைரவர் முன்பாக தீபம் ஏற்றினால், எல்லா வளமும் பெருகும். தேங்காய் மூடியில் நெய் நிரப்பி தீபம் ஏற்றியும் வழிபடலாம். அதேபோல் பூசணிக்காயை மத்தியில் இரண்டாகப் பிளந்து அதனுள் எண்ணெய் அல்லது நெய் நிரப்பி தீபம் ஏற்றியும் வழிபாடு செய்யலாம்.


    சந்தன காப்பு

    பைரவருக்குப் பிடித்தமானது சந்தன காப்பு. வாசனை திரவியங்களான புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ, பச்சை கற்பூரம் போன்றவற்றை சந்தனத்துடன் சேர்த்து தயார் செய்வார்கள். இந்த சந்தன காப்பை பைரவருக்கு சாத்தி வழிபட்டு வந்தால், தேவர்களின் ஆண்டுக்கணக்கில் ஒரு கோடி ஆண்டு, பைரவ லோகத்தில் வாழ்ந்ததற்கு சமமாக இன்புற்று வாழ்வர் என்று சிவபுராணம் கூறுகிறது. பால், தேன், பன்னீர், பழரச அபிஷேகமும் மிக விசேஷம்.

    நைவேத்தியம்

    பைரவருக்கு சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், தேன், செவ்வாழை, வெல்லப் பாயசம், அவல் பாயசம், நெய்யில் போட்டு எடுக்கப்பட்ட உளுந்து வடை, சம்பா அரிசி சாதம், பால் மற்றும் பழவகைகள் வைத்து வழிபாடு செய்வது மிகவும் உத்தமம்.


    மாலைகள்

    பைரவருக்கு தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை அணிவித்து வழிபாடு செய்யலாம். மல்லிகைப்பூ தவிர்த்து செவ்வரளி, மஞ்சள் செவந்தி மற்றும் வாசனை மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வது உத்தமம்.

    • ஐந்து பைரவர்களும் ஒரே பீடத்தில் வீற்றிருக்கிறார்கள்.
    • பைரவரை வழிபாடு செய்து வந்தால் உடனடியாக பலன் கிடைக்கும்.

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஆவூர் திருத்தலம். இங்கு பசுபதீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இங்கு சிவபெருமான், 'பசுபதீஸ்வரர்' என்ற திருநாமத்துடனும், அம்பாள் 'பங்கஜவல்லி' என்ற திருநாமத்துடனும் அருள்பாலித்து வருகிறார்கள்.


    வசிஷ்ட முனிவரால் சாபம் பெற்ற காமதேனு என்ற வானுலக பசு, பூமிக்கு வந்து இறைவனை பூஜித்து சாப விமோசனம் பெற்ற இடம் இந்த திருத்தலமாகும். எனவே தான் இத்தலம் 'ஆவூர்' என்றானது. ('ஆ' என்பது 'பசு'வை குறிக்கும்)

    இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பம்சம், 'பஞ்ச பைரவ மூர்த்திகள்.' இந்த ஐந்து பைரவர்களும் ஒரே பீடத்தில் வீற்றிருக்கிறார்கள். இவர்களை தேய்பிறை அஷ்டமி தினத்தில் வழிபாடு செய்தால், அனைத்து துன்பங்களும் நீங்கும்.


    பஞ்ச பைரவ வழிபாடு என்பது, 'பிதுர்தோஷ நிவர்த்தி'க்கு சிறந்ததொரு வழிபாடு ஆகும். பிதுர் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்கள், இந்த பைரவரை வழிபாடு செய்து வந்தால் உடனடியாக பலன் கிடைக்கும்.

    ஒரு சிலர் நிறைய சம்பாதிப்பார்கள். இருந்தாலும் கடன் தீராது. இன்னும் சிலருக்கு நல்ல திறமைகள் இருக்கும். ஆனால் சரியான வேலையோ, வாய்ப்புகளோ அமையாமல் வருமானம் இன்றி இருப்பார்கள்.

    பலபேர் அனைத்து செல்வங்களையும் பெற்றிருப்பர், ஆனால் வாழ்வில் அமைதி இருக்காது. அப்படிப்பட்டவர்களின் அந்த நிலைக்கு, பிதுர் தோஷம்தான் காரணம். அவர்கள் அனைவரும், இத்தல பஞ்ச பைரவர்களை வழிபட்டு, பிதுர் தோஷத்தை போக்கிக்கொள்ளலாம்.

    • பைரவரை வணங்க உகந்த தினம் தேய்பிறை அஷ்டமி.
    • காசியில் பைரவருக்கு வழிபாடுகள் முடிந்த பிறகுதான் காசி விஸ்வநாதருக்கு வழிபாடு.

    சிவாலயங்கள் அனைத்திலும் கால பைரவருக்கு இடம் உண்டு. சிவபெருமானுக்கு 64 வடிவங்கள் இருப்பதாகவும், அதன் முதன்மையான வடிவம் இந்த பைரவர் என்றும் சொல்வார்கள்.

    சிவாலயத்திற்குச் சென்று தரிசனம் செய்பவர்கள், அனைத்து தெய்வங்களை வழிபட்ட பின்னர், இறுதியாக கால பைரவரை வணங்காமல், அந்த ஆலய தரிசனம் முழுமை பெறாது. இவரை வழிபடுவதற்கு உகந்த தினமாக தேய்பிறை அஷ்டமி தினம் சொல்லப்படுகிறது.

    இந்த நாளில் இவரை வழிபாடு செய்தால், எதிரிகள் மீதான பயம் விலகுவதோடு, மன தைரியம் உண்டாகும் என்கிறார்கள்.

    காசி மாநகரில் காவல் தெய்வமாகவும், காக்கும் கடவுளாகவும் காலபைரவர் திகழ்கிறார். காசியில் பைரவருக்கு வழிபாடுகள் முடிந்த பிறகுதான் காசி விஸ்வநாதருக்கு வழிபாடு நடைபெறும்.

    காசி யாத்திரை செல்பவர்கள் கங்கையில் நீராடி வழிபட்டு இறுதியாக காலபைரவரையும் வழிபட்டால்தான் காசி யாத்திரை செய்ததன் முழு பலனும் கிடைக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக சிவபெருமானைப் போலவே, பைரவ மூர்த்திக்கும் 64 திருவடிவங்கள் உண்டு.

    கால பைரவர், எட்டு திசைகளையும் காக்கும் பொருட்டு அஷ்ட பைரவர்களாகவும், அறுபத்து நான்கு பணிகளை செய்ய அறுபத்து நான்கு பைரவர்களாகவும் விளங்குவதாக நம்பப்படுகிறது.

    பைரவரின் எட்டு வடிவங்கள்:

    அசிதாங்க பைரவர்

    அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர் இவர். அன்னப் பறவையை வாகனமாக கொண்டவர். நவக்கிரகங்களில் குருவின் கிரக தோஷத்திற்காக, அசிதாங்க பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான பிராம்ஹி விளங்குகிறாள். காசி மாநகரில் விருத்தகாலர் கோவிலில் இந்த பைரவர் அருள்செய்கிறார்.

    ருரு பைரவர்

    அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் இரண்டாவது தோற்றம் இவருடையது. சிவபெருமானைப் போலவே, ரிஷபத்தை தனது வாகனமாக வைத்திருப்பவர். நவக்கிரகங்களில் சுக்ரனின் கிரக தோஷத்திற்காக இந்த பைரவரை பக்தர்கள் வழிபடுகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான காமாட்சி விளங்குகிறாள். இந்த பைரவர், காசி மாநகரில் உள்ள அனுமன் காட்டில் வீற்றிருக்கிறார்.


    சண்ட பைரவர்

    அஷ்ட பைரவ மூர்த்தியின் மூன்றாவது வடிவம் இது. இவர் முருகப்பெருமானைப் போல மயிலை வாகனமாக வைத்திருப்பவர். நவக்கிரகங்களில் செவ்வாய் கிரக தோஷத்திற்காக இந்த பைரவரை மக்கள் வணங்குகின்றனர். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான கவுமாரி தேவி விளங்குகிறாள். இந்த பைரவருக்கான சன்னிதி, காசி மாநகரில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் இருக்கிறது.


    குரோதன பைரவர்

    அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் நான்காவதாக வைத்து போற்றப்படுபவர் இவர். மகாவிஷ்ணுவைப் போல கருடனை வாகனமாக கொண்டவர். நவக்கிரகங்களில் சனிக் கிரக தோஷத்திற்காக இந்த பைரவரை வழிபடுகின்றனா். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான வைஷ்ணவி விளங்குகிறாள். இந்த பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார்.


    உன்மத்த பைரவர்

    அஷ்ட பைரவ மூர்த்தியின் ஐந்தாவது தோற்றம் இவர். குதிரையை வாகனமாகக் கொண்டவர். நவக்கிரகங்களில் புதன் கிரக தோஷத்திற்காக இந்த பைரவரை பக்தர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான வராகி விளங்குகிறாள். காசி மாநகரில் உள்ள பீம சண்டி கோவிலில் இந்த பைரவர் வீற்றிருக்கிறார்.


    கபால பைரவர்

    அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஆறாவது இடம் இவருக்கு. அன்னத்தை வாகனமாக கொண்டவர். நவக்கிரகங்களில் சந்திர கிரக தோஷத்திற்காக இந்த பைரவரை பக்தர்கள் வழிபடுகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான இந்திராணி விளங்குகிறாள். காசி மாநகரில் உள்ள லாட் பசார் கோவிலில் இந்த பைரவரை தரிசனம் செய்யலாம்.


    பீஷன பைரவர்

    அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஏழாவது தோற்றம் இவர். அம்பாளைப் போல சிங்கத்தை வாகனமாகக் கொண்டவர். நவக்கிரகங்களில் கேது கிரக தோஷத்திற்காக இந்த பைரவரை பலரும் தரிசனம் செய்கிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சாமுண்டி விளங்குகிறாள். காசி மாநகரில் உள்ள பூத பைரவ கோவிலில் இந்த பைரவர் வீற்றிருந்து அருள்செய்கிறார்.


    சம்ஹார பைரவர்

    அஷ்ட பைரவ மூர்த்தியில் எட்டாவது வடிவம் இவருடையது. நாயை வாகனமாக கொண்ட இவரைத்தான், நாம் ஆலயங்கள் பலவற்றிலும் பார்க்கிறோம். நவக்கிரகங்களில் ராகு கிரக தோஷத்திற்காக இந்த பைரவரை மக்கள் வணங்குகின்றனா்.

    இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சண்டிகை விளங்குகிறாள். இப்பைரவரை காசி மாநகரில் திரிலோசன சங்கம் கோவிலுக்குச் சென்றால் நாம் வழிபடலாம்.

    • திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் கிளி வாகன சேவை.
    • ருத்திரி பசுபதியார் குருபூஜை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு புரட்டாசி-4 (வெள்ளிக்கிழமை)

    பிறை: தேய்பிறை.

    திதி: திருதியை நள்ளிரவு 1.58 மணி வரை. பிறகு சதுர்த்தி.

    நட்சத்திரம்: ரேவதி காலை 9.38 மணி வரை. பிறகு அசுவினி.

    யோகம்: அமிர்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன், காஞ்சீபுரம் காமாட்சியம்மன், சமயபுரம் ஸ்ரீமாரியம்மன், காஞ்சீபுரம் ஸ்ரீமாரியம்மன் கோவில்களில் அபிஷேகம். ராமேசுவரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்க பல்லக்கில் புறப்பாடு. ருத்திரி பசுபதியார் குருபூஜை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாடவீதி புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தர குசாம்பிகை புறப்பாடு. கரூர் தான்தோன்றி மலை ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம். திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமாள் கிளி வாகன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-சாந்தம்

    ரிஷபம்-கவனம்

    மிதுனம்-தனம்

    கடகம்-ஆசை

    சிம்மம்-சிரத்தை

    கன்னி-விருத்தி

    துலாம்- விருப்பம்

    விருச்சிகம்-பாராட்டு

    தனுசு- வெற்றி

    மகரம்-வரவு

    கும்பம்-பரிசு

    மீனம்-செலவு

    • புதன் ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறார்.
    • புதன் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் சில கோளாறுகள் ஏற்படும்.

    மனிதர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை சர்வம் புதன்மயம் என்று கூறலாம். அந்தளவிற்கு புதன் ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறார். இவர் நரம்பிற்கு அதிபதி என்பதால் புதன் பலம் பெற்றால் உடலில் நரம்புகள் சிறப்பாக இயங்கி அறிவு, ஆற்றல், கல்வி ஆகியவற்றில் சிறந்து விளங்குகிறார்கள்.

    புதன் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படும். இத்தகைய புதன் தனது சொந்த வீடான கன்னியில் 23. 9.2024 முதல் 10.10.2024 வரை உச்சம் பெற்று கேதுவுடன் இணைகிறார். இதனால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.


    மேஷம்

    மேஷ ராசிக்கு புதன் 3, 6-ம் அதிபதியான புதன், ராசிக்கு 6-ல் உச்சம் பெறுவதால் உத்தி யோக மாற்றம் ஏற்படலாம். வேலை இல்லாத வர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். விண்ணப்பித்த வீடு, வாகன, தொழில் முன்னேற்ற கடன் கிடைக்கும். முக்கிய ஆவணங்கள் தொடர்பான பிரச்சினைகள் அகலும். ஆரோக்கியத்தை உடல் நலத்தை பேணுவது நல்லது.

    பரிகாரம்: புதன்கிழமை சக்ரத்தாழ்வாரை வழிபடவும்.


    ரிஷபம்

    ரிஷப ராசிக்கு 2, 5-ம் அதிபதியான புதன் ராசிக்கு 5-ல் உச்சம் பெறுவதால் புத்திர பிராப்த்தம் உண்டாகும். பிள்ளைகளால் பூர்வீகத்தால், பூர்வீகச் சொத்தால் பயன் உண்டு. மூளையை மூலதனமாகக் கொண்ட ஏஜென்சி, கன்சல்டிங் நிறுவனங்கள், பங்கு வர்த்தகத்தில் மிகுதியாக சம்பாதிப்பார்கள். கவுரவப் பதவி கிடைக்கும். கற்ற கல்வி பயன் தரும்.

    பரிகாரம்: வெள்ளிக்கிழமை மகாலட்சுமியை வழிபடவும்.


    மிதுனம்

    மிதுன ராசிக்கு 1,4-ம் அதிபதியான புதன் உச்சம் பெறுவதால் வாகனம், பூமி லாபம், அரசுவகையில் ஆதாயம், உயர்ந்த பதவி அமையும். செல்வச் செழிப்பு உண்டு. சுய உழைப்பில் சொத்துச் சேர்க்கை உண்டு. ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழிலில் சாதனை படைப்பார்கள். ஆரோக்கியம் மேம்படும். கல்வி ஆர்வம் கூடும்.

    பரிகாரம்: புதன் கிழமை மகா விஷ்ணுவை வழிபடவும்.


    கடகம்

    கடக ராசிக்கு 3,12-ம் அதிபதியான புதன் உப ஜெய ஸ்தானமான 3-ம்மிடத்தில் உச்சம் பெறுவதால் ஞாபக சக்தி அதிகமாக இருக்கும். காணாமல் போன ஆவணங்கள், நகைகள், கை மறதியாக வைத்த பொருட்கள் திரும்ப கிடைக்கும். சகோதர ஒற்றுமை மேம்படும். வெளிநாட்டு வேலை, பயணம் உறுதியாகும்.

    பரிகாரம்: திங்கட்கிழமை அம்மன் வழிபாடு செய்யவும்.


    சிம்மம்

    சிம்ம ராசிக்கு தன, லாப அதிபதியாகிய புதன் தன ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் சாதகமான பலன் உண்டு. தொட்டது துலங்கும்.வழக்கறிஞர், அரசியல்வாதிகள், ஜோதிடர்கள், ஆசிரியர்கள், மார்க்கெட்டிங் துறை போன்ற வற்றில் இருப்பவர்களுக்கு சுப பலன்கள் இரட்டிப்பாகும். சாதாரண நிலையில் இருப்ப வர்கள் கூட உயர் நிர்வாக பதவி, உயர்ந்த அந்தஸ்தை அடைவார்கள்.

    பரிகாரம்: சூரிய நாராயணரை வழிபடவும்.


    கன்னி

    கன்னி ராசிக்கு 1, 10-ம் அதிபதியாகிய புதன் லக்னத்தில் உச்சம் பெறுகிறார். செல்வாக்கு, புகழ், அந்தஸ்து கவுரவம் உயரும்.தொழில் தந்திரம் கூடும்.பல தொழில் துறை பற்றிய அறிவு கூடும். தொழில் ஞானத்தை பயன்படுத்தி பிறருக்கு ஆலோ சனை கூறி சம்பாதிப்பார்கள். கர்மம் செய்ய புத்திரன் பிறப்பான். அதிகார பலமிக்க அரசாங்க பதவி, அரசியல் செல்வாக்கு ஆதாயம் உண்டு.

    பரிகாரம்: கன்னி பெண்களுக்கு இயன்ற தானம் வழங்கவும்.


    துலாம்

    துலாம் ராசிக்கு புதன் 9, 12-ம் அதிபதியாகிய புதன் ராசிக்கு 12ல் உச்சம் பெறுகிறார். தொழில் உத்தியோகம், உயர் கல்வி நிமித்தமாக வெளியூர், வெளிநாடு செல்லலாம். முன்னோர்க ளின் நல்லாசி கிடைக்கும். பிறவிக் கடன், பொருள் கடன் தீர்க்க உகந்த காலம்.தந்தை வழி பூர்வீகச் சொத்துகள் கிடைக்கும். கண் அறுவை சிகிச்சை வெற்றி தரும்.

    பரிகாரம்: மகாவிஷ்ணு சமேத மகாலட்சுமியை வழிபடவும்.


    விருச்சிகம்

    விருச்சிக ராசிக்கு அஷ்டமாதிபதி மற்றும் லாப அதிபதியான புதன் லாப ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் வழக்குகளில் வெற்றி உண்டாகும். அவமானம், விபத்து, கண்டம், சர்ஜரியால் ஏற்பட்ட பாதிப்புகள் சீராகும். மூத்த சகோதரம், சித்தப்பாவால் ஆதாயம் உண்டு. மறுவிவாக முயற்சி நிறைவேறும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

    பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபடவும்.


    தனுசு

    தனுசு ராசிக்கு 7, 10-ம் அதிபதியாகிய புதன் 10-ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெறுகிறார். கூட்டுத் தொழில் முயற்சி வெற்றி தரும். திருமணத் தடை அகலும். கல்வி, புகழ், அரசியல், லாபங்களும்,பூர்வீக வகையில் நன்மையும் கிட்டும். வாழ்க்கைத் துணையாலும் ஆதாயம் உண்டு.

    பரிகாரம்: கோதண்ட ராமரை வழிபடவும்.

    மகரம்

    மகர ராசிக்கு 6, 9-ம் அதிபதியான புதன் பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெறுகிறார். தொழிலில் மேன்மையும், அரசியல் பதவியும். செல்வாக்கும், சட்டத்துறையில் மதிப்பும் கிடைக்கும். பித்ருக்களுக்கான நீத்தர் கடன் செய்ய உகந்த நேரம். சிலர் தந்தையின் கடனை சுமக்க நேரும். அல்லது தந்தைக்கு வைத்திய செலவு அதிகமாகும். விரும்பிய கடன் கிடைக்கும்.

    பரிகாரம்: தாய் மாமாவின் நல்லாசி பெறுவது நல்லது.

    கும்பம்

    கும்ப ராசிக்கு 5, 8-ம் அதிபதியான புதன் ராசிக்கு 8ல் உச்சம் பெறுகிறார். சிலருக்கு வம்பு வழக்கான காதல் திருமணம் நடக்கும்.சிலருக்கு காதலால் அவமானம், வம்பு, வழக்கு உருவாகும். ஆரோக்கிய குறைபாடு அறுவை சிகிச்சையில் சீராகும். குழந்தைகளால் மனச் சங்கடம் ஏற்படும். சிலருக்கு பதவியில் நெருக்கடி இருக்கும். அல்லது வேலையில் மெமோ வாங்குவார்கள். சுபமும், அசுபமும் கலந்தே நடக்கும்.

    பரிகாரம்: மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு உதவ வேண்டும்.

    மீனம்

    மீன ராசிக்கு 4,7-ம் அதிபதியான புதன் 7-ம்மிடத்தில் உச்சம் பெறுகிறார். திருமணத் தடை அகலும். நல்ல சொத்து சுகத்துடன் கூடிய வாழ்க்கைத் துணை அமையும். வாழ்க்கைத் துணைக்கு தாய் வழி சொத்து கிடைக்கும். கூட்டுத் தொழில் ஆர்வம் கூடும். தடைபட்ட கல்வியைத் தொடரும் வாய்ப்புகள் உள்ளது. தாயின் நல்லாசிகள் கிடைக்கும். கோட்சார புதன் உச்சமடையும். இந்த காலத்தில் உரிய வழிபாட்டு முறைகளை பயன்படுத்தி பயன்பெற வாழ்த்துக்கள்.

    • காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாகும்.
    • புரட்டாசி முழுவதும் விரதநாட்கள் தான்.

    தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் ஆறாவது மாதமான புரட்டாசிக்கு தனி மகிமை உண்டு. இது காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாகும். ஒவ்வொரு மாதத்திலும் விரதநாட்கள் இருந்தாலும் புரட்டாசி முழுவதும் விரதநாட்கள் தான்.

    சனி விரதம், நவராத்திரி விரதம் என தினம் தினம் திருவிழா கோலம்தான். பெருமாளை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பு என்பார்கள்.அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.


    ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்று. புதனின் அதி தேவதையாக இருப்பவர் மகாவிஷ்ணு. எனவேதான் விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது.

    பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனுடைய வீடு கன்னி. இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதத்தில்தான். ஆகவே இந்த மாதத்தில் பெருமாளுக்கு வேண்டிய பஜனைகள் பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன.

    புதனுக்கு நட்பு கிரகம் சனிபகவான். அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் விஷேசமாக கொண்டாடப்படுகிறது.

    புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத் தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு. ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது.

    அப்படி விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.

    சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி சனிக் கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார்.

    அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடு பலன்கள் குறைய காக்கும் கடவுளான பெருமாளை வணங்குவது வழக்கத்தில் வந்தது. புரட்டாசி மாதம் பல்வேறு சிறப்புகள் கொண்டது. சிவபெருமான், விஷ்ணு, அம்மன், விநாயகர் வழிபாடு புரட்டாசியில் மிகவும் சிறப்பாக நடைபெறும்.

    குறிப்பாக புரட்டாசி என்றதுமே அனை வருக்கும் முதலில் திருப்பதி ஏழு மலையான் வழிபாடுதான் நினைவுக்கு வரும். அதனால் தான் புரட்டாசி மாதத்தை "பெருமாள் மாதம்" என்று சொல்கிறார்கள்.

    புரட்டாசி மாதம் சனிக் கிழமைகளில் மேற்கொள் ளப்படும் விரதம் மிக, மிக சக்தி வாய்ந்தது. புண்ணியத்தை இரட்டிப்பாக்கி தர வல்லது. எனவே பெருமாள் பக்தர்கள் புரட்டாசி மாதம் முழுவதும் வழிபாடு செய்வதை வழக்கத் தில் வைத்துள்ளனர்.

    புரட்டாசியில் சனிக் கிழமை விரதம் தவிர அனந்த விரதம், ஏகாதசி விரதம் உள்பட ஏராளமான விரதங்கள் உள்ளன. புரட்டாசியில் பெருமாளுக்கு இணையாக சிவபெருமானுக்கும் வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

    அது போல அம்பாளுக்கு உகந்த நவராத்திரி 9 நாட்கள் வழிபாடும் புரட்டாசியில் வர உள்ளது. அதோடு லலிதா சஷ்டி விரதம், உமா மகேஸ்வரி விரதம், கேதார கவுரி விரதம் ஆகியவையும் அம்பாளுக்கு உகந்த புண்ணிய தினங்களாகும்.


    புரட்டாசியில் வரும் தூர்வாஷ்டமி விரதம், ஜேஷ்டா விரதம் ஆகிய இரு விரதங்களும் விநாயகப் பெருமானுக்கு உரியவையாகும். இந்த நாட்களில் விநாயகரை வழிபட்டால் அவரது அருளை முழுமையாகப் பெறலாம்.

    புரட்டாசி சனிக் கிழமையன்று நாம் பெருமாளை வழிபடும் போது, ''திருவேங்கடமலையில் வாசம் செய்யும் சீனிவாசப் பெருமாளே நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களை எல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம்.

    மகாலட்சுமி வசிக்கும் அழகான மார்பை உடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம் போல நன்மைகளை பொழிபவரே, சீனிவாசா உமக்கு நமஸ்காரம்....'' என்று மனம் உருக சொல்லி வழிபட வேண்டும். இந்த துதியை சொல்ல, சொல்ல சகல செல்வங்களும் உங்களுக்கு வந்து சேரும்.

    புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாள் படத்தின் முன்னர் நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும். இதனால்தான் புரட்டாசி மாதம், புண்ணியம் தரும் மாதமாக கருதப்படுகிறது.

    • திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை.
    • ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச்சாற்று வைபவம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு புரட்டாசி-3 (வியாழக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: பிரதமை காலை 6.41 மணி வரை பிறகு துவிதியை பின்னிரவு 3.39

    மணி வரை பிறகு திருதியை

    நட்சத்திரம்: உத்திரட்டாதி காலை 11.15 மணி வரை பிறகு ரேவதி

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை மற்றும் மைசூர் மண்டபம் எழுந்தருளல். சோழவந்தான் சமீபம் குருவித்துறை குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை வழிபாடு. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச்சாற்று வைபவம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி காலை சிறப்பு குருவார திருமஞ்சன சேவை. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பெருமை

    ரிஷபம்-வாழ்வு

    மிதுனம்-மகிழ்ச்சி

    கடகம்-பெருமை

    சிம்மம்-சிறப்பு

    கன்னி-உறுதி

    துலாம்- திறமை

    விருச்சிகம்-மாற்றம்

    தனுசு- நிறைவு

    மகரம்-ஆற்றல்

    கும்பம்-ஆர்வம்

    மீனம்-அன்பு

    • புரட்டாசி மாதத்தில் தொடர்ந்து 3 நாட்கள் விழும்.
    • சூரிய ஒளிக்கதிர் விழும் அதிசய நிகழ்வு

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கல்லாங்குளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் உள்ள மூலவர் மீது புரட்டாசி மாதத்தில் தொடர்ந்து 3 நாட்கள் மூலவர் அண்ணாமலையார் மீது சூரிய ஒளிக்கதிர் விழும் அதிசய நிகழ்வு நடைபெறும்.

    அதேபோல் இன்று காலை 6.30 மணி அளவில் சூரிய ஒளிக்கதிர் விழுந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெருமாளை வழிபடுவதற்குரிய மாதமாக புரட்டாசி இருக்கிறது.
    • பவுர்ணமியைத் தொடர்ந்து வரும் தேய்பிறை 15 நாட்களும் மகாளய பட்சம்.

    எல்லா நாட்களிலும் நாம் இறைவனை வழிபடுவோம் என்றாலும், இறைவனை வழிபடுவதற்காகவே நம் முன்னோர்கள், சில மாதங்களை வரையறை செய்து வைத்துள்ளனர். அதில் ஆடி, புரட்டாசி, மார்கழி ஆகியவை அடங்கும். இதில் பெருமாளை வழிபடுவதற்குரிய மாதமாக புரட்டாசி இருக்கிறது.

    பெருமாள் மட்டுமின்றி, அம்பாளுக்குரிய நவராத்திரி விரத நாட்களும், புரட்டாசி மாதம் தான் வருகிறது. அதோடு முன்னோர்களை வழிபடும் 'மகாளய அமாவாசை', சிவபெருமானின் அருளை பெற்றுத் தரும் 'கேதார கவுரி விரதம்' என்று அனைத்து தெய்வங்களுக்குமான வழிபாட்டு மாதமாக இந்த புரட்டாசி மாதம் இருக்கிறது. இந்த மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் சில விரதங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.


    விநாயகர் விரதம்

    புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது. விநாயகரை மனதில் நிறுத்தி செய்யப்படும் இந்த விரதத்தை, மன சுத்தத்தோடு செய்தால், நாம் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். இது தவிர 'துர்வாஷ்டமி விரதம் என்பதும் விநாயகரை வழிபடும் ஒரு விரதமாக இருக்கிறது.

    புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி திதி அன்று, சிவபெருமானோடு சேர்த்து விநாயகரை வழிபட வேண்டிய விரதம் இது. இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும்.

    மகாலட்சுமி விரதம்

    புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாட்கள் லட்சுமி தேவியைப் பிரார்த்தித்து செய்யப்படும் விரதம் இதுவாகும். தொடர்ச்சியாக 16 நாட்கள் மகாலட்சுமியை வழிபட்டு வந்தால், குடும்பத்தில் இருக்கும் வறுமை அகலும். ஒளிமயமான வாழ்க்கை அமையும்.


    அமுக்தாபரண விரதம்

    புரட்டாசி மாத வளர்பிறை சப்தமியில், உமாமகேஸ்வரரை பூஜை செய்து 12 முடிச்சுகள் கொண்ட கயிற்றை (சரடு) வலக்கையில் கட்டிக் கொள்வார்கள். இந்த விரதத்தால் பிள்ளைப் பேறு கிடைக்கும்.

    ஜேஷ்டா விரதம்

    புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி அன்று ஜேஷ்டா தேவியை நினைத்து செய்யப்படும் விரதம் இது. மகாலட்சுமிக்கு மூத்த தேவியான இவரை, பேச்சு வழக்கில் 'மூதேவி' என்றும் அழைப்பார்கள்.


    சஷ்டி-லலிதா விரதம்

    புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியை குறித்து கடை பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதத்தை அனுஷ்டித்தால் சர்வ மங்கலமும் கிடைக்கப்பெறும்.

    கபிலா சஷ்டி விரதம்

    புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து பழுப்பு வண்ணம் கொண்ட பசு மாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதமாகும். இதை மேற்கொள்வதால் சகல சித்திகளும் கிடைக்கும்.


    மகாளய பட்சம்

    புரட்டாசி பவுர்ணமியைத் தொடர்ந்து வரும் தேய்பிறை பதினைந்து நாட்களும் மகாளய பட்சம் ஆகும். இந்த காலத்தில் மூதாதையர்களுக்கு திதி கொடுப்பது புண்ணியம். இதுநாள் வரை முன்னோர்களுக்கு திதி கொடுக்காதவர்கள் கூட, இந்த மகாளய அமாவாசையில் திதி கொடுத்தால், முழு பலனையும் பெற முடியும்.

    • இன்று மகாளய பட்சம் ஆரம்பம்.
    • திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு புரட்டாசி-2 (புதன்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: பவுர்ணமி காலை 9.10 மணி வரை பிறகு பிரதமை

    நட்சத்திரம்: பூரட்டாதி நண்பகல் 12.58 மணி வரை பிறகு உத்திரட்டாதி

    யோகம்: அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று மகாளய பட்சம் ஆரம்பம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் புறப்பாடு. தேவக்கோட்டை ஸ்ரீ ரெங்கநாதர் புறப்பாடு. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் அன்னை ஸ்ரீ காந்திமதியம்மன் அபிஷேகம், அலங்காரம். விருதுநகர் ஸ்ரீ விஸ்வநாத சுவாமி அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-திறமை

    ரிஷபம்-சுகம்

    மிதுனம்-சாதனை

    கடகம்-செலவு

    சிம்மம்-பொறுமை

    கன்னி-பெருமை

    துலாம்- உதவி

    விருச்சிகம்-அமைதி

    தனுசு- நலம்

    மகரம்-சலனம்

    கும்பம்-ஆதாயம்

    மீனம்-பயணம்

    • மகாளயபட்சம் வரும் 15 நாட்களுமே மிகவும் சிறப்பு வாய்ந்தவை.
    • முன்னோர்கள் ஆசி வழங்க பிதுர் உலகத்தில் இருந்து பூலோகம் வருகின்றனர்.

    மகாவிஷ்ணு ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு லோகத்துக்கு சென்று அருள்பாலித்து வருகிறார். அந்த வகையில் புரட்டாசி மாதம் அவர் பித்ரு லோகத்துக்கு வருவதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    புரட்டாசி மாதத்தில் பித்ருக்கள் அனைவரும் பாத பூஜை, ஹோமம் உள்ளிட்டவைகளை செய்வார்கள். ஏனெனில் பித்ருக்களுக்கு கண் கண்ட கடவுளாக திகழ்பவர் மகாவிஷ்ணுதான்.

    புரட்டாசி மாதம் பித்ருக்கள் செய்யும் பூஜை மற்றும் ஆராதனைகளை மகாவிஷ்ணு மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். பித்ருக்கள் நடத்தும் அந்த பூஜைக்கு "திலஸ்மார நிர்மால்ய தரிசன பூஜை" என்று பெயர்.

    திலம் என்றார் எள் என்று பொருள். இந்த எள் மகா விஷ்ணுவின் உடலில் இருந்து தோன்றியது என்பது குறிப்பிடத்தக்கது. எனவேதான் புரட்டாசி மாதம் விஷ்ணுவுக்கு நடத்தப்படும் பூஜை திலஸ்மார நிர்மால்ய பூஜை என்றழைக்கப்படுகிறது.

    இந்த பூஜையின் போது மகாவிஷ்ணு உடல் முழுவதும் எள் தானியம் நிறைந்த நிலையில் பித்ருக்களுக்கு காட்சியளிப்பார். இது பித்ருக்களை தவிர வேறு யாருக்கும் காணக் கிடைக்காத காட்சியாகும்.

    விஷ்ணுவின் நிர்மால்ய தரிசனம் பெறும் பித்ருக்களுக்கு அரிய பலன்கள் கிடைக்கும். இந்த அரிய பலன் களை பித்ருக்கள் மூலம் பூமியில் வாழும் அவர் களது உறவினர்கள் பெற மகா விஷ்ணு அருள்வார்.

    பித்ருக்களின் ஆராதனைகளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளும் மகா விஷ்ணு, பித்ருக்களிடம், "15 நாட்கள் நீங்கள் பூலோகத்துக்கு சென்று உங்கள் குடும்பத்தினர் தரும் அன்னத்தை ஏற்று வாருங்கள்.

    உங்கள் குடும்பத்தினருக்கு நிர்மால்ய பலன்களை கொடுத்து வாருங்கள்" என்று அனுப்பி வைப்பார்.

    இதைத் தொடர்ந்தே பித்ருக்கள் புரட்டாசி மாதம் 15 நாட்கள் பூலோகத்தில் உள்ள நம் வீட்டுக்கு வருகிறார்கள். இந்த 15 நாட்களைத்தான் நாம் மகாளயபட்சம் என்று சொல்கிறோம்.

    மகாளய பட்சம் என்னும் முன்னோர் வழிபாட்டுக்கான 15 நாட்கள் நாளை (18-ந்தேதி) தொடங்கி அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதியில் முடிகிறது. இந்த நாட்களில் முன்னோரை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும்.

    மகாளயபட்சத்தில் முன்னோர்கள் நமக்கு ஆசி வழங்க பிதுர் உலகத்தில் இருந்து பூலோகம் வருகின்றனர். அவர்களின் வரவை எதிர்பார்த்து உள்ளம், உடல் தூய்மையுடன் நாம் காத்திருக்க வேண்டும். வீட்டையும் சுத்தமாக வைக்க வேண்டும். குடும்பத்தினர் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்வது கூடாது.


    இந்த காலத்தில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்துவது இல்லை. ஏனெனில் முன்னோருக்கான திதி, தர்ப்பணம், சிரார்த்தம், தானம், தர்மம் செய்வதில் ஈடுபட வேண்டும் என்பதற்காக. கன்னியாகுமரி, ராமேசுவரம், வேதாரண்யம், தனுஷ்கோடி போன்ற கடற்கரை கோவில்களுக்கு செல்லலாம்.

    முடியாதவர்கள் வீட்டிலேயே பூஜை செய்து காகத்திற்கு அன்னமிடலாம். பசுவிற்கு கீரை, பழம் கொடுக்கலாம். இதுவும் முடியாவிட்டால் முன்னோர்களின் பெயரை உச்சரித்து 'காசி காசி' என்று சொல்லியபடியே, கால் மிதிபடாமல் வீட்டு வாசலில் எள், தண்ணீர் விட்டாலும் பலன் கிடைக்கும்.

    மகாளயபட்சம் வரும் 15 நாட்களுமே மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்த 15 நாட்களும் நாம் பித்ருக்களை ஆராதித்தால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.

    பூலோகத்தில் தங்கி இருக்கும் 15 நாட்களில் கோவில் தீர்த்தங்களில் உள்ள தெய்வீக சக்திகளை பித்ருக்கள் எடுத்துச் செல்வார்கள். அந்த சமயத்தில் நாம் பித்ருக்களுக்கு அன்னமிட்டு வழிபாடு செய்யும்போது, பித்ருக்கள் மிகவும் மனம் குளிர்ந்து அந்த தெய்வ சக்திகளை நமக்கு கொஞ்சம் பரிசாக தந்து விட்டுச் செல்வார்கள்.

    மகாளயபட்ச 15 நாட்களும் நாம் கொடுக்கும் தர்ப்பணங்கள், சிரார்த்தங்கள் மூலம் பித்ருக்களுக்கு கூடுதல் பலன்களையும், ஆத்மசக்தியையும் கொடுக்கும். அந்த சக்தியை பெறும் பித்ருக்கள் அவற்றை மகாவிஷ்ணுவின் பாதங்களில் சமர்ப்பிப்பதாக ஐதீகம்.

    ஆக நாம் செய்யும் பித்ரு தர்ப்பணங்கள், சிரார்த்தங்கள் நம் முன்னோருக்கு மட்டுமின்றி, நாம் வணங்கும் மகாவிஷ்ணுவையும் சென்று அடைகிறது. எனவேதான் மகாளய அமாவாசை மற்ற எல்லா அமாவாசை நாட்களையும் விட உயர்ந்ததாக கருதப்படுகிறது.

    இந்த 15 நாட்களில் மகாளயபட்ச வழிபாட்டை இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு எங்கும் கிடையாது. எல்லாமே உங்கள் இஷ்டம்தான்.

    உங்கள் குல வழக்கப்படி தர்ப்பண வழிபாடுகளை எப்படி கொடுப்பார்களோ.... அந்த வழக்கப்படியே செய்யலாம். தர்ப்பணம், சிரார்த்தம் கொடுப்பதில் சாதி, மத, குல பேதங்கள் எதுவும் பார்க்க வேண்டியதில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

    மகாளய அமாவாசை நாளில் மகாவிஷ்ணுவின் ஆசீர்வாதம் பித்ருக்களை தேடி வரும். அந்த ஆசீர்வாதத்தை பித்ருக்களும் நம்மிடம் நேரடியாக எடுத்து வரக்கூடும்.

    எனவே மகாளயபட்ச நாட்களில் பித்ருக்களை வழிபாடு செய்து, விஷ்ணுவின் அருளை பெற தவறாதீர்கள்.

    மாதம் தோறும் அமாவாசை வந்தாலும் தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை ஆகிய மூன்று அமாவாசைகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த மூன்றிலும் அதிக புண்ணியத்தை தருவது மகாளய அமாவாசை ஆகும்.

    இந்த 15 நாட்களில் வரும் ஒவ்வொரு திதியும், ஒவ்வொரு வகை பித்ருக்களுக்கு உகந்த தினமாக கருதப்படுகிறது. அந்த திதி சிறப்பு நாட்களை பெரியவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

    குறிப்பிட்ட திதியில் குறிப்பிட்டவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் முழுமையான பலன்களை பெற முடியும்.

    அன்று நீங்கள் கொடுக்கும் எள்ளும் தண்ணீரும், அவர்களை மனம் குளிரச் செய்யும். அவர்களை மேலும் சாந்தி அடையச் செய்யும். தர்ப்பணத்தை வீட்டில் வைத்தும் கொடுக்கலாம். ஆனால் மகாளய அமாவாசை தினத்தன்று தீர்த்தத் தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து அவர்களது தாகம் தீருங்கள்.


    மகாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம், பவானி கூடுதுறை உள்ளிட்ட புண்ணிய நீர் நிலைகளில் ஏராளமானோர் நீராடி பித்ரு பூஜை செய்து, தமது மூதாதையர்களை வழிபடுவார்கள்.

    மகாளய பட்ச நாட்களில் தினமும் ஒருவருக்காவது அன்னதானம் செய்ய வேண்டும் என்று கருட புராணம், விஷ்ணு புராணங்களில் கூறப்பட்டுள்ளது. முடியாதவர்கள் காகத்திற்கு உணவு வைக்கலாம். பசு மாட்டுக்கு அகத்தி கீரை வாங்கிக் கொடுக்கலாம்.

    தர்ப்பணம் கொடுக்காவிட்டால் பித்ருக்கள் மனம் வருந்த நேரிடும். ஏனெனில் எந்த பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்படுகிறதோ, அந்த பித்ருக்களுக்குத்தான் தாகம் தீர்ந்து, ஆத்ம சக்தி அதிகமாக கிடைக்கும்.

    வாழும் காலத்தில் நாம் நம் முன்னோர்களிடம் அன்புடன் இருந்திருக்கலாம். அல்லது இல்லாமல் இருந்திருக்கலாம். சிலர் பெற்றோரை கடைசி காலத்தில் தவிக்க விட்டிருக்கலாம்.

    அந்த பாவத்துக்கு பரிகாரமாக, மகாளயபட்ச 15 நாட்களும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது நல்லது. எனவே மகாளய பட்ச 15 நாட்களும் மூதாதையர்களை ஆராதியுங்கள். யார் ஒருவர், பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கிறாரோ, அவருக்கு பித்ருக்கள் தெய்வ சக்திகளை பரிசாக தந்து விட்டுச்செல்வார்கள். முன்னேற்றம் தானாக வரும்!

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அம்பிகை வழிபாட்டில் திரிபுரசுந்தரி முக்கியமான தெய்வமாக கருதப்படுகிறாள்.
    • ஒரே பெயரை மீண்டும் சொல்லாத, ஒரே சகஸ்ரநாமம்.

    சக்தி என்னும் அம்பிகையின் வழிபாட்டில் 'திரிபுரசுந்தரி' முக்கியமான தெய்வமாக கருதப்படுகிறாள். ஒரு முறை சிவபெருமானின் நெற்றிக்கண் பார்வையால் காமன் (மன்மதன்) எரிந்து சாம்பலானான்.

    அவனது சாம்பலில் இருந்து பண்டன் என்ற அரக்கன் தோன்றி, சோணிதபுரம் என்ற இடத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தான். அவனால் தேவர்கள் அனைவரும் துன்பத்திற்கு உள்ளாகினர்.

    இதையடுத்து தேவர்கள் அனைவரும் சிதக்னி குண்டம் அமைத்து, சிவபெருமானையும், பார்வதிதேவியையும் வேண்டினர். அவர்களின் வேண்டுதலால், குண்டத்தில் இருந்து காமேசுவரனாக சிவனும், திரிபுரசுந்தரியாக பார்வதியும் தோன்றினர்.

    மன்மதனின் கரும்பு வில்லும், மலர்பாணமும் தாங்கியிருந்த தேவி, தனது சேனைகளுடன் சென்று, பண்டனையும் அவனது படைகளையும் அழித்தாள்.

    திரிபுரசுந்தரியை 'லலிதை', 'ராஜ ராஜேஸ்வரி' என்ற பெயர்களிலும் அழைப்பார்கள். 'திரிபுரசுந்தரி' என்பதற்கு 'மூவுலகிலும் பேரழகி' என்றும், 'லலிதா' என்பதற்கு 'திருவிளையாடல்கள் புரிபவள்' என்றும், 'ராஜராஜேஸ்வரி' என்பதற்கு 'அரசர்க்கெல்லாம் அரசி' என்றும் பொருள்.

    தன்னை வழிபடுபவர்களுக்கு 16 பேறுகளையும் வழங்கும் இந்த தேவியானவள், 16 வயதுடைய இளம் மங்கை என்பதால் இவளை 'சோடசி' என்றும் அழைப்பர்.

    குறிப்பாக பக்தர்கள் பலரும் இந்த தேவியை 'லலிதா திரிபுரசுந்தரி' என்றே அழைக்கின்றனர்.

    மகா காமேசுவரனாகிய சிவபெருமான் சிம்மாசனமாக வீற்றிருக்க, பிரம்மன், திருமால், ருத்திரன், மகேசுவரன் ஆகியோர் அதன் கால்களாக இருக்க, அந்த சிம்மாசனத்தின் மீது வலது காலை மடித்தும், இடது காலை தொடங்க விட்டும் அமர்ந்த நிலையில் லலிதா திரிபுரசுந்தரி காட்சி தருகிறாள்.

    நான்கு கரங்களைக் கொண்ட இந்த தேவியின் கரங்களில் பாசம், அங்குசம், கரும்பு வில், ஐம்மலர் அம்புகள் உள்ளன. அன்னையின் இருபுறமும் சரஸ்வதியும், லட்சுமியும் சாமரம் வீசுகின்றனர்.

    இந்த தேவியை வழிபடுவதற்கான துதிப்பாடல்களில், ஆயிரம் நாமங்கள் கொண்ட 'லலிதா சகஸ்ரநாமம்' முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

    லலிதாதேவியின் கட்டளையின் பேரில், வாசினி, காமேஸ்வரி, அருணா, விமலா, ஜெயனி, மோதினி, சர்வேஸ்வரி, கவுலினி ஆகிய எட்டு தேவிகள், இந்த லலிதா சகஸ்ரநாமத்தை இயற்றியதாக சொல்லப்படுகிறது.

    18 புராணங்களில் ஒன்றான பிரமாண்ட புராணத்தில் இந்த லலிதா சகஸ்ரநாமம் இடம்பெற்றுள்ளது. அந்த புராணத்தில் லலிதோபாக்கியானம் என்ற இடத்தில் ஹயக்ரீவப் பெருமாள், அகத்திய முனிவருக்கு லலிதா சகஸ்ரநாமத்தை உபதேசம் செய்துள்ளார். இது உபதேசிக்கப்பட்ட இடமாக, காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த லலிதா சகஸ்ரநாமம், துதிப்பாடல் மற்றும் ஸ்தோத்திரங்களாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. எனவே இதனை ஸ்தோத்திர வடிவிலோ அல்லது நாமாவளி வடிவத்திலோ உச்சரிக்கலாம்.

    ஒரே பெயரை மீண்டும் சொல்லாத, ஒரே சகஸ்ரநாமம், 'லலிதா சகஸ்ரநாமம்' என்கிறார்கள். சக்தியின் வெளிப்பாடாக கருதப்படும் லலிதா தேவியை வழிபடுபவர்களுக்கு, லலிதா சகஸ்ரநாமம் ஒரு புனித நூலாகும்.

    லலிதா திரிபுரசுந்தரியின் ஆயிரம் பெயர்களையும், தினந்தோறும் சொல்லி அந்த தேவியை வழிபடும்போது, அவளது அடியார்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

    தமிழகத்தில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில், லலிதா திரிபுரசுந்தரியின் முக்கியமான ஆலயங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    இது தவிர திரிபுராவில் உள்ள ராதாகிஷோர்பூர், மத்திய பிரதேசத்தின் காரியா ஆகிய இடங்களிலும் லலிதா தேவிக்கு ஆலயங்கள் அமைந்துள்ளன.

    ×