என் மலர்tooltip icon

    வழிபாடு

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அம்பிகை வழிபாட்டில் திரிபுரசுந்தரி முக்கியமான தெய்வமாக கருதப்படுகிறாள்.
    • ஒரே பெயரை மீண்டும் சொல்லாத, ஒரே சகஸ்ரநாமம்.

    சக்தி என்னும் அம்பிகையின் வழிபாட்டில் 'திரிபுரசுந்தரி' முக்கியமான தெய்வமாக கருதப்படுகிறாள். ஒரு முறை சிவபெருமானின் நெற்றிக்கண் பார்வையால் காமன் (மன்மதன்) எரிந்து சாம்பலானான்.

    அவனது சாம்பலில் இருந்து பண்டன் என்ற அரக்கன் தோன்றி, சோணிதபுரம் என்ற இடத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தான். அவனால் தேவர்கள் அனைவரும் துன்பத்திற்கு உள்ளாகினர்.

    இதையடுத்து தேவர்கள் அனைவரும் சிதக்னி குண்டம் அமைத்து, சிவபெருமானையும், பார்வதிதேவியையும் வேண்டினர். அவர்களின் வேண்டுதலால், குண்டத்தில் இருந்து காமேசுவரனாக சிவனும், திரிபுரசுந்தரியாக பார்வதியும் தோன்றினர்.

    மன்மதனின் கரும்பு வில்லும், மலர்பாணமும் தாங்கியிருந்த தேவி, தனது சேனைகளுடன் சென்று, பண்டனையும் அவனது படைகளையும் அழித்தாள்.

    திரிபுரசுந்தரியை 'லலிதை', 'ராஜ ராஜேஸ்வரி' என்ற பெயர்களிலும் அழைப்பார்கள். 'திரிபுரசுந்தரி' என்பதற்கு 'மூவுலகிலும் பேரழகி' என்றும், 'லலிதா' என்பதற்கு 'திருவிளையாடல்கள் புரிபவள்' என்றும், 'ராஜராஜேஸ்வரி' என்பதற்கு 'அரசர்க்கெல்லாம் அரசி' என்றும் பொருள்.

    தன்னை வழிபடுபவர்களுக்கு 16 பேறுகளையும் வழங்கும் இந்த தேவியானவள், 16 வயதுடைய இளம் மங்கை என்பதால் இவளை 'சோடசி' என்றும் அழைப்பர்.

    குறிப்பாக பக்தர்கள் பலரும் இந்த தேவியை 'லலிதா திரிபுரசுந்தரி' என்றே அழைக்கின்றனர்.

    மகா காமேசுவரனாகிய சிவபெருமான் சிம்மாசனமாக வீற்றிருக்க, பிரம்மன், திருமால், ருத்திரன், மகேசுவரன் ஆகியோர் அதன் கால்களாக இருக்க, அந்த சிம்மாசனத்தின் மீது வலது காலை மடித்தும், இடது காலை தொடங்க விட்டும் அமர்ந்த நிலையில் லலிதா திரிபுரசுந்தரி காட்சி தருகிறாள்.

    நான்கு கரங்களைக் கொண்ட இந்த தேவியின் கரங்களில் பாசம், அங்குசம், கரும்பு வில், ஐம்மலர் அம்புகள் உள்ளன. அன்னையின் இருபுறமும் சரஸ்வதியும், லட்சுமியும் சாமரம் வீசுகின்றனர்.

    இந்த தேவியை வழிபடுவதற்கான துதிப்பாடல்களில், ஆயிரம் நாமங்கள் கொண்ட 'லலிதா சகஸ்ரநாமம்' முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

    லலிதாதேவியின் கட்டளையின் பேரில், வாசினி, காமேஸ்வரி, அருணா, விமலா, ஜெயனி, மோதினி, சர்வேஸ்வரி, கவுலினி ஆகிய எட்டு தேவிகள், இந்த லலிதா சகஸ்ரநாமத்தை இயற்றியதாக சொல்லப்படுகிறது.

    18 புராணங்களில் ஒன்றான பிரமாண்ட புராணத்தில் இந்த லலிதா சகஸ்ரநாமம் இடம்பெற்றுள்ளது. அந்த புராணத்தில் லலிதோபாக்கியானம் என்ற இடத்தில் ஹயக்ரீவப் பெருமாள், அகத்திய முனிவருக்கு லலிதா சகஸ்ரநாமத்தை உபதேசம் செய்துள்ளார். இது உபதேசிக்கப்பட்ட இடமாக, காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த லலிதா சகஸ்ரநாமம், துதிப்பாடல் மற்றும் ஸ்தோத்திரங்களாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. எனவே இதனை ஸ்தோத்திர வடிவிலோ அல்லது நாமாவளி வடிவத்திலோ உச்சரிக்கலாம்.

    ஒரே பெயரை மீண்டும் சொல்லாத, ஒரே சகஸ்ரநாமம், 'லலிதா சகஸ்ரநாமம்' என்கிறார்கள். சக்தியின் வெளிப்பாடாக கருதப்படும் லலிதா தேவியை வழிபடுபவர்களுக்கு, லலிதா சகஸ்ரநாமம் ஒரு புனித நூலாகும்.

    லலிதா திரிபுரசுந்தரியின் ஆயிரம் பெயர்களையும், தினந்தோறும் சொல்லி அந்த தேவியை வழிபடும்போது, அவளது அடியார்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

    தமிழகத்தில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில், லலிதா திரிபுரசுந்தரியின் முக்கியமான ஆலயங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    இது தவிர திரிபுராவில் உள்ள ராதாகிஷோர்பூர், மத்திய பிரதேசத்தின் காரியா ஆகிய இடங்களிலும் லலிதா தேவிக்கு ஆலயங்கள் அமைந்துள்ளன.

    • இன்று பவுர்ணமி.
    • 21-ந்தேதி சங்கடஹரசதுர்த்தி.

    17-ந்தேதி (செவ்வாய்)

    * பவுர்ணமி.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்.

    * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.

    * மேல்நோக்கு நாள்.

    18-ந்தேதி (புதன்)

    * மகாளயம் ஆரம்பம்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.

    * திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    * கீழ்நோக்கு நாள்.

    19-ந்தேதி (வியாழன்)

    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைர வேல் தரிசனம்.

    * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சனம்.

    * திருப்பதி ஏழுமலையான், மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

    * மேல்நோக்கு நாள்.

    20-ந்தேதி (வெள்ளி)

    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

    * திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.

    * சமநோக்கு நாள்.

    21-ந்தேதி (சனி)

    * சங்கடகர சதுர்த்தி.

    * திருப்போரூர் முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    * திருவில்லிபுத்தூர் அருகில் உள்ள திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் கருட வாகன சேவை.

    * கீழ்நோக்கு நாள்.

    22-ந்தேதி (ஞாயிறு)

    * கார்த்திகை விரதம்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.

    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் வீதி உலா.

    * திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.

    * கீழ்நோக்கு நாள்.

    23-ந்தேதி (திங்கள்)

    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சனம்.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    * திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    * மேல்நோக்கு நாள்.

    • இன்று பவுர்ணமி.
    • திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு புரட்டாசி-1 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சதுர்த்தசி காலை 11.21 மணி வரை பிறகு பவுர்ணமி

    நட்சத்திரம்: சதயம் பிற்பகல் 2.27 மணி வரை பிறகு பூரட்டாதி

    யோகம்: மரணயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று பவுர்ணமி. சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கும் திருமஞ்சன சேவை. சிதம்பரம் ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம். திருநாறையூர் ஸ்ரீ சித்த நாதீஸ்வரர் கோவில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ருசம்ஹார அர்ச்சனை. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வெற்றி

    ரிஷபம்-ஓய்வு

    மிதுனம்-நன்மை

    கடகம்-விருத்தி

    சிம்மம்-விருப்பம்

    கன்னி-பரிவு

    துலாம்- புகழ்

    விருச்சிகம்-யோகம்

    தனுசு- இன்பம்

    மகரம்-நலம்

    கும்பம்-நட்பு

    மீனம்-உதவி

    • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
    • சிவன் கோவில்களில் காலை சோமவார அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆவணி-31 (திங்கட்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: திரயோதசி நண்பகல் 1.30 மணி வரை பிறகு சதுர்த்தசி

    நட்சத்திரம்: அவிட்டம் பிற்பகல் 3.52 மணி வரை பிறகு சதயம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று சுபமுகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம். மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் தீர்த்தம், விருஷபாருட தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம். திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை சமேத ஸ்ரீ மகாலிங்கசுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீசுவரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ அரளாகேசியம்மன் சமேத ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலை சோமவார அபிஷேகம். கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-சிந்தனை

    ரிஷபம்-நன்மை

    மிதுனம்-பொறுப்பு

    கடகம்-முயற்சி

    சிம்மம்-பொறுமை

    கன்னி-ஊக்கம்

    துலாம்- நிறைவு

    விருச்சிகம்-நிம்மதி

    தனுசு- சுபம்

    மகரம்-உற்சாகம்

    கும்பம்-ஆக்கம்

    மீனம்-பக்தி

    • இன்று பிரதோசம். சுபமுகூர்த்த தினம். ஓணம் பண்டிகை.
    • மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரரர் சட்டத் தேரில் பவனி.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆவணி-30 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: துவாதசி பிற்பகல் 3.30 மணி வரை பிறகு திரயோதசி

    நட்சத்திரம்: திருவோணம் மாலை 5.03 மணி வரை பிறகு அவிட்டம்.

    யோகம்: அமிர்த, மரணயோகம்

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று பிரதோசம். சுபமுகூர்த்த தினம். ஓணம் பண்டிகை. சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம். மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரரர் சட்டத் தேரில் பவனி. இரவு சப்தாவர்ணம். திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை ஸ்ரீ சுவாமி ஸ்ரீ அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கு காலையில் சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-தனம்

    ரிஷபம்-முயற்சி

    மிதுனம்-பரிசு

    கடகம்-அனுகூலம்

    சிம்மம்-பாராட்டு

    கன்னி-மாற்றம்

    துலாம்- உற்சாகம்

    விருச்சிகம்-சிரத்தை

    தனுசு- சாதனை

    மகரம்-சுபம்

    கும்பம்-செலவு

    மீனம்-சுகம்

    • யாகசாலையில் நம் பெருமாள் எழுந்தருளியிருக்க அவரைச்சுற்றிலும் பூக்கள் பரப்பி வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறும்.
    • பவித்ரோத்சவத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பூச்சாண்டி சேவை எனப்படும் அங்கோபாங்க சேவை 2-ம் நாளான நாளை மதியம் நடக்கிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி - புரட்டாசி மாதம் பவித்ரோத்சவம் எனப்படும் நூலிழைத் திருநாள் 9 நாட்கள் நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான பவித்ரோத்சவம் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று காலை 9.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 9.45 மணிக்கு யாகசாலை வந்தார். 10.30 மணிக்கு சிறப்பு திருவாராதனம் கண்டருளினார். மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திருமஞ்சனம் கண்டருள்கிறார். இரவு 11 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    யாகசாலையில் நம் பெருமாள் எழுந்தருளியிருக்க அவரைச்சுற்றிலும் பூக்கள் பரப்பி வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறும், இதனால் இந்நிகழ்ச்சி பூ பரத்திய ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது.

    அத்துடன் கோவிலின் அனைத்து சன்னதிகளிலும் மூலவர், உற்சவர் உள்பட சிறிய, பெரிய மூர்த்திகள் அனைவருக்கும் நூழிலைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். எனவே இதற்கு நூழிலைத் திருவிழா என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

    பவித்ரோத்சவத்தை முன்னிட்டு உற்சவர் நம் பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தங்கக் கொடிமரத்திற்கு மேற்கில் உள்ள பவித்ரோத்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

    இந்த பவித்ரோத்சவத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பூச்சாண்டி சேவை எனப்படும் அங்கோபாங்க சேவை 2-ம் நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் நடக்கிறது. இந்நிகழ்ச்சி மதியம் 2 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெறும்.

    பூச்சாண்டி சேவையின் போது மூலவர் ரெங்கநாதரின் திருமுக மண்டலம் உள்பட திருமேணி முழுவதும் நூலிழைகளை சுருள், சுருளாக வைத்து அலங்கரித்திருப்பர். இந்த காட்சி பார்வைக்கு அச்சமூட்டுவதுபோல் இருக்கும், எனவே இதை பூச்சாண்டி சேவை என்று குறிப்பிடும் பழக்கம் ஏற்பட்டது.

    • பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
    • புரட்டாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள "அண்ணாமலை" என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

    இந்த நிலையில் புரட்டாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. பவுர்ணமி வருகிற 17-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11.27 மணிக்கு தொடங்கி மறுநாள் 18-ந் தேதி (புதன்கிழமை) காலை 9.10 மணிக்கு நிறைவடைகிறது.

    புரட்டாசி மாத பிறப்பன்று (17-ந் தேதி) பவுர்ணமி வருவதாலும் அன்றைய தினம் அரசு விடுமுறை என்பதாலும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

    • இன்று சர்வ ஏகாதசி. திருவோண விரதம்.
    • திருநாள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆவணி-29 (சனிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: ஏகாதசி மாலை 5.05 மணி வரை பிறகு துவாதசி

    நட்சத்திரம்: உத்திராடம் மாலை 5.57 மணி வரை பிறகு திருவோணம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சர்வ ஏகாதசி. திருவோண விரதம். திருநாள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். மதுரை ஸ்ரீ சொக்கநாதப் பெருமான் விறகு விற்றருளிய காட்சி. ஸ்ரீ சுவாமி ஸ்ரீ அம்பாள் தங்கச் சப்பரத்தில் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் மாடவீதி புறப்பாடு. விருதுநகர் ஸ்ரீ சொக்கநாதர் தேரோட்டம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கும் திருமஞ்சனம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாச பெருமாள் ஸ்திரவார திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஆக்கம்

    ரிஷபம்-பயணம்

    மிதுனம்-ஜெயம்

    கடகம்-லாபம்

    சிம்மம்-சாந்தம்

    கன்னி-உழைப்பு

    துலாம்- கவனம்

    விருச்சிகம்-பக்தி

    தனுசு- இன்பம்

    மகரம்-ஆர்வம்

    கும்பம்-விவேகம்

    மீனம்-ஆர்வம்

    • சைவத்திற்கு ஆதாரம் பன்னிரு திருமுறைகள்.
    • பன்னிரு திருமுறைகளை உலகறிய செய்தவர் நம்பியாண்டார் நம்பி.

    சைவத்திற்கு ஆதாரம் பன்னிரு திருமுறைகள். அந்த திருமுறைகளை உலகத்தவர் அறியும் வண்ணம் செய்தவர், அதை பன்னிரு தொகுதிகளாக தொகுத்து பிரித்தவர் என்ற பெருமைக்குரியவர், நம்பியாண்டார் நம்பி.

    இவர் பிறந்த ஊரே திருநாரையூர் திருத்தலம். இந்த ஊரில் சவுந்தரநாயகி உடனாய சவுந்தரேசுவரர் கோவில் கொண்டு அருள்பாலிக்கிறார். இது நாரைக்கு முக்தி அளித்த திருத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில், இது 33-வது தலம்.


    தல வரலாறு

    புராண காலத்தில் ஆகாய மார்க்கமாக சில கந்தர்வர்கள் பறந்து சென்று கொண்டிருந்தனர். அவர்களில் தேவதத்தன் என்ற கந்தர்வன், பழங்களை சாப்பிட்டு விட்டு, அதன் கொட்டைகளை கீழே வீசிக் கொண்டே சென்றான்.

    அப்படி வீசப்பட்ட பழத்தின் கொட்டைகளில் சில, பூமியில் ஈசனை வேண்டி தவம் செய்து கொண்டிருந்த துர்வாச முனிவரின் மீது விழுந்தன.

    இதனால் தவம் கலைந்த துர்வாச முனிவர் கோபத்தில், "பறவையைப் போல பழத்தைத் தின்று கொட்டைகளை உதிர்த்த நீ, நாரையாக மாறுவாய்" என்று சாபம் கொடுத்தார்.

    தன் தவற்றை உணர்ந்து வருந்திய தேவதத்தன் மன்னிப்புக் கோரியும் பலன் இல்லை. நாரையாக மாறிய கந்தர்வன், இத்தலத்தில் உள்ள சவுந்தரேசுவரப் பெருமானை வணங்கி, சாப விமோசனம் தருமாறு கேட்டான்.

    இதற்காக அனுதினமும் தன் அலகால் கங்கை நீர் கொண்டு வந்து, இறைவனுக்கு அபிஷேகம் செய்து வந்தான். அவனது பக்தியை சோதிக்க நினைத்த சிவபெருமான், ஒரு நாள் கடும் புயலையும், மழையையும் உண்டாக்கினார்.

    நாரையாக இருந்த கந்தர்வன், அந்த புயல் மழையில் சிக்கி தவித்தான். இருந்தாலும் அலகில் கங்கைநீரை எடுத்துக் கொண்டு ஆலயம் நோக்கி வந்தான்.

    வழியில் கடுமையான புயல் காற்றின் காரணமாக அவனது சிறகுகள் ஒவ்வொன்றாக உதிர்ந்தது. ஆலயத்திற்கு சற்று தொலைவில் அனைத்து சிறகுகளும் விழுந்த நிலையில், தத்தித் தத்தியே ஆலயத்தை அடைந்து, இறைவனுக்கு தான் கொண்டு வந்த கங்கை நீரைக் கொண்டு அபிஷேகம் செய்தான்.

    இதனால் மகிழ்ந்த சிவபெருமான், நாரையாக இருந்த கந்தர்வனுக்கு மோட்சம் அளித்து அருள்புரிந்தார். நாரைக்கு இறைவன் அருள்பாலித்த காரணத்தால், இத்தலம் 'திருநாரையூர்' என்றானது.

    நாரையில் சிறகுகள் முற்றிலுமாக விழுந்த ஊர், சிறகிழந்தநல்லூர் என்ற பெயரில் திருநாரையூருக்கு கிழக்கே 2 மைல் தொலைவில் இருக்கிறது.

    பழமையான இந்த ஆலயம் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. என்றாலும் முழுவதும் கற்றளியாய் காட்சியளிக்கும் இந்த ஆலயம், சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்பதற்கு ஆதாரமாக விளங்குகிறது.

    இந்த ஆலயத்தில் பாக முனிவர், நாராயண முனிவர், அகத்தியர், மாமன்னன் ராஜராஜசோழன், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோர் வழிபட்டு பேறுபெற்றுள்ளனர்.

    இந்த ஆலயத்தில் தினமும் ஐந்து கால பூஜைகள் நடைபெறுகின்றது. மேலும் வழக்கமான பட்ச, மாத, வருடாந்திர உற்சவங்களும், திருவிழாக்களும் நடக்கிறது.

    தவிர நம்பியாண்டார் நம்பி முக்தியடைந்த தினத்தில் குரு பூஜை விழாவும், வைகாசி புனர்பூச நட்சத்திர நாளில் நாரை முக்தி அடைந்த நிகழ்வும் வெகுவிமரிசையாக நடந்தேறுகிறது.

    இத்தலத்தில் பவுர்ணமியில் இருந்து நான்காவது நாள் வரும் சதுர்த்தி தினத்தில் இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு, சங்கடங்கள் விலகும் என்பது நம்பிக்கை. அந்த நாளில் இவ்வாலயத்தில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் செய்யப்படுகிறது.

    சந்திரன் உதயமாகி வரும் நேரம் வரை நடைபெறும் இந்த பூஜையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தங்களின் சங்கடங்கள் தீர பிரார்த்தனை செய்கின்றனர்.


    ஆலய அமைப்பு

    கிழக்கு நோக்கிய இந்த ஆலயத்தின் முன்புறம் தல தீர்த்தமான செங்கழுநீர் தீர்த்தம் உள்ளது. கோவிலின் முன் வாசலைக்கடந்து உள்ளே சென்றால் நந்தி மண்டபம் உள்ளது. அடுத்ததாக உயர்ந்து நிற்கும் மூன்று நிலை ராஜகோபுரம் காணப்படுகிறது.

    அதை அடுத்து மகா மண்டபத்தில் சிவகாமி உடனாய நடராஜர் தென்முகம் நோக்கி அருள்கிறார். இதையடுத்து கருவறையில் கிழக்கு நோக்கி சிவலிங்க ரூபமாக சவுந்தரேசுவரர் வீற்றிருக்கிறார். அர்த்தமண்டபத்தில் செப்புத் திரு மேனிகள் இடம்பெற்றுள்ளன.

    ஆலயத்தின் முதல் பிரகாரத்தில் தென்பகுதியில் தனிச்சன்னிதியில் சமயாச்சாரியார்கள், சந்தனாச்சாரியார்கள், சேக்கிழார், அகத்தியர், பாகமுனிவர், நாராயணமுனிவர் திருவுருவங்கள் உள்ளன. பிரகாரத்தின் மேற்கு பகுதியில் கிழக்கு நோக்கிய தனிச் சன்னிதியில் பொள்ளாப் பிள்ளையார் அருள்பாலிக்கிறார்.


    இவர் உளியை வைத்து செதுக்காத பிள்ளையார் ஆவார். இவரது சன்னிதியின் மகாமண்டபத்துள் ஆறுமுகன் உருவமும், நம்பியாண்டார் நம்பி, ராஜராஜசோழன் ஆகியோரது திருவுருவங்களும் இடம்பெற்றுள்ளன


    வள்ளி - தெய்வானை சமேத சுப்பிரமணியர், கஜலட்சுமி, வடக்கு பிரகாரத்தில் திருமூலநாதர் எனப்படும் சுயம்பிரகாசர், சண்டிகேசுவரர் சன்னிதிகளும் இருக்கின்றன.

    கருவறைக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை வீற்றிருக்க, அடுத்ததாக சனி பகவான், மூன்று பைரவர்கள் மற்றும் சூரியன் ஆகியோர் உள்ளனர்.

    வெளிப்பிரகாரத்தில் கொடிக்கம்பத்தின் அருகில் தென்திசை நோக்கி திரிபுரசுந்தரி அம்பாள் அருள்பாலிக்கிறார். நம்பியாண்டார் நம்பிக்கு ஆலயத்தின் வெளியே முகப்பு வாசலுக்கு தெற்கில் தனிக் கோவில் இருக்கிறது.

    இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரி சனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    சிதம்பரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காட்டுமன்னார்கோவிலில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், சிதம்பரத்தில் இருந்து 17 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது, திருநாரையூர் திருத்தலம்.

    காட்டுமன்னார்கோவிலில் இருந்து அடிக்கடி பேருந்து வசதி உள்ளது. திருநாரையூருக்கு அருகாமையில் உள்ள ரெயில் நிலையம், சிதம்பரம் ஆகும்.

    • மதுரை ஸ்ரீசோமசுந்தரப் பெருமாள் புட்டுத் திருவிழா.
    • திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் கிளி வாகன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆவணி-28 (வெள்ளிக்கிழமை)

    பிறை: வளர்பிறை.

    திதி: தசமி இரவு 8.18 மணி வரை. பிறகு ஏகாதசி.

    நட்சத்திரம்: பூராடம் இரவு 6.27 மணி வரை. பிறகு உத்திராடம்.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். மதுரை ஸ்ரீசோமசுந்தரப் பெருமாள் புட்டுத் திருவிழா. சுவாமி, அம்பாள் விருஷபாருட தரிசனம். ராமேசுவரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தர குசாம்பிகை புறப்பாடு. கரூர் தான்தோன்றி மலை ஸ்ரீகல்யாண வெங்கட்ரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை. திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் கிளி வாகன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மேன்மை

    ரிஷபம்-நலம்

    மிதுனம்-உயர்வு

    கடகம்-நன்மை

    சிம்மம்-ஆர்வம்

    கன்னி-களிப்பு

    துலாம்- மாற்றம்

    விருச்சிகம்-சிந்தனை

    தனுசு- பாராட்டு

    மகரம்-நட்பு

    கும்பம்-பணிவு

    மீனம்-பாசம்

    • வருகிற 15-ந் தேதி திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
    • பக்தர்கள் அனைவருக்கும் ஓணம் விருந்து வழங்கப்படும்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். கேரளாவில் இந்த ஆண்டு வருகிற 15-ந் தேதி திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி நாளை (13-ந் தேதி) மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு, பிரம்மதத்தன் முன்னிலையில் மேல் சாந்தி மகேஸ் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். அன்று பூஜைகள் எதுவும் நடைபெறாது.

    மறுநாள் (14-ந் தேதி) அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெறும். 15-ந் தேதி திருவோண பூஜை நடைபெற உள்ளது. 15 மற்றும் 16-ந் தேதிகளில் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் ஓணம் விருந்து வழங்கப்படும்.

    16-ந் தேதி மாத வழிபாடு தொடங்கும். 21-ந்தேதி வரை நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என்றும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

    • வைணவ சமயத்தில் 108 திவ்ய தேசங்கள் உண்டு.
    • 106 திவ்ய தேசங்கள் பூமியில் உள்ளன.

    ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோவில்களை 'திவ்ய தேசங்கள்' என்று அழைப்பார்கள். அந்த திவ்ய தேசங்களில் ஒன்றுதான், நேபாளத்தில் உள்ள 'முக்திநாத்'.

    உண்மையில் முக்திநாத் என்பது ஒரு சிறிய கிராமம் தான். அங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயத்தை சுற்றி சாலமரங்கள் நிறைந்து காணப்பட்டதால், இந்த ஆலயம் 'சாளக்கிராம ஷேத்திரம்' என்று அழைக்கப்படுகிறது.


    இமயமலைச் சாரலில் மிக அதிகமான உயரத்தில் இருக்கும் ஆலயம் இது. இங்கே அருளும் நாராயணர், சுயம்பு மூர்த்தியாக உருவானவர் ஆவார்.

    நேபாளத்தின் தலைநகரான காட்மாண்டில் இருந்து 250 கிலோமீட்டர் தூரத்தில் முக்திநாத் ஷேத்திரம் அமைந்துள்ளது.

    இந்த திவ்யதேசத்தை திருமங்கையாழ்வாரும், பெரியாழ்வாரும் 12 பாடல்களால், மங்களாசாசனம் செய்துள்ளனர். முக்திநாத் கிராமத்தில் உள்ளவர்கள் இந்த கோவிலை 'முக்தி நாராயண ஷேத்திரம்' என்று அழைக்கிறார்கள்.

    இதற்கு மேல் 105 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது, தாமோதர குண்ட் (நீர்த்தேக்கம்). இதைத்தான் உள்ளூர் மக்கள் 'முக்திநாதர் ஆலயம்' என்கிறார்கள்.

    முக்திநாத் கோவில் பல அற்புதங்கள் நிறைந்தது. இங்கே சிறிய சன்னிதி, நேபாள பாணியில் கட்டப்பட்டுள்ளது. கோவிலில் சிறிய யாகசாலையும் உண்டு. கோவிலின் உட்புறம் முக்தி நாராயணர், ஸ்ரீதேவி - பூதேவியுடன் அமர்ந்த திருக்கோலத்தில் மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார்.

    மிகப்பழமையான நூல்களில், இந்த ஆலய இறைவன் நின்ற கோலத்தில் வடக்கு நோக்கி சேவை சாதிப்பதாகவே சொல்லப்பட்டுள்ளது. திருமங்கை ஆழ்வார் தனது பாசுரத்தில் கூட இதை உறுதி செய்கிறார். கால மாற்றத்தில்தான், இறைவன் அமர்ந்த கோல தோற்றத்திற்கு மாறியிருக்க வேண்டும்.

    தவிர இந்த ஆலயத்தில் கருடன், சந்தோஷமாதா, லலிதா, விநாயகர், சாளக்கிராம ரூபங்கள், பார்வதி பரமேஸ்வரன் ஆகியோரும் சிறிய விக்கிரக வடிவில் காட்சி தருகிறார்கள்.


    இந்த கோவிலில் அர்ச்சனை, சிறப்பு வழிபாடுகள் என்று எதுவும் கிடையாது. சிறு மணியை பிரார்த்தனையாக கட்டும் வழக்கம் மட்டும் உள்ளது. லட்ச தீபம் ஏற்றும் வழிபாடு உண்டு. இங்குள்ள சிறிய யாகசாலையில் எப்பொழுதும் அக்னி எரிந்துகொண்டிருக்கும். அதில் நாமே ஹோமம் செய்துகொள்ளலாம்.

    கருவறையில் உள்ள இறைவனுக்கு நம் ஊரில் நடப்பது போல அபிஷேகம் செய்வது கிடையாது. செப்பு தட்டில் ஐந்து கிண்ணங்கள் இருக்கும். அதில் சந்தனம், குங்குமம், ஜவ்வாது போன்றவை இருக்கும். அவற்றை ஒரு துணியில் தொட்டு, முக்திநாதரை துடைப்பார்கள். அதுதான் அங்கே அபிஷேகம் ஆகும்.

    இந்த ஆலயத்தில் 108 தீர்த்தங்கள் செயற்கையாக அமைக்கப்பட்டுள்ளன. ஒரு தொட்டியில் தனித்தனி குழாய் வைத்து இந்த தீர்த்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது தவிர, பாவ புண்ணிய தீர்த்தங்கள் என்று இரண்டு தீர்த்தங்கள் உள்ளன.


    மேற்கண்ட அனைத்து தீர்த்தங்களிலும் நவம்பர் முதல் மார்ச் வரையான மாதங்களில் கடுமையான குளிர் காரணமாக நீராட சிரமமாக இருக்கும்.

    பனி சூழ்ந்த உயரமான மலையில் அமைந்துள்ள இந்த ஆலயம், அற்புதமான அனுபவங்களை கட்டாயம் கொடுக்கும். வாழ்க்கையில் ஒரு முறை நிச்சயம் தரிசிக்க வேண்டிய ஆலயம் இதுவாகும்.

    இந்த ஆலயத்திற்கு சென்று திரும்புபவர்கள், காட்மாண்டு சென்று அங்கும் பல ஆலயங்களை தரிசிக்கலாம். மேலும் இங்கு சாளக்கிராமம் வாங்கிக்கொண்டு வந்து நம் இல்லத்தில் வைத்து பூஜிப்பது மிகுந்த புண்ணியத்தைத் தரும்.

    சாளக்கிராம அபிஷேக தீர்த்தமானது, கங்கை நீருக்கு சமம் என்பார்கள். மேலும் சாளக்கிராமத்தை துளசி கொண்டு பூஜிப்பவர்களின் இல்லங்களில் நரக பயம் இருக்காது.

    செல்லும் வழி

    சென்னையில் இருந்து ரெயில் மூலம் அல்லது விமானத்தின் மூலம் கோரக்பூர் சென்று, கோரக்பூரில் இருந்து டாக்சி மூலம் சுனோலி எல்லையை அடைய வேண்டும். சுனோலி எல்லையை ஐந்து நிமிடம் நடந்து கடக்கலாம். அந்த இடத்திற்கு 'பைரவா' என்று பெயர்.

    அங்கிருந்து விமானத்தின் மூலம் அல்லது பஸ் அல்லது வேறு வாகனத்தின் மூலமும் போக்ரா என்ற இடத்தை அடையலாம். போக்ராவில் ஒரு நாள் தங்க வேண்டியதிருக்கும். போக்ராவில் இருந்து முக்திநாத் செல்ல அனுமதி வாங்க வேண்டும்.

    போக்ராவில் இருந்து ஜேம்சன் என்ற இடத்திற்குச் சென்று அங்கிருந்து முக்திநாத் செல்ல வேண்டும். முக்திநாத்தில் இருந்து கோவிலை அடைய நடந்து அல்லது குதிரையில் செல்ல வேண்டும்.

    108 திவ்ய தேசங்கள்

    வைணவ சமயத்தில் 108 திவ்ய தேசங்கள் உண்டு. அவற்றில் 106 திவ்ய தேசங்கள் பூமியில் உள்ளன. 'திருப்பாற்கடல்', 'வைகுண்டம்' ஆகிய இரண்டு திவ்ய தேசங்களை தரிசிக்கும் பாக்கியம் வானுலகில்தான் வாய்க்கும்.

    பூமியில் உள்ள 106 திவ்ய தேசங்களில் 105 இந்தியாவிலும், நேபாளத்தில் ஒன்றும் அமைந்துள்ளன. நேபாளத்தில் அமைந்த திவ்ய தேசம்தான் 'முக்திநாத்' ஆகும்.

    ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோவில்களின் தொகுப்பே '108 திவ்ய தேசங்கள்'. மங்களாசாசனம் என்பது, திருமாலையும் அவர் இருந்து ஆட்சி செய்யும் தலங்களையும் பாடிய பாடல்களை குறிக்கும்.

    108 திவ்ய தேசங்களையும் தொகுத்துக் காட்டியவர், அழகிய மணவாளதாசர் என்பவர் ஆவார். இவர் திருமலை நாயக்கர் ஆட்சியில், அலுவலராகப் பணியாற்றியவர். 108 ஆலயங்களையும், நாடு வாரியாகப் பிரித்து, ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வெண்பா பாடியுள்ளார். அவை 'நூற்றெட்டு திருப்பதி அந்தாதி' என்று அழைக்கப்படுகிறது.

    ×