என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உப்பு லிங்கம்"

    • சீதையால் மணலில் பிடிக்கப்பட்ட மணல் லிங்கம்தான், மூலவராக இருக்கிறது.
    • 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது.

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவில், ராமாயணத்துடன் தொடர்புடையது. பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தை தரிசிக்க இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வந்து செல்வதைக் காண முடியும்.

    இங்கே சீதையால் மணலில் பிடிக்கப்பட்ட மணல் லிங்கம்தான், மூலவராக இருக்கிறது. ராவணனை வதம் செய்த ராமபிரான், தன்னுடைய பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக இங்கே லிங்கம் அமைத்து வழிபட்டதாக ராமாயணம் சொல்கிறது.


    காசிக்கு நிகராக வைத்து போற்றப்படும் இந்த ஆலயம், சீதையின் சிறப்புக்கும் பெயர் பெற்றது. ராவணனிடம் இருந்து மீட்கப்பட்ட சீதை, தன்னுடைய கற்பை நிரூபிப்பதற்காக அக்னி பிரவேசம் நடத்தினார்.

    அந்த அக்னியின் சூட்டை, அக்னி பகவானாலேயே தாங்க முடியவில்லையாம். எனவே அவர் ராமேஸ்வரம் கடலில் மூழ்கி தன்னுடைய உடல் வெப்பத்தைத் தணித்துக் கொண்டதாக தல வரலாறு சொல்கிறது. இதன் காரணமாகவே, ராமேஸ்வரம் கடலை 'அக்னி தீர்த்தம்' என்று அழைக்கிறார்கள்.


    காசி லிங்கம்

    ராவணனை வதம் செய்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை போக்கும் வகையில், ராமேஸ்வரத்தில் வைத்து சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்ய நினைத்தார், ராமபிரான். அதற்காக காசியில் இருந்து ஒரு சிவலிங்கத்தை கொண்டு வரும்படி அனுமனை பணித்தார்.

    ஆனால் அவர் வருவதற்கு தாமதமானதால், மணலில் லிங்கம் செய்து தன் தவத்தை மேற்கொண்டார். பின்னர் அனுமன் கொண்டு வந்து சிவலிங்கமும் இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதுவே 'காசி லிங்கம்' என்று அழைக்கப்படுகிறது.

    மணல் லிங்கம்

    காசியில் உள்ள விஸ்வநாதருக்கு இணையாக வைத்து போற்றப்படுவது, ராமேஸ்வரத்தில் உள்ள மணல் லிங்கம். இந்த மணல் லிங்கத்தை, சீதாதேவி தன்னுடைய கையால் செய்திருக்கிறார். அனுமன் காசியில் இருந்து சிவலிங்கம் கொண்டு வர தாமதம் ஏற்பட்டதால், இந்த மணல் லிங்கத்தை சீதாதேவி செய்தார்.

    இந்த மணல் லிங்கம்தான், ராமேஸ்வரம் ஆலயத்தின் பிரதான லிங்கமாகவும், ராமநாதசுவாமி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இந்த மூலவர் லிங்கம், இந்தியா முழுவதும் உள்ள 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகவும் போற்றப்படுகிறது.


    உப்பு லிங்கம்

    இந்த ஆலயத்தில் அதிசயம் நிறைந்த உப்பு லிங்கம் ஒன்று உள்ளது. இந்த லிங்கத்திற்கு தனிக் கதையே உள்ளது. ஒரு முறை இவ்வாலயத்திற்கு வந்த சிலர், இங்கு மூலவராக உள்ள லிங்கம் மணலால் செய்யப்பட்டிருக்க வாய்ப்பில்லை. அப்படி மணலில் செய்யப்பட்டிருந்தால், அபிஷேகம் செய்கையில் கரைந்து போயிருக்கும் என்ற தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

    அந்த நேரத்தில் அங்கே அம்மனின் பக்தரான பாஸ்கரராய சுவாமிகள் இருந்தார். அவர், மூலவர் லிங்கமானது மணலால் செய்யப்பட்டதுதான் என்று உறுதிபடக் கூறினார். அது கரையாமல் இருப்பதற்கு, சீதாதேவியின் தெய்வீக சக்தியே காரணம் என்றும் கூறினார்.

    மேலும் அதை மெய்ப்பிக்க ஒரு வேலையும் செய்தார். அதாவது தர்க்கம் செய்த சிலரிடம் உப்பு வாங்கி வரச் சொல்லி, அந்த உப்பில் ஒரு சிவலிங்கத்தை செய்தார். அந்த சிவலிங்கத்தின் மீது எத்தனை குடம் தண்ணீர் வேண்டுமானாலும் ஊற்றும்படி, பாஸ்கரராய சுவாமிகள் கூறினார்.

    தர்க்கம் செய்தவர்கள் அவ்வாறே செய்தனர். ஆனால் உப்பு லிங்கம் கொஞ்சம் கூட கரையவில்லை. அப்போது பாஸ்கரராய சுவாமிகள், "அம்பாளின் பக்தனும், சாதாரண மனிதனுமான என்னால் செய்யப்பட்ட உப்பு லிங்கத்தையே, இவ்வளவு குடம் தண்ணீர் ஊற்றியும் கரைக்க முடியவில்லை.

    இந்த ஆலயத்தில் மூலவராக இருக்கும் மணல் லிங்கம், மகாவிஷ்ணுவின் அவதாரமான ராமரின் மனைவி சீதாதேவியால் செய்யப்பட்டது. அது கரையாமல் இருப்பதில் என்ன அதிசயம் உள்ளது" என்று கேட்டாராம். ராமேஸ்வரம் கோவிலில் உள்ள இந்த உப்பு லிங்கத்தை 'வஜ்ராயுத லிங்கம்' என்றும் அழைப்பர். இவரை வழிபட்டால் சகல நோய்களும் குணமாகும் என்பது நம்பிக்கை.


    ஸ்படிக லிங்கம்

    ராமேஸ்வரம் கோவில் கர்ப்பக்கிரகத்தில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்படிக லிங்கம் உள்ளது. இந்த லிங்கத்திற்கு தினமும் காலை 5 மணி முதல் 6 மணி வரை பாலாபிஷேகம் நடைபெறும்.

    ×