என் மலர்tooltip icon

    வழிபாடு

    • ஓம் சரவண பவ என்ற மந்திரத்தை கூறலாம்.
    • சஷ்டி திதியில், அதுவும் தேய்பிறை சஷ்டி அன்று ஏற்றுவது மிகவும் சிறப்பானதாகும்.

    தேய்பிறை சஷ்டியில் முருகனுக்கு விரதம் இருந்தால் மகத்தான பல நன்மைகள் பெற முடியும். தை மாத தேய்பிறை சஷ்டியான நாளை (ஞாயிற்றுக்கிழமை) முருகனை விரதமிருந்து வழிபட உகந்த நாளாகும்.

    சஷ்டி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாக கொண்ட காலக்கணிப்பு முறையாகும். 15 நாட்களுக்கு ஒருமுறை சஷ்டி தினம் வருகிறது. இந்த நாட்கள் பொதுவாக திதி என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றது.

    அமாவாசை நாளுக்கும், பவுர்ணமி நாளுக்கும் அடுத்து வரும் ஆறாவது நாள் சஷ்டி ஆகும். அமாவாசையை அடுத்து வரும் சஷ்டியை வளர்பிறை சஷ்டி என்பார்கள். பவுர்ணமியை அடுத்து வரும் சஷ்டி தேய்பிறை சஷ்டி என்று சொல்வார்கள்.

    திருமணம் இல்லாமல் ஒருவருக்கு வாழ்க்கை முழுமையடையாது என்பது போல, குழந்தை இல்லாமல் திருமண வாழ்க்கை நிறைவு பெறாது. தேய்பிறை சஷ்டி விரதம் இருந்தால் குழந்தைப்பேறு கிடைக்கும். தேய்பிறை சஷ்டியில் முருகன் கோவிலுக்கு சென்று அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களில் உங்களால் முடிந்த பொருட்களை வாங்கி கொடுக்கலாம். குறிப்பாக இளநீர் மற்றும் தேன் போன்றவற்றை வாங்கி கொடுப்பதன் மூலம் சுபிட்சம் பெருகும்.

    முருகப்பெருமானை நினைத்து சஷ்டியில் விரதம் இருப்பதால் வருவாய் அதிகரிக்கும், குடும்ப அமைதி, மன நிம்மதி அனைத்தும் தேடி வரும் என்பது நம்பிக்கை. தேய்பிறை சஷ்டி அன்று காலையில் குளித்து விட்டு சுவாமி படத்திற்கு மாலை அல்லது பூக்கள் அணிவித்து, நெய் அல்லது நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி, பால், பழம் நைவேத்தியம் செய்து கந்தசஷ்டி கவசம் அல்லது கந்தகுரு கவசம் பாராயணம் செய்ய வேண்டும். அப்படி இல்லையென்றால் ஓம் சரவண பவ என்ற மந்திரத்தை கூறலாம்.

    அவல் நைவேத்தியம் படைப்பது மிகவும் நல்லது. இது எதுவும் செய்ய முடியாவிட்டால் நாவல் பழத்தை வைத்து வழிபடலாம். முருகனுக்கு நாவல் பழமானது மிகவும் விருப்பமான பழம் ஆகும். நாளை நாள் முழுவதும் மாமிசம் உண்ணக்கூடாது.

    எந்தவொரு விவாதமும் செய்யக்கூடாது. நாளைய தினம் முழுவதும் மவுனவிரதம் இருந்தால் மகத்தான பலன்கள் கிடைக்கும். சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது சஷ்டியில் விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதே முருகப் பெருமானுக்குரிய சஷ்டி விரதத்தின் பெருமையை போற்றுவதற்காக சொல்லப்படும் பழமொழியாகும். திதிகளில் ஆறாவது திதியாக வரும் சஷ்டி, ஆறுமுகனுக்கு உரியதாகும்.

    இந்த நாளில் என்ன குறை இருந்தாலும் அது நீங்க வேண்டும் என முருகனிடம் மனதார வேண்டிக் கொண்டால் அது நிச்சயம் நிறைவேறும்.

    தீராத பிரச்சனையில் தவிப்பவர்கள், திருமணம் ஆகாமல் தள்ளி போய் கொண்டே இருப்பவர்கள், குழந்தை இல்லாதவர்கள், வாழ்க்கையில் தோல்விகளை மட்டுமே சந்தித்து வருபவர் ஆகியோர் சஷ்டி திதியில் விரதம் இருந்து முருகனை வழிபடலாம். சஷ்டியில் விரதம் இருப்பவர்கள் முருகனுக்குரிய மந்திரம், சுலோகம் போன்றவற்றை சொல்லி தான் வழிபட வேண்டும் என்பது கிடையாது.

    உண்மையான பக்தியுடன், மனமுருகி முருகா என்று அழைத்து, தங்களின் கோரிக்கையை சொன்னாலே முருகப் பெருமான் அந்த வேண்டுதலை நிச்சயம் நிறைவேற்றி வைப்பார்.

    அதுவும் தேய்பிறை சஷ்டி அன்று வீட்டில் குறிப்பிட்ட முறையில் விளக்கேற்றி வழிபட்டால் வாழ்க்கையில் தோல்வி என்பதே ஏற்படாது. தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அதோடு நீங்கள் என்ன வேண்டுதலை முன்வைத்து இந்த விளக்கை ஏற்றுகிறீர்களோ அந்த வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்.

    இதற்காக தேய்பிறை சஷ்டி நாளில் அதாவது நாளை அதிகாலையில் எழுந்து நீராடி, வீட்டின் பூஜை அறையில் முருகன் படம் அல்லது சிறிய சிலையை எடுத்து, சுத்தம் செய்து, அலங்கரித்து வைத்துக் கொள்ளுங்கள். முருகன் படம் அல்லது சிலைக்கு முன்பு இரண்டு வாழைப்பழங்களை ஒரு சிறிய தட்டில் எடுத்து வையுங்கள்.

    அந்த வாழைப்பழத்தின் மத்தியில் சிறிதாக குழி போன்று ஏற்படுத்தி, அதில் சிறிதளவு நெய் விட்டு, திரிப் போட்டு தீபம் ஏற்றுங்கள். பஞ்சாமிர்தம் எப்படி முருகனுக்கு மிகவும் பிரியமான அபிஷேகப் பொருளோ அதே போல் வாழைப்பழ தீபமும் முருகப் பெருமானுக்கு மிகவும் பிரியமானதாகும். இந்த வாழைப்பழ தீபத்தை செவ்வாய்கிழமையிலும் கூட ஏற்றலாம்.

    இருந்தாலும் சஷ்டி திதியில், அதுவும் தேய்பிறை சஷ்டி அன்று ஏற்றுவது மிகவும் சிறப்பானதாகும். இந்த விளக்கை ஏற்றி வைத்து, ஏதாவது ஒரு கோரிக்கையை முருகனிடம் முன் வைத்து மனதார வேண்டிக் கொள்ளுங்கள். இந்த விளக்கை நம்பிக்கையுடன் ஏற்றி வந்தால் வாழ்வில் பல மாற்றங்களையும், அதிசயங்களையும் முருகப் பெருமான் நடத்துவதை காணலாம்.

    இந்த திருநாளில் குழந்தை செல்வத்திற்காக ஏங்கி காத்திருக்கும் பெண்கள் விரதமிருந்து முருகப் பெருமானை மனமுருகி பிரார்த்தனை செய்திட மனம் மற்றும் உடல் குறைபாடுகள் நீங்கி குழந்தை வரம் கிடைக்கும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை. நீண்ட நாள் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் சஷ்டி விரதத்தை தொடர்ந்து மேற்கொள்ள அந்நோய்கள் படிப்படியாக நீங்கி விடும். இத்துடன் நீடித்த செல்வமும், வெற்றியடையும் யோகமும் கிட்டும். சஷ்டி நாளில் வீடுகளில் அதிகாலையில் நீராடி பூஜையறையில் முருகன் படத்திற்கு முன்பு தீப, தூபங்கள் காட்டி, பால்,பழம் நிவேதனம் வைக்கலாம். உணவை தவிர்த்து பூஜையறையில் கந்த சஷ்டி கவசம், முருகன் துதிப்பாடல்கள், சுகந்த குரு கவசம் படிக்கலாம். வேலை காரணமாக வெளியில் செல்பவர்கள், உடல் வேலையில் ஈடுபட்டிருந்தாலும் மனதில் ஓம் முருகா என்ற மந்திரத்தை ஜெபித்தபடி பணியை தொடரலாம். புலால் உணவுகள் மற்றும் போதை வஸ்துக்களை தவிர்க்க வேண்டும். மனதில் தீய எண்ணங்களோ, கடுமையான உணர்ச்சிகளோ இல்லாதவாறு இவ்விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

    உடல்நிலை சரியில்லாதவர்கள் ஒரு வேளை உணவு மட்டும் உண்டு இந்த சஷ்டி விரதத்தை அனுஷ்டிக்கலாம். குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லைகள் முழுவதுமாக நீங்கவும் சஷ்டி விரதத்தை கடைப்பிடிக்கலாம்.

    முழு நாளும் உபவாசம் இருக்க இயலாதவர்கள் அன்றைய தினம் காலையில் ஆறு மிளகையும் ஆறு கை நீரையும் முதல் உணவாக எடுத்துக் கொள்ளலாம். இந்த முறையில் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சஷ்டி விரதம் இருந்தால் முருகப்பெருமானின் அருளால் மேலான செல்வமும், வெற்றியடையும் யோகமும் கிட்டும் என்பது ஐதிகம்.

    • திங்கட்கிழமை இரவில் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.
    • இத்தல இறைவன் பொது ஆவுடையார் என அழைக்கப்படுகிறார்.

    தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு சிவன் கோவிலும் அதிகாலை நடை திறக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டு, உச்சிகால பூஜைகள் நிறைவடைந்ததும் நடை சாற்றப்படும். பின்னர், மாலை நடை திறக்கப்பட்டு சாயரட்சை, அர்த்தஜாம பூஜைகள் முடிவடைந்ததும் நடை அடைக்கப்படும். இது தான் ஒவ்வொரு சிவாலயங்களுக்கும் ஆன நடைமுறை.

    ஒவ்வொரு கோவில்களிலும் கால பூஜைகள் மாறுபடலாம், ஆனால், இந்த நடைமுறையை பின்பற்றி தான் அனைத்து கோவில்களிலும் பக்தர்களை வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், தமிழகத்தில் ஒரு கோவில் மட்டும் திங்கட்கிழமை இரவில் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

    இதன் மற்றொரு விஷேசம், வருடத்தில் ஒரு நாள் மட்டும் பகலில் கோவில் திறந்திருப்பது. அந்த கோவிலின் வரலாறு, சிறப்புகள், விஷேச பூஜைகள் குறித்து இங்கு காண்போம்.


    இத்தகைய சிறப்புமிக்க கோவில் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ள பரக்கலக்கோட்டை எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இத்தல இறைவன் பொது ஆவுடையார் என அழைக்கப்படுகிறார்.

    எல்லா சிவன் கோவில்களிலும் கருவறையில் சிவலிங்க திருமேனி தான் மூலவராக இருப்பதை நாம் தரிசிப்போம். ஆனால், இங்கு கருவறை உண்டு, ஆனால் சிவலிங்க திருமேனி இல்லை. வெள்ளால மரமாகவே சிவபெருமான் காட்சி தருகிறார்.

    கோவில் கருவறை கதவு பித்தளை தகடால் வேயப்பட்டது. கதவு திறக்கப்பட்டதும் கருவறையில் உள்ள வெள்ளால மரத்தை தரிசிக்கலாம். மேலும், மரத்தில் சிவலிங்க வடிவம் போலவே அலங்கரித்து பூஜைகள் செய்கிறார்கள். இங்கு அம்பாளுக்கு சன்னதி கிடையாது.

    கார்த்திகை மாத சோம வாரத்தில் (திங்கட்கிழமை) முனிவர்களுக்கு சிவபெருமான் காட்சி அளித்தார். இதனால் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இரவு 10.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நள்ளிரவு 12 மணிக்கு பூஜைகள் நடத்தப்படும், அதுவும் கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் பூஜைகள் வெகு விமரிசையாக நடப்பதுண்டு.

    தமிழர் திருநாளான தைத் திருநாளன்று மட்டும் பகலில் கோவில் நடை திறக்கப்படுவதால் அன்றைய தினம் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறுவது வழக்கம். பின்னர், சிறப்பு அலங்காரம் நடைபெற்று, தீபாராதை காண்பிக்கப்படும்.

    ஆண்டுக்கு ஒரு நாள் பகலில் நடை திறக்கப்படுவதால் சுவாமியை தரிசிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பெருமளவில் திரள்வர். இவரை மனதார வேண்டிக்கொண்டு எந்த வியாபாரம் தொடங்கினாலும் லாபகரமாக இருக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

    அவ்வாறு மூலவரை வேண்டிக்கொண்டு வியாபாரத்தை தொடங்கியவர்கள் நெல், கம்பு, தேங்காய், மாங்காய், ஆடு, கோழி, மாடு ஆகியவை வழங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். பக்தர்கள் வழங்கிய பொருட்களை எல்லாம் பொங்கல் அன்று ஏலத்துக்கு விடுவார்கள்.


    இதனை ஏலம் எடுத்து சென்றால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம், செல்வ செழிப்புடன் வாழலாம், சகல ஐஸ்வரியங்களும் கிட்டும் என்பது பக்தர்களின் ஐதீகம். திங்கட்கிழமை இரவு மட்டுமே நடை திறக்கப்படுவதால், பிற நாட்களில் கருவறை கதவையே கடவுளாக எண்ணி பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர்.

    பொங்கல் திருநாளன்று பகலிலும், ஒவ்வொரு திங்கட்கிழமைகளில் இரவிலும் திறக்கப்படும் பரக்கலக்கோட்டை பொது ஆவுடையாரை நாம் அனைவரும் தரிசித்து, சகல ஐஸ்வரியங்களும் பெறுவோமாக.

    • தை முதல் ஆனி வரை உத்தராயணம் நீடிக்கும்.
    • தை மாத தேய்பிறையில் வரும் ஏகாதசி சபலா ஏகாதசி என அழைக்கப்படுகிறது.

    'தை' மாதத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகள் நம்பிக்கை மற்றும் நேர்மறையான அணுகுமுறையை ஊக்குவிக்கின்றன. தை பொங்கல் என்பது சூரியனுக்கு நன்றி செலுத்தும் ஒரு பண்டிகை, மேலும் காணும் பொங்கல் என்பது உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் ஒரு நாள்.


    பஞ்சம் தீர்க்கும் தை மாதம்

    விளைச்சல் முடிந்து அறுவடை நடந்து பயிர்கள் அனைத்தும் வீடு சேரும் மாதமே தை ஆகும். தை முதல் நாள் சூரியனுக்கு படைப்பார்கள். இக்காலகட்டத்தில் தான் தானியப் பயிர்களில் முக்கியமாக நம் தமிழர்களின் அன்றாட உணவான நெல்லானது அதிக அளவிலும், சற்று விலை குறைவாகவும் கிடைக்கிறது. பெரும்பாலும் ஒரு வருடத்திற்கு தேவையான நெல்லை மக்கள் வாங்கி பத்திரப்படுத்தி கொள்வர். வீட்டில் உணவிற்குப் பஞ்சமின்றி மகிழ்வுடன் இருக்க வழி பிறக்கும் காலம்.

    உத்தராயண புண்ணிய காலம்

    உத்தராயணம் என்பது வடமொழிச் சொல்லாகும். வடமொழியில் உத்தர் என்றால் வடக்கு என்றும், அயனம் என்றால் வழி என்றும் பொருள். நம் கண்களுக்கு புலப்படும் ஒரே இறை சக்தியாக விளங்குபவர் சூரியன் பகவான் மட்டுமே.

    சூரிய பகவான் தனது பயணத்தை தெற்கில் இருந்து வடக்கு நோக்கி பயணிக்கும் காலமே உத்தராயணம் ஆகும். தை மாதத்தில் சூரியன் ராசி மண்டலத்தில் மகர ராசியில் நுழைந்து 29 நாட்கள், 27 நிமிடங்கள், 16 வினாடிகள் வரை பயணிப்பார்.

    தை மாதம் முதல் ஆனி மாதம் வரையில் ஆறு மாதத்திற்கு உத்தராயணம் நீடிக்கும். இக்காலமானது ஞானத்தை வழங்கும் காலமாக கருதப்படுகிறது. இதுவே தேவர்களின் காலைப் பொழுது என்று வேதங்களில் கூறப்பட்டுள்ளது.


    சக்தி வேல் பெற்ற நாள்

    தை பூச நாளில் தான் அன்னை பார்வதி தேவி, அசுரர்களை அழிப்பதற்காக ஆறுமுகக் கடவுளுக்கு சக்தி வேலை வழங்கிய நாள். அதனால் தான், தைபூச திருநாள் உலகம் முழுக்க இருக்கும் தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.


    நீத்தார் கடன் நீக்கும் நாள்

    தை மாதத்தில் வரும் தை அமாவாசை மற்றொரு முக்கிய நாளாக கருதப்படுகிறது. அன்று தான் முன்னோர்களுக்கு தர்ப்பணம் எனப்படும் நீத்தார் கடன் வழிபாட்டை மோற்கொள்ளும் நாள். ஆறு, குளம், கடல் என அனைத்து நீர்நிலைகளிலும் பித்ரு கடன் வழிபாடு மேற்கொள்ளப்படும்.


    ரத சப்தமி விரதம்

    தை மாத வளர்பிறையில் வரும் சப்தமி திதியானது ரதசப்தமியாக இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. அன்றைக்கு தான் சூரியன் தன்னுடைய வடதிசை பயணத்தை தொடங்குகிறார். ரத சப்தமி நாளில் விரதம் மேற்கொள்வோருக்கு தேக ஆரோக்கியம், நோய் இல்லாமை, நோய் இல்லாமை, புத்திரப்பேறு, நிலையான செல்வம், பகைவர்களையும் வெல்லும் சக்தி, வெற்றி, நிலம், தானியம் மற்றும் புண்ணியம் ஆகியவை கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை

    பாவங்கள் போக்கும் சபலா ஏகாதசி

    தை மாத தேய்பிறையில் வரும் ஏகாதசி சபலா ஏகாதசி என அழைக்கப்படுகிறது. இந்நாளில் உண்ணாமல் உறங்காமல் விரதமிருந்து மஹாவிஷ்ணுவை வழிபட்டால் நாம் முன்பு செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும். அன்றைய நாளில், ஏழைகளுக்கு பழங்களை தானம் செய்வதால், ஒளிமயமான வாழ்க்கை அமையும். லும்பகன் என்னும் இளவரசன் இவ்விரதத்தை கடைபிடித்து பாவங்கள் அனைத்தும் நீங்கி அரச பதவியையும், பின்னர் வைகுண்ட பதவியையும் பெற்றான் என்பது ஐதீகம்.

    வளர்பிறை புத்ரதா ஏகாதசி

    தை மாத வளர்பிறையில் வரும் ஏகாதசியானது, புத்ரதா ஏகாதசி என்றும் சந்தான ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. இந்நாளில் ஏகாதசி விரதம் இருந்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும். சுகேது மான் என்ற மன்னன் புத்திர பாக்கியம் இல்லாத குறையை, புத்ரதா ஏகாதசி விரதமிருந்து நல்ல மகனை பெற்றான். அதோடு தன் நாட்டு மக்களையும் இந்த புத்ரதா ஏகாதசி விரதத்தை பின்பற்றச் செய்தான்.


    சாவித்ரி கவுரி விரதம்

    தை மாத இரண்டாம் நாளில் பின்பற்றப்படும் விரம் சாவித்ரி கௌரி விரதமாகும். சிரஞ்சீவியான மார்க்கண்டேயர் இந்த விரதத்தை தருமனுக்கு எடுத்துக் கூறியதை அடுத்து தருமரும் இந்த விரதத்தை மேற்கொண்டார். இவ்விரதத்தை மேற்கொள்வோர், அதிகாலையில் குளிர்ந்த நீரில் நீராடி, களிமண்ணால் செய்த சாவித்ரி அம்மனை பூஜை செய்ய வேண்டும்.


    பைரவர் வழிபாடு

    தை மாதத்தில் வரும் முதல் செவ்வாய் கிழமையில் இவ்விரதம் கடைபிடிக்கப்படுகிறது. தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை ஆகியவை பைரவருக்கு உகந்ததாக கூறப்படுகிறது. வாசனைப் பூக்களில் மல்லிகைப்பூவை தவிர்த்து மற்ற அனைத்து பூக்களும் பைரவருக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன. சனி தோஷம் முழுமையாக அகல கால பைரவருக்கு விரதம் இருப்பது விசேஷம்.

    • குச்சனூர் ஸ்ரீசனிபகவான் சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு தை-5 (சனிக்கிழமை)

    பிறை: தேய்பிறை.

    திதி: சதுர்த்தி காலை 6.58 மணி வரை. பிறகு பஞ்சமி.

    நட்சத்திரம்: பூரம் மாலை 4.19 மணி வரை. பிறகு உத்திரம்.

    யோகம்: சித்த, மரணயோகம்.

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    தியாகபிரம்மா ஆராதனை, குச்சனூர் ஸ்ரீசனிபகவான் சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு. திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள், மதுரை ஸ்ரீகூடலழகர், ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சன சேவை. மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜ மூலவர் தலங்களில் திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திரவார திருமஞ்சன சேவை. திருமொகூர் ஸ்ரீகாளமேகப் பெருமாள் ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி திருவட்டாறு ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் தலங்களில் திருமஞ்சன அலங்கார சேவை. திருஇந்தளூர் ஸ்ரீபரிமளரெங்கராஜ பெருமாள் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உயர்வு

    ரிஷபம்-வரவு

    மிதுனம்-அன்பு

    கடகம்-பாசம்

    சிம்மம்-வெற்றி

    கன்னி-இன்பம்

    துலாம்- தீரம்

    விருச்சிகம்-பொறுப்பு

    தனுசு- பெருமை

    மகரம்-மகிழ்ச்சி

    கும்பம்-மாற்றம்

    மீனம்- உவகை

    • தமிழர் திருநாள் திருவிழாவை முன்னிட்டு இக்கோவிலில் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது.
    • களிமண்ணால் செய்யப்பட்ட உருவார பொம்மைகளை வைத்து வழிபாடு செய்தனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குடிமங்கலம் சோமவாரப்பட்டியில் ஆதி காலத்தில் அடர்ந்த காடுகளில் விஷப் பாம்புகள் வாழும் ஆலமரத்தின் கீழ் சிவலிங்க வடிவில் ஒரு புற்று இருந்தது. இந்தப் பகுதியில் மேய்ந்த பசுக்கள் புற்றில் நிலையாக பாலை சுரந்து வந்தன.

    சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ள எம்பெருமானுக்கு அபிஷேகம் செய்த பசுவானது பாம்பினால் தீண்டப்பட்டு பாதிக்கப்பட்டபோது அந்தப் பசுவின் உடம்பின் மீது ஏறிய ஆலகால விஷத்தினை மாயவன் உண்டு பசுவினை காப்பாற்றியதால் ஆல்கொண்டமால் எனவும் ஆலம் உண்ட சிவனை குறிக்கும் வகையில் சிவலிங்க வடிவ புற்றில் கண்ணன் குடி கொண்டதால் ஆல்கொண்டமால் எனவும் இக்கோவில் விளங்கி வருகிறது.

    தமிழர் திருநாள் திருவிழாவை முன்னிட்டு இக்கோவிலில் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. கிராமப்புறங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தங்களது கால்நடைகளின் கறவை பாலைகொண்டு வந்து ஆல்கொண்டமாலுக்கு அபிஷேகம் செய்து திருநீறும் தீர்த்தமும் பெற்று சென்றனர். மேலும் களிமண்ணால் செய்யப்பட்ட உருவார பொம்மைகளை வைத்து வழிபாடு செய்தனர்.

    • கோவில் நடை திறக்கப்பட்டதும், சாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
    • ஆண்டுக்கு 2 முறை அண்ணாமலையார் கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்கும் விழாக்களில் திருவூடல் விழா முக்கியமானது.

    ஆண்டுதோறும் தை மாதம் 2-ம் நாள் இந்த விழா நடக்கும். அதன்படி, நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டதும், சாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து, அதிகாலை 6 மணிக்கு அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையார் தனி வாகனத்தில் எழுந்தருளி, நந்தியம் பெருமானுக்கு அருளாசி வழங்கினார். பின்னர், திட்டிவாசலில் சூரியனுக்கு காட்சியளித்தார்.

    இதையடுத்து, அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சுந்தரமூர்த்தி நாயனார் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி, மாடவீதியில் 3 முறை வலம் வரும் வைபவம் நடந்தது.

    பின்னர், இரவு 7.30 மணிக்கு மேல் சாமி அம்பாள் இடையே திருவூடல் உற்சவம் நடந்தது. அப்போது சுந்தரர் தூது சென்றார்.

    இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர். பின்னர், பராசக்தி அம்மன் கோவிலுக்கு திரும்பினார்.

    அண்ணாமலையார் திருமஞ்சன கோபுரத்தெருவில் உள்ள குமரக்கோவில் சென்றார்.

    ஆண்டுக்கு 2 முறை அண்ணாமலையார் கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதேபோன்று வருடம் தொடக்கத்தில் இன்று அதிகாலை கோவிலில் இருந்து புறப்பட்டு அண்ணாமலையார் 14 கிலோமீட்டர் தூரம் உள்ள அண்ணாமலையை வலம் வந்தார். கிரிவலம் வந்த அண்ணாமலையாரை வழிநெடுகிலும் பக்தர்கள் வழிபட்டனர். பகல் 11 மணி அளவில் கோவிலுக்கு திரும்பினார்.

    தொடர்ந்து, சாமியுடன் அம்பாள் சமாதானம் அடையும் மறுவூடல் உற்சவம் கோவில் 2-ம் பிரகாரத்தில் நடக்கிறது.

    • படிக்கட்டில் நின்றபடியோ, அமர்ந்தபடியோ பணப்பரிவர்த்தனை செய்யக்கூடாது.
    • சாப்பிடும் முன்னதாக காகத்திற்கும், சாப்பிட்ட பிறகு பைரவருக்கும் உணவளிப்பது நல்லது.

    * அதிகாலையில் கண் விழிக்க வேண்டும்.

    * எழுந்ததும் இறை நாமத்தை உச்சரிக்க வேண்டும்.

    * வாசலில் சாணம் தெளித்துக் கோலம் போட வேண்டும்.

    * வீட்டின் பின்கதவை மூடிவிட்டு முன்கதவைத் திறந்து வைத்து பூஜையறையில் விளக்கேற்ற வேண்டும்.

    * ஆனைமுகப்பெருமான் பெயரையும், அழகன் முருகன் பெயரையும், பஞ்சாச்சர மந்திரத்தையும், அஷ்டலட்சுமி பெயரையும் உச்சரித்து அன்றாடக் கடமையைத் தொடங்க வேண்டும்.

    * முக்கிய வேலை பார்க்கும் பொழுதும், பணம் எண்ணும் பொழுதும் நகத்தைக் கடிக்கக்கூடாது. கத்திரிக்கோல், விளக்கமாறு போன்றவற்றை அருகில் வைத்துக் கொள்ளக்கூடாது.

    * படிக்கட்டில் நின்றபடியோ, அமர்ந்தபடியோ பணப்பரிவர்த்தனை செய்யக்கூடாது.

    * சாப்பிடும் முன்னதாக காகத்திற்கும், சாப்பிட்ட பிறகு பைரவருக்கும் உணவளிப்பது நல்லது.

    * சமைத்த உணவுகளைப் பரிமாறும் பொழுது 'கிருஷ்ணார்ப்பணம்' என்று சொல்லிப் பரிமாற வேண்டும்.

    • மூன்று கண்கள் கொண்டதாக இருப்பதால் தான், இதனை முக்கண்ணனின் அம்சம் என்கிறார்கள்.
    • சிதறுகாய் உடைத்தால் துன்பங்கள் சிதறி ஓடும் என்பது நம்பிக்கை.

    எத்தனையோ காய்கள் இருந்தாலும், நாம் இறைவனின் அர்ச்சனைக்கு எடுத்துச் செல்வது தேங்காய்தான். நாம் செய்யக்கூடிய காரியங்கள் தேங்காமல் நடைபெற வழிவகுக்கக்கூடியது தேங்காய் என்று சொல்வார்கள்.

    கண்ணேறு படாமல் இருக்க முக்கண்களை உடைய தேங்காயின் மீது கற்பூரம் ஏற்றி, சம்பந்தப்பட்டவர்களின் தலையைச் சுற்றி அந்தத் தேங்காயைச் சிதறு காயைப் போல உடைப்பதைப் பார்த்திருப்பீர்கள்.

    தெய்வங்கள் திருவீதி உலா வந்து, மீண்டும் கோவிலுக்குள் செல்லும் பொழுது, தேங்காயை எடுத்து சிலைகளைச் சுற்றி, அந்தத் தேங்காயை வீதியில் உடைப்பார்கள்.

    மூன்று கண்கள் கொண்டதாக இருப்பதால் தான், இதனை முக்கண்ணனின் அம்சம் என்கிறார்கள். சிதறுகாய் உடைத்தால் துன்பங்கள் சிதறி ஓடும் என்பது நம்பிக்கை.

    • திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்ட சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
    • அமைச்சர் சேகர்பாபு சபரிமலையில் நேரடியாக சென்று மகரஜோதி தரிசனத்தை ரசித்தார்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் மாலையணிந்து விரதமிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த ஆண்டு நவம்பர் 16-ந்தேதி தொடங்கி டிசம்பர் 26-ந்தேதி வரை நடைபெற்றது.

    மகர விளக்கு பூஜை கடந்த மாதம் (டிசம்பர்) 31-ந்தேதி தொடங்கியது. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாவதை தடுக்கும் விதமாக இந்த ஆண்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்படி ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு அடிப்படையில் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.

    இந்நிலையில், பந்தளம் அரண்மனையில் இருந்து இன்று மாலை சபரிமலையை வந்தடைந்த திருவாபரணபெட்டியில் இருந்த திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்ட சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

    இதனை தொடர்ந்து பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தரிசனத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் சரணகோஷம் முழங்க கண்டுகளித்தனர்.

    மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை, பம்பை, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மகரவிளக்கு பூஜை முடிந்து வருகிற 20-ந்தேதி காலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்படும்.

    தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சபரிமலையில் நேரடியாக சென்று மகரஜோதி தரிசனத்தை ரசித்தார்.

    • பாத தரிசனத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான போலீசார் கோவில் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடிநீர் சுகாதார வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திருவாரூர்:

    வரலாற்று சிறப்புமிக்க திருவாரூர் தியாகராஜ சாமி கோவிலில் திருவாதிரை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவையொட்டி இன்று தியாகராஜ சாமி பாத தரிசனம் நடைபெற்று வருகிறது. முன்னதாக நேற்று இரவு தியாகராஜ சுவாமிக்கு திருவாதிரை மகா அபிஷேகம் நடைப்பெற்றது. தொடர்ந்து இன்று அதிகாலை நடராஜருக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் தியாகராஜ சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பதஞ்சலி, வியக்ரபாத முனிவர்களுக்கும், பக்தர்களுக்கும் வலது பாதம் காட்டும் பாத தரிசனமும், தீபாரதனையும் நடைபெற்றது. பின்னர் நடராஜ பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்ட்டு தீபாராதனை நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து நடராஜர், சிவகாமி அம்மனுடன் வீதியுலா வந்து சபாபதி மண்டபத்திற்கு எழுந்தருள செய்யப்பட்டது. இவ்விழாவில் கோவிலின் வெளிப்புறத்தில் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வரிசையில் நின்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாத தரிசனம் செய்து வருகின்றனர்.

    பாத தரிசனத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான போலீசார் கோவில் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடிநீர் சுகாதார வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பந்தளம் அரண்மனையில் இருந்து நேற்று புறப்பட்டது.
    • இன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் மாலையணிந்து விரதமிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த ஆண்டு நவம்பர் 16-ந்தேதி தொடங்கி டிசம்பர் 26-ந்தேதி வரை நடைபெற்றது.

    மகர விளக்கு பூஜை கடந்தமாதம் (டிசம்பர்) 31-ந்தேதி தொடங்கியது. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாவதை தடுக்கும் விதமாக இந்த ஆண்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்படி ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு அடிப்படையில் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.

    இந்தநிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரஜோதி நாளை(14-ந்தேதி) நடைபெறுகிறது. இதையொட்டி ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்படும். ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பந்தளம் அரண்மனையில் இருந்து நேற்று புறப்பட்டது.

    அது பல இடங்களை கடந்து பெருவழிப்பாதை வழியாக வந்து பம்பை கணபதி கோவிலுக்கு நாளை பிற்பகல் வந்து சேரும். மாலையில் அங்கிருந்து புறப்படும் திருவாபரண ஊர்வலம், 6 மணிக்கு மேல் சன்னிதானத்தை வந்தடைகிறது. பின்பு ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடத்தப்படும்.



    ஐயப்ப சுவாமிக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட காட்சி.

    அதன் தொடர்ச்சியாக மாலை 6.30 மணிக்கு மேல் மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது. மகரஜோதியை காண கடந்த சில நாட்களாகவே பக்தர்கள் சபரிமலைக்கு வரத் தொடங்கினர். அவர்கள் மகரஜோதி தெரியக்கூடிய பெரியானை வட்டம், சன்னிதானம் உள்ளிட்ட இடங்களில் தங்கியுள்ளனர்.

    அது மட்டுமின்றி இன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். இதனால் பம்பை, சன்னிதானம் மட்டுமின்றி, மரக்கூட்டம், சரங்குத்தி, சன்னிதான வலிய நடைப்பந்தல் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திருவாபரணங்கள் ஊர்வலம் பம்பையில் இருந்து பிற்பகல் செல்லும் என்பதால் நாளை காலை 10 மணிக்கு மேல் பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.

    திருவாபரண ஊர்வலம் சரங்குத்தியை அடைந்த பிறகே பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்றும், நாளையும் மெய்நிகர் வரிசை மற்றும் நிலக்கல்லில் ஸ்பாட் புக்கிங் செய்த பக்தர்கள் மட்டுமே பம்பைக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    அது மட்டுமின்றி நாளை மாலை பக்தர்கள் மகரஜோதியை தரிசனம் செய்ய வேண்டிய இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நிலக்கல்லில் அட்டத்தோடு, அட்டத்தோடு மேற்கு காலனி, இலவுங்கல், நெல்லிமலை, அய்யன்மலை, பம்பையில் மலை உச்சி, மலைஉச்சியின் நடுப்பகுதி, பெரியானை வட்டம், சன்னிதானம் பாண்டிதாவளம், தரிசன காம்ப்ளக்ஸ், அன்னதான மண்டப முன்பகுதி, திருமுற்றத்தின் தெற்கு பகுதி, ஆழி பகுதி, கொப்பரைகலம், ஜோதி நகர், வனத்துறை அலவலகம் முன்பு, குடிநீர் அலுவலகம் ஆகிய இடங்களில் இருந்து மகரஜோதியை தரிசிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை, பம்பை, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மகரவிளக்கு பூஜை முடிந்து வருகிற 20-ந்தேதி காலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்படுகிறது.

    • விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
    • தேர் மீண்டும் வடக்கு வீதி, கீழ வீதி வழியாக நிலையை வந்தடைந்தது.

    உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம்.

    இதில் ஆனி மாதம் நடக்கும் ஆனி திருமஞ்சன விழாவும், மார்கழி மாதம் நடக்கும் ஆருத்ரா தரிசன விழாவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    ஏனெனில், இந்த 2 உற்சவத்தின் போதும் மூலவராகிய ஆனந்த நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாளுடன் உற்சவராக தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவரும் நிகழ்ச்சி நடைபெற்று, 8-ந்தேதி தெருவடைச்சான் உற்சவம் நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. தேர் மீண்டும் வடக்கு வீதி, கீழ வீதி வழியாக நிலையை வந்தடைந்தது.

    பின்னர் தேரில் இருந்து சுவாமிகள் இறக்கப்பட்டு, கோவிலில் உள்ள ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் வைக்கப்பட்டது. அங்கு நடராஜருக்கு ஏக கால லட்சார்ச்சனை நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவையொட்டி இன்று (திங்கட்கிழமை) ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்திகள் வீதிஉலா வந்ததும் பிற்பகல் 3 மணிக்கு மேல் 3.30 மணிக்குள் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள நடராஜர்-சிவகாம சுந்தரி அம்மன் புறப்பட்டு நடன பந்தலில் நடனமாடி ஆருத்ரா தரிசன காட்சி அளித்து சித்சபை பிரவசேம் செய்கின்றனர். இந்த தரிசனத்தை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிவபக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர். இதனால் சிதம்பரம் நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டு இருந்தது.

    நாளை முத்துப்பல்லக்கு வீதிஉலாவும், நாளை மறுநாள் (புதன்கிழமை) புதுப்பிக்கப்பட்ட ஞானபிரகாசர் தெப்பக்குளத்தில் 22 ஆண்டுகளுக்கு பிறகு தெப்ப உற்சவமும் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

    விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. திஷாமித்தல், கடலூர் மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் சிதம்பரம் துணைபோலீஸ் சூப்பிரண்டு அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் தலைமையில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

    ×