என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • அரிவராசனம் பாடப்பட்ட பிறகு, இரவில் நடை சாத்தப்படும்.
    • மாதாந்திர பூஜை வருகிற 19-ந்தேதி வரை நடக்கிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதத்தில் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். மாதாந்திர பூஜையின் போது சபரிமலைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு வருவார்கள். இந்தநிலையில் வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

    கோவில் தந்திரிகள் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோவில் நடையை திறந்து தீபாராதனை நடத்துகிறார். அதனைத்தொடர்ந்து பதினெட்டாம் படியின் கீழ் பகுதியில் உள்ள கற்பூர ஆழியில் தீ மூட்டப்படுகிறது. நாளை மாலை நடை திறக்கப்பட்ட பிறகு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. அரிவராசனம் பாடப்பட்ட பிறகு, இரவில் நடை சாத்தப்படும்.

    பின்பு நாளை (15-ந்தேதி) அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடத்தப்படும். நாளை இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை அடைக்கப்படும். மாதாந்திர பூஜை வருகிற 19-ந்தேதி வரை நடக்கிறது. அன்று வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். அன்றைய தினம் இரவு மாதாந்திர பூஜை முடிந்து கோவில் நடை சாத்தப்படுகிறது.

    • இன்று சுபமுகூர்த்த தினம்.
    • திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் பால் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு சித்திரை-31 (புதன்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : துவிதியை நள்ளிரவு 2 மணி வரை பிறகு திருதியை

    நட்சத்திரம் : அனுஷம் காலை 11.35 மணி வரை பிறகு கேட்டை

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம், ஏரிகாத்த கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம்

    இன்று சுபமுகூர்த்த தினம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் காலை மோகனாவதாரம். காரைக்குடி ஸ்ரீ கொப்புடையம்மன் காமதேனு வாகனத்தில் புறப்பாடு. வீரபாண்டி ஸ்ரீ கவுமாரியம்மன் மஞ்சள் நீராட்டு விழா. சோளசிம்மபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் விடாயாற்று.

    ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் பால் அபிஷேகம். விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம். ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் பெருமாள் புறப்பாடு. திருப்பெந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி புளிங்குடி மூலவர் ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வரவு

    ரிஷபம்-உயர்வு

    மிதுனம்-உழைப்பு

    கடகம்-ஈகை

    சிம்மம்-செலவு

    கன்னி-ஆதாயம்

    துலாம்- லாபம்

    விருச்சிகம்-வரவு

    தனுசு- களிப்பு

    மகரம்-மேன்மை

    கும்பம்-சாந்தம்

    மீனம்-பயணம்

    • செங்கோதை, பூங்கோதைத் தாயார்களுடன் பெருமாளுக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேர் வடம் பிடித்தனர்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பாலமலை ஸ்ரீ அரங்கநாதர் கோவில் சித்திரைத் தேர்த்திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதில் பெருமாள் 7-ந் தேதி அன்ன வாகனத்திலும், 8-ந் தேதி அனுமந்த வாகனத்திலும், 9-ந் தேதி கருட வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிந்தார். 10-ந் தேதி செங்கோதையம்மன் அழைப்பு விழாவும், 11-ந் தேதி செங்கோதை, பூங்கோதைத் தாயார்களுடன் பெருமாளுக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது.

    முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வைபவம் நேற்று மாலை 3 மணிக்கு தொடங்கியது. இதில் முதலில் யானை வாகன உற்சவம், சின்னத்தேர் உற்சவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாலை 6 மணி அளவில் பெருமாள் தேரில் எழுந்தருளி கோவிலின் மாட வீதிகளில் வலம் வந்தார். நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேர் வடம் பிடித்தனர். அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என விண்ணை பிளக்கும் அளவிற்கு கோஷங்களை எழுப்பினர். அதன் பிறகு அரங்கநாதர் சிறப்பு அலங்காலத்தில் அருள் புரிந்தார். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இன்று பரிவேட்டை, குதிரை வாகன உற்சவமும், 14-ந் தேதி சேஷவாகன உற்சவம், 15-ந் தேதி சந்தன சேவை சாற்றுமுறை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ப.ஜெகதீசன் செய்திருந்தார்.

    • கூத்தாண்டவர் கோவில் முன் கூவாகம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் கூழ் வைத்து வழிபாடு நடத்தினார்கள்.
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    உளுந்தூர்பேட்டை:

    கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் நாளை நடக்கிறது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது.

    புகழ் பெற்ற இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை பெருந்திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இதில் தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்கள், வெளி நாடுகளை சேர்ந்த திருநங்கைகள், திருநம்பிகள் பங்கேற்று கூத்தாண்டவரை வழிபடுவார்கள்.

    அதன் படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி சாகை வார்த்தடன் தொடங்கியது. இதையொட்டி கூத்தாண்டவர் கோவில் முன் கூவாகம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் கூழ் வைத்து வழிபாடு நடத்தினார்கள்.

    மேலும் சாகை வார்த்தலையொட்டி சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. பாரத பிரசங்க முறை நிகழ்வுகள் கடந்த 8-ந் தேதி வரை நடைபெற்றது. தினமும் இரவு 10 மணிக்கு உற்சவர் கூத்தாண்டவர் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

    சித்திரை பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கூத்தாண்டவர் சுவாமிக்கு கண் திறத்தலும், அதனை தொடர்ந்து திருநங்கைள் அரவானை தங்களது கணவராக ஏற்றுக் கொண்டு திருமாங்கல்யம் ஏற்றுக் கொள்ளும் நிகழ்வும் மாலை நடைபெற உள்ளது.

    அப்போது கோவில் பூசாரிகளிடம் திருநங்கைகள், திருநம்பிகள் திருமாங்கல்யம் ஏற்றுக் கொண்டு கூத்தாண்டவருக்கு தேங்காய் உடைத்து வழிபடுவர்.

    கூவாகம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற திருமாங்கல்யம் ஏற்றுக் கொள்வார்கள்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை (புதன்கிழமை) காலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது. திருமாங்கல்யம் ஏற்றுக் கொள்ளுதல், தேரோட்ட நிகழ்ச்சியில் திருநங்கைகள் அதிக அளவில் பங்கேற்பார்கள் என்பதால் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரஜத் சதுர்வேதி உத்தரவின் பேரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • கயிலாசநாதரின் வலதுபுறம் தனிச் சன்னிதியில் அன்னை பொன்மலைவல்லி அம்மாள் நின்ற கோலத்தில் கிழக்கு முகமாய் கருணை வடிவுடன் அருள்பாலிக்கின்றார்.
    • முருகன் சன்னிதிக்கு அருகில் தெற்கு நோக்கிய சண்டிகேஸ்வரர் சன்னிதி உள்ளது.

    திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடம்போடுவாழ்வு திருக்கோவில் அமைந்துள்ளது. பழங்காலத்தில் இவ்வூர் கடம்ப மரங்கள் நிறைந்த ஊராக விளங்கியதாலும், கடம்ப மரங்கள் இங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவி புரிந்ததாலும், இத்தலம் 'கடம்போடு வாழ்வு' எனப் பெயர் பெற்றதாகத் தலவரலாறு கூறுகின்றது.

    ஆலய அமைப்பு

    இவ்வாலயம் மன்னர் காலத்தை சேர்ந்தது என்பதற்கு இதன் கட்டிட அமைப்பும், இங்குள்ள மூலவர் வடிவங்களும் சான்று கூறுகின்றன. ஊரின் வடகிழக்கு திசையான ஈசான்ய மூலையில் கிழக்கு நோக்கி ஆலயம் அமைந்துள்ளது. கோவிலில் முதலில் நம்மை வரவேற்பது பராமரிப்பை எதிர்நோக்கும் பழமையான திருக்குளம்.

    அதையடுத்து பலிபீடம், நந்திதேவர் காட்சி தருகின்றனர். இதைக் கடந்ததும் நேர் எதிரே மூலவர் கயிலாசநாதர், லிங்கத் திருமேனியில் கிழக்கு நோக்கி எழிலாகக் காட்சி தருகின்றார். நுழைவு வாசலின் இடது புறம் இடம்புரி விநாயகர் காட்சி தருகின்றார். இவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று ஊர் மக்கள் கூறுகின்றனர். இது தவிர உட்புறத்தில் மற்றொரு நந்திதேவர் இறைவனை நோக்கி அமைந்துள்ளார். நந்தியின் இடதுபுறம் மற்றொரு விநாயகர் அமர்ந்துள்ளார்.

    கயிலாசநாதரின் வலதுபுறம் தனிச் சன்னிதியில் அன்னை பொன்மலைவல்லி அம்மாள் நின்ற கோலத்தில் கிழக்கு முகமாய் கருணை வடிவுடன் அருள்பாலிக்கின்றார். இறைவன், இறைவி சன்னிதிகளின் வலது பின்புறம் தென்மேற்கில் முக்குறுணி விநாயகர், இடது பின்புறம் வடமேற்கில் முருகப்பெருமான் சன்னிதி அமைந்துள்ளது.

    இவரை இவ்வூர் மக்கள் 'தேசிக மெய்க்கண்ட ஆறுமுக நயினார்' என அழைக்கின்றனர். கலைநயத்துடன் உள்ள இவரின் சிலா வடிவம் சோழர் கால பாணியைச் சார்ந்ததாக அமைந்துள்ளது. வலது மேற்கரங்களில் ஆயுதங்கள் தாங்கியும், இடது கீழ்க் கரங்களில் அபய - வரத முத்திரை காட்டியும் மயில்மீது அமர்ந்தபடி காட்சி தருகின்றார். தெற்கு நோக்கிய தேவ மயில், தன் வாயில் நாகத்தை கவ்வியபடி எழிலாக காட்சி தருகின்றது. கருங்கல்லிலான திருவாச்சி, முருகப்பெருமானுக்கு மேலும் அழகு சேர்க்கின்றது. சிற்பியின் முழுத் திறமைகளும் முருகன் வடிவத்தில் மின்னுகிறது. இவரைக் காண கண் கோடி வேண்டும் என்றால் அது மிகையல்ல.

    முருகன் சன்னிதிக்கு அருகில் தெற்கு நோக்கிய சண்டிகேஸ்வரர் சன்னிதி உள்ளது. ஆலயத்தின் வடகிழக்கில் காலபைரவர் அமைந்துள்ளார். கோவில் தென்னை மரங்களும், வாழை மரங்களும் நிறைந்து பசுமையாக காட்சி தருகின்றன.

    கோவிலில் பிரதோஷங்கள், மகா சிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன. கடம்பமரம் ஆதித் தலமரமாக விளங்கினாலும், இன்று இவ்வாலயத்தின் தலமரங்களாக பழைமையான வில்வ மரமும், நாகலிங்க மரமும், திருவோடு மரமும் உள்ளன. தலத்தீர்த்தமாக ஆலயத்தின் வெளியில் அமைந்துள்ள பழமையான திருக்குளம் உள்ளது.

    ஊரில் அமைந்துள்ள பிற ஆலயங்கள்

    இவ்வூரின் பழைமைக்கு சான்றாக கடம்ப விநாயகர், பெருமாள் கோவில், சுந்தராட்சி அம்மன், உச்சி மாகாளி அம்மன், கருப்பசாமி, அக்கினி மாடன்- அக்னி மாடச்சி, செல்வ விநாயகர் கோவில்கள் உள்ளன. இது தவிர கரைசாமி கோவில், ஆத்தங்கரை சுடலை, ஊர்க்காட்டுசாமி கோவில், ஒத்தைப்பனை சுடலை சாமி கோவில், களத்துசாமி, ஈஸ்வரி அம்மன் முதலான எண்ணற்ற பழம்பெரும் சிற்றாலயங்கள் அமைந்துள்ளன.

    ஊரை சுற்றி பிரபலமான நாங்குநேரி வானமாமலை பெருமாள், திருக்குறுங்குடி அழகிய நம்பி கோவில், திருமலை நம்பிக்கோவில், வள்ளியூர் முருகன், களக்காடு கோமதி அம்மன் உடனுறை சத்தியவாகீஸ்வரர் திருக்கோவில் போன்றவை அமைந்துள்ளன.

    அமைவிடம்

    திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டத்தில், களக்காடு - நாங்குநேரி வழித்தடத்தில் 7 கிலோமீட்டர் தொலைவில் கடம்போடுவாழ்வு ஆலயம் அமைந்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

    • சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்மர் விடையாற்று உற்சவம்.
    • மதுரை கள்ளழகர் அதிகாலையில் திருமலைக்கு எழுந்தருளல்.

    13-ந் தேதி (செவ்வாய்)

    * காரைக்குடி கொப்புடையம்மன் விழா தொடக்கம்.

    * வீரபாண்டி கவுமாரியம்மன் பொங்கல் திருவிழா.

    * காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கருட வாகனத்திலும், இரவு அனுமன் வாகனத்திலும் பவனி.

    * குரங்கணி முத்துமாலையம்மன் பவனி.

    * கீழ்நோக்கு நாள்.

    14-ந் தேதி (புதன்)

    * முகூர்த்த நாள்.

    * மதுரை கள்ளழகர் காலை மோகனாவதாரம், இரவு மைசூர் மண்டபத்தில் புஷ்பப்பல்லக்கில் பவனி.

    * சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்மர் விடையாற்று உற்சவம்.

    * திருவல்லிக்கேணி பார்த்த சாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * சமநோக்கு நாள்.

    15-ந் தேதி (வியாழன்)

    * மதுரை கள்ளழகர் அதிகாலையில் திருமலைக்கு எழுந்தருளல்.

    * காஞ்சிபுரம் வரதராஜர் நாச்சியார் திருக்கோலம், இரவு யானை வாகனத்தில் பவனி.

    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    * சமநோக்கு நாள்.

    16-ந் தேதி (வெள்ளி)

    * முகூர்த்த நாள்.

    * சங்கடகர சதுர்த்தி.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.

    * கீழ்நோக்கு நாள்.

    17-ந் தேதி (சனி)

    * காரைக்குடி கொப்புடையம்மன் வெள்ளி கேடயத்தில் பவனி.

    * காஞ்சிபுரம் வரதராஜர் உபய நாச்சியார்களுடன் ரத உற்சவம்.

    * கீழ்நோக்கு நாள்.

    18-ந் தேதி (ஞாயிறு)

    * முகூர்த்த நாள்.

    * சஷ்டி விரதம்.

    * காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் குதிரை வாகனத்தில் திருவீதி உலா.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * மேல்நோக்கு நாள்.

    19-ந் தேதி (திங்கள்)

    * முகூர்த்த நாள்.

    * சாத்தூர் வேங்கடேசர் தோளுக்கினியானில் பவனி.

    * சங்கரன்கோவில் கோமதி அம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * மேல்நோக்கு நாள்.

    • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.
    • வீரபாண்டி ஸ்ரீ கவுமாரியம்மன் பொங்கல் பெருவிழா.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு சித்திரை-30 (செவ்வாய்க்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : பிரதமை நள்ளிரவு 12.31 மணி வரை பிறகு துவிதியை

    நட்சத்திரம் : விசாகம் காலை 9.19 மணி வரை பிறகு அனுஷம்

    யோகம் : மரண, சித்தயோகம்

    ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்

    சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். காரைக்குடி ஸ்ரீ கொப்பு டையம்மன் உற்சவம் ஆரம்பம். சிம்ம வாகனத்தில் பவனி. குரங்கனி ஸ்ரீ முத்துமாலையம்மன் பவனி. திருமாலி ருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் தேனூர் மண்டபம் எழுந்தருளி மண்டுக மகரிஷிக்கு மோட்சம் அருளுதல். உய்யக்கொண்டாள் சிறுவயல் பொன்னழகி அம்மன் சிறப்பு ஆராதனை. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.

    திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு சம்ஹார அர்ச்சனை. ஆறுமுக மங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சனம். வீரபாண்டி ஸ்ரீ கவுமாரியம்மன் பொங்கல் பெருவிழா.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நேர்மை

    ரிஷபம்-சாந்தம்

    மிதுனம்-ஆதரவு

    கடகம்-பெருமை

    சிம்மம்-தெளிவு

    கன்னி-அமைதி

    துலாம்- ஆர்வம்

    விருச்சிகம்-முயற்சி

    தனுசு- பணிவு

    மகரம்-இன்பம்

    கும்பம்-உறுதி

    மீனம்-பாசம்

    • கருடவாகனத்தில் தேவநாத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும்.

    இக்கோவிலில் வருடம்தோறும் சித்திரை பிரம்மோற்சவம் மற்றும் தேசிகர் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதனை தொடர்ந்து தேவநாதசுவாமி கோவிலில் 12 நாட்கள் சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து ஹம்ச வாகனம், சூரிய பிரபை, வெள்ளி சிம்ம வாகனம், யாளி வாகனம், அனுமந்த வாகனம் வேணுகோபாலன் சேவை தங்க விமானம், சேஷ வாகனத்திலும், தங்கப்பல்லக்கு நாச்சியார் திருக்கோலத்திலும் சாமி வீதி உலா நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து கருட மகா உற்சவத்தன்று கருடவாகனத்தில் தேவநாத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். விழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று (திங்கட்கிழமை) தேரோட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து காலை ஸ்ரீதேவி பூதேவியுடன் தேவநாத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். இதில் திரளாக கலந்து கொண்ட பக்தர்கள் முக்கிய வீதிகளில் "கோவிந்தா கோவிந்தா" என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் முக்கிய வீதியில் சாமி வீதி உலா நடைபெற்று பின்னர் நிலையை வந்து அடைந்தது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டன. மேலும் ஏராளமான பக்தர்கள் மொட்டை அடித்து தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இன்று இரவு பானக பூஜையும், நாளை மட்டையடி மற்றும் தங்க பல்லக்கில் வீதி உற்சவமும், இரவு தெப்ப உற்சவம், நாளை மறுநாள் காலை துவாதச ஆராதனம் நடைபெற உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் வைகை எழுந்தருளல்.
    • கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு சித்திரை-29 (திங்கட்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : பவுர்ணமி இரவு 10.44 மணி வரை பிறகு பிரதமை

    நட்சத்திரம் : சுவாதி காலை 6.48 மணி வரை பிறகு விசாகம்

    யோகம் : அமிர்த, மரணயோகம்

    ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    திருவிடைமருதூர், திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் சிவன் கோவில்களில் அபிஷேகம்

    இன்று சித்ரா பவுர்ணமி. புத்த பூர்ணிமா. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் வைகை எழுந்தருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலுதர்பார் காட்சி. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர்,

    திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருமஞ்சன சேவை. கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு. நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் அலங்கார திருமஞ்சன சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பெருமை

    ரிஷபம்-சுபம்

    மிதுனம்-புகழ்

    கடகம்-துணிவு

    சிம்மம்-முயற்சி

    கன்னி-பணிவு

    துலாம்- மாற்றம்

    விருச்சிகம்-தனம்

    தனுசு- நிறைவு

    மகரம்-பாராட்டு

    கும்பம்-பரிசு

    மீனம்-ஈகை

    • கள்ளழகரை வரவேற்ற பக்தர்கள், 'கோவிந்தா கோவிந்தா' என பக்தி முழக்கத்துடன் வழிபாடு செய்தனர்.
    • காலை 7.25 மணி வரை கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் 108 வைணவ தலங்களில் ஒன்றான அழகர்கோவில் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா உலக புகழ் பெற்றதாகும். மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் 8-ந்தேதியும், தேரோட்டம் 9-ந்தேதியும் நடைபெற்றது.

    திருமாலிருஞ்சோலை, தென் திருப்பதி என்று போற்றி அழைக்கப்படுவதும், 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றானதுமான மதுரை மாவட்டம் அழகர் கோவில் மலையடிவாரத்தில் உள்ள கள்ளழகர் கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவத்திற்காக சுந்தரராஜ பெருமாள் தங்கப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்தில் 18-ம் படி கருப்பண சுவாமி உத்தரவு பெற்று அழகர்கோவிலில் இருந்து மதுரைக்கு புறப்பட்டார்.

    இந்நிலையில் இன்று காலை 5.45 மணி முதல் 6.05 மணிக்குள் தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வந்த கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். தண்ணீரை பீய்ச்சி அடித்து கள்ளழகரை வரவேற்ற பக்தர்கள், 'கோவிந்தா கோவிந்தா' என பக்தி முழக்கத்துடன் வழிபாடு செய்தனர். இதனைத்தொடர்ந்து காலை 7.25 மணி வரை கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

    வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவத்தை தொடர்ந்து ராமராயர் மண்டகபடியில் கள்ளழகரை குளிர்விக்கும் தீர்த்தவாரி நடக்கிறது. 13-ந்தேதி காலையில் சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் அழகர் காட்சி தருகிறார். தொடர்ந்து அன்று மாலையில் கருட வாகனத் தில் பிரசன்னமாகி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    அதனைத் தொடர்ந்து இரவு முதல் மறுநாள் காலை வரை விடிய, விடிய தசாவதார காட்சி நடைபெறும். 14-ந்தேதி மதியம் ராஜாங்க திருக்கோலத்தில் அழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அன்று இரவு பூப்பல்லக்கு விழா நடைபெறும். 15-ந் தேதி மதுரையில் இருந்து கள்ளழகர் மலைக்கு திரும்புகிறார். 17-ந்தேதி உற்சவ சாற்று முறையுடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.

    அழகர்கோவில் புறப்பாடு முதல் மீண்டும் கோவிலுக்கு திரும்பும் வரை சுமார் 494 மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளுகிறார். 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தும், சி.சி.டி.வி. கேமராக்கள் அமைத்தும் பாதுகாப்பு பணிகளை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • வருடந்தோறும் பிரம்மோற்சவ விழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
    • பல்வேறு வாகனத்தில் சாமி வீதி உலா மற்றும் கருடசேவை விழா நடைபெற்றது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி சிங்கிரிகுடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது . இக்கோவிலில் வருடந்தோறும் பிரம்மோற்சவ விழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம் .

    இந்த நிலையில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது . பின்னர் பல்லக்கில் சாமி , மாட வீதியில் வீதி உலா நடைபெற்றது . இதனைத் தொடர்ந்து தினந்தோறும் பல்வேறு வாகனத்தில் சாமி வீதி உலா மற்றும் கருடசேவை விழா நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

    இதனையொட்டி அதிகாலை லட்சுமி நரசிம்மர் பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து லட்சுமி நரசிம்ம பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில், ஊர்வலமாக கம்பீரமாக பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார்.

    இதனை தொடர்ந்து அய்யப்பன் எம்.எல்.ஏ தலைமையில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் அங்குத் திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா" என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய மாடவீதியில் தேரோட்டம் நடைபெற்று பின்னர் நிலையை அடைந்தது. இன்று நரசிம்மர் அவதாரம் தினமான நரசிம்மர் ஜெயந்தியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    நாளை காலை மட்டையடி உற்சவம், இரவில் இந்திர விமானத்தில் சாமி வீதி உலாவும், புஷ்பயாகம், இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது . இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

    • கயிலாயத்தில் ஒருநாள் அன்னை பார்வதி தேவி, பொழுதுபோக்காக ஒரு அழகிய ஆண் குழந்தையின் வடிவத்தை சித்திரமாக வரைந்து மகிழ்ந்தாள்.
    • சித்ரா பவுர்ணமியன்று பூஜையறையை சுத்தம் செய்து, சித்ரகுப்தன் படத்தை தெற்கு திசையில் வைத்து பூக்களால் அலங்கரிக்க வேண்டும்.

    சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரம் இணைந்த நாளில் வரும் பவுர்ணமி தினம், புராண நிகழ்வுகளின் நினைவாக சிறப்பைப் பெறுகிறது. மற்ற பவுர்ணமிகளில் சிறு களங்கத்துடன் தோன்றும் சந்திரன், சித்ரா பவுர்ணமியன்று, பூரணக்கலைகளுடன் பூமிக்கு மிக அருகில் தோன்றும். சந்திரனும் சூரியனும் முழு நீசம் பெறும் இந்த நாளில், நாம் தெய்வங்களிடம் சரணடைந்து வழிபடுவது நன்மைகளைத் தரும் என்பது ஐதீகம்.

    மனிதர்களின் பாவ புண்ணியங்களை எழுதி வைத்து அதற்கேற்றார்ப் போல், அவர்களின் இறப்பையும் அதன்பின் அவர்கள் வசிக்கப் போகும் சொர்க்கம்- நரகம் ஆகியவற்றை நிர்ணயிக்கும் பெரிய பொறுப்பில் உள்ள எம தர்மனின் உதவியாளரான சித்திரகுப்தனை வழிபடும் நாள்தான் இந்நாள். சித்ரகுப்தனின் பிறப்புக் குறித்து பல்வேறு புராண சம்பவங்கள் விவரிக்கப்பட்டாலும் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிகழ்வாக இக்கதையே பெரும்பாலும் உள்ளது.

    கயிலாயத்தில் ஒருநாள் அன்னை பார்வதி தேவி, பொழுதுபோக்காக ஒரு அழகிய ஆண் குழந்தையின் வடிவத்தை சித்திரமாக வரைந்து மகிழ்ந்தாள். அதே நேரத்தில் எல்லாம் வல்ல ஈசனிடம், விதி முடிந்த மனிதரின் உயிரைப் பறித்து பூமி மாதாவின் பாரத்தைக் குறைக்கும் பணியில் உள்ள எமதர்மன், அதிக வேலைப்பளு காரணமாகத் தான் அவதிப்படுவதாகவும், தனக்கு ஏற்ற சிறந்த உதவியாளரைத் தரும்படியும் வேண்டினான்.

    அப்போதுதான் ஈசனிடம் தான் வரைந்த ஓவியத்தைக் காட்டினாள் அன்னை உமாதேவி. அழகில் சிறந்த அந்த ஆண் குழந்தையின் ஓவியம், ஈசனின் மனதை மயக்கியது. அந்நேரம் எமனின் வேண்டுகோள் நினைவில் தோன்ற, அவ்வோவியத்தைக் கையில் எடுத்த இறைவன் தன் மூச்சுக் காற்றை அவ்வோவியத்தில் செலுத்த, ஓவியத்தில் இருந்த குழந்தை உயிர்பெற்று வந்தது. சிவசக்தியின் அம்சமாக உருவான அக்குழந்தை, சித்திரத்தில் இருந்து உயிர் பெற்றதால் 'சித்ர குப்தன்' எனப்பெயர் பெற்றது. ஈசனை வேண்டித் தவமிருந்து பல ஞானங்களைப் பெற்று வளர்ந்தது.

    கல்வி கேள்விகளில் சிறந்தவனான சித்ரகுப்தனை தகுந்த வயதில் எமதர்மனிடம் அனுப்பி, மனிதர்களின் பாவப்புண்ணிய கணக்குகளை நெறி தவறாமல் எழுதி, எமனுக்கு உதவி செய்யும்படி பணித்தார் சிவபெருமான் என்கிறது புராணம். 'சித்' என்றால் 'மனம்' என்றும், 'குப்த' என்றால் 'மறைவு' என்றும் பொருள். மனிதர்களின் மனதில் மறைந்திருக்கும் பாவ எண்ணங்களையும், மனதார செய்யும் நல்ல செயல்களின் புண்ணியத்தையும் கவனித்து எழுதி வைக்கிறார் சித்ரகுப்தர் என்பது நம்பிக்கை.

    மனிதரின் பாவ புண்ணியக் கணக்குகளை எழுதும் பணிக்காக இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட சித்திரகுப்தன், பிறக்கும்போதே கையில் எழுத்தாணி ஏடுடன் பிறந்ததாக ஐதீகம். நாம் செய்யும் புண்ணிய செயல்களையும் பாவ செயல்களையும் தவறாமல் நடுநிலையாக, அவரவரின் பூர்வ புண்ணியங்களின் படி ஆராய்ந்து மறையாத எழுத்துகளால் கணக்குப் புத்தகத்தில் எழுதுவதாக நம்பிக்கை. ஆகவேதான் அன்று சித்திரகுப்த பூஜையில் எழுத்தாணி மற்றும் கணக்கு நோட்டுப் புத்தகங்கள் வைத்து வாழ்வு வளம் பெற வேண்டுகின்றனர்.

    சித்ரா பவுர்ணமியன்று பூஜையறையை சுத்தம் செய்து, சித்ரகுப்தன் படத்தை தெற்கு திசையில் வைத்து பூக்களால் அலங்கரிக்க வேண்டும். பின்னர் சந்தனப்பொட்டு வைத்து, பழங்கள், காய்கறிகள், வேப்பம்பூ பச்சடி, பச்சரிசி வெல்லத்துடன் இனிப்புகள் மற்றும் கலவை சாதங்களை நைவேத்தியமாகப் படைக்க வேண்டும். ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கு ஏற்றி மனதில் உள்ள தீய எண்ணங்களை விலக்கி நல்ல எண்ணங்களை புகுத்தி தீப தூபம் காட்டி சித்ரகுப்தனை மனதார வழிபட வேண்டும்.

    சித்ரா பவுர்ணமியன்று களங்கமில்லாத முழுநிலவின் அழகைக் கண்டு ரசிக்க, கடற்கரை பூங்கா போன்ற இடங்களில் மக்கள் ஒன்று கூடுவார்கள். அவரவர் வீடுகளில் செய்த 'சித்ரா அன்னம்' எனப்படும் கலவை சாதங்களை எடுத்து வந்து, நிலாச்சோறு உண்ணும் வழக்கம் குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமையையும், அன்பையும் பெருக வைக்கும் என்பதால் நம் பெரியோர்கள் கடைப்பிடித்த நல்வழி இது. சித்ரா பவுர்ணமியின் சிறப்புகளாக பல ஆன்மிக வழிபாடுகளும், பூஜைகளும் ஆலயங்கள்தோறும் நடைபெற்று வருகின்றன.

    குறிப்பாக மதுரையில் அன்று கள்ளழகர் ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு தரிசனம் தருவது ஆண்டுதோறும் நிகழும் சிறப்புமிக்க வைபவமாகிறது. கன்னியாகுமரியில் அன்றுமட்டும் ஒரே நேரத்தில் சூரியன் மறைவதையும் சந்திரன் தோன்றுவதையும் கண்டுமகிழலாம். திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் நிகழ்வு பிரசித்தி பெற்றதாக இருக்கிறது. இந்த தினத்தில் சித்ரகுப்தனை வேண்டி, வருட பலாபலன்களை அறிந்து கொள்ளும் பஞ்சாங்கம் படிப்பதும், கடல் நீரில் நீராடுவதும் வாழ்வில் சுபீட்சத்தை அருளும். அன்றைய தினம் சித்ராதேவிக்கு (அம்பிகை) தேங்காய் சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர்சாதம், பருப்புபொடி சாதம், கறிவேப்பிலைப்பொடி சாதம், மாங்காய் சாதம், வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், அரிசி உப்புமா, அவல் உப்புமா, கோதுமை உப்புமா ஆகியவைகளைப் படைத்து அவற்றை பசித்தோருக்கு தானமாகத் தந்து புண்ணியம் பெறலாம்.

    ×