என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • எந்தத் துதியும் தெரியவில்லை என்றாலும் கவலைப்பட வேண்டாம்.
    • மனதிற்குள் கணபதி, லட்சுமி, குபேரனின் திருநாமங்களுடன் போற்றி சேர்த்துக் கூறவும்.

    அமிர்தயோகம் அல்லது சித்தயோகம் உள்ள (அஷ்டமி, நவமி இல்லாத) ஒரு வெள்ளிக்கிழமை இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம்.

    விரதம் கடைப்பிடிக்கும் தினத்துக்கு முதல் நாளே சில பூஜை பொருட்களை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    லட்சுமி படம், குபேரன் படம், குபேர யந்தரம் இப்படி லட்சுமி குபேரன் சம்மந்தமா இருக்கிறத எடுத்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

    மஞ்சள் தூள், குங்குமம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, சந்தனம், பழம், பூ, சாம்பிராணி, கற்பூரம், நவதான்யம், தலைவாழை இலை இதெல்லாம் முதல் நாளே வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.

    விரதம் இருக்கும் வெள்ளிக்கிழமை அன்றைக்கு காலையிலே எழுந்து குளித்துவிட்டு, சுத்தமான உடை அணிந்து நெத்திக்கு குங்குமம் இட்டு தயாராக வேண்டும்.

    நல்ல நேரத்துல லட்சுமி குபேரன் படம், குபேர யந்தரம் இதை எல்லாம் எடுத்து மஞ்சள், குங்குமம் வெச்சு பூஜையில் வையுங்கள்.

    குபேரன் யந்தரம், படம் மட்டும் இருந்தா வடக்கு திசையிலே வைக்க வேண்டும்.

    படத்துக்கு முன்னால், தலைவாழை இலையை வைத்து அதுமேல் நவதானியத்தையும் ஒன்றாய் கலக்காம சுத்திவர பரப்பி வைங்க.

    அதுக்கு நடுவுல ஒரு செம்பை வைத்து சுத்தமான தண்ணீரால் நிரப்பி அதுல கொஞ்சம் மஞ்சள் தூளைப் போட்டு வைக்க வேண்டும்.

    செம்பு மேல மஞ்சள் பூசின ஒரு தேங்காயை வைத்து, சுற்றிலும் மாவிலையை சொருகி கலசம் மாதிரி அமைக்க வேண்டும்.

    வெற்றிலை, பாக்கு, பழம், இதோட தட்சணை எல்லாத்தையும் கலசத்துக்கு முன்னால் வைத்தல் வேண்டும்.

    கொஞ்சம் மஞ்சள் தூள் எடுத்து சிறிது தண்ணீர் விட்டு சின்னதா பிள்ளையார் பிடிச்சு, வாழை இலையின் வலப்பக்கம் வைத்து குங்குமப் பொட்டு வைக்க வேண்டும்.

    படம், யந்தரம், கலசம் மஞ்சள் பிள்ளையார் ஆகியவற்றிற்கு பூக்களை போட்டு ஊதுபத்தி ஏற்றி வைக்கவும்.

    கிழக்கு பார்த்து அமர்ந்து, பிள்ளையார் மந்த்ரம் ஸ்லோகங்களைக் கூறவும்.

    பின்னர் லட்சுமி ஸ்லோகம், துதியைக் கூறவும், குபேரனை பற்றிய ஸ்லோகம், மந்திரம், துதி ஆகியவற்றைக் கூறவும்.

    எந்தத் துதியும் தெரியவில்லை என்றாலும் கவலைப்பட வேண்டாம்.

    மனதிற்குள் கணபதி, லட்சுமி, குபேரனின் திருநாமங்களுடன் போற்றி சேர்த்துக் கூறவும்.

    பின்பு தூப தீபம் காட்டி வாழைப் பழம், பசும்பால் (சர்க்கரை போட்டுக் காய்ச்சியது) பாயசம் என்று முடிந்த நிவேதனத்தை செய்து பகவானுக்கு படைக்கலாம்.

    வெற்றிலை, பாக்கு, பழத்தை சுமங்கலிகளுக்கும், தட்சணையை ஏழைகளுக்கு கொடுக்கவும்.

    நியாயமான தேவைகளை நிறைவேற்றி தேவையான செல்வத்தையும் நிலையான சந்தோஷத்தையும், நிம்மதியையும், ஆரோக்கியத்தையும் எல்லோருக்கும் தா...! என்று குபேரனை மனசுக்குள்ளே நினைச்சுக்கிட்டு வேண்டிக் கொள்ள வேண்டும்.

    உங்க வாழ்க்கையில் குறுக்கிடக் கூடிய இன்னல்கள், தடைகள் எல்லாவற்றையும் நீக்கி, வளமும் நலமும் உங்களை வந்தடைய குபேரன் நிச்சயம் அருள் புரிவார்.

    இந்த விரதத்தை ஆண், பெண் குழந்தைகள் என்று யார் வேண்டுமானாலும் குறிப்பிட்ட காலம் என்று இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் கடைப் பிடிக்கலாம்.

    லட்சுமி குபேர விரதம் இருந்தால் உங்களுடைய லட்சியம் எல்லாம் ஈடேறும்.

    • வில்வ மரத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள் என்று சொல்லப்படுகிறது.
    • சவுபாக்கிய சஞ்சீவினியில் லட்சுமி வில்வக்காட்டில் மரத்தடியில் தவம் செய்பவளாக வருணிக்கப் பட்டுள்ளது.

    லட்சுமிக்கு மிகவும் பிடித்தமான இலை வில்வம் என்பது பலருக்குத் தெரியாது.

    திருவஹிந்திரபுரத்தில் தாயாருக்கு வில்வ அர்ச்சனையே செய்யப்படுகிறது.

    வில்வ மரத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள் என்று சொல்லப்படுகிறது.

    சவுபாக்கிய சஞ்சீவினியில் லட்சுமி வில்வக்காட்டில் மரத்தடியில் தவம் செய்பவளாக வருணிக்கப் பட்டுள்ளது.

    வாமன புராணத்தில் லட்சுமியின் கைகளில் இருந்தே வில்வம் தோன்றியது என்று காத்யாயனர் கூறுகிறார்.

    காளிகா புராணத்தில் லட்சுமி வில்வமரங்கள் அடங்கிய காட்டிலேயே தவம் செய்தாள் என்று குறிப்பிடுகிறது.

    • குபேர மூலையில் பீரோவை வைத்தால் செல்வம் பெருகும்.
    • தங்களுடைய வாழ்க்கை மற்றும் தொழில் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வடக்கு திசை நோக்கி பயணம் செய்யுங்கள்.

    வடக்கு திசை நோக்கிய குபேர மூலையாகியது குபேரர் கடவுளுக்கு உகந்தது. உதாரணத்திற்கு உங்கள் வீடு கிழக்கு நோக்கி இருந்தால் நீங்கள் கிழக்கு பார்த்து நின்று கொள்ளுங்கள். உங்களுக்கு இடப்பக்கமாக உள்ளது வட கிழக்கு மூலை மற்றும் உங்களுக்கு வலப்பக்கமாக உள்ளது தென் கிழக்கு மூலையாகும்.

    வடகிழக்கு மூலை ஈசானி மூலை, தென்கிழக்கு மூலை அக்னி மூலை, தென்மேற்கு மூலை கன்னி மூலை என்றும், வடமேற்கு மூலை வாயு மூலை என்றும் கூறுவார்கள்.

    குபேரரை வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது நம் முன்னோர்களின் கூற்று. அது போல குபேர மூலையில் பீரோவை வைத்தால் செல்வம் பெருகும்.


    மேலும் புதிதாக தொழில் தொடங்குபவர்கள் தங்களது பணத்தை (காசோலையை) குபேர மூலையில் வைப்பதன் மூலம் தொழில் நன்கு வளர்ச்சி அடையும் செல்வமும் பெருகும்.

    தொழிலில் எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் லாபம் பன்மடங்கு அதிகரிக்க குபேரற்கு பாலபிஷேகம் செய்வது சிறந்தது. வியாபாரம் தொய்வு பெறாமல் இருப்பதற்கு வருடத்தில் ஒருமுறை திருவண்ணாமலையில் உள்ள குபேர லிங்கத்தை வழிபடுவது நல்லது.


    தங்களுடைய வாழ்க்கை மற்றும் தொழில் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வடக்கு திசை நோக்கி பயணம் செய்யுங்கள்.

    வீடு அல்லது மனை எது வாங்குவதாக இருந்தாலும் அதை வடக்கு திசை பார்த்து வாங்குங்கள். குபேரர் கடவுளை வியாழக்கிழமையில் வழிபடுவது சிறந்தது. அப்படி வழிபட்டால் பண பற்றாக்குறை வராது. மேலும் ஈசானி மூலை மற்றும் குபேர மூலையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஈசானி மூலையை காலியாக வைத்திருக்க வேண்டும். வற்றாத செல்வம் பெருகுவதற்கு குபேர மூலை சிறந்தது.

    • கோவில் வளாகத்தில் உள்ள அரச மரத்தடியில் நாக தேவதை அம்மன் சிலை உள்ளது.
    • கிராம மக்கள் திரண்டு வந்து சாமி சிலை மீது பாம்பு ஆடுவதை கண்டு பக்தி பரவசம் அடைந்தனர்.

    ஆந்திர மாநிலம், பெத்த பள்ளி அடுத்த ஒடேலாவில் சம்பு லிங்கேஸ்வரர், ஆபத் சகாயஆஞ்சநேயர் கோவில் உள்ளது.

    கோவில் வளாகத்தில் உள்ள அரச மரத்தடியில் நாக தேவதை அம்மன் சிலை உள்ளது. கோவில் பூசாரி நாக தேவதை அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது திடீரென நல்ல பாம்பு ஒன்று வந்து நாக தேவதை அம்மன் சிலையின் மீது அமர்ந்தது. பின்னர் சாமி சிலையின் மீது படம் எடுத்து ஆடியது. இந்த செய்தி ஊர் முழுவதும் காட்டு தீ போல் பரவியது. ஏராளமான கிராம மக்கள் திரண்டு வந்து சாமி சிலை மீது பாம்பு ஆடுவதை கண்டு பக்தி பரவசம் அடைந்தனர். சாமியை வணங்கி சென்றனர்.

    இதனை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பல்வேறு பகுதிகளிலிருந்தும் 40-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் உள்ள வனபத்ர காளியம்மன் கோவில்.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடிக்குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆடிக்குண்டம் திருவிழா கடந்த 23-ந் தேதி பூச்சாட்டுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து லட்சார்ச்சனை, கிராம சாந்தி, கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது.


    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. முன்னதாக அதிகாலை 3 மணிக்கு அம்மன், சிம்ம வாகனத்தில் கோவிலை வலம் வந்து குண்டம் அமைக்கப்பட்ட இடத்தில் எழுந்தருளினார்.

    காலை 5.30 மணியளவில் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி தொடங்கியது. தலைமை பூசாரி ஹரி நடத்திய சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் குண்டத்தில் பூப்பந்து உருட்டப்பட்டு முதலில் தலைமை பூசாரி குண்டம் இறங்கினார். அதனை தொடர்ந்து மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. ஏ.கே.செல்வராஜ், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, மற்றும் போலீசார், உள்ளூர் பிரமுகர்கள் குண்டம் இறங்கினர். தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பலர் கைகளில் குழந்தைகளை வைத்துக்கொண்டே குண்டம் இறங்கினர்.


    தேக்கம்பட்டி சுற்றுவட்டாரப்பகுதியில் வசிக்கும் திருநங்கைகள் கரகம் எடுத்து வந்தும், பால்குடம் எடுத்து வந்தும், தீச்சட்டி எடுத்து வந்தும் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    பக்தர்களின் பாதுகாப்புக்காக கோவை போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்.பி. சுரேஷ்குமார் தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம், பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) சுரேஷ்குமார் தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தயார்நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தனர்.

    பக்தர்களின் வசதிக்காக கோவை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் 40-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    • முருகப்பெருனை `குகன்’ என்றும் அழைப்பார்கள்.
    • சிவலிங்கம் 5½ அடி உயரம் கொண்டது.

    கோவில் தோற்றம்

    கன்னியாகுமரி ரெயில் நிலையம் அருகிலேயே இருக்கிறது இந்த குகநாதீஸ்வரர் கோவில். முருகப்பெருமானை `குகன்' என்றும் அழைப்பார்கள். அந்த குகன் வழிபட்ட சிவபெருமான் அருளும் ஆலயம் என்பதால், இது 'குகநாதீஸ்வரர் கோவில்' என்று அழைக்கப்படுகிறது.

    இவ்வாலயத்தில் இருக்கும் இறைவனுக்கு, `கோனாண்டேஸ்வரன்', `குகனாண்டேஸ்வரன்' என்ற பெயரும் வழங்கப்படுகிறது. இவ்வாலயத்தின் கருவறை குகை போன்று காணப்படுவதாலும், பிரகாரம் குறுகி இருப்பதாலும் இவ்வாலய இறைவன் `குகநாதீஸ்வரர்' என்று அழைக்கப்படுவதாக சொல்கிறார்கள்.

    இந்த கோவில் கருவறை, அர்த்த மண்டபம், முக மண்டபம், உட்பிரகாரம், வெளிப்பிரகாரம் என்னும் அமைப்பைக்கொண்டது. கோவிலின் முன்பு சிறிய தோட்டம் இருக்கிறது. இவ்வாலய மூலவர் சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் சிவாலயங்களிலேயே, இந்த ஆலயத்தில் இருக்கும் சிவலிங்கம்தான் மிகப்பெரியது என்று சொல்கிறார்கள். இவ்வாலய சிவலிங்கம் 5½ அடி உயரம் கொண்டது. இங்கு அருள்பாலிக்கும் அன்னையின் திருநாமம், 'பார்வதி' என்பதாகும்.

    ஆலய தல விருட்சமாக வில்வ மரம் இருக்கிறது. இவ்வாலயத்தில் தட்சிணாமூர்த்தி, கன்னி விநாயகர், கஜலட்சுமி, வள்ளி-தெய்வானை உடனாய முருகப்பெருமான், துர்க்கை, நவக்கிரகங்கள், காலபைரவர் ஆகியோர் பரிவார தெய்வங்களாக அருள்கின்றனர்.

    இங்குள்ள கல்வெட்டு ஒன்று, இவ்வாலய இறைவனை, `ராஜராஜப் பாண்டிநாட்டு உத்தமசோழ வளநாட்டு புறத்தாயநாட்டு அழிக்குடி ராஜராஜேஸ்வர முடையார்' என்று நீண்ட அடைமொழியோடு குறிப்பிடுகிறது.

    இந்த கல்வெட்டு 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும், பிற்காலச் சோழர்களின் ஆட்சி கன்னியாகுமரியில் நிலவியபோது, இந்த குகநாதீஸ்வரர் கோவிலுக்கு, அவர்கள் திருப்பணி செய்ததும் இந்த கல்வெட்டில் காணப்படுகிறது.

    10-ம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இந்த ஆலயத்தில் வழிபாடு நடந்திருக்கலாம் என்கிறார்கள், ஆய்வாளர்கள். இவ்வாலயத்தில் முதலாம் ராஜேந்திரன், இரண்டாம் ராஜேந்திரன், முதலாம் ராஜாதிராஜன் ஆகிய மன்னர்கள் கால கல்வெட்டுகளும் உள்ளன.

    கோடை வெயில் அதிகரிக்கும் காலத்தில் இத்தல இறைவனுக்கு 1008 இளநீர் அபிஷேகம் செய்வார்கள். இந்த அபிஷேக இளநீர், பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். புரட்டாசி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் 1008 சங்காபிஷேகம் நடைபெறும். அன்று கணபதி ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம், கோமாதா பூஜை, சங்கு பூஜையும் நடக்கும்.

    ஐப்பசி மாத பவுர்ணமியில் இத்தல இறைவனை வழிபட்டால் குடும்ப பிரச்சனை நீங்கும் என்கிறார்கள். கார்த்திகை சோம வாரத்தில் மூலவருக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.

    இவ்வாலயத்தில் காரைக்கால் அம்மையாருக்கு தனிச்சன்னிதி உள்ளது. ஆண்டுதோறும் ஆனி மாத பவுர்ணமியில் காரைக்கால் அம்மையாருக்கு இத்தலத்தில் மாங்கனி திருவிழா நடத்தப்படுகிறது.

    மனமுருகி வேண்டும் எல்லா பிரார்த்தனைகளையும், இத்தல இறைவன் நிறைவேற்றுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். திருமணத் தடை நீக்கும் ஆலயமாகவும் இத்தலம் உள்ளது.

    தினமும் காலை 5.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் இவ்வாலயம் திறந்திருக்கும்.

    • பித்ருக்கள் என்பவர்கள் நமது முன்னோர்கள்.
    • கர்மாவை கட்டாயம் செய்ய வேண்டும்.

    பித்ருக்கள் என்பவர்கள் நமது முன்னோர்கள். தர்ப்பணம் என்பது அவர்களை திருப்தி செய்வதற்காக செய்யும் ஒரு நிகழ்ச்சியாகும். பித்ருக்கள் என்பவர்கள் இறந்துபோன நமது அப்பா மற்றும் அம்மாவை சேர்ந்தவர்களை குறிக்கும்.

    நம் குலம் நன்றாக விளங்கவும், வம்ச விருத்திக்காகவும், தோஷங்கள் இல்லாமல் இருக்கவும் நம் முன்னோர்களை நினைத்து இந்த கர்மாவை கட்டாயம் செய்ய வேண்டும். தகப்பனார் இல்லாதவர்கள் மட்டுமே தில தர்ப்பணம், பித்ருக்களுக்கான தர்ப்பணம் செய்ய வேண்டிய கர்த்தாக்கள் (எஜமானர்கள்) ஆவார்கள். (தேவதர்ப்பணம், ருஷி தர்ப்பணம் போன்றவை அனைவரும் செய்யலாம்).

    பித்ருக்கள் தர்ப்பணம், தகப்பனார் வழியில் ஆறு பேர், தாய் வழி பாட்டனார் ((மாதா மகர்) வழியில் ஆறு பேர் ஆக 12 பேருக்கு செய்ய வேண்டும். மாதா மகர் (தாய் வழி பாட்டனார்) உயிருடன் இருந்தால், அந்த வர்க்கத்திற்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டியதில்லை. அவருக்கு பதிலாக முன்னோர் ஒருவரை சேர்த்துக் கொள்ளலாம்.

    • ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு.
    • பித்ரு கடனை அடைக்காவிட்டால் பித்ரு தோஷம் உண்டாகும்.

    ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அதிலும் சூரியனும், சந்திரனும் ஒன்று சேரக்கூடிய `அமாவாசை திதி' மிக முக்கியமானதாகும். சூரிய பகவான் `பித்ரு காரகன்' என்றும், சந்திர பகவான் `மாத்ரு காரகன்' என்றும் போற்றப்படுகின்றனர்.

    இவர்கள் இருவரும் சேர்ந்து இருக்கக்கூடிய அமாவாசை நாளில் மரணம் அடைந்த பெற்றோருக்கு தர்ப்பணம் செய்வது மிக விசேஷமானதாக கருதப்படுகிறது. அதிலும் ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை போன்றவை கூடுதல் சிறப்புக்குரியவை. மனிதராக பிறந்த ஒவ்வொருவரும், தேவ கடன், பித்ரு கடன் ஆகியவற்றை தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.

    பித்ரு கடனை அடைக்காவிட்டால் `பித்ரு தோஷம்' உண்டாகும். நம்மில் பலரும் `எனக்கு தர்ப்பணம் செய்ய நேரம் இல்லை. அதனால் அன்னதானம் செய்கிறேன்' என்று சொல்வார்கள். அன்னதானம் செய்வதும் பெரிய புண்ணியம்தான். ஆனால் தர்ப்பணத்தை விட்டு விட்டு செய்யும் அன்னதானத்திற்கு எந்த பலனும் கிடைக்காது. எனவே கட்டாயமாக தர்ப்பணம் செய்ய வேண்டும்.

    எள்ளு சேர்த்த நீரை, பித்ருக்களுக்காக விட வேண்டும். அப்போதுதான் அவர்களின் ஆன்மா சாந்தி அடையும். அவர்களின் ஆசி நமக்கு கிடைக்கும். பித்ரு லோகத்தில் உள்ள தேவர்களின் ஆசியும் சேர்த்து கிடைக்கும்.

    ஒரு சமயம் சிவபெருமானின் திருவடியை கண்டடைவதற்காக வராக (பன்றி) அவதாரம் எடுத்தார், விஷ்ணு பகவான். அவர் வராக தோற்றத்தில் பூமியை குடைந்து சென்றபோது, அவரது உடம்பில் இருந்து வியர்வை துளிகள் அரும்பியது. அந்த வியர்வை துளிகள் பூமியில் விழுந்ததும், கருப்பு எள்ளாக மாறியதாக புராணங்கள் சொல்கின்றன.

    தாய்-தந்தையருக்கு அளிக்கும் தர்ப்பணத்தில் இந்த கருப்பு எள்ளை சேர்த்துக் கொள்வது மிகவும் புண்ணியம் தரக்கூடியது.

    ஒரு மனிதன் இறந்த பின்பு, அவனது ஆன்மாவானது, ஐந்து வகை உடல்களை எடுத்துக் கொள்வதாக சொல்லப்படுகிறது. பார்த்திவம், ஜலியம், ஆக்னேயம், வாயவ்யம், தைஜசம் என்பவை அந்த ஐந்து வகை உடல்கள். இவற்றில் உத்தமம், அதம், மத்திமம் என்று உண்டு.

    இப்படி பிரிவதில் 15 விதமான உடல்கள் இருக்கும். இதில் இறந்த நம் முன்னோர்கள், 'ஜலியம்' என்ற சரீரத்தை எடுத்துக்கொள்கின்றனர். நம் முன்னோர்கள் ஜலிய சரீரம் எடுத்துக் கொள்வதால், அவர்களுக்கு அளிக்கும் உணவானது, ஜல (நீர்) சம்பந்தமாக இருப்பது சிறப்பானதாக சொல்கிறார்கள்.

    எனவே தான், நாம் நம்முடைய பித்ருக்களுக்கு, கங்கை, காவிரி, கோதாவரி, யமுனை உள்ளிட்ட பல புண்ணிய தீர்த்தங்களுக்குச் சென்று, நீர் கொண்டு தர்ப்பணம் செய்வது விசேஷமானதாக கருதப்படுகிறது.

    இங்கே பலருக்கும் ஏற்படக்கூடிய ஒரு சந்தேகம் உண்டு. 'நம் முன்னோர்களில் தாயோ, தந்தையோ அல்லது பாட்டியோ, பாட்டனோ மறுபடியும் பிறவி எடுத்திருந்தால், அவர்களது திருப்திக்காக நாம் செய்யக்கூடிய தர்ப்பணம், சிரார்த்தம் போன்றவற்றால் என்ன பலன்?' என்ற கேள்வி எழும்.

    இறந்தவர்கள் பித்ரு லோகத்தில் இருந்தால், நாம் தர்ப்பணம் கொடுப்பதில் பலன் உண்டு. நாம் செய்யக்கூடிய தர்ப்பணம், சிரார்த்தம் போன்றவற்றை பித்ரு தேவதைகள் எடுத்துச் சென்று, நம் முன்னோர்களுக்கு (பித்ருக்களுக்கு) சேர்க்கின்றனர்.

    அதே சமயம் அவர்கள் அவரவர் செய்த கர்ம வினைப்படி மனிதராகவோ அல்லது பறவையாகவோ, மிருகங்களாகவோ பிறந்திருந்தால், பித்ரு தேவதைகள் அவர்களுக்கு அடுத்த ஜென்மாவிலும் பசி இல்லாமல் இருக்க அந்தந்த சிரார்த்தத்திற்கு ஏற்ப உணவை வழங்குகின்றனர். அந்த வகையில் பித்ரு தேவதைகளின் ஆசி எப்போதும் நமக்கு கிடைக்கப்பெறும்.

    ஆயு: புத்ராந் யஸ: ஸ்வர்கம் கீர்த்திம் புஷ்டிம் பலம் ஸ்ரியம்

    பாந் ஸுகம் த நம் தா'ன்யம் ப்ராப்நுயாத் பித்ரு பூஜநாத்

    என்ற வாக்கியபடி பித்துருக்களுக்கு முறையாக தர்ப்பணம், சிராத்தம் செய்பவர்களுக்கு, நீண்ட ஆயுளும், குழந்தை செல்வமும், புகழும், சுகமும் உண்டாகும்.

    அமாவாசை தினத்தன்று செய்யும் தர்ப்பணத்திற்கு `தர்ச சிரார்த்தம்' என்று பெயர். தந்தை இல்லாதவர்கள் மட்டுமே தில தர்ப்பணம் செய்ய வேண்டும். தலைமுறையில் யாராவது உயிருடன் இருந்தால் (தாத்தா), அவர்களை விட்டுவிட்டு மற்ற மூன்று தலைமுறைகளுக்கு திலதர்ப்பணம் செய்ய வேண்டும்.

    தர்ப்பணம் செய்யும் நாளில் தர்ப்பணம் செய்பவர்கள் கட்டாயம் நீராட வேண்டும். பின்னர் ஏற்கனவே துவைத்து வைத்திருந்த வஸ்திரங்களை அணிந்து கொண்டு தர்ப்பணம் செய்ய வேண்டும். தர்ப்பணத்திற்கு கட்டாயம் கருப்பு எள், தர்ப்பை அவசியம்.

    தெற்கு திசை எமனுக்கு உரியதாக கருதப்படுவதால், முன்னோர்கள் சம்பந்தமான கர்மாக்களை தெற்கு திசையை நோக்கிதான் செய்ய வேண்டும். தர்ப்பையின் நுனியும் தெற்கு நோக்கி இருத்தல் வேண்டும்.

    பொதுவாக ஏதாவது ஒரு ஆசனத்தில், மனையில் அமர்ந்து கொண்டு இதனை செய்ய வேண்டும். கோவில் குளக்கரை போன்ற இடங்களுக்கு செல்லும் பொழுது, ஏதாவது துண்டு விரித்து அதன் மீது அமரலாம்.

    சுப காரியங்களுக்கு இரட்டை படையிலும், பித்ரு காரியங்களுக்கு ஒற்றைப் படையிலும் கையில் அணியும் பவித்திரம் செய்வார்கள். இந்த பவித்திரமானது, பெரும்பாலும் தற்போது கடைகளிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

    அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுப்பவர்கள் அனைவரும், அன்றைய தினம் மட்டுமாவது கட்டாயம் பூணூல் அணிய வேண்டும். அசைவம் சாப்பிடுபவர்கள், குறைந்த பட்சம் ஆடி அமாவாசை மற்றும் அதற்கு முன் தினம், பின்தினம் என்று மூன்று நாட்களாவது அசைவத்தை தவிர்க்க வேண்டும்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் பிரம்மோற்சவம் ஆரம்பம்.
    • திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமாள் தெப்பத் திருவிழா.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆடி-14 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: தசமி இரவு 7.30 மணி வரை பிறகு ஏகாதசி

    நட்சத்திரம்: கார்த்திகை நண்பகல் 1.40 மணி வரை பிறகு ரோகிணி

    யோகம்: சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் பிரம்மோற்சவம் ஆரம்பம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமாள் தெப்பத் திருவிழா. சேலம் செவ்வாய்ப் பேட்டை ஸ்ரீ மாரியம்மன் சிம்ம வாகனத்தில் புறப்பாடு. வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், திருத்தணி, வல்லக்கோட்டை கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம். சிவகாசி ஸ்ரீ விஸ்வநாதர் சிறப்பு அபிஷேகம். சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மகிழ்ச்சி

    ரிஷபம்-லாபம்

    மிதுனம்-செலவு

    கடகம்-பயணம்

    சிம்மம்-நன்மை

    கன்னி-வரவு

    துலாம்- தேர்ச்சி

    விருச்சிகம்-மாற்றம்

    தனுசு- ஆக்கம்

    மகரம்-ஆதாயம்

    கும்பம்-பரிவு

    மீனம்-சாந்தம்

    • ஆறுமுகப் பெருமானின் ஆறுபடை வீடுகளையும் வழிபட்டால் நோய் நீங்கி, துன்பங்கள் அகலுவதுடன் மனம் அமைதி பெறும்.
    • வளமான வாழ்க்கை அமையும்.

    ஆறுபடை வீடுகள் :

    1. திருப்பரங்குன்றம்

    2. திருச்செந்தூர்

    3. பழனி

    4. சுவாமி மலை

    5. திருத்தணி

    6. பழமுதிர்ச்சோலை என்பனவாகும்.

    ஆறுபடை வீட்டுத் தத்துவங்கள் :

    அருணகிரிநாதர் அவருடைய பாடலில் ஆறுபடை வீடுகளை, ஆறு திருப்பதி எனக் குறிப்பிடுகிறார்.

    ஆறுபடை வீடுகளுக்கு பல தத்துவ விளக்கங்களை அளிக்கிறார். நம் உடலிலுள்ள ஆறு ஆதாரங்களின் விளக்க இடங்கள் என்பதாகும்.

    1. திருப்பரங்குன்றம் - மூலாதாரம்

    2. திருச்செந்தூர் - சுவாதிட்டானம்

    3. திருஆவினன்குடி (பழனி) - மணிபூரகம்

    4. திருஏரகம் (சுவாமிமலை) - அநாகதம்

    5. பழமுதிர்ச்சோலை - விசுத்தி

    6. குன்று தோறாடல் (திருத்தணி) - ஆக்ஞை

    மனித உடலிலுள்ள ஆறு ஆதாரங்களை மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞை ஆகிய ஆறுமே ஆறுபடை வீடுகளென யோகிகள் கூறுவர்.

    ஆறுமுகப் பெருமானின் ஆறுபடை வீடுகளையும் வழிபட்டால் நோய் நீங்கி, துன்பங்கள் அகலுவதுடன் மனம் அமைதி பெறும்.

    வளமான வாழ்க்கை அமையும்.

    • படைவீடு என்பது போர் புரியும் படைத் தலைவன் படைகளுடன் தங்கியிருக்கும் இடத்தைக் குறிக்கும்.
    • ஆறுமுகப் பெருமான் சூரபத்மனுடன் போர் புரியும் பொருட்டு தங்கியிருந்த ஒரே இடம் திருச்செந்தூர்.

    கார்த்திகைப் பெண்களினால் வளர்க்கப்பட்ட ஆறு குழந்தைகளையும் சரவணப் பொய்கையில் இருந்து எடுத்து வரும்படி பார்வதியிடம் சிவபெருமான் அருளினார்.

    பார்வதி தேவியும் அதன்படியே ஆறு குமாரர்களையும் ஒரே சமயத்தில் தன்னுடைய இரண்டு திருக்கரத்தினால் வாரி அணைத்து எடுத்தாள்.

    ஆறு உருவங்களும் ஒரே உருவமாகி, ஓருடல், ஆறு தலைகள், பன்னிரு கரங்கள், இரு பாதங்களை உடைய அற்புத உருவமாக மாறியது.

    அழகே வடிவமெடுத்து "கந்தன்" என்னும் நாமத்துடன் ஆறுமுகன் விளங்கினான்.

    ஆற்றுப்படையே ஆறுபடை வீடு :

    படைவீடு என்பது போர் புரியும் படைத் தலைவன் படைகளுடன் தங்கியிருக்கும் இடத்தைக் குறிக்கும்.

    ஆறுமுகப் பெருமான் சூரபத்மனுடன் போர் புரியும் பொருட்டு தங்கியிருந்த ஒரே இடம் திருச்செந்தூர்.

    ஆயினும் ஏனையத் தலங்களும் படைவீடு என்றே அழைக்கப்படுகின்றன.

    நக்கீரர் "திருமுருகாற்றுப் படை" என்னும் தம்முடைய நூலில் ஆறுமுகப் பெருமான் தங்கியிருந்த தலங்களையும் ஆறுமுகப் பெருமானை வழிபடுவோர் எல்லா கஷ்டங்களையும் நீக்கப் பெற்று அருளைப் பெறுகின்றனர் என்றும் அவரது பெருமைகளை கூறி ஆற்றுப் படுத்துகிறார்.

    அதனையட்டி ஆறுமுகனுக்கு ஆற்றுப் படைவீடு என்று அழைக்கப்பட்டு பின்னர் அதுவே ஆறுபடை வீடாயிற்று. கச்சியப்ப சிவாச்சாரியார், அகத்திய மாமுனிவர், ஒளவையார், வள்ளலார் போன்ற எண்ணற்ற புலவர்களும் முருகன் புகழை பாடிப் பேறு பெற்றுள்ளனர்.

    • அப்புதல்வன் எனது நெற்றிக் கண்ணிலிருந்து உண்டாகும் ஆறு தீப்பொறிகளிலிருந்து உரு பெறுவான்.
    • அவன் தங்களின் குறைகளைக் களைந்து காத்தருள்வான்” என்று கூறியருளினார் ஈஸ்வரன்.

    சூரபத்மன் என்னும் அசுரன் பலகாலம் சிவபெருமானை நோக்கிக் கடுமையான தவமிருந்தான்.

    தவத்தின் வலிமையால் சிவபெருமானிடம் நூற்றியெட்டு யுகங்கள் வாழும் ஆயுளும், ஆயிரத்தெட்டு அண்டங்களை ஆளும் அதிகாரத்தையும், சிங்க வாகனமும், இந்திர ஞானத்தேரும், அழியாத வஜ்ஜிர தேகமும், சிவனது சக்தியினாலன்றி வேறு எந்தச் சக்தியினாலும் அழிக்க முடியாத மாபெரும் வரங்களைப் பெற்றான்.

    தான் பெற்ற வரங்களினால் அகங்காரம் கொண்டு, தேவர்களையும் - முனிவர்களையும் சிறையிலடைத்து சித்திரவதை செய்தான் சூரபத்மன்.

    நான்முகன், திருமால், இந்திரன், தேவர்கள் யாவரும் கயிலைவாழ் சிவபெருமானிடம் வந்து, சூரபத்மன் தேவர்களையெல்லாம் சிறையிலடைத்து கொடுமைகள் புரிகின்றான் என்று முறையிட்டனர்.

    சூரபத்மனின் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட வேண்டும் என்றும் சிவபெருமானை வேண்டினர்.

    "தேவர்களே நீங்கள் இனி வருந்த வேண்டாம். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட யாம் ஒரு புதல்வனை ஈந்தருள்வோம்.

    அப்புதல்வன் எனது நெற்றிக் கண்ணிலிருந்து உண்டாகும் ஆறு தீப்பொறிகளிலிருந்து உரு பெறுவான்.

    அவன் தங்களின் குறைகளைக் களைந்து காத்தருள்வான்" என்று கூறியருளினார் ஈஸ்வரன்.

    அதன்படியே சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் சரவணப் பொய்கையில் ஆறு தாமரை மலர்களில் விட்டது, அவை ஆறு குழந்தைகளாக விசாக நட்சத்திரம் கொண்ட திருநாளில் அவதரித்தன.

    அக்கினிப் பொறியாய் இருந்து அவதரித்தமையால் "அக்கினி கர்ப்பன்" என்றும், கங்கையில் தவழ்ந்தமையால் "காங்கேயன்" என்றும், சரவணப் பொய்கையில் தோன்றியமையால் "சரவணன், சரவண பவன்" என்றும் திருப்பெயர்களுடன் ஆறுமுகன் அழைக்கப்படுகிறார்.

    இந்த ஆறு குழந்தைகளையும் ஈசனின் கட்டளைப்படி கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்ததால், கார்த்திகேயன் என்ற திருநாமத்தாலும் அழைக்கப்படுகிறார்.

    திருக்கரத்தில் வேலை ஏந்தியதால் வேலாயுதன் என்றும், ஒளியுடைய வேலாக விளங்கியமையால் கதிர்வேலன் என்றும், தமிழ்த் தெய்வமாக விளங்குவதால் புலவன் என்றும், மயில் மீது ஊர்வதால் மயில் வாகனன் என்றும், சேவற்கொடியினை உடைய காரணத்தால் சேவற்கொடியோன் என்றும், கடம்பமலர் அணிவதால் கடம்பன் என்றும், அன்பர்களின் நெஞ்சத்தில் வாழ்வதால் குகன் என்றும், மாறாத இளமையோன் ஆதலால் குமரன் என்றும் பல்வேறு பெயர்களால் முருகப்பெருமான் போற்றப்படுகிறார்.

    ×