என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.
    • கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு புரட்டாசி-24 (வெள்ளிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : சதுர்த்தி நள்ளிரவு 12.38 மணி வரை. பிறகு பஞ்சமி.

    நட்சத்திரம் : கிருத்திகை இரவு 10.57 மணி வரை. பிறகு ரோகிணி.

    யோகம் : சித்த, மரணயோகம்

    ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சங்கடஹர சதுர்த்தி

    இன்று சங்கடஹர சதுர்த்தி. கார்த்திகை விரதம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். பாபநாசம் ஸ்ரீசிவபெருமான் புறப்பாடு. திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் தங்க மயில் வாகன புறப்பாடு. பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர், திருநாரையூர் ஸ்ரீபொள்ளாப் பிள்ளையார், திருவலஞ்சுழி ஸ்ரீசமேத விநாயகர், திருச்சி உச்சிப்பிள்ளையார், ஸ்ரீமாணிக்க விநாயகர், மதுரை ஸ்ரீமுக்குறுணி பிள்ளையார், உப்பூர் ஸ்ரீவெயிலுகந்த விநாயகர் கோவில்களில் ஹோம அபிஷேகம்.

    கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சனம், மாடவீதி புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம். பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மாற்றம்

    ரிஷபம்-உயர்வு

    மிதுனம்-வெற்றி

    கடகம்-அமைதி

    சிம்மம்-முயற்சி

    கன்னி-மேன்மை

    துலாம்- நலம்

    விருச்சிகம்-நட்பு

    தனுசு- அனுகூலம்

    மகரம்-விவேகம்

    கும்பம்-ஆர்வம்

    மீனம்-ஆதரவு

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    உறவினர்கள் உதவிக்கரம் நீட்டும் நாள். குடும்ப பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும்.

    ரிஷபம்

    செல்வாக்கு உயரும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளொன்றை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் விருப்ப ஓய்வு பெறுவது பற்றி முடிவெடுப்பீர்கள்.

    மிதுனம்

    சந்தித்தவர்களால் சந்தோஷம் அதிகரிக்கும் நாள். நேற்றைய சேமிப்புகள் இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி தரும்.

    கடகம்

    இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும் நாள். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

    சிம்மம்

    வரவும் செலவும் சமமாகும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். எப்படி நடக்கும் என்று நினைத்த காரியமொன்று நல்லபடியாக நடக்கும். ஆன்மிகப் பயணம் உண்டு.

    கன்னி

    நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் பெருமைகள் ஏற்படும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும்.

    துலாம்

    அருகிலிருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். மனக்குழப்பம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல் தோன்றும். பிறரை விமர்சிப்பதால் உறவில் விரிசல் ஏற்படலாம்.

    விருச்சிகம்

    தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். உடல்நலம் சீராகும். தடைபட்ட காரியம் இன்று தானாக நடைபெறும். தொழில் தொடர்பாக எடுத்த முயற்சி வெற்றி தரும்.

    தனுசு

    காலையில் கலகலப்பும், மதியத்திற்கு மேல் சலசலப்பும் ஏற்படும் நாள். கோபத்தில் சில நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்துகொள்ள மாட்டார்கள்.

    மகரம்

    அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலை மோதும் நாள். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் ரீதியாக எடுத்த புது முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.

    கும்பம்

    முன்னேற்றம் கூடும் நாள். நேற்று நடைபெறாத காரியம் இன்று நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும். தொல்லை கொடுத்தவர்கள் விலகுவர். பெரிய மனிதர்களின் சந்திப்பு உண்டு.

    மீனம்

    பகை நட்பாகும் நாள். மறதியால் விட்டுப்போன காரிய மொன்றைச் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக்கொள்வர்.

    • சாயியை தரிசித்து அவர் கிளம்பிய போது அவரை நிறுத்திய சாய் பாபா
    • சரியாக சாய் பாபா கூறிய அந்த மதிய நேரத்தில் ஒரு எருமைமாடு, அந்த பக்தையின் வீட்டிற்கு முன் வந்து நின்றது.

    நம் நாட்டில் எத்தனையோ மகான்கள் வாழ்ந்து மறைந்திருந்தாலும் இன்றும் மக்களால் வழிபடப்படுபவர்கள் ஒரு சிலர் தான். அதிலும் "சீரடியில்" வாழ்ந்து, முக்தி அடைந்த "ஸ்ரீ சாய் பாபாவைப்" பற்றி கேள்விப் படாதவர்கள் இருக்கவே முடியாது.

    இவரது அருளால் தங்களின் பல கஷ்டங்கள் தீர்க்கப்பட்டு மகிழ்வோடு இருக்கும் பக்தர்கள் கோடான கோடி பேர். அப்படி மக்களுக்காக மக்களுடன் வாழ்ந்து முக்தியடைந்த பாபா தன் பக்தன் ஒருவனின் முற்பிறவி ஆசையை நிறைவேற்றிய சம்பவத்தைப் பற்றி இங்கு காண்போம். ஒரு சமயம் "சீரடி" தலத்தில் இருக்கும் "சாய் பாபாவை" தரிசிப்பதற்கு, அவருக்கு முன்னேமே நன்கு பரிட்சயமான ஒரு பக்தை வந்தார்.

    சாயியை தரிசித்து அவர் கிளம்பிய போது அவரை நிறுத்திய சாய் பாபா, அவரிடம் இன்று மதியம் அவர் வீட்டிற்கு ஒரு "எருமைமாடு" விருந்தாளியாக வரப்போவதாகவும், ஆதலால் அது உண்ண "போளிகளை" தயாரிக்குமாறு கூறினார். அதை ஏற்ற அந்த பக்தையும் சாய் பாபா கூறியவாறே, போளிகளை தயார் செய்து வைத்து அந்த எருமைமாட்டிற்காக காத்திருந்தார்.

    சரியாக சாய் பாபா கூறிய அந்த மதிய நேரத்தில் ஒரு எருமைமாடு, அந்த பக்தையின் வீட்டிற்கு முன் வந்து நின்றது. அதைக்கண்டதும் அந்த பக்தை, சாய் பாபா கூறியவாறே அனைத்து போளிகளையும் அந்த எருமைக்கு உண்ணக் கொடுத்தார். அதையெல்லாம் உண்டு முடித்ததும் அந்த எருமை அங்கிருந்து, சற்று தூரம் நடந்து சென்று கீழே விழுந்து இறந்தது.

    இதைக் கண்டதும் அந்த பக்தை திடுக்கிட்டு, நேரே சாய் பாபாவிடம் சென்று இவ்விஷயத்தை கூறினார். அதைக் கேட்ட சாய் பாபா, "இறந்த அந்த எருமைமாடு அதன் முற்பிறவியில் தனது பக்தனாக இருந்ததாகவும், அப்பிறவியில் அந்த பக்தன் இறக்கும் தருவாயில் அவனுக்கு மிகவும் பிடித்த "போளிகளை" உண்ணமுடியாத ஏக்கத்தோடு இறந்து போனதாகவும், இப்போது எருமைமாடாக பிறவியெடுத்திருக்கும் தன் பக்தனின் ஆசையை தான் நிறைவேற்றியதால், அந்த ஆசை நிறைவேறிய மனதிருப்தியோடு அந்த எருமை இறந்து விட்டதாக" கூறினார். இதைக் கேட்ட அந்த பக்தை "எல்லோரின் இம்மையையும், மறுமையையும் அறிந்தவரான" சாய் பாபாவின் கருணையை எண்ணி அவரை உள்ளன்போடு வணங்கினார்.

    • செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது.
    • சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு தேங்காய் மாலை அணிவித்து வழிபடுவதால் நவகிரக தோஷங்கள், நவகிரகங்களால் ஏற்படும் பிரச்சனைகள் தீரும்.

    விநாயகப் பெருமானின் அருளை முழுமையாக பெறுவதற்காக மேற்கொள்ளும் விரதம் தான் சங்கடஹர சதுர்த்தி. நாம் எப்போதும் விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய சங்கடஹர சதுர்த்தியைத் தான் மஹா சங்கடஹர சதுர்த்தியாக வழிபடுவோம். ஆனால் மாதம்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தியை அப்படியே விட்டுவிடுவோம்.

    மஹாசங்கடஹர சதுர்த்தியைப் போலவே மாதம்தோறும் வரும் சதுர்த்தியிலும் விரதம் இருந்து வழிபாடு செய்து விநாயகரின் அருளை முழுமையாகப் பெற முடியும்.

    குறிப்பாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது.அந்த வகையில், நாளை வரும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு எவ்வாறு செய்யலாம் என்று பார்க்கலாம்...

    * சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொள்ள விரும்புபவர்கள் அதிகாலையில் எழுந்து நீராட வேண்டும்.

    * வீடு வாசல் துடைத்து மாக்கோளமிட்டு பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும்.

    * விநாயகரின் சிலைக்கு மலர் அலங்காரம் செய்து விளக்கேற்றி அவரது முகம் பார்த்து மனமுறுகி வேண்டிக்கொள்ள வேண்டும்.

    * பொதுவாக சங்கடஹர சதுர்த்தி வழிபாடு மாலையில் தான் மேற்கொள்ள வேண்டும். அதனால் காலை எழுந்தவுடன் விநாயகரின் முகம் பார்த்து தரிசித்து       மாலையில் சந்திரனை தரிசனம் செய்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

    * வேண்டுதலின் போது விநாயகருக்கு அருகம்புல் படைக்கலாம். விரதம் இருக்க முடிந்தவர்கள் அன்றைய நாள் முழுவதும் உண்ணாமல் விரதம் இருக்கலாம்.

    * விரதம் இருக்க முடியாதவர்கள் பால், பழம், முதலானவற்றை சாப்பிடலாம். இப்படியும் விரதம் இருக்க முடியாதவர்கள் உப்பில்லாத பண்டம் முதலான எளிமையான உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ளலாம்.

    * விரதத்தை முடிக்க மாலைப்பொழுதில் விநாயகருக்கு விளக்கேற்றி, அருகம்புல் சார்த்தி விநாயகருக்கு பிடித்த சுண்டல், கொழுக்கட்டை அல்லது மோதகம் முதலானவற்றை நைவேத்தியமாக படைத்து விரதத்தை முடித்துக் கொள்ளலாம் .



    * பூஜையின் நிறைவில் உங்களால் முடிந்த பிரசாதத்தை அக்கம் பக்கத்தினருக்கு வழங்கலாம்.

    * மாதம்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு தேங்காய் மாலை அணிவித்து வழிபடுவதால் நவகிரக தோஷங்கள் விலகும்.

    * நவகிரகங்களால் ஏற்படும் பிரச்சனைகள் தீரும் என்றும் நம்பப்படுகிறது.

    மேலும் சனி தோஷம், ராகு-கேது தோஷம், சனியால் ஏற்படும் பிரச்சனைகள், திருமணத் தடை உள்ளவர்கள் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை கடைபிடித்தால் சிறந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    • இளம்பெண் வடிவில் வந்த அம்மன் சிரித்து மறைந்தாள்.
    • கனவில் வளையல் போட்டுக் கொள்ள வந்தவள் சமயபுரம் அன்னையே என்பதை உணர்ந்து கொண்ட அவர், சக வியாபாரிகளிடமும் கூறினார்.

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் பிரசித்தி பெற்ற ஆகாச மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆகாச மாரியம்மனுக்கு திருவுருவத் திருமேனி கிடையாது. ஜோதி வடிவில் அம்மனை பக்தர்கள் வழிபடுகின்றனர். சமயபுரம் மாரியம்மனே இந்த கோவிலில் அருவமாக இருந்து ஆட்சி செய்கிறார் என்கிறார்கள்.

    தல வரலாறு

    சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு, திருநறையூரில் கவரைச் செட்டியார்கள் என்ற வணிக சமூகத்தார் பாரம்பரியமாக கண்ணாடி வளையல் வியாபாரம் செய்து வந்தனர். இவர்கள் குதிரையில் ஊர் ஊராக சென்று வியாபாரம் செய்யும் பழக்கத்தை உடையவர்கள். ஒருமுறை, சமயபுரம் கோவிலுக்கு பங்குனி பெருவிழாவின்போது வணிகம் செய்ய வந்தனர். இரவில் அங்கேயே தங்கி, உறங்கினர்.

    அவர்களில் பெரியவர் ஒருவரின் கனவில் தோன்றியசமயபுரம் மாரியம்மன், இளம்பெண் வடிவம் எடுத்து கைகளுக்கு கண்ணாடி வளையல்களை அணிவிக்க கூறினார். அந்த பெரியவரும் அப்பெண்ணின் பொன்னிற கைகளில் வளையல் அணிவிக்க முயன்றார். ஆனால் அணியும்போது வளையல்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக உடைந்து கீழே விழுந்தது. இதனால் வியாபாரி குழப்பமடைந்து, என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார்.

    தெய்வீக அம்சமாக தோற்றமளித்த அப்பெண்ணின் கைகளை வளையல்களால் அலங்கரிக்க முடியவில்லையே என்று வருத்தப்பட்டவர், ''தாயே, வளையல்கள் அனைத்தும் உடைந்து விட்டன. உன் அழகிய கைகளை வளையல்களால் அலங்கரிக்க என்னிடம் இப்போது வளையல்கள் இல்லை. என் ஊருக்கு வந்தால் உன் இரு கைகளுக்கும் விதவிதமான வளையல்கள் அணிவித்து அலங்கரிப்பேன். உனக்கு முல்லை, மல்லிகை மலர்களைச் சூட்டுவேன்'' என்று அன்புடன் வேண்டினார்.

    இதைக்கேட்டு இளம்பெண் வடிவில் வந்த அம்மன் சிரித்து மறைந்தாள். உடனே, வியாபாரி கனவு கலைந்து எழுந்தார். அவரின் அருகில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த வளையல்கள் அனைத்தும் உடைந்திருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். தவிர, அவருடன் வந்திருந்த மற்ற வியாபாரிகளுக்கு அம்மை போட்டிருப்பதையும் கண்டார். இதனால் அந்த பெரியவர் மிகவும் மனம் வருந்தினார். இது சமயபுரத்தாளின் சோதனை என்பதை அறிந்த அவர் கோவிலை நோக்கிக் கைகூப்பி வணங்கி நின்றார்.

    விடிந்ததும் கோவில் அர்ச்சகர் அந்த வியாபாரியிடம், ''ஐயா, வெளியூரிலிருந்து வந்திருக்கும் வளையல் வியாபாரி தாங்கள் தானே? உடைந்த வளையல்களுக்கு பதிலாக இந்த பொற்காசுகளை வைத்துக் கொள்ளுங்கள். சமயபுரத்தாள் இதை உங்களிடம் கொடுக்கச் சொன்னார்'' என்றார். மேலும், அம்மை நோய் தாக்கியவர்களுக்கு மாரியம்மனின் அருட்பிரசாதமான திருநீற்றை வழங்கினார். அவர்கள் அதை நெற்றி மற்றும் உடல் முழுவதும் பூசியவுடன் அம்மை நோய் குணமடைந்து எழுந்தார்கள்.

    கனவில் வளையல் போட்டுக் கொள்ள வந்தவள் சமயபுரம் அன்னையே என்பதை உணர்ந்து கொண்ட அவர், சக வியாபாரிகளிடமும் கூறினார். இதனால் மகிழ்ச்சி அடைந்த வியாபாரிகள், தங்கள் அனைவருக்கும் அன்னை காட்சி தரவேண்டும் என்று வேண்டினார்கள். அதை ஏற்று அன்னை ஆகாயத்தில் அன்ன வாகனத்தில் காட்சி தந்து அருளாசி வழங்கினாள். அன்னையை தரிசித்த வியாபாரிகள், ''தாயே, ஆகாச மாரி.. ஆகாச மாரி..'' என போற்றி புகழ்ந்து வணங்கினர். பின்பு, ''எங்கள் ஊருக்கு வந்து அருள வேண்டும்'' என்று ஆகாச மாரியம்மனை மனமுருக வேண்டினார்கள்.

    இதைக் கேட்ட சமயபுரம் மாரியம்மன் அவர்களிடம், ''உங்கள் ஊர் எது?'' என்று கேட்க, ''நளிர்வாய் முல்லை முறுவலிக்கும் திருநறையூர்'' என்றனர். அவர்களது பக்தியை மெச்சிய அன்னை, ''முல்லைக்கும், மல்லிக்கும், கை வளையல்களுக்கும் ஆண்டுதோறும் வைகாசி மாத அமாவாசைக்கு அடுத்த வெள்ளிக்கிழமை சமயபுரத்திலிருந்து ஆகாச மார்க்கமாக திருநறையூருக்கு வந்து, பத்து நாட்கள் தங்கிவிட்டு மீண்டும் சமயபுரம் திரும்பி விடுவேன்'' என்று அருளினாள். சமயபுரத்தாள் சொன்னதுபோல் ஒவ்வொரு வருடமும் திருநறையூர் தலம் வந்து தங்கி அலங்காரத்துடன் காட்சி தந்து அருள்புரிகிறாள் என்பது ஐதீகம்.

    வெள்ளிக்குடத்துடன் ஆகாச மாரியம்மன்

     

    வைகாசி திருவிழா

    இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், வைகாசி மாதம் அமாவாசையை அடுத்த வெள்ளிக்கிழமை தொடங்கி, பதிமூன்று நாட்களுக்கு திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. அப்போது சமயபுரம் மாரியம்மன் ஆகாய மார்க்கமாக இங்கு வந்து, திருவிழாவுக்கு என்று செய்யப்படும் விக்ரகத்தில் சேர்ந்து தரிசனம் கொடுப்பதாக ஐதீகம். இந்த ஊர் மக்கள் அளிக்கும் கண்ணாடி வளையல்கள், மல்லிகை, முல்லை பூக்களை ஏற்றுக் கொள்வதற்காகவே சமயபுரத்தாள் ஆகாய மார்க்கமாக இந்த ஊருக்கு வந்து திருவிழாவில் கலந்து கொள்கின்றாள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    திருவிழா நடைபெறும் அனைத்து நாட்களும் செப்புக் குடத்தில் கலசம் வைக்கப்பட்டு விழா எடுக்கப்படுகின்றது. கலச நீரும், அம்மனுக்குச் சாத்தப்படும் எலுமிச்சை மாலையில் உள்ள எலுமிச்சம் பழமும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. திருவிழாவில் தர்ப்பை புல்லால் அம்மன் உருவாக்கப்படுகிறார். ஒவ்வொரு நாளும் லட்சுமி, சரஸ்வதி, மதனகோபாலன் போன்ற பல்வேறு வடிவங்களில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு காட்சி தருகிறாள். கடைசி நாளில் ராஜராஜேஸ்வரி வடிவத்தில் உச்சம் பெறுகிறாள்.

    பதிமூன்றாம் நாள் அம்மன் நின்ற கோலத்தில் தேரில் சமயபுரத்திற்கு எழுந்தருள்வதுடன் விழா நிறைவு பெறுகிறது. அச்சமயம் அம்மன் கையில் வெள்ளிக்குடம் சுமந்தவாறு வீதியுலா நடைபெறும். இதன்மூலம், அம்மன் சமயபுரம் செல்கிறாள் என்பது நம்பிக்கை. இக்கோவிலில், வைகாசி மாதம் நடைபெறும் திருவிழாவை தவிர மற்ற நாட்களில் அம்மன் உருவமற்றவராக அதாவது சூட்சும ரூபத்தில் இருக்கிறார்.

    கோவில் தோற்றம்

     

    திருமணத் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்குள்ள அம்மனை வேண்டிக்கொள்கின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், அம்மனுக்கு மல்லிகைப் பூ, வளையல்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். மேலும், காவடிகள், அங்கப்பிரதட்சணம், மாவிளக்கு ஏற்றுதல் போன்ற பல்வேறு நேர்த்திக்கடனை செலுத்தி வழிபடுகிறார்கள்.

    அமைவிடம்

    கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 10 கிலோமீட்டர் தொலைவில் நாச்சியார்கோவிலில் (திருநறையூர்) அமைந்துள்ளது, ஆகாச மாரியம்மன் கோவில்.

    • திருக்குற்றாலம் ஸ்ரீ குற்றாலநாதர் புறப்பாடு.
    • திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு புரட்டாசி-23 (வியாழக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : திருதியை பின்னிரவு 3.02 மணி வரை பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம் : பரணி நள்ளிரவு 12.30 மணி வரை பிறகு கிருத்திகை

    யோகம் : சித்த, மரணயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம் : தெற்கு

    நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சனம்

    சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருக்குற்றாலம் ஸ்ரீ குற்றாலநாதர் புறப்பாடு. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமான் அபிஷேகம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சனம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு.

    திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சனம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திரரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவானுக்கு கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நற்செயல்

    ரிஷபம்-இன்பம்

    மிதுனம்-போட்டி

    கடகம்-சுபம்

    சிம்மம்-ஆதரவு

    கன்னி-அமைதி

    துலாம்- புகழ்

    விருச்சிகம்-நன்மை

    தனுசு- தனம்

    மகரம்-நிறைவு

    கும்பம்-சிறப்பு

    மீனம்-உறுதி

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    பிரச்சனைகள் தீரும் நாள். புதிய தொழில் முயற்சி வெற்றி தரும். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

    ரிஷபம்

    நன்மைகள் நடைபெறும் நாள். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் பதவிகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றும்.

    மிதுனம்

    வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டும் நாள். அடுத்தவர் நலனில் அக்கறை செலுத்தியதற்கு ஆதாயம் உண்டு. குழப்பங்கள் அகலும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

    கடகம்

    அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். வரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும்.

    சிம்மம்

    நினைத்தது நிறைவேறும் நாள். மதிநுட்பத்தால் மகத்தான காரியங்களைச் செய்து மகிழ்வீர்கள். வீடு மாற்றங்கள் உறுதியாகலாம். இல்லத்தாருடன் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும்.

    கன்னி

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். எதிரிகளின் பலம் கூடும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாது. வீண் விரயங்கள் உண்டு.

    துலாம்

    வளர்ச்சி கூடும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டமொன்றை தீட்டுவீர்கள். சொத்துகளில் ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.

    விருச்சிகம்

    திட்டமிட்ட காரியம் சிறப்பாக நடைபெறும் நாள். பேச்சுத் திறமையால் பிரபலஸ்தர்களிடம் காரியமொன்றை சாதித்துக் கொள்வீர்கள். விட்டுப் போன வரன்கள் மீண்டும் வரலாம்.

    தனுசு

    மனக்குழப்பம் அகலும் நாள். நட்பு வட்டம் விரிவடையும். மாற்று இனத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியை கொண்டு வந்து சேர்ப்பர். உத்தியோகத்தில் கெடுபிடி அதிகரிக்கும்.

    மகரம்

    பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும் நாள். பிள்ளைகளின் சுபகாரிய பேச்சுகள் முடிவாகும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். நேற்று சந்தித்தவர்களால் சில நன்மைகள் உண்டு.

    கும்பம்

    புகழ்கூடும் நாள். பொருளாதார முன்னேற்றம் உண்டு. மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள்.

    மீனம்

    தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வருவர். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். வருமானம் திருப்தியளிக்கும்.

    • வேடன் உருவில் வந்த முருகப்பெருமான், அருணகிரிநாதருக்கு வழிகாட்டியதாக கூறப்படுகிறது.
    • எந்த முருகன் கோவிலிலும் இல்லாத வகையில், நைவேத்தியமாக சுருட்டு படைக்கும் பழக்கம் இக்கோவிலுக்கு உண்டு.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது, விராலிமலை முருகன் கோவில். மலைமேல் அமைந்துள்ள இந்த கோவிலில் முருகப்பெருமான் வள்ளி - தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து அருள்பாலித்து வருகிறார்.

    தல வரலாறு

    ஒரு காலத்தில் இந்தப் பகுதி குரா எனும் ஒரு வகை மரங்கள் நிறைந்த காடாக இருந்துள்ளது. ஒரு முறை வேடன் ஒருவன் வேட்டையாட வந்தபோது, வேங்கை ஒன்று அவன் கண்ணில் பட்டது. அவன், அதனை வேட்டையாட வேண்டும் என்பதற்காக விரட்டி சென்றான். அப்போது, அந்த வேங்கை வேகமாக ஓடி ஒரு குரா மரத்துக்கு அருகில் வந்ததும் காணாமல் மறைந்தது. இதனைக் கண்ட வேடன் ஆச்சரியப்பட்டான்.

    அப்போது, திடீரென்று அங்கு தோன்றிய மயிலும், விபூதி வாசனையும் அங்கே முருகப்பெருமான் சூட்சுமமாக இருப்பதை உணர்த்தியது. பிறகு, ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, அவ்விடத்தை ஆறுமுகனாரின் உறைவிடமாகக் கொண்டு முருகனின் விக்ரகத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினர் என்று கூறப்படுகிறது.

    ஒரு முறை அருணகிரி நாதர் திருச்சியில் உள்ள வயலூர் தலத்துக்கு வந்தார். அங்குள்ள முருகப்பெருமானை திருப்புகழ் பாடி விட்டு புறப்படும்போது, 'விராலிமலைக்கு வா' என்று முருகப்பெருமான் அசரீரியாக அழைத்தார். இதையடுத்து, விராலிமலையை நோக்கி பயணித்த அருணகிரிநாதருக்கு விராலிமலை முருகன் இருக்கும் இடம் புலப்படவில்லை. அப்போது வேடன் உருவில் வந்த முருகப்பெருமான், அருணகிரிநாதருக்கு வழிகாட்டியதாக கூறப்படுகிறது. பின்பு அருணகிரிநாதர், விராலிமலை முருகப்பெருமானை வழிபட்டு அஷ்டமா சித்தி பெற்றார் என்கிறது தல புராணம்.

    அருணகிரிநாதர், திருப்புகழில் இத்தலத்து முருகப் பெருமானை 18 முறை மனமுருகிப் பாடியுள்ளார். வசிஷ்டரும், அவரது மனைவி அருந்ததி தேவியாரும் இங்கு வந்து முருகப்பெருமானை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றதாக கூறப்படுகிறது.

     

    கோவில் அமைப்பு

    கோவில் 207 படிகளுடன் மலை உச்சியில் அமைந்துள்ளது. கோவிலில் இடும்பன், மீனாட்சி சுந்தரேசுவரர், சந்தானக்கோட்டம், காசி விஸ்வநாதர் விசாலாட்சி ஆகியோரது சன்னிதிகள் உள்ளன. கருவறையில் முருகப்பெருமான், சுமார் பத்தடி உயரத்தில் கம்பீரமான தோற்றத்துடன் காட்சி தருகிறார். இவர் ஆறுமுகங்கள், பன்னிரு கரங்களுடன், வள்ளி - தெய்வானை சமேதராக கல்யாண திருக்கோலத்தில் அருள்புரிகின்றார். பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, அகத்தியர், அருணகிரிநாதர், சண்டிகேஸ்வரர், பைரவர் சன்னிதிகளும் உள்ளன.

    இந்த ஆலயத்தில் காற்றாடி மண்டபம் ஒன்று அமைந்துள்ளது. மலை அடிவாரத்தின் தென்பகுதியில் சரவணப் பொய்கை உள்ளது.

    விழாக்கள்

    கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், கந்த சஷ்டித் திருவிழா (சூரசம்காரம்), கார்த்திகை தீபம், நவராத்திரி விழா, தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்பட பல்வேறு திருவிழாக்கள் வெகுவிமரிசையாக நடைபெறும்.

    குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், நேர்த்திக்கடனாக தங்களுக்கு குழந்தை பிறந்ததும் இங்கு வந்து ஆறுமுகனிடம் குழந்தையை கொடுத்து விடுவர். பின்பு குழந்தையின் தாய்மாமன் அல்லது சிற்றப்பன்மார்கள் மூலம் ஆறுமுகனிடம் தவிட்டைக் கொடுத்து, குழந்தையை பெற்றுக்கொள்கின்றனர்.

    எந்த முருகன் கோவிலிலும் இல்லாத வகையில், நைவேத்தியமாக சுருட்டு படைக்கும் பழக்கம் இக்கோவிலுக்கு உண்டு. ஒரு சமயம் கருப்பமுத்து என்ற பக்தர், பெருங்காற்று, மழைக்கு இடையில் வீட்டுக்கு செல்ல முடியாமல் குளிரில் நடுங்கி நின்றார். அப்போது அவருக்கு அருகில் நின்ற ஒருவர் குளிருக்கு இதமாக இருக்கும் என சுருட்டு ஒன்றை கொடுத்துள்ளார். பின்பு இருவரும் ஆற்றை கடந்து செல்லும்போது, அருகில் இருந்த நபரை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர் கோவிலுக்கு சென்று பார்த்தபோது, அங்கு முருகப்பெருமானுக்கு முன்பாக சுருட்டு இருப்பதைகண்டு, தம்மோடு வந்தது முருகப்பெருமான் என்பதை உணர்ந்து கொண்டார். அதன்பின்பு தான் கோவிலில் சுருட்டு படைக்கும் வழக்கம் ஏற்பட்டதாக கூறுகிறார்கள்.

    கோவில், காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    திருச்சியில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவிலும், புதுக்கோட்டையில் இருந்து வடமேற்கே 40 கிலோமீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது. திருச்சி பேருந்து நிலையத்தில் இருந்து கோவிலுக்குச் செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    சந்தோஷம் கூடும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்து கொள்வீர்கள். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சிகள் கைகூடும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும்.

    ரிஷபம்

    நட்பு வட்டம் விரிவடையும் நாள். பொருளாதார நிலை உயரும். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். அத்தியாவசியப் பொருட்களை வாங்கி சேர்க்க முன்வருவீர்கள்.

    மிதுனம்

    முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். ஆரோக்கியம் சீராகும். பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும்.

    கடகம்

    தன்னம்பிக்கையோடு பணிபுரிந்து தடைகளை அகற்றிக்கொள்ள வேண்டிய நாள். கொடுக்கல், வாங்கல்களில் ஏற்பட்ட குழப்பங்கள் மாறும். விட்டுப்போன விவாக பேச்சுகள் மீண்டும் வந்து சேரும்.

    சிம்மம்

    யோகமான நாள். பழைய வாகனத்தைக் கொடுத்து புதிய வாகனம் வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் குரலுக்குச் செவிசாய்ப்பர்.

    கன்னி

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். பொறுப்புகள் அதிகரிக்கும். கையிருப்பு கரையும். வாகன பழுதுச்செலவுகளால் வாட்டம் ஏற்படும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

    துலாம்

    கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் நாள். வருமானம் திருப்தி தரும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க கொஞ்சம் அலைச்சல்களை சந்திப்பீர்கள்.

    விருச்சிகம்

    தொழில் ரீதியாக எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும் நாள். குடும்ப உறுப்பினர்களின் குறைகளை தீர்க்க முன்வருவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.

    தனுசு

    சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டிய நாள். உடன்பிறப்புகள் வழியில் நல்ல தகவல் வரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மனதை புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது.

    மகரம்

    செல்வநிலை உயரும் நாள். கடமையை நிறைவேற்றுவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும் பதவிகளும் கிடைக்கும். பயணம் பலன் தரும்.

    கும்பம்

    யோகமான நாள். காரிய வெற்றிக்கு கண்ணியமிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிறருக்காக பொறுப்பு சொல்லி வாங்கிக்கொடுத்த தொகை வந்துசேரும்.

    மீனம்

    ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். அதிகாலையிலேயே நல்ல தகவல் வரலாம். தொழிலில் கூடுதல் லாபம் உண்டு. பொதுவாழ்வில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
    • மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு புரட்டாசி-22 (புதன்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : பிரதமை காலை 7.40 மணி வரை பிறகு துவிதியை பின்னிரவு 3.48 மணி வரை பிறகு திருதியை

    நட்சத்திரம் : அசுவினி பின்னிரவு 2.08 மணி வரை பிறகு பரணி

    யோகம் : மரண, சித்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்மருக்கு திருமஞ்சனம்

    திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வேங்கடேசப் பெருமாள் ஆடும் பல்லக்கில் பவனி. ருத்தர பசுபதியார் குரு பூஜை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்மருக்குத் திருமஞ்சனம். திருநெல்வேலி சமீபம் 4-ம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை தலத்தில் திருமஞ்சனம். கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு.

    விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் அபிஷேகம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பக்தி

    ரிஷபம்-நன்மை

    மிதுனம்-சிந்தனை

    கடகம்-பரிசு

    சிம்மம்-உற்சாகம்

    கன்னி-வரவு

    துலாம்- உயர்வு

    விருச்சிகம்-சாந்தம்

    தனுசு- லாபம்

    மகரம்-பயணம்

    கும்பம்-நற்செயல்

    மீனம்-புகழ்

    • அண்டத்தைப் பாதுகாப்பதற்காக விஷ்ணு எடுத்த முதல் அவதாரம் இதுவாகும்.
    • கலியுகத்தின் இறுதியில் தர்மத்தை நிலைநாட்டவும், அதர்மத்தை அழிக்கவும் எடுக்கப்படும் பத்தாவது அவதாரம்.

    பெருமாளின் அவதாரங்கள் என்பவை பூமியில் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டவும், பக்தர்களைக் காக்கவும் பகவான் விஷ்ணு எடுக்கும் வடிவங்கள் ஆகும். விஷ்ணுவின் பத்து முக்கிய அவதாரங்கள் தசாவதாரங்கள் என அழைக்கப்படுகின்றன.

    அதன் விவரம் வருமாறு:-

    1. மச்சாவதாரம், 2. கூர்மாவதாரம், 3. வராக அவதாரம், 4. நரசிங்க அவதாரம், 5. வாமன அவதாரம், 6. பரசுராம அவதாரம், 7. ராம அவதாரம், 8. பலராம அவதாரம், 9. கிருஷ்ண அவதாரம், மற்றும் 10. கல்கி அவதாரம்.

    மச்ச அவதாரம் (மீன்):

    அண்டத்தைப் பாதுகாப்பதற்காக விஷ்ணு எடுத்த முதல் அவதாரம் இதுவாகும்.

    கூர்ம அவதாரம் (ஆமை):

    பிரபஞ்சம் புதைந்திருந்தபோது அதைப் பாதுகாக்கவும், சமுத்திர மந்தனத்தின் போது மந்தர மலையைத் தாங்கவும் இந்த அவதாரம் எடுக்கப்பட்டது.

     

    வராக அவதாரம் (பன்றி):

    பூமியை இரண்யாட்சன் என்ற அரக்கனிடம் இருந்து மீட்டெடுத்த அவதாரம் இது.

    நரசிங்க அவதாரம் (சிங்க-மனிதன்):

    இரண்யகசிபு என்ற அரக்கனை வதம் செய்து பக்தன் பிரகலாதனைக் காத்த அவதாரம்.

    வாமன அவதாரம் (குள்ள உருவம்):

    மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அழித்து, உலகை மூன்று அடிகளால் அளந்த குள்ள உருவம் எடுத்த அவதாரம்.

    பரசுராம அவதாரம்:

    பிராமணர்களைக் கொன்ற சத்திரியர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய அவதாரம்.

    ராம அவதாரம்:

    தீய சக்திகளை அழித்து, அறநெறியுடன் வாழ்ந்த மனித உருவம் எடுத்த அவதாரம்.

    பலராம அவதாரம்:

    பலத்தின் அடையாளமாகத் திகழ்ந்த அவதாரம்.

    கிருஷ்ண அவதாரம்:

    கீதை போதனைகளை உலகுக்கு வழங்கிய, அன்பையும் பக்தியையும் போதித்த அவதாரம்.

    கல்கி அவதாரம்:

    கலியுகத்தின் இறுதியில் தர்மத்தை நிலைநாட்டவும், அதர்மத்தை அழிக்கவும் எடுக்கப்படும் பத்தாவது அவதாரம்.

    • திருச்செந்தூரில் வீரபாகு தேவர் காவல் தெய்வமாக உள்ளார்.
    • மதிய உச்சிக்கால பூஜை முடிந்த பின் ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துச் சென்று கடலில் கரைக்கப்படுகிறது.

    முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் கடற்கரையில் அமைந்துள்ள ஒரே கோவில் திருச்செந்தூர் மட்டுமே ஆகும். படையெடுத்துச் செல்லும் வீரர்கள் தங்கும் இடம்தான் படைவீடாகும்.

    முருகப்பெருமான், சூரபத்மனை வதம் செய்வதற்காக சென்றபோது வீரர்கள் தங்கியிருந்த இடம்தான் தற்போதைய திருச்செந்தூர் கோவிலாகும்.

    திருச்செந்தூரில் வீரபாகு தேவர் காவல் தெய்வமாக உள்ளார். இதனால் இவ்விடத்திற்கு 'வீரபாகு ஷேத்திரம்' என்ற பெயரும் உண்டு. வீரபாகுவிற்கு பூஜைகள் நடத்தப்பட்ட பிறகே மூலவருக்கு பூஜைகள் நடைபெறுகின்றன.

    முருகனின் அவதார நோக்கமே அசுரனை அழிப்பதுதான். திருச்செந்தூரில்தான் அந்த அவதார நோக்கம் பூர்த்தியானது. எனவே, இத்தலம் தெய்வீக சிறப்பும், தனித்துவமும் கொண்டதாகும்.

    முருகப்பெருமானின் வெற்றிவேல், மாமரமாக நின்ற சூரபத்மனை பிளவுப்படுத்திய இடம் திருச்செந்தூரிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, 'மாப்பாடு' என்னும் இடமாகும். இந்த இடம் தற்போது 'மனப்பாடு' என்று அழைக்கப்படுகிறது.

    திருச்செந்தூரில் முருகன் சேவல் கொடியுடனும், பார்வதி தேவி கொடுத்த வேலுடனும் சூரபத்மனை கொன்று வெற்றிக்கொடியுடன் மயில் வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.

     

    திருச்செந்தூரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என்ற 2 மூலவரும் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அளவாய்பெருமான் என்ற 4 உத்சவர்களும் உள்ளனர்.

    இக்கோவிலுக்கு செல்லும் வழியில் தூண்டுகை விநாயகர் கோவில் உள்ளது. அவரை வணங்கிய பிறகே முருகனை வணங்கச் செல்ல வேண்டும்.

    திருச்செந்தூர் கோவில் கருவறை உட்பகுதியில் சூரிய லிங்கம், சந்திர லிங்கம் என்று 2 லிங்கங்கள் உள்ளன. மகா மண்டபத்தில் உள்ள சண்முகர் மண்டபத்தில் ஆத்ம லிங்கம் உள்ளது. திருச்செந்தூர் முருகன் இருக்கும் இடம், 'மணியடி' என்று சொல்லப்படுகிறது. இங்கு நின்று முருகனை தரிசிப்பது சிறந்தது.

    மூலவருக்குப் பின்புறம் சுரங்க அறை உள்ளது. இங்கே முருகன் பூஜித்த பஞ்ச லிங்கங்களை தரிசிக்கலாம். இந்த அறைக்கு 'பாம்பறை' என்ற பெயரும் உண்டு. மூலவருக்கு மேல் ஒரு வெள்ளி பாத்திரத்தில் பால் நிரப்பி அதில் துவாரம் அமைத்து பாலை மூலவர் மீது விழச்செய்து சுமார் 3 மணி நேரம் நடைபெறும் தாராபிஷேகம் விசேஷம் வாய்ந்தது.

    இரவு 9.45 மணிக்கு சுவாமிக்கு திரையிட்டு தீபாராதனை காட்டுகின்றனர். பிறகு ஆறுமுகனின் முன் பள்ளியறை சொக்கரை வைத்து தீபாராதனை காட்டுவர். இதை ரகசிய தீபாராதனை என்கிறார்கள். உலோகத் திருமேனியான முருகப்பெருமானுக்கு ஆண்டுக்கு 36 முறையே அபிஷேகம் நடைபெறுகிறது. இதில் விபூதி அபிஷேகம் சிறப்பு வாய்ந்தது.

    மூலவர் யோக நிஷ்டையில் உள்ளவர் என்பதால், அவருக்கு செய்யப்படும் நெய் வைத்தியத்தில் காரம், புளி சேர்ப்பதில்லை. சண்முகருக்கான நைவேத்தியத்தில் காரம், புளி சேர்ப்பதுண்டு.

    தினமும் மதிய உச்சிக்கால பூஜை முடிந்த பின் ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துச் சென்று கடலில் கரைக்கப்படுகிறது. இதற்கு, 'கங்கை பூஜை' என்று பெயர். இக்கோயிலில் தினமும் ஒன்பதுகால பூஜை நடைபெறுகிறது.

    பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு கோவில் பகல் முழுவதும் திறந்து வைக்கப்படுகிறது. செந்தில் ஆண்டவர் கோயில் பிரணவத்தை அடிப்படையாக கொண்டு வாஸ்து லட்சணத்தோடு கட்டப்பட்டுள்ளது. கோவில் வடக்கு தெற்காக 300 அடி நீளமும் கிழக்கு மேற்காக 214 அடி அகலத்துடனும் அமைந்துள்ளது. கோபுரம் யாழி மண்டபத்தின் மேல் 137 அடி உயரமும் 90 அடி நீளமும் 65 அடி அகலத்துடனும் திகழ்கிறது. இதன் 9-வது மாடத்தில் கடிகார மாளிகை உள்ளது. இத்தலத்தின் சிறப்பம்சம் இலை விபூதி பிரசாதம். செந்தூரில் தேவர்கள் பன்னீர் மரங்களாக இருப்பதாக ஐதீகம். பன்னீர் இலைகளில் விபூதி வைத்து தரப்படுவதே விபூதி பிரசாதமாகும்.

    ×