என் மலர்
அமெரிக்கா
- சைபர் தாக்குதல் மூலம் ஆஸ்பத்திரிகளின் தகவல்களை திருட வாய்ப்பு இருந்ததால் அதை தடுக்க, சர்வர்கள் ஆப்லைனில் வைக்கப்பட்டது.
- சைபர் தாக்குதல் நடத்தப்பட்ட ஆஸ்பத்திரிகளில் இருந்த நோயாளிகள் மற்ற ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளின் இணைய தளங்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது.
கலிபோர்னியா, கனெக்டிகட், பென்சில்வேனியா, ரோட் தீவு உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் இந்த சைபர் தாக்குதல் நடந்தது.
இதனால் ஆஸ்பத்திரிகளின் கணினி அமைப்புகள் முடங்கியது. இதையடுத்து மருத்துவ சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. அறுவை சிகிச்சைகள், வெளி நோயாளிகளுக்கான சிகிச்சை மற்றும் பிற சேவைகள் நிறுத்தப்பட்டன. சில அவசர அறைகள் மூடப்பட்டன.
சைபர் தாக்குதல் மூலம் ஆஸ்பத்திரிகளின் தகவல்களை திருட வாய்ப்பு இருந்ததால் அதை தடுக்க, சர்வர்கள் ஆப்லைனில் வைக்கப்பட்டது. இதையடுத்து சைபர் தாக்குதலில் இருந்த கணினி அமைப்புகளை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, சைபர் தாக்குதல் பற்றி அறிந்ததும் கணினி அமைப்புகள் ஆப்லைனில் வைக்கப்பட்டது. சைபர் பாதுகாப்பு நிபுணர்களின் உதவியுடன் விசாரணையை நடத்தி வருகிறோம்.
நோயாளிகளின் அவசர தேவைகளை நிவர்த்தி செய்வதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். விரைவாக இயல்பான செயல்பாடுகளுக்கு திரும்புவதற்கு செயல்படுகிறோம்.
சைபர் தாக்குதல் நடத்தப்பட்ட ஆஸ்பத்திரிகளில் இருந்த நோயாளிகள் மற்ற ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சைபர் தாக்குதலை நடத்தியது யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது என்றனர்.
- வீட்டில் அவரை தவிர வேறு யாரும் இல்லாதால் என்ன செய்யலாம் என யோசித்தார்.
- மர்ம வாலிபர் அதை வாங்கி மளமளவென சாப்பிட்டார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் உள்ள மெயினி என்ற இடத்தில் வசித்து வருபவர் மார்ஜோரி பெர்கின்ஸ் (வயது 87) .சம்பவத்தன்று இவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு 2 மணி அளவில் விழித்துப்பார்த்தார். அப்போது அவர் படுக்கையின் அருகே மர்ம மனிதன் நின்று கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அந்த மர்ம வாலிபர் தான் அணிந்து இருந்த சட்டை, மற்றும் பேண்ட்டை கழற்ற முயன்றான். அவனது சட்டைப்பையில் மதுபாட்டில் மற்றும் கத்தி இருந்தது. மார்ஜோரியை வெட்ட போவதாகவும் அவன் மிரட்டினான். இதை பார்த்த மார்ஜோரி பெர்கின்ஸ் சத்தம் போட முயன்றார். அவனை திருப்பி தாக்குவதற்கான பலமும் அவரிடம் இல்லை.
வீட்டில் அவரை தவிர வேறு யாரும் இல்லாதால் என்ன செய்யலாம் என யோசித்தார். அந்த சமயம் மர்மவாலிபர் தனக்கு அதிகமாக பசிக்கிறது. வீட்டில் சாப்பாடு ஏதாவது இருந்தால் கொடுங்கள் என கெஞ்சினான்.
அவன் வீடு புகுந்து திருடதான் வந்துள்ளான் என நினைத்த மார்ஜோரிக்கு அவன் பசிக்கிறது என சொன்னதும் சற்று மனம் இறங்கியது. உடனே அவனை சமையல் அறைக்கு அழைத்து சென்றார்.அங்கிருந்த வேர்கடலை மற்றும் தேன் உள்ளிட்ட உணவு வகைகளை கொடுத்தார்.
ஏற்கனவே கோர பசியில் இருந்த மர்ம வாலிபர் அதை வாங்கி மளமளவென சாப்பிட்டார். பின்னர் அவன் மார்ஜோரி பெர்கின் சுக்கு நன்றி தெரிவித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டான். வீட்டில் இருந்த எந்த பொருளையும் அவன் திருடவில்லை. இது தொடர்பாக மார்ஜோரி தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.
- யார் அதிக பாம்புகளை கொல்கிறார்களோ அவரே வெற்றி பெற்றவர்
- வெல்பவர்களுக்கு பரிசுத் தொகை ரூ.25 லட்சம்
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலத்தில் பாம்பு பிடித்து கொல்லும் ஒரு வினோத போட்டி நடைபெறுகிறது.
இந்த போட்டிக்கு உலகின் பல நாடுகளிலிருந்தும் போட்டியாளர்கள் ஆர்வமாக வந்து பங்கேற்கின்றனர்.
இப்போட்டியில் பங்கு பெறும் போட்டியாளர்கள், பர்மிய வகை மலைப்பாம்புகளை பிடித்து கொல்ல வேண்டும். இதில், யார் அதிக பாம்புகளை கொல்கிறார்களோ அவர்கள் வெற்றியாளராக கருதப்படுகின்றனர்.
புளோரிடா பைதான் சவால் எனும் இந்த போட்டியில் ஒவ்வொரு ஆண்டும் கனடா, பெல்ஜியம் மற்றும் லாட்வியா நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்கின்றனர்.
16 அடி வரை நீளமுள்ள இந்த மலைப்பாம்புகளை பிடிக்க அதிக திறனும் துணிச்சலும் தேவைப்படும். ஆனாலும், ஆபத்தான இந்த போட்டியில் பங்கு பெறும் போட்டியாளர்கள், இதில் கிடைக்கும் புகழ் மற்றும் பணத்தால் ஈர்க்கப்பட்டு கலந்துக்கொள்கின்றனர்.
போட்டியில் வெல்பவர்களுக்கு, பரிசுத் தொகை சுமார் ரூ.25 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புளோரிடாவின் தெற்கு பகுதியில் 20 ஆயிரம் சதுர கி.மீ பரப்பளவில் உள்ள எவர்க்ளேட்ஸ் சதுப்புநில பகுதி. அங்கு அதிகமாக உலவும் பர்மிய மலைப்பாம்புகள் பிற உயிரினங்களை கொன்று, சுற்றுசூழல் சமநிலையை சேதப்படுத்துவதாகவும், அதனால் இந்த போட்டி அவசியமானது என உள்ளூர் வன மற்றும் இயற்கை பாதுகாவலர்கள் கூறுகின்றனர்.
- ஞாபக சக்தி, வாய்மொழி கற்றல் திறன், திட்டமிடல், மற்றும் கவனம் மாற்றும் திறன் உட்பட பல நரம்பியல்-உளவியல் திறன்கள் பரிசீலிக்கப்பட்டது
- நுகரும் தன்மை குறித்து குறைவான அளவிலேயே ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன
ஐம்புலங்களின் செயல்பாடுகளில் ஒலி, ஒளி சம்பந்தமான ஆராய்ச்சிகள் உலகில் அதிகம் நடைபெற்று வருகிறது. ஆனால், மனிதர்களின் நாசியையும், அதன் நுகரும் தன்மை குறித்தும் குறைவான அளவிலேயே ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள இர்வின் கலிபோர்னியா பல்கலைகழகத்தில் ஒரு ஆராய்ச்சி நடைபெற்றது. இந்த ஆய்வில் 20 பேர் பங்கேற்றனர்.
முதலில் இவர்களின் ஞாபக சக்தி, வாய்மொழி கற்றல் திறன், திட்டமிடல், மற்றும் கவனம் மாற்றும் திறன் உடபட பல நரம்பியல்-உளவியல் செயல்பாடுகள் கவனிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.
பிறகு ஆராய்ச்சியாளர்கள் இவர்களை இரு குழுக்களாக பிரித்தனர்.
அவர்களில் ஒரு குழுவினரிடம் ரோஜா, ஆரஞ்சு, யூகலிப்டஸ், எலுமிச்சை, மிளகுக்கீரை, ரோஸ்மேரி மற்றும் லாவெண்டர் முதலிய வாசம் கொண்ட இயற்கையான எண்ணெயை தொடர்ந்து நுகர வைத்தனர். ஒரு கருவியை கொண்டு காற்றில் செலுத்தப்படும் இந்த வாசத்தை தினமும் இரவில் 2 மணி நேரம், வீட்டில் பல இடங்களிலிருந்தும் அவர்கள் முகரும்படி செய்யப்பட்டது.
இதே போன்று தினமும் 2 மணி நேரம், மற்றொரு குழுவினரிடம் தரமான வாசமில்லாத ஒரு பொருள் முகர செய்யப்பட்டது. 6 மாதங்கள் இந்த நடவடிக்கை தொடர்ந்தது.
6 மாதங்கள் கடந்ததும், அவர்களிடம் மீண்டும் நரம்பியல்-உளவியல் திறன் பரிசோதிக்கப்பட்டது.
இதில் நல்ல வாசனையை முகர்ந்தவர்களின் முடிவெடுக்கும் திறன் முன்பிருந்ததை விட அதிகரித்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டனர். மேலும், அந்த குழுவில் உள்ளவர்களுக்கு நல்ல தூக்கம் கிடைத்ததாகவும் கண்டறிந்துள்ளனர்.
நம்மை சுற்றியுள்ள காற்று மண்டலத்தில் நல்ல வாசம் இருக்கும்படியாக வைத்து கொண்டால் நமது மூளையின் செயல்பாடு அதிகரிக்கும் என்றும் வயதானால் தோன்றும் ஞாபக சக்தி குறைபாடுகள் சம்பந்தமான நோய்கள் குறையும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் அறிவித்திருக்கின்றனர்.
- அந்நிறுவனம் அமெரிக்காவின் ராணுவ தளவாடங்கள் சம்பந்தமான வேலைகளை செய்து வருகிறது
- அனில், வீடியோ காலிங் முறையில் தனது தாய் மொழியான இந்தியில் உறவினருடன் உரையாடினார்
அமெரிக்க ராணுவத்திற்காக ஏவுகணை சம்பந்தமான ஒப்பந்ததாரராக செயல்படும் நிறுவனம், அமெரிக்காவில் உள்ள பார்ஸன்ஸ் கார்ப்பரேஷன்.
அந்நிறுவனம் அமெரிக்காவின் ராணுவ தளவாடங்கள் சம்பந்தமான வேலைகளை செய்து வருகிறது. அங்கு பணியாளர்களுக்கு பாதுகாப்பு கட்டுப்பாடுகள் அதிகம். அலுவலகத்தில் முக்கியமான தகவல் பரிமாற்றங்கள் நடைபெறும் போது அலைபேசியில் பேசுவதும், பின்னணியில் நிறுவனத்தின் தகவல்கள் தெரியும் விதமாக வீடியோ காலிங்கில் பேசுவதும் அங்கு தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராக பல வருடங்களாக பணி புரிந்து வந்தவர் அனில் வார்ஷ்னி (78).
நோயுற்றிருந்த இவரது உறவினர் ஒருவர், இறக்கும் தருவாயில் இருந்தார். அவரிடம் இருந்து வந்த ஒரு அலைபேசி அழைப்பை தவிர்க்க விரும்பாத அனில், அலுவலகத்திலேயே வீடியோ காலிங் முறையில் தனது தாய் மொழியான இந்தியில் அவருடன் உரையாடினார்.
இதனை அவருடன் பணி புரியும் மற்றொரு ஊழியர் கவனித்தார். பாதுகாப்பு கட்டுப்பாடுகளை அனில் மீறுவதாக அந்த ஊழியர் அனிலிடம் கூறி, மேலிடத்திலும் புகார் செய்துள்ளார்.
இதனையடுத்து வார்ஷ்னி, பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவரது உடைமைகளுடன் உடனே அவர் அலுவலகத்திலிருந்து வெளியேற்றப்பட்டர்.
தனக்கு நேர்ந்த அவமானத்திற்கு எதிர்வினையாக தன்னை பணியிலிருந்து நீக்கிய நிறுவனத்தின் மீதும், அமெரிக்க ராணுவ செயலர் ஜேம்ஸ் ஆஸ்டின் மீதும் அனில் வார்ஷ்னி வழக்கு தொடர்ந்துள்ளார்.
தன்னை மீண்டும் பணியில் சேர்த்து, தான் முன்பிருந்த பதவிக்கு நிகரான பணியில் அமர்த்த கோரியும், பழைய சலுகைகளை மீண்டும் வழங்க கோரியும் மற்றும் தனது மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை நீக்கவும் அனில் கோரியுள்ளார். இதற்கு அந்நிறுவனம் சம்மதிக்கவில்லையென்றால், அதற்கு ஈடாக ஒரு தொகையை கோரியுள்ளார்.
இது மட்டுமல்லாது தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ஈடாகவும் ஒரு பெரும் தொகையை நஷ்ட ஈடாகவும் அனில் கோரியுள்ளார்.
- விசாரணை ஆகஸ்ட் 28-ந்தேதிக்கு ஒத்திவைப்பு
- சாட்சிகளை சந்திக்கக் கூடாது என நிபந்தனை
2020 அதிபர் தேர்தல் முடிவை மாற்ற முயற்சித்ததாக முன்னாள் அதிபர் டிரம்ப் மீது கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக 5-வருட சிறை தண்டனைக்குரிய குற்றமான அமெரிக்காவை ஏமாற்றும் நோக்கில் சதி செய்தல், 20 வருட சிறை தண்டனைக்குரிய குற்றமான உத்தியோகபூர்வ நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்தல், உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை தடுக்க சதி செய்தல் மற்றும் 10 வருட சிறை தண்டனைக்குரிய குற்றமான அரசியலமைப்பினால் வழங்கப்பட்ட உரிமைகளை ஒருவர் நிறைவேற்ற முயலுவதை தடுக்க சதி செய்தல் என 4 முக்கிய பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாஷிங்டன் நீதிமன்றத்தில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று (இந்திய நேரப்படி இன்று அதிகாலை) விசாரணைக்காக ஆஜரானார். அப்போது தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த டிரம்ப், ''நான் குற்றமற்றவன். தன்மீது அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கில் வழக்கு தொடரப்பட்டுள்ளது'' என தன் வாதத்தை முன்வைத்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. வழக்கின் சாட்சியாகள் எவருடனும் தொடர்பு கொள்ளக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்க, டிரம்ப் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினார்.
- தடுப்பூசிக்கான சந்தை 10 பில்லியன் டாலருக்கு மேல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது
- இந்நோய் அறிகுறிகளை விரைவில் கவனிக்காமல் விட்டால் உயிருக்கு ஆபத்தாக முடியும்
நுரையீரல் மற்றும் சுவாச பாதையில் தொற்று நோயை ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய ஒரு நுண்கிருமி ஆர்எஸ்வி (RSV) வைரஸ்.
இந்த வைரஸ் நோய் தொற்று பொதுவாக லேசான குளிர் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். ஆனால் விரைவில் கவனிக்காமல் விட்டால் உயிருக்கு ஆபத்தாக முடியும்.
எனவே இதன் தாக்குதலிலிருந்து மனிதர்களை காக்க ஒரு தடுப்பூசியை கண்டு பிடிக்க உலகெங்கிலும் உள்ள முன்னணி மருந்து நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. இந்த தடுப்பூசிக்கான சந்தை 10 பில்லியன் டாலருக்கு மேல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
லண்டனை மையமாக கொண்டு இயங்கும் பன்னாட்டு பிரிட்டன் மருந்து நிறுவனம் க்ளாக்ஸோ ஸ்மித்க்லைன் (GSK). இந்நிறுவனம் இந்த நோய்க்கு எதிராக அரெக்ஸ்வி எனும் தடுப்பூசியை சந்தைக்கு அறிமுகப்படுத்த அனுமதி பெற்று விட்டது.
இந்நிலையில், நேற்று அமெரிக்காவில் உள்ள டெலாவேர் மாநில நீதிமன்றத்தில், அமெரிக்காவின் நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியை மையமாக கொண்டு செயல்படும் அமெரிக்க பன்னாட்டு முன்னணி மருந்து நிறுவனமான ஃபைசர் மீது காப்புரிமை வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளது.
ஃபைசர் நிறுவனத்தின் அப்ரிஸ்வோ (Abrysvo) தடுப்பூசியில் பயன்படுத்தப்படும் ஒரு மூலக்கூறு, ஜிஎஸ்கே நிறுவனத்தின் 4 காப்புரிமைககளை மீறுவதாக ஜிஎஸ்கே குற்றம் சாட்டியுள்ளது.
"ஃபைசர் நிறுவனம் தெரிந்தே அப்ரிஸ்வோ தடுப்பூசியில் எங்களுக்கு உரிமையுள்ள கண்டுபிடிப்புகளை அனுமதியின்றி பயன்படுத்துகிறது. எங்கள் தடுப்பூசியான அரெக்ஸ்வி (Arexvy), ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு 7 வருடங்களுக்கு முன்பே வளர்ச்சியில் இருந்தது. இவ்விவகாரத்தில் ஒரு நீதி விசாரணை நடத்த வேண்டும் என கேட்கிறோம். காப்புரிமை மீறலின் விளைவாக நாங்கள் இழந்த லாபங்கள் மற்றும் ராயல்டிகள் உட்பட பண நஷ்டத்திற்கும் ஈடு வேண்டும். மேலும் ஃபைசர் நிறுவனம் அதன் தடுப்பூசியை அமெரிக்காவில் தயாரித்து விற்பனை செய்வதிலிருந்து தடுக்க வேண்டும். அறிவுசார் சொத்து பாதுகாப்புகள்தான் நிறுவனங்களின் புதுமையான ஆராய்ச்சி நோக்கங்களுக்கு அடிப்படை. எங்கள் தடுப்பூசியான அரெக்ஸ்வியை அறிமுகப்படுத்துவது தடையின்றி நடைபெற வேண்டும்" என ஜிஎஸ்கே தன் புகாரில் கோரியுள்ளது.
"எங்கள் அறிவுசார் சொத்துக்களின் நிலைப்பாடுகளில் நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம். நோயாளிகளை காக்க எங்களின் புதுமையான தடுப்பூசியை கொண்டு வருவதற்கு எங்களுக்கு முழு உரிமை உள்ளது. எங்கள் நிலையை தற்காத்துக் கொள்ள நாங்கள் நீதிமன்றத்தில் போராடுவோம்" என ஃபைசர் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
- அமெரிக்காவின் எஃப்.பி.ஐ.யில் பணியாற்றும் பெண்கள் விகிதம் சுமார் 24 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது
- இந்திய பெண்கள் பெரும்பாலும் மென்பொருள் துறையிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும் மட்டுமே அங்கு பணியாற்றுகின்றனர்
ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI) என்பது அமெரிக்காவின் உள்நாட்டு உளவு மற்றும் பாதுகாப்புக்கான அமைப்பாகும்.
அமெரிக்காவின் எஃப்.பி.ஐ.யில் பணியாற்றும் பெண்களின் விகிதம் சுமார் 24 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது.
அந்த அமைப்பின் ஸால்ட் லேக் சிட்டி அலுவலகத்தின் சிறப்பு அதிகாரியாக இந்திய-அமெரிக்க பெண்மணியான ஷோஹினி சின்ஹா என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் உள்ள பர்டியூ பல்கலைக்கழகத்தில் (Purdue University) உளவியலில் இளங்கலை பட்டம் மற்றும் மனநல ஆலோசனையில் முதுகலை பட்டம் பெற்ற ஷோஹினி, எஃப்.பி.ஐ-யில் பணிபுரிவதற்கு முன்பு, ஒரு சிகிச்சையாளராகவும், பின்னர் இண்டியானாவின் லஃபாயெட் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நிர்வாகியாகவும் பணியாற்றினார்.
ஷோஹினி சின்ஹா 2001-ல் எஃப்.பி.ஐ.-யில் சிறப்பு அதிகாரியாக சேர்ந்தார். முதலில் மில்வாக்கி கள அலுவலகத்தில் பயங்கரவாத எதிர்ப்பு விசாரணைகளில் பணியாற்றினார். குவாண்டனாமோ விரிகுடா கடற்படைத்தளம், லண்டனில் உள்ள எஃப்.பி.ஐ.யின் சட்ட அலுவலகம் மற்றும் பாக்தாத் செயல்பாட்டு மையம் ஆகியவற்றிலும் தற்காலிக பணிகளில் பணியாற்றினார்.
2009-ல் கண்காணிப்பு சிறப்பு அதிகாரியாக பதவி உயர்வு பெற்று வாஷிங்டனில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார். கனடாவை தளமாகக் கொண்ட விசாரணைகள் அமைப்பின் திட்ட மேலாளராக பணியாற்றினர்.
2012-ல் கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் சட்ட உதவியாளர் பதவி உயர்வு பெற்று ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ் மற்றும் கனடாவின் பாதுகாப்பு புலனாய்வு சேவையுடன் இணைந்து பயங்கரவாத எதிர்ப்பு விஷயங்களில் பணியாற்றினார்.
2015-ல் அவர் டெட்ராய்ட் கள அலுவலகத்தில் கள மேற்பார்வையாளராக பதவி உயர்வு பெற்று சர்வதேச பயங்கரவாத விஷயங்களை விசாரிக்கும் குழுக்களை வழிநடத்தினார்.
2020-ம் ஆண்டின் தொடக்கத்தில், தேசிய பாதுகாப்பு மற்றும் கிரிமினல் சைபர் ஊடுருவல் விஷயங்களை துப்புதுலக்கும் சைபர் ஊடுருவல் படைக்கு மாற்றப்பட்டார். பிறகு போர்ட்லேண்ட் கள அலுவலகத்தில் தேசிய பாதுகாப்பு விஷயங்களுக்கும், பின்னர் குற்றவியல் விஷயங்களுக்கும் உதவி சிறப்பு அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்.
2021-ல், எஃப்.பி.ஐ. இயக்குநரின் நிர்வாக சிறப்பு உதவியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போதைய பதவி உயர்வு வரும்வரை, வாஷிங்டனில் உள்ள எஃப்.பி.ஐ.யின் தலைமையகத்தில், அந்த பதவியிலேயே தொடர்ந்தார்.
அமெரிக்காவில் இந்திய பெண்கள் பெரும்பாலும் மென்பொருள் துறையிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் ஒரு இந்திய-அமெரிக்க பெண் எஃப்.பி.ஐ.யில் பல வருடங்கள் சிறப்பாக பணியாற்றி உயர்வான பதவிகளை அடைந்திருப்பதை உலகெங்கிலும் உள்ள இந்தியர்கள் பெருமையாக பார்க்கிறார்கள்.
- இளைஞர் ஒருவர் காரை ஓட்டி வந்த போது சாலையின் நடுவே பார்வையற்ற ஒருவர் ஸ்டிக்கை வைத்து கொண்டு தட்டுதடுமாறி நடந்து வருவதை பார்க்கிறார்.
- டுவிட்டரில் வைரலாகி வரும் வீடியோவை பார்த்த பயனர்கள் வாலிபரின் செயலை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
விபத்துக்களில் சிக்கி ஒருவர் துடித்து கொண்டிருப்பதையும் கூட வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்களுக்கு மத்தியில், சாலையில் பாதுகாப்பாற்ற முறையில் சென்ற பார்வையற்ற ஒருவருக்கு காரில் இருந்து இறங்கி ஒரு வாலிபர் உதவி செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் அமெரிக்காவின் டென்வர் நகரில் நடந்துள்ளது. வீடியோவில், இளைஞர் ஒருவர் காரை ஓட்டி வந்த போது சாலையின் நடுவே பார்வையற்ற ஒருவர் ஸ்டிக்கை வைத்து கொண்டு தட்டுதடுமாறி நடந்து வருவதை பார்க்கிறார். பார்வையற்ற அந்த நபர் நடைபாதையை கண்டுபிடிக்க திணறுவதை பார்த்த வாலிபர் காரை நிறுத்திவிட்டு இறங்கி சென்று பார்வையற்றவருக்கு நடைபாதையில் நடக்க உதவி செய்கிறார்.
மேலும் அந்த பார்வையற்றவர் அருகில் இருக்கும் பஸ் நிறுத்தத்திற்கு செல்வதை கேட்டறிந்து அவருக்கு வழிகாட்டுவது போன்ற காட்சிகள் பயனர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. டுவிட்டரில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் அந்த வாலிபரின் செயலை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- இந்தியாவுடன் போரை நடத்த விரும்பவில்லை- பாகிஸ்தான் பிரதமர்
- பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம்
அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறியதாவது-
நாங்கள் நீண்ட நாட்களாகவே கூறி வருவது, தீவிரமான பிரச்சனைகளில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான நேரடி பேச்சுவார்த்தைக்கு நாங்கள் ஆதரவு என்பதுதான். எங்களுடைய நீண்ட கால நிலை இதுதான்.
இவ்வாறு மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப்
வறுமை மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்த்து போராடும் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் போர் ஒரு விருப்பமல்ல. இந்தியாவுடன் போரை நடத்த விரும்பவில்லை. அனைத்து தீவிரமான மற்றும் நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம்.
அர்த்தமுள்ள விவாதங்கள் மூலம் நமது தீவிரமான பிரச்சனைகள் புரிந்த கொள்ளப்படாவிட்டால் அண்டை நாடுடன் நட்பாக இருக்க முடியாது என்பதை அண்டை நாடுகளும் புரிந்து கொள்வது முக்கியம்.
பாகிஸ்தானின் அணு சக்தி, தற்காப்பு நோக்கத்திற்காகவே உள்ளது. அது ஆக்கிரமிப்புக்காக அல்ல. ஏனென்றால் அணு ஆயுதத்தை பயன்படுத்தினால் என்ன நடந்தது என்பதை சொல்ல யார் வாழ்வார்கள்? எனவே போர் ஒரு விருப்ப மல்ல.
கடந்த 75 ஆண்டுகளில் பாகிஸ்தான் மூன்று போர்களை நடத்தியுள்ளது. இதன் காரணமாக பொருளாதார இழப்பு மற்றும் வளங்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.
நாங்கள் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம். பரஸ்பர மரியாதை, நம்பிக்கையின் அடிப்படையில் அமெரிக்காவுடன் சிறந்த உறவுகளை வைத்திருக்க விரும்புகிறோம். நாங்கள் ஒருவரையொருவர் ஏமாற்ற முயற்சிக்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் முழுவதுமாக கை விடும்வரை பேச்சுவார்த்தைக்கு தயார் இல்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்காவின் செனட் சபை கட்டட வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடக்கப்போவதாக போன் வந்தது.
- சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் செனட் கட்டட வளாகத்தில் சோதனை நடத்தினர்.
நியூயார்க்:
அமெரிக்காவின் யு.எஸ். கேப்பிட்டோல் போலீஸ் படை அலுவலகத்தில் உள்ள 911 என்ற அவசர எண்ணிற்கு தகவல் வந்தது.
அதில், அமெரிக்காவின் செனட் சபை கட்டட வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடக்கப் போவதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செனட் கட்டட வளாகத்தில் சோதனை நடத்தினர். எந்நேரமும் துப்பாக்கிச்சூடு நடக்கலாம் என கூறப்பட்டதால் அங்கு பதற்றமும் பரபரப்பும் காணப்பட்டது.
போலீசார் நடத்திய சோதனையில் எந்த ஆயுதமும், யாரும் சிக்கவில்லை. இறுதியில் தொலைபேசியில் வந்த மிரட்டல் புரளி என தெரிய வந்தது.
- வீடுகளில் அறைகளை குளிரூட்ட ஏர் கண்டிஷனர்கள் அவசியமான சாதனமாகி விட்டது
- இது ஒரு தீய சுழற்சியை உருவாக்குகிறது
இவ்வருடம் ஏற்பட்ட காலநிலை மாற்றங்களால் பூமியில் ஒரு சில இடங்களில் அதிக வெள்ளம், மழை போன்ற இயற்கை பேரிடர் தோன்றியது. ஆனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் மிக அதிக வெப்பம் மக்களை வாட்டி வதைக்கிறது. இதனால் அங்கெல்லாம் வீடுகளில் அறைகளை குளிரூட்ட ஏர் கண்டிஷனர்கள் அவசியமான சாதனமாகி விட்டது.
இச்சாதனங்களின் உதவியால் வெப்பம் சார்ந்த உடல் ஆரோக்கிய குறைபாடுகள் குறைவது மட்டுமின்றி, அதிக வெப்பத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளையும் இது குறைக்கிறது. உயிர் வாழ்வதற்கே இவை அவசியமான கருவிகளாக மாறி விட்டன.
ஆனால் ஏர் கண்டிஷனர்கள் அதிக மின் சக்தி தேவைப்படும் சாதனங்கள். இதனால் இவற்றின் அதிக பயன்பாடு பருவநிலை நெருக்கடிக்கு (climate crisis) ஒரு காரணமாக அமைகிறது.
சர்வதேச ஆற்றல் ஏஜென்சி அளிக்கும் தகவல்களின்படி, உலகம் முழுவதும் வெளியிடப்படும் 37 பில்லியன் மெட்ரிக் டன் கரியமில வாயு அளவில், சுமார் 1 பில்லியன் மெட்ரிக் டன் அளவு வெளியேற்றத்திற்கு ஏர் கண்டிஷனிங் சாதனங்களே காரணமாகிறது. இதன் மூலம் மீண்டும் காற்றில் அதிக வெப்பம் உருவாகும். இது ஒரு தீய சுழற்சியை உருவாக்குகிறது.
2050 ஆம் ஆண்டில், இந்தியாவில் ஏர் கண்டிஷனர்கள் பொருத்தப்பட்ட குடும்பங்களின் விகிதம் 10% முதல் 40% வரை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஏர் கண்டிஷனர்கள் பொதுவாக ஃப்ளோரோகார்பன் வாயுக்களை அதன் இயக்கத்திற்காக பயன்படுத்துகின்றன. அந்த வாயு வளிமண்டலத்தில் கலக்கும்.
எனவே, கரியமில வாயு வெளியேறுவதால் வரும் வெப்பமயமாதலை விட, இந்த வாயுவால் ஆயிரக்கணக்கான மடங்கு அதிக வெப்பமயமாதல் நிகழ வாய்ப்புண்டு.
மேலும், மின்சாரக் கட்டணத்தின் விலை ஏறும் போது இவற்றின் பயன்பாடு குடும்பங்களின் அத்தியாவசிய தேவைகளை மாற்றியமைக்கலாம்.
புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி வழிகளை அதிகரிப்பதன் மூலமும், குறைந்த ஆற்றல் கொண்ட ஏர் கண்டிஷனர்களை உருவாக்குவதன் மூலமும், மற்றும் இதர குளிரூட்டும் தொழில்நுட்பங்களை பெருக்குவதன் மூலமும், இந்த தீய சுழற்சியை முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.






