என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • வர்த்தகர்கள் பலவித பரிசு பொருட்கள் மற்றும் தள்ளுபடிகளை வழங்குகிறார்கள்
    • பொருட்கள் வாங்கும் வழங்கப்படி ஜோ பைடன் பிரபலமான புத்தகத்தை வாங்கினார்

    அமெரிக்காவில் ஒவ்வொரு வருட நவம்பர் மாத 4-வது வியாழக்கிழமை, "தேங்க்ஸ்கிவிங் டே" (Thanksgiving Day) என கொண்டாடப்படுகிறது. நன்றி தெரிவிக்கும் நாள் என அங்கு கொண்டாடப்படும் இந்நாளில் அமெரிக்காவில் குடும்பங்கள் ஒன்று கூடி, ஒருவருக்கொருவர் நன்றி கூறி, விருந்துண்டு, விளையாடி, மகிழ்ச்சியாக இருப்பது வழக்கம்.

    இதற்கு அடுத்த நாள் "ப்ளாக் ஃப்ரைடே" (Black Friday) எனப்படும். கருப்பு வெள்ளிக்கிழமை எனும் பெயரில் கொண்டாடப்படும் இந்நாள், டிசம்பர் மாத இறுதியில் வரும் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கான பொருட்கள் வாங்க தொடங்கும் தினமாக கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி, கடைகளில் பல்வேறு பொருட்களை வாங்க கூட்டம் அலைமோதும். இதன் காரணமாக, வர்த்தகர்கள் அதிக தள்ளுபடி வழங்குவதும், பொருட்கள் வாங்குபவர்களுக்கு ஷாம்பெயின் உள்ளிட்ட பல பரிசு பொருட்களை அளிப்பதும் வழக்கம்.

    இந்த வியாபார கொண்டாட்டம் ஆண்டு இறுதி வரை நடந்து, பின் புது வருட கொண்டாட்டங்களுக்கு பிறகு நிறைவடையும்.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் (Massachusetts) மாநில தீவான நான்டுகெட் (Nantucket) பகுதியில், தன் குடும்பத்தினருடன் கோடீசுவரர் டேவிட் ரூபன்ஸ்டீன் என்பவருக்கு சொந்தமான பெரிய வீட்டில், விடுமுறையை கொண்டாடி வருகிறர். கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக குடும்பத்தினருடன் சாலைகளில் உள்ள அங்காடிகளில் பொருட்கள் வாங்க வந்தார்.

    கருப்பு வெள்ளிக்காக கடைகளில் பொருட்கள் வாங்க சென்ற பைடன், ஹீதர் காக்ஸ் ரிச்சர்ட்ஸன் (Heather Cox Richardson) எனும் பெண் வரலாற்று ஆசிரியர் எழுதிய "ஜனநாயகத்தின் விழிப்பு" எனும் பொருள்படும் "டெமாக்ரஸி அவேகனிங்" (Democracy Awakening) புத்தகத்தை வாங்கினார்.


    "எங்கள் குடும்ப வழக்கம் இது. கருப்பு தின கொண்டாட்டத்தின் போது ஒரு புத்தக கடைக்காவது சென்று புத்தகம் வாங்குவது எங்கள் குடும்ப வழக்கம்" என இது குறித்து பைடன் தெரிவித்தார்.

    கடந்த வருடம் ஜோ பைடனை ஹீதர் பேட்டி கண்டதும், அதில் அவரை, "அமெரிக்க ஜனநாயகம் எனும் பண்டைய சித்தாந்தத்தை மீட்டு எடுக்கும் புரட்சிகரமான அமெரிக்க அதிபர்" என புகழ்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

    ஜோ பைடனுடன் வந்திருந்த அவர் மனைவியும் அமெரிக்காவின் முதல் பெண்மணியுமான ஜில் பைடன், தங்கள் குடும்பம் விடுமுறையை மகிழ்ச்சியாக கொண்டாடி வருவதாக தெரிவித்தார்.

    • 2019 சட்ட மாற்றத்தின்படி முன்னர் நடந்த தாக்குதலுக்கு புகார் அளிக்க இயலாது
    • 2022ல் பெண் கவர்னர் கேத்லீன் ஹோசல் சட்ட திருத்தத்தை கொண்டு வந்தார்

    பாலியல் குற்றங்கள் அதிகம் நடைபெறும் உலக நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று.

    அமெரிக்காவின் வடகிழக்கு மாநிலமான நியூயார்க்கில், கடந்த 2022 நவம்பர் மாதம் பாலியல் தாக்குதல் குறித்த புகாரளிப்பு சட்டங்களில் பெண் கவர்னர் கேத்லீன் ஹோசல் (Kathleen Hochul) சில மாற்றங்களை கொண்டு வந்தார்.

    பாலியல் தாக்குதலுக்கு ஆளானவர்கள், அது குறித்த புகாரையும், வழக்கையும், 3 வருட காலத்திற்குள் பதிவு செய்து விட வேண்டும் என அங்கு சட்டம் இருந்தது.

    2019ல் இந்த காலக்கெடு முறை நீக்கப்பட்டாலும், அது சட்டம் நிறைவேற்றப்பட்ட தேதியிலிருந்து நடைபெறும் குற்றங்களுக்கு மட்டுமே பொருந்தி வந்தது.

    எனவே, 2022ல் "அடல்ட் சர்வைவர்ஸ் ஆக்ட்" (Adult Survivors Act) எனும் பெயரில் கவர்னர் ஹோசல் கொண்டு வந்த இந்த சட்ட மாற்றத்தின்படி ஒரு ஆண்/பெண், தங்கள் வாழ்வின் முந்தைய காலகட்டத்தில் எப்பொழுதோ பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தால் கூட தற்போது அது குறித்து புகார் அளிக்கலாம் என வழிவகை செய்யப்பட்டது.

    ஆனால், இந்த சட்ட மாற்றம் ஒரு வருட காலம் மட்டுமே செல்லுபடியாகும் வகையில் கொண்டு வரப்பட்டதால், அது இம்மாதத்துடன் காலாவதியாகிறது.

    இதனையடுத்து, இந்த ஒரு வருட கால தொடக்கத்தில் பெரிய அளவு புகார்கள் வரவில்லை. ஆனால், விரைவில் சட்ட திருத்தம் காலாவதியாக போவதால் சமீப சில நாட்களாக பலர் தாமாக முன்வந்து புகார் அளித்து வழக்கு பதிவு செய்கின்றனர். இதுவரை 2500 பேர் புகார் அளித்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. அதிலும் குறிப்பாக, பல பிரபலங்களுக்கு எதிராக புகார்கள் வந்துள்ளது அமெரிக்க மக்களை மட்டுமின்றி உலகையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    அமெரிக்க பாடகர் டிட்டி (ஷான் கோம்ப்ஸ்), முன்னாள் நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ குவோமோ, பாடகரும் நடிகருமான ஜேமி ஃபாக்ஸ், பாடகர் ஆக்ஸ்ல் ரோஸ் உட்பட பல பிரபலங்கள் இக்குற்றச்சாட்டிற்கு ஆளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நெக்லஸ் எல்விஸ் பிரெஸ்லி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
    • 1975-ம் ஆண்டு முகமது அலியை சந்தித்த போது நெக்லசை அணிந்திருந்தார்.

    பிரபல அமெரிக்க பாடகரும், நடிகருமான எல்விஸ் பிரெஸ்லி 'ராக் அண்ட் ரோலின் மன்னன்' என போற்றப்பட்டவர். 1954-ம் ஆண்டு இசை துறைக்குள் நுழைந்த இவர் ராக் அண்ட் ரோல் இசையின் தொடக்க வடிவமான 'ராக்கபிலிட்டி' இசை நிகழ்ச்சிகளை நடத்திய முதல் கலைஞர்களுள் ஒருவராக இருந்தார்.

    1970-ம் ஆண்டு மறைந்த இவர் அணிந்திருந்த சிங்க நக நெக்லஸ் மிகவும் பிரசித்தி பெற்றது. மேடை நிகழ்ச்சிகள் மற்றும் எல்விஸ் பங்கேற்கும் நிகழ்ச்சிகளின் போது அவர் அந்த நெக்லசை அணிந்து செல்வது வழக்கம். 1975-ம் ஆண்டு முகமது அலியை சந்தித்த போது இந்த நெக்லசை அணிந்திருந்தார்.

    அவரது இந்த நெக்லஸ் எல்விஸ் பிரெஸ்லி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த நெக்லஸ் ஏலத்திற்கு செல்கிறது. இந்த நெக்லஸ் ஒரு மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 8 கோடி) வரை ஏலம் போகும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2022 அக்டோபர் மாதம், எலான் மஸ்க் டுவிட்டரை விலைக்கு வாங்கினார்
    • யூதர்களுக்கு எதிரான கருத்தை ஆமோதித்து மஸ்க் பதிவிட்டார்

    கருத்து பரிமாற்றங்களுக்கான உலகின் முன்னணி சமூக வலைதளமாக இருந்த டுவிட்டரை, அமெரிக்காவின் நம்பர் 1 கோடீசுவரரான எலான் மஸ்க், கடந்த 2022 அக்டோபர் மாதம் விலைக்கு வாங்கினார். அந்நிறுவனத்தின் வருமானத்தை அதிகரிக்க பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தார். அதன் ஒரு பகுதியாக நிறுவன பெயரை எக்ஸ் என மாற்றினார். தொடர்ந்து தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட பல பணியாளர்களை பணிநீக்கம் செய்தார். பல பொறுப்புகளில் புதிய பணியாளர்களை நியமித்தார்.

    ஆனால், மஸ்கின் மாற்றங்களால் நிறுவனத்தின் வருமானம் அவர் எதிர்பார்த்ததை போல் அதிகரிப்பதற்கு பதிலாக குறைய தொடங்கியது. எக்ஸ் போன்ற சமூக வலைதள நிறுவனங்களின் முக்கிய வருமானமான விளம்பர வருவாய் குறைந்து வந்தது.

    அக்டோபர் மாதம் தொடங்கி தற்போது வரை நடைபெற்று கொண்டிருக்கும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் இரு தரப்பினருக்கும் ஆதரவாகவும், எதிராகவும் பலர் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அத்தகைய எக்ஸ் பதிவு ஒன்றில் யூதர்களுக்கு எதிரான கருத்தை ஒரு பயனர் பதிவிட்டிருந்தார். இதனை ஆமோதிக்கும் வகையில் எலான் மஸ்க் ஒரு கருத்தை பதிவிட்டார்.

    இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஊடக விவகாரங்களை கவனித்து செய்தி வெளியிடும் மீடியா மேட்டர்ஸ் எனும் நிறுவனம், எக்ஸ் தளத்தில் யூதர்களை இனப்படுகொலை செய்த ஜெர்மனியின் அடால்ஃப் ஹிட்லர் மற்றும் அவரது நாஜி கட்சியினரை பெருமைப்படுத்தும் எக்ஸ் பதிவுகளுக்கு அருகில் ஆரக்கிள் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் விளம்பரங்கள் வெளிவருவதை சுட்டி காட்டியிருந்தது.

    இதையடுத்து எக்ஸ் நிறுவனத்திற்கு விளம்பரங்களை தந்து வந்த இருநூறுக்கும் மேற்பட்ட பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களை நிறுத்தி விட்டன.

    இதனால் எக்ஸ் நிறுவனம், இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் ரூ.625 கோடி ($75 மில்லியன்) தொகை வரை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பிரபலமான தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

    இதையடுத்து, வருவாய் இழப்பை தடுக்க எலான் மஸ்க் தீவிரமாக ஆலோசித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    • இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதும், பதில் தாக்குதலுக்கு அமெரிக்கா முழு ஆதரவு.
    • காசா மீது தாக்குதல் நடத்த இஸ்ரேலுக்கு அமெரிக்கா மிகப்பெரிய அளவில் ஆயுத உதவி செய்து வருகிறது.

    ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது இதுவரை இல்லாத வகையில் கடந்த மாதம் 7-ந்தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் 1400 பேர் உயிரிழந்தனர். 240 பேர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.

    இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல் போர் பிரகடனம் செய்தது. காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த அமெரிக்க ராணுவ உதவி செய்து வருகிறது. விமானம் தாங்கிய கப்பலை இஸ்ரேல் பகுதிக்கு அனுப்பி வைத்தது.

    இஸ்ரேல் போர் நிறுத்தம் கிடையாது என்பதை திட்டவட்டாக அறிவித்தது. அமெரிக்காவும் அதற்கு முழு ஆதரவு தெரிவித்தது. ஆனால், நாட்கள் செல்லசெல்ல காசாவில் பாலஸ்தீனர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். குழந்தைகள் முதல் பெண்கள் வரை என பாகுபாடின்றி ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானார்கள்.

    தரைவழியாக தாக்குதல் நடத்திய இஸ்ரேல் வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. ஹமாஸ் அமைப்பினர் தங்களது செயல்பட்டிற்காக அவற்றை பயன்படுத்தி வருவதாக இஸ்ரேல் ஆதாரத்தை வெளியிட்டு தாக்கியது.

    இருந்தபோதிலும், அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் போர் நிறுத்தம் தேவை என உணர்ந்தது. இல்லையெனில் காசா மக்கள் மருத்துவம் மற்றும் அடிப்படை உதவியின்றி மடிந்து விடுவார்கள் என்ற அச்சம் ஏற்பட்டது.

    இதனால் இஸ்ரேலிடம் போர் நிறுத்தம் தேவை என அமெரிக்கா வலியுறுத்தியது. இருந்தபோதிலும், இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்தவில்லை.

    இந்த நிலையில்தான் பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றவர்களை உலக நாடுகள் மறந்துவிட்டன குடும்பத்தினர் கவலை தெரிவித்தனர். அவர்களை காப்பாற்றுவதில் இஸ்ரேல் அக்கறை காட்டுவதில்லை என உள்நாட்டிலேயே இஸ்ரேலுக்கு எதிர்ப்பு வலுத்தது.

    இதன் காரணமாக 4 நாள் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்த நான்கு நாட்களில் இஸ்ரேல் 150 பாலஸ்தீனர்களை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும். ஹமாஸ் அமைப்பினர் 50 பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும். இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி, நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

    நேற்று 25 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 39 பாலஸ்தீனர்கள் விடுதலையாகியுள்ளனர்.

    இந்த நிலையில் இஸ்ரேலுக்கு நிபந்தனை விதிக்கப்படுமா? என்ற கேள்விக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதில் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக ஜோ பைடன் தெரிவிக்கையில் "காசாவில் நான்கு நாள் பேர் நிறுத்தம், அதையும் தாண்டி நீட்டிக்கும் என நம்புகிறேன். நாளை (இன்று) பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள. அதற்கு அடுத்தஅடுத்த நாட்களும் விடுவிக்கப்படுவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கிறேன்.

     நிபந்தனையுடன் இஸ்ரேலுக்கு ராணுவ உதவி வழங்குவது என்பது பயனுள்ள சிந்தனைதான். ஆனால், இதை தொடங்கினால், இப்போது நாம் எங்கே இருக்கிறோமோ, அதை நாம் பெற்றிருப்போம் என்று நினைக்கவில்லை" என்றார்.

    மேலும், நிபந்தனை குறித்து எந்த உதாரணத்தையும் ஜோ பைடன் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • கையில் 3 கத்திகளை வைத்து அவற்றை வீசி வித்தை காட்டி பார்வையாளர்களை அசத்துகிறார்.
    • வித்தை காட்டியவாறே 34 அடி மற்றும் 4 அங்குல தூரத்தை கடந்து சாதனையை மேற்கொண்டுள்ளார்.

    அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள போவே பகுதியை சேர்ந்தவர் எட்கர் யுட்கேவிச். சர்க்கஸ் கலைஞரான இவர் கயிற்றில் நடந்தவாறு 3 கத்திகளை பயன்படுத்தி நேர்த்தியாக வித்தை காட்டி கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்துள்ளார்.

    இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், குறிப்பிட்ட தூரம் கட்டப்பட்ட கயிற்றின் மீது எட்கர் யுட்கேவிச் நடந்து செல்கிறார். அப்போது அவரது கையில் 3 கத்திகளை வைத்து அவற்றை வீசி வித்தை காட்டி பார்வையாளர்களை அசத்துகிறார்.

    இவ்வாறு வித்தை காட்டியவாறே 34 அடி மற்றும் 4 அங்குல தூரத்தை கடந்து சாதனையை மேற்கொண்டுள்ளார்.

    • நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள ரெயின்போ பாலத்தில் கார் வெடித்ததில் 2 பேர் பலியாகினர்.
    • இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள ரெயின்போ பாலம் உள்ளது. ரெயின்போ பாலம் ஒன்டாரியோவை நியூயார்க்குடன் இணைக்கும் 4 எல்லைக் கடப்புகளில் ஒன்றாகும்.

    இந்நிலையில், நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள அமெரிக்கா-கனடா எல்லை சோதனைச் சாவடியில் கார் ஒன்று வந்தது. அந்தக் கார் திடீரென வெடித்ததில் 2 பேர் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பாலத்தின் எல்லையில் ஒரு வாகனம் வெடித்த சம்பவம் 'பயங்கரவாத தாக்குதல்' முயற்சியாக இருக்கலாம் என்ற கோணத்தில் எப்.பி.ஐ. விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதுகுறித்து நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோகுல் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், நயாகரா நீர்வீழ்ச்சியில் உள்ள ரெயின்போ பாலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை அதிகாரிகள் நெருக்கமாக கண்காணித்து வருகின்றனர் என பதிவிட்டுள்ளார்.

    • விபத்திற்குள்ளான விமானத்தில் 9 பேர் பயணம் செய்தனர்
    • இந்த விமானம் சுமார் ரூ.2300 கோடி மதிப்புடையது

    மேற்கு அமெரிக்காவில் உள்ள தீவுகள் நிறைந்த மாநிலம், ஹவாய். இதன் தலைநகரம் ஹோனோலூலு.

    இங்குள்ள ஒவாஹு (Oahu) தீவுக்கு அருகே கெனோஹே (Kaneohe Bay) கடற்கரை பகுதியில் அமெரிக்க ராணுவத்தின் விமான படைக்கு சொந்தமான விமான தளம் ஒன்று உள்ளது. இந்த தளத்திற்கு வாஷிங்டன் மாநில விட்பி தீவில் இருந்து 9 பயணிகளுடன் போயிங் போஸிடான் 8-ஏ (Boeing Poseidon 8-A) ரக அமெரிக்க கண்காணிப்பு விமானம் ஒன்று சென்றது.

    விமான தளத்தில் தரையிறங்க முற்பட்ட போது அது எதிர்பாராதவிதமாக ஓடுகளத்தை தாண்டி வேகமாக சென்று, பிறகு கடல்நீரில் இறங்கியது.


    அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதுமில்லை. பயணிகள் அனைவரும் காயங்கள் ஏதுமின்றி கடலில் நீந்தி கரை சேர்ந்து உயிர் தப்பினர்.

    கருமேகங்கள் மற்றும் மழையினால் ஓடுதளம் விமானிக்கு தெளிவாக தெரியவில்லை என்றும் இதனால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அந்த விமானத்தில் இருந்து எரிபொருள் உள்ளிட்ட அபாயகரமான பொருட்கள் ஏதும் கடல் நீரில் கலந்து விடாமல் தடுக்கும் விதமாக கடல் நீரில் பலமான தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

    ராணுவ உளவு வேலைகளுக்கு பயன்படுத்தப்படும் இந்த விமானம் சுமார் ரூ.2300 கோடி ($275 மில்லியன்) மதிப்புடையது.


    • ஹமாஸ்- இஸ்ரேல் போரில் காசாவின் வடக்குப் பகுதி மிகப்பெரிய அளவில் சேதமடைந்துள்ளது.
    • இருதரப்பில் உள்ள மருத்துவமனைகளும் பாதிப்படைந்துள்ளன.

    ஹமாஸ்- இஸ்ரேல் இடையே போர் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 7-ந்தேதி இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் கண்ணில் பட்டவர்களை சுட்டுத்தள்ளினர். மேலும், 200-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். ஐந்து நிமிடத்திற்குள் 5 ஆயிரம் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தினர்.

    இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல், ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் காசாவின் வடக்குப் பகுதி சீர்குலைந்துள்ளது. மேலும், அல்-ஷிபா உள்ளிட்ட முக்கியமான மருத்துவமனைகள் எரிபொருள் தட்டுப்பாட்டால் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காசாவில் உள்ள பாலஸ்தீனர்கள் மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலில் உள்ள மருத்துவமனைகளும் சேதமடைந்துள்ளன.

    இந்த நிலையில் நான்கு நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் முன்வந்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து உலக கோடீஸ்வரரும், எக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், எக்ஸ் வலைத்தளத்தின் விளம்பரம் மற்றும் சந்தாதாரர்கள் மூலம் கிடைக்கும் வருமானம், போரில் பாதிக்கப்பட்ட மருத்துவமனைகளை சீரமைக்கவும், காசாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவும் நன்கொடையாக வழங்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

    • அமெரிக்கா மற்றும் கனடா நாட்டு நிறுவனங்கள் சுரங்கம் அமைக்க அதிக அளவில் முதலீடு.
    • கடந்த சில வருடங்களாக சுரங்கங்களின் எண்ணிக்கை அதிரிகத்துள்ளதாக தகவல்.

    தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான சுரினேம் நாட்டில் சட்டவிரோதமாக தோண்டப்பட்ட தங்க சுரங்கம் இடிந்து விழுந்து 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    காவல்துறையினர், ராணுவ அதிகாரிகள், மீட்புப்படை குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்த சுரங்கம் சுரினேமின் தெற்கு மாகாணத்தில் உள்ள கிராமப்புற பகுதியில் அமைந்துள்ளது. தங்கம் எடுப்பதற்காக அங்குள்ள சிலரால் தோண்டப்பட்டதாக நம்பப்படுகிறது. சுரங்கம் இடிந்து விழுந்ததற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

    இதுதொடர்பாக உறுதியற்ற பல விசயங்கள் உள்ளன என அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். மேலும், "சூழ்நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது முக்கியமானது" என்றும் தெரிவித்துள்ளார்.

    சுரினேம் நாட்டில் தங்க சுரங்கம் அமைக்க அமெரிக்கா மற்றும் கனடா நாட்டின் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்துள்ளன. கடந்த சில வருடங்களாக சுரங்கம் தோண்டும் பணி அதிகரித்துள்ளது.

    • இரு நாட்டு உறவை பலப்படுத்த ஜின்பிங் அமெரிக்கா சென்றார்
    • ஜின்பிங்கின் காரை கண்டு "அழகான கார்" என்றார் பைடன்

    அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் பதவிக்காலத்தில் தொடங்கி அமெரிக்க-சீன உறவு பல சிக்கல்களையும், சச்சரவுகளையும் எதிர்நோக்கி வருகிறது.

    2021ல் ஜோ பைடன் பதவியேற்றதும் இந்த நிலை மாறும் என அரசியல் விமர்சகர்கள் எதிர்பார்த்திருந்தாலும் ரஷிய-உக்ரைன் போர் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் பின்னணியில் நிலைமை மேலும் சிக்கலானது. இதில் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள இரு நாட்டு வர்த்தக உறவு மேலும் அதிக பாதிப்புக்குள்ளானது.

    இதன் காரணமாக, சீன அதிபர் ஜி ஜின்பிங் இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் சென்ற வாரம் அமெரிக்காவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டார். நவம்பர் 14 அன்று தொடங்கி 17 வரை அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இரு நாடுகளுக்குமிடையே உயர்மட்ட பேச்சு வார்த்தைகளும் நடைபெற்றன.

    தான் செல்லும் நாடுகளுக்கெல்லாம், சீன அதிபர், அந்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஹாங் கி (Hongqi) எனும் நவீன காரில் பயணிக்கிறார். அவர் அயல்நாடுகளுக்கு சுற்று பயணம் செல்லும் போது அவருக்காக அங்கெல்லாம் அந்த கார் கொண்டு செல்லப்படுகிறது.

    இந்நிலையில் இரு நாட்டு அதிபர்களுக்கும் நடந்த பல சந்திப்புகளில் ஒரு சந்திப்பு முடிந்து இருவரும் வெளியே வரும் போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வெளியே நின்றிருந்த சீன அதிபரின் காரை கண்டு வியந்தார்.

    "இது மிக அழகான கார்" என ஜோ பைடன் பாராட்டினார்.

    அதற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங், "ஆம், இதன் பெயர் ஹாங் கி" என பதிலளித்தார்.

    மீண்டும் ஜோ பைடன், "இது எங்கள் நாட்டின் கேடிலாக் (Cadilac) காரை போன்று உள்ளது. சர்வதேச பயணங்களில் என்னுடன் அதுவும் பயணிக்கும். கேடிலாக் காரை இங்கு என்னவென்று அழைப்பார்கள் தெரியுமா? மிருகம் (beast) என்று" என கருத்து தெரிவித்தார்.

    இதனையடுத்து இருவரும் கைகுலுக்கி கொண்டனர். பின் சீன அதிபர் விடை பெற்றார்.

    இரு நாட்டு அதிபர்களும் தங்கள் கார்களை குறித்து சில நொடிகள் தங்கள் மொழியில் பேசுவதும், அவற்றை இருதரப்பு மொழிபெயர்ப்பாளர்கள் விளக்கும் காட்சிகளும் ஒரு வீடியோவில் பதிவாகி, அது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    கடினமான சிக்கல்களை தீர்க்க இரு நாட்டு அதிபர்களும் முயன்று வரும் போது, இது போன்ற மென்மையான தருணங்கள் இணைய தளத்தில் வரவேற்பை பெற்று வருகிறது.

    அமெரிக்க அதிபர் பயணிக்கும் கேடிலாக், 8 ஆயிரம் கிலோ எடையுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக அதில் உள்ள சிறப்பு அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியே பகிரப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    அதே போல் சீன அதிபர் பயணிக்கும் ஹாங் கி, 6-லிட்டர் வி12 (V12) எஞ்சின் உள்ளது. பல அடுக்கு பாதுகாப்பு அம்சங்களும், வசதிகளும் நிறைந்திருந்தாலும், இவை குறித்த தகவல்களும் வெளியே பகிரப்படுவதில்லை. 

    • 1927ல் பிறந்த ரோஸலின், 1946ல் ஜிம்மி கார்டரை மணந்தார்
    • என் சாதனைகளுக்கு ரோஸலின் உறுதுணையாக இருந்தார் என்றார் ஜிம்மி

    அமெரிக்காவில் 1977லிருந்து 1981 வரை அதிபராக பதவி வகித்தவர், ஜிம்மி கார்டர் என அழைக்கப்பட்ட ஜேம்ஸ் எர்ல் கார்டர் (99). ஜிம்மி கார்டரின் மனைவி ரோஸலின் கார்டர் (96).

    1927ல் அமெரிக்காவில் பிறந்த ரோஸலின், 1946ல் ஜிம்மி கார்டரை மணந்தார். இவர்களுக்கு 4 குழந்தைகளும், 11 பேரக்குழந்தைகளும், 14 கொள்ளுப்பேர குழந்தைகளும் உள்ளனர்.

    அமெரிக்க அதிபர்களிலேயே நீண்ட நாட்கள் உயிர் வாழ்ந்து வந்த தம்பதியினரான இருவரும் அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் கார்டர் சென்டர் (Carter Center) எனும் பெயரில் லாபநோக்கற்ற அறக்கட்டளையை நடத்தி வந்தனர்.

    ரோஸலின், தன் கணவரின் பதவிக்காலம் நிறைவடந்ததும் எழுத்தாளராகவும் சமூக மற்றும் பொதுநல தொண்டுகளில் ஆர்வமுடையவராகவும் தன்னை முன்னிறுத்தி வந்தார். பெண்கள் உரிமை, மனநலம் உள்ளிட்ட விஷயங்களில் தீவிர ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்தார்.

    கடந்த மே மாதம் ரோஸலினுக்கு டிமென்சியா நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அதற்கான சிகிச்சையை பெற்று வந்தார்.

    இந்நிலையில் வயது முதிர்வின் காரணமாக, குடும்பத்தார் அருகில் இருக்க, ரோஸலின் கார்டர் காலமானதாக அவர்களின் அறக்கட்டளை செய்தி வெளியிட்டுள்ளது.

    "என் சாதனைகள் அனைத்திற்கும் உறுதுணையாக இருந்தவர் ரோஸலின். எனக்கு தேவைப்படும் ஆலோசனைகளையும், வழிகாட்டுதலையும் வழங்கி வந்தார். அவர் இருந்த வரையில் என் மீது அன்பு செலுத்த ஒருவர் இருக்கிறார் என நான் அறிந்திருந்தேன்" என முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்டர் தன் மனைவி குறித்து உருக்கமாக தெரிவித்துள்ளார்.

    ×