நிபந்தனையுடன் இஸ்ரேலுக்கு ஆயுத உதவி... ஜோ பைடன் சொல்வது என்ன?

இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதும், பதில் தாக்குதலுக்கு அமெரிக்கா முழு ஆதரவு.காசா மீது தாக்குதல் நடத்த இஸ்ரேலுக்கு அமெரிக்கா மிகப்பெரிய அளவில் ஆயுத உதவி செய்து வருகிறது.
நிபந்தனையுடன் இஸ்ரேலுக்கு ஆயுத உதவி... ஜோ பைடன் சொல்வது என்ன?
Published on

ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது இதுவரை இல்லாத வகையில் கடந்த மாதம் 7-ந்தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் 1400 பேர் உயிரிழந்தனர். 240 பேர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.

இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல் போர் பிரகடனம் செய்தது. காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த அமெரிக்க ராணுவ உதவி செய்து வருகிறது. விமானம் தாங்கிய கப்பலை இஸ்ரேல் பகுதிக்கு அனுப்பி வைத்தது.

இஸ்ரேல் போர் நிறுத்தம் கிடையாது என்பதை திட்டவட்டாக அறிவித்தது. அமெரிக்காவும் அதற்கு முழு ஆதரவு தெரிவித்தது. ஆனால், நாட்கள் செல்லசெல்ல காசாவில் பாலஸ்தீனர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். குழந்தைகள் முதல் பெண்கள் வரை என பாகுபாடின்றி ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானார்கள்.

தரைவழியாக தாக்குதல் நடத்திய இஸ்ரேல் வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. ஹமாஸ் அமைப்பினர் தங்களது செயல்பட்டிற்காக அவற்றை பயன்படுத்தி வருவதாக இஸ்ரேல் ஆதாரத்தை வெளியிட்டு தாக்கியது.

இருந்தபோதிலும், அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் போர் நிறுத்தம் தேவை என உணர்ந்தது. இல்லையெனில் காசா மக்கள் மருத்துவம் மற்றும் அடிப்படை உதவியின்றி மடிந்து விடுவார்கள் என்ற அச்சம் ஏற்பட்டது.

இதனால் இஸ்ரேலிடம் போர் நிறுத்தம் தேவை என அமெரிக்கா வலியுறுத்தியது. இருந்தபோதிலும், இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்தவில்லை.

இந்த நிலையில்தான் பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றவர்களை உலக நாடுகள் மறந்துவிட்டன குடும்பத்தினர் கவலை தெரிவித்தனர். அவர்களை காப்பாற்றுவதில் இஸ்ரேல் அக்கறை காட்டுவதில்லை என உள்நாட்டிலேயே இஸ்ரேலுக்கு எதிர்ப்பு வலுத்தது.

இதன் காரணமாக 4 நாள் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்த நான்கு நாட்களில் இஸ்ரேல் 150 பாலஸ்தீனர்களை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும். ஹமாஸ் அமைப்பினர் 50 பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும். இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி, நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

நேற்று 25 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 39 பாலஸ்தீனர்கள் விடுதலையாகியுள்ளனர்.

இந்த நிலையில் இஸ்ரேலுக்கு நிபந்தனை விதிக்கப்படுமா? என்ற கேள்விக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதில் அளித்துள்ளார்.

இது தொடர்பாக ஜோ பைடன் தெரிவிக்கையில் "காசாவில் நான்கு நாள் பேர் நிறுத்தம், அதையும் தாண்டி நீட்டிக்கும் என நம்புகிறேன். நாளை (இன்று) பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள. அதற்கு அடுத்தஅடுத்த நாட்களும் விடுவிக்கப்படுவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கிறேன்.

 நிபந்தனையுடன் இஸ்ரேலுக்கு ராணுவ உதவி வழங்குவது என்பது பயனுள்ள சிந்தனைதான். ஆனால், இதை தொடங்கினால், இப்போது நாம் எங்கே இருக்கிறோமோ, அதை நாம் பெற்றிருப்போம் என்று நினைக்கவில்லை" என்றார்.

மேலும், நிபந்தனை குறித்து எந்த உதாரணத்தையும் ஜோ பைடன் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com