என் மலர்
பாகிஸ்தான்
- மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
- பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர். அவர்களுக்கு இடையே நீண்ட நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில் கைபர் பக்துங்வா மாகாணம் கோத் ஆசாம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர்கள் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதனால் பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர். அவர்களுக்கு இடையே நீண்ட நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து பாதுகாப்பு படையினர் ஏராளமான ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இவர்கள் அனைவரும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதோடு அப்பாவி பொதுமக்களை கொல்வது போன்ற குற்றங்களையும் செய்து வந்தவர்கள் என பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.
- இம்ரான் கான் கைது செய்யப்பட்டதையடுத்து அவரது ஆதரவாளர்கள் ராணுவ தளங்களை சேதப்படுத்தினர்.
- ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல்களை கண்டிக்க இம்ரான் கான் இன்னும் தயங்குவதாக மந்திரி கூறினார்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி மீது தடை விதிக்க அரசு திட்டமிட்டிருப்பதாக பாதுகாப்புத்துறை மந்திரி கவாஜா ஆசிப் கூறி உள்ளார்.
இம்ரான் கான் கடந்த 9ம் தேதி வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்தபோது, அவரை துணை ராணுவ படையினர் அதிரடியாக கைது செய்து அழைத்துச் சென்றனர். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இதில் வன்முறை வெடித்தது. லாகூர் படைப்பிரிவு கமாண்டர் அலுவலகம், மியான்வாலி விமானப்படை தளம் மற்றும் பைசலாபாத்தில் உள்ள ஐஎஸ்ஐ கட்டிடம் உட்பட பல ராணுவ தளங்களை அவரது கட்சியினர் சேதப்படுத்தினர். ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகமும் தாக்கப்பட்டது. வன்முறை மோதலில் 10 பேர் பலியானதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி கவாஜா ஆசிப், இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ராணுவம் மற்றும் பொது சொத்துக்கள் தனது ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல்களை கண்டிக்க இம்ரான் கான் இன்னும் தயங்குவதாக கூறினார்.
'ராணுவ நிலைகளை தாக்கியதால் அவரது தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியை (பிடிஐ) தடை செய்வது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. இது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. அந்த கட்சியை தடை செய்ய அரசு தீர்மானித்தால் இந்த தீர்மானம் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். இம்ரான் கான், ராணுவத்தை தனது எதிரியாக கருதுகிறார். அவரது முழு அரசியலும் ராணுவத்தின் ஆதரவுடன் நடந்ததால், இன்று திடீரென ராணுவத்திற்கு எதிரான நிலைப்பாடை எடுக்க முடிவு செய்துள்ளார்' என பாதுகாப்புத்துறை மந்திரி கவாஜா ஆசிப் குறிப்பிட்டுள்ளார்.
- கருவூல முறைகேடு வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்தபோது வன்முறை ஏற்பட்டது.
- பல்வேறு காவல் நிலையங்களில் இம்ரான் கான் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், கடந்த 9-ந்தேதி இஸ்லாமாபாத் கோர்ட்டில் ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்தபோது அவரை துணை ராணுவம் கைது செய்தது. அவர் அல்காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இம்ரான்கான் கைது சட்டவிரோதம் என்று தெரிவித்த சுப்ரீம் கோர்ட் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து இம்ரான் கானுக்கு லாகூர் ஐகோர்ட் ஜாமீன் வழங்கியது.
இதற்கிடையே, கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி கருவூல முறைகேடு வழக்கு விசாரணைக்கு இஸ்லாமாபாத் உள்ள நீதிமன்றத்தில் இம்ரான் கான் ஆஜராக வந்தபோது, அவரது ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீஸ்காரர்களுக்கும், இம்ரான் கான் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 25 போலீஸ்காரர்கள் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக பல்வேறு காவல் நிலையங்களில் இம்ரான் கான் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. வன்முறை தொடர்பான 8 வழக்குகளில் இன்று பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் இம்ரான் கானுக்கு ஜூன் 8 ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கி உள்ளது.
- தாக்குதலில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது
- தாக்குதல் தொடர்பாக சிராஜுல் ஹக் கூறும்போது நான் மரணத்திற்கு பயப்படவில்லை என்றார்.
பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமிய அரசியல் கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவர் சிராஜுல் ஹக். இவர் பலுசிஸ்தானின் சோப் பகுதியில் நடந்த கூட்டத்தில் பங்கேற்க காரில் சென்றார். அப்போது அவரது கார் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. ஒருநபர், தான் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தார். ஆனால் காருக்குள் இருந்த சிராஜுல் ஹக் உள்பட சிலர் காயமின்றி உயிர் தப்பினர்.
இந்த தாக்குதலில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. தாக்குதல் தொடர்பாக சிராஜுல் ஹக் கூறும்போது, நான் மரணத்திற்கு பயப்படவில்லை. நாட்டின் தொடர்ச்சியான பண வீக்கம் மற்றும் மோசமான பொருளாதார நிலைக்கு தற்போதைய ஆட்சியாளர்கள் காரணம் என்றார்.
இந்த தற்கொலை தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கண்டனம் தெரித்துள்ளார். முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன்பு நிறுத்துமாறு பலுசிஸ்தான் அரசை பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.
- பெஷாவர் நகரின் ரிங் ரோட்டில் உள்ள ஹோட்டலுக்கு அருகில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.
- குண்டு வெடிப்பில் 200 கிராம் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனம் (ஐஇடி) பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்.
பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் மாகாண தலைநகரில் நேற்று ஒருவரின் மோட்டார்சைக்கிள் பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென குண்டு வெடித்தது.
மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், மோட்டார்சைக்கிளின் உரிமையாளர் உள்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில், ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பெஷாவர் நகரின் ரிங் ரோட்டில் உள்ள ஹோட்டலுக்கு அருகில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.
வெடிகுண்டு செயலிழப்பு குழுவின் அறிக்கையின்படி, "குண்டு வெடிப்பில் 200 கிராம் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனம் (ஐஇடி) பயன்படுத்தப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது" என குறிப்பிடப்பட்டிருந்தது.
- இம்ரான் கான் வீட்டில் 30 முதல் 40 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பஞ்சாப் மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.
- நான் நாட்டை விட்டு வெளியேறும் கேள்விக்கே இடமில்லை.
லாகூர்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், கடந்த 9-ந்தேதி இஸ்லாமா பாத் கோர்ட்டில் ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்தபோது அவரை துணை ராணுவம் கைது செய்தது. அவர் அல்காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
இதையடுத்து பாகிஸ்தான் முழுவதும் வன்முறை ஏற்பட்டது. இம்ரான்கான் கைது சட்ட விரோதம் என்று தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து இம்ரான்கான் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் லாகூரில் உள்ள இம்ரான்கான் வீட்டை பஞ்சாப் மாகாண போலீசார் சுற்றி வளைத்து உள்ளனர்.
இதுதொடர்பாக இம்ரான்கான் வெளியிட்ட வீடியோயில் கூறும்போது, 'எனது அடுத்த கைது நடவடிக்கைக்கு முன் நான் வெளியிடும் கடைசி டுவிட் பதிவாக இது இருக்கக்கூடும். எனது வீட்டை போலீசார் சுற்றி வளைத்து உள்ளனர். நான் நாட்டை விட்டு வெளியேறும் கேள்விக்கே இடமில்லை. எனது கடைசி மூச்சு வரை பாகிஸ்தானிலேயே இருப்பேன்' என்றார்.
லாகூரில் உள்ள இம்ரான் கான் வீட்டில் 30 முதல் 40 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பஞ்சாப் மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பஞ்சாப் மாகாண மந்திரி அமீர் மிர் கூறும்போது, 'மே 9-ந்தேதி ராணுவ நிலைகள் மற்றும் ராணுவ தளபதிகள் குடியிருப்பு மீது தாக்குதல் நடத்திய சுமார் 30 முதல் 40 பயங்கரவாதிகள் இம்ரான் கானின் ஜமானிபார்க் இல்லத்தில் பதுங்கி இருப்பதாக எங்களுக்கு உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளது. அவர்களை போலீசாரிடம் ஒப்படைக்க 24 மணிநேரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அந்த காலக்கெடு இன்று மதியம் 2 மணிவரை உள்ளது. அதுவரை இம்ரான்கான் மற்றும் ஆதரவாளர்களை கைது செய்யும் திட்டம் மாகாண அரசாங்கத்திடம் இல்லை.
காலக்கெடுவுக்குள் அவர்களை ஒப்படைக்காவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இம்ரான்கான் வீட்டுக்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளது. அவரது வீட்டை போலீசார் அதிகாலையில் சுற்றி வளைத்துள்ளதால் பெரும் பரபரப்பு நிலவியது.
இதற்கிடையே அல்-காதர் அறக்கட்டளை வழக்கில் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு தேடிய பொறுப்புடன் பணியகம் சம்மன் அனுப்பி உள்ளது.
- இம்ரான்கான் மீது 20-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி பல்வேறு வழக்குகளை பதிவு செய்தனர்.
- இம்ரான்கானை இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு ஜாமீனில் விடுதலை செய்தது.
லாகூர் :
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கடந்த 9-ந் தேதி தன் மீதான ஊழல் வழக்கு விசாரணைக்காக இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் ஆஜராக சென்றிருந்தபோது அந்த நாட்டின் துணை ராணுவம் அவரை கைது செய்தது.
இம்ரான்கானின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். ராவல்பிண்டி நகரில் உள்ள ராணுவ தலைமையகத்தை சூறையாடிய இம்ரான்கான் ஆதரவாளர்கள் லாகூர் நகரில் உள்ள மூத்த ராணுவ அதிகாரியின் வீட்டுக்கு தீவைத்தனர்.
இதனையடுத்து பஞ்சாப் மாகாண போலீசார் இம்ரான்கான் மீதும், அவரது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் மீதும் கொலை, பயங்கரவாதம் உள்பட 20-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி பல்வேறு வழக்குகளை பதிவு செய்தனர்.
இதனிடையே ஊழல் வழக்கில் கைதான இம்ரான்கானை இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு ஜாமீனில் விடுதலை செய்தது. அதனை தொடர்ந்து பஞ்சாப் மாகாணத்தில் தனக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் வழங்க கோரி லாகூர் ஐகோர்ட்டில் இம்ரான்கான் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இம்ரான்கான் ஏன் நேரில் ஆஜராகவில்லை என அவரது வக்கீலிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த இம்ரான்கானின் வக்கீல், குறிப்பிட்ட நேரத்துக்கு அவர் கோர்ட்டுக்கு வருவார் என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட அரசு தரப்பு வக்கீல் கோர்ட்டில் ஆஜராகாத இம்ரான்கானுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிட்டர்.
இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் இம்ரான்கானின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
- மோதலையடுத்து, அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- டாரா ஆதம் கேல் பகுதியில் பெரிய அளவில் நிலக்கரி இருப்பு உள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பாக்துன்க்வா மாகாணம் டாரா ஆதம் ஹெல் பகுதியில் நிலக்கரி சுரங்கம் உள்ளது. இந்த நிலக்கரி சுரங்கம் தங்களுக்கு தான் சொந்தம் என்று அதே பகுதியில் வசிக்கும் இரு தரப்பு பழங்குடியின மக்கள் உரிமை கொண்டாடி வருகின்றனர். இதில் இரு தரப்பிற்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டும் வந்தது.
இந்நிலையில், நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக பழங்குடியின சமுகத்தினர் இடையே நேற்று இரவில் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் 16 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர். இந்த மோதலையடுத்து, அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மோதல் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
டாரா ஆதம் கேல் கைபர் பாக்துன்க்வா மாகாணத்தின் கோஹாட் மாவட்டத்தில் உள்ளது, இங்கு பெரிய அளவில் நிலக்கரி இருப்பு உள்ளது. இப்பகுதி, 2018 இல் கைபர் பாக்துன்க்வாவுடன் இணைக்கப்பட்ட பழங்குடிப் பகுதிகளின் ஒரு பகுதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது...
- இரு பழங்குடியினருக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.
- போலீசார் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மோதலை நிறுத்தினர்.
பாகிஸ்தானின் வடமேற்கு பிராந்தியத்தில் உள்ள தர்ரா ஆடம் கெஜ் பகுதியில் நிலக்கரி சுரங்கத்தின் எல்லையை நிர்ணயம் செய்வது தொடர்பாக சன்னிகேல் மற்றும் ஜர்குன் கெஸ் பழங்குடியினருக்கு இடையே கடந்த 2 ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது.
இந்த நிலையில் இரு பழங்குடியினருக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. அவர்கள் துப்பாக்கியால் சுட்டு சண்டையிட்டனர். இதில் 15 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். போலீசார் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மோதலை நிறுத்தினர். காயம் அடைந்தவர்களை மீட்டு பெஷாவரில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தி நிலையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
- வருகிற 17-ந்தேதி வரை வேறு எந்த வழக்கிலும் இம்ரான் கானை கைது செய்யக்கூடாது என்று கோர்ட்டு உத்தரவிட்டது.
- தேச துரோக குற்றச்சாட்டின் கீழ் அடுத்த 10 ஆண்டுகளில் என்னை சிறையில் அடைக்க பாகிஸ்தானின் சக்தி வாய்ந்த ராணுவம் திட்டமிட்டு உள்ளது.
இஸ்லாமாபாத்:
அல்-காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கு தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு அவருக்கு முன்ஜாமீன் வழங்கியது. வருகிற 17-ந்தேதி வரை வேறு எந்த வழக்கிலும் இம்ரான் கானை கைது செய்யக்கூடாது என்று கோர்ட்டு உத்தரவிட்டது.
முன்ஜாமீன் கிடைத்ததையொட்டி இம்ரான் கான் லாகூரில் உள்ள தனது இல்லத்திற்கு திரும்பினார். பின்னர் அவர் நேற்று இரவு தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் அரசுக்கு எதிராக இம்ரான் கான் பரபரப்பான குற்றச்சாட்டினை தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
தேச துரோக குற்றச்சாட்டின் கீழ் அடுத்த 10 ஆண்டுகளில் என்னை சிறையில் அடைக்க பாகிஸ்தானின் சக்தி வாய்ந்த ராணுவம் திட்டமிட்டு உள்ளது.
முதலில் வேண்டுமென்றே என் கட்சிக்காரர்கள் மீது பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டு உள்ளது. சாதாண மக்கள் மற்றும் ஊடகங்கள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன. நாளை என்னை கைது செய்ய வரும் போது மக்கள் வெளியே வரமாட்டார்கள் என்ற பயத்தை உருவாக்குவதற்காக இது திட்டமிட்ட முயற்சி. நாளை மீண்டும் இணையதள சேவைகளை நிறுத்தி சமூக ஊடகங்களை தடை செய்வார்கள். பாகிஸ்தான் மக்களுக்காக நான் சொல்வது என்னவென்றால் எனது கடைசி துளி ரத்தம் இருக்கும் வரை நான் உண்மையான சுதந்திரத்துக்காக போராடுவேன். அல்லாவை தவிர வேறு யாருக்கும் தலைவணங்க மாட்டோம் என உறுதி எடுத்துக் கொண்டோம் என்பதை நினைவில் கொள்ளுமாறு எனது மக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- ஊழல் வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதாக அரசு தெரிவித்தது.
- வன்முறையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராகுவதற்காக கடந்த 9-ந்தேதி இஸ்லாமாபாத் கோர்ட்டுக்கு வந்தபோது அவரை துணை ராணுவத்தினர் கைது செய்து இழுத்து சென்றனர்.
ஊழல் வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதாக அரசு தெரிவித்தது.
இதையடுத்து இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெரும் வன்முறை ஏற்பட்டது. ராணுவ வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. இதனால் நாடு முழுவதும் பதற்றம் நிலவியது. போராட்டக்காரர்களுக்கு ராணுவம் கடும் எச்சரிக்கை விடுத்தது.
கைதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் இம்ரான்கான் தரப்பில் முறையிடப்பட்டது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இம்ரான்கான் கைது சட்டவிரோதம் என்றும், அவரை இஸ்லாமாபாத் கோர்ட்டில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டது. இதன்படி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இம்ரான்கானுக்கு 2 வாரம் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். வன்முறையில் 74 போலீஸ் வாகனங்கள் தீ வைக்கப்பட்டன. போலீஸ் நிலையங்கள் உள்பட 22 அரசு கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டன. 152 போலீசார் காயம் அடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். வன்முறை தொடர்பாக 2800-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் வன்முறையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
வன்முறை செயல்களில் ஈடுபட்ட அனைவரையும் அடையாளம் கண்டு கைது செய்ய அதிகாரிகளுக்கு 72 மணி நேரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப உதவி, உளவுத்துறை உள்ளிட்ட அனைத்து சாத்திய கூறுகள் மூலம் இந்த நடவடிக்கைகள் பயன்படுத்தப்படும். இவர்களை நீதியின் முன் கொண்டு வருவது அரசாங்கத்திற்கு ஒரு சோதனையாக இருக்கும். இந்த வழக்குகள் பயங்காரவாத எதிர்ப்பு நீதிமன்றங்களால் விசாரிக்கப்படும் என்றார்.
இதையடுத்து அதிகாரிகள் வன்முறையில் ஈடுபட்ட இம்ரான்கான் ஆதரவாளர்களை கண்டுபிடித்து கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளனர். ராணுவ தளபதி குடியிருப்பில் தாக்குதலில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்களின் படங்களை போலீசார் வெளியிட்டனர்.
- இஸ்லாமாபாத் முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டது.
- பாகிஸ்தான் முழுவதும் இணைய சேவை வழங்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை கடந்த 9-ந் தேதி அந்த நாட்டின் துணை ராணுவத்தினர் அதிரடியாக கைது செய்தனர். இது அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு, நாடு முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டது.
மேலும் பேஸ்புக், டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் முழுவதும் இணைய சேவை வழங்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் தொலைத்தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
அதே சமயம் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாததால் அவற்றுக்கான தடை தொடருவதாக தொலைத்தொடர்பு ஆணையம் கூறியுள்ளது.






