என் மலர்tooltip icon

    பாகிஸ்தான்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான், இலங்கையில் நடைபெற இருக்கிறது
    • உலகக்கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெறும் என எதிர்பார்ப்பு

    இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. ஐசிசி-க்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அனுப்பி வைத்த இதற்கான வரைவு போட்டி அட்டவணை வெளியாகியுள்ளது. அதில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான லீக் போட்டி நடைபெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் இந்தியா வந்து விளையாடுமா? என்பதே இன்னும் சந்தேகத்தில்தான் உள்ளது. குஜராத்தில் மோதுவது போன்ற அட்டவணைக்கு பாகிஸ்தான் தரப்பில் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

    இந்த நிலையில் இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சேர்மன் நஜம் சேதியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    இந்தியா, பாகிஸ்தான் அணிகளை எடுத்துக் கொண்டால் பாகிஸ்தான் இந்தியா செல்ல வேண்டுமென்றாலும், இந்தியா பாகிஸ்தான் வர வேண்டும் என்றாலும் இரண்டு நாடுகளுக்குரிய அரசாங்கம்தான் முடிவு எடுக்க முடியும்.

    குஜராத் மைதானத்தில் மோத வேண்டுமா? வேண்டாமா? என்பதையும் அரசுதான் முடிவு செய்ய வேண்டும். அகமதாபாத்தில் விளையாடுவது குறித்து எங்களிடம் கேள்வி கேட்க ஏதும் இல்லை.

    இவ்வாறு தெரிவித்தார்.

    ஆசியகோப்பை கிரிக்கெட் தொடர் முதலில் பாகிஸ்தானில்தான் நடைபெறுவதாக இருந்தது. இந்தியா அங்கு சென்று விளையாட மறுப்பு தெரிவித்தது. இதனால் 13 போட்டிகளில 4 மட்டும் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. மற்ற 9 போட்டிகள் இலங்கையில் நடத்தப்படுகிறது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 31-ந்தேதி முதல் செப்டம்பர் 17-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

    ஆசியகோப்பை போட்டி குறித்து கூறுகையில் ''இந்தியா பாகிஸ்தான் வர மறுத்ததால் தீர்வுகாண ஹைபிரிட் முறையில் இரு நாடுகளில் போட்டி நடத்தப்படுகிறது. பாகிஸ்தானில் மேலும் சில போட்டிகள் நடத்த வாய்ப்பு இருந்தது. ஆனால், இங்கு விளையாடிய பின், இலங்கை செல்வது கடினம் என்பதால் போட்டி குறைக்கப்பட்டுள்ளது'' என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாகிஸ்தானை சேர்ந்த வோல்கர் அப்ராகாசன் என்பவர் இந்தியாவை சுற்றி மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துள்ளார்.
    • பல வருடங்களாக விசா பெற முயற்சி செய்த பிறகு இந்தியாவுக்கு வருகிறேன் என குறிப்பிட்டிருந்தார்.

    பாகிஸ்தானை சேர்ந்த வோல்கர் அப்ராகாசன் என்பவர் இந்தியாவை சுற்றி மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துள்ளார். 30 நாட்களில் சுமார் 7 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சுற்றுப்பயணம் சென்றார்.

    அவர் டெல்லி, அரியானா, ராஜஸ்தான், மும்பை, கேரளா மற்றும் பல நகரங்களில் நடந்த பல்வேறு சந்திப்புகளின் வீடியோக்களை பகிர்ந்துள்ளார். அதில், அவருக்கு பலரும் உணவு வழங்குவதையும் காண முடிகிறது.

    தொடர்ந்து கேரளா, ராஜஸ்தானில் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ள அவரது வீடியோக்களை பார்த்த சமூக வலைதள பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • பாகிஸ்தானில் உள்ள மூன்று மாவட்டங்களின் ஏழு தாலுகாக்களில் வசிக்கும் 71,380 பேரில் இதுவரை 56,985 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
    • 64 மீனவர்கள் கடலில் இருந்து மீட்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் கடற்படை தெரிவித்துள்ளது.

    வடகிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டிருக்கும் 'பிபோர்ஜோய்' அதிதீவிர புயல் குஜராத்தின் போர்பந்தரில் இருந்து 150 கி.மீ. தொலைவில் இன்று காலை நிலை கொண்டிருந்தது. இது நாளை (வியாழக்கிழமை) மாலை குஜராத்தின் ஜாக்ஹா துறைமுகப் பகுதியில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதி தீவிர புயல் கரையை கடக்கும் போது பலத்த மழையும், பலத்த காற்றும் வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இதன் எதிரொலியால், பாகிஸ்தானில் உள்ள கடற்கரை நகரங்கள் மற்றும் சிறிய தீவுகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பன இடங்களுக்கு தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.

    குறிப்பாக பாகிஸ்தானில் உள்ள மூன்று மாவட்டங்களின் ஏழு தாலுகாக்களில் வசிக்கும் 71,380 பேரில் இதுவரை 56,985 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    மேலும், 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தாமாக முன்வந்து வெளியேறினர். அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உட்பட பல்வேறு இடங்களில் 37 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.

    ஷா பண்டாரின் பல்வேறு கிராமங்களில் இருந்து 700 பேரை ராணுவத்தினர் வெளியேற்றியதாகவும், 64 மீனவர்கள் கடலில் இருந்து மீட்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் கடற்படை தெரிவித்துள்ளது.

    பலுசிஸ்தானின் கடலோரப் பகுதிகளிலும், ஹைதராபாத், ஷாஹீத் பெனாசிராபாத், சுக்கூர் மற்றும் சங்கர் உள்ளிட்ட சிந்துவின் கிராமப்புறங்களிலும் கடற்படை அவசரகால பதில் மற்றும் மருத்துவக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

    • 30 சதவீத மானிய விலையில் வழங்கி ரஷியா முதலில் மறுப்பு தெரிவிப்பு
    • இந்த நாள் மாற்றத்திற்கான நாள் என பிரதமர் ஷெரீப் தெரிவித்துள்ளார்

    ரஷியா தள்ளுபடி விலையில் வழங்கும் கச்சா எண்ணெய்களை ஏற்றிக்கொண்டு வந்த கப்பல் கராச்சி வந்தடைந்ததாக, பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் தெரிவித்துள்ளார். கடும் பண வீழ்ச்சியால் விலைவாசி உயர்வு அதிகமாக காணப்படும் நிலையில், இது சற்று ஆறுதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பாகிஸ்தானில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 262 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. முதற்கட்டமாக ரஷியாவில் இருந்து 45 ஆயிரம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் கராச்சி வந்தடைந்துள்ளது.

    ''நான் வழங்கிய மற்றொரு வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன். ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றி வந்த முதல் சரக்கு கப்பல் ஞாயிற்றுக்கிழமை  பாகிஸ்தான் வந்தது என்பதை பெருமையாக அறிவித்துக்கொள்கிறேன். நாளையில் இருந்து வினியோகம் செய்யப்படும். இன்றைய நாள் மாற்றத்தை ஏற்படுத்தும் நாள். எரிசக்தி பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சியில் ஒருபடி முன்னேறியுள்ளோம்'' எனத் தெரிவித்துள்ளார்.

    ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேரல் என்ற வகையில் பாகிஸ்தான் ரஷியாவில் இருந்து இறக்குமதி செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பாகிஸ்தான்- ரஷியா இடையிலான பேச்சுவார்த்தையின்போது, கடந்த 2022-ம் ஆண்டு பாகிஸ்தான் பிரதிநிதிகள் கச்சா எண்ணெய் விலையில் தள்ளுபடி அதிக அளவில் தரும்படி கேட்டுக்கொண்டது. ஆனால், ரஷியா 30 சதவீத தள்ளுபடி கொடுக்க மறுத்துவிட்டது.

    இந்த வருடம் தொடக்கத்தில் ரஷிய பிரதிநிதிகள் பாகிஸ்தான் சென்று காப்பீடு மற்றும் அடமானம் போன்ற தொழில்நுட்ப சிக்கல்களை தீர்ப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ரஷியா திருப்தி அடைய, கச்சா எண்ணெய் வழங்க ரஷியா சம்மதம் தெரிவித்தது.

    கடந்த ஆண்டு பாகிஸ்தான் ஒரு நாளைக்கு 1,54,000 பேரல் என்ற வகையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தது. இதில் 80 சதவீதம் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தது.

    ஜூன் 2-ந்தேதி முடிவடைந்த நிலையில் பாகிஸ்தானின் மொத்த அன்னிய செலாவணி 3.9 பில்லியன் அமெரிக்க டாலராக குறைந்துள்ளது. மே மாதம் 38 சதவீதமாக இருந்த பணவீக்கம், ஏப்ரல் மாதத்தில் 36.4 சதவீதமாக அதிகரித்தது.

    ஏற்கனவே பொருளாதார சிக்கலில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் பாகிஸ்தானில் கடந்த வருடம் கனமழை பெய்து 33 மில்லியன் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது 12.5 பில்லியன் டாலர் வகையில் பொருளாதார சேதம் ஏற்பட்டது.

    • பேரிடர் குழுவால் மீட்கப்பட்டு 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை குழந்தைகள், பெண்கள் உள்பட 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

    பேரிடர் குழுவால் மீட்கப்பட்டு 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    பன்னு, டேரா, கரக் மற்றும் லக்கி மார்வார்ட் ஆகிய பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதில் சுமார் 70 வீடுகள் இடிந்து விழுந்து சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார். 

    • இந்திய பிரதமர் மோடியை விட பாகிஸ்தானுக்கு இம்ரான்கான் ஆபத்தானவர்.
    • இந்திய பிரதமர் மோடியை பாகிஸ்தான் மந்திரி விமர்சித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகிறார். அவர் மீது ஊழல், தேச துரோகம், பயங்கரவாதம் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இதற்கிடையே கடந்த மாதம் இம்ரான்கான் கோர்ட்டுக்கு வந்த போது அவரை துணை ராணுவம் கைது செய்தது. இதனால் நாடுமுழுவதும் அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

    கலவரத்தை தூண்டியதால் இம்ரான்கான் மீது பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டியது.

    இந்தநிலையில் இந்திய பிரதமர் மோடியை விட இம்ரான்கான் பாகிஸ்தானுக்கு ஆபத்தானவர் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு மந்திரி குவாஜா ஆசீப் கூறி உள்ளார்.

    தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    வெளிநாட்டு எதிரி பற்றி உங்களுக்கு தெரியும். ஆனால் பாகிஸ்தானில் பிறந்து, அந்த தேசத்தில் இருக்கும் (இந்தியா) எதிரியை விட பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் எதிரியை மக்கள் இன்னும் அடையாளம் காண முடியவில்லை.

    இந்திய பிரதமர் மோடியை விட பாகிஸ்தானுக்கு இம்ரான்கான் ஆபத்தானவர். இதை மக்கள் கண்டுகொள்ளவே இல்லை. அவர் நம்மிடையே இருக்கிறார். இந்த எதிரி உண்மையில் நமது பாதுகாப்பிற்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறார். இதற்கு மே 9-ந்தேதி நடந்த கலவரமே சான்றாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்திய பிரதமர் மோடியை பாகிஸ்தான் மந்திரி விமர்சித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

    • பாகிஸ்தானில் வரும் மாதங்களில் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஐ.நா. சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • 22 நாடுகளில் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று ஐ.நா. சபை தெரிவித்து உள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அந்நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு குறைந்து வருவதால் இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால் உணவு பொருட்கள், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. மேலும் கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. பாகிஸ்தானில் அரசியல் கொந்தளிப்பும் நிலவி வருவது அந்நாட்டை மேலும் சிக்கலில் தள்ளி உள்ளது.

    இந்த நிலையில் பாகிஸ்தானில் வரும் மாதங்களில் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஐ.நா. சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இது தொடர்பாக ஐ.நா. சபை வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாகிஸ்தானில் 2022-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் விளைவுகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் கொந்தளிப்பு தீவிரமடைந்துள்ளதால் கடுமையான உணவு பாதுகாப்பின்மை அடுத்த மாதங்களில் உயரக் கூடும்.கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் விளைவுகளால் நிலைமை மோசமாசி உள்ளது. இது விவசாய துறையில் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தியது. உணவு உற்பத்தி, உணவு கிடைப்பது, வாழ்வாதார சாத்தியக் கூறுகளை பாதித்தது.

    பொருளாதார நெருக்கடியால் உணவு மற்றும் பிற முக்கிய பொருட்களை குடும்பங்கள் வாங்கும் சக்தி குறைந்து இருக்கின்றன. வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறை, பணத்தின் மதிப்பு குறைந்து வருவது ஆகியவை நாட்டின் முக்கிய உணவு மற்றும் எரிசக்தி விநியோகங்களை இறக்குமதி செய்வதற்கான திறனை குறைக்கின்றன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த அறிக்கை வருகிற ஜூன் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலத்தை உள்ளடக்கியது. ஏற்கனவே பாகிஸ்தானில் உணவு பற்றாக்குறை ஏற்படும் என்று ஐ.நா. சபை தெரிவித்திருந்த நிலையில் மீண்டும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

    அதே போல் ஆப்கானிஸ்தான், நைஜீரியா, சோமாலியா, தெற்கு சூடான், ஏமன், ஹைட்டி, சூடான் புர்கினா பாசோ, மாலி உள்பட 22 நாடுகளில் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று ஐ.நா. சபை தெரிவித்து உள்ளது.

    • காஷ்மீரில் இருந்து கால்நடைகளுடன் திரும்பிக் கொண்டிருந்த சுமார் 35 பேர் பள்ளத்தாக்கிற்கு அருகே முகாமிட்டிருந்தனர்.
    • மோசமான வானிலை காரணமாக மீட்பு பணி பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் இணைக்கும் ஷௌண்டர் கணவாய் அருகே பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

    ஒவ்வொரு ஆண்டும், பகர்வால்கள் என்று அழைக்கப்படும் உள்ளூர் மக்கள், தங்கள் கால்நடைகளுக்கு பொருத்தமான மேய்ச்சல் நிலங்களைத் தேடி மற்றும் கடுமையான வானிலை நிலைமைகளைத் தவிர்ப்பதற்காகவும் தங்கள் மந்தைகளுடன் இடம்பெயர்கின்றனர்.

    அவ்வாறு இடம்பெயர்ந்து காஷ்மீரில் இருந்து கால்நடைகளுடன் திரும்பிக் கொண்டிருந்த சுமார் 35 பேர் பள்ளத்தாக்கிற்கு அருகே முகாமிட்டிருந்தனர். இந்நிலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை 10 பேர் உயிரிழந்த நிலையில், 15 கால்நடைகளும் இறந்துள்ளன.

    மோசமான வானிலை காரணமாக மீட்பு பணி பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

    • இம்ரான்கான் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
    • இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் அரசை இம்ரான்கான் சாடியுள்ளார்.

    இஸ்லாமாபாத் :

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ.) கட்சித்தலைவருமான இம்ரான்கான் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளின் விசாரணை தீவிரமடைந்து உள்ளது.

    இந்த நிலையில் இம்ரான்கான், அவரது மனைவி பஸ்ரா பீபி மற்றும் பி.டி.ஐ. கட்சியின் மூத்த தலைவர்கள் உள்பட 80 பேர் வெளிநாடு செல்ல தடை விதித்து பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் அரசை இம்ரான்கான் சாடியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், 'வெளியேறுதல் தடை பட்டியலில் எனது பெயரை இணைத்ததற்காக பாகிஸ்தான் அரசுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஏனெனில் வெளிநாடு செல்வதற்கான திட்டம் எதுவும் என்னிடம் இல்லை. ஏனெனில் வெளிநாடுகளில் எனக்கு சொத்துகளோ, வர்த்தகமோ இல்லை. ஒரு வங்கி கணக்கு கூட இல்லை' என தெரிவித்தார்.

    மேலும் அவர், 'எனக்கு ஒரு விடுமுறை கிடைத்தால் நமது வடக்கு பிராந்திய மலைகளுக்குத்தான் செல்வேன். இந்த பூமியில் அதுதான் எனக்கு மிகவும் பிடித்தமான இடம்' என்றும் கூறினார்.

    நவாஸ் ஷெரீப் உள்பட பாகிஸ்தானை ஆளும் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் முக்கிய தலைவர்களுக்கு வெளிநாடுகளில் சொத்துகள் இருப்பதையே அவர் மறைமுகமாக சாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • புது திருப்பமாக இம்ரான் கான் கட்சியை சேர்ந்த தலைவர்கள் ஒவ்வொருவராக தங்கள் பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர்.
    • கடந்த 24 மணி நேரத்தில் 3 முக்கிய தலைவர்கள் தங்கள் பதவியை துறந்து உள்ளனர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரீக்-இ-இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான்கான் கடந்த 9-ந்தேதி ஊழல் வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராக சென்றபோது துணை ராணுவ படையினரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து பாகிஸ்தானில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தது. ராணுவ வாகனங்கள் எரிக்கப்பட்டன. ராணுவ கட்டிடங்களும் சேதப்படுத்தப்பட்டன.

    இதுதொடர்பாக இம்ரான் கான் ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர், மேலும் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி மூத்த தலைவர்களும் கைதானார்கள்.

    அவர்கள் தற்போது ஜெயிலில் இருந்து வெளியே வந்தவண்ணம் உள்ளனர். இந்த சூழ்நிலையில் புது திருப்பமாக இம்ரான் கான் கட்சியை சேர்ந்த தலைவர்கள் ஒவ்வொருவராக தங்கள் பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். 2 நாட்களுக்கு முன்பு முக்கிய தலைவர்கள் 2 பேர் பதவியை விட்டு விலகினார்கள். இதன் தொடர்ச்சியாக மேலும் 3 தலைவர்கள் தாங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்து உள்ளனர்.

    அக்கட்சியின் பொது செயலாளரும், இம்ரான் கானுக்கு மிகவும் நெருக்கமானவராகவும் திகழ்ந்த ஆசாத் உமர் தனது பொதுச்செயலாளர் பதவியையும், மையக்குழு உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறும்போது, இந்த சூழ்நிலையில் என்னால் கட்சியை வழி நடத்த முடியாது. அதனால் பதவி விலக போவதாக தெரிவித்தார்.

    ராஜினாமா செய்த மற்றொரு தலைவரான மலிகா பொக்காரி என்பவர் மே 9-ந்தேதி நடந்த சம்பவத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஒவ்வொரு பாகிஸ்தானியர்களுக்கும் அன்று நடந்த சம்பவம் மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது. இந்த முடிவை எடுக்க யாரும் தன்னை வற்புறுத்தவில்லை என கூறி உள்ளார்.

    இதே போல சீமா என்பவரும் பதவி விலகி உள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் 3 முக்கிய தலைவர்கள் தங்கள் பதவியை துறந்து உள்ளனர். அடுத்தடுத்து தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறி வருவது பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பதற்றம் நிறைந்த மாகாணங்களில் சிவில் நிர்வாகத்திற்கு உதவுவதற்காக ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
    • தனது கட்சிக்கு எதிரான ஒடுக்குமுறை குறித்து நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த 9ம் தேதி ஊழல் வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக இஸ்லாமாபாத் ஐகோர்ட்டுக்கு வந்தபோது, அவரை துணை ராணுவப்படை ரேஞ்சர்கள் திடீரென கைது செய்து அழைத்துச்சென்றனர். இதையடுத்து இம்ரான் கான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. ராணுவ நிலைகள் மற்றும் அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. போலீசாருடன் பல்வேறு இடங்களில் மோதல் ஏற்பட்டது. இதில் பலர் கொல்லப்பட்டனர். இதனால் பதற்றமான சூழல் உருவானது. இம்ரான் கானின் பிடிஐ கட்சி தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். பதற்றம் நிறைந்த மாகாணங்களில் சிவில் நிர்வாகத்திற்கு உதவுவதற்காக ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ராணுவம் குவிக்கப்பட்டதற்கு எதிராக இம்ரான் கான் இன்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். பஞ்சாப், கைபர் பாக்துன்க்வா, பலுசிஸ்தான் மற்றும் இஸ்லாமாபாத் உள்ளிட்ட சில மாகாணங்களில் அரசியலமைப்புச் சட்டம் 245ஐ பயன்படுத்திய ஷெபாஸ் ஷெரீப்பின் அரசாங்கத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இம்ரான் கான் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

    அதில், நாட்டின் சில பகுதிகளில் ராணுவச் சட்டம் போன்ற நிலைமை இருப்பதாகவும், தனது கட்சிக்கு எதிரான ஒடுக்குமுறை குறித்து நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.

    பாகிஸ்தான் அரசியலமைப்பின் 245வது பிரிவின் கீழ், நாட்டைப் பாதுகாக்க சிவில் நிர்வாகத்திற்கு உதவ ராணுவத்தை அழைக்கலாம் என்பது  குறிப்பிடத்தக்கது.

    • இம்ரான்கான் மந்திரி சபையில் தகவல்-ஒளிபரப்புத்துறை அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை மந்திரியாக பவாத் சவுத்ரி பதவி வகித்தவர்.
    • இம்ரான்கானுக்கு மிக நெருக்கமாகவும், கட்சியின் மூத்த தலைவராகவும் தற்போது விளங்கி வந்தார்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரீக் -இ-இன் சாப் கட்சித்தலைவருமான இம்ரான்கான் மீது ஊழல் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. கடந்த 9-ந்தேதி அவர் கோர்ட்டில் ஆஜராக வந்த போது துணை ராணுவ படையினர் அவரை கைது செய்தனர்.

    கைதான இம்ரான்கான் ஐகோர்ட்டு உத்தரவுப்படி விடுவிக்கப்பட்டார். இந்த சூழ்நிலையில் அவரது தலைமையிலான தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி மூத்த தலைவர்கள் தற்போது அக்கட்சியில் இருந்து விலக தொடங்கி உள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இம்ரான் கான் பிரதமராக இருந்த போது அவரது மந்திரி சபையில் மந்திரியாக இருந்த ஷரீன் மசாரி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இதன் தொடர்ச்சியாக அக்கட்சியை சேர்ந்த மேலும் ஒரு முன்னாள் மந்திரியும் ராஜினாமா செய்துள்ளார். அவரது பெயர் பவாத் சவுத்ரி. இவர் இம்ரான்கான் மந்திரி சபையில் தகவல்-ஒளிபரப்புத்துறை அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை மந்திரியாக பதவி வகித்தவர். இம்ரான் கானுக்கு மிக நெருக்கமாகவும், கட்சியின் மூத்த தலைவராகவும் தற்போது விளங்கி வந்தார். இவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும், அரசியலை விட்டு விலக போவதாகவும் தெரிவித்து இருக்கிறார். அடுத்தடுத்து தலைவர்கள் பதவி விலகி வருவது தெக்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

    இது தொடர்பாக இம்ரான்கான் வெளியிட்ட வீடியோவில், ராணுவத்தினருடனான மோதலில் கட்சியின் மூத்த தலைவர்கள் பதவி விலகுமாறு கட்டாயப்படுத்தப்படுகின்றனர். பாகிஸ்தான் வரலாற்றில் இதற்கு முன்பு நான் கண்டிராத ஒரு ஒடுக்குமுறையாகும். ஒவ்வொருவரையும் அவர்கள் ஜெயிலில் தள்ள முயற்சிக்கின்றனர் என தெரிவித்து உள்ளார்.

    ×