என் மலர்tooltip icon

    பாகிஸ்தான்

    • மன்மோகன் சிங்கை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தனர்.
    • கொலை தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    பெஷாவர்:

    பாகிஸ்தானில் சீக்கியர்கள் சிறுபான்மையினராக வசித்து வருகின்றனர். பெஷாவரின் ரஷித்கர்ஹி பஜாரில் மன்மோகன் சிங் என்ற சீக்கியர் மளிகை கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் மன்மோகன் சிங்கை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தனர்.

    கடையை மூடி விட்டு மன்மோகன் சிங் வீட்டுக்கு சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் துப்பாக்கியால் சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருக்கு மனைவி, ஒரு குழந்தை, வயதான பெற்றோர், ஒரு சகோதரி, ஒரு மாற்று திறனாளி சகோதரர் உள்ளனர்.

    இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் பெஷாவரில், தர்லோக் சிங் என்ற சீக்கியர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாநாட்டிற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வருகை தந்தபோது மழை பெய்தது.
    • சமூக ஊடக பயனர்கள் பிரதமரை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டனர்.

    உலகளாவிய நிதி ஒப்பந்தம் தொடர்பாக பாரிசில் இரண்டு நாள் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கலந்துகொண்டார். நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு கடன் திட்டத்தை பெறுவதற்கான முயற்சியாக பாரிஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்றார்.

    இந்நிலையில், மாநாட்டிற்கு ஷெபாஸ் ஷெரீப் வருகை தந்தபோது மழை பெய்தது. காரில் இருந்து இறங்கியபோது அவருக்கு பெண் ஊழியர் ஒருவர் குடைபிடித்து சென்றார். அப்போது அந்த ஊழியரிடம் இருந்து ஷெபாஸ் ஷரீப் குடையை வாங்கி, தான் மட்டும் தனியாக சென்றார். அந்த பெண் மழையில் நனைந்தபடி பின்தொடர்ந்தார். இந்த வீடியோவை பிரதமர் அலுவலகம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர். வீடியோவைப் பார்த்த பலரும் பாகிஸ்தான் பிரதமரை ட்ரோல் செய்தவண்ணம் உள்ளனர். சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. பாகிஸ்தான் சமூக ஊடக பயனர்கள் தங்கள் பிரதமரின் இந்த நடவடிக்கையை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டனர்.

    சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸ், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி போன்ற உலகத் தலைவர்களையெல்லாம் ஷெபாஸ் ஷெரீப் சந்தித்தார். இந்த சந்திப்புகள் தொடர்பான வீடியோக்களை விட, அவர் மாநாட்டிற்கு வந்தடையும் வீடியோதான் இப்போது டிரெண்டிங்கில் உள்ளது. 

    • ஐ.நா.வில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து பயங்கரவாத குழுக்களுக்கும் எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு பாகிஸ்தான் மண்ணை பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்

    அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பேரில் இந்திய பிரதமர் மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் ஒரு முக்கியமான நிகழ்வாக இரு நாட்டு அதிபர்களும் ஒன்றாக ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டனர். இதில் பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்த இரு நாட்டு அதிபர்களும் தீவிரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை வலியுறுத்தினர். இந்த செய்தி பாகிஸ்தான் சார்ந்த ஊடகங்களால் பெரிதும் முக்கியத்துவம் குறித்து வெளியிடப்பட்டுள்ளது.

    டான் (Dawn) வெளியிட்டிருக்கும் செய்தி:

    பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தடை செய்யப்பட்ட "லஷ்கர்-இ-தொய்பா" மற்றும் "ஜெய்ஷ்-இ-முகமது" போன்ற தீவிரவாத குழுக்களுக்கு எதிராக அந்நாடு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கு அமெரிக்காவும், இந்தியாவும் ஒன்றாக நிற்கின்றன. பயங்கரவாதம், வன்முறை மற்றும் தீவிரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் சந்தேகத்திற்கிடமின்றி கண்டிக்கின்றன. எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத ஆதரவாளர்களைப் பயன்படுத்துவதை பிரதமர் மோடியும், அதிபர் பைடனும் கடுமையாக கண்டித்துள்ளனர்.

    மேலும், பாகிஸ்தான் தனது கட்டுப்பாட்டில் உள்ள எந்தப் பகுதியும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளனர். 26/11 மும்பை மற்றும் பதான்கோட் தாக்குதல்களுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.

    ஜியோ நியூஸ் வெளியிட்டிருக்கும் செய்தி:

    பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு பாகிஸ்தான் மண்ணை பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பிடன் மற்றும் இந்திய பிரதமர் மோடி கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். அல்-கொய்தா, டேஷ், மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் உள்ளிட்ட ஐ.நா.வில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து பயங்கரவாத குழுக்களுக்கும் எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பைடனும் மோடியும் மீண்டும் வலியுறுத்தினர். 2008ம் ஆண்டில் ரத்தக்களரியான மும்பை தாக்குதல் மற்றும் பதான்கோட் சம்பவங்கள் உள்ளிட்ட தாக்குதல்களில் ஈடுபட்டவர்களைக் கொண்டு வர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

    தி நியூஸ் இன்டர்நேஷனல் வெளியிட்டிருக்கும் செய்தி:

    இந்தியாவை குறி வைத்து தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளை ஒடுக்கவேண்டும் என அமெரிக்க அதிபர் பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

    மோடி அரசுமுறை பயணமாக வாஷிங்டனுக்குச் சென்றபோது இரு நாட்டு அதிபர்களும் வெளியிட்டிருக்கும் கூட்டறிக்கையில், பாகிஸ்தானை தளமாகக் கொண்டதாகக் கூறப்படும் "லஷ்கர்-இ-தொய்பா" மற்றும் "ஜெய்ஷ்-இ-முகமது" போன்ற தீவிரவாதக் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

    பிரதானமான பாகிஸ்தான் சார்பு பத்திரிக்கைகள், பாகிஸ்தானை கண்டிக்கும் விதமான இந்திய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது அனைவராலும் கவனிக்கப்படுகிறது.

    • நீண்ட தேடலுக்கு பிறகு நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
    • ஷேசாதா தாவூத்தின் மகன் சுலேமான் தாவூத், துணிச்சலான இப்பயணத்தைக் கண்டு பயந்தார்.

    கடலில் மூழ்கிய "டைட்டானிக்" கப்பல் பாகங்களை காண்பதற்காக  சமீபத்தில், "ஓஷன்கேட் எக்ஸ்பெடிஷன்ஸ்" எனும் ஆழ்கடல் சுற்றுலா நிறுவனத்திற்கு சொந்தமான "டைட்டன்" என்ற நீர்மூழ்கிக்கப்பலில் 5 பேர் சென்றனர். 

    நான்கு நாட்களுக்கு முன்பு வடக்கு அட்லாண்டிக் கடலில் அது காணாமல் போனது. இதனை கண்டுபிடித்து பயணித்தவர்களை உயிருடன் மீட்பதற்கு ஒரு பன்னாட்டு தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையை அமெரிக்க கடலோர காவற்படை முடுக்கி விட்டிருந்தது.

    ஆனால் நீண்ட தேடலுக்கு பிறகு அதன் முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும், அக்கப்பல் வெடித்து சிதறி இருப்பதாகவும் அதில் பயணித்த பாகிஸ்தானைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஷேசாதா தாவூத், அவரது மகன் உள்ளிட்ட 5 பேரும் பலியானதாக அறிவித்தது. டைட்டானிக் கப்பலில் இருந்து 1,600 அடி (488 மீட்டர்) தொலைவில் 'டைட்டன்' நீர்மூழ்கிக் கப்பலின் மீதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

    இச்செய்தி வெளிவந்ததும், மிகுந்த வேதனையோடு கருத்துக்களை வெளியிட்ட பாகிஸ்தான் தொழிலதிபர் ஷேசாதா தாவூத்தின் மூத்த சகோதரி, தான் "முற்றிலும் மனம் உடைந்துவிட்டதாக" கூறினார். மேலும் அவர் கூறியதாவது:

    ஷேசாதா தாவூத்தின் மகன் சுலேமான் தாவூத், துணிச்சலான இப்பயணத்தைக் கண்டு பயந்தார். ஆழ்கடலில் மூழ்கிய "டைட்டானிக்" கப்பலை காண வேண்டும் எனபதில் ஆர்வம் கொண்ட ஷேசாதாவிற்கு இது முக்கியமானதாக இருந்ததால், அவர் மகனான சுலேமான் தாவூத் செல்ல நேர்ந்தது. உலகம் முழுவதும் இவ்வளவு அதிர்ச்சியையும், இவ்வளவு சஸ்பென்ஸையும் சந்திக்க நேர்ந்தது குறித்து நான் மிகவும் மோசமாக உணர்கிறேன். தனிப்பட்ட முறையில் அவர்களை நினைத்து மூச்சு விடுவதே கடினமாக இருந்தது. "ஒரு மில்லியன் டாலர்கள்" அளித்திருந்தாலும், நான் "டைட்டன்" நீர்மூழ்கி கப்பலில் ஏறியிருக்க மாட்டேன்.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    இறந்தவர்களில் ஷேசாதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலேமான் தாவூத்துடன், பிரிட்டிஷ் ஆய்வாளர் ஹமிஷ் ஹார்டிங், பிரெஞ்சு நீர்மூழ்கிக் கப்பல் நிபுணர் பால்-ஹென்றி நர்ஜோலெட் மற்றும் "ஓஷன்கேட் எக்ஸ்பெடிஷன்ஸ்" நிறுவன தலைமை நிர்வாக இயக்குனர் ஸ்டாக்டன் ரஷ் ஆகியோரும் கப்பலில் இருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காரில் இருந்து ஷெபாஸ் ஷெரீப் இறங்கியதும் அவருக்கு பெண் அதிகாரி குடையை பிடித்தார்.
    • சில பயனர்கள் பெண் அதிகாரியை மழையில் நனைய விட்டதற்காக பிரதமரை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பாரீசில் நடைபெறும் 2 நாள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று பிரான்ஸ் சென்றடைந்தார். அப்போது அங்கு மழை பெய்து கொண்டு இருந்தது. உடனே பெண் அதிகாரி, பிரதமர் வாகனத்தின் அருகே ஒருவர் குடையுடன் வந்தார்.

    காரில் இருந்து ஷெபாஸ் ஷெரீப் இறங்கியதும் அவருக்கு பெண் அதிகாரி குடையை பிடித்தார். அப்போது அந்த பெண் அதிகாரியிடம் பேசிய ஷெபாஸ் ஷெரீப் பின்னர் அதிகாரியிடம் இருந்து குடையை வாங்கி அவரே குடையை பிடித்தபடி நடந்து செல்வது போன்றும், இதனால் அந்த பெண் அதிகாரி மழையில் நனைந்து செல்வது போன்றும் காட்சிகள் உள்ளது.

    இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமரின் செயல்பட்டை பாராட்டினர். ஆனால் சில பயனர்கள் பெண் அதிகாரியை மழையில் நனைய விட்டதற்காக பிரதமரை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் சிறுவனை ஆரவாரம் செய்து ஊக்குவிக்கிறார்கள்.
    • ஆர் வேர்ல்ட் போட்டோகிராபி என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட வீடியோ 4 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

    கடந்த ஆண்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய கச்சா பாதாம் பாடலுக்கு இந்தி பிரபலங்கள் முதல் வி.ஐ.பி.க்கள் பலரும் நடனம் ஆடி வீடியோக்களை வெளியிட்டிருந்தனர். மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த வேர்க்கடலை வியாபாரியான பூபன் பத்யாகர் என்பவர் இந்த பாடலை பாடி இருந்தார். அவர் வியாபாரம் செய்த போது கச்சா பாதாம் என்ற பாடலை பாடி மகிழ்ந்துள்ளார். அதனை பார்த்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர அது உலக அளவில் வைரலாகி இருந்தது.

    இந்நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், பாகிஸ்தானில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் ஒரு சிறுவன் கச்சா பாதாம் பாடலுக்கு நடனம் ஆடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் சிறுவனை ஆரவாரம் செய்து ஊக்குவிக்கிறார்கள். இதனால் அந்த சிறுவனும் உற்சாகமாக கச்சா பாதாம் பாடலுக்கு நடனம் ஆடுகிறார். ஆர் வேர்ல்ட் போட்டோகிராபி என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ 4 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

    • கலவரத்தை தூண்டியதால் இம்ரான்கான் மீது பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டியது.
    • குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நீதிமன்றம் நடவடிக்கை.

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ.) கட்சித்தலைவருமான இம்ரான்கான் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளின் விசாரணை தீவிரமடைந்து உள்ளது.

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகிறார். அவர் மீது ஊழல், தேச துரோகம், பயங்கரவாதம் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இதற்கிடையே கடந்த மாதம் இம்ரான்கான் கோர்ட்டுக்கு வந்த போது அவரை துணை ராணுவம் கைது செய்தது. இதனால் நாடுமுழுவதும் அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். கலவரத்தை தூண்டியதால் இம்ரான்கான் மீது பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டியது.

    இந்தநிலையில் நேற்று இம்ரான்கான் உள்ளிட்ட அவரது கட்சி தலைவர்களுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து லாகூரில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நீதிமன்றம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் முன்னாள் விமான போக்குவரத்து அமைச்சர் குலாம் சர்வாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • படகு விபத்தில் பலியானவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானியர்கள் என தெரிய வந்துள்ளது.
    • லிபியாவிலிருந்து, மத்திய தரைக்கடல் வழியாக சட்டவிரோத பயணம் தொடங்குவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாகவும், வேலையின்மை, வறுமை, போன்றவற்றிலிருந்து தப்பிக்கவும், சில வருடங்களாகவே பாகிஸ்தானிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு சட்ட விரோதமாக குடியேற பாகிஸ்தானியர் முயற்சி செய்து வருகின்றனர்.

    இதற்கென இருக்கும் மனித கடத்தல்காரர்களிடம் பெரும் பொருட்செலவு செய்து, ஆபத்தான முறையில் நீண்ட காலம் பயணித்து வெளிநாடுகளுக்கு, குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைய முயற்சி செய்கிறார்கள். இவ்வாறு செல்பவர்கள் சில சமயம் பல்வேறு விபத்துகளில் சிக்கி உயிரிழக்க நேர்வது பல வருடங்களாக தொடர்கிறது.

    அது போன்றதொரு சம்பவம் கிரீஸ் நாட்டில் சமீபத்தில் அரங்கேறியது. கிரீஸ் நாட்டில் ஒரு படகு விபத்தில் நூற்றுக்கணக்கான சட்டவிரோத புலம்பெயர்ந்தவர்கள் உயிரிழந்தனர். 750 பேரை ஏற்றிச் சென்ற அந்த படகு பாரம் தாங்காமல் கிரீஸ் கடல் பகுதியில் மூழ்கியது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

    பலியானவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானியர்கள் என தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, மனித கடத்தல்காரர்களுக்கு எதிராக பாகிஸ்தானின் மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் அதிரடி சோதனை நடத்தி மனித கடத்தல் வழக்கில் சந்தேகிக்கப்படும் நபர்கள் கைது செய்யப்படுகின்றனர்.

    கிரீஸ் படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், மனித கடத்தல்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இந்த படகு விபத்து பற்றிய உண்மைகளை விசாரிக்க நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார். மேலும் மனித கடத்தலில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடிக்க சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு (LEAs) உத்தரவிட்டுள்ளார். வெளிநாட்டில் இருந்து செயல்படும் பாகிஸ்தானிய மனித கடத்தல்காரர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க, வெளிநாட்டில் உள்ள பாகிஸ்தான் தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறு வெளியுறவு அலுவலகத்திற்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

    ஜூன் 19 ஆம் தேதி நாடு முழுவதும் துக்க நாள் என்றும், தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.

    கடந்த வெள்ளிக்கிழமை முதல், கராச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு விமானத்தில் ஏற முயன்ற ஒருவர் உட்பட, மனித கடத்தல்காரர்கள் என்று சந்தேகிக்கப்படும் 12 பேரைக் கைது செய்துள்ளதாக மத்திய புலனாய்வு முகமை (FIA) உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    "இந்த நபர்கள் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா வழியாக ஐரோப்பாவிற்கு சட்டவிரோதமாக பாகிஸ்தானியர்களை கடத்தும் முயற்சிப்பதில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்களில் சிலர் கிரீஸில் மூழ்கிய படகில் பாகிஸ்தானியர்களை அனுப்புவதிலும் ஈடுபட்டுள்ளனர்" என்று டிஐஜி ஆலம் ஷின்வாரி கூறியிருக்கிறார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள குய்ராட்டா மற்றும் சார்ஹோய் பகுதியைச் சேர்ந்த 21 பாகிஸ்தானியர்கள் அந்த படகில் இருந்தனர் என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஷின்வாரி கூறினார்.

    மற்றொரு மூத்த புலனாய்வு அதிகாரி கூறுகையில், ஐரோப்பாவிற்கு மனித கடத்தலில் ஈடுபட்டுள்ள சவுத்ரி சுல்கர்னைன், தலாத் கியானி, மற்றும் காலித் மிர்சா போன்ற பாகிஸ்தானியர்களில் சிலர் லிபியாவில் உள்ளனர்.

    "பாகிஸ்தானில் அவர்களுக்கு துணை முகவர்கள் வேலை செய்கிறார்கள். ஒவ்வொரு நபரிடமிருந்தும் 1 முதல் 2 மில்லியன் ரூபாய் மற்றும் அதைவிட அதிகமாக வசூலித்து அவற்றை ஐரோப்பாவிற்கு கொண்டு செல்கின்றனர். "அவர்கள் முதலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சட்டப்பூர்வமாக விமானம் மூலம் அனுப்பப்படுகின்றனர். பின்னர் எகிப்து மற்றும் லிபியாவிற்கு மாற்றப்படுகின்றனர். பின்பு, லிபியாவிலிருந்து, மத்தியதரைக் கடல் வழியாக சட்டவிரோத பயணம் தொடங்குகிறது" என்றும் அவர் தெரிவித்தார்.

    முகவர்களுக்கு அதிக தொகையை செலுத்திய போதிலும், இந்த சட்டவிரோத மனித கடத்தல் மோசடியில், அப்பாவி பாகிஸ்தானியர்கள் எப்படி உயிர் இழக்கின்றனர் என்பதை சமீபத்திய சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

    இவ்வாறு சட்டவிரோதமான வழிகளில் செல்வதில் ஒரு சிலர் அடையும் வெற்றி, மற்றவர்களுக்கு இப்பாதையைப் பின்பற்றுவதற்கான தூண்டுதலை உருவாக்குவதாக தெரிகிறது.

    • பணமோசடி வழக்கில் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தகுதி நீக்கம் செய்தது
    • நவாஸ் ஷெரீப் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார்

    பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் ஷாபாஸ் ஷெரீப். இவர் முன்னாள் பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரீப் அவர்களின் சகோதரர் ஆவார். நவாஸ் ஷெரீப், உடல்நல காரணங்களுக்காக நவம்பர் 2019 முதல், லண்டனில் வசித்து வருகிறார். பாகிஸ்தானுக்கு மீண்டும் வருவதற்கு மறுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (PML-N) கட்சியின் முன்னாள் தலைவர் நவாஸ் ஷெரீப், மீண்டும் நாட்டிற்கு திரும்பி, தேர்தல் பிரச்சாரத்தை வழிநடத்தி, நான்காவது முறையாக பிரதமராக வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சியின் மத்திய பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய ஷெரீப் தெரிவித்ததாவது:-

    மூத்த சகோதரர் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தானுக்கு திரும்பிய பிறகு கட்சி கூட்டத்தை நடத்தி, PML-Nன் தலைவர் பொறுப்பையும் அவரிடம் ஒப்படைப்பதற்காக காத்திருக்கிறேன். விரைவில் நடத்தப்பட வேண்டிய சூழ்நிலை ஏறுபட்டுள்ளதால் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. நவாஸ் ஷெரீப் பாகிஸ்தானுக்கு திரும்பியதும் அரசியலின் வரைபடமே மாறுவதை நீங்கள் காண்பீர்கள். கட்சிக்கு இளம் தலைமை தேவை. மரியம் நவாஸின் கடின உழைப்பை நான் பாராட்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஷெபாஸ் ஷெரீப் கட்சி தலைவராவதற்கு முன்பு, மூன்று முறை பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் அதன் தலைவராக இருந்தார். ஆனால் உச்சநீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு அவர் கட்சிப் பதவி வகிக்க தடை விதிக்கப்பட்டதையடுத்து, ஷெபாஸ் கட்சி தலைமைப் பதவியை ஏற்றார்.

    பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிஃப் அல்வி "உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகள் சட்டம் 2023"ல் கையெழுத்திட்ட சில வாரங்களுக்குப் பிறகு இந்த அறிக்கை வருகிறது. இதன் மூலம் நவாஸ் ஷெரீப், 60 நாட்களுக்குள் உச்சநீதிமன்றத்தின் வாழ்நாள் தகுதி நீக்கத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கான உரிமையை பயன்படுத்துவதற்கான முதல்படி தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

    சட்டப்பிரிவு 184(3)ன் கீழ் வரும் வழக்குகளில் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய இந்த புதிய சட்டம் வழி வகுக்கிறது. இந்த சட்டம் கடந்த கால தீர்ப்புகளுக்கும் பொருந்தும். பாகிஸ்தான் உச்சநீதிமன்றம், பனாமா ஆவணங்கள் தொடர்பான வழக்கில், நவாஸ் ஷெரீப்பை ஜூலை 28, 2017 அன்று தகுதி நீக்கம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரபலமான பனாமா பேப்பர் வழக்கில், தனது மகனிடமிருந்து பெறப்பட்ட சம்பளத்தை மறைத்ததற்காக, நவாஸ் ஷெரீப்பிற்கு வாழ்நாள் முழுவதும் எந்த ஒரு பொதுப் பதவியையும் வகிக்க கூடாதென பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது.

    ஒரு வருடம் கழித்து, தேர்தல்கள் சட்டம் 2017-ஐ எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பில், உச்சநீதிமன்றம், 62 மற்றும் 63 பிரிவின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒருவர், எந்த அரசியல் கட்சியின் தலைமை பொறுப்பையும் ஏற்க கூடாது என்றும் தீர்ப்பளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • நியூசிலாந்து தொடரில் சர்பராஸ் சதம் விளாசியதோடு தொடர் நாயகன் விருதை வென்றார்
    • இலங்கை தொடருக்கான பாகிஸ்தான் அணியின் துணைக் கேப்டனாக ரிஸ்வான் நியமனம்

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பாபர் அசாம் உள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது முகமது ரிஸ்வான் துணைக்கேப்டனாக இருந்தார். அவர் மோசமாக விளையாடியதன் காரணமாக நீக்கப்பட்டு, அனுபவ வீரரான முன்னாள் கேப்டன் சர்பராஸ் அகமது அணியில் சேர்க்கப்பட்டார்.

    பாகிஸ்தான் அடுத்த மாதம் இலங்கைக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயத்தால் சுமார் ஒரு வருடம் விளையாடாமல் இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி அணியில் இணைந்துள்ளார்.

    முகமது ரிஸ்வான் அணியில் சேர்க்கப்பட்டதோடு, துணைக்கேப்டன் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு துணைக்கேப்டன் வழங்கப்பட்டது நியாயமானது அல்லது என்று முன்னாள் வீரர் ரஷித் லத்தீப் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரஷித் லத்தீப் கூறியிருப்பதாவது:-

    இலங்கை தொடருக்கு சர்பராஸ் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கான திறன் அவரிடம் உள்ளது. ரிஸ்வான் ஃபார்ம் இன்றி தவிக்கும்போது சர்பராஸ் திரும்ப களத்திற்கு வந்து சிறப்பாக விளையாடினார். அவர் ஆடும் லெவன் அணியில் சேர்க்கப்பட வேண்டும்.

    ரிஸ்வானுக்கு மீண்டும் துணைக் கேப்டன் என்பது நியாயமானது அல்ல. பாபர் அசாம் எல்லா வடிவிலான கிரிக்கெட் அணிக்கும் கேப்டனாக இருக்க வேண்டும். அதற்காக, துணைக் கேப்டன் பதவி கொடுக்க ஆதரவாக இருக்கக் கூடாது. டெஸ்ட் போட்டியில் கேப்டனாக பொறுப்பு ஏற்கும் தகுதி இருக்குமென்றால், அது சர்பராஸ் மட்டுமே.

    இவ்வாறு லத்தீப் தெரிவித்தார்.

    நியூசிலாந்துக்கு எதிரான தொடரில 335 ரன்கள் விளாசினார். 176 பந்தில் 118 ரன்கள் எடுத்ததுடன் தொடர் நாயகன் விருதையும் பெற்றார்.

    • சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் பேருந்தில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர்.
    • பெண்கள், குழந்தைகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து லாகூருக்கு பேருந்து ஒன்று ஏராளமான பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, சால்ட் மலையில் சென்றபோது பேருந்து வளைவு ஒன்றில் திரும்பிய நிலையில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

    விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் பேருந்தில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். படுகாயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்த விபத்தில், பெண்கள், குழந்தைகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், மருத்துவமனையில் 8 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

    விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில், பிரேக் செயலிழந்ததால் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • பாகிஸ்தான் அந்நிய செலாவணி கையிருப்பு வெகுவாக குறைந்துள்ளது
    • பாகிஸ்தானுக்கு சீனா எல்லா வகையிலும் உதவி செய்து வருகிறது

    இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் இருக்கிறது. அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கே மக்கள் அங்கு தவிப்பதாக பல செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

    பாகிஸ்தானில் குறைந்தளவே அந்நிய செலாவணி கையிருப்பாக உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் கடனும் கிடைப்பது நிச்சயமில்லாததாகி விட்டது. இந்நிலையில், அந்நாட்டிற்கு அதன் நட்பு நாடான சீனாவிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனாக கிடைத்துள்ளது.

    நேற்றிரவு சீனாவிடமிருந்து இந்தத் தொகையை பெற்றதை பாகிஸ்தான் ஸ்டேட் வங்கி (State Bank of Pakistan) உறுதிப்படுத்தியது. இருந்தாலும் வேறு எந்த விவரங்களையும் அந்த வங்கி பகிர்ந்து கொள்ளவில்லை.

    அந்நிய செலாவணி கையிருப்பு 3.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைந்திருக்கும் நிலையில், இந்த ஒரு பில்லியன் டாலர் சற்று ஆறுதல் அளிப்பதாக இருக்கும்.

    முன்னதாக, பாகிஸ்தானின் நிதியமைச்சர் இஷாக் டார், சீனாவுக்கு திருப்பி செலுத்த வேண்டிய நிலுவை தொகையான 1.3 பில்லியன் அமெரிக்க டாலரில் கடந்த திங்கட்கிழமையன்று 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலுத்தியது, அந்தத் தொகை திரும்பக் கிடைக்கும் என தாம் நம்புவதாகவும் கூறியிருந்தார்.

    2019-ம் வருடம் பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்குவதாக ஒப்புக்கொண்ட 6.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பிணை எடுப்பு தொகையில், மீதமுள்ள 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதற்கு அந்த நிதியம் பல நிபந்தனைகளை கூறி பாகிஸ்தானை அதன் வரம்புகளுக்குத் தள்ளுவதாகவும், நிதியத்தின் நிபந்தனைகளில் பலவற்றை பாகிஸ்தான் அரசு ஏற்கெனவே நிறைவேற்றி விட்டதாகவும் கூறி வருகிறது.

    இந்த தொகை கிடைக்காததால் அந்நாட்டின் பொருளாதாரம் திவாலடையும் விளிம்பில் உள்ளது. இந்த திட்டம் ஜூன் 30 அன்று முடிவடைவதால், முழுத்தொகையும் செலுத்தப்பட வாய்ப்பில்லை.

    வாஷிங்டனை தளமாகக் கொண்டது சர்வதேச நாணய நிதியம். பாகிஸ்தானின் கொள்கைகளுக்கு இந்த நிதியம் ஒப்புதல் அளித்துவிட்டது என காட்டும் விதமாக ஒரு அடையாளச் செய்கையாக 1.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை பாகிஸ்தான் கோருகிறது.

    சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு இல்லாமல் அந்நாடு பலதரப்பு கடன்களையோ அல்லது இருதரப்பு உதவிகளையோ பெற முடிவதில்லை. ஒரு சில விஷயங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆதரவை சவூதி அரேபியா மற்றூம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய இரு நாடுகள் வழங்கும் நிலையில் சீனா மட்டுமே பாகிஸ்தானுக்கு உதவ உறுதியாக உள்ளது.

    டார் முன்னதாக சர்வதேச நாணய நிதியத்தை கடுமையாக சாடினார். அந்நிறுவனத்தின் கடன் தொகுப்புக்குப் பின்னால் புவிசார் அரசியல் இருப்பதாகக் குற்றம்சாட்டினார். உலக நிறுவனங்கள், இலங்கையைப் போல பாகிஸ்தானும் கடனை திருப்பி செலுத்த முடியாமல் திவாலாவதை விரும்புவதாகவும், அதற்கு பிறகே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட அவை விரும்புவதாகவும் அவர் கூறினார்.

    சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு இல்லாத நிலையில், தனது பொருளாதாரத்தை இயங்க வைப்பதற்கான வாய்ப்புகளை பாகிஸ்தான் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

    டார் அறிவித்திருக்கும் பொருளாதார கொள்கையின்படி, அந்நாடு தனிப்பட்ட நாடுகளுடன் இருதரப்பு கடன்களை திருப்பி செலுத்துவது பற்றி விவாதிக்கவும், அதே சமயம், பலதரப்பு கடன்களை சரியான நேரத்தில் செலுத்தவும் இருப்பதாக தெரிகிறது.

    ஜூலை 1-ம் தேதி தொடங்கி அடுத்த நிதியாண்டில், சீனா 4 பில்லியன் இருதரப்புக்கான 4 பில்லியன் அமெரிக்க டாலர்களை பாகிஸ்தானுக்கு புதுப்பிக்கும் என்று நம்பப்படுகிறது.

    அதே நேரம் பாகிஸ்தான் பல்வேறு நாடுகளுடன் சுமார் 9 பில்லியன் அமெரிக்க டாலர் கடன்களை புதுப்பிக்கும் என்றும் தெரிகிறது.

    சீன மேம்பாட்டு வங்கியிடமிருந்து பெறப்பட்ட, ஜூன் 30-ம் தேதி முதிர்ச்சியடையும் 300 மில்லியன் அமெரிக்க டாலர் கடனை மறுநிதியளிப்புக்காக பாகிஸ்தான் கோர திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

    ×